UYIRI

Nature writing in Tamil

Archive for November 2012

சிட்டுக்குருவி: சில பதிவுகள்

with 7 comments

சிட்டுக்குருவிகள் தற்போது பரவியிருக்கும் நிலையை அறிய சமீபத்தில் ஒரு இணையத்தள கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைப்பற்றிய விவரங்களை இங்கே காணலாம் – Citizen Sparrow (1). சிட்டுக்குருவிகள் சில நகரப்பகுதிகளிலிருந்து காணாமல் போவதென்வோ உண்மைதான். அதற்காக அந்த இனமே அபாயத்திற்குள்ளாகியிருக்கிறது என கூப்பாடு போடுபவர்கள், செல்போன் டவர்களிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகள்தான் அவை அழிந்துபொவதற்கான காரணம் எனும் தீர்கதரிசிகள் தயவு செய்து இந்த கட்டுரைகளைப் படிக்கவும்:

Sparrows, science and species conservation in India (2), சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு (3) 

இந்த கணக்கெடுப்பில் பணிபுரிந்து கொண்டிருந்த போது பொது மக்களை இந்த கணக்கெடுப்பில் பங்குபெறச் செய்யும் ஒரு முயற்சியாக சிட்டுக்குருவி எனும் வார்த்தை வரும் தமிழ் சினிமாப்பாடல்களை FM ரேடியோக்களில் ஒலிபரப்பச் செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. அதற்காக அத்தகையப் பாடல்களை யோசித்து பட்டியலிட்டேன். பத்துப் பாடல்கள் உடனடியாக ஞாபத்திற்கு வந்தது. மேலும் பலரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை கேட்டறிந்து, இணையத்தில் தேடியதில் மொத்தம் 20 பாடல்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். அவ்வேளையில் ஆர்வம் மேலோங்க சினிமாப் பாடல்கள் மட்டுமின்றி, சிட்டுக்குருவிகளைப் பற்றிய இலக்கியக் குறிப்புகளையும் சேகரிக்கலானேன். இந்தத் தகவல்களின் தொகுப்புத்தான் இக்கட்டுரை.

சங்க இலக்கியங்களிலும் சிட்டுக்குருவிகளைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது (4). மகாகவி பாரதியும் அவரது கட்டுரையில் சிட்டுக்குருவியின் அழகை வர்ணித்துள்ளார். கப்பலோட்டிய தமிழனில் மகாகவி பாரதியார் (நடிகர்: எஸ் வி சுப்பையா) சமைக்க வைத்திருந்த அரிசியை சிட்டுக்குருவிகளுக்கு (கூர்ந்து கவனித்தபோது அந்தப்படத்தில் காட்டப்பட்டவை சிட்டுக்குருவிகளைப்போலத் தெரியவில்லை, சில்லை என்றழைக்கப்படும் Munia போல இருந்தது.) இரைத்துவிடுவார். அதைப்பார்த்து கோபிக்கும் செல்லம்மாவிடம்,”…விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியினைப் போலே…” எனப்பாடுவார் (5).

சிட்டுக்குருவிகளைப் பற்றிய மற்றுமொறு சுவாரசியமான குறிப்பு இந்திய விடுதலைப்போராட்டத் தலைவர்களில் ஒருவரான மெளலானா அபுல் கலாம் ஆசாத் எழுதியது. அவர் அஹமதாபாத் சிறையில் இருந்தபோது அவரது அறையில் பல சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அந்த குருவிகள் கூடுகட்ட எடுத்து வரும் வைக்கோல்கள், நார்கள் முதலியனவற்றின் மிச்ச மீதி அவரது அறை முழுவதும் விழுந்து குப்பை சேருவதையும், அதனால் தினமும் பல முறை அவரது அறையை அவரே கூட்டி சுத்தம் செய்ததையும், இதனால் அந்த சிட்டுக்குருவிகளை அவரது அறையை விட்டு விரட்ட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், அதில் தோல்வியடைந்து, பின்னர் அந்த சிட்டுக்குருவிகளையே நேசித்து அவற்றிற்கு தானியங்களையும், அரிசியையும் உணவாக அளித்ததையும் மிக அழகாக விவரித்து, தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட கடிதங்களை Ghubar-e-khatir எனும் புத்தகத்தில் காணலாம். இந்த உருது மொழிப் புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கம் Sallies of Mind. இந்தப் புத்தகத்திலிருந்து சிட்டுக்குருவியினைப் பற்றிய குறிப்பினை மட்டும் Birds of India – A Literaty Anthology எனும் தொகுப்பில் காணலாம் (6).

சிட்டுக்குருவி சினிமாப் பாடல்களை சேகரிக்கும் வேளையில் எனது பெற்றோர்களிடம் இதைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்த போது எனது தங்கை மகன் என்னிடம் வந்து அவனுக்கு சிட்டுக்குருவிகளைப் பற்றிய பாடல் ஒன்று தெரியும் என்றான். மூன்றாம் வகுப்பில் அவன் படித்த அந்தப் பாடலை அவனது குரலிலேயே பாடியும் காண்பித்தான் அதை இங்கு கேட்கலாம்:

தமிழ் சினிமா பாடலில் புகழ் பெற்ற சிட்டுக்குருவி பாட்டு, எம். எஸ். ராஜேஸ்வரி அவர்கள் பாடிய (அஞ்சலிதேவி அவர்கள் நடித்த) சிட்டுகுருவி சிட்டுகுருவி சேதி தெரியுமா?..எனும் அருமையான பாடல். முதலில் சிட்டுக்குருவி எனத் தொடங்கும் பாடல்களை மட்டுமே சேகரித்து வந்தேன். பிறகு பாடலின் நடுவிலும் சிட்டுக்குருவி என வரும் பாடல்களையும் சேர்த்துக்கொண்டேன். சில பாடல்களில் சிட்டுக்குருவி எனும் வார்த்தை முழுவதும் வராது. சிட்டு என்றே வரும். அவற்றையும் சிட்டுக்குருவியான எண்ணியே இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளேன். இவ்வகையில் மொத்தம் 20 பாடல்களில் பல மிக மிக இனிமையானவை, புகழ்பெற்றவை, சிலவற்றை கேட்க சகிக்கவில்லை. இந்தப் பட்டியலில் உள்ள ஒரு சுவாரசியமான பாட்டு, “தென்னங்கீற்று ஊஞ்சலிலே..”. பாடலைப் பாடியவர்கள் P.B. சீனிவாஸ், S. ஜானகி. இவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய ஒரே பாடல் இது எனப் படித்ததாக ஞாபகம். இது உண்மையா? மற்றுமொறு விசேசம் இப்பாடலுக்கு உண்டு. பாடலை இயற்றியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்!

இந்தப் பாடல்கள் அனைத்திற்கும் என்னால் முடிந்தவரை அப்படம் வெளியான ஆண்டு, இசையமைத்தவர், பாடியவர்கள், பாடலாசிரியர் முதலிய தகவல்களைத் தந்துள்ளேன்.  ஒரு சில பாடல்களுக்கு இவை கிடைக்கவில்லை. தெரிந்தால் வாசகர்கள் தெரிவிக்கவும். சில சமீபத்தியப் பாடல்களில் எதுகை மோனையாக அமைய வேண்டும் என்பதற்காகவே சிட்டு எனும் சொல்லை உபயோகித்தது போல இருக்கிறது. சிட்டு எனும் வார்த்தையைத் தொடர்ந்து அடுத்த வரிகளில் தொட்டு, மெட்டு, பட்டு போன்ற வார்த்தைகளைல காணலாம். அதேபோல குருவி…அருவி. இந்தச் சாயலை பழைய பாடல்களில் காணமுடிவதில்லை.

பட்டியல் இதோ:

சிட்டுக்குருவி ..சிட்டுக்குருவி ..சேதிதெரியுமா?.. 
படம்: டவுன் பஸ் 1955, பாடியது: எம். எஸ் ராஜேஸ்வரி, கெ. எம். ஷெரீப்,  இசை: கே. வி. மஹாதேவன்.

சின்னஞ் சிறு சிட்டே எந்தன் சீனா கல்கண்டே
படம்:  அலிபாபாவும் 40 திருடர்களும், 1956, பாடியது: எஸ். சி.கிருஷ்ணன் & ஜிக்கி,
பாடலாசிரியர் மருதகாசி, இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி.

தென்னங்கீற்று ஊஞ்சலிலேசிட்டுக்குருவி பாடுதுதன் பெட்டைத் துணையைத்தேடுது
படம்: பாதை தெரியுது பார் 1960, பாடியது: பி. பி.ஸ்ரீநிவாஸ் & எஸ். ஜானகி,
பாடலாசிரியர்: ஜெயகாந்தன், இசை: எம். பி. சீனிவாசன்.
 
பட்டுவண்ணச்சிட்டு படகுதுறைவிட்டு
படம்: பரிசு 1963, பாடியது: டி. எம். செளந்தர் ராஜன், பாடலாசிரியர்: கண்ணதாசன்,
இசை: கே. வி. மஹாதேவன்.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..
படம்: புதிய பறவை 1964 பாடியது: பி. சுசீலா, பாடலாசிரியர்: கண்ணதாசன்,
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?…
படம்: சவாலே சமாளி, 1971, பாடியது:  பி. சுசீலா, இசை: எம். எஸ் . விஸ்வநாதன்.

சிட்டுக்கு செல்லசிட்டுக்கு ஒருசிறகு முளைத்தது
படம்: நல்லவனுக்கு நல்லவன், 1984 பாடியது: கே.ஜே. ஏசுதாஸ், பாடலாசிரியர்: நா. காமராசன்,
இசை: இளையராஜா.

ஏ குருவிசிட்டுக்குருவி
படம்: முதல் மரியாதை, 1985,பாடியது:மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி,
பாடலாசிரியர்: வைரமுத்து, இசை: இளையராஜா.

சிட்டுக்குருவி வெக்கப்படுது..
படம்: சின்னவீடு, 1985, பாடியது: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, இசை:இளையராஜா.

சிட்டுகுருவி..தொட்டுதழுவி..
படம்: வீரபாண்டியன் 1987, பாடியது: மலேசியா வாசுதேவன், சித்ரா, இசை: ஷங்கர்-கணேஷ்.

பூஞ்சிட்டுக் குருவிகளா? புதுமெட்டுத் தருவிகளா?
படம்: ஒரு தொட்டில் சபதம் 1989. பாடியது &இசை: சந்திரபோஸ்.

சிட்டாஞ்சிட்டாங்குருவி உனக்குதானே
படம்: புது நெல்லு புது நாத்து, 1991, பாடியது: எஸ். ஜானகி, பாடலாசிரியர்: வைரமுத்து,
இசை:இளையராஜா.

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசிருசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சிரிக்கட்டுமே பெட்டைக்குருவி
படம்: மே மாதம், 1994, பாடியது: ஜி.வி. ப்ரகாஷ் & நோயல் ஜேம்ஸ், பாடலாசிரியர்: வைரமுத்து,
இசை ஏ. ஆர். ரஹ்மான்.

புல்வெளி புல்வெளி எங்கும் பனித்துளி பனித்துளிசிட்சிட்சிட்சிட்சிட்டுக்குருவி
படம்: ஆசை, 1995, பாடியது: கே. எஸ். சித்ரா, இசை:தேவா

சிட்டு சிட்டு குருவிக்கு கூடுஎதுக்கு
படம்: உள்ளத்தை அள்ளித்தா, 1996, பாடியது:  மனோ, சுஜாதா, பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: சிற்பி,

சிக்கிலெட்டு சிக்கிலெட்டு சிட்டுக்குருவி
படம்: பூவே உனக்காக, 1996, இசை:எஸ். ஏ. ராஜ்குமார்,

சிட்டுக்குருவி குருவி குருவி தனது இருசிறகை விரிக்குதே
படம்: நானும் ஒரு இந்தியன், 1997, பாடியது: எஸ். ஜானகி, மனோ, இசை: இளையராஜா

என்னைத்தொட்டுவிட்டுதொட்டுவிட்டுஓடுதுஒருசிட்டுக்குருவி
படம்: பூ மனமே வா 1999, பாடியது: எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா,
பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: சிற்பி.

சிட்டு சிட்டு குருவிக்கந்த வானத்துல பட்டுரெக்க விரிக்க சொல்லித்தரனுமா?..
படம்: அழகி, 2002, பாடியது: பவதாரனி, பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: இளையராஜா.

சிட்டுக்குருவி அருவியக் குடிக்கப்பாக்குது
படம்: பரசுராம், 2003, பாடியது: ஸ்வர்ணலதா, அர்ஜுன், ஸ்ரீராம் பார்த்தசாரதி,
பாடலாசிரியர்: பழனிபாரதி, இசை: ஏ.ஆர். ரஹ்மான்.

 

இந்தப் பட்டியலை சேகரிக்க பலர் உதவிபுரிந்தனர். குறிப்பாக எனது பெற்றோர்கள், மோகன் மாமா, அறம் ஆகியோருக்கும், சிறுவர் பாடலை பாடிய கபிலனுக்கும் எனது நன்றிகள்.

குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள், வலைதளங்கள் :

1. Citizen Sparrow: http://www.citizensparrow.in/

2. Sundar, KSG. 2010. The New Indian Express, (Zeitgeist Suppl.), 10 Jul 2010, pg. 6

3. ப. ஜெகநாதன். 2012. சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு. தினமணி (கொண்டாட்டம்), 22 ஏப்ரல் 2012.

4. Birds in Sangam Tamil: http://birdsinsangamtamil.wordpress.com/2011/05/01/birds-in-sangam-tamil/

5. Mahakavi Bharatiyar Katturaigal (Anthology of Bharat’s Essays) Compiled by D. Jayakantan and ‘Sirpi’ Balasubramaniam, Sahitya Akademi, New Delhi, Reprint 2008.

6. Birds of India – A literary Anthology. Edited by Abdul Jamal Urfi. (2008). Oxford University Press, New Delhi.

Written by P Jeganathan

November 19, 2012 at 1:57 pm

Posted in Birds

Tagged with ,

கொண்டலாத்தி கவிதைகள்

leave a comment »

எனக்கு பறவைகளைப் பார்க்கப்பிடிக்கும். பறவைகளை ஆராயப்பிடிக்கும். அவற்றை படமெடுக்கவும் பிடிக்கும். எனக்கு நல்ல கவிதைகளைப் படிக்கப்படிக்கும். படித்து ரசிக்கப்பிடிக்கும். ஆனால் கவிதைகளைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்குத் தகுதியில்லை. அது பறவைகளைப் பற்றிய கவிதைகளாக இருந்தாலும் கூட. ஆனால் படித்து மகிழ்ந்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே. இதுவரை ஆங்கிலத்திலேயே பறவைக் கவிதைகளை படித்த எனக்கு தமிழில் அதுவும் தமிழகப் பறவைகளைப் பற்றிய கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.

எந்த ஒரு புத்தகக் கடைக்குச் சென்றாலும், தமிழில் இயற்கையைப்பற்றிய நூல்களைத் தேடுவதும் அவற்றை வாங்குவதுமே என் வேலை. சென்னையில் அண்மையில் நிகழ்ந்த 35வது புத்தகக் கண்காட்சியில் எனது கண்கள் இப்படிப்பட்ட புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது க்ரியா பதிப்பகத்தாரின் கடைக்குள் நுழைந்து எனது கண்களை மேயவிட்டபோது முதலில் என்னை ஈர்த்தது கொண்டலாத்தி எனும் புத்தகம். ஹூப்பூ (Hoopoe) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அழகான பறவையின் அட்டைப்படத்தை கொண்டது. பொதுவாக பறவைகளையும், விலங்குகளையும், இயற்கைக் காட்சிகளையும் அட்டையில் கொண்டுள்ள புத்தகங்களின் உள்ளே, படத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அந்த எண்ணத்துடனேயே அழகாக வடிவமைக்கப்பட்ட இப்புத்தகத்தை கையில் எடுத்து உள்ளே பார்த்த எனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் தலைக்கேரியது.

பறவைகளைப்பற்றிய கவிதைத் தொகுப்பு கொண்டலாத்தி. அதுவும் தமிழகத்தில் நம் வீட்டுப்புறத்தில், வயல் வெளிகளில் பொதுவாக பறந்து திரியும் பறவைகளைப்பற்றியது. இப்பறவைகளைப் பார்த்திராதவர் இருக்க முடியாது. ஒரு வேளை பார்த்திருக்காவிடினும் இக்கவிதைத் தொகுப்பை படித்தபின் நிச்சயமாக பறவைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

kondalathi_book cover

இயற்கையை ரசிப்பவர்கள், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் இயற்கையின் ஒரு அங்கமான பறவைகளைக் கண்டு ரசிக்காமல் இருக்கமாட்டார்கள். பல காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் உருவாகக் காரணமானது பறவைகளே. பல கவிஞர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள் பல பாட வைத்தன பறவைகள். ஆங்கிலக் கவிஞர்கள் பலர் அவரவர் ஊர்களில் தென்படும் பறவைகளைப் பற்றி பல கவிதைகள் எழுதியுள்ளனர். ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலும், கவிதைகளிலும் பறவைகளைப் பற்றிய குறிப்புகள் வெகுவாகத் தென்படுகிறது. இருப்பினும் எனக்குப் பரிச்சயமான, பிடித்த பறவைக் கவிதைகள், வானம்பாடியைப் பற்றி ஷெல்லி பாடிய Ode to a Skylark, இரவாடிப்பறவையான நைட்டிங்கேலைப் பற்றி கீட்ஸ் பாடிய Ode to a Nightingale, பாப்லோ நெருதா வடித்த பறவைப் பார்ப்பதைப் பற்றிய Ode to Birdwatching போன்ற கவிதைகளும் கூழக்கடாவைப் (Pelican) பற்றி Dixon Lanier Merritt என்பவர் எழுதிய வேடிக்கையான பாட்டும்தான். எனக்கு நெடுநாளாக ஒரு ஆதங்கம் இருந்தது, இதைப்போலெல்லாம் எழுத இங்கு ஆளில்லையே என்று. அந்தக் குறை இப்புத்தகத்தைப் படித்ததும் தீர்ந்துவிட்டது.

இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவற்றின் அறிவியல் துல்லியம். அதாவது பறவைகளின் குணங்களை கூர்மையாக கவனித்து ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளன் எவ்வாறு ஆராய்ச்சிக்கட்டுரையில் மிகத்துல்லியமாக விவரிக்கிறானோ அதைப்போலவே ஆசை கவிதையாக வடித்துள்ளார். பொதுவாக தமிழ் சினிமாப்பாடல்களில் அவ்வப்போது பறவைகளைப்பற்றிய வரிகள் வருவதுண்டு. ஆனால் பெரும்பாலும் அவற்றின் பெயர்களும், விவரிக்கப்படும் குணங்களும் பாடலாசிரியரின் கற்பனையில் விளைந்ததாகவே இருக்கும். அறிவியல் துல்லியம் இருக்காது. இந்தக் கவிதைகள் அப்படியல்ல. பறவைகளைக் கூர்ந்து நோக்கி, ரசித்து, அனுபவித்து எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொண்டு ரசிக்கும் வகையில் எழுதப்பட்டவை. சங்கத்தமிழ் படைப்புகள் பலவற்றில் பறவைகளைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை தமிழ் அறிஞர்கள் மட்டுமே படித்து மகிழ முடியும். அவர்கள் படித்து விளக்கிச் சொல்லிய உரைகளிலிருந்தே நாம் படித்து அறிய முடியும். ஆனால் ஆசையின் பறவைக் கவிதைகளை படித்தவுடன் நமக்கு அப்பறவையை மீண்டும் காண ஆசை வரும். கவிதையில் உள்ள பறவையைக் கண்டிருக்காவிடினும் அதைப்பற்றிப்படித்தபின் அதைக் காணத்தூண்டும்.

ஆசை தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பலவகையான பறவைகளைப் பார்த்து அவைகளையெல்லாம் பற்றி பற்பல கவிதைகள் வடிக்க வேண்டும் என்பது எனது அவா. சீகாரப்பூங்குருவி (Malabar Whistling Thrush) பாடுவதை கேட்டாலும், இருவாசிப் பறவை பறப்பதை பார்த்தாலும் இவர் எவ்விதமாய் கவிதை புனைவார் என்று எண்ணும்போதே மகிழ்ச்சியும் அக்கவிதைகளைப் பார்க்க எனக்கு இப்பவே ஆவலாகவும் இருக்கிறது. இப்பறவைக் கவிதை உலகிற்குத் தெரியவந்தது 2010ல். ஆனால் 2012 வரையில் இது பற்றி அறியாமலிருந்திருகிறேன். வெட்கமாகத்தான் இருக்கிறது என்றாலும் இப்பொழுதாவது பார்த்தேனே என்ற நிம்மதியே நிலவுகிறது என் மனதில். இது ஏதோ ஒரு அறிய பறவையை உயிருடன் அதன் வாழிடத்தில் முதன் முதலில் பார்த்த மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

இந்த புத்தகத்தின் ஒவ்வொறு வரியையும் ஒவ்வொறு பக்கத்தையும் படிக்கும் பொழுது எனக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியை, உணர்வை நான் பறவைகளைப் பார்க்கும் போதும் அவற்றை கண்டு வியக்கும் போதும் ஏற்படும் உணர்வுக்கு ஒப்பாக நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் இலக்கணம் சரியானது தானா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஏனெனில் இப்புத்தகத்திலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றிலும் நான் பறவைகளைப் பார்க்கிறேன். நான் பறவைகளைக் காதலிக்கிறேன். ஆகவே இப்புத்தகத்தையும் தான்.

அக்டோபர் 2012 புத்தகம் பேசுது இதழில் வெளியான நூல் அறிமுகம். இக்கட்டுரையின் PDF இதோ.

இந்நூலை வாங்க தொடர்பு கொள்க –  க்ரியா பதிப்பகம்: தொலைபேசி எண்: +91-44-4202 0283 & +91-72999-05950

மின்னஞ்சல்: creapublishers@gmail.com இணைய வழியில் வாங்க உரலி இதோ

Written by P Jeganathan

November 6, 2012 at 9:43 pm

Posted in Birds, Books

Tagged with ,

பல்லுயிர் பாதுகாப்பிற்கு நாம் என்ன செய்யலாம்?

leave a comment »

இப்பூமிப்பந்தினை சீரழிவிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் என யோசிக்கும் முன் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியை முதலில் கேட்க வேண்டும்.

Photo: Kalyan Varma

Photo: Kalyan Varma

இதைப் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் பல்லாயிரக்கணக்கான சதுர அடி வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலுள்ள எண்ணிலடங்கா உயிரினங்கள் தங்கள் வாழிடங்களை இழந்து தவிக்கின்றன, பல உயிரினங்கள் இந்த உலகிலிருந்து முற்றிலுமாக அழிந்து போகின்றன. இவற்றையெல்லாம் பாதுகாக்கத் தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? நான் இருப்பது நகரத்தில், காட்டைக் காப்பாற்றுவதால் எனக்கு என்ன கிடைக்கும்?

மிக எளிதான அனைவரும் அறிந்த பதில்கள் இதுதான். காடு செழித்தால் நாடு செழிக்கும், மரமிருந்தால் தான் மழை பொழியும். மற்ற எல்லாக் கேள்விகளுக்கும் முழுமையாக விடையளிப்பதோ, இதையெல்லாம் செய்யலாம் என்பதை பட்டியலிடுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் அந்த விடையைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஊட்டுவதும், வழியையும் காட்டுவதும் தான்.

மேற்குத் தொடர்ச்சியின் மழைக்காடு

மேற்குத் தொடர்ச்சியின் மழைக்காடு

முதலில் நாம் அனைவரும் செய்யக்கூடியது இயற்கைப் பேணல், காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த புத்தகங்களை படிப்பது. தமிழில் இவற்றைப் பற்றிய புத்தகங்கள் குறைவு, எனினும் சு. தியடோர் பாஸ்கரன் (உயிர்மை மாத இதழில் எழுதி வருபவர்), ச. முகமது அலி (காட்டுயிர் எனும் இதழின் ஆசிரியர்) ஆதி. வள்ளியப்பன் (துளிர், பூவுலகு முதலிய அறிவியல் இதழ்களில் எழுதி வருபவர்) போன்ற சில சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கிப் படிக்கலாம். பல்லுயிர்ப்பாதுகாப்பின் (Biodiversity Conservation) அவசியத்தைப் பற்றி, ”இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” எனும் புத்தகத்தில் (உயிர்மை பதிப்பகம்) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களின் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்:

“…சில தீரா நோய்களுக்கு மருந்து, உணவுப் பற்றாக்குறைக்கு நிவாரணம் என பல தீர்வுகள் இப்பல்லுயிரியத்தில் மறைந்திருக்கலாம். சகல உயிர்களுக்கும் ஆதாரமான சூழலியல் செயலாக்கங்களுக்கு இந்த உயிரின வளம்தான் அடிப்படை என்பதையும், மக்களின் நல்வாழ்விற்குப் பல்லுயிரியமே மூல சுருதி என்பதையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. பல்லுயிர் ஓம்புதல் (322) என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த அக்கறையையே. இந்த உயிர்வளம் நமது வம்சாவளிச் சொத்து. இழந்துபோனால் மீட்க முடியாத ஐசுவரியம்….”

இந்த வார்த்தைகளே போதுமானவை, மேலும் தெரிந்து கொள்ள புறவுலகு சார்ந்த கட்டுரைகளையும், புத்தகங்களையும் படிக்கலாம். படித்தால் மட்டும் போதாது அதன் வழி நடத்தல் வேண்டும். இயற்கையின் பால் நாட்டம் ஏற்பட்டு அவற்றைக் காணவும், மகிழவும் செய்தால் மட்டுமே அவற்றைக் காப்பாற்ற முடியாது. அது ஒரு அக்கறையாக வளர வேண்டும்.

நான் நகரத்தில் இருக்கிறேன், நான் வறுமையில் வாடும் ஒரு இந்தியக் குடிமகன், என்னால் பல்லுயிர் பாதுகாப்பிற்கு என்ன செய்து விட முடியும் என்பகிறீர்களா? நகரத்திலுள்ளவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் செய்யக்கூடியவற்றை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். இது எனதல்ல. Andrew Balmford எனும் சூழியல் விஞ்ஞானி சமீபத்தில் எழுதிய Wild Hope எனும் நூலில் சொன்னது. நம் இந்தியச் சூழலுக்கேற்ப சிலவற்றை இணைத்துள்ளேன். அவர் கூறுவதாவது:

காட்டுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பாடுபடுவோருக்கு உதவுதல்:

நம்மால் நேரிடையாக இவற்றில் பங்குபெறமுடியாவிடின் இந்தக்காரியங்களைச் செய்வோருக்கு அல்லது அவர்களது அமைப்பு, சங்கம், நிறுவனங்களுக்கு பண உதவி செய்யலாம். எனினும், இந்த அமைப்புகள் உண்மையிலேயே இயங்குகின்றனவா? இதுவரை அவர்கள் சாதித்தது என்ன? செய்து கொண்டிருப்பது என்ன? எப்படிப்பட்ட நிபுணர்களை, அனுபவசாலிகளைக் கொண்டுள்ளன? போன்ற விவரங்களை பகுத்தறிந்து உதவுதல் நலம். அரசு சாரா நிறுவனங்கள் உள்நாட்டிலும், பண்ணாட்டளவிலும் பல உள்ளன. Greenpeace, World Wildlife Fund for Nature (WWF) போன்ற பண்ணாட்டு அரசு சாரா அமைப்புகளுக்கு இந்தியாவிலும் கிளைகள் உண்டு. இந்தியாவில் Bombay Natural History Society, Keystone Foundation தமிழகத்தில் கோவையிலுள்ள ஓசை, சிறுதுளி அமைப்புகள், அருளகம், பூவுலகின் நண்பர்கள், Madras Naturalist Society முதலியவற்றைச் சொல்லலாம்.

பங்களித்தல்:

வெறும் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு (நன்கொடையோ, அன்பளிப்போ அல்லது அந்த அமைப்புகள் விற்கும் பொருட்களை வாங்கியோ) நான் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்குத் துணைபோகிறேன் என்று சொல்லாமல் அந்த அமைப்புகளின் வேலைகளில் பங்கு கொண்டு தொண்டூழியம் (Volunteering) செய்யலாம். 

கருத்துகளை அனைவருக்கும் தெரிவியுங்கள், போராடுங்கள்:

கடைக்குச் செல்லும் போது கூடவே பையை எடுத்துச் செல்வது, பிளாஸ்டிக் பைகளை வாங்காமல் இருப்பது, தேவையில்லாத நேரத்தில் மின் சாதனங்களை அனைத்தல், கூடியவரை நமது சொந்த பெட்ரோல், டீசல் வாகனங்களில் செல்லாமல் பேருந்து, இரயிலில் செல்லுதல், தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தல், வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது அங்கு குப்பைகளை போடாமல் இருத்தல் போன்ற, நாம் செய்யும் சிறு சிறு காரியங்கள் நிச்சயமாக உதவும். நாம் ஒருவர் இவற்றைப் பின்பற்றினால் போதாது. இயற்கைச் செல்வங்களை பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இயற்கைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளலாம், அவற்றிற்காக குரலெழுப்பலாம்.

பார்த்து வாங்க வேண்டும்:

நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஏதே ஒரு வகையில் இயற்கைச் சீரழிவிற்கு நம்மை அறியாமல் துணைபோகிறோம். காலையில் எழுந்து காபியோ, டீயோ குடிக்கிறோம். அது பயிரிடப்படுவது வனங்களை அழித்தே. இதனால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. சமைக்கப் பயன்படும் பாம் ஆயில் (Palm Oil) பயிரிடப்படுவது பல சதுர கிமீ பரப்புள்ள மழைக்காடுகளை அழித்தே. இதனால் இந்தோனிஷியாவில் உள்ள ஒராங்உடான் (Orangutan) எனும் அரிய வகை குரங்கினத்தின் வாழிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது. கோல்டன் (Coltan) நாம் பேசும் மொபைலில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான உலோகத் தாது. ஆப்பிரிக்காவில் இதைத் தோண்டி எடுக்க காடுகளை அழிப்பதால் அங்கு வாழும் கொரில்லாக்கள் (Gorilla) அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன.

Orangutan. Photo: Kalyan Varma

Orangutan. Photo: Kalyan Varma

அதற்காக இவற்றை பயன்படுத்தாமல் உயிர்வாழ முடியுமா? மொபைல் இல்லாத வாழ்வை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? முடியாது ஆனால் நல்ல, தரமான, கலப்படமில்லாத பொருட்களை வாங்குவது போல இயற்கைக்குப் புறம்பாக, இயற்கை வளத்தைச் சீரழித்து தயாரிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை வாங்காமல் தவிர்த்தல் வேண்டும். வளங்குன்றா விவசாயத்தின் மூலமும், இயற்கை விவசாயமுறையில் பயிர் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கலாம். நுகர்வோர் பொறுப்புடன் பொருட்களை பார்த்து வாங்க ஆரம்பித்தால் அதைத் தயாரிப்போரும் பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள். மாறியாக வேண்டும்.

சிறந்த உதாரணம், கிட் கேட் (Kitkat) சாக்கலேட். இதன் தயாரிப்பாளார்களான நெஸ்லே கிட்கேட் மிட்டாய் தாயாரிப்பதற்காக பாம் ஆயில் வாங்கியது ஒராங்உடான் குரங்கினத்தின் வாழிடமான மழைக்காடுகளை அழித்து விவசாயம் செய்யும் ஒரு நிறுவனத்தாரிடமிருந்து. ஆகவே ஒவ்வொரு கிட்கேட் சாப்பிடும் போதும் நாம் அந்த அரிய குரங்கினத்தை சாகடிக்கிறோம் எனும் பொருள்படும்படியான ஒரு குறும்படத்தை கிரீன்பீஸ் (Greenpeace) இயக்கத்தார் தயாரித்து வெளியிட்டனர். அதை இங்கு காணலாம்

இதைப்பார்த்த பலர் கிட்கேட் மிட்டாயை வாங்குவதை தவிர்த்தனர். இதனால் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன் பின் தாம் செய்வதை அறிந்து நெஸ்லே அந்த நிறுவனத்திடமிருந்து பாம் ஆயில் வாங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டனர். ஆகவே மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை.

உடும்புக்கறி, சிட்டுக்குருவி, கருங்குரங்கு லேகியங்கள், ஆமை முட்டை போன்றவற்றை சாப்பிட்டால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல. எதையாவது எளிதில் ஏமாற்றி விற்க வேண்டும் எனில் இப்படிச் சென்னால் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். இதற்கெல்லாம் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. அதுபோக காட்டுயிர்களை வேட்டையாடுவதும், அவற்றை வாங்கி ஊக்குவிப்பதும் இந்திய காட்டுயிர்ச் சட்டத்தின் படி குற்றமாகும்.

Wild Hopeல் சொல்லப்பட்ட மற்றுமொரு முக்கியமான கருத்து – ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். பல்லுயிர் பாதுகாப்பிற்கு பல வகையில் இடர்கள் வந்து கொண்டே தானிருக்கும். அவற்றைக் கண்டு துவண்டுவடலாகாது. போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.

books_700

எத்தனை புத்தகங்கள் படித்தாலும், பல பேர் போதித்தாலும் நாமாக உணராவிட்டால் நாம் எதையும் செய்ய முற்படுவதில்லை. எதை நாம் விரும்புகிறோமோ, நேசிக்கிறோமோ அதைத்தான் பாதுகாக்க முற்படுவோம். இந்தியா பல்லுயிரியம் மிகுந்த நாடு. நம்மிடம் இருக்கும் இயற்கைச் செல்வங்களில் பல உலகில் வேறெங்கும் கிடையாது. இதை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 16. புதிய தலைமுறை 1 நவம்பர் 2012