UYIRI

Nature writing in Tamil

சிறுத்தையும் நாமும்

leave a comment »

அந்தி மாலைப்பொழுது, காயத்ரியும் அவளது தோழியும், தேயிலைத்தோட்டத்தின் வழியக கோயிலை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். இருவரும் வால்பாறையிலுள்ள நடுநிலைப்பள்ளியில் படித்து 6ம் வகுப்பு படித்து வந்தனர். அம்மனுக்கு கூழ் ஊற்றுவதால் அதை வாங்கிவர இருவரையும் அவர்கள் வீட்டிலிருந்து அனுப்பிருந்தார்கள். கோயில், குடியிருப்புப்பகுதியிலிருந்து சுமார் ஒரு கீமீ தூரமிருக்கும். அப்போது நன்றாக இருட்டியிருந்தது. பேசிக்கொண்டே இருவரும் வளைந்து நெளிந்து சென்ற சாலையில் செல்கையில், திடீரென ஒரு சிறுத்தை அருகிலிருந்த தேயிலைப்புதரிலிருந்து பாய்ந்து காயத்ரியை கண்ணிமைக்கும் நேரத்தில் கவ்வி இழுத்துச் சென்றது. காயத்ரியின் அலறல் கொஞ்ச நேரத்தில் நின்றுபோனது. சிறுத்தை காயத்ரியை இழுத்துச்சென்றதைக் கண்ட அவளது தோழி பயத்தால் கை கால் நடுங்க, பேசக்கூட முடியாமல் நின்றாள். சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு காயத்ரியின் உடலை அருகிலிருந்த ஓடையின் பக்கத்தில் கண்டெடுத்தனர்.

ஜுன்னார் – மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம். கிருஷ்ணா அவன் வீட்டுக்கு முன்னே விளையாடிக்கொண்டிருந்தான். மாலை ஏழு மணியிருக்கும். அவனது பாட்டி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள். மெல்லிய காற்று வீட்டைச்சுற்றியுள்ள கரும்புத்தோட்டத்தினூடே வீசியது. சட்டென மின்வெட்டினால் எல்லா விளக்குகளும் அணைந்தது. நிலவு வெளிச்சத்தில் கிருஷ்ணா ஏதோ ஒரு உருவம் அவனை நோக்கி வருவதைக் கண்டான். பயத்தில் வேகமாக வீட்டை நோக்கி ஓட எத்தனிக்கையில் ஒரு சிறுத்தை அவனது காலை கவ்வியது. அலறல் சப்தம் கேட்ட அவனது பாட்டியும், அம்மாவும் கூக்குரலிட்டு அவனை நோக்கி ஓடிவந்தனர். சப்தம் கேட்ட அச்சிறுத்தை கிருஷ்ணாவை விட்டுவிட்டு வேகமாக விரைந்து கரும்புக்காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவதும், கொல்வதும் வால்பாறை மற்றும் ஜுன்னாரில் மட்டுமல்ல. இந்தியாவில் பல இடங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நடந்து கொண்டேயும் இருக்கிறது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் மட்டும் 2000த்திலிருந்து 2007 வரை சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஒரு ஆராய்ச்சி கட்டுரை குறிப்பிடுகிறது.

  • இதற்கொல்லாம் காரணம் என்ன?
  • சிறுத்தைகள் காட்டைவிட்டு மனிதர்கள் வாழும் ஊருக்குள் வருவதேன்?
  • அவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டதா?
  • மனிதர்கள் வாழுமிடத்தில் அவற்றிற்கு என்ன வேலை?
  • குடியிருப்புப்பகுதியில் அவை நடமாடுவது தெரிந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன?
  • அவற்றை கூண்டு வைத்துப் பிடித்து வேறெங்காவது கொண்டுபோய் விட்டுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

இக்கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் முன் சிறுத்தைகளைப்பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.

சிறுத்தையின் குணாதியங்கள்

சிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள பிராணிகள். அவை பொதுவாக காட்டுப்பகுதிகளிலேயே சுற்றித்திரிந்து இரைதேடுகின்றன. மனிதர்கள் உள்ள பகுதிகளில் உலாவுவதை அவை பெரும்பாலும் தவிர்க்கின்றன.

ஒவ்வொரு சிறுத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் சுற்றிஅலைந்து இரைதேடவும், தமது துணையை கண்டுகொள்ளவும் செய்கின்றன. இப்பரப்பு ஆண்சிறுத்தைக்கும் பெண் சிறுத்தைக்கும் வேறுபடும். இவை சுற்றித்திரியும் இடத்தின் எல்லையை தமது சிறுநீரால் குறிக்கின்றன. சிறுத்தைகள் பெரும்பாலும் தங்களது வாழிட எல்லைக்குள்ளேயே சுற்றி திரிகின்றன. ஒரு சிறுத்தை தனது வாழிட எல்லையைவிட்டு இடம்பெயர்ந்து செல்ல நேரிடின் அந்த இடத்தை வயதில் குறைந்த வேறோரு சிறுத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

சிறுத்தை இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறது. அடர்ந்த மழைக்காடுகளிலும், இலையுதிர் காடுகள், புதர்காடுகள், காட்டை ஒட்டிய கிராமப்புறங்களிலும், ஓரினப்பயிர்கள் மிகுந்துள்ள (காபி, தேயிலை, மற்ற விளைநிலங்கள்) இடங்களிலும் இவை சுற்றித்திரியும்.

ஆனால் காடுகள் அழிக்கப்பட்டதாலும், தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாலும் அவை வசிக்கும் இடம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

மரத்தின் மீதிருந்து நம்மை உற்றுநோக்கும் ஒரு அழகான சிறுத்தை (Photo Kalyan Varma)

மரத்தின் மீதிருந்து நம்மை உற்றுநோக்கும் ஒரு அழகான சிறுத்தை (Photo Kalyan Varma)

சிறுத்தையின் உணவு

சிறுத்தைகள் காட்டில் உள்ள மான்கள், காட்டுப்பன்றி, குரங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி இரையாகக் கொள்கிறது. அவ்வப்போது, வனப்பகுதியின் அருகில் உள்ள மனிதர்கள் வசிக்குமிடங்களுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் தெரு நாயையும் இரையாகக் கொள்கிறது. இது மட்டுமல்லாமல், பூச்சிகள், எலி, தவளை முதலான சிறிய உயிரினங்களையும் உட்கொள்கிறது.

சில வேளைகளில் , மனிதர்களால் வீசி எறியப்படும் மாமிசக்கழிவுகளையும் (கோழி மற்றும் ஆட்டு இறைச்சிக்கடைகளிலிருந்து கழிவென வீசப்படும் கோழியின் இறக்கை, கால் தலை மற்றும் ஆட்டின் வயிற்றின் உட்பாகங்கள் முதலான), மருத்துவமனையிலிந்து தூக்கி எறியப்படும் மனித உடலின் சிறு பாகங்கள் (பிரசவத்தின் பின் கழிவென வீசப்படும் தொப்புள் கொடி முதலியவை) ஆகியவற்றையும் சிறுத்தைகள் அவ்வப்போது உட்கொள்கிறது.

இவ்வாறு பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் புலி, சிங்கம் போன்ற பெரிய மாமிச உண்ணிகளைப் போல பரந்த மனித இடையூறு இல்லாத காட்டுப்பகுதிகளில் மட்டுமே சிறுத்தைகள் வாழ்வதில்லை.

காடழிப்பு மற்றும் சிறுத்தைகளின் இரையை மனிதன் திருட்டு வேட்டையாடுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து போகும்போது கால்நடைகளை பிடிக்க சிறுத்தைகள் ஊருக்குள் வருகின்றன. வேட்டையாடி தமது இரையைப் பிடிக்கமுடியாத, காயமடைந்த அல்லது மிகவும் வயது முதிர்ந்த சிறுத்தைகள் சிலவேளைகளில் மனிதர்களையும் தாக்குகின்றன.

சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் இடங்களில் பல காலமாகவே வாழ்ந்து வருகிறது. பெருகும் மக்கள் தொகை அதனோடு பெருகும் மனிதனின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கால்நடைகளின் எண்ணிக்கை, இதனால் சீரழியும் காட்டுப்பகுதி, காட்டினுள் போதிய மான், காட்டுப்பன்றி முதலான இரை உணவு இல்லாமல் போதல் ஆகிய காரணங்களினாலெயே சிறுத்தைகள் கால்நடைகளையோ, எதிர் பாராவிதமாக மனிதர்களையோ தாக்க நேரிடுகிறது. இதுவே சிறுத்தை-மனிதன் மோதலுக்கு வித்திடுகிறது.

சிறுத்தையின் சில பிரதான இரை விலங்குகள்

சிறுத்தையின் சில பிரதான இரை விலங்குகள்

சிறுத்தைகளை ஒரு இடத்திலிருந்து பிடித்து வேறு இடங்களில் விடுவிப்பதனால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

மனிதர்களுக்கு ஊறுவிளைவிப்பவை எனக்கருதப்படும் சிறுத்தைகளை பொறிவைத்துப் பிடித்து வேறு இடங்களில் சென்று விடுவிப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. மாறாக இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

இதற்கு முக்கியமாக 5 காரணங்களைக் கூறலாம்:

1. ஒரு இடத்திலிருந்து சிறுத்தையைப் பிடித்துவிட்டால் அச்சிறுத்தை உலவி வந்த பகுதியை வேறொரு சிறுத்தை (பெரும்பாலும் வயதில் குறைந்த சிறுத்தை) வந்து ஆக்கிரமித்துக்கொள்ளும். இவ்வாறு பொறிவைத்து சிறுத்தைகளை பிடிப்பதால் அந்த இடத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை பெருகும் வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக மேற்கு மகாராஷ்டிராவில் ஓர் ஊரில் இவ்வறு சிறுத்தையை பொறிவைத்து பிடிக்கபட்ட பின்பும், கால்நடைகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. மேலும் தொடர்ந்து பல சிறுத்தைகள் பொறியில் சிக்கின.

2. இடம்பெயர்க்கப்பட்ட சிறுத்தை, அது விடுவிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ஊரிலும் சென்று கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்கக்கூடும்.  உதாரணமாக மகாராஷ்டிராவில் ஜுன்னார் எனும் ஊரில் பிடிக்கப்பட்டு, இரத்தினகிரி சரணாலயத்திற்கு இடம்பெயர்க்கப்பட்ட பெண் சிறுத்தை, அது விடுவிக்கப்பட்ட வனப்பகுதியின் அருகில் உள்ள ஊரிலுள்ள சிறுவனை தாக்கியது. _ அதே ஜுன்னார் வனப்பகுதியில் பிடிக்கப்பட்ட ஒரு பெண் சிறுத்தை சுமார் 200 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள யாவல் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது. அச்சிறுத்தை தான் பிடிக்கப்பட்ட இடமான ஜுன்னார் வனப்பகுதியை நேக்கி சுமார் 90 கி.மீ பயணித்து வரும் வழியெல்லாம், மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கிக்கொண்டே வந்தது. இந்த இடங்களிலிலெல்லாம் அதற்கு முன் சிறுத்தைகளால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. _ ஜுன்னார் வனப்பகுதில் 2001 முதல் 2003 ஆண்டுவரை சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மனிதர்கள் சிறுத்தைகளால் தாக்கப்பட்டனர். இந்தப் பகுதியில் இம்மூன்று ஆண்டுகளில் சுமார் 106 சிறுத்தைகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டன. மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியபூங்காவின் அருகில் அமைந்துள்ள பகுதிகளில் 2002 முதல் 2004 ஆண்டுவரை சுமார் 24 பேர் சிறுத்தைகளால் தாக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியில் 1990 முதல் 1997 ஆண்டுவரை சுமார் 121 பேர் தாக்கப்பட்டார்கள். குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவின் எல்லையை ஒட்டிய பகுதிதளில் 1990 முதல் 19999 வரை 27 மனிதர்கள் தாக்கப்பட்டனர். இந்த எல்லா இடங்களும் வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பதும், சுமார் பத்தாண்டுகளாக வேறு இடத்திலிருந்து கொண்டுவந்த சிறுத்தைகளை இவ்வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிறுத்தை-மனிதர் மோதலைப்பற்றி பல ஆண்டுகளாக ஆரய்ச்சி செய்து கொண்டுள்ள உயிரியலாளர் வித்யா ஆத்ரேயா. இவரது ஆராய்ச்சியின் விளைவாக, சிறுத்தை-மனிதர் மோதல் அதிகரிப்பதற்கும், சிறுத்தைகளை இடம்பெயரச்செய்வதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என அறியப்பட்டது.

3. சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வெகுதூரத்தில் விடுவித்தாலும் அவை தாம் பிடிக்கப்பட்ட பகுதியை நோக்கியே திரும்ப பயணிக்கும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

4. சிறுத்தைகளை அவற்றிற்கு பழக்கப்படாத இடத்தில் விடுவிப்பதால் அவை பலவித தோல்லைகளுக்கு ஆளாகின்றன. அவை தாம் வாழ்ந்த இடத்தை நோக்கி பயணிக்கும் போது வழியில் பெரிய நீர்நிலையோ, மிகப்பரந்த வறண்ட நிலப்பகுதியோ, மனிதர்கள் அதிகம் வாழும் பகுதியோ இருப்பின், அவை வழிதெரியாமல் அவற்றின் பூர்வீகத்தை அடையமுடியாமல் வரும் வழியிலேயே ஏதோ ஒரு இடத்தில் தஞ்சம் புக நேரிடுகிறது. இது அப்பகுதியில் சிறுத்தை-மனிதர் மோதலுக்கு காரணமாக அமைகிறது.

5. பெரும்பாலும் சிறுத்தை-மனிதர் மோதல் உள்ள இடங்களிலேயே பொறிவைத்து சிறுத்தை பிடிக்கப்படுகிறது. ஆயினும் மனிதர்களை தாக்கிய சிறுத்தைதான் அப்பொறியில் சிக்கியது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இருக்காது. ஒருவேளை பிடிபட்ட சிறுத்தை அதற்கு முன் கால்நடைகளையோ, மனிதர்களையோ தாக்கும் பண்பை பெற்றிருக்காவிடின், பிடிபட்டதால் ஏற்படும், மன உளைச்சல் மற்றும் காயங்களினாலும் அவை வாழ்ந்த இடத்தைவிட்டு முற்றிலும் மாறுபட்ட இடங்களில் அவற்றை கொண்டு விடுவிப்பதாலும், அச்சிறுத்தை மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கத்தொடங்குகிறது.

கூண்டில் சிக்கி காயமடைந்த சிறுத்தை (Photo: Kalyan Varma )

கூண்டில் சிக்கி காயமடைந்த சிறுத்தை (Photo: Kalyan Varma )

ஆக சிறுத்தைகளை இடம்பெயர்பதால் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்கவே முடியாது. இவ்வாறு செய்வதால் சிறுத்தை-மனிதர் மோதல் மேலும் தொடரவும், அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

என்னதான் வழி?

இந்தியாவில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோர் சாலை விபத்தில் பலியாகிறார்கள், விபத்துக்குள்ளாகிறார்கள், ஆண்டுக்கு சுமார் 35,000 பேர் வெறிநாய் கடித்து பலியாவதாக ஒரு குறிப்பு சொல்கிறது! ஆனால் சிறுத்தை மனிதனை எதிர் பாராவிதமாக தாக்கினாலோ, கொன்றாலோ அது மிகப்பெரிய செய்தியாக்கப்படுகிறது. உடனே சிறுத்தையை பிடிக்கும் படலமும் தொடங்கப்பட்டு விடுகிறது. மனிதர்களை மட்டுமே தொடர்ந்து குறிபார்த்து தாக்கும் சிறுத்தையை பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் கால்நடையையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களைத் தாக்கும் சிறுத்தைகளை பிடிப்பதும், சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிந்த உடனேயே அதை கூண்டு வைத்துப் பிடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் பிரச்சனைக்கு சிறுத்தை மட்டுமே காரணமாகாது. பிரச்சனை உள்ள இடத்தின் சூழலும் காரணமாக இருக்கலாம். சிறுத்தை-மனிதர் மோதல் உள்ள பகுதிகளில் தெருநாய்களை ஒடுக்கியும், மாமிச மற்றும் மருத்துவ கழிவுளை உடனுக்குடன் அகற்றியும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதன் மூலமாகவும், சிறுத்தைகளினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். இவ்வாறு செய்வதன் மூலமாகவே, இப்பிரச்சனைக்கு நீண்டகால தீர்வைக் காணமுடியும்.

