Archive for August 2012
காணாமல் போகும் சாலையோர உலகம்
சமீபத்தில் திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொள்ள நேரிட்டது. பல ஆண்டுகளாக இவ்வழியில் போய் வந்து கொண்டிருந்தாலும் கடைசியாக பயணித்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. திருவெறும்பூரிலிருந்து ஒரு காலை வேளையில் காரில் புறப்பட்டோம். பாய்லர் தொழிற்சாலை, துவாகுடி வழியாகச் சென்று சுங்கச்சாவடியில் அந்த அகலமான சாலையில் போய் வர 59 ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு கார் தஞ்சாவூரை நோக்கி வேகமெடுத்தது. ஸ்பீடோமீட்டர் 80க்குக் குறையாமல் காரோட்டி பார்த்துக்கொண்டார். அரைமணி நேரத்தில் ஊரின் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். பலகாலமாக அந்த வழியாகப் போகாமல் இருந்த எனக்கு இம்முறை இங்கு நான் கண்ட பல மாற்றங்கள் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நான் போகவேண்டிய இடத்தை சீக்கிரமாக அடைந்ததில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி என்றாலும் பயணித்த அத்தருணத்தில் பலவற்றை இழந்ததைப் போன்ற ஒரு உணர்வே மேலோங்கி இருந்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எனது மாமா ஒருவருடன் இவ்வழியில் பயணித்த போது இந்த இரண்டு ஊர்களுக்கிடையே வழிநெடுக சாலையிலிருந்தபடியே பார்க்கக்கூடிய பல ஏரிகளை பேருந்திலிருந்து காண்பித்துக்கொண்டே வந்தார். பல இடங்களில் அவை இருந்த சுவடே தெரியாமல் போனதைச் சுட்டிக்காட்டி கவலைப்பட்டுக்கொண்டார். அப்போது அவரது வார்த்தைகளின் அர்த்தம் அவ்வளவாகப் புரியவில்லை. அப்போழுதெல்லாம் வழிநெடுக ஆங்காங்கே சாலையோரமாக பனை, ஆல், புளியன் மரங்களைக் காணலாம். இப்பொது இவ்வழியே போகும்போது ஏரியும் இல்லை, மரங்களும் இல்லை. இப்போது சில ஊர்கள் கூட பார்வையிலிருந்து மறைந்ததும், தூரமாகவும் போய்விட்டன.
முன்பெல்லாம் பேருந்தில் தஞ்சாவூருக்குப் பயணித்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். துவாகுடி தாண்டியதும் புதுக்குடி, தேவராயனேரி, செங்கிப்பட்டி வழியாக வல்லம் வந்தடைந்து பின் சுமார் இருபது நிமிடங்களில் தஞ்சாவூரைச் சென்றடையலாம். அப்போதிருந்த ஒரு சில சோழன் போக்குவரத்துக்கழக பேருந்துகளே எல்லா ஊர்களிலும் நிற்கும். பல தனியார் வண்டிகள் துவாகுடி, செங்கிப்பட்டி விட்டால் வல்லம் அதன் பின் தஞ்சாவூர்தான். இப்போதும் இந்த ஊருக்குள் போய்வரமுடியும். அதற்கென்று தனி பஸ் சர்வீஸ் இருக்கிறது. விரைவு வண்டிகள், காரில் பயணிப்போர் இங்கெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தொலை தூரத்திலிருந்து பயணிக்கும் வண்டிகளில் வருபவர்களுக்கு காலப்போக்கில் இந்தமாதிரியான ஊர்கள் இருப்பதே தெரியாமல் போய்விடும். இவ்வூர்களையெல்லாம் இருப்பதை தெரிந்து வைத்திருப்பதும், அவ்வழியே கடந்து செல்வதும் அவர்களுக்கு வேண்டுமானால் அவசியமில்லாமலிருக்கலாம். ஆனால் நான் உணர்ந்ததை பலகாலமாக அடிக்கடி இவ்வழியே பயணித்துக்கொண்டிருப்பவர்கள் ஒருவேளை உணரக்கூடும். நான் சொன்ன இந்த ஊர்களெல்லாம் மிகப்பிரபலமானவையோ, சுற்றுலாவிற்கான இடமோ அல்லது இவ்வூர்களிலெல்லாம் எனக்கு சொந்தக்காரர்களோ, தெரிந்தவர்களோ இல்லை. பிறகு ஏன் இந்த அங்கலாய்ப்பு என்கிறீர்களா? பயணம் மேற்கொள்வது சென்றடையும் இடத்தை அடைவதற்கு மட்டும் தானா? எவ்வழியே பயணிக்கிறோம், வழியில் என்ன செய்கிறோம், எதைப் பார்க்கிறோம் என்பது முக்கியம் இல்லையா?
நல்ல சாலையால் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. அகலமான சாலையில் வேகமாகப் பயணிப்பது ஒரு பரவசமூட்டும் அனுபவமாகவும், வேலையை முடிக்க ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு துரிதமாகச் சென்றடையவும் முடிகிறது. ஆயினும் பலகாலமாக பார்த்துப் பழகிய மரங்களையும், ஊர்களையும் காணாமல் போகச்செய்கிறது இந்த நால்வழிச்சாலைகள். சிற்றூர்களை பார்க்கமுடியாமல் போனால் போகிறது. பெயர்ப்பலகைகளிலாவது அவற்றைப் பார்க்க முடிந்தது. ஆனால் ஓங்கி உயர்ந்த, நிழலளிக்கும் அழகான சாலையோர மரங்கள்?
