Archive for September 2012
களைகள் ஓய்வதில்லை….
எனது கல்லூரி நாட்களின் போது காட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் ஒரு அழகிய காட்சியைக் காண நேர்ந்தது. கொடி ஒன்று மரத்தின் மீது படந்து முழுவதுமாக மூடியிருந்தது. மரத்தின் இலைகள் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருந்தது, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. இக்காட்சியை கூட வந்த ஒரு காட்டுயிர் விஞ்ஞானியிடம் காட்டிய போது அவரது முகமே மாறிப்போய், என்னைப்பார்த்துச் சொன்னார், ”அந்தக் கொடியால் அந்த மரம் செத்துக்கொண்டிருக்கிறது, அதன் மேலுள்ளது மைக்கேனியா (Mikania micrantha) எனும் பொல்லாத களைக்கொடி,” என்றார்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல் நாம் பார்க்கும் அழகான தாவரங்கள், அனைத்துமே நல்ல தாவரங்கள் அல்ல, ஒரு சில மிகவும் கொடியவை என்பதை அறிந்து கொண்டது அப்போதுதான். மனிதர்களுக்கு தீங்கிழைக்கக் கூடியவைகளை மட்டும் தான் பலருக்குத் தெரியும். உதாரணமாக பார்த்தீனியம். ஆனால், இந்தியக் கானகத்தின் பல பகுதி பலவகையான களைகள் மண்டிப் புறையோடிப் போயிருக்கிறது.
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், வனத்துறையினர், தாவரவியலாளர்கள் இவர்களிடம் போய் லான்டனா (Lantana), மைக்கீனியா (Mikania), வெடெலியா (Wedelia), யூபடோரியம் (Eupatorium), ஸ்காட்ச் புரூம் (Scotch Broom) க்ரொமொலினா (Chromolaena) எனும் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள். இத்தாவரங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அவர்கள் முகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆபத்தானவை என்று சொன்னால் ஒரிடத்தில் நிலவும் இயற்கையான சூழலுக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும், இதனால் மனித குலத்திற்கும்.
Invasive Alien Species என்றழைக்கப்படும், மேற்சொன்ன களைத்தாவரங்கள் அனைத்துமே வந்தேறிகள். அதாவது நம்மண்ணுக்குச் சொந்தமில்லாதவை, உலகின் வேறு பகுதிகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவை. இந்தக் களைகளுக்கெல்லாம் உள்ள ஒரு பொதுவான குணம், மிக விரைவில் அபரிமிதமாகப் பெருகி, அது வளரும் இடத்திலுள்ள இம்மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமல் அந்த இடத்தையே ஆக்கிரமித்து விடுவதுதான். இவை இவ்வாறு மண்டிப்போவதால் அவை பரவும் இடங்களில் உள்ள இயற்கையான சூழலே மாறிப்போகும். பல இடங்களில் அப்பகுதியில் தென்படும் தாவரங்களை இக்களைகள் முற்றிலிமாக அற்றுப்போகவும் செய்கின்றன. இதனால் ஏற்படும் சூழியல் சீர்கேட்டினை கட்டுப்படுத்தவும், அப்பகுதியை மீளமைத்து பழையை நிலைக்குக் கொண்டுவது மிகவும் கடினமான காரியம்.
பரவும் வந்தேறிகள் பெரும்பாலும் மனிதர்களாலேயே ஒரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குப் பரவின. அழகாக இருக்கிறதென்று வேறு இடங்களிலிருந்து இங்கே கொண்டு வந்து வளர்க்கும் போது அவை வந்த இடத்தில் பரவ ஆரம்பித்துவிடுகின்றன. சில வேளைகளில் நம்மை அறியாமலேயே விதைகள் காலணிகளில் ஒட்டிக்கொண்டோ, வேறு விதமாகவோ பரவுகின்றன.
உண்ணிச்செடி எனப்படும் Lantana camara மத்திய அமெரிக்காவைச் பூர்விகமாகக் கொண்ட புதர்ச் செடி. கொத்துக் கொத்தாக பூக்கும். ஒரே கொத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, ரோஜா நிறம், வெள்ளை என பல வண்ணங்கள் இருக்கும். தண்டில் முட்களுடன் இருக்கும். சில நகரங்களில் வேலிகாக இச்செடியை வைத்திருப்பார்கள். கொல்கத்தாவிலுள்ள தாவரவியல் பூங்காவில் (Botanical Garden) பல நாடுகளிலிருந்தும் மரம், செடிகளை எடுத்து வந்து வளர்ப்பார்கள். அப்படிக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த உண்ணிச்செடி. இச்செடியின் பழங்களை நம் நாட்டுப் பழம் தின்னும் பறவைகள் சாப்பிட்டு இதன் விதையைப் பரப்பி இன்று இது நாடு முழுவதும் உள்ள காட்டின் கீழ்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இச்செடிகள் மண்டியிருக்கும் சில பகுதிகளில் யானைக்கூட்டம் கூட புகுந்து செல்லமுடியாத அளவிற்கு அடர்த்தியாக இருக்கும். கோடையில் காய்ந்து போகும் இது காடுகளில் தீப்பிடிக்கும் போது எளிதில் பற்றி இது இருக்கும் பல இடங்களுக்கும் எளிதில் பரவி சேதம் விளைவிக்கும்.
நாம் நன்கு அறிந்த இன்னொரு களைச்செடி ஆகாயத்தாமரை எனப்படும் Water hyacinth. குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளில் கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் பரவியிருக்கும். இதன் பூர்வீகம் பிரேசில். நீர்பரப்பு முழுவதும் இது மூடியிருப்பதால் சூரிய ஒளியும், ஆக்சிஜனும் நீரினுட்புகமுடியாமல் போவதால் கீழேயிருக்கும் பல மீன்களும் வேறு பல நீர்வாழ் உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கேடு விளைவிக்கின்றன. இதனால் அந்நீர்ச்சூழலில் பல்லுயிரியம் குறைந்தும், அழிந்தும் போகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு புகைவண்டியில் நீங்கள் போயிருந்தால் குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் இருபுறமும் பச்சைநிறத்தில் கோரைப் புல்லைப் போல நீண்டு வளர்ந்திருக்கும் செடியைப்பார்க்கலாம். மஞ்சள் வண்ணத்தில் பூப்பூக்கும். இச்செடியை இவ்வூர் மக்கள் கோத்தகிரி மலர் என்றழைக்கிறார்கள். இங்கு இச்செடியை வேலிக்காகவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள். இச்செடியே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளிலுள்ள புல்வெளிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது ஸ்காட்ச் புரூம் (Scotch Broom). ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் வசித்த போது அவர்கள் நாட்டில் வளரும் இச்செடியை கொண்டு வந்து அழகிற்காக நட்டு வைத்ததன் விளைவுதான் இது.
உலகின் 36 கொடிய வந்தேறிப் பரவும் செடிகளில் 7 இந்தியாவில் தென்படுகிறது. வாழிடம் சிதைந்து போதல், திருட்டு வேட்டை போல பரவும் வந்தேறிகளும் பல்லுயிரியத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு முக்கியக் காரணியாகும். ஒரு சில நாடுகளில் பரவும் வந்தேறிகளை கட்டுப்படுத்துவதற்காகவும், சுத்தமாக ஒழித்துக்கட்டுவதற்காகவுமே பல கோடிகளை செலவிடுகின்றன. அன்டார்டிகாவிற்கு அப்பகுதிக்குச் செந்தமில்லாத பலவிதமான விதைகள் சுற்றுலாவினர், ஆராய்ச்சியாளர்களின் காலணிகள் மூலமாகவே கொண்டுசெல்லப்படுவது சமீபத்தில் அறியப்பட்டது. இந்தக் களைகளின் தொல்லையால் அவதிப்படும் நாடுகளைப் பார்த்து ஒரு சில நாடுகளில் அங்குள்ள வனப்பகுதிகளுக்கு வேறு நாடுகளிலிருந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளின் பொருட்களில் ஏதெனும் விதைகள் இருக்கிறாதா என சுத்தமாக பரிசீலனை செய்து விட்டுத்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். முக்கியமாக சுற்றுலாவினர் அணிந்து வரும் காலணிகளை கழற்றி விட்டு அங்கு சுற்றித்திரிய அவர்களே கொடுக்கும் காலணிகளைத்தான் அணிந்து செல்ல வேண்டும்.
ஓரிடத்திலுள்ள பல்லுயிரியத்திற்கு (Biodiversity) இது போன்ற களைத் தாவரங்கள் மட்டுமே மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஒரு சில விலங்குகளும், பறவைகளும் தான். உதாரணமாக சிட்டுக்குருவிகள். இவை அமெரிக்காவிற்கு மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டு, அபரிமிதமாகப் பெருகி இப்போது அந்நாட்டிலுள்ள சில பறவைகளுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டுள்ளன.
நாடு விட்டு நாடு போகும் தாவரங்கள் தான் களைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. உள்நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட வாழிடத்திலிருந்து அதாவது (புல்வெளி, மழைகாடு, புதர் காடு போன்ற) இயற்கையான சூழலில் இருந்து வேறோர் வாழிடத்திற்கு கொண்டு செல்லப்படும் தாவரங்கள் கூட களைகளாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஓரிடத்திலிருந்து மனிதர்களால் வேறோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தாவரங்கள் அனைத்துமே களைகளாக இருப்பதில்லை. உதாரணமாக புளிய மரம். இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டாலும் இம்மரம் பரவி நம் நாட்டு கானகத்தை ஆக்கிரமிக்கும் பண்பு இதற்கில்லை.
இப்பொழுதெல்லாம் அழகான பூவையோ, மரத்தையோ பார்த்தால் இது இந்த வாழிடத்திற்குச் சொந்தமானது தானா? இது களைத்தாவரமா? என்றெல்லாம் யோசனை செய்து பகுத்தறிந்தே ரசிக்கத் தோன்றுகிறது. அழகுதான் ஆனால் ஆபத்தாயிற்றே!
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 12. புதிய தலைமுறை 27 செப்டம்பர் 2012
யார் முகத்தில் முழித்ததோ நரி….
நரி முகத்தில் முழித்தால் நல்ல சகுனம், செய்யப்போகும் காரியம் நல்லபடியாக முடியும் என்பது தமிழ்நாட்டிலுள்ள பல மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது எப்படி நரி முகத்தில் முழிக்க முடியும்? இந்த வாக்கியம் எப்படி உருவாகியிருக்கமுடியும்? அது சாத்தியம் தானா என பலரிடம் கேட்டும் இதுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை. சமீபத்தில் நான் நரி ஊளையிடுவதைக் கேட்டது இந்த ஆண்டு (2012) ஜனவரி மாதம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஹாஸ்டலில் சில நாட்கள் தங்கியிருந்த போது தான். தானே புயல் தாக்கியிருந்த சமயமது. மின்னினைப்பு இல்லாத இரவில் நான் தங்கியிருந்த அறையில் வெகு அருகாமையிலிருந்து சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரு நரி ஊளையிட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நாட்கள் கழித்து கேட்ட அதன் குரல் என் காதில் தேனைப்போல பாய்ந்தது. ஏனெனில் இப்போதெல்லாம் நரிகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. கிராமங்களில் வசிப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள். ஒரு காலத்தில் இந்தியாவின் பல இடங்களிலும் பரவி காணப்பட்ட நரி பல இடங்களிலிருந்து அற்றுப்போயும், எண்ணிக்கையில் குறைந்தும் வருவது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக அறியமுடிகிறது.
நரி (Golden Jackal), குள்ளநரி (Indian fox), ஓநாய் (Indian Wolf), பாலைவனக் குள்ளநரி (Desert Fox), செந்நாய் (Wild dog or Dhole) யாவும் இந்தியாவில் தென்படும் நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகள். இவற்றில் தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் செந்நாயும், புதர்க்காடுகளில் குள்ளநரியும் தென்படும். ஆனால் நரியோ வயல் வெளிகள் உள்ள கிராமங்கள், புதர்காடுகள், மலை மேலுள்ள புல்வெளிகள், அடர்ந்த காடுகள் என பல வகையான வாழிடங்களில் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்குச் சென்றிருந்த போது அங்கு இரண்டு நரிகளை பகலிலேயே பார்த்து ஆச்சர்யமடைந்தேன். நகரத்தின் அருகாமையில் இருக்கும் அப்பூங்காவில் கொஞ்சம் அடர்த்தியாக மரங்கள் இருப்பதே அவை அங்கு வாழ ஏதுவாக இருக்கக்கூடும். நரி, பலதரப்பட்ட சூழலிலும் வாழ்வதற்குத் தகவமைத்துக் கொண்டதன் காரணம், குறிப்பிட்ட வகையான உணவை மட்டுமே உட்கொள்ளாமல் அனைத்துண்ணியாக இருப்பதே.
பருவ காலத்திற்குத் தகுந்தவாறு என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உட்கொண்டு வாழும். ஆயினும் அவற்றின் உணவில் பெரும்பகுதி எலிகள், முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் போன்றவையும், இலந்தைப்பழங்கள், கலாக்காய், நாவற்பழம், சரக்கொன்றை பழங்கள் முதலியவற்றையும் சாப்பிடும். கிராமப்பகுதிகளின் அருகில் தென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச்செல்லும். இதன் காரணமாகவே இவற்றை பிடித்து கொல்லப்படுவது உண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிர்த்தனமங்களம் எனும் கிராமத்தில் இப்படிப் பிடிக்கப்பட்ட நரியினை பிடித்தவர்கள் சமைத்து சாப்பிட்டதற்கான குறிப்பு இயற்கையியல் இதழான Hornbill ல் (Jan-Mar 2011) ஒரு கட்டுரையில் உள்ளது. இப்படி உணவிற்காகவும், தோலுக்காகவும், வளர்ப்புப்பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதால் கண்ணி வைத்தும், விஷம் வைத்தும், வாகனங்களில் அடிபட்டும் நரிகள் பல இடங்களில் கொல்லப்படுகின்றது. இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் 1972ன் படி நரியைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஏப்ரல் 2008லிருந்து மே 2009 வரையில் மேற்குத்தொடர்ச்சிமலையின் தென் பகுதியில் உள்ள 394 வனச்சரகத்திற்கும் (Forest Range) ஆராச்சியாளர்கள் சென்று அங்கு பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளிடமும், வனத்தின் உள்ளேயோ, அதன் அருகாமையிலோ பலகாலமாக வாழும் கிராமத்தாரிடமும், பதினெட்டு வகையான மிருகங்களின் நிலையைப்பற்றி விசாரித்தனர். வேங்கைப்புலி, கரடி, சிறுத்தை, செந்நாய், நரி, யானை, காட்டெருது, கடம்பை மான், வரையாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், கேளையாடு, சருகு மான், நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நாட்டுக்குரங்கு, மலையணில் ஆகியவற்றின் தற்போதைய நிலையையும், 30 வருடங்களுக்கு முன் இருந்த நிலையையும் கேட்டறிந்தனர். பலகாலமாக இப்பகுதிகளில் வாழ்ந்தும், பணிபுரிந்தும் வந்த இவர்கள் அனைவரும் சொன்னதைக் கேட்டறிந்து முடிவுகளை கூர்ந்து ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தது.
அழிவின் விளிம்பில் இருக்கும் வேங்கைப்புலி, யானை போன்ற விலங்குகள் பல இடங்களில் இருந்து மறைந்துபோனதும், இருக்குமிடங்களிலும் கூட இவ்விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது தெரியவந்தது. இதைவிட அதிர்ச்சியான உண்மை ஒருகாலத்தில் எங்கும் பரவியிருந்த நரி தற்போது பல இடங்களில் மாயமாய் மறைந்து போனது தான். இதைத்தொடர்ந்து நரிக்கென்றே பிரத்தியோகமான நாடு தழுவிய வலைத்தள கணக்கெடுப்பு ஒன்று 2011ல் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 320 பேர் பங்கு கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் நரியைக் கண்டறிந்த 470 தகவல்கள் கிடைத்தது. பெரும்பாலான தகவல்கள் கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களிலிருந்துதான் கிடைத்தது. இந்த சர்வேயின் முலமாக நரியின் தற்போதைய நிலையையும், பரவலைலும், துல்லியமாக அறிய முடியாவிட்டாலும், முதனிலை முடிவுகள் நரிகள் இந்தியாவின் தென் மற்றும் கிழக்குப்பகுதிகளில் அருகி வருவதும், குஜராத், மத்தியப்பிரசேதத்தில் இதன் நிலை ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. வாழிட இழப்பே இவை குறைந்து போனதற்கான முக்கிய காரணமாக அறியப்பட்டது. அதாவது நகரமயமாதலும் ஒரு முக்கியக் காரணம்.
சரி, நரியைக் காப்பாற்றுவதால் என்ன பயன் என்கிறீர்களா? வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் உணவுச் சங்கிலியின் மேல் நிலை இரைக்கொல்லிகளாக (Predators) அங்கம் வகிக்கின்றன. அவற்றிற்கு அடுத்தாற்போல் வருபவை நரி, குள்ள நரி போன்ற விலங்குகள். இவை பலதரப்பட்ட சிறிய விலங்குகளையும், பறவைகளையும் உணவாக்கி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. பழங்களை உட்கொண்டு விதை பரவலுக்கும். வயற்புறங்களின் அருகாமையில் சுற்றித்திரியும் நரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. நரி ஒரு அழகான விலங்கு. மனிதனின் தோழனான நாயை விரும்பும் நமக்கு நிச்சயமாக நரியையும் பிடித்தாக வேண்டும்.
பெருகிவரும் மக்கட்தொகைக்கு இடையில் அருகி வரும் பல உயிரினங்களில் நரியும் ஒன்று. நாம் நரி முகத்தில் முழிப்பது நமக்கு வேண்டுமானால் நல்ல சகுனமாக இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக அந்த நரிக்கு இல்லை. அடுத்த முறை நீங்கள் நரி ஊளையிடுவதைக் கேட்டால் புண்ணியம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் கேட்ட அல்லது நரியைப் பார்த்த நாள், இடம் முதலிய தகவல்களை நரியைப்பற்றி ஆராயும் உயிரியலாளர்களுக்கு இமெயில் (<mailto:jackal@conservation.in>) செய்ய முடிந்தால் புண்ணியமாகப் போகும்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 11. புதிய தலைமுறை 20 செப்டம்பர் 2012
அதிரப்பள்ளியும் அமிதா பச்சனும்
அதிரப்பள்ளி அருவி தெரியுமா? கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையின் மேலுள்ள காடுகளிலிருந்து உற்பத்தியாகும் சாலக்குடி ஆற்றில் உள்ள ஒரு அழகான அருவி. புன்னகை மன்னன் படத்தில் கமலஹாசனும், ரேகாவும் இந்த அருவியின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள், இராவணன் படத்தில் விக்ரம் ஐஸ்வர்யா ராயை இந்த அருவி வழியாகத்தான் கடத்திக்கொண்டு போவார். இந்த புகழ்வாய்ந்த விவரங்கள் எல்லாம் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இந்த அருவியும் அதனைச் சூழ்ந்துள்ள அடர்ந்த மழைக்காட்டின் மகத்துவத்தை நம்மில் வெகுசிலருக்கே தெரிந்திருக்கும். இந்த அழகான அதிரப்பள்ளி அருவி அழிந்து போக இருந்த கதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அருவியை எப்படி அழிக்க முடியும்? அருவி விழும் ஆற்றின் மேலே ஒரு அணையைக் கட்டினால் முடிந்தது கதை. கேரளா மின்சார வாரியம் 1994ல் இந்த அழகிய அருவியின் அமைந்துள்ள சாலக்குடி ஆற்றுன் குறுக்கே அணையைக் கட்டி நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க அரசிடன் அனுமதி கேட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பல அரசு சாரா நிறுவனங்களின் பல வருட போராட்டத்திற்குப்பின் 2006ல் கேரள நீதிமன்றம் இந்த அருவியின் குறுக்கே அணை கட்ட தடை விதித்தது. 2011ல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த திரு. ஜெயராம் ரமேஷும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என அறிவித்தார்.
எனினும் கேரள அரசு இத்திட்டத்தை இன்னும் முழுவதுமாக கைவிடவில்லை. இந்த அணை கட்டப்பட்டால் என்னவாகும்? மின்சாரம் கிடைக்கும். எதை எதையெல்லாம் இழப்போம்? முதலில் அருவியை, இயற்கையான நீரோட்டத்தை. மேலும் பல ஹெக்டேர் பரப்பிலமைந்த கானகத்தை, அதிலுள்ள உயிர்களை, இப்பகுதியிலேயே பல்லாண்டு காலமாக வாழ்ந்துவரும் பூர்வீகக் குடியினரான காடர்களில் இரண்டு கிராமங்களை எல்லாம் நீருக்குள் மூழ்கடித்துவிடும் இத்திட்டம். அருவி இல்லையெனில் சுற்றுலாத் துறைக்கு கொஞ்சம் வருமானம் குறைந்து போகலாம். எனினும் அருவிக்கு பதிலாக அணையைக் காட்டி மக்களை ஈர்த்துவிடலாம். நமக்கு பிக்னிக் போக ஒரு இடம் வேண்டும். அது அருவியோ அணையோ, எதுவாக இருந்தால் நமக்கென்ன?
அப்படி இருந்து விடலாமா? அதைப்பற்றி யோசிக்கும் முன் அதிரப்பள்ளி அருவியைச் சுற்றிலும் அமைந்த வாழச்சால் வனப்பகுதியைப் பற்றியும் அதிலுள்ள சில கானுயிர்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். இப்பகுதி இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பறவைகளின் வாழிடங்களில் ஒன்றாகும் (Important Bird Areas). பறவைகளுக்கு மட்டுமன்றி யானைகளும், வேங்கைப்புலிகளும் சுற்றித்திரிய அதிகம் சீரழிக்கப்படாத பரந்த, மழைக்காட்டைக் கொண்டது இப்பகுதி. இருவாசி எனும் விசித்திரமான பறவையினத்தை இங்கு காணலாம். குறிப்பாக பெரிய இருவாசி (Great Pied Hornbill).
பறவையினங்களிலேயே நம்மை வியக்கவைக்கும் அழகையும், பண்புகளையும் கொண்டவை பெரிய இருவாசிகள். சரக்..சரக் என சிறகடிக்கும் ஓசையிலிருந்தே இவை வானில் பறந்து வருவதை அறிந்து கொள்ளலாம். அத்திப்பழங்களை விரும்பி உண்ணும். இவற்றை கானகத்தின் விவசாயிகள் எனபர். ஓரிடத்தில் பழங்களை உட்கொண்டு வெகுதூரம் பறந்து திரிந்து விதைகளை பரப்புவதாலேயே இப்பெயர். பழங்களை மட்டுமல்ல தேள், பூரான், சிறிய பறவைகள், அவற்றின் குஞ்சு, மலையணில் பிள்ளை போன்றவற்றையும் பிடித்துச் சாப்பிடும். இவை பழங்களை சாப்பிடும் விதமே அலாதியானது. அலகின் முனையால் பழத்தை பறித்து, மேலே தூக்கி எறிந்து லாவகமாக வாயினுள் லபக்கென போட்டு விழுங்கும். பெரிய மஞ்சள் நிற அலகு, தலையின் மேல் தொப்பியைப் போன்ற ஒரு அமைப்பு, மஞ்சள் கழுத்து, கருப்பும் வெள்ளையுமான இறக்கைகள் என இதன் விசித்திரமான தோற்றமே நம்மை வியக்க வைக்கும்.
இதையெல்லாம் விட இவற்றின் கூடமைக்கும் பண்பே நம்மை வியப்பின் உச்சகட்டத்திற்கு கொண்டு போகும். இனப்பெருக்கக் காலங்களில் ஆண் இருவாசி பெட்டையைக் கவர பெறு முயற்சி மேற்கொள்ளும். இளங்காதலன் தனது மனதுக்குப் பிடித்தவளுக்கு பரிசுகளை கொடுப்பது போல இருவாசியும் பெட்டைக்கு பழங்களைப் பறித்து வந்து ஊட்டும். இணை சேர்ந்த பின் தகுந்த மரப்பொந்தினை முட்டையிடத் தேர்ந்தெடுக்கும். பெட்டை இம்மரப்பொந்தினுள் சென்று களிமண், பழங்கள், தனது எச்சம் கொண்ட குழைவினைக் கொண்டு பொந்தின் வாசலை அடைக்கும். அதன் அலகின் முனை மட்டும் வெளியே நீட்டுமளவிற்கு துவாரத்தை அமைத்துக் கொள்ளும். முட்டை பொறித்து குஞ்சு ஓரளவற்கு வளரும் வரை அந்த கூட்டுக்குள்ளேயே பெட்டை அடைபட்டு இருக்கும். இவ்வேளையில் ஆண் இருவாசி தானும் சாப்பிட்டு, பழங்களையும், பூச்சிகளையும், மற்ற விலங்குகளையும் எடுத்து வந்து கூட்டினுள்ளே இருக்கும் தனது துணைக்கும் கொண்டு வந்து கொடுக்கும். குஞ்சு ஓரளவிற்கு வளர்ந்த பின் பெட்டை தானிருக்கும் கூட்டின் வாசலை உடைத்துக்கொண்டு வெளி வந்து மீண்டும் சிறிய இடைவெளி விட்டு வாசலை அடைக்கும். பிறகு பெற்றோர்களின் வேலை, குஞ்சுக்காக உணவு தேடி பறந்து திரிவது தான். சிறகுகள் நன்கு வளர்ந்த பின் கூட்டின் வாசலை உடைத்து இளம்பறவை வெளியே வரும்.
பெரிய இருவாசிகள் உருவில் பெரியவையாதலால் இவை கூடமைக்க மிகப்பெரிய மரங்கள் அவசியம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலேயே இந்த இருவாசிகள் ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கையில் இருப்பது வாழச்சால்-அதிரப்பள்ளி பகுதியில் தான். இவற்றின் வாழ்விற்கு அபாயமேற்படுவது முக்கியமாக இவற்றின் வாழிடம் அழிக்கப்படுவதால் தான். இப்பகுதியில் அணை கட்டுவதால் இவை வாழும் இவ்வனப்பகுதி நீருக்குள் போகும். அதாவது, பல இருவாசிகளின் குடும்பங்கள் அழிந்து போகும்.
போனால் என்ன? அணை வந்தால் என்ன என்கிறீர்களா? மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள காடுகளில் தான் நாம் அன்றாடம் பருகும் தண்ணீர் உற்பத்தியாகின்றது. உயரமான மலைகளின் மேலுள்ள மரங்களில் மழையாகப் பெய்து, சொட்டு சொட்டாகக் கீழிறங்கி, சிற்றோடையிலிருந்து சலசலக்கும் ஓடையாகி, பல ஓடைகள் ஒருங்கே இணைந்து அகன்ற ஆறாகி, அருவியாகி பின் கடலில் கலக்கிறது. அதற்குமுன் இப்பூவுலகின் பல உயிர்களுக்கும் மனிதகுலத்திற்கும் ஆறு ஆற்றும் சேவை எண்ணிலடங்காது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதில் அமைந்துள்ள சாலக்குடி ஆறும், அதைச்சுற்றியுள்ள வாழச்சால் வனப்பகுதியும் பல்லுயிர்ச்சூழலுக்கு பெயர்போன முக்கியமான இடங்களில் ஒன்று. இது நம் பாரம்பரியச் சொத்து. நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த வனப்பகுதியையும், அதிலுள்ள உயிரினங்களியும், அருவியையும் நமக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கு விட்டுச்செல்வது நம் கடமை.
நீடித்து நிலைக்காத, நீண்டகாலத்திற்கு மனிதகுலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத திட்டங்களை செயல் படுத்துவதால் சுற்றுச்சூழல் சீரழிவது மட்டுமல்லாமல் இது எதிர்கால மனித சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்கிற்து. தொலைநோக்குப் பார்வையில்லாமல் குறுகிய காலத்தில் ஆதாயம் தேட சிலர் போடும் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது நம் அனைவரின் கடமை. எங்கோ கேரளாவில் இருக்கும் அதிரப்பள்ளிக்காக தமிழ்நாட்டில் உள்ள நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்கிறீர்களா? வாழச்சால் வனப்பகுதியும், அதிரப்பள்ளி அருவியும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் சொந்தமல்ல. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், உயிரினத்திற்கும் சொந்தமானது. நீங்கள் அங்கு சுற்றுலாப் பயணியாக போனதுண்டா?, இந்த அருவியை திரையில் பார்த்து ரசித்திருக்கிறீர்களா?, அப்படியென்றால் நீங்களும் அந்த இடத்தைப்பற்றி அக்கறை கொள்ளலாம். அந்த இடத்தில் நடக்கும் நல்லது, கொட்டதிற்கெல்லாம் நீங்களும் பொறுப்பு. சும்மா பார்த்து விட்டு வந்த, பார்க்கப்போகிற உங்களுக்கே பொறுப்பு இருக்கிறதென்றால் அங்கு சென்று படம்பிடிக்கும் சினிமாக்காரர்களுக்கும், அதிரப்பள்ளி சுற்றிலும் ரெசாட் முதல் சாலையோரமாக டீ கடை வைத்திருக்கும் அனைவரும் பொறுப்பாளிகளே. அவர்களும் ஒரு முக்கியமான stakeholders தான்.
