Archive for December 2012
சிட்டுக்குருவியின் வீழ்ச்சியும், நாம் பெற்ற படிப்பினையும்
எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்கு பல விதங்களில் நன்மை செய்பவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்கு சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளை விட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்து பழக்கப்பட்டவை. அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித் தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களை கொத்திக் கொத்தி சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும் போது தமது கால்களை பிணைத்துக்கொண்டு படபடவென சிறகடித்து கீழே விழுவதையும் கண்டிருப்போம். நமது வீட்டில் கூடு கட்டியிருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண்விழித்திருப்போம்.
இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த சிட்டுக்குருவி சில இடங்களில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில் அவை இருந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியாமாக நகரங்களின் சில பகுதிகளில். ஏன் குறைந்து போயின என்பதை கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்து கொள்ள முடியும். ஒரு உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பலகாலமாக, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் அவ்வளவு இருந்தன, தற்போது இவ்வளவாகக் குறைந்து போய் விட்டன என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லையெனில் அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்து விட்டது என்று சொல்லமுடியாது. நாமாக ஒரு காரணத்தையும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது. ஆனால் இங்கு நடந்ததென்னவோ அதுதான்.
மேலை நாட்டின் மீது உள்ள மோகத்தினால் அவர்களைப் போல உடையணிந்து கொண்டோம். அவர்கள் சாப்பிடுவதையும், குடிப்பதையும் இங்கே கொண்டு வந்து நாமும் சுவைக்க ஆரம்பித்தோம். பரவாயில்லை. ஆனால் அவர்கள் நாட்டில் நடைபெற்ற நீண்ட கால பறவைகள் ஆராய்ச்சியின் அடிப்படையில் வெளிவந்த முடிவுகளை நம் நாட்டில் உள்ள பறவைகளுக்கும் பொருந்தும் எனக் கருதுவது முட்டாள்தனமான ஒன்று. இதற்குச் சிறந்த உதாரணம் இந்தியாவில் சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்குக் காரணம் செல்போன் டவர்கள் எனச் சொல்வது. ஸ்பெயினில் சில காலம் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில், செல்போன் டவர்களிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகளும் கூட அங்குள்ள சிட்டுக்குருவிகளில் எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்காலாம் என்று சொல்லப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை வைத்துக்கொண்டு, அது நம் நாட்டுக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. உணவையும் உடையையும் அவர்களைப் பார்த்து “காப்பி அடித்ததைப்” போல இதையும் செய்ய முடியாது.
ஆனால், இந்தியாவில் சிட்டுக்குருவியின் வீழ்ச்சிக்கு சில அரைவேக்காட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தக்காரணத்தையே கற்பித்தனர், அவர்களின் கூற்றை நம்பிய பல வெகுசன ஊடகங்களும், இந்தக்காரணத்தையே பிரபலப்படுத்தியதால், இப்போது யாரைக்கேட்டாலும் “சிட்டுக்குருவி குறைந்து விட்டதா? அதற்குக் காரணம் செல்போன் டவர்கள் தான்” சொல்லுகின்றனர். இது நமது அறிவியல் மனப்பான்மையின்மையையே காட்டுகிறது. இதைப்போன்ற அறிவியல் ஆதாரமற்ற செய்திகள் பரவாமல் இருக்க வேண்டுமானால், உண்மையான காரணங்களை அலசி ஆராய்ந்து எடுத்துரைப்பது மிகவும் இன்றியமையாதது. அதைத்தான் திரு ஆதி. வள்ளியப்பன் இந்நூலில் செய்துள்ளார். சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை முறை, அவை நமது பண்பாட்டில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதைப் பற்றிய சுவாரசியமான செய்திகளை இந்நூலில் தருகிறார். அதுவும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் எளிய நடையில்.
மேலைநாடுகளில் ஏற்பட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சியால் இங்கு இந்தியாவில் நாம் பெற்ற படிப்பினை என்ன? நம் நாட்டில் சுமார் 1300 பறவையினங்கள் உள்ளன. அவற்றினைப் பற்றிய நீண்டகால ஆராய்ச்சி, கணக்கெடுப்புப் பணி முதலிய அறிவியல் பூர்வமாக தகவல் சேகரிக்கும் திட்டங்களை வெகுவளவில் ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும். கானமயில் (Great Indian Bustard) என்ற ஒரு பறவையினம் ஒரு காலத்தில் தமிழகத்தில் வெட்டவெளிகளிலும், பரந்த புல்வெளிகளிலும் திரிந்து கொண்டிருந்தன. ஆனால் வேட்டையாடப்பட்டதாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் அவற்றின் வாழிடம் இல்லாமல் போனதாலும், இன்று அப்படி ஒரு பறவை இங்கு இருந்தது என்பதே பலருக்கு தெரியாமல் போய்விட்டது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த பிணந்திண்ணிக்கழுகுகள் (Vultures) இன்று ஓரிரண்டாகக் குறைந்து, காண்பதற்கு அரிதான ஒன்றாகிவிட்டன. இன்று நம் கண்களுக்கெதிரே சில இடங்களிலிருந்து காணாமல் போன சிட்டுக்குருவியை முன்னுதாரனமாகக் காட்டி, பல இடங்களில் அற்றுப்போய்க்கொண்டிருக்கிற பல அரிய பறவையினங்களை காப்பாற்றும் எண்ணத்தை பொதுமக்களுக்கு ஊட்டவேண்டும்.
புறவுலகின் பால் நாட்டம் ஏற்பட, மனிதனையல்லாத உயிரினங்களின் மேலும், அவை வாழுமிடங்களின் மீதும் கரிசனம் ஏற்பட, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்க, வித்தாக அமைவது பறவைகளைப் பார்ப்பது (Birdwatching) போன்ற செயல்கள். அதுவும் சிறு வயது முதலே இவ்வகையான இயற்கையை ரசித்துப் போற்றும் செயல்களில் ஈடுபடுவது புறவுலககினை மதிக்கும் தலைமுறையினை உருவாக்கும். புறவுலகின் பால் நமக்கு உள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள சிட்டுக்குருவி போன்ற மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சுற்றித்திரியும் பறவைகளைப் பார்ப்பதிலிருந்து தொடங்கலாம். அவற்றின் எண்ணிக்கை குறையாமலிருக்க செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடலாம். அதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் இந்நூல் நிச்சயமாக ஊட்டும்.
ஆதி வள்ளியப்பன் எழுதிய “சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்” நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை. இதன் PDF இதோ.
நூல் விவரம்:
ஆதி வள்ளியப்பன் (2012). சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும். தடாகம் & பூவுலகின் நண்பர்கள் வெளியீடு. பக்கங்கள் 88. விலை ரூ. 70. இந்நூலை வாங்க தொடர்பு கொள்க: தடாகம். தொலைபேசி எண் +91-89399-67179
இணைய வழியில் வாங்க உரலி இதோ
என் வீட்டுத் தோட்டத்தில் – சருகுமான்
சருகுமான் Mouse Deer Indian Spotted Chevrotain (Moschiola indica)
நானிருக்கும் வீட்டிலிருந்து எனது அலுவலகம் செல்ல பரந்து விரிந்த தேயிலைத் தோட்டம், தீவுக்காட்டுப்பகுதியின் வழியாகச் செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும். செல்லும் போது காட்டெருது, சிங்கவால் குரங்கு, கேளையாடு, மலையனில் பலவிதமான பறவைகள் யாவும் காணக்கிடைக்கும். இயற்கையை விரும்பும் காட்டுயிர் ஆராய்ச்சியாளனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும். உண்மையில் காடுதான் அலுவலகம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து, பதிவு செய்து, வெளியுலகிற்கு தெரிவிக்க அது தொடர்பான வேலைகளைச் செய்ய என்போன்றோருக்கு செங்கற்கலால் ஆன கட்டிடம் தேவைப்படுகிறது. வீட்டுக்குப் பக்கத்திலும் காட்டுயிர், அலுவலகம் போகும் வழியிலும் காட்டுயிர், அலுவலத்தின் அடுத்தும் காட்டுயிர் என்றால் அது சொர்க்கம் தானே! எனினும் காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவதில் எனக்கு நாட்டமில்லை. பகலில் சென்று இரவில் (முடிந்தால் நடு இரவில்) வீடு திரும்புவதில் தான் சுகமே. ஏனெனில் பகலில் திரியும் காட்டுயிர்களையும் காணலாம், இரவாடி விலங்குகளான காட்டுப்பன்றி, மிளா, புனுகு பூனை, முயல், முள்ளம்பன்றி, அதிருஷ்டமிருந்தால் சிறுத்தை, சருகுமான் முதலியவற்றையும் காணலாம். அடிக்கடி பார்க்கும் விலங்குகளைக் காட்டிலும் எப்போதாவது காணக்கிடைக்கும் உயிரின்ங்களின் பால் ஈர்ப்பு இருப்பது இயல்பே. ஆகவே சருகுமானை பார்க்கும் நாள் சிறந்த நாள் தான். காட்டு வழியே போகும் போது சாலையின் குறுக்கே ஓடினால் ஒழிய சருகுமானை எளிதில் பார்ப்பது கடினம். இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அவ்வப்போது கண்டதுண்டு.
காட்டின் தரைப்பகுதியில் சருகுகளினூடே பகலில் படுத்திருக்கும். அருகில் செல்லும் வரை நம்மால் அது இருப்பதை பார்த்தறிய முடியது. அந்த அளவிற்கு சுற்றுப்புறத்துடன் ஒன்றிப் போயிருக்கும். இதற்கு உருமறைத்தோற்றம்(camouflage) என்று பெயர். அதாவது, ஒரு உயிரினத்தின் உடலின் நிறமோ அல்லது சிறகுகளோ அவை இருக்கும் சூழலின் நிறத்தை ஒத்து இருந்தால் அவை சுற்றுப்புறச்சூழலோடு ஒன்றிப்போய் எளிதில் கண்ணிற்கு புலப்படாத வண்ணம் அமைந்திருப்பதே உருமறைத்தோற்றம். இப்பண்பு அவற்றை பிடிக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காகவோ, அவை மற்ற இரைஉயிரினங்களை பிடிப்பதற்காகவோ பெரிதும் உதவும். உதாரணம்: பச்சோந்தி, பச்சைப்பாம்பு.
இந்தியாவில் தென்படும் மான் இனங்களிலேயே மிகச்சிறியது சருகுமான். இதன் உயரம் ஒரு அடிதான், உடலின் நீளமும் (முகத்திலிருந்து வால்வரை) சுமார் 50-58 செமீ தான் இருக்கும். சருகுமான் ஒரு விசித்திரமான மான்வகை. பரிணாம ரீதியில் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மிகப்பழமை வாய்ந்த பாலுட்டியினத்தில் ஒன்று சருகுமான். இவை அதிகம் பரவி காணப்பட்டது ஓலிகோசீன் – மியோசீன் காலங்களில், அதாவது 35-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. தொல்லுயிர் படிமங்கள் (Fossils) வாயிலாக இதை அறியமுடிகிறது. சருகுமான் மானினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் மான்களுக்கு இருப்பதுபோல் முன்னிரண்டு வெட்டுப்பற்கள் இவற்றிற்கு கிடையாது. மேலும் மூன்று பகுதிகளைக் கொண்ட குடல் இருக்கும் (மான்களின் குடல் நான்கு பகுதிகளைக் கொண்டது). ஆகவே இவை மானினத்தின் முன்தோன்றிகள் (Primitive) எனக் கருதப்படுகிறது. இதனாலேயெ இவை இப்போதும் வாழும் தொல்லுயிரி (Living Fossil) மற்றுமொறு வியக்கத்தக்க பண்பு சருகுமானினம் உடற்கூறு ரீதியில் பன்றி இனத்தின் பண்புகளையும் கொண்டுள்ளது. ஆனைமலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான காடர்கள் இவ்விலங்கிற்குத் தரும் பெயர் என்ன தெரியுமா? கூரன் பன்னி! சருகுமானின் வகைகள் ஆப்பிரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படுகின்றன. இந்தியாவில் தக்கான பீடபூமி, கிழக்கு, மேற்கு மலைத்தொடரின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவை வசிக்கின்றன. இலங்கையிலும், நேபாளத்திலும் இவை வாழ்கின்றன.
சருகுமான்கள் சிறுத்தைகளின் முக்கிய உணவாக அறியப்படுகிறது (விரிவான கட்டுரை இங்கே). இவை வெகுவளவில் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டும், சில நேரங்களில் சாலையைக் கடக்கும் போது சீறிவரும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன. இரவிலும் அந்திசாயும் நேரங்களில் மட்டுமே அதிகம் பார்க்கக்கூடிய சருகுமானை ஒரு நாள் பகலிலேயே காணக்கிட்டியது. அதுவும் என் வீட்டு சமையலறைக்கு வெகு அருகாமையிலேயே! சமையலறையின் பின்பக்கக் கதவைத் திறந்தால் கொல்லைப்புறம். காய்கறிகளை அறிந்து வரும் தோல், தண்டு, மிச்சமீதி உணவு யாவற்றையும் வேலியருகே ஒரு குழிதோண்டி அதில் போட்டு வைப்போம். பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதில்லை. வேலியை அடுத்து களைகள் மண்டிய புதர்க்காடும் அதனைத்தொடர்ந்து தேயிலைத் தோட்டமும் இருக்கும். வேலியின் ஓரிடத்தில் விலங்குகள் அடிக்கடி வந்து போனதால் ஒரு அடி உயரமுள்ள திறப்பு இருக்கும். காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் அந்த குப்பைத் தொட்டிக்கு அவ்வழியே அவ்வப்போது வந்து போகும். நாங்கள் குப்பை கொட்ட ஆரம்பித்தபின் தான் அந்த நுழைவாயில் உருவாகியிருந்தது.