நால்வழிச்சாலையின் நடுவில் இருந்த திட்டில் அரளிச்செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. ஆட்கள் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த, எந்த பராமரிப்பும் செய்யத்தேவையில்லாத சாலையோர மரங்களை வெட்டிச்சாய்த்துவிட்டு வெறிச்சோடியிருக்கும் அந்த நான்குவழிச்சாலையின் நடுவில் பூச்செடிகளை வைத்து தண்ணீரையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம். சாலையோர மரங்களை வெட்டாமல் சாலையே அமைக்க முடியாதா? நாம் நாட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் சாலையோர மரங்களை விரும்பும் ஓர் அதிகாரி கூட இல்லையா? மிகச்சிறப்பாக சாலைகளை அமைக்கும் பொறியியல் வல்லுனர்களுக்கு சாலையின் ஒரு அங்கம் அதனோரத்தில் இருக்கும் மரங்கள் என்பது தெரியாதா?
தஞ்சாவூரில் வேலையை முடித்துக்கொண்டு நீடாமங்கலத்திற்குப் பயணித்தோம். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வழியாகச் சென்ற சாலையில் அதிக மாற்றம் ஏதுமில்லை. ஆங்காங்கே இருந்த பள்ளங்களை தாரிட்டு நிரப்பி முன்பு வந்த சாலையைபோல் ஒரே சீராக இல்லாமலும், சில இடங்களில் வேகத்தடைகளும், வழியெங்கிலும் மரங்களும் இருந்தது. காகங்களும், தவிட்டுக்குருவிகளும், நாகணவாய்களும் சாலையின் ஓரத்தில் அமர்ந்து எதையோ கொத்திக்கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. வாகனங்கள் சீறி வரும் வேளையில் பறந்து சென்று, அவை கடந்து சென்றபின் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தமர்ந்தன. சற்று தொலைவில் கத்திக்கொண்டிருந்த கெளதாரியின் குரலை தெளிவாகக் கேட்க முடிந்தது. தந்திக்கம்பிகள் சாலையின் அருகிலேயே நம்மைத்தொடர்ந்து பயணித்தன. அவற்றில் அமர்ந்திருக்கும் பறவைகளும் தான். பச்சைப்பசேலென வயல் கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் பரவியிருந்தது. ஆட்கள் ஆடுகளை சாலையின் ஓரமாக ஓட்டிக்கொண்டு போனார்கள். அவ்வப்போது அவைகளும் வண்டி ஓட்டுனர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. காலை நேரமாதலால் சிறுவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் ஒருவர் பின் ஒருவராக போய்க்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே ஊர்களும், கடைகளும் அவற்றின் வண்ண வண்ணப் பெயர்ப் பலகைகளும் தென்பட்டன. மக்கள் பேருந்துக்காக காத்துகொண்டிருந்தார்கள். சாலையை விட்டு சற்றுத் தள்ளியிருந்த அரசமரத்தடியில் சிலர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். லாரி ஒன்று நடு ரோட்டில் நிறுத்தப்பட்டு அதன் ஓட்டுனர் தலையை வெளியில் நீட்டி எதிரில் வந்த மற்ற லாரி ஓட்டுனரிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டுமே ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவை. நட்ட நடு ரோட்டில் இப்படி நிறுத்தி பேசிக்கொண்டிருப்பது மற்ற வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூராக இருப்பதென்னவோ உண்மைதான். எங்கு பரிச்சயமானார்களோ எவ்வளவு நாள் கழித்து சந்தித்துக்கொள்கிறார்களோ! வண்டியை ஓரமாக நிறுத்தி பேச அவர்களுக்கெல்லாம் நேரமிருக்குமோ என்னவோ? இன்னும் பல கி.மீ தூரம் போகவேண்டியிருக்கலாம். பின் வரும் வாகனங்கள் திட்டிக்கொண்டே ஒலியெழுப்புவது அவர்களுக்குத் தெரியாமலில்லை. வண்டியை நகர்த்திக்கொண்டே கையசைத்து விடைபெற்றனர் இருவரும்.
காரோட்டி சொன்னார்,” இந்த ரோட்ட எப்ப அகலப்படுத்தப் போறாங்களோ, பைபாஸ் ரோடு ரெடி பண்ணிட்டா இந்த ஊருக்குள்ள வரவேண்டியதே இல்ல..”. எனக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை.புன்னகைத்துக் கொண்டே முகத்தைத் திருப்பி சாலையோர உலகை வேடிக்கை பார்ப்பதை தொடரலானேன்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 8. புதிய தலைமுறை 30 ஆகஸ்ட் 2012
தேசாந்திரியின் கானல் நீர்
கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஹிரியூர் எனும் ஊரில் பேருந்து நிலையத்தில் மதிய உணவிற்காக கொஞ்ச நேரம் வண்டி நின்றது. ஒரே விதமாக நெடுநேரம் அமர்ந்திருக்க முடியாமல் கொஞ்சநேரம் நிற்கலாம் என வண்டியை விட்டு கீழிறங்கி வெளியே வந்தேன். பேருந்து நிலையம் அப்படி ஒன்றும் பெரியது இல்லை. சுமார் பத்து வண்டிகள் வரிசையாக வந்து நிறுத்தக்கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் சுத்தமாகவே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காகிதங்களும், சிகரெட்டுத்துண்டுகளும், துப்பி வைத்த வெற்றிலை பாக்கு எச்சிலும் இருந்ததே தவிர பிளாஸ்டிக் குப்பைகளை காணமுடியவில்லை. பேருந்து நிலையத்தைச்சுற்றி மதில் சுவர் இருந்தது. சுத்தமாக இருந்ததற்குக் காரணம் தரை முழுவதும் சிமெண்டினால் பூசி மொழுகிப்பட்டிருந்தது கூட காரணமாக இருக்கலாம். குண்டும் குழியுமாக இருந்திருந்தால் சேரும் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம் செய்வது கடினமான காரியம். ஒரே சீரான சிமெண்டுத் தளத்தை சுத்தம் செய்வது எளிதாகவே இருக்கும்.
