UYIRI

Nature writing in Tamil

Archive for November 2011

வேழங்களை வாழவைக்க….

leave a comment »

காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட, யானைகளின் வீடுகளும் வாழ்க்கையும் வேகமாக அழிந்து வருகின்றன. இவ்வேழங்களை வாழவைக்க நாம்  செய்ய வேண்டியது என்ன?

அழிவின் விளிம்பில் ஆசிய யானை (Photo: Ganesh Raghunathan)

அழிவின் விளிம்பில் ஆசிய யானை (Photo: Ganesh Raghunathan)

யானைக்கூட்டத்தை காட்டில் பார்ப்பது எவ்வளவு இனிமையான காட்சியாக இருக்கிறது! அதுவும் நீளமாக தந்தம் கொண்ட ஆண் யானையின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கிறது. பழக்கப்பட்ட யானை வீதியில் வரும்போது அதன் மேலே ஏறி பவனி வர செய்ய பலருக்கு ஆவலாயிருக்கும், நாம் கொடுக்கும் பழத்தையோ காசையோ தனது ஈரமான துதிக்கை முனையில் வாங்கி பெருமூச்சுடன் தலையில் சொல்லிக் கொடுத்தவாறு நம்மை ஆசீர்வதிக்கும் போது நமக்கு சிலிர்த்துப்போகுமல்லவா? கால்களில் சங்கிலியைக்கட்டி நமக்காக மரமிழுக்கும்போது கண்களில் நீர் வழிந்தாலும் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் யானைகளைப் பார்க்கும் போதெல்லாம் நாம் அவற்றிற்காக பரிதாப்படுகிறோம். யானைகளை விநாயகராகவும், கணபதியாகவும் உருவகித்து வழிபடுகிறோம். அதே சமயம் மனிதர்களாகிய நாம் தந்தத்திற்காக அவற்றை கொடூரமாக கொல்லவும் செய்கிறோம், மாதக்கணக்கில் அரும்பாடுபட்டு வளர்த்த பயிரை ஒரே இரவில் தின்று தீர்க்கும் யானைக்கூட்டத்தை கொல்லத்துடிக்கிறோம். ஒருபுறம் வணங்கவும் மறுபுறம் தூற்றவை செய்கிறோம். ஏனிந்த முரண்பாடு?

நாம் வழிபடும் ஆனைமுகத்தோன் (Photo: Kalyan Varma)

நாம் வழிபடும் ஆனைமுகத்தோன் (Photo: Kalyan Varma)

யானைத்திரளை தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம். அவை இலாவகமான இலை, தழைகளை தமது துதிக்கையால் பிடித்துச்  சாப்பிடுவதும், கூடி விளையாடுவதும், அளவளாவுவதும், தங்கள் குட்டிகளை அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் விதத்தை நேரில் காண்பதே மிக சுவாரசியமானது.. உணர்வுப்பூர்வமான நெருக்கம், சமூக பழக்கவழக்கங்கள், ஒரு யானை துன்பத்திலிருக்கும் போது மற்றொன்று அதைப் பார்த்து பச்சாதாபப்படுவது என்று மனித உணர்வுகளுக்கும் யானைகளின் உணர்வுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் இருக்கின்றன.. அதேநேரம் அவை நமது வயல்களுக்குள் நுழைந்தாலோ, பல காலம் பணத்தையும் ஆற்றலையும் செலவழித்து நாம் உருவாக்கிய பயிர்களை அழித்தாலோ, கருணையின்றி மனிதர்களை மிதித்தாலோ, கொன்றாலோ நாம் அவற்றைக் கண்டு அஞ்சுகிறோம், வெறுக்கவும் செய்கிறோம். ஆனால் அவை ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

உண்மைதான், யானை – மனிதர்கள் இடையிலான மோதல் சம்பவங்கள் வருத்தம் தருபவைதான். ஆனால் அதேநேரம் நாம் யானைகளுக்கு எதிராக நாம் இதுவரை செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளைப் பற்றி ஆறறிவுடைய நாம் உணர்ந்திருக்கிறோமா?

யானைகளின் வீடுகளான காடுகளும் புல்வெளிகளும் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன. யானைகள் பொதுவாகவே காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இரை தேடப் போவது வழக்கம். இதற்காக யானைகள் பன்னெடுங் காலமாக பயன்படுத்தி வரும் வழித்தடங்களில் (elephant corridor) அணைக்கட்டுகள், ரயில் பாதைகள், சாலைகள், பிரமாண்டமான தண்ணீர் குழாய்கள், மனிதக் குடியிருப்புகள் போன்றவை பெருகிவிட்டன. இன்றைக்கு இந்த யானை வழித்தடங்கள் யாவும் ஆக்கிரமிப்புகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளன.

யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் (Photo: Kalyan Varma)

யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் (Photo: Kalyan Varma)

மக்கள்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மேலும் மேலும் காடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யானைகளின் வீடுகளான காடுகள் ஒருபுறம் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், எஞ்சியுள்ள காடுகளும் சீரழிந்து கொண்டே செல்லும் நிலையில்தான் மனிதர்கள் – யானைகள் இடையிலான மோதல் வலுக்கச்செய்கிறது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில் மனிதர்கள் யானைகளைக் கொல்வதும், யானைகள் மனிதர்களைக் கொல்வதும் நடக்கிறது. அது மட்டுமில்லாமல் யானைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத்தேவையான ஆதாரங்களான உணவு நிழல் தரும் பெரிய மரங்கள் கொண்ட வனம் யாவும்  அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன . தேயிலை, காப்பி, ரப்பர், ஏலக்காய் உள்ளிட்ட ஓரினப்பயிர்களை வளர்ப்பதற்காக காடுகள் துண்டு துண்டாக்கப்பட்டதும், சீரழிந்து போனதுமே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். யானைகளுக்குத் தேவையான உணவும், அவற்றை தேடிச் சென்றடைய யானைகள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த வழித்தடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், நமது பாரம்பரியம், காடுகளுடைய வளத்தின் அடையாளமாக இருக்கும் யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

யானை வழித்தடங்கள் மட்டுமல்ல, யானைகளின் எண்ணிக்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆண் யானைகளுக்கு உள்ள கவர்ச்சிகரமான தந்தம் காரணமாக, அவை கொடூரமாகக் கொல்லப்படுவதால் ஆண் – பெண் விகிதம் பாதிக்கப்படுகிறது. பயிர்களை சேதம் செய்யலாம் என்று நினைத்து மின்சாரம் பாய்ச்சப்பட்டோ, விஷம் வைக்கப்பட்டோ, அல்லது வேகமாக ஓடும் ரயிலில் அடிபட்டோ யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் வயது முதிர்ந்த ஒரு பெண் யானை இறந்து போகும்போது, அந்தக் குடும்பம் தங்களது தலைவியை இழக்கிறது. இதன் காரணமாக அந்த யானைக் கூட்டம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட நேர்கிறது. இது சிலவேளைகளில் அந்த யானைக் குடும்பமே சிதறி வெவ்வேறு பாதைகளில் பிரிந்து செல்ல ஏதுவாகிறது. அது மட்டுமில்லாமல் சர்க்கஸில் வித்தை காட்டுவதற்காகவோ, கோவில்களில் சேவை செய்வதற்காகவோ யானைகள் பிடிக்கப்பட்டோ, கடத்தியோகொண்டு வரப்படும் போது அவை குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டு நிராதரவாகின்றன. அவற்றின் வீடான காடுகள் துண்டாக்கப்படும் போது, உறவினர்களுடனான நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன.

யானைகளும் நம்மைப் போல சமூக விலங்குகள்தான். (Photo: Kalyan Varma)

யானைகளும் நம்மைப் போல சமூக விலங்குகள்தான். (Photo: Kalyan Varma)

நமது சமூகத்தைச் சேர்ந்த  ஒருவர் கொல்லப்பட்டால் நாம் மனமுடைந்து போராட்டத்தில் குதிக்கிறோம். நீதி கேட்கிறோம். எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் நமது ஆதரவை அவர்களுக்குத் தருகிறோம். ஏன்?அவர்களின் வலியை நாமும் உணர்வதால்தான். யானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். அவை தங்களது குட்டிகளை அக்கறையுடனும், உறவினர்களை நம்மைப் போலவே நெருக்கமாகவும் நடத்துகின்றன. யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும் நாம் புரிந்துகொள்ளாத வரை, யானைகளை பாதுகாப்பது என்பது மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.

யானைகளை பாதுகாக்க மத்திய அரசு யானைகளை தேசிய பாரம்பரிய விலங்காக அங்கீகரித்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் யானைகள் செயல்திட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது. அரசுடன் மக்களான நாமும் இணைந்து செயல்பட்டால்தான் யானைகளைக் காப்பாற்ற முடியும். அதற்கு தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது (Elephant Task Force Report). யானைகளை பாதுகாப்பதற்காக அந்த அமைப்பு வழங்கியுள்ள முக்கியமான சில பரிந்துரைகள்:

 • யானை வழித்தடங்களை மாற்றும் செயல்பாடுகளை தடை செய்ய வேண்டும்.
 • யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டும்.
 • ஒவ்வொரு யானைப் பாதுகாப்பிடங்களிலும் உள்ளூர் நிர்வாகக் குழுக்களை அமைக்க வேண்டும்.
 • யானைகள் வாழும் சூழலியல், அவற்றின் எண்ணிக்கை பற்றி அறிய தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
 • திருட்டுத்தனமாக நடக்கும் யானைத் தந்த வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 • பழக்கப்பட்ட யானைகள் மீதான கவனமும் நிர்வாகமும் மேம்படுத்தப்பட வேண்டும்.
 • அதிக மனித – விலங்கு மோதல் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 • இந்த மோதலில் இழக்கப்படும் பயிர்களுக்குசெலவிட்ட முழுத்தொகையையும் நிவாரண நிதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திடல் வேண்டும்.
 • யானைகளின் முக்கியத்துவம், மதிப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
யானையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவது அவசியம் (Photo: Kalyan Varma)

யானையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவது அவசியம் (Photo: Kalyan Varma)

யானைகளைப் பாதுகாக்க ம்மால் என்ன செய்ய முடியும்:

 • யானையைக் கொன்று பெறப்பட்ட அதனது உடல்பாகங்களை (உரோமம் மற்றும் தந்தம்) அல்லது அவற்றாலான ஆபரணங்ளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
 • யானை வாழும் பகுதியிலிருந்து வெட்டி வரப்பட்ட மரங்களாலான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
 • யானை ஆராய்ச்சி செய்யும் மையங்களுக்கு நம்மாலான தொண்டு செய்யலாம்.
 • யானைகளின், அவற்றின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களின்  முக்கியத்துவத்தையும் பிறருக்கு உணரவைக்க முயற்சி செய்யலாம்.

இந்தக் கட்டுரை Tamilnadu Science Forum (TNSF) வெளியிடும் துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (October 2011) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்(PDF).

Edited version of this article on Asian Elephants published in ‘Thulir’ – a science monthly magazine for kids from Tamilnadu Science Forum (TNSF). You can download the PDF of this Tamil articlehere.

This is a Tamil Version of article titled “Trumpeting their Cause” published in The Hindu Young World on 18th July, 2011.

Written by P Jeganathan

November 1, 2011 at 12:28 am

Posted in Mammals

Tagged with