இது மட்டுமல்ல, சிறுத்தைகள் நடமாடும் பகுதியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையும், மனநிலையும் மாற வேண்டும். சிறு குழந்தைகளை இரவு நேரங்களில் தனியே வெளியில் அனுப்புவதை தவிர்க்கவேண்டும். பெரியோர்கள் இரவில் தனியே செல்லும் போது கைவிளக்கை (டார்ச்) எடுத்துச் செல்லும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். வீட்டின் அருகாமையில் புதர் மண்டிக்கிடப்பின் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். மாமிசக் கழிவுகளை அதிக அளவில் வீட்டின் அருகாமையில் கொட்டுவதை தவிர்க்கவேண்டும். கால்நடைகள் மற்றும் கோழிகள் இருப்பின் இரவில் அவற்றை வீட்டைவிட்டு சற்று தொலைவில் பாதுகாப்பான மூடிய கொட்டகைக்குள் வைத்து அடைக்க வேண்டும். நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பதை கூடுமானவரை தவர்க்கலாம், அப்படி இருப்பின் அவற்றை இரவில் பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் சாலையைக்கடக்கும் போது இருபுறமும் பார்த்து வாகனங்கள் ஏதேனு வருகிறதா என கவனித்த பின்னரே நடக்க ஆரம்பிக்கிறோம். அது போலவே, சிறுத்தை உலவும் பகுதிகளிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிர்ச்சேதம் ஈடு செய்ய முடியாதது. அதிலும் சிறு குழந்தைகளாக இருப்பின் சோகம் பண்மடங்கு அதிகமாக இருக்கும். அப்போது கோபமும் அதிகமாகும், இது இயற்கையே. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதால், வனத்துறையினரிடம் சென்று முறையிடுகிறோம். அவர்களும் மக்களின் ஆவேசத்தின் முன்னும், உயரதிகாரிகள் மற்றும் பொதுச்சேவையில் முக்கியப்பொறுப்பு வகிப்பவர்களின் உந்துதலுக்கிணங்க கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து வேறு இடத்தில் கொண்டுபோய் விடுகின்றனர். முன்பு சொன்னதுபோல் இவ்வாறு செய்வதால் இப்பிரச்சனை அதிகரிக்குமே தவிர முடிவு பெறாது.

மனித உயிர்ச்சேதம் ஒரு புறமிருக்க ஏழை விவசாயின் அல்லது கால்நடையையே வாழ்வாதாரமாகக்கொண்டவர்களின் மாட்டையோ, ஆட்டையோ சிறுத்தை கொன்றுவிடின் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. சில வேளைகளில் கொல்லப்பட்ட கால்நடை நமக்கு தென்படின் அதை பூமியில் புதைப்பதோ, அப்புறப்படுத்துவதோ கூடாது. கொல்லப்பட்ட கால்நடைஅச்சிறுத்தையின் உணவு என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  அவ்வாறு சிறுத்தையின் உணவை தட்டிப்பறிபதால் எப்பயனும் இல்லை, இது பசியுடனிருக்கும் சிறுத்தையை மேலும் பசிகொள்ளச்செய்து வேறெங்காவது சென்று வேறு கால்நடையை தாக்கிக் கொல்லும். ஆக கொல்லப்பட்ட கால்நடையை பார்த்த இடத்திலேயே விட்டுவிடுவதே நல்லது.

சிறுத்தை இவ்வாறு மனிதர்களை தாக்கினாலோ அல்லது கொன்றாலோ உடனடியாக நாம் பழிபோடுவது வனத்துறையினரின் மேல்தான். இது கிட்டத்தட்ட நாம் வீட்டில் களவு போனால் காவல்துறை அதிகாரிகளை குற்றம்சாற்றுவதற்குச் சமம்.

இது வனத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் இல்லை. பல அரசுத்துறைகள் கூட்டாக செயல்பட்டால்தான் இதற்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும். சிறுத்தை தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் பண்புகள், நடமாட்டம் அதன் முக்கிய இரைவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஒரு வேளை சிறுத்தையை பிடிக்க நேரிடின் அவற்றிற்கு காயம் ஏற்படாத வண்ணம் சிறந்த முறையில் கையாள, வனத்துறையினர், கால்நடை மற்றும் வனஉயிர் மருத்துவர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்கப்டவேண்டும். வெகுசன ஊடகங்கள் சிறுத்தைகளை, மக்களை கொல்ல வந்த கொடூர மிருகமாக சித்தரித்து மிகைப்படுத்தாமல்,  பிரச்சனையை உணர்ந்து பொறுப்புடன் செய்தியை வெளியிடவேண்டும். சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இயற்கை பாதுகாப்பு மற்றும் காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்கள் இதில் பெரும்பங்கு வகிக்கவேண்டும். இவையனைத்தையும் கடைபிடித்தலே சிறுத்தை மனிதர்கள் மோதலை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்.

இந்தக் கட்டுரை பூவுலகு (சுற்றுச்சூழல் இதழ்) மாத இதழில் (September 2010) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம் (PDF).

Written by P Jeganathan

October 1, 2010 at 12:09 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: