UYIRI

Nature writing in Tamil

என் வீட்டுத் தோட்டத்தில் – கேளையாடு

leave a comment »

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், எனக்கு சொந்தமாக வீடும் இல்லை, வீட்டைச்சுற்றி நீங்கள் நினைப்பது போல் பூந்தோட்டமும் இல்லை. நானிருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான ஒரு பகுதியில். நான் தங்கியிருந்த வாடகை வீட்டைச்சுற்றி, தேயிலைத் தோட்டம் இருக்கும். ஆங்காங்கே களைச் செடிகள் மண்டியும், உண்ணிச் செடியின் புதர்களும், சூடமரம் (யூகலிப்டஸ் மரத்தை இங்கு இப்படித்தான் சொல்வார்கள், தைல மரம் என சொல்வாரும் உண்டு), கல்யாண முருங்கை (காப்பி தோட்டத்தில் நிழலுக்காக வளர்க்கப்படும் Erithrina எனும் வகை மரம், செந்நிற இதழ்களைக் கொண்ட மலருடையது. இதே வகையில் தரைநாட்டில் தண்டில் முள்ளுள்ள கல்யான முருங்கையும் உண்டு, அது முள்ளு முருங்கை என்றும் அறியப்படும்),  தேயிலைத்தோட்டத்தில் நிழலுக்கென வளர்க்கப்படும் சவுக்கு மரமும் (இது சமவெளிகளில் கடலோரங்களில் உள்ள, கிளைகளற்று ஒரே தண்டுடன், ஊசி போன்ற இலைகளுடன் இருக்கும் சவுக்குமரம் அல்ல, சில்வர் ஓக் எனப்படும் விதேசி மரம்) இருக்கும். நானிருந்தது நெருக்கமான வீடுகள் இல்லாத பகுதியில். எனது வீட்டிலிருந்து சற்று தள்ளி தேயிலைத் தோட்டத்தொழிலாளிகளின் குடியிருப்பு வரிசை இருக்கும். மேற்கில் உள்ள ஒரு நீரோடையில் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டி அங்கிருந்து நீரை ஒரு திறந்த, தரையோடமைந்த தண்ணீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி குழாய் வழியே அருகிலிருந்த குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படும். அதே திசையில் என் வீட்டிலிருந்து பார்த்தால் அருகில் உள்ள மலை தெரியும். அதன் ஒரு பக்கம் மரமேதுமில்லாது புற்கள் நிறைந்தும், மறுபக்கம் தேயிலை பயிரிடப்பட்டுமிருக்கும். வடக்கில் சுமார் 2 கீமீ தூரம் வரை தேயிலைத்தொட்டம், அதனையடுத்து மழைக்காட்டின் தொடக்கம்.

தேயிலையும் , காடும், வீடும்

தேயிலையும் , காடும், வீடும் (Photo: Divya & Sridhar)

செடிகளும் ஆங்காங்கே மரங்கள் இருப்பதாலும், இருக்குமிடத்தைச் சுற்றி வனப்பகுதியாதலாலும் சில காட்டுயிர்களை அவ்வப்போது காணலாம். வீட்டுயிர்களும் உண்டு. அதாவது வீட்டின் வெகு அருகிலும், வீட்டுக்குள்ளும் அடிக்கடி வந்து செல்பவை அல்லது வீட்டுக்குள்ளேயே என்னோடு குடியிருப்பவை (பெரும்பாலும் பூச்சிகள்). வீட்டு வாசல் விசாலமானது. வீட்டைச் சுற்றி வேலியிருக்கும். நுழைவாயிலில் அடைப்பு ஏதும் கிடையாது. இதுதான் எனது அமைவிடம், வாழிடம், சுற்றுப்புறம் எல்லாம். இங்கு நான் பார்த்த உயிரினங்களைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

கேளையாடு Indian Muntjac or Barking Deer Muntiacus muntjak

கேளையாட்டை எப்போதாவது எனது வீட்டினருகில் பார்க்கலாம். ஆள் அரவமற்று இருந்தால் வீட்டிற்கு வரும் கல் பதித்த சாலையில் நடந்து வரும். வெட்டியிழுத்து பின்னங்காலை வெட்டியிழுத்து மெதுவாக நடந்து வரும் அதன் நடையே தனி அழகு. மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட பகுதியகளான தேயிலை, காப்பித்தோட்டங்களில் உள்ள திறந்த வெளிகளில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது தூரத்திலிருந்து எளிதில் காணலாம்.

கேளையாடு எனப்பெயர் பெற்றாலும் இது ஆடு இனத்தைச் சேர்ந்ததல்ல. மானினம். பொதுவாக மான் என்றால் கிளைத்த கொம்புடனிருக்கும். ஆனால் கேளையாட்டிற்கு பெரிய, கிளைத்த கொம்புகள் கிடையாது. இதன் ஆங்கிலப்பெயரான Barking deer ல் இருந்து இவற்றின் குரல் நாய் குரைப்பதைப் போன்றிருக்கும் என்பதை அறியலாம். இவை சாதாரணமாக குரலெழுப்புவதில்லை. ஏதேனும் அபாயமேற்பாட்டல் தான் குரைப்பது போன்று சப்தமெழுப்பும். வெகுதூரத்திலிருந்த்து காட்டினுள் குரலெழுப்பும் போது கூட இதைக் கேட்க முடியும். பொதுவாக தனித்தே இருக்கும், ஆனால் இனப்பெருக்கக் காலங்களில் சோடியாகத் திரியும். சில நேரங்களில் குட்டியுடன் காணலாம்.

இந்தியா முழுவதுமுள்ள மரங்களடர்ந்த வனப்பகுதிகளில் தென்படுகின்றன. கடலோரங்களிலும், குளிரான பனிப்பிரதேசங்களிலும், பாலைவனப்பகுதிகளிலும் இவை இருப்பதில்லை. இவற்றின் உடல் செந்நிறமானது. இது முழுவளர்ச்சியடைந்த கொம்பு சுமார் 2-3 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். முகத்தில் கொம்பின் அடிப்பகுதியில் ‘V’ வடிவத்தில் உள்ள எலும்பு துருத்திக்கொண்டிருக்கும். பகலில் திரியும். புற்கள், இலை தழைகள், பழங்களை உண்ணும். ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கொம்புகளை உதிர்க்கும். பகலில் சுற்றித்திரிந்தாலும் காட்டினுள் இவற்றை எளிதில் கண்டுவிட முடியாது. மிகுந்த கூச்ச்சுபாவம் உடையது. நம்மைக் கண்டவுடன் விருட்டென ஓடிவிடும்.

கேளையாடு Indian Muntjac or Barking Deer Muntiacus muntjak (Photo: Kalyan Varma)

கேளையாடு Indian Muntjac or Barking Deer Muntiacus muntjak (Photo: Kalyan Varma)

ஒரு முறை எனது நண்பருடன் காட்டினையடுத்து இருந்த தேயிலைத் தோட்டப்பாதையில் நடந்து சென்றபோது எதிரே தூரத்திலிருந்து வந்துகொண்டிருந்த கேளையாட்டினைக் கண்டதும் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டோம். அழகான நடைநடந்து, மெல்ல மெல்ல அருகில் வர வர நாங்களும் நெஞ்சு படபடக்க நின்றிருந்தோம். பார்த்தவுடனேயே எங்களது காமிராவை தயார் நிலையில் வைத்திருந்தோம். படமெடுத்தால் நன்கு தெளிவாகத் தெரியும் தூரத்தை அடைந்தவுடன் விடாமல் ’கிளிக்’ செய்து பதிவு செய்துகொண்டிருந்தோம். பாதையின் நடுவே இருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்களில் மிரட்சியுடன் சற்று தூரத்தில் நின்று உற்று நோக்கிய வண்ணம் இருந்தது.  பிறகு மெதுவாக தேயிலைப் புதருக்கு அருகில் இருந்த வழியில் நடந்து சென்று எங்கள் பார்வையிலிருந்து மறைந்தது.

இரைவிலங்குகளைக் கண்டால் ஓடிமறையும் கேளையாடு பலவேளைகளில் குரைப்பது போன்ற அபாயக் குரலெழுப்பும். கேளையாட்டை அவ்வபோது ஆங்காங்கே கண்டும், அதன் அபாயக் குரலொலியை கேட்டுக் கொண்டும் இருந்தால், அந்த வாழிடத்தின் நிலையின் தரத்தை சுட்டிக்காட்டும். இதன் அபாயக்குரல் கேட்காமல் போனால் அதன் வாழிடத்திற்கு நிச்சயமாக ஏதோ ஒரு அபாயம் ஏற்பட்டிருக்கிறதென்றே கொள்ளலாம். அதுவும் குறிப்பாக காடுகளைத் திருத்தி அமைக்கப்பட்ட தேயிலை, காப்பி, ஏலத் தோட்டங்களுக்கு இது பொறுந்தும். இவற்றின் வாழிடத்தில் தகுந்த சூழலும், தாவரங்களும் இல்லையெனில் அவை அங்கு அற்றுபோகின்றன. இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் தெளித்தல், வனப்பகுதிகளை முற்றிலுமாக அழித்தல் போன்ற காரணங்களாலும், திருட்டுவேட்டையினாலும், இவை அருகிவிடுகின்றன. இவை சிறுத்தைகளின் முக்கிய உணவு என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இவை அற்றுப்போனால் இரைகொல்லியான சிறுத்தைக்கும் உணவில்லாமல் போகும். அந்நிலையில் அவை தெருநாய்களையும், பன்றிகளையும், கோழிகளையும் பிடிக்க மக்கள் வசிக்கும் பகுதிகளில் வர நேரிடும். அப்போது தற்செயலாக மனிதர்களையோ, குழந்தைகளையோ தாக்குவது போன்ற விபத்துகளும் நேரிடலாம். ஆகவே கேளையாட்டின் அபாயக்குரல் இப்பகுதிகளில் கேட்கவில்லையெனில் அது மனிதர்களுக்கே அபாயம் என்பதை நாம் அனைவரும் புரிந்து செயல்படல் வேண்டும்.

Written by P Jeganathan

December 7, 2012 at 1:48 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: