Archive for June 2012
கா..கா…கா…
காக்காவை நாம் காக்கா என்று அழைப்பதேன்? சிறு குழந்தை கூட சொல்லிவிடும், அது கா..கா என்று கத்துவதால். தெலுகில் காக்கி, ஹிந்தியில் கவ்வா, கன்னடத்தில் காகே என இது எழுப்பும் குரலை வைத்தே இந்தியாவின் பல மாநிலங்களில் இப்பறவைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
காகத்தை முதன்முதலில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது எனது அம்மாவாகத்தான் இருக்க வேண்டும். அமாவாசை தினங்களிலும், மற்ற விசேச நாட்களிலும் வடை, பாயாசத்துடன் சமைத்து ஒரு கவளம் சோற்றை கொல்லைப் புற மதில் சுவரின் மேல் வைத்து கா..கா..வென அழைத்து அவை சாப்பிட்ட பின்னரே எனக்கு உணவூட்டுவாள். கூப்பிட்ட கொஞ்ச நேரத்திலெல்லாம் காகங்கள் கூட்டமாக அங்கே பறந்து வந்து விடும்.
சிறு வயதில், நாள் காலை கண்விழித்து வீட்டினுள் இருந்தபடியே வாசலைப் பார்த்தபோது காகங்கள் பக்கவாட்டில் தலையைச் சாய்த்து தமது அலகால் அம்மா போட்ட கோலத்தை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அரிசி மாவில் கோலம் போட்ட காலமது! கழுத்தில் சாம்பல் நிறத்திலுள்ளது காக்கா, முழுவதும் கருப்பாக இருப்பது அண்டங்காக்கா என காகங்களில் இரண்டு வகை இருப்பதை அறிந்து கொண்டது அப்போதுதான். அரிசி மாவு என அவற்றிற்கு எப்படித்தெரியும் என கேட்டபோது கோலத்தை மொய்க்கும் எறும்புகளைப் பார்த்து வந்திருக்கும் என அம்மா சொன்னாள். இப்படி நினைவுதெரிந்த காலம் முதல் என்னைப்போல பலருக்கும் காகங்கள் பரிச்சயமான பறவைகளில் ஒன்றாக இருக்கும்.
நாம் சாதாரணமாகப் பார்க்கும் காக்கை, அண்டங்காக்கையைத் தவிர இந்தியாவில் தோற்றத்தில் இவற்றை ஒத்துக் காணப்படும் ஐந்து காக்கை வகைகள் தென்படுகின்றன. இவையல்லாது, இமயமலைப்பகுதிகளில் தென்படும் இரண்டு வகை காகங்கள் நாம் பார்க்கும் அண்டங்காக்கையைப் போலவே இருந்தாலும் அவற்றில் ஒன்றிற்கு அலகின் நிறம் சிவப்பாகவும்(Red-billed Chough), மற்றொரு வகைக்கு அலகின் நிறம் மஞ்சளாகவும் இருக்கும் (Alpine Chough). நம்மூர் காகங்களையே பார்த்தவர்களுக்கு வண்ண அலகுடைய இவ்வகையான காகங்களைப் காணும் போது சற்று வியப்பாகத்தான் இருக்கும்.
காகங்களின் புத்திகூர்மையை நம்மில் பலர் பார்த்தறிந்திருப்போம். பஞ்சதந்திரக்கதையில் தாகத்தைத் தனித்துக்கொள்ள பானையின் அடியில் கிடக்கும் நீரின் மட்டத்தை உயர்த்த சிறு கற்களை போட்ட காகத்தைப்பற்றி பள்ளியில் படித்திருபோம். எல்லா அறிவையும் பெற்றிருக்கிறோமென்ற இறுமாப்புடன் இருக்கும் மனிதர்களாகிய நமக்கு, நம் இனத்தையல்லாத உயிரினங்கள் இயல்பாகச் செய்யும் ஒரு சில செயல்கள் நாம் செய்வதை ஒத்திருப்பது நம்மை வியக்க வைக்கும். கற்கால மனிதன் தீயூட்ட சிக்கிமுக்கிக் கற்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான். இப்படி கருவியை உருவாக்கவும் அதைப் பயன்படுத்துவதும், இவ்வுலகில் மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் காகமும் ஒன்று. நம் மூதாதயர்களான ஆப்பிரிக்காவிலுள்ள சிம்பன்சிகளையும், அமெரிக்காவில் தென்படும் கடல் நீர்நாயையும் (Sea Otter) மற்ற உதாரணங்களாகச் சொல்லலாம்.
கேலிடொனியன் காகம் (Caledonian crow) என்ற வகைக் காகம் காட்டில் விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் இடுக்குகளில் இருக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் குச்சியை வைத்து பிடிக்கின்றன. கீழே கிடக்கும் குச்சிகளை தமது அலகால் பிடித்து மர இடுக்குகளில் குத்திக் குடையும் போது, அதனுள்ளே இருக்கும் புழுக்கள் எரிச்சலில் அக்குச்சியை தமது வாயுறுப்புகளால் கவ்வுகின்றன. உடனே இக்காகம் குச்சியை வெளியே எடுத்து அதில் மாட்டியுள்ள இரையை பிடித்துச் சாப்பிடுகின்றன. இரை மரத்தினுள் அமைந்திருக்கும் ஆழத்திற்கேற்ப குச்சியின் அளவையும் தேர்ந்தெடுக்கும் திறன்வாய்ந்தவை இக்காகங்கள்!

Caledonian Crow: Photo copyright: Jolyon Troscianko
ஜப்பானில் இருக்கும் ஒரு வகையான அண்டங்காக்கைகள் அங்குள்ள ஒரு நகரத்தில் வாழ்க்கை நடத்துவதற்கான நெளிவு சுளிவுகளை நன்கு கற்றுத்தேர்ந்துவிட்டன. கொட்டைகளை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை சாப்பிட இக்காகங்கள் நாம்மை ஆச்சர்யப்படவைக்கும் நூதன முறையை கையாள்கின்றன. வாகனங்கள் விரைந்து செல்லும் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிக்னலின் மேலிருந்து தமது அலகால் கடித்து உடைக்க முடியாத கொட்டைகளை கீழே போடுகின்றன. வாகனங்களின் சக்கரத்தில் அரைபட்ட கொட்டைகளிலிருந்து பிறகு பருப்பினை எடுத்துச் சாப்பிடுகின்றன. அதுவும் எப்போது? பாதசாரிகள் நடந்துசெல்வதற்கான விளக்கு எறிந்தவுடனே தான். இல்லையெனில் வாகனங்களில் அடிபட நேரிடுமே! இந்த யோசனை எந்த காகத்திற்கு முதலில் தோன்றியதோ தெரியவில்லை, ஆனால் இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன். இன்று அப்பகுதியிலுள்ள எல்லா காகமும் ஒன்றைப்பார்த்து ஒன்று கற்றுக்கொண்டு இதே உத்தியை கையாள்கின்றன.
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் காகத்தின் தந்திர குணங்களையும், புத்திகூர்மைகளையும் பற்றி Douglas Dewar 1905ல் எழுதிய The Indian Crow எனும் புத்தகத்தில் விரிவாகக் காணலாம் (இப்புத்தகத்தை இலவசமாக இணையத்தில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம் – <https://archive.org/details/indiancrowhisboo00dewa>).
இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளரான ம. கிருஷ்ணனும் காகங்களைப்பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். காகத்தைப் பற்றிக் கூறும் போது குயிலைப் பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது. என்னதான் காகம் புத்திசாலியாக இருந்தாலும் குயில் தந்திரமாக அதை ஏமாற்றிவிடும். கோடை காலங்களில் காகங்கள் கூடு கட்டி முட்டையிடும் போது ஆண் குயில் அவற்றின் கூட்டினருகே சென்று அவற்றின் கவனத்தை ஈர்க்கும். உடல் முழுதும் கருப்பாக இருப்பது ஆண் குயில், அடர் பழுப்பு நிறத்தில் வெண் புள்ளிகளுடன் இருப்பது பெண் குயில்.

ஆண் குயில் (இடது), பெண் குயில் (வலது) Illustration: Wikimedia Commons
இந்த ஆண் குயில் காகத்தின் கூட்டினருகில் வருவதைக் காணப்பொறுக்காமல் அதை பறந்து சென்று விரட்டியடிக்கும். இவ்வேளையில் பெண் குயில் காகத்தின் கூட்டிற்குச் சென்று தனது முட்டையை இட்டு விடும். இதன் முட்டை காகத்தின் முட்டையின் நிறத்திலேயே இருப்பதால் காகத்திற்கு வித்தியாசம் தெரியாது. இது போதாதென்று காகத்தின் முட்டை பொறிப்பதற்கு முன்பாகவே குயிலின் முட்டை பொறிந்து குஞ்சு வெளியே வந்து விடும். இக்குஞ்சும் காகத்தின் குஞ்சை ஒத்திருப்பதால் காகமும் அதற்கு உணவளிக்க ஆரம்பித்துவிடும். காகமும் குயிலும் இவ்வாறு ஒன்றையொன்று சார்ந்தே பரிணமித்திருக்கின்றன. குயில்களின் இனிமையான குரலைக் கேட்டு மகிழ்ச்சியுறுவோர் காகத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.

Illustration: Wikimedia Commons
காகம் மனிதர்களுக்கு பலவகையில் சேவை செய்யும் பறவை. வீட்டில் பொறி வைத்து எலியைக் கொன்று மண்ணில் புதைத்து சமாதியா கட்டுகிறோம்? தெருவிலோ, குப்பைத்தொட்டியில் தானே வீசி எறிகிறோம். இவற்றையெல்லாம் தின்று சுத்தம் செய்வது யார்? காகங்களே. புறவுலகின் பால் நாட்டமேற்பட இயற்கைக் கல்வியாளர்கள் குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் பெரும்பாலும் சொல்லிக்கொடுப்பது பறவை அவதானிப்பையே (Birdwatching). காகங்களைப் பார்ப்பதற்கும், அவற்றின் வித்தியாசமான செயல்களை உற்றுநோக்குவதற்கும், புகைப்படமெடுப்பதற்கும் நாம் செலவு செய்யவோ, எங்கும் பயனிக்கவோ அவசியமில்லை. ஒரு கவளம் சோறு போதும்!
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 1. புதிய தலைமுறை 12 ஜூன் 2012