Archive for April 2013
பாம்புக்கழுகுடன் சண்டை
கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து கிளம்பி ஆபீஸ் போகும் வழியில் காட்டு பாம்புக்கழுகு (Crested Serpent-Eagle Spilornis cheela) வட்டமிடுவதை பார்த்து வருகிறேன். நேற்று பார்த்தது ஒரு சிறப்பான காட்சி. அவ்வளவு அருகில் பாம்புக் கழுகை பார்த்ததில்லை. இறக்கையை விரித்து எனக்கு எதிரே பறந்து வந்தது. நான் உயரத்தில் இருந்ததால் அதன் இறக்கையின் மேல் பகுதி மிக அழகாகத் தெரிந்தது. வாலின் மேல் வெள்ளை பட்டையும், முகத்தில் இருந்த மஞ்சள் நிறமும் பளிச்சென்று தெரிந்தது. வட்டமிட்டு வட்டமிட்டு கிக்கீஇ..கீஇ…கி என குரலெழுப்பிக்கொண்டே மேலே மெல்ல மெல்ல பறந்த போது அதன் இறக்கையின் கீழ்பகுதியைப் பார்க்க முடிந்தது. இறக்கையின் கீழ்விளிம்பில் கரும்பு-வெள்ளை பட்டை தெளிவாகத் தெரிந்தது. பறவை நோக்குவோருக்கு கழுகு என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அவற்றின் கம்பீரமே காரணம். கூர்மையான கால் நகங்களும், கூரிய முனை கொண்ட வளந்த அலகும், அனாயாசமாக காற்றில் இறக்கைகளை அடிக்காமலேயே தவழ்ந்து தலையை அங்கும் இங்கும் திருப்பி கீழே நோட்டமிடுவதும், உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் திறனுமே அவற்றை வசீகரிக்கச் செய்கின்றது. எனினும் கழுகினங்களை சரியாக அடையாளம் காண்பதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. சில கழுகினங்கள் உயரப் பறந்து கொண்டிருந்தாலும் அவற்றின் குரலை வைத்து சரியாக அடையாளம் காணமுடியும்.
பெயருக்கு ஏற்றாற்போல் காட்டு பாம்புக்கழுகின் உணவு பாம்புகள் தான். அதுவும் குறிப்பாக கொம்பேரிமூக்கன் (Bronz-backed tree snake), பச்சைப் பாம்பு (Green Vine snake), சாரைப்பாம்பு (Rat Snake), தண்ணீர்ப் பாம்புகள் (water snakes). இவை யாவும் நஞ்சற்ற பாம்புகள் என்பதை கவனிக்க. நஞ்சுள்ள பாம்புகளை வெகு அரிதாகவே பிடிக்கின்றன. அப்படிப் பிடிக்கும் போது கடிபட்டு இறந்து போனதாகவும் குறிப்புகள் உள்ளன.
முன்பு ஒரு முறை காலில் பாம்பை வைத்துக்கொண்டு பறந்து செல்வதை பார்த்திருக்கிறேன். இவை தமது கூரிய அலகால் பாம்பின் தலையை பிடித்துக் கவ்விக் கொல்கின்றன. சில நேரங்களில் தரையில் ஓடும் பாம்பினைப் பிடிக்க இவையும் தரையில் இறங்கி இரண்டு இறக்கைகளையும் அகல விரித்து நடந்து சென்று பிடிப்பதாகவும் குறிப்புகள் உள்ளன. இது கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருக்கும். இதை நேரில் கண்டவர்கள் பாக்கியசாலிகள். இணையத்தில் தேடிய போது youtube video ஒன்றில் இக்கழுகு தரையில் நின்று பாம்பு பிடிக்கும் காட்சியை பதிவு செய்திருந்தார்கள். ஆனல் இந்த குறும்படத்தில் அவை இறக்கையை விரித்துக்கொண்டு பாம்பை பிடிக்கவில்லை.
இவை எலி, சிறு பறவைகள், ஓணான், மீன், தவளை முதலியவற்றையும் சாப்பிடும். இந்தியாவின் பல பாகங்களில் இவை பரவி உள்ளன. எனினும் அடர்ந்த, நீர்நிலைகள் நிறைந்த காட்டுப்பகுதிகளில் தென்படும்.
இன்று காலையும் நேற்று