பல சினிமாக்காரர்கள் லொக்கேஷன் அழகாக இருக்கிறதென்று இங்கு வந்து ஷுட்டிங் செய்துவிட்டு, அந்த இடத்தையும் கொஞ்சம் சீரழித்துவிட்டு போய்விடுவார்கள் (இராவணன் படக்குழுவினரையும் சேர்த்துத்தான்). இந்த அருவியின், சாலக்குடி ஆற்றின் முக்கியத்துவத்தையும், இங்கு கட்டப்பட இருக்கும் அணையினால் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பினைப்பற்றி எடுத்துரைக்கவும், அணைக்கு எதிராக குரல் கொடுக்கவும் சாலக்குடியில் உள்ள River Research Centre எனும் அரசு சாரா அமைப்பு இராவணன் படப்பிடிப்புக் குழுவினரை அனுகியபோது இவர்களை சந்திக்கூட அனுமதி கிடைக்கவில்லை என்று கவலைபட்டுக்கொண்டார் அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளரான லதா.
இராவணன் படத்தில் நடித்த அபிஷெக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் இந்த அருவிக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் அபிஷேக் பச்சன் செய்யாததை அமிதா பச்சன் செய்து கொண்டிருக்கிறார். அபிஷேக்கின் அப்பா இல்லை இவர். அவர் அமிதாப் பச்சன் (Amitabh Bachan), இவர் கேரளாவில் உள்ள River Research Centre ன் மூத்த ஆராய்ச்சியாளரான அமிதா பச்சன் (Amitha Bachan). இவர் சாலக்குடி ஆற்றோரக் காடுகளைப்பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்று தற்போது, இப்பகுதியில் வாழும் பூர்வீகக் குடியினரான காடர்களுடன் சேர்ந்து பெரிய இருவாசிப் பறவைகளை காப்பாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நம் நாட்டிலுள்ள பல காட்டுயிர்களைக் காப்பாற்ற இதுபோல பல அமிதா பச்சன்கள் தேவை.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 10. புதிய தலைமுறை 13 செப்டம்பர் 2012
காப்பி நல்லதா? டீ நல்லதா?
தலைப்பை பார்த்துவிட்டு நமது உடல் நலத்திற்கு நல்லது காப்பியா? டீயா? என்பதைப்பற்றிய கட்டுரையென நினைக்க வேண்டாம். காப்பியும், தேயிலையும் பல அரிய காட்டுயிர்களின் உறைவிடமான மேற்குத்தொடர்ச்சிமலையிலுள்ள காடுகளை அழித்தே பயிரிடப்பட்டுள்ளன. இக்காட்டுயிர்களுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது எது (அதாவது கொஞ்சமாகக் கெடுதல் செய்வது எது?) காப்பியா? தேயிலையா? இதைப்பற்றித்தான் இக்கட்டுரை. அதற்குமுன், மனிதகுலத்தின் அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத அங்கமான காப்பி, டீயின் வரலாற்றை பார்ப்போம்.
காப்பிச்செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. காப்பிக்கொட்டைச் சாற்றிலிருந்து காப்பி பானமாக தயாரிக்கலாம் என்பது உலகிற்கு தெரியவந்த கதையே நல்ல காப்பியைப் போலவே சுவையானது. காப்பி கண்டுபிடிக்கப்பட்டதற்கான பலவிதமான புராணக்கதைகள் இருந்தாலும் இரண்டு கதைகளே மிகவும் பிரசித்திபெற்றது.
எத்தியோப்பியாவில் ஹத்ஜி ஓமர் என்பவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனது எதிரிகள் அவனை ஊரைவிட்டு வெளியேறினார்கள். பல இடங்களுக்கு சுற்றித்திரிந்த அவன் பசியால் வாடியபோது காட்டிலுள்ள ஒரு புதரிலிருந்த சிகப்புப் பழங்களை பறித்துச் சாப்பிட்டான். கொஞ்சம் கசப்பாக இருந்ததனால் அப்பழங்களைச் வறுத்துச் சாப்பிடலாம் என எண்ணினான். வறுத்தபின் மிகக்கடினமாகிப் போனதால் அவற்றை நீரில் ஊறவைத்தான். பழத்தின் கடினத்தன்மை மாறாவிட்டாலும் அது ஊறவைக்கப்பட்ட நீர் கரிய நிறமாக மாறியிருந்தது. அச்சாற்றைக் குடித்தபின் அவனது களைப்பு நீங்கி அளவில்லாத புத்துணர்ச்சி அடைந்தான். ஊர் திரும்பிய அவன் காப்பிச்செடியின் இந்த விசித்திரமான குணத்தையும் தனது அனுபவத்தையும் ஊர் மக்களிடையே பரப்பலானான். அதன் பின்னரே காப்பியின் புகழ் ஊரெங்கும் பரவியது.
இரண்டாவது கதை இதைவிட வேடிக்கையானது. எத்தியேப்பியாவில் கால்தி எனும் ஆடுமேய்க்கும் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு ஆடுமேய்க்கச் சென்றபோது அவனது மந்தையிலுள்ள ஆடுகள் மற்றவைகளைப் போலல்லாமல் எப்போதும் குதூகலத்துடன் துள்ளிக்குதித்து விளையாடுவதைக் கண்டான். ஒரு வகையான பழத்தைத்தின்ற பின்னேயே இவை இவ்வாறு அதனை உணர்ந்த அவன் தாமும் அப்பழங்களை சாப்பிட ஆரம்பித்தான். இதனால் ஆடுகளுடன் சேர்ந்து அவனும் கவலைகளையெல்லாம் மறந்து ஆட ஆரம்பித்தான். அப்போது அவ்வழியே சென்ற மதகுரு ஒருவர் இக்காட்சியைக் கண்டு வியந்து இம்மகிழ்ச்சிக்கான காரணத்தை கேட்டபோது கால்தி ஒருவகையான பழத்தை சாப்பிட்டபின் அவனுக்கு மிகுந்த சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைத்ததாகக் கூறினான். அம்மதகுருவிற்கு ஒரு சிக்கலிருந்தது. அவர் தியானம் மேற்கொள்ளும் போது தூங்கிவிருவதே அது. இப்பழத்தைப்பற்றி அறிந்ததும் அவரும் அதை சாப்பிட ஆரம்பித்தார். அது நல்ல பலனை அளித்தது. இப்பழத்தைன் விசித்திரமான குணத்தைப் பற்றி மற்ற மதகுருமார்களுக்கும் எடுத்துச் சொன்னார். அதில் ஒருவர் அப்பழங்களை காய வைத்து, நீரில் கொதிக்க வைத்து அச்சாற்றினை பருக ஆரம்பித்தார். இவ்வாறே காப்பி உலகிற்கு அறிமுகமானதாக புராணக்கதைகள் சொல்கின்றன.
காப்பியைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் 1000ம் ஆண்டிலிருந்தே இருக்கிறது. எத்தியோப்பியாவிலிருந்து எகிப்து மற்றும் ஏமன் போன்ற அரபு நாடுகளுக்கு 12ம் நூற்றாண்டு வாக்கில் காப்பி பரவ ஆரம்பித்தது. காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்து பொடியாக்கி அதில் வெந்நீரை ஊற்றி சாறெடுத்து குடிக்கும் முறை அரேபியர்களிடமிருந்தே வந்தது. அரேபியர்கள் இப்பானத்தை ‘க்வாவா’ என்றழைத்தனர். இதுவே மருவி தற்போதுள்ள காப்பி ஆனது.
இந்தியாவிற்குள் காப்பி வந்தது 17ம் நூற்றாண்டில். இந்தியாவிலிருந்து மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட பாபா புதான் கர்நாடகாவிலுள்ள அவரது ஊரான சிக்மங்களூருக்கு திரும்பி வந்தபோது கைப்பிடி அளவு காப்பி விதைகளையும் எடுத்து வந்தார். அவற்றை அவரது தோட்டத்தில் விதைத்துவைத்தார். இவ்வாறே காப்பி இந்தியாவில் வேரூன்றியது.
அதற்கு முன் நாம் காலையில் எதைக்குடித்துக்கொண்டிருந்திருப்போம்? தமிழகத்தில் நீராகாரம் என ஆ. இரா. வேங்கடாசலபதியின் ”அந்தக் காலத்தில் காப்பி இல்லை” (காலச்சுவடு பதிப்பகம்) வாயிலாகத் தெரிகிறது. தமிழகத்தில் காப்பி எப்போது, எப்படி வேறூன்றியது போன்ற சுவாரசியமான தகவல்களை இவரது ஆய்வுக்கட்டுரை விளக்குகிறது.
சரி இப்போது கொஞ்சம் டீயைப் பருகுவோம். தேயிலையின் பூர்வீகம் சீனா. இங்கு தேயிலையை முதன்முதலில் மருத்துவத்திற்காக கிமு 2737லிருந்தே பயன்படுத்தியதாக புராணங்கள் கூறுவதாகத் தெரிகிறது. சுமார் 200 வகையான தேயிலைச் மரங்கள் இருப்பதால் தேயிலையின் தாய்நாடு எனக்கருதப்படுவது சீனாவிலுள்ள யுனான் மாகாணமே. ஆம் தேயிலை உயரமாக வளரக்கூடிய மரம் அதை அவ்வப்போது இளந்தளிர்களுக்காக வெட்டி குட்டையான புதராகவே வைக்கப்படுகிறது. கிபி 200ம் ஆண்டிலிருந்தே தேயிலையை பயிரிட்டு மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் சீனர்கள். இங்கிருந்து கிபி 800ல் ஜப்பானுக்கும் பிறகு அங்கிருந்து ஐரோப்பாவிற்கு டச்சு வணிகம் மூலமாக கிபி 1610ல் தேயிலை சென்றடைந்தது. அதன்பிறகுதான் தேயிலை வெகுவாக செழிக்க ஆரம்பித்தது. ஆங்கிலேயர்களை தேநீர் வெகுவாகக் கவர்ந்ததால் கிழக்கிந்தியக் கம்பெனி சீனாவிலிருந்து தேயிலையை பெருமளவில் இறக்குமதி செய்ய ஆரம்பித்த்து. 18ம் நூற்றாண்டில் இவ்விரு தேசங்களுக்குமிடையேயான உறவும், விலையும் பச்சைச் தேயிலையைப்போல கசக்க ஆரம்பித்தது. இதனால் ஆங்கிலேயர்கள் தேயிலையை பயிரிடுவதற்கு தகுந்த சூழலுள்ள இடங்களைத் தேட ஆரம்பித்தனர்.
1823ல் ஒரு ஸ்காட்லாந்து பயணி அஸ்ஸாம் வனங்களில் ஒரு வகையான தேயிலை மரம் இயற்கையாக வளர்வதை கண்டார். தேயிலை வளர இயற்கையான சூழல் இருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சீனாவிலிருந்து தேயிலையின் விதைகளை இறக்குமதி செய்து அஸ்ஸாமிலுள்ள காடுகளை அழித்து தேயிலையை பயிரிட்டனர். முதன்முதலில் 1839ல் அஸ்ஸாம் டீ கப்பல் வழியாக லண்டனை அடைந்தது. இவ்வேளையில் தென்னகத்தில் காப்பியே அதிகமாகப்பயிரிடப்பட்டு வந்தது. ஒரு வகையான நோய் தாக்கியதன் விளைவால் காப்பிச்செடிகள் அழிந்து வந்ததனாலும், தேயிலை உலகச்சந்தையில் ஏறுமுகமாக இருந்ததாலும் மெல்ல மெல்ல காப்பித்தோட்டங்கள் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. முதலாம் உலகப்போரின் போதுதான் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட தேயிலையின் செல்வாக்கு சீனாவின் தேயிலையைக் காட்டிலும் வெகுவாக உயர ஆரம்பித்தது. இன்று இந்தியா தேயிலை உற்பத்தியிலும், உபயோகத்திலும் உலகலவில் இரண்டாமிடத்தில் உள்ளது.
முன்பு சொன்னது போல் இந்த இரு ஓரினத்தோட்டப்பயிர்களும் விளைவிக்கப்படுவது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் உயரமான பகுதிகளிலேயே. அதுவும் இத்தோட்டங்கள் பரந்து விரிந்திருப்பது பல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஒட்டியே. இதனால் இத்தோட்டங்களிலும் பலவிதமான காட்டுயிர்களைக் காணமுடியும். பலவிதமான வனச்செல்வங்கள் வாழிட இழப்பாலும் திருட்டு வேட்டையாலும் நாளுக்கு நாள் அருகிவருகின்றன. இச்சூழலில் பல்லுயிர்ப்பாதுகாப்பு என்பது அரசுக்குச்சொந்தமான சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் போன்ற பாதுகாப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் தனியாருக்குச்சொந்தமான காப்பி தேயிலைத் தோட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தோட்டங்களில் தென்படும் அரிய பல தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பது அவசியம். இதற்கு இத்தோட்ட நிர்வாகம் பயிர் உற்பத்தியை பெருக்குவது மட்டுமின்றி இப்பகுதியிலுள்ள உயிரினங்கள் வாழ ஏதுவான சூழலையும் ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளையாவண்ணம் தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சரி இப்போது நம் கேள்விக்கு வருவேம். பல்லுயிர்பாதுகாப்பிற்கு நல்லது எது, காப்பியா? தேயிலையா? சூழியலாளர்களைக் கேட்டால் இவ்விரண்டிற்கிடையே காப்பித்தோட்டங்களே சற்று மேலோங்கியிருப்பதாகச் சொல்வார்கள். ஏனெனில் காப்பிச் செடி வளர மர நிழல் அவசியமாதலால் இங்கு தேயிலைத் தோட்டங்களைக்காட்டிலும் சற்றே அதிகமாக மரங்களைக் காணலாம். பல சினிமாக்களில் காண்பிக்கப்படும் பச்சைப்பசேலன பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களில் பல்லுயிரியம் குறைவு. இவற்றை சூழியலாளர்கள் பச்சைப்பாலைவனம் என்பர். எனினும் தகுந்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் இத்தோட்டங்களும் பல காட்டுயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்கவும், பல்லுயிர் பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக மாற்றவும் முடியும்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள பரந்து விரிந்த காப்பி, தேயிலைத்தோட்டங்களின் மத்தியில், அங்குமிங்கும் சிதறி தீவுகளைப்போல் எஞ்சியுள்ள சிறிய பரப்பளவில் அமைந்திருக்கும் பல மழைக்காட்டுத் துண்டுச்சோலைகளையும் பாதுகாக்க வேண்டும். இத்தோட்டங்களில் ஓடும் ஓடைகளில் இராசயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் கலந்துவிடாவண்ணம் அதன் ஓரங்களில் இம்மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளர்த்திடல் வேண்டும். இத்தோட்டங்களில் நிழலுக்கென நடப்படும் சில்வர் ஓக், அல்பீசியா, மீசோப்சிஸ் போன்ற வெளிநாட்டு மரங்களை வளர்க்காமல் அந்தந்தப்பகுதியிலேயே இயற்கையாக வளரும் மரங்களை நடவேண்டும். இதனால் அதிலுள்ள இப்பகுதியில் தென்படும் சிங்கவால் குரங்கு, கருமந்தி, போன்ற அரிய விலங்குகள், பெரிய இருவாசி போன்ற பறவைகள், இன்னும் பலவகையான அரிய தாவரங்களையும் பாதுகாக்கலாம். இது யானைத்திரள்களின், காட்டெருதுகளின் இடையூரில்லாத இடம்பெயர்வுக்கும், மனித விலங்கு எதிர்கொள்ளலையும் கட்டுப்படுத்த உதவும். இதோடு, ஒருங்கினைந்த பயிர் மேலான்மை, இரசாயன உரங்களின் உபயோகத்தைக் குறைத்தல் அல்லது முற்றிலுமாக தவிர்த்தல், தோட்டங்களிலும் அது சார்ந்த தொழிற்சாலைகள், வீட்டுக்குடியிருப்புப் பகுதிகளில் சரியான கழிவுக்கட்டுப்பாடும், திருட்டு வேட்டைகள் ஏற்படாவண்ணம் கண்கானித்தலும் அவசியம்.
நுகர்வோராகிய நாம் என்ன செய்யலாம்? மேற்சொன்ன சில வளங்குன்றா விவசாயத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காவண்ணம் பயிர்செய்து தயாரிக்கப்பட்ட, தகுந்த தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் வெளியிடும் பொருட்களை வாங்கிப் பருகி அவற்றின் விற்பனையை ஊக்குவுக்கலாம். சூழியல் ஆர்வலராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நல்ல விதத்தில் தயாரிக்கப்பட்ட காப்பியையோ, டீயையோ வாங்கிப் பருகுவது, உங்கள் உடம்பிற்கு நல்லதோ இல்லையோ நிச்சயமாக நாம் வாழும், நம் சந்ததியினர் வாழப்போகும் இப்பூமித்தாய்க்கு நல்லதே!
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தைக் காணவும் – http://ecoagriculture.in/home/
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 9. புதிய தலைமுறை 6 செப்டம்பர் 2012