Archive for March 2013
தூக்கணாங்குருவிக் கூடு
தூக்கணாங்குருவியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலப் பெயர் Baya Weaver (Ploceus philippinus) இப்பறவையைப் பார்த்திருக்காவிடினும் நேரிலோ அல்லது படங்களிலோ அதன் கூட்டையாவது கண்டிருப்போம். பெட்டைச் சிட்டுக்குருவியைப் போன்ற தோற்றமும் அளவும் உடையது தூக்கணாங்ருவி. பழுப்பு நிற உடலில் அடர் பழுப்பு நிறத்தில் வரிவரியான பட்டைகள் தென்படும். ஆணும், பெட்டையும் ஒரே வித தோற்றத்தையும் நிறத்தையும் கொண்டிருப்பதால் இவற்றை இனம் பிரித்து அறிவது கடினம். ஆனால் இனப்பெருக்க காலங்களில் மட்டும் (கூடு வைக்கும் சமயங்களில்) ஆண் தூக்கணாங்குருவியின் உச்சந்தலை, மார்பு, முதுகுப்பகுதியின் இறகுகளில் பளீரென்ற மஞ்சள் நிறம் தென்படும்.

தூக்கணாங்குருவி -இனப்பெருக்க கால ஆணும், பெட்டையும் (உள்படம்):
Photos: Baya Weaver Male in breeding plumage – Kalyan Varma, Inset Female – J M Garg from Wikipedia
தூக்கணாங்குருவிகள் பெரும்பாலும் தானியங்களையே உண்ணும். அதற்கு ஏதுவாக அவை கூம்பு போன்ற அலகினைக் கொண்டிருக்கும். எனினும் கூடு வைக்கும் காலங்களில் அவை பூச்சிகளை குஞ்சிற்கு ஊட்டி தானும் உண்ணும்.
தூக்கணாங்குருவி இந்தியா முழுவதும் பரவலாகக் தென்படும் ஒரு குருவி வகை. தென்னாசிய நாடுகளிலும் இவை பரவி காணப்படுகின்றன. இவற்றை கூட்டம் கூட்டமாக வாழும் பண்புள்ளவை. சில வேளைகளில் சிட்டுக்குருவி, தினைக்குருவிகளுடனும் சேர்ந்து தந்திக்கம்பிகளில் அமர்ந்திருப்பதையும், வயல்வெளிகளில் தனியங்களை உண்ணுவதையும் காணலாம்.
தூக்கணாங்குருவியின் கூடமைக்கும் பண்பு அலாதியானது. இவற்றின் கூடுகளை பனைமரங்களில், ஈச்ச மரங்களில், செடிகள் வளர்ந்து கிடக்கும் கிணற்றுக்குள், சில வேளைகளில் தந்திக்கம்பிகளிலும் காணலாம். இவற்றின் கூடுகளை பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலும், தண்ணீர் பரப்பின் மேல் சாய்ந்த அல்லது கிளைகளைக் கொண்ட மரங்களில் காணலாம். இவற்றின் முட்டைகளையும், குஞ்சுகளையும் பிடிக்க வரும் (பாம்பு, காகம் முதலிய) இரைக்கொல்லி விலங்குகளிடமிருந்து தப்பிக்கவே இவ்வாறு கூடமைக்கின்றன.
இவை மழைக்காலத்தின் தொடக்கத்தில் கூடமைக்கத் தொடங்குகின்றன. ஆண் மட்டுமே கூடு கட்டும் பணியில் ஈடுபடும். அவை கட்டிய கூடுகளை பெட்டைக் குருவிகள் வந்து சோதனையிட்டு தமக்குப் பிடித்தமான கூட்டினைக் கட்டிய ஆண் குருவியுடன் இணை சேர்ந்து அக்கூட்டினுள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
பெட்டைக்குருவிக்கு பிடித்த வண்ணம் ஆண் குருவி கூட்டினை எவ்வாறு கட்டுகிறது தெரியுமா? ஒரு மரத்தில் பல சோடி தூக்கணாங்குருவிகள் கூடு கட்டும். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் மரத்தின் ஒரு பகுதியில் தான் கூடிகள் அதிகமாக இருப்பது தெரியும். அதாவது மரத்தின் மீது காற்று வந்து மோதும் திசையில் கூடுகள் இருக்காது, அதன் எதிர்புறத்தில் (Leeward position) தான் கூடுகள் இருக்கும். அது மட்டுமல்ல குழாயைப் போன்ற நீண்ட அடிப்பகுதியானது காற்றடிக்கும் திசைக்கு எதிர்புறத்தில் தான் அமைந்திருக்கும். அதாவது காற்று வலமிருந்து இடப்புறமாக வீசும் போது நீண்ட குழாய் போன்ற அமைப்பு, பந்து போன்ற கூட்டின் இடப்புறமாகவே அமைந்திருக்கும். அப்போதுதான் உள்ளிருக்கும் முட்டைகள் கீழே விழாமல் பாதுகாப்பாக இருக்கும்.

கூட்டினுள் இருக்கும் முட்டைகள் வேகமாக வீசும் காற்றில் கீழே விழாமல் இருக்கும் வண்ணம் காற்றடிக்கும் திசைக்கேற்ப கூட்டின் (குழாய் போலத் தொங்கும்) நுழைவாயிலை தூக்கணாங்குருவி அமைக்கும்.
வரைபடம் Quader, S. 2006a
நீண்ட புல், நெற்பயிரின் தாள், கரும்புத்தோகை, தென்னங்கீற்று, பனை ஓலை முதலியவற்றிலிருந்து தமது கூம்பு போன்ற அலகால் நீண்ட நாரினைக் கிழித்து வந்து ஆண் குருவி கூடு கட்டத் துவங்குகிறது. மரத்தின் காற்றுப் படாத திசையில் உயரமான இடத்தைப் பிடிக்க ஆண் குருவிகள் தமக்குள் போட்டி போடும். கடைசியில் வெற்றி பெறுவது அனுபவசாலிகளே. இவை சில இடங்களில் கூடு உறுதியாக இருக்க கூட்டின் உள் பகுதியில் ஈர மண்ணைக் தமது அலகால் எடுத்து வந்து பூசுகின்றன. கூட்டின் பந்து போன்ற அமைப்பு வரை கட்டிவைத்த பின் பெட்டைக் குருவிகள் அவற்றை வந்து சோதனையிடும்.
கூடு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி பெட்டைக்குருவிகள் அதிகம் கவலை கொள்வதில்லை. மரத்தில் எந்த இடத்தில் கூடு அமைந்திருக்கிறது என்பதை வைத்தே அவை அந்தக் கூட்டைக் கட்டிய ஆணை தமது துணையாக ஏற்றுக்கொள்கின்றன. கட்டிய கூட்டிலேயே உயர்ந்த இடத்தில் இருக்கும் கூட்டிற்கு அவை முன்னுரிமை அளிக்கின்றன. இதன் பின்னரே ஆண் குருவி நீண்ட குழாய் போன்ற நுழைவாயிலை கட்ட ஆரம்பிக்கின்றன. இதன் பின்னரே இணை சேர்வது, முட்டையிடுவது, அடைகாப்பது எல்லாம். குஞ்சு பொரித்தவுடன் அவற்றிற்கு உணவூட்டுவது பெட்டைக்குருவி மட்டுமே. மிக அரிதாகவே ஆண் குருவி குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. ஏனெனில், ஒரு கூட்டினை முழுதுமாக கட்டி முடித்த பின்னர் ஆண் குருவி வேறொரு கூட்டினைக் கட்டும் வேளையைத் தொடங்கி வேறொரு பெட்டைக்குருவியை கவர ஆரம்பித்து விடும்.
தகுந்த இடத்திலுள்ள மரத்தை கண்டுபிடித்து, அம்மரத்தில் சிறந்த பகுதியை மற்ற ஆண்குருவிகளுடன் போட்டி போட்டு கைப்பற்றி, மெல்லிய நாரினை தமது அலகால் கிழித்து எடுத்து வந்து, கிளையையோ, இலையின் நுனியையோ தமது கால் விரல் நகங்களால் பற்றி அதில் நாரினை இலாவகமாக சுற்றி உறுதியாக முடிச்சுப் போட்டு கூட்டினை கட்டத் துவங்குகிறது ஆண் தூக்கணாங்குருவி. அதிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாரினை ஒன்றோடு ஒன்று சுற்றி, பிண்ணிப் பிணைத்து, சிக்கலான கூட்டின் சுவர் கட்டப்படுகிறது. இதைப் படிப்பதை விட நேரில் பார்க்கும் அனுபவம் இன்னும் அலாதியானது. அப்போது உணரலாம் பறவை உலகின் விந்தைகளில் தூக்கணாங்குருவிக் கூடும் ஒன்று என்பதை.
குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள்
Ali, S. and Ripley, S. D. (1987). Compact Handbook of the Birds of India and Pakistan together with those of Bangladesh, Nepal, Bhutan and Sri Lanka. Oxford University Press, Delhi.
Davis, T. A. (1973). Mud and dung plastering in Baya nests. J. Bombay Nat. Hist. Soc. 70 (1): 57–71.
Quader, S. (2006a). Sequential settlement by nesting male and female Baya weaverbirds Ploceus philippinus: the role of monsoon winds. J. Avian Biol. 37: 396-404.
Quader, S. (2006). What makes a good nest? Benefits of nest choice to female Baya weavers (Ploceus philippinus). The Auk 123 (2): 475–486.
ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்
காட்டுப்பாதையெங்கும் சிதறி கிடங்கின்றன விதைகள். கிருஷ்ணா மெல்லக் குனிந்து அவற்றை எடுத்து தான் கொண்டுவந்த பையில் சேகரித்துக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணாவிற்குத் தெரியும் இவை சாதாரண விதைகள் அல்ல என்று. இனி வரும் காலங்களில் வளர்ந்து பெரிய மரமாகி சிங்கவால் குரங்கிற்கும், பலவிதமான பழம் உண்ணும் பறவைகளுக்கு உணவளிக்கும், பெரிய இருவாசியும் (Great Hornbill), பறக்கும் அணிலுக்கும், மலையணிலுக்கும் கூடமைக்க இடம் கொடுக்கும், யானைகூட்டத்திற்கு நிழலளிக்கும்…
சாலையோரத்தில் இருந்த ஒரு காட்டுக்கொடியில் பழம் பழுத்திருந்தது. அதன் கீழே அப்பழத்தின் விதையைக் கொண்ட எச்சம் சாய்ந்து கிடந்த மரத்தின் மீது கிருஷ்ணா பார்த்தான். அந்த எச்சத்தைப் பார்த்த உடனே அது பழுப்பு மரநாயினுடையது என்பதை அவன் கண்டுகொண்டான். அக்காட்டுக்கொடியின் (Liana) தண்டு மென்மையானது அல்ல, அது ஒரு சிறிய மரத்தின் அளவிலும், மிக உறுதியானதாகவும் இருந்தது. இவை காட்டுமரங்களின் மேல் பின்னிப்பினைந்து பழுப்பு மரநாயும், சிங்கவால் குரங்குகளும் தரையின் கீழ் இறங்காமலேயே இக்கொடிகளைப் பற்றி மரம் விட்டு மரம் செல்ல உதவிசெய்யும். அதற்கு கைமாறாக இவ்விலங்குகள் இக்காட்டுகொடியின் பழத்தை உண்டு தமது எச்சத்தின் வழியாக அவற்றின் விதையை வெவ்வேறு இடங்களுக்கு பரப்பும்.
கிருஷ்ணா அந்த காட்டுக்கொடியின் விதையையும், பலவிதமான மரவிதைகளையும் ஒரு பையின் சேகரித்து அருகில் இருந்த நாற்றுப்பண்ணைக்கு வந்தான். சேகரித்த விதைகளை ஒவ்வொன்றாக மண் நிரம்பிய பைகளில் நட்டு வைத்தான். ஏற்கனவே நட்டு வைத்த பலவிதமான மரவிதைகளில் சில முளைவிட ஆரம்பித்திருந்தன. மூன்று வருடத்திற்குமுன் நடப்பட்ட விதைகள் கிட்டத்தட்ட 2-3 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இம்மர நாற்றுகளெல்லாம் சாதாரணமானவை அல்ல. இவையனைத்தும் பல்லுயிர்த்தன்மைக்குப் பெயர்போன மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருப்பவை. நாற்றுப்பண்ணை இருக்குமிடம் வால்பாறை.
பத்து வருடங்களுக்கு முன் செயலார்வம் மிக்க, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மழைகாட்டு மீளமைப்புத்திட்டத்தை இங்கு ஆரம்பித்தது. திவ்யா முத்தப்பா, சங்கர் ராமன், ஆனந்த குமார் முதலியோர் அப்பகுதியின் பூர்வீகக் குடியினரான காடர்களில் உதவியுடன் 2000ம் ஆண்டு வால்பாறையில் இத்திட்டத்தைத் தொடங்கினர். இவர்களின் ஒரே குறிக்கோள் இப்பகுதியிலுள்ள சீரழிந்த நிலையிலுள்ள மழைக்காட்டுத்தீவுகளை அம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களை நட்டு மீளமைப்பதுதான் (Rainforest Restoration).
அது என்ன மழைக்காட்டுத்தீவு? அதற்கு முதலில் மழைக்காடுகளைப்பற்றியும் (Tropical rainforest)அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
அதிக மழையும், சூடான தட்பவெப்பமும், உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப்பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதியே மழைக்காடுகளாகும். மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. மழைக்காடு பல்லுயிரியத்தில் மிகச்சிறந்தது. இப்பூமியின் பரப்பளவில் 2%கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் 50%கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தனதே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை (ஓரிட வாழிவிகள் – Endemics) இம்மழைக்காடுகளில் காணலாம்.
பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் இவ்வொளியைச் சக்தியாக மாற்றுகின்றன. தாவரங்களில் சேமிக்கப்பட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கு உணவாக அமைகிறது. அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகிறது, உலகின் தட்பவெப்பநிலையை நிலைநிறுத்துகிறது, வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது, பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மூலாதாரமாக இருக்கிறது.

உலகின் பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் மழைக்காடுகள் பல அரிய உயிரினங்களின் வீடாகவும், நதிகளின் மூலமாகவும் விளங்குகின்றது
இப்புவிக்கும், மனிதகுலத்திற்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன, தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் அடர்ந்து இருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாம், அருனாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் தான். மழைக்காடுகளைப் பற்றி மேலும் கீழ்கண்ட உரலியில் அறியலாம்
http://hindi.mongabay.com/tamil/kids/
மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை, காப்பி போன்ற ஓரினப்பயிர்த்தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும், வெட்டுமரத்தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக வெகுவாக திருத்தப்பட்டன. இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது. இப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மேற்குத்தொடர்ச்சிமலையிலுள்ள ஆனைமலைப் பகுதியில் இருக்கும் வால்பாறை. இங்கு கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத்தொட்டங்களைக் காணலாம். காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத்தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத்தகுதியில்லாத இடங்களில் இன்னும் திருத்தி அமைக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப்போல காட்சியளிக்கும். இவையே மழைக்காட்டுத்தீவுகள் (Rainforest fragment), இங்குள்ள மக்கள் இவற்றை துண்டுச்சோலை என்றழைக்கின்றனர்.

அணை நீர்ப்பரப்பும், தேயிலைத் தோட்டமும் சூழ, மத்தியில் அமைந்திருக்கும் (இளம்பச்சை எல்லைக்கோட்டுக்குள்) மழைக்காட்டுத்தீவு. இதில் வாழும் பல உயிரினங்கள் வாழ்நாள் முழுதும் இத்துண்டுச்சோலையை விட்டு வேறெங்கும் இடம்பெயர முடியாது.
இத்துண்டுச்சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச்சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம் புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசிய பூங்கா, சின்னார் சரணாலயம் போன்ற தொடர்ந்த பரந்து விரிந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியிலும் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச்சோலைகள் உள்ளன. ஆகவே இந்தச் சிறிய வனப்பகுதிகளை பாதுகாப்பது இன்றியமையாதது. ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தால் வனச்செல்வங்கள் நாளுக்கு நாள் அருகிவரும் நிலையில் இந்த துண்டுச்சோலைகளும் அதிலிள்ள உயிரினங்களும் கூட அபாயநிலையில் உள்ளன. திருட்டு வேட்டை, வீட்டு உபயோகத்திற்காக மரங்களை வெட்டுதல், களைகள் பெருகி காட்டிலுள்ள தாவரங்களை வளரவிடாமல் தடுத்தல், ஓரினப்பயிர்களுக்காக இச்சிறிய காடுகளையும் கூடத் திருத்தி அமைத்தல், இத்துண்டுச்சோலைகளின் உள்ளேயும் ஓரமாகவும் செல்லும் சாலைகளை விரிவுபடுத்து போன்ற காரணங்களினால் இத்துண்டுச்சோலைகளும் இதில் வாழும் உயிரின்ங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகின்றன.
வால்பாறை மனித-விலங்கு எதிர்கொள்ளலுக்கு பெயர் போன இடம். யானைத்திரள் மக்கள் குடியிருப்புகளின் அருகில் வருவதும், மதிய உணவுக்கூடங்களிலும், ரேஷன் கடைகளிலும் வைத்திருக்கும் அரிசி, பருப்பு மூட்டைகளை உட்கொள்வதும், சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவது போன்ற விபத்தும் அவ்வப்போது இங்கு நிகழும். வால்பாறைப் பகுதியிலுள்ள துண்டுச்சோலைகள் இல்லையெனில் இவ்வகையான மோதல்கள் பன்மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளதால் இப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே அரசுசாரா நிறுவனமான இயற்கை காப்பு கழகத்தைச் (Nature Conservation Foundation)சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியிலுள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பித் தோட்ட உறிமையாளர்களான பாரி அக்ரோ, டாடா காப்பி, பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் லீவர் (தற்போதைய உரிமையாளர் – வுட் பிரையர் குரூப்) முதலிய நிறுவன அதிகாரிகளிடம் அவர்களுடைய இடங்களிலுள்ள துண்டுச்சோலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிதைந்துவரும் இம்மழைக்காட்டுத்தீவுகளை மீளமைக்க அனுமதி பெற்றனர்.
இந்த மழைக்காட்டு மீளமைப்புத் திட்டம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் காட்டுயிர் பாதுகாப்பும், ஆராய்ச்சியும் பொதுவாக அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட இடங்களில் தான் நடக்கும். ஆனால் வால்பாறை பகுதி தனியாருக்குச் செந்தமான மேலே குறிப்பிட்ட பல நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இந்நிலங்களிலேயே இத்துண்டுச்சோலைகள் அமைந்துள்ளன. இந்த மீளமைப்புப் பணியில் உதவ காட்டுயிரியலாளர்கள், ஆனைமலைப்பகுதியின் பூர்வீகக்குடியினரான காடர்களை வேலைக்குச் சேர்த்துக்கொண்டுள்ளனர். பல தனியார் நிறுவனங்களும், காட்டுயிரியலாளர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து பல்லுயிர் பாதுகாப்பிற்காக கூட்டு முயற்சி செய்வதாலேயே இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அனுமதியும் இடமும் கிடைத்தாகிவிட்டது. அடுத்த கட்டமாக 800-1300 மீ உயரத்திலிருக்கும் மழைக்காட்டுப்பகுதியில் தென்படும் மரங்களின் பட்டியலை மீளமைப்புக் குழுவினர் தயார் செய்து, சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் அம்மரங்களின் விதைகளைச் சேகரித்து நாற்றுப்பண்ணையில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். விதைகள் முளைவிடுவதும் வேறு இடத்தில் கொண்டு சென்று நடுவதற்கான முதிர்ச்சியை அடைவது மரத்திற்கு மரம் மாறுபடும். சில மரவகைகள் முளைவிடுவதற்கே பல மாதங்கள் ஆகும். மழைக்காட்டு மர விதைகளை தினமும் தண்ணிர் ஊற்றி, இயற்கை உரமிட்டு பூச்சிகளிடமிருந்தும், கொறிக்கும் எலிகளிடமிருந்தும் காப்பாற்றி பிள்ளைகள் போல வளர்க்கப்படுகிறது. பாதுகாப்பாகவும், மிகுந்த கவனத்துடனும் வளர்க்கப்பட்ட இந்நாற்றுகள் 3-4 ஆண்டுகள் கழித்து தென்மேற்குப்பருவ மழைக்காலங்களில்தான் பண்ணையை விட்டு துண்டுச்சோலைகளில் கொண்டு சென்று நடப்படுகின்றன. கொட்டும் மழையில், மலைச்சரிவுகளில், அட்டைகள் இரத்தம் உறிய குழி தோண்டி, அக்குழியில் சிறிது இயற்கை உரமிட்டு, உறைகளில் அடைபட்டிருந்த வேர்களைக்கொண்ட மழைக்காட்டு மர நாற்று அது இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்கிறார்கள் இம்மீளமைப்புக் குழுவினர்.
நம் ஊர்களில் நடக்கும் மரம் நடும் விழாக்களில் சம்பிரதாயத்திற்கு நினைத்த இடத்தில் ஒரு மரத்தை நட்டுவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு அதன்பின் அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டோம். ஆனால் இது அப்படியல்ல. எந்த இடத்தில் எவ்வகையான மரங்களை நடுவது என்பது முன்பே தீர்மானிக்கப்படுகிறது (மலையின் உயரத்திற்கு ஏற்றாற்போல் அவ்வுயரத்திலிருக்கும் தாவர வகையும் மாறுபடும்). நடுவதற்கு முன் அவ்விடங்களில் களைச்செடிகள் அகற்றப்படுகின்றன. துண்டுச்சோலை அதிகமாக சிதைக்கப்பட்டிருந்தால் அதற்குத் தகுந்தவாறு அதன் ஓரங்களில் வெட்டவெளியில் வளரும் மரவகைகளும், மூடிய விதானத்தினுள்ளே நிழலின் கீழ் வளரும் மரங்களும் நடப்படுகிறது. நட்டுவைக்கப்படும் ஒவ்வொரு நாற்றிலும் அடையாளத்திற்காக பளிச்சென்று தெரியும் நிறத்தில் சிறிய பிளாஸ்டிக் பட்டைகள் கட்டிவைக்கப்படுகின்றன. இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் நடப்பட்ட மொத்த நாற்றுகளில் எத்தனை உயிர்பிழைக்கின்றன எப்பது கணக்கிடப்படுகிறது. நாற்றுகளை நட்டபின் அவ்வப்போது இடத்திற்குத் தகுந்தாற் போல் அப்பகுதியில் வளரும் களைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இது நட்டுவைக்கப்பட்ட மழைக்காட்டு நாற்று வளர ஏதுசெய்கிறது. ஓரளவிற்கு இந்நாற்றுகள் வளர்ந்தபின் அவற்றின் நிழலுக்கடியில் களைகள் வளராது.
கடந்த 12 ஆண்டுகளாக வால்பாறைப் பகுதியில் மொத்தம் சுமார் 50 ஹெக்டேர் பரப்பில் கிட்டத்தட்ட 50,000 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இவையணைத்தும் ஒரே வகையானவை அல்ல. மழைக்காட்டில் வளரும் மரங்கள், பெருங்கொடிகள், பிரம்பு என சுமார் 150 வகையான தாவரங்களை சிதைந்துபோன மழைக்காட்டுத் துண்டுச்சோலையிலும், காப்பித்தோட்டங்களுக்கு நிழல் மரமாகவும் நடப்பட்டுள்ளன. வனத்திலுள்ள ஒரு மரத்தை வெட்டிச்சாய்க்க எத்தனை மணிநேரங்கள் ஆகும்? 50 ஹெக்டேர் பரப்புள்ள வனத்தை அழிக்க எவ்வளவு நாளாகும்? ஆனால் ஒரு விதையை முளைக்க வைத்து வளர்த்து ஆளாக்கி அதனிடத்தில் கொண்டு சேர்த்து, கவனமாக பராமரித்து பாதுகாத்த பின் அம்மரம் அடைந்த உயரம் எவ்வளவு தெரியுமா? சுமார் 10 லிருந்து 15 மீட்டர். இதற்கு 12 ஆண்டுகள் பிடிக்கிறது!

மீளமைக்கப்பட்ட ஒரு மழைக்காட்டுப் பகுதி.
மழைக்காட்டு நாற்றுகளை நடும் முன்னும் (இடது) மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் (வலது).
ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர் விட்டு, நாற்றாகி, மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பல விதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும் ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச்சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணாவும், இயற்கை காப்பு நிறுவனத்தின் மழைக்காட்டு மீளமைப்புத் திட்டக் குழுவினரும், இந்த மழைக்காட்டு மரங்களின் நெடுந்தூரப் பயணத்தை தொடங்கி மட்டுமே வைத்துக்கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு பயணத்திற்கும் முக்கியமானது நாம் எடுத்து வைக்கும் முதல் படிதானே. சேர வேண்டிய இடத்தை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே பயணத்தைத் தொடங்குகிறோம். அதைப்போலவே இவர்களும், தாம் நட்டுவைக்கும் இம்மரங்கள் தழைத்து, பிற்காலத்தில் வானை முட்டும் அளவிற்கு நெடுந்துயர்ந்து, இங்கு திரியும் பெரிய இருவாசிகளுக்கும், பழுப்பு மரநாய்களுக்கும் பழங்களை அளித்து இவை இம்மரங்களின் விதைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரப்பி காட்டினைச் செழிக்கச்செய்யும் என நம்புகிறார்கள். நம்பிக்கைத்தானே வாழ்க்கையே!
11th March 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. அக்கட்டுரைக்கான உரலி இதோ:
http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article888141.ece
மேற்குத்தொடர்ச்சி மலையின் மீளமைக்கும் வழிமுறைகளை விளக்கும் ஒரு சிறு நூலை இங்கு காணலாம் (PDF)
மேலும் விவரங்களுக்கு, இயற்கை காப்புக் கழகத்தின் (NCF) மழைகாட்டு மீளமைப்புத் திட்டதினை விளக்கும் இணையத்தளத்தினைக் (http://www.ncf-india.org/restoration/) காணவும்.
மழைக்காட்டு மீளமைப்புத் திட்டத்தினைப் பற்றிய குறும்படத்தை இங்கே காணலாம்.
நம்மைச் சுற்றி காட்டுயிர் – புத்தக விமர்சனம்
தமிழில் சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த எழுத்துக்களை பல காலமாக படைத்து வரும் அனுபவம் மிக்க இருவரின் கூட்டுமுயற்சியில் விளைந்தது இப்புத்தகம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்கை சார்ந்த கட்டுரைகளை எழுதி வரும் தியடோர் பாஸ்கரன், The Hindu தினசரியின் குழைந்தைகளுக்கான இணைப்பான Young World ல் எழுதிய 11 சிறு கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைக் கொண்டதே இந்நூல். தமிழில் மொழிபெயர்த்தது ஆதி. வள்ளியப்பன். இவர் தமிழில் சூழியல் சார்ந்த பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதிவருபவர். காட்டுயிர்களைப் பற்றி மட்டுமல்லாமல் செல்லப்பிராணிகளைப் பற்றியும் சில கட்டுரைகளை இந்நூலில் காணலாம். பல நூல்களை எழுதியிருந்தாலும் தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியவைகளை ஏன் அவரே தமிழாக்கம் செய்து இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆதி வள்ளியப்பன் குழந்தைகளுக்காகவே தமிழில் பல கட்டுரைகளை எழுதிவருபவர். சிறுவர்களுக்கான ‘துளிர்’ அறிவியல் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இந்நூல் பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான Books for Children ன் வெளியீடு. இதனாலேயே ஆதி வள்ளியப்பனின் பங்கை உணரலாம்.
குழந்தைகளுக்காக எழுதப்படும் அறிவியல், காட்டுயிர் சார்ந்த புத்தகங்களில் (உதாரணமாக ஆதிவள்ளியப்பனின் “மனிதர்க்கு தோழனடி”, ரேவதியின் “குருவி நடக்குமா” முதலிய அறிவியல் கதைகள்) யாவிலும் சொல்லப்படும் கருத்துகள் சிறுகதை அல்லது உரைநடை வடிவில் இருக்கும். இவை 10-15 வயதுள்ள குழந்தைகளுக்கானது எனலாம். ஆனால் இப்புத்தகத்தில் கட்டுரைகள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே பதினைந்து வயது குழந்தைகள் முதல், இளைஞர்கள், பெரியோர்கள் அனைவருக்குமானது இப்புத்தகம்.
அழகிய, பொருத்தமான, வண்ண வண்ண புகைப்படங்களும், ஓவியங்களும் எழுதப்பட்ட கருத்துகளை, விளக்கங்களை வாசகருக்கும் எளிதில் தெளிவுபடுத்தும். அதிலும் குழந்தைகள் புத்தகங்களில் வண்ண ஓவியங்களும், புகைப்படங்களும் அதிகம் இருக்கவேண்டும் என்பது என் அவா. ஆனால் இதில், ஒரு சில புகைப்படங்களை மட்டுமே உள்ளது. அட்டைப்படத்தில் அழகான ஆண் வெளிமானின் (ஆங்கிலத்தில் Blackbuck ஆனால் ஓரிடத்தில் Black buck என இரு வார்த்தைகளாக்கப்பட்டிருந்தது) புகைப்படமும், உள்ளே இரு இடங்களில் பட்டைத்தலை வாத்தின் (புகைப்படக்காரர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை) கருப்பு வெள்ளை படமும் தான் இருக்கிறது. பல கோட்டோவியங்களில் சில அழாகாவே உள்ளன. இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து வரைந்திருக்கலாம். கலர் படங்கள் கொண்ட புத்தகங்களை அச்சடிக்க நிறைய செலவாகும். புத்தகத்தின் விலையும் கூடும். எனினும் இந்த நிலை மாற வேண்டும்.
இயற்கையும் காட்டுயிர்களும் கட்டுரையில் பழந்திண்ணி வெளவால் பறக்கும் போது உண்டாக்கும் ஒலியின் எதிரொலி மூலம் வழி கண்டறியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழந்திண்ணி வெளவால்கள் அப்படிச் செய்வதில்லை. அதற்குக் கண்கள் பெரியவை. பூச்சியுண்ணும் சிறிய வெளவால்கள் (microchiroptera) தான் எதிரொலியை ஏற்படுத்திப் பறக்கவும், அவற்றின் இரையைப் பிடிக்கவும் செய்கின்றன. வானம்பாடியை தரையில் வாழும் பறவை என குறிப்பிடப்பட்டுள்ளது (தரையில் வாழும் வானம்பாடி எனும் கட்டுரை), எனினும் வெட்ட வெளியில், அடர்த்தியில்லாத புதர்க்காடுகளில் வாழும் என்பதே பெருத்தமாக இருக்கும். தரையில் கூடமைத்தாலும் இவை கவுதாரி, காட்டுக்கோழி, மயில் போன்ற தரைவாழ் பறவைகள் (Terrestrial) அல்ல. வெளிமான்களின் வாழிடம் எனும் தலைப்பிலமைந்த கட்டுரையின் இறுதியில் இரைக்கொல்லிப் பறவைகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. விளக்கத்தை வைத்துப் பார்க்கும் பார்த்தால் அது பூனைப்பருந்தாக (Harrier) இருக்கவேண்டும், வல்லூறு (Falcon) அல்ல. தாமரைக்கோழி கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பூனைப்பருந்து Marsh Harrier என ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. பறவைகளுக்கு ஒரு விடுதி கட்டுரையில் சொல்லப்படும் கொம்பன் ஆந்தை/கோட்டான் Barn Owl எனும் பறவை. இதை கூகை என்றும் கூறுவர். Horned owl ஐ தான் கொம்பன் ஆந்தை என்பர். பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கிலப் பெயர்களையும் கொடுத்திருக்கலாம். தமிழ்பெயர்கள் மாறி வருவதை கவனித்து திருத்தி அமைத்திருக்கலாம். இது ஆசிரியரின்/மொழிபெயர்ப்பாளரின் தவறில்லை. தமிழ்நாட்டில் ஒரு பறவைக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொர் பெயரிட்டு அழைப்பார்கள். க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் எனும் புத்தகத்தில் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து வழங்கியுள்ளார். இப்பெயர்களையெல்லாம் ஒருங்கே நெறிப்படுத்த வேண்டிய தருணம் இது.
ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதன் ஆங்கில மூலத்தின் தலைப்பையும், வெளிவந்த நாளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம். இதில் உள்ளது மொத்த பக்கங்களே நாற்பத்தி எட்டுத்தான். விலை ரூபாய் 25 தான். நாம் செய்யும் பல தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக்கொண்டால் நிச்சயமாக ஒரு புத்தகமாவது வாங்க முடியும். இது போன்ற புத்தகங்களை அல்லது இதிலுள்ள கட்டுரைகளை பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்க்கலாம். அல்லது துணைப் பாடநூலாக (Non-detail) வைக்கலாம். எல்லா பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த கல்வி என்பதே இல்லாத இச்சூழலில் இது போன்ற புத்தகங்கள் அதன் குறையைப் போக்கும். இது போன்ற புத்தகங்களே பொதுமக்கள் மத்தியில் காட்டுயிர் பேணல் விழிப்புணர்வு, இயற்கையின் பால் நாட்டம், அக்கறை ஏற்படுத்தக்கூடியவை. இப்புத்தகத்தின் நேக்கமும் அதுதான்.
********
நம்மைச் சுற்றி காட்டுயிர் – பூவுலகு. ஜனவரி-பிப்ரவரி (2013)ல் வெளியான நூல் மதிப்புரை. இதன் PDF இதோ.
********
இந்நூலின் சில பக்கங்களை இங்கே காணலாம்.
வெளியீடு: Books for Children, பாரதி புத்தகாலாயத்தின் ஓர் அங்கம், சென்னை – 18. விலை Rs. 25/-
********