நாகணவாய்களும், காகங்களும், கரும்பருந்துகளும் வானில் பறந்தும், அருகிலுள்ள மரங்களில் அமர்ந்துமிருந்தன. எனினும் என்னைக் கவர்ந்தது நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்த தும்பிகளே. சமீப காலமாக எனக்கு தும்பிகளைப் பார்ப்பதும் அவற்றின் குணாதிசியங்களை பதிவு செய்வதிலும் ஆர்வம் மேலோங்கி செல்லுமிடங்களிலெல்லாம் அவற்றை உற்று நோக்குவதே வேலையாக இருக்கிறது. பூச்சியினத்தைச் சார்ந்த தும்பிகள் மிகச்சிறந்த பறக்கும் திறனைக் கொண்டவை. சிறு வயதில் தட்டானைப் பிடித்து விளையாடாதவர்கள் மிகச்சிலரே இருக்கமுடியும். தும்பி அல்லது தட்டான்களில் இரண்டு வகை உண்டு. கண்கள் இரண்டும் அருகருகில் அமைந்து, அமரும்போது இறக்கைகளை விரித்த வண்ணம் வைத்திருப்பவை தட்டான்கள். இவை பரந்த வெளிகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும் பறந்து திரிவதை காணலாம். உருவில் தட்டான்களை விடச் சற்று சிறியதாகவும், மிக மெல்லிய இறக்கைகளையும், கண்கள் சற்று இடைவெளிவிட்டு அமைந்தும், அமரும்போது இறக்கைகளை மடக்கி பின்புறம் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில் பறந்து திரியும்.
ஹிரியூர் பேருந்து நிலையத்தில் பறந்து கொண்டிருந்தவை Wandering Glider or Globe Skimmer (Pantala flavescens) எனும் வகையைச்சேர்ந்த தட்டான்கள். ஐரோப்பா, ரஷ்யா, கனடா, மற்றும் தென் துருவப்பகுதியைத் தவிர உலகில் பல பகுதிகளில் இவை பரந்து காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் தென்மேற்குப்பருவ மழைக்காலத்திற்குச் சற்று முன்பு இவை ஆயிரக்கணக்கில் வானில் பறந்து திரிவதைக் காணலாம். சமீபத்தில் இவற்றைப்பற்றின ஆச்சர்யமான தகவல் ஒன்று கண்டறியப்பட்டது. பல்லாயிரம் தட்டான்கள் கூட்டம் கூட்டமாக அக்டோபர் மாத ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு கடல் கடந்து (சுமார் 3500 கீ.மீ.) வலசை போவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தட்டான்கள் இருந்தாலும் தமிழில் ஒவ்வொன்றிற்கும் தனியாகப் பெயரில்லை. உலகில் பல இடங்களில் தென்படுவதாலும், கடல்கடந்து கண்டம் விட்டு கண்டம் வலசை போவதாலும் நான் ஹிரியூரில் பார்த்த அந்த தட்டானுக்கு தேசாந்திரி என பெயரிட்டுக்கொண்டேன். சற்று நேரம் அத்தட்டான்களை கவனித்தவுடன் அவை அங்கே என்ன செய்கின்றன என்பது தெரிந்தது. அவை முட்டையிட்டுக்கொண்டிருந்தன. ஆமாம், அந்த பளபளப்பான தரையில் தான்.
தட்டான்களின் வாழ்க்கைச் சுழற்சிமுறை நம்மை வியக்க வைக்கும். முதிர்ந்த ஆணும் பெண்ணும் கலவி கொள்ளும் விதமே அலாதியானது. ஆண் தனது வயிற்றுப்பகுதியின் (வால் என நாம் கருதுவது) கடைசியில் இருக்கும் கொக்கி போன்ற உருப்பினால் பெண்ணின் தலையின் பின்புறம் கோர்த்துக்கொள்ளும். பெண் தனது வயிற்றுப்பகுதியின் முனையை மடக்கி ஆணின் வயிற்றுப்பகுதியின் ஆரம்பத்திலுள்ள பை போன்ற அமைப்பில் கொண்டு சேர்க்கும். இப்பையில் தான் ஆணின் விந்தணுக்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இது முடிந்தவுடன் நீர்நிலைகள் இருக்குமிடம் தேடி பறந்து சென்று தட்டானின் வகைக்கேற்ப, நீரின் மேற்பரப்பில், நீரில் மிதக்கும் தாவரங்களில், நீரோரத்திலுள்ள மண்ணில் முட்டையிடும். சில தட்டான் இனத்தில் பெண் முட்டையிட்டு முடிக்கும் வரை ஆண் அதை பிடித்துக்கொண்டே இருக்கும். தேசாந்திரியும் அப்படித்தான்.
நீரிலிட்ட முட்டை பொரிந்து தட்டானின் இளம்பருவம் நீரில் பல காலம் வாழும். முதிர்ச்சியடைந்த பின் நீரிலிருந்து வெளியே நீட்டிகொண்டிருக்கும் தாவரங்களைப் பற்றி மேலே வந்து தனது கூட்டிலிருந்து உறையை பிய்த்துக்கொண்டு இறக்கைகளை விரித்து வானில் பறக்க ஆரம்பிக்கும். தட்டான்கள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சியனத்தைச் சார்ந்தவை. நீருக்கடியில் இருக்கும் போதும் கொசுவின் முட்டைகளையும் மற்ற பூச்சிகளையும் பிடித்துண்ணும். இறக்கையுள்ள தட்டானாக வானில் பறக்கும் போதும் கொசுக்களையும் மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளையும் உண்ணும்.
சரி ஹிரியூருக்கு வருவோம். நீரில் முட்டையிடுவதற்கு பதிலாக தேசாந்திரிகள் ஏன் தரையில் முட்டையிட வேண்டும்? காரணம், அந்த பளபளப்பான தரையிலிருந்து வெளிப்படும் முனைவாக்க ஒளியினால் (polarized light). இது ஒருவகையான ஒளிசார் மாசு (Polarized light pollution). பளிங்குக்கற்களினால் ஆன சமாதி, பளபளப்பான சிமெண்ட்டுத்தரை, காரின் முன் கண்ணாடி முதலியவற்றிலிருந்தும், சாலைகள் அமைக்கப் பயன்படும் அஸ்பால்ட் (asphalt) எனும் ஒரு வகை ஒட்டிக்கொள்ளும் கருமையான கலவைப் பொருளிலிருந்தும் இவ்வகையான முனைவாக்க ஒளி வெளிப்படும். இதனால் இந்த இடங்களெல்லாம் பலவகையான பூச்சிகளுக்கு நீரைப்போன்றதொரு தோற்றத்தை அளிக்கும்.
எங்கோ பிறந்து, முதிர்ச்சியடைந்து, பல இடங்களில் பறந்து திரிந்து, தம்மை உணவாக்க வரும் பல வகையான பறவைகளிடமிருந்து தப்பித்து, தனது துணையைத்தேடி, கலவி கொண்டு, தனது இனத்தை தழைத்தோங்கச்செய்ய சரியான இடம்பார்த்து முட்டையிடும் வேளையில் நீரென்று நினைத்து தரையிலும், கற்களிலும், கண்ணாடிகளிலும் முட்டையிடும் இந்தத் தட்டான்களைப் பார்க்க வேதனையாக இருந்தது. முட்டையிடுவதில் மும்முரமாக இருந்த ஒரு சோடி வேகமாக வந்து திரும்பிய பேருந்தின் சக்கரத்தில் அடிபட்டு தரையோடு தரையாகிப் போனது. மற்ற சோடிகள் தமது முட்டையிடும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தன.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு உயிருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தான் இருக்கிறது. பேருந்து புறப்படத் தயாரானது. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே தேசாந்திரிகள் முட்டையிடும் பரிதாபமான காட்சியை கண்டுகொண்டிருந்த போதே பேருந்து பெங்களூரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 7. புதிய தலைமுறை 23 ஆகஸ்ட் 2012
முன்தோன்றி மூத்தவரே !
குரங்குகளின் கூட்டத்தை எப்போதாவது கூர்ந்து கவனித்ததுண்டா நீங்கள்? சற்று நேரம் அமர்ந்து அவை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவையும் நம்முடைய குணநலன்களை கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஆனால் நமக்கும் அவற்றின் குணாதிசியங்கள் இருக்கிறதென்பதே உண்மை. வானரங்களின் வழித்தோன்றல்தானே நாம்! ஆகவே நம்மைப்போலவே குரங்குகள் இருக்கின்றன என்று சொல்வதைவிட குரங்களைப் போல் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே சரி. சமூக வாழ்க்கை, ஒருவர் செய்வதைப்பார்த்து மற்றவரும் அதையே பின்பற்றுதல், கற்றுக்கொள்ளுதல், சக குடும்பத்தாருக்கும் இனத்தாருக்கும் ஆபத்து நேரிடும் போது பரிதாபப்படுதல், காப்பாற்ற முற்படுதல், குழந்தைகளைப் பேணுதல் முதலிய பல காரியங்களில் நாமும் குரங்களைப் போலவே இருப்பதை அறிவோம்.
ஆனாலும் பரிணாம வளர்ச்சியடைந்த மனித இனம் பல வகையில் மூதாதயர்களின் குணங்களை இழந்து விட்டது. உதாரணமாக மரவாழ்க்கை. பெரும்பாலன குரங்கினங்கள் மரத்தின் மேல் வசிப்பவை. சில குரங்கு வகைகள் தரையில் வசிக்கும். எனினும் எல்லா குரங்குகளுமே நன்றாக மரமேறும். அவற்றின் கை கால்களில் உள்ள நீண்ட விரல்கள், நகங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பின்னோக்கி வளையக்கூடிய கட்டைவிரல் ஆகிய தகவமைப்புகளே இவை மரக்கிளையை பிடித்து மிக நன்றாக மரமேற உதவுகிறது. முன்னோக்கி அமைந்துள்ள கண்கள் மரம்விட்டு மரம் தாவும்போது கிளைகளின் தூரத்தை கச்சிதமாக கணிக்க வகைசெய்கிறது. இதனாலேயே அவை தாவும் போது கீழே விழுவதில்லை.

Photo Courtesy: ohhaitrish.wordpress.com
குரங்கினங்களின் வாழ்க்கைமுறை அலாதியானது. சில குரங்கினங்கள் ஆண்-பெண் என சோடியாக வாழும். சில கூட்டமாக வாழும். இக்கூட்டத்தில் பல பெண் குரங்குகளும் அவற்றிற்கெல்லாம் ஒரு ஆண் குரங்கு தலைவனாகவும் இருக்கும். இக்கூட்டத்தில் பிறக்கும் பெண் குரங்கு முதிர்ச்சியடைந்த பின்னும் அவைகளுடன் சேர்ந்தே வாழும். ஆனால் ஆண் குரங்கு அவை பிறந்து முதிர்ச்சியடைந்த பின் அக்கூட்டத்தை விட்டு விலகிச்சென்றுவிடும். சில வேளைகளில் ஒரு கூட்டத்திலேயே பல ஆண் மற்றும் பெண் குரங்குகள் சேர்ந்தே வாழும். இது போன்ற கூட்டத்தில் பிறந்த ஆண் குரங்கு முதிர்ச்சியடைந்தவுடன், வயதான தலைவனை விட வலிமையாகவும் மற்ற குரங்குகளை அடக்கும் திறனுடையதாகவும் இருப்பின் அதுவே அக்கூட்டத்தின் தலைவனாகிவிடும். குரங்குகள் ஒன்றுடன் ஒன்று விளையாடவும், சண்டையிடவும், பின்னர் சமாதானமாகப் போகவும், மகிழ்வூட்டவும் ஏமாற்றவும் செய்கின்றன.
இந்தியாவில் உள்ள மனிதர்கள் அல்லாத குரங்கினங்களை (non-human primates) தேவாங்குகள், குரங்குகள், மந்திகள் அல்லது முசுக்குரங்குகள், வாலில்லா குரங்கு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரே ஒரு வாலில்லாக் குரங்கும் (வட-கிழக்கு இந்தியப்பகுதிகளில் மட்டும்) இரண்டு வகையான தேவாங்குகளும், எட்டு வகையான குரங்குகளும், ஐந்து வகையான மந்திகளும், இந்தியாவில் தென்படுகின்றன. தென்னகத்தில் தேவாங்கு, வெள்ளை மந்தி, கருமந்தி, நாட்டுக்குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகியவற்றைக் காணலாம்.
வாலில்லா மெலிந்த உடலுடன், இரவில் பார்க்க ஏதுவான மிகப்பெரிய கண்கள் கொண்டதே தேவாங்கு. இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளன. அடர்த்தியான புதர்கள் கூடிய இலையுதிர் காடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இவை இரவாடிகள். மரத்தில் வாழும். இரவில் பூச்சிகளையும் பிடித்துண்ணும், சில சமயங்களில் பழங்களையும் மரச்சாறையும் கூட உட்கொள்ளும். இது மிகவும் மெதுவாக நகரும். பெரும்பாலும் தனித்தே வாழும். தேவாங்குகள் தமது சிறுநீரை மரக்கிளைகளில் தெளித்து தாம் வாழும் இடப்பரப்பின் எல்லையை குறிக்கும். பார்ப்பதற்கு சிறிய உருவில் சாதுவாக இருந்தாலும் அபாயமேற்படும்போது உரத்த குரலெழுப்பவும் தம்மை தற்காத்துக்கொள்ள கடிக்கவும் கூட செய்யும்.
முசுக்குரங்குகள் அல்லது மந்திகளில் இரு வகைகளை தென்னகத்தில் காணலாம். தலையில் கூம்பு வடிவில் அமைந்த உரோமம், கரிய முகம், நீண்டு வளைந்த வாலின் மூலம் வெள்ளை மந்தியை இனம்கண்டுகொள்ளலாம். இவற்றை காட்டுப்பகுதியிலும் சில நேரங்களில் நகர்புறங்களிலும் காணலாம். இவை பெரும்பாலும் தரையிலேயே திரியும். இவை இளந்தளிர்கள், காய்கள் மற்றும் விதைகளையே வெகுவாகச் சுவைத்துண்ணும். இலைகளை செரிப்பதற்காகவே பிரத்தியோகமான குடலை பெற்றுள்ளன. இதனாலேயே இவற்றின் வயிறு சற்று உப்பலாக காணப்படும். வெள்ளை மந்திக்கூட்டத்தில் ஒரு ஆணும் பல பெண்ணும் இருக்கும். இளவயது ஆண் மந்திகளை அக்கூட்டத்தின் தலைவன் (அதன் தகப்பன்) சண்டையிட்டு கூட்டத்தைவிட்டு விலகச்செய்யும். அவ்வாறு வெளியேற்றப்பட்ட இளவட்டங்கள் அனைத்தும் ஒன்றுகூடி வாழும். இவை நேரம் பார்த்து மற்ற கூட்டங்களின் தலைவனை வெளியேற்ற முயற்சிக்கும். அப்படி அவை ஒரு கூட்டத்தினை வேறொரு ஆண் மந்தியிடமிருந்து கைப்பற்றிவிடின், அக்கூட்டத்திலுள்ள பழைய தலைவனுக்குப் பிறந்த எல்லா குட்டிகளையும் கொன்றுவிடும்.
ஈர இலையுதிர் காடுகள், பசுமைமாறாக் காடுகள் மற்றும் அதனைச்சார்ந்த தோட்டங்களிலும் தென்படுவது கருமந்தி அல்லது நீலகிரி முசுக்குரங்கு. கரிய முகமும், உடல் முழுதும் கரிய உரோமங்களால் போர்த்தப்பட்டும் தலைமுழுவதும் வெளிர் பழுப்பு நிற உரோமமும் கொண்டது இது. இவை அதிக அளவில் இளந்தழைகளையெ விரும்பி உண்கின்றன. இது ஓரிட வாழ்வியாகும். அதாவது, உலகிலேயே கேரளா, தமிழகம், கர்நாடகாவிலுள்ள குடகுமலை பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியிலேயே காணப்படுகிறது. இவை மற்ற கூட்டத்திலுள்ள மந்திகளை எச்சரிக்கும் வகையில் அவ்வப்போது உரத்த குரழுப்பும். பெரும்பாலும் கூட்டத்தின் தலைவனே இவ்வாறு முழக்கமிடும்.
செம்முகக் குரங்கு அல்லது நாட்டுக்குரங்கை பார்த்திராதவர் இருக்க முடியாது. நாட்டுக்குரங்குகள் தீபகற்ப இந்தியாவில் மட்டுமே பரவியுள்ளது. கோயில்களிலும், சுற்றுலாத்தலங்களிலும், கிராமங்களிலும் ஏன் மிகப்பெரிய நகரங்களிலும் கூட இவற்றைக்காணலாம். இவை எல்லாவகையான காடுகளிலும் தென்படுகின்றன. மற்ற குரங்கினங்களைப் போலல்லாமல் ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியை மட்டும் சார்ந்திறாமல் எல்லா விதமான வாழிடங்களிலும் இவை வாழக்காரணம் இவற்றின் உணவுப் பழக்கமே. இலைகளை மட்டுமே புசிக்கும் மந்திகளைப் போலில்லாமல், தாவரங்களில் பல்வேறு பாகங்களையும், விதைகள், பழங்கள், புற்கள், காளான்கள்,பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்ற பலதரப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுவதால் இவைகளால் எல்லா இடங்களிலும் பரவியிருக்க முடிகிறது.
நாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும். ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது. எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை. இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும். தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட கருமந்தியை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இது நரைமுகஊகம் என அறியப்படுகிறது.
வனத்தின் மேம்பாட்டில் வானரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறன. பலவிதமான காட்டு மரங்களின் பழங்களை உண்டு அவற்றின் விதைபரவலுக்கு வழிவகுக்கின்றன. நாட்டுக்குரங்கினங்கள் தம் வாயில் உள்ள பை போன்ற அமைப்பில் பழங்களை சேர்த்து வைத்து இடம் விட்டு இடம் சென்று விதைகளை துப்புவதால் அவ்விதைளை வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரப்புகிறது. அவை பல வகையான பூச்சி மற்றும் பறவைகளின் முட்டைகளை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கின்றன. மேலும் குரங்குகளே சிறுத்தை போன்ற பெரிய மாமிசஉண்ணிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. எனினும் குரங்கினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது சோகமான ஒன்றாகும். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம் – வாழிடம் குறைதலும் திருட்டு வேட்டையும். இவற்றின் உடலுறுப்புகள் மருத்துவகுணம் வாய்ந்தவை என்ற மூட நம்பிக்கையினால் இவை திருட்டுத்தனமாக கொல்லப்படுகின்றன.
இவை அபாயத்திற்குள்ளாவதற்கான இன்னோரு காரணமும் உண்டு. அது நாம் அவற்றின் மேல் காட்டும் பரிவு! ஆம் சுற்றுலாத்தலங்களுக்குப் போகும் போது குரங்குகளைக் கண்டால் ஏதோ அவற்றிற்கு உதவி செய்வதாக நினைத்து நாம் சாப்பிடும் உணவுப்பண்டங்களை கொடுப்பதால் அவற்றிற்கு பலவித நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. வனப்பகுதிகளினூடே செல்லும் சாலைகளை அகலப்படுத்தும் போது, சாலையோர மரங்களை வெட்டுவதால் சாலையின் மேலே பெரிய இடைவெளி உருவாகிறது. இதனால் மரவாழ்விகளான இவை இடம்பெயர, சாலையைக் கடக்கும் போதும், சாலையோரத்தில் மிச்சமீதியுள்ள உணவினை விட்டெறிவதால், அதை எடுக்க வரும் போதும் விரைந்து வரும் வாகனங்களில் அடிபட்டு உயிர் துறக்கின்றன.
நாம் பரிவு காட்டுவதாக நினைத்து உணவூட்டி பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு? சில குரங்குகள் நம்மிடமிருந்தே உணவுவை பறிக்க முற்படுகின்றன. ஏன் தெரியுமா? இதற்கு குரங்குகளின் வாழ்க்கைமுறையைப் பற்றி கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் இருக்கும் எல்லா குரங்குகளும் சரிநிகர்சமானமாக இருப்பதில்லை. ஒன்றிற்கு ஒன்று கீழ்படிந்தே வாழ்கிறது. வயது குறைந்த குரங்கிற்கு உணவு கிடைத்தால் அக்கூட்டத்தின் தலைவனுக்கு பகிர்ந்தளித்தோ, விட்டுக்கொடுத்த பின்தான் சாப்பிடமுடியும். குரங்கியல் ஆய்வாளர்களின் (Primatologists) கூற்றின்படி நீங்கள் ஒரு குரங்கிற்கு உணவளிக்கும்போது அக்குரங்குற்கு நீங்கள் கீழ்ப்பணிந்தவராகிறீர்கள். அப்படித்தான் அக்குரங்கு நினைத்துக்கொள்ளும். பிறகு உணவு கொடுக்காத போது கோபமேற்பட்டு தாக்கவோ உங்களிடமுள்ள உணவினைப் பறிக்கவோ செய்கிறது. இதனாலேயெ இவை மனிதர்களுக்கு தொந்தரவு தரும் பிராணியாக கருதப்படுகிறது. மிகுந்த தொல்லைதரும் இக்குரங்குகளை ஒரு இடத்திலிருந்து பிடித்து மற்றொரு இடத்திற்கோ, அருகிலுள்ள வனப்பகுதிக்கோ கொண்டு விட்டுவிடுவதால் பிரச்சனையை தீர்க்க முடியாது. இதனால் இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறைந்து போகலாம். இவற்றிற்கு உணவளிப்பதையும், தேவையற்ற உணவுப்பதார்த்தங்களை வெளியே தூக்கி எறியாமல் இருப்பதனாலேயே இவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 6. புதிய தலைமுறை 16 ஆகஸ்ட் 2012
சின்னஞ்சிறு பறவை உசத்தியா? வேங்கைப்புலி உசத்தியா?
Are warblers less important than tigers? என்ற அருமையான தலைப்பிலமைந்த கட்டுரையை மதுசூதன் கட்டி என்ற காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான In Danger என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். அவர் ஆராய்ந்து கொண்டிருந்தது வார்ப்ளர் (Warbler) எனும் சிறிய பறவைகளை. தமிழில் இவை கதிர்குருவிகள் என்றழைக்கப்படுகின்றன. அவரது ஆராய்ச்சிக்கு களப்பணிக்காக தேர்ந்தெடுத்த இடம் தமிழகத்தின் தென்கோடியிலுள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இங்கு வந்து புலிகளைப்பற்றி படிக்காமல் இந்த சிறிய பறவையைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களே என அவரை யாரோ கிண்டலடித்திருக்கிறார்கள் போலும். அதனால் தான் அப்படி ஒரு தலைப்பைக்கொண்ட கட்டுரையில் மிக அழகாக விளக்கமளித்துள்ளார்.
ஆராய்ச்சியில் உயர்ந்தது எது, புலி ஆராய்ச்சியா? பறவையைப் பற்றியதா? இல்லை வேறு உயிரினங்களைப் பற்றியதா? எவற்றைக் காப்பாற்றுவதற்கு முதலில் துரிதமாக செயல்பட வேண்டும், புலியையா? பறவைகளையா? அல்லது மற்ற உயிரினங்களையா? காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போரிடையே விளையாட்டாக விவாதிக்கப்படும் தலைப்புகளில் சில இவை. புலிகள் பாதுகாக்கப்படுவதால் காடும் அதில் வாழும் எல்லா உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. உணவுச்சங்கிலியின் மேலிடத்திலுள்ள இரைக்கொல்லியான புலியையும் அதன் இரைவிலங்குகளான மான், காட்டுப்பன்றி போன்றவற்றையும் அதன் வாழிடங்களையும் சரியாகப் பராமரித்தால் அக்காட்டிலுள்ள பறவைகளும் மற்ற சிறிய உயிரினங்களும் பராமரிக்கப்படுவதாகத் தான் அர்த்தம். ஆகவே காட்டு ஆராய்ச்சியும் பேணலும் இவைகளைப்பற்றியே அதிகம் இருக்க வேண்டுமே தவிர நமது உழைப்பையும், நேரத்தையும், செலவிடும் பணத்தையும் சிறிய பறவைகளைப் பற்றி அதுவும் பல இடங்களில் பரவலாகத் தென்படும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வது சரிதானா? அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளை காப்பாற்றுவதே நமது தலையாய திட்டமாகவும், அதைப் பற்றிய ஆராய்ச்சியுமே முதலிடம் வகிக்க வேண்டுமேயன்றி சிறிய பறவைகளையும், தவளைகளையும், பூச்சிகளையும் பற்றி ஆராய்ச்சி செய்வது அவரவர் சொந்த விருப்பத்தையும், பட்டங்களைப் பெறுவதற்குமே பயண்படுமேயன்றி, பல்லுயிர்ப்பாதுகாப்பிற்கு அவ்வளவாக உதவாது என்றெல்லாம் வாதிடுவார்கள்.
விளையாட்டாக வாதிட்டாலும் கேள்வியென்று எழுந்துவிட்டால் அதற்கு பதிலளிக்காமல் எப்படி விடுவது. பதிலைத் தெரிந்து கொண்டே விளையாட்டாகக் கேட்போரென்றால் பரவாயில்லை ஆனால் இந்தக் கேள்வியை இத்துறையைப் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத ஒருவர் கேட்டால் என்ன செய்வது. அவருக்கும் புரியுமாறு விளக்கியாக வேண்டுமல்லவா? அதைத்தான் மிகத்தெளிவாக தனது கட்டுரையில் விளக்கியுள்ளார் மதுசூதன் கட்டி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் Dehradun ல் உள்ள Wildlife Institute of India வின் முன்னாள் மாணவர். தனது பட்ட மேற்படிப்பிற்காக கதிர்குருவிகளை 5 வருடம் ஆராய்ச்சி செய்தவர்.
அவரது பதிலையும் செய்த ஆராய்ச்சியையும் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் கதிர்குருவிகளைப் பற்றி நமக்கும் கொஞ்சம் தெரிந்திருந்தால் அவர் சொல்லப்போவது எல்லாமே எளிதில் விளங்கும். இந்தியப்பகுதியில் சுமார் 68 வகையான கதிர்குருவிகள் தென்படுகின்றன. இவற்றில் பாதி சுமார் 34 வகைக் கதிர்குருவிகள் இந்தியாவின் பலபாகங்களுக்கு வலசை வருபவை. இவையனைத்தும் இமயமலை மற்றும் அதற்கும் வடக்கேயுள்ள சைபீரியா, ரஷ்யா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் கடுங்குளிர் நிலவும் காலங்களில் தெற்கு நோக்கி பயனிக்கின்றன. இந்த 34 லில் சுமார் 16-19 வகையான கதிர்குருவிகள் தென்னிந்தியாவிற்கு ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் வலசை வருகின்றன.
மிகத் தேர்ந்த பறவைநோக்குவோரினால் கூட பெரும்பாலான கதிர்க்குருவிகளை ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தரிந்து இனங்காணுவது இயலாத காரியம். ஒரே விதமான மந்த நிறமும் (பெரும்பாலும் வெளிரிய இளம் பச்சை அல்லது பழுப்பு), சிட்டுக்குருவியைவிடச் சிறியதாகவும், ஓரிடத்தில் நில்லாமல் மர இலைகளினூடே ஓயாமல் அங்குமிங்கும் தாவிப்பறந்து கொண்டே இருப்பவை கதிர்க்குருவிகள். தமிழகத்தில் பொதுவாகக் காணக்கூடியவை இரண்டு– இலைக்கதிர்க்குருவியும், பிளைத் நாணல் கதிர்க்குருவியும். முதலாவதை பற்றித்தான் மதுசூதன் தனது முனைவர் பட்டப்படிப்பில் விரிவாக ஆராய்ந்தார்.
எல்லாப் பறவை காண்போரும் சற்று எளிதில் இனங்கண்டு கொள்ளக்கூடிய கதிர்க்குருவிகள் இவை. பார்த்தவுடன் சொல்லிவிட முடியாதென்றாலும் இவற்றின் குரலை வைத்து அடையாளம் காண்டு கொள்ளலாம். ஆனால் இதற்கும் பலமுறை இவற்றைப் பார்த்தும் இவற்றின் குரலைக் கேட்டும் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.
மதுசூதன் இப்பறவைகளைப் பற்றி ஆராய்வதற்காக செய்த முக்கியமான களப்பணி, வலையை வைத்து இப்பறவைகளைப் பிடித்து அவற்றின் காலில் வளையங்களை மாட்டிவிட்டதுதான். ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொறு வண்ண வளையத்தை மாட்டியதால் பிறகு அவற்றை எளிதில் பிரித்தறிய முடிந்தது. 1993 முதல 1997 வரை ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 24 கதிர்க்குருவிகளை பிடித்து அடையாளத்திற்காக வளையமிடப்பட்டது. அதன் பின் அவற்றை நாள் முழுதும் பின் தொடர்ந்து பைனாகுலர் மூலம் பார்த்து வனப்பகுதியில் எந்தெந்த இடத்தில் இவை சுற்றித்திரிகின்றன என்பதையும், என்ன செய்கின்றன என்பதையும் தொடர்ந்து அவதானித்தபடி இருந்தார்.
இந்த கதிர்க்குருவிகள் காலையிலிருந்து அந்தி சாயும் வரை செய்யும் வேலை என்ன தெரியுமா? மரங்களிலுள்ள இலைகளிலிருந்தும், பூக்களிலிருந்தும் பூச்சிகளைப் பிடித்து சாப்பிடுவதுதான். ஒரு நாளைக்கு இவை தமது நேரத்தை 75 % பூச்சிகளைத் தேடிப்பிடித்து உண்பதிலேயே கழிக்கின்றன. மீதி நேரத்தில் தமது வாழிட எல்லையைக் குறிக்கும் வகையில் வேறு பறவைகள் அதன் இடத்திற்குள் வந்து விடாமலிருக்க குரலெழுப்பி எச்சரிப்பதிலும், உண்ணிகள் ஏதும் தாக்கிவிடாமலிருக்க அலகாலும், கால் நகங்களாலும் உடலிலுள்ள சிறகுகளை வருடி சுத்தப்படுத்துவதிலுமே கழிக்கிறது. முண்டந்துறைப் பகுதியிலுள்ள இலையுதிர், பசுமை மாறாக்காடுகளில் உள்ள இவ்வகையான குருவிகளை கணக்கிட்ட போது ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 6 கதிர்க்குருவிகள் இருப்பதை மதுசூதன் அறிந்தார்.
இது என்ன பெரிய கண்டுபிடிப்பா? நாள் முழுவதும் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு சிறிய பறவையின் பின் அலைவதால் நாம் தெரிந்து கொள்ளப்போவதென்ன என்கிறீர்களா? மதுசூதன் அதற்கு இப்படித்தான் பதிலளிக்கிறார். ஒரு கதிர்க்குருவி ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 3 பூச்சிகளைப் பிடிக்கின்றது. அப்படியெனில், ஒரு மணிநேரத்திற்கு சுமார் 180, ஒரு நாளைக்கு சுமார் 11 மணி நேரம் பூச்சிகளை தேடிப்பிடித்துக் கொண்டேயிருக்கும் இச்சிறிய பறவை நாள் ஒன்றுக்கு சுமார் 1980 பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. அப்படியெனில் ஒரு ஹெக்டேர் பரப்பளவிலுள்ள 6 கதிர்க்குருவிகள் ஒரு நாளைக்கு சாப்பிடுவது சுமார் 12,000 பூச்சிகளை! இவை இங்கே இருக்கப்போவது 200-250 நாட்கள். அப்படியெனில் ஒரு பறவை இந்நாட்களுக்குள் எத்தனை பூச்சிகளை சாப்பிடும் என நீங்களே கணக்குபோட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தப்பறவை தென்படுவது வனப்பகுதியில் மட்டுமல்ல. ஊர்ப்புறங்களிலும், வயல் வெளிகளிலும் தான். வலசை வரும் இவையும் இங்கேயே இருக்கும் பூச்சியுன்னும் பறவைகளும் இல்லையெனில் என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறதா? இலைகளையும் பூக்களையும் மற்ற தாவர பாகங்களைத் தாக்கும் பூச்சிகள் எண்ணிக்கையில் அபரிமிதமாகப் பெருகும், கொஞ்சம் கொஞ்சமாக இலைகளில்லாமல் மரம் மொட்டையாகும், தரை சூடாகும், வறண்டுபோகும், தாவர உண்ணிகளான மான்கள், மந்திகள் அனைத்தும் உணவில்லாமல் தவிக்கும், மடியும், முடிவில் மாமிச உண்ணிகளான வேங்கைப்புலி, சிறுத்தை முதலியன வேட்டையாடுவதற்கு எந்த விலங்கும் இருக்காது, ஊர்ப்புறங்களிலும், வயல்களிலும் பூச்சிகள் பெருகி தானியங்களை அழிக்கும் பிறகு என்னவாகும் என உங்களுக்கே தெரியும்.
சின்னஞ்சிறு பறவைகள் செய்யும் மகத்தான இப்பணிக்கு மனிதர்களாகிய நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? காட்டை அழிப்பதும், இப்பறவைகள் சாப்பிடும் பூச்சிகளையும், சில வேளைகளில் இதுபோன்ற பறவைகளையே கொல்லும் இரசாயன பூச்சிகொல்லிகளைத் தெளிப்பதும் தான். புலிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதுபோல இதுபோன்ற பறவைகளின் கணக்கெடுப்பும், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்பாக உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் நெடுங்கால ஆராய்ச்சிகள் அவசியம். மேலை நாடுகளில் உள்ள கதிர்க்குருவிகளைப் பற்றி நடத்தப்பட்ட இவ்வகையான ஆராய்ச்சிகளின் விளைவாக காடழிப்பும், அளவுக்கு அதிகமாக பூச்சிகொல்லிகளை உபயோகித்ததனால் அவை பல ஆண்டுகளாக வெகுவாக எண்ணிக்கையில் குறைந்து வருவது அறியப்பட்டது.
இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு பணியைச் செய்து கொண்டே இருக்கிறது. இவற்றின் பங்கை அறிந்து கொள்வதும், அது சரியாக நடக்கிறதா அப்படி இல்லையெனில் அதற்குத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மனிதர்களின் கடமை. வேங்கையும் வேண்டும் சின்னஞ்சிறு கதிர்க்குருவியும் வேண்டும்.
மதுசூதன் தனது கட்டுரையின் முடிவில் கேட்கிறார். இப்போது சொல்லுங்கள் எது முக்கியம் சின்னஞ்சிறு பறவையா? வேங்கைப்புலியா? இந்தக் கேள்வியே அர்த்தமற்றதாகத் தெரியவில்லை?
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 5. புதிய தலைமுறை 9 ஆகஸ்ட் 2012