காலையில் தூங்கிக்கொண்டிருந்த என்னை ஊரிலிருந்து வந்திருந்த எனது பெற்றோர்கள் என்னை எழுப்பி சருகுமான் வந்திருப்பதாகச் சொன்னார்கள். தூக்கம் கலைந்த எரிச்சலில் எதையோ பார்த்துவிட்டு சருகுமான் என சொல்கிறீர்கள் என முனகிக்கொண்டே அடுப்படிக்குச் சென்று, அப்பா கை நீட்டி காண்பித்த இடத்தைப் பார்த்தல், ஒரு அழகான சருகுமான்! அன்று ஏதோ ஒரு கீரையை ஆய்ந்து தண்டை அங்கே அம்மா கொட்டியிருந்தாள். அதையும் வாழைப்பழத்தோலையும் தின்று கொண்டிருந்தது. உடனே ஓடிச்சென்று காமிராவை எடுத்து வந்து ஒருக்களித்து வைக்கப்பட்ட கதவின் பின் நின்று, ஆசைதீர ’கிளிக்’ செய்துகொண்டே இருந்தேன். அது அலுத்துபோனதும் வீடியே எடுக்க ஆரம்பித்தேன். அப்பாவும் அவர் பங்கிற்கு தனது கைபேசியின் காமிரா மூலம் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாக சாப்பிட்டவுடன் வேலியின் அருகில் இருந்த நுழைவாயிலின் வழியே புதருக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து 3-4 நாட்கள் அதே இடத்திற்கு வந்து காய்கறி குப்பைகளை மேய்ந்துவிட்டுச் சென்றது அந்தச் சருகுமான்.

Indian Spotted Chevrotain (Moschiola indica) (Photo: P. Jeganathan)
சருகுமானின் படம் இயற்கைச் சூழலில் எடுக்கப்பட்டது மிகக்குறைவே. காட்டில் வைக்கப்படும் தானியங்கிக் காமிரக்களில் பதிவு செய்யப்பட்ட படங்களே அதிகம். எனது நண்பர்களுடனும், இந்தியாவின் மூத்த காட்டுயிர் விஞ்ஞானியான Dr. A J T ஜான்சிங் அவர்களிடம் இந்தப்படத்தை மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டேன். உடனே அவரது Mammals of South Asia எனும் புத்தகத்தில் சேர்ப்பதற்காக கேட்டு வாங்கிக் கொண்டார். சருகுமானை பகலில் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. என் வீட்டு சருகுமானை இதே இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
பின்னணி இசை இல்லை, ஆனால் இதைப் பார்க்கும் போதெல்லாம், என் மனதில் வாணி ஜெயராம், ”சருகுமானைப் பாருங்கள் அழகு…” என பாடுவது போலவே இருக்கிறது.
