UYIRI

Nature writing in Tamil

களைகள் ஓய்வதில்லை….

leave a comment »

எனது கல்லூரி நாட்களின் போது காட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் ஒரு அழகிய காட்சியைக் காண நேர்ந்தது. கொடி ஒன்று மரத்தின் மீது படந்து முழுவதுமாக மூடியிருந்தது. மரத்தின் இலைகள் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருந்தது, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. இக்காட்சியை கூட வந்த ஒரு காட்டுயிர் விஞ்ஞானியிடம் காட்டிய போது அவரது முகமே மாறிப்போய், என்னைப்பார்த்துச் சொன்னார், ”அந்தக் கொடியால் அந்த மரம் செத்துக்கொண்டிருக்கிறது, அதன் மேலுள்ளது மைக்கேனியா  (Mikania micrantha) எனும் பொல்லாத களைக்கொடி,” என்றார்.

Mikania micrantha. Photo: wikimedia commons

Mikania micrantha. Photo: wikimedia commons

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல் நாம் பார்க்கும் அழகான தாவரங்கள், அனைத்துமே நல்ல தாவரங்கள் அல்ல, ஒரு சில மிகவும் கொடியவை என்பதை அறிந்து கொண்டது அப்போதுதான். மனிதர்களுக்கு தீங்கிழைக்கக் கூடியவைகளை மட்டும் தான் பலருக்குத் தெரியும். உதாரணமாக பார்த்தீனியம். ஆனால், இந்தியக் கானகத்தின் பல பகுதி பலவகையான களைகள் மண்டிப் புறையோடிப் போயிருக்கிறது.

காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், வனத்துறையினர், தாவரவியலாளர்கள் இவர்களிடம் போய் லான்டனா (Lantana), மைக்கீனியா (Mikania), வெடெலியா (Wedelia), யூபடோரியம் (Eupatorium), ஸ்காட்ச் புரூம் (Scotch Broom)  க்ரொமொலினா (Chromolaena) எனும் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள். இத்தாவரங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அவர்கள் முகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆபத்தானவை என்று சொன்னால் ஒரிடத்தில் நிலவும் இயற்கையான சூழலுக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும், இதனால் மனித குலத்திற்கும்.

Lantana camara

Lantana camara

Invasive Alien Species என்றழைக்கப்படும், மேற்சொன்ன களைத்தாவரங்கள் அனைத்துமே வந்தேறிகள். அதாவது நம்மண்ணுக்குச் சொந்தமில்லாதவை, உலகின் வேறு பகுதிகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவை. இந்தக் களைகளுக்கெல்லாம் உள்ள ஒரு பொதுவான குணம், மிக விரைவில் அபரிமிதமாகப் பெருகி, அது வளரும் இடத்திலுள்ள இம்மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமல் அந்த இடத்தையே ஆக்கிரமித்து விடுவதுதான். இவை இவ்வாறு மண்டிப்போவதால் அவை பரவும் இடங்களில் உள்ள இயற்கையான சூழலே மாறிப்போகும். பல இடங்களில் அப்பகுதியில் தென்படும் தாவரங்களை இக்களைகள் முற்றிலிமாக அற்றுப்போகவும் செய்கின்றன. இதனால் ஏற்படும் சூழியல் சீர்கேட்டினை கட்டுப்படுத்தவும், அப்பகுதியை மீளமைத்து பழையை நிலைக்குக் கொண்டுவது மிகவும் கடினமான காரியம்.

Chromolaena odorata

Chromolaena odorata

பரவும் வந்தேறிகள் பெரும்பாலும் மனிதர்களாலேயே ஒரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குப் பரவின. அழகாக இருக்கிறதென்று வேறு இடங்களிலிருந்து இங்கே கொண்டு வந்து வளர்க்கும் போது அவை வந்த இடத்தில் பரவ ஆரம்பித்துவிடுகின்றன. சில வேளைகளில் நம்மை அறியாமலேயே விதைகள் காலணிகளில் ஒட்டிக்கொண்டோ, வேறு விதமாகவோ பரவுகின்றன.

உண்ணிச்செடி எனப்படும் Lantana camara மத்திய அமெரிக்காவைச் பூர்விகமாகக் கொண்ட புதர்ச் செடி. கொத்துக் கொத்தாக பூக்கும். ஒரே கொத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, ரோஜா நிறம், வெள்ளை என பல வண்ணங்கள் இருக்கும். தண்டில் முட்களுடன் இருக்கும். சில நகரங்களில் வேலிகாக இச்செடியை வைத்திருப்பார்கள். கொல்கத்தாவிலுள்ள தாவரவியல் பூங்காவில் (Botanical Garden) பல நாடுகளிலிருந்தும் மரம், செடிகளை எடுத்து வந்து வளர்ப்பார்கள். அப்படிக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த உண்ணிச்செடி. இச்செடியின் பழங்களை நம் நாட்டுப் பழம் தின்னும் பறவைகள் சாப்பிட்டு இதன் விதையைப் பரப்பி இன்று இது நாடு முழுவதும் உள்ள காட்டின் கீழ்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இச்செடிகள் மண்டியிருக்கும் சில பகுதிகளில் யானைக்கூட்டம் கூட புகுந்து செல்லமுடியாத அளவிற்கு அடர்த்தியாக இருக்கும். கோடையில் காய்ந்து போகும் இது காடுகளில் தீப்பிடிக்கும் போது எளிதில் பற்றி இது இருக்கும் பல இடங்களுக்கும் எளிதில் பரவி சேதம் விளைவிக்கும்.

Water Hyacinth

Water Hyacinth

நாம் நன்கு அறிந்த இன்னொரு களைச்செடி ஆகாயத்தாமரை எனப்படும் Water hyacinth. குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளில் கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் பரவியிருக்கும். இதன் பூர்வீகம் பிரேசில். நீர்பரப்பு முழுவதும் இது மூடியிருப்பதால் சூரிய ஒளியும், ஆக்சிஜனும் நீரினுட்புகமுடியாமல் போவதால் கீழேயிருக்கும் பல மீன்களும் வேறு பல நீர்வாழ் உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கேடு விளைவிக்கின்றன. இதனால் அந்நீர்ச்சூழலில் பல்லுயிரியம் குறைந்தும், அழிந்தும் போகிறது.

Scotch Broom Cytisus scoparius

Scotch Broom Cytisus scoparius

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு புகைவண்டியில் நீங்கள் போயிருந்தால் குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் இருபுறமும் பச்சைநிறத்தில் கோரைப் புல்லைப் போல நீண்டு வளர்ந்திருக்கும் செடியைப்பார்க்கலாம். மஞ்சள் வண்ணத்தில் பூப்பூக்கும். இச்செடியை இவ்வூர் மக்கள் கோத்தகிரி மலர் என்றழைக்கிறார்கள். இங்கு இச்செடியை வேலிக்காகவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள். இச்செடியே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளிலுள்ள புல்வெளிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது ஸ்காட்ச் புரூம் (Scotch Broom). ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் வசித்த போது அவர்கள் நாட்டில் வளரும் இச்செடியை கொண்டு வந்து அழகிற்காக நட்டு வைத்ததன் விளைவுதான் இது.

உலகின் 36 கொடிய வந்தேறிப் பரவும் செடிகளில் 7 இந்தியாவில் தென்படுகிறது. வாழிடம் சிதைந்து போதல், திருட்டு வேட்டை போல பரவும் வந்தேறிகளும் பல்லுயிரியத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு முக்கியக் காரணியாகும். ஒரு சில நாடுகளில் பரவும் வந்தேறிகளை கட்டுப்படுத்துவதற்காகவும், சுத்தமாக ஒழித்துக்கட்டுவதற்காகவுமே பல கோடிகளை செலவிடுகின்றன. அன்டார்டிகாவிற்கு அப்பகுதிக்குச் செந்தமில்லாத பலவிதமான விதைகள் சுற்றுலாவினர், ஆராய்ச்சியாளர்களின் காலணிகள் மூலமாகவே கொண்டுசெல்லப்படுவது சமீபத்தில் அறியப்பட்டது. இந்தக் களைகளின் தொல்லையால் அவதிப்படும் நாடுகளைப் பார்த்து ஒரு சில நாடுகளில் அங்குள்ள வனப்பகுதிகளுக்கு வேறு நாடுகளிலிருந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளின் பொருட்களில் ஏதெனும் விதைகள் இருக்கிறாதா என சுத்தமாக பரிசீலனை செய்து விட்டுத்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். முக்கியமாக சுற்றுலாவினர் அணிந்து வரும் காலணிகளை கழற்றி விட்டு அங்கு சுற்றித்திரிய அவர்களே கொடுக்கும் காலணிகளைத்தான் அணிந்து செல்ல வேண்டும்.

அழகிய ஆபத்து

அழகிய ஆபத்து

ஓரிடத்திலுள்ள பல்லுயிரியத்திற்கு (Biodiversity) இது போன்ற களைத் தாவரங்கள் மட்டுமே மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஒரு சில விலங்குகளும், பறவைகளும் தான். உதாரணமாக சிட்டுக்குருவிகள். இவை அமெரிக்காவிற்கு மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டு, அபரிமிதமாகப் பெருகி இப்போது அந்நாட்டிலுள்ள சில பறவைகளுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டுள்ளன.

Montanoa sp.

Montanoa sp.

நாடு விட்டு நாடு போகும் தாவரங்கள் தான் களைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. உள்நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட வாழிடத்திலிருந்து அதாவது (புல்வெளி, மழைகாடு, புதர் காடு போன்ற) இயற்கையான சூழலில் இருந்து வேறோர் வாழிடத்திற்கு கொண்டு செல்லப்படும் தாவரங்கள் கூட களைகளாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஓரிடத்திலிருந்து மனிதர்களால் வேறோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தாவரங்கள் அனைத்துமே களைகளாக இருப்பதில்லை. உதாரணமாக புளிய மரம். இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டாலும் இம்மரம் பரவி நம் நாட்டு கானகத்தை ஆக்கிரமிக்கும் பண்பு இதற்கில்லை.

இப்பொழுதெல்லாம் அழகான பூவையோ, மரத்தையோ பார்த்தால் இது இந்த வாழிடத்திற்குச் சொந்தமானது தானா? இது களைத்தாவரமா? என்றெல்லாம் யோசனை செய்து பகுத்தறிந்தே ரசிக்கத் தோன்றுகிறது. அழகுதான் ஆனால் ஆபத்தாயிற்றே!

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 12. புதிய தலைமுறை 27 செப்டம்பர் 2012

Advertisements

Written by P Jeganathan

September 29, 2012 at 5:10 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: