UYIRI

Nature writing in Tamil

Archive for January 2013

மயில் வதை தடுக்க என்ன வழி?

leave a comment »

சமீபத்திய (21-12-2012) தினசரிகளில் திருச்சி அருகே மயில்களைக் சிலர் கள்ளத்தனமாக வேட்டையாடினர் எனும் செய்தியைப் படித்ததும் அதிர்ச்சியடைந்தேன். வனத்துறையினர் மயில்களைக் கொன்றவர்களை கைது செய்தனர் என்பதை அறிந்த போது நிம்மதி ஏற்பட்டாலும், மறுபுறம் கவலையாகவும், கோபமாகவும் இருந்தது.

கொல்லப்பட்டவை 11 மயில்கள். கொன்றவர்கள் யார்? ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர், அவரது மகன், ஒரு முன்னாள் இராணுவ வீரர், இன்னும் ஒருவர். எதற்காகக் கொன்றார்கள்? அவற்றின் கறியை சுவைப்பதற்காக. நாட்டைக் காப்பாற்றும் வேலை இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஓய்வு பெற்ற பின் முடிந்து விடுமா? மயில் நம் நாட்டின் தேசியப் பறவை என்பது இவர்களுக்கெல்லாம் தெரியாதா? இவர்கள் என்ன படிக்காதவர்களா? இவர்களுக்கெல்லாம் கடையிலிருந்து ஆட்டையோ, மாட்டையோ, மீனையோ, கோழியையோ வாங்கி வீட்டில் சமைத்துத் திங்க வக்கில்லையா? காசில்லையா? வேட்டையாடிப் பழக இவர்கள் இருப்பது எந்த காலத்தில்? இன்னும் ராஜா காலத்திலா? மயில்களைச் சுடும் போது அது சட்டத்திற்குப் புறம்பானது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா?

சிலருக்குத் தோன்றலாம், மயில்கள் தானே இதற்கு ஏன் இவ்வளவு கோபம்? அவைதான் இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறதே? அவர்கள் என்ன மிகப் பெரிய பாவத்தையா செய்து விட்டார்கள் என்று கேட்கத் தோன்றுகிறதா? நாம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்தே செய்வது மிகப் பெரிய குற்றமா? இல்லையா?

மயில்கள் கொல்லப்படுவது பற்றிய செய்திகளை வலைதளத்தில் தேடிய போது, திருச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் ஒரு விவசாயி தான் விதைத்த நெல்லை மயில்கள் சாப்பிட்டு விடுவதால், அந்த நெல்லிலேயே நஞ்சு கலந்து அவற்றை சாகடித்திருக்கிறார். மற்றுமொறு செய்தியில் மயில்களைக் கொன்று அவற்றின் கறியிலிருந்து எண்ணெய் தயாரித்தற்காக சிலர் கைதாகியுள்ளனர்.

மயில் கறியைச் சுவைப்பதற்காகவும் அவற்றின் தோகைக்காகவும் கொல்லும் திருட்டு வேட்டையாடிகள், மயில் கறியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மருத்துவ குணமிருப்பதாக நம்பி அவற்றைக் கொல்பவர்கள், பயிர்களை தின்று அழிப்பதால் பாதிக்கப்பட்டு மயில்களை நஞ்சிட்டுக் கொல்லும் விவசாயிகள் என பல விதங்களில் மயில்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளன. இதை நாம் பல வழிகளில் சமாளிக்க வேண்டும்.

ஆண் மயில்கள் அவற்றின் தோகைக்காக பெருமளவில் கொல்லப்படுகிறது.: Photo-Kalyan Varma

ஆண் மயில்கள் அவற்றின் தோகைக்காக பெருமளவில் கொல்லப்படுகின்றன. Photo: Kalyan Varma

மயில்களைக் கொன்றால் அது யாராக இருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதை தெளிவு படுத்தி தண்டனை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்தே செய்யும் திருட்டு வேட்டையாடிகளுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். மயில் கறி எண்ணெய் மூட்டு வலியையும் உடல் வலியையும் போக்கும் என்பது மூட நம்பிக்கை, இதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் ஏதும் கிடையாது என்பதை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு கொண்டு வந்த ஈமு பறவையின் உடலிலிருந்தே எண்ணெய் எடுத்து அதற்கு பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொன்னதையும் நம்பியவர்கள் நாம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, வியாபரம் செய்ய எந்த வித உத்தியையும் கையாள, பல வித காரணங்களைச் சொல்ல பலர் தயாராக இருப்பார்கள் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

இப்போது விவசாயிகளுக்கு வருவோம். மயில் நமது தேசியப் பறவை. மயில் முருகனின் வாகனம். அழகானது. நமது கலாசாரமும், இலக்கியங்களும், மதங்களும் மயிலை புனிதமாகவும், போற்றியும் அழகைக் கண்டு ரசிக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் போய், ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து வரும் விளைச்சலையே தனது வாழ்வாதராமகக் கொண்ட விவசாயிகளிடம் சொல்ல முடியுமா? முடியும், மயில்கள் வந்து அவர்களது நிலத்திலுள்ள விதை நெற்களையோ, நாற்றையோ, கடலையையோ, கோதுமையையோ அதிக அளவில் கொத்தித் திங்காமல் இருந்தால். அவர்களது பயிர்களை அதிகம் சேதம் செய்யும் எந்த ஒரு உயிரினத்தையும் அவர்கள் வெறுக்கவே செய்வார்கள். அதற்காக நஞ்சிட்டு கொல்வது சரியல்ல. அதுவே அவர்கள் பிரச்சனைக்கு முடிவும் அல்ல. அப்படிச் செய்வது இந்திய வனச்சட்டம் 1972ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம். கொய்யாத்தோப்பிலோ, மாந்தோப்பிலோ காவலாளிக்குத் தெரியாமல் நுழைந்து சில பழங்களை கல்லெறிந்து விழச் செய்து எடுத்துச் செல்லும் சிறுவர்களை நஞ்சிட்டா கொல்வோம்?

இந்தப் பிரச்சனைக்கு என்னதான் வழி? சுலபமாக, இதைச் செய்தால் பிரச்சனை நிச்சயமாகக் குறைந்துவிடும்/தீர்ந்து விடும் எனச் சொல்ல முடியாது. மனிதன் – விலங்கு/பறவை எதிர்கொள்ளலை ஓரளாவிற்கு சமாளிக்கத்தான் முடியுமே தவிர எல்லா இடத்திலும் முற்றிலுமாக தீர்ப்பதென்பது சிரமமான காரியம் என்பதை முதலில் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வீட்டுக்குள் கொசு அதிகம் வந்தால் அவற்றினை விரட்டும் ஏற்பாடுகளைச் செய்கிறோம், அந்திவேளையில் கதவு, சன்னலை அடைக்கிறோம், அதோடு கொசுவலைக்குள் சென்று நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம். வீட்டினருகில் நீர் தேங்கிக் கிடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இருந்தாலும் ஒரு கொசு கூட இல்லாமல் செய்து விட முடிகிறதா? நம்மைக் கடிக்கும் போது அதை அடித்து கொன்று விடலாம். ஆனால் அதுவே யானையாகவோ, சிறுத்தையாகவோ, புலியாகவோ, விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மயில் முதலிய உயிரினங்களையோ கொல்ல முடியாது. மனித உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது எனும் போது (ஆட்கொல்லிகள்) அவற்றை பிடிப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் மயில் நம் உயிருக்கு பங்கம் விளைவிப்பதில்லை. மாறாக தேள், சிறிய பாம்பு, பூச்சிகள் போன்றவற்றை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஆண் மயிலும் இரண்டு பெண் மயில்களும்.

ஆண் மயிலும் இரண்டு பெண் மயில்களும்.

மயிலினால் விளைநிலங்களில் சேதம் ஏற்படுவதும், அவற்றிற்கு நஞ்சு வைத்துக் கொல்வது வடமாநிலங்களிலும் நடக்கும் ஒன்று. சேதத்தைத் தடுக்க நஞ்சு வைத்துக் கொள்வது முறையாகாது. இதனால் மயில் மட்டுமன்றி அந்த இடத்தில் உள்ள இன்னும் பல்வேறு உயிரினங்களும் கொல்லப்படுகின்றன. மயில்களின் எண்ணிக்கையைக் கட்டும்படுத்தும் காட்டுப்பூனை, கீரிப்பிள்ளை, குள்ள நரி, நரி முதலிய இரைக்கொல்லி உயிரிகளும் இவற்றில் அடக்கம். சில வகை பூச்சி கொல்லி மருந்துகளை விளைநிலங்களில் தெளிப்பதாலும், மயில் போன்ற பறவைகளும் அவற்றின் இரைக்கொல்லிகளும் கொல்லப்படலாம். இவ்வகை பூச்சிகொல்லிகளின் உபயோகத்தை குறைத்தல் அல்லது முற்றிலுமாக தடை செய்தல் இன்றியமையாதது.

மயில்களால் தொந்தரவு ஏற்படும் பகுதிகளில் மயில்களின் கணக்கெடுப்பு நடத்துவதும், அந்தப் பகுதிகளிலேயே எந்தெந்த இடத்தில் எத்தனை, அந்த இடங்களிலுள்ள பயிர்களின் விவரங்கள் குறித்த விவரங்களை சேகரித்தல் அவசியம். இதனால், எந்த இடத்தில், எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்பதை சரியான அளவில் துல்லியமாக மதிப்பிட முடியும். எந்த வகையான பயிர்களை, எந்த நிலையில் (விதைகளையா, நாற்றையா), அவை, எங்ஙனம் சேதப்படுத்துகின்றன என்பதை அறியவேண்டும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பிரச்சனையின் தீவிரம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, அதை சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இப்பகுதிகளில் மயில்களின் இரைகொல்லி உயிரினங்களின் எண்ணிக்கையையும், பரவலையும் கணக்கிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் அவசியம்.

மேலை நாடுகளில் பறவைகளை விரட்ட அவைகளுக்கு எரிச்சலூட்டும் ஒலியை ஏற்படுத்தும் கருவிகளையும், இரைகொல்லிப் பறவைகளின் குரல்களையும், இரைக்கொல்லிகள் போன்ற பொம்மைகளையும், பலூன்களையும் பயன்படுத்துகின்றனர். எனினும் சில காலங்களில் இவற்றிற்கெல்லாம் பறவைகள் பழகிவிடுவதால் இந்த முயற்சிகள் தோல்வியடையலாம். பறவைகளை விரட்ட ஏற்படுத்தும் ஒலியினால் அருகிலுள்ள பொதுமக்களுக்கும் அது தொந்தரவாக அமையும்.

விளைநிலங்களுக்கு ஆண்டு தோறும் மயில்கள் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அவை அதிகம் சேதம் விளைவிக்கும் காலம் (நாற்று நடும் காலத்திலா, விதை விதைத்த உடனேயா அல்லது அறுவடை சமயத்திலா) எப்போது என்பதைத் தெரிந்து அந்த வேளையில் பாதுகாப்பை, அவற்றை விரட்டும் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தியாவில் பறவைகளை விரட்ட கால காலமாக பல வித உத்திகளை கையாள்கின்றனர். சோலைக்கொல்லை பொம்மைகளை (scarecrow) வைப்பது, பளபளக்கும் ரிப்பன்களைக் கட்டிவிடுவது, பழைய வண்ண வண்ண சேலைகளை (பெறும்பாலும் சிகப்பு நிறம்) விளைநிலங்களில் கட்டித் தொங்கவிடுவது (இவை அசைந்தாடுவதால் யாரோ இருக்கிறார்கள் என பயந்து பறவைகள் அவ்விடங்களுக்கு வருவதைத் தவிர்க்கும்), அவற்றில் சில. ஆனால் சங்ககாலத்திலிருந்து செய்து வருவது புள்ளோப்புதல். அதாவது பறவைகளை விளைநிலங்களிலிருந்து விரட்டிவிடுதல். இது சங்ககால மகளிரின் விளையாட்டாகவும் இருந்தது.

மயில்களைப் பற்றியும் அவற்றினால் விளைநிலங்களில் ஏற்படும் சேதம், அதைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முனைவர் சத்யநாராயணா. இவர் மயில்களை விரட்ட சிறந்த உத்தி, நீளமான பளபளப்பான ஜிகினா தாள்களை விளைநிலங்களைச் சுற்றி கொடியில் கட்டிவிடுதே என்கிறார். இவை ஏற்படுத்தும் சலசலக்கும் ஒலியினாலும், பளபளக்கும் தன்மையினாலும் மயில்கள் அப்பகுதிகளுக்கு வருவதை வெகுவாகத் தவிர்க்கும் என்கிறார். இதைப் போன்ற முறைகளைப் பின்பற்றி இதன் செயல்திறனை அறிவது அவசியம். மயில் பகலில் திரிவது. இரவில் வந்து பயிர்களை சேதம் செய்யும் விலங்காக இருப்பின் இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். அந்த சிரமம் மயில்களைப் பொருத்தவரையில் கிடையாது. ஆகவே, மயில்கள் வரும் இடத்தையும், காலத்தையும் கண்டறிந்த பின் விளைநில உரிமையாளர்கள் ஊரிலிருக்கும் ஒருவரை மயில்களை விரட்டுவதற்கென்றே ஒருவரை நியமிக்கலாம்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலோ, அவ்விடங்களின் எல்லையோரப் பகுதிகளிலோ காட்டுயிர்களால் விளைநிலங்களுக்கு சேதமேற்பட்டால், மனித உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை மாற வேண்டும். மயில் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் சேதம் அதிக அளவில் இருப்பின், அதை உறுதி செய்து கொண்ட பின்னர், வனத்துறையினர் இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளும் அவர்கள் பங்கிற்கு பயிர்களை காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யதல் அவசியம்.

நஞ்சு வைப்பதால் மட்டுமே மயில்கள் சாவதில்லை. அவற்றின் தோகைக்காக கொல்வதாலும் மயில்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. மயிலை பாதுகாக்க துணை போக வேண்டும் என எண்ணுபவர்கள் மயில் எண்ணெய் வாங்குவதையும் அவற்றின் தோகையால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களை வாங்குவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பிறருக்கும் இதைப் பற்றி எடுத்துச் சொல்வது அவசியம். மற்றுமொறு முக்கியமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மயில்கள் திரியும் புதர்காடுகளையும், பரந்த வெளிகளையும் நாம் ஆக்கிரமித்து விட்டோம். மயில்களின் வாழிடங்கள் அருகி வருகின்றன. எஞ்சியிருக்கும் பாதுகாக்கப்பட்ட காடுகளிலும், விளைநிலங்களில் மட்டுமே அவை தென்படுகின்றன. இங்கும் அவைகளுக்கு நஞ்சிட்டு, தோகைக்காக கொல்லுதல், இரசாயண உரங்களால் பாதிக்கப்பட்டு, சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறத்தல் முதலிய காரணங்களால் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.

மயில் நமது தேசியப் பறவை, அழகா பறவை என்பதால் மட்டுமே அல்ல அதை ஒரு உயிரினமாக மதித்துப் போற்ற வேண்டும். அப்போதுதான் அவை தோகை விரித்து ஆடுவதை நீண்ட காலம் நாம் பார்த்து ரசிக்க முடியும்.

தோகை விரித்தாடும் ஆண்மயில். Photo: Kalyan Varma

தோகை விரித்தாடும் ஆண்மயில். Photo: Kalyan Varma

6 சனவரி 2013 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது.  இக்கட்டுரைக்கான உரலி இதோ. PDF இதோ.

Written by P Jeganathan

January 7, 2013 at 11:30 pm