என் வீட்டுத் தோட்டத்தில் – கேளையாடு
முதலிலேயே சொல்லிவிடுகிறேன், எனக்கு சொந்தமாக வீடும் இல்லை, வீட்டைச்சுற்றி நீங்கள் நினைப்பது போல் பூந்தோட்டமும் இல்லை. நானிருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான ஒரு பகுதியில். நான் தங்கியிருந்த வாடகை வீட்டைச்சுற்றி, தேயிலைத் தோட்டம் இருக்கும். ஆங்காங்கே களைச் செடிகள் மண்டியும், உண்ணிச் செடியின் புதர்களும், சூடமரம் (யூகலிப்டஸ் மரத்தை இங்கு இப்படித்தான் சொல்வார்கள், தைல மரம் என சொல்வாரும் உண்டு), கல்யாண முருங்கை (காப்பி தோட்டத்தில் நிழலுக்காக வளர்க்கப்படும் Erithrina எனும் வகை மரம், செந்நிற இதழ்களைக் கொண்ட மலருடையது. இதே வகையில் தரைநாட்டில் தண்டில் முள்ளுள்ள கல்யான முருங்கையும் உண்டு, அது முள்ளு முருங்கை என்றும் அறியப்படும்), தேயிலைத்தோட்டத்தில் நிழலுக்கென வளர்க்கப்படும் சவுக்கு மரமும் (இது சமவெளிகளில் கடலோரங்களில் உள்ள, கிளைகளற்று ஒரே தண்டுடன், ஊசி போன்ற இலைகளுடன் இருக்கும் சவுக்குமரம் அல்ல, சில்வர் ஓக் எனப்படும் விதேசி மரம்) இருக்கும். நானிருந்தது நெருக்கமான வீடுகள் இல்லாத பகுதியில். எனது வீட்டிலிருந்து சற்று தள்ளி தேயிலைத் தோட்டத்தொழிலாளிகளின் குடியிருப்பு வரிசை இருக்கும். மேற்கில் உள்ள ஒரு நீரோடையில் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டி அங்கிருந்து நீரை ஒரு திறந்த, தரையோடமைந்த தண்ணீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி குழாய் வழியே அருகிலிருந்த குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படும். அதே திசையில் என் வீட்டிலிருந்து பார்த்தால் அருகில் உள்ள மலை தெரியும். அதன் ஒரு பக்கம் மரமேதுமில்லாது புற்கள் நிறைந்தும், மறுபக்கம் தேயிலை பயிரிடப்பட்டுமிருக்கும். வடக்கில் சுமார் 2 கீமீ தூரம் வரை தேயிலைத்தொட்டம், அதனையடுத்து மழைக்காட்டின் தொடக்கம்.
செடிகளும் ஆங்காங்கே மரங்கள் இருப்பதாலும், இருக்குமிடத்தைச் சுற்றி வனப்பகுதியாதலாலும் சில காட்டுயிர்களை அவ்வப்போது காணலாம். வீட்டுயிர்களும் உண்டு. அதாவது வீட்டின் வெகு அருகிலும், வீட்டுக்குள்ளும் அடிக்கடி வந்து செல்பவை அல்லது வீட்டுக்குள்ளேயே என்னோடு குடியிருப்பவை (பெரும்பாலும் பூச்சிகள்). வீட்டு வாசல் விசாலமானது. வீட்டைச் சுற்றி வேலியிருக்கும். நுழைவாயிலில் அடைப்பு ஏதும் கிடையாது. இதுதான் எனது அமைவிடம், வாழிடம், சுற்றுப்புறம் எல்லாம். இங்கு நான் பார்த்த உயிரினங்களைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
கேளையாடு Indian Muntjac or Barking Deer Muntiacus muntjak
கேளையாட்டை எப்போதாவது எனது வீட்டினருகில் பார்க்கலாம். ஆள் அரவமற்று இருந்தால் வீட்டிற்கு வரும் கல் பதித்த சாலையில் நடந்து வரும். வெட்டியிழுத்து பின்னங்காலை வெட்டியிழுத்து மெதுவாக நடந்து வரும் அதன் நடையே தனி அழகு. மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட பகுதியகளான தேயிலை, காப்பித்தோட்டங்களில் உள்ள திறந்த வெளிகளில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது தூரத்திலிருந்து எளிதில் காணலாம்.
கேளையாடு எனப்பெயர் பெற்றாலும் இது ஆடு இனத்தைச் சேர்ந்ததல்ல. மானினம். பொதுவாக மான் என்றால் கிளைத்த கொம்புடனிருக்கும். ஆனால் கேளையாட்டிற்கு பெரிய, கிளைத்த கொம்புகள் கிடையாது. இதன் ஆங்கிலப்பெயரான Barking deer ல் இருந்து இவற்றின் குரல் நாய் குரைப்பதைப் போன்றிருக்கும் என்பதை அறியலாம். இவை சாதாரணமாக குரலெழுப்புவதில்லை. ஏதேனும் அபாயமேற்பாட்டல் தான் குரைப்பது போன்று சப்தமெழுப்பும். வெகுதூரத்திலிருந்த்து காட்டினுள் குரலெழுப்பும் போது கூட இதைக் கேட்க முடியும். பொதுவாக தனித்தே இருக்கும், ஆனால் இனப்பெருக்கக் காலங்களில் சோடியாகத் திரியும். சில நேரங்களில் குட்டியுடன் காணலாம்.
இந்தியா முழுவதுமுள்ள மரங்களடர்ந்த வனப்பகுதிகளில் தென்படுகின்றன. கடலோரங்களிலும், குளிரான பனிப்பிரதேசங்களிலும், பாலைவனப்பகுதிகளிலும் இவை இருப்பதில்லை. இவற்றின் உடல் செந்நிறமானது. இது முழுவளர்ச்சியடைந்த கொம்பு சுமார் 2-3 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். முகத்தில் கொம்பின் அடிப்பகுதியில் ‘V’ வடிவத்தில் உள்ள எலும்பு துருத்திக்கொண்டிருக்கும். பகலில் திரியும். புற்கள், இலை தழைகள், பழங்களை உண்ணும். ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கொம்புகளை உதிர்க்கும். பகலில் சுற்றித்திரிந்தாலும் காட்டினுள் இவற்றை எளிதில் கண்டுவிட முடியாது. மிகுந்த கூச்ச்சுபாவம் உடையது. நம்மைக் கண்டவுடன் விருட்டென ஓடிவிடும்.
ஒரு முறை எனது நண்பருடன் காட்டினையடுத்து இருந்த தேயிலைத் தோட்டப்பாதையில் நடந்து சென்றபோது எதிரே தூரத்திலிருந்து வந்துகொண்டிருந்த கேளையாட்டினைக் கண்டதும் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டோம். அழகான நடைநடந்து, மெல்ல மெல்ல அருகில் வர வர நாங்களும் நெஞ்சு படபடக்க நின்றிருந்தோம். பார்த்தவுடனேயே எங்களது காமிராவை தயார் நிலையில் வைத்திருந்தோம். படமெடுத்தால் நன்கு தெளிவாகத் தெரியும் தூரத்தை அடைந்தவுடன் விடாமல் ’கிளிக்’ செய்து பதிவு செய்துகொண்டிருந்தோம். பாதையின் நடுவே இருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்களில் மிரட்சியுடன் சற்று தூரத்தில் நின்று உற்று நோக்கிய வண்ணம் இருந்தது. பிறகு மெதுவாக தேயிலைப் புதருக்கு அருகில் இருந்த வழியில் நடந்து சென்று எங்கள் பார்வையிலிருந்து மறைந்தது.
இரைவிலங்குகளைக் கண்டால் ஓடிமறையும் கேளையாடு பலவேளைகளில் குரைப்பது போன்ற அபாயக் குரலெழுப்பும். கேளையாட்டை அவ்வபோது ஆங்காங்கே கண்டும், அதன் அபாயக் குரலொலியை கேட்டுக் கொண்டும் இருந்தால், அந்த வாழிடத்தின் நிலையின் தரத்தை சுட்டிக்காட்டும். இதன் அபாயக்குரல் கேட்காமல் போனால் அதன் வாழிடத்திற்கு நிச்சயமாக ஏதோ ஒரு அபாயம் ஏற்பட்டிருக்கிறதென்றே கொள்ளலாம். அதுவும் குறிப்பாக காடுகளைத் திருத்தி அமைக்கப்பட்ட தேயிலை, காப்பி, ஏலத் தோட்டங்களுக்கு இது பொறுந்தும். இவற்றின் வாழிடத்தில் தகுந்த சூழலும், தாவரங்களும் இல்லையெனில் அவை அங்கு அற்றுபோகின்றன. இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் தெளித்தல், வனப்பகுதிகளை முற்றிலுமாக அழித்தல் போன்ற காரணங்களாலும், திருட்டுவேட்டையினாலும், இவை அருகிவிடுகின்றன. இவை சிறுத்தைகளின் முக்கிய உணவு என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இவை அற்றுப்போனால் இரைகொல்லியான சிறுத்தைக்கும் உணவில்லாமல் போகும். அந்நிலையில் அவை தெருநாய்களையும், பன்றிகளையும், கோழிகளையும் பிடிக்க மக்கள் வசிக்கும் பகுதிகளில் வர நேரிடும். அப்போது தற்செயலாக மனிதர்களையோ, குழந்தைகளையோ தாக்குவது போன்ற விபத்துகளும் நேரிடலாம். ஆகவே கேளையாட்டின் அபாயக்குரல் இப்பகுதிகளில் கேட்கவில்லையெனில் அது மனிதர்களுக்கே அபாயம் என்பதை நாம் அனைவரும் புரிந்து செயல்படல் வேண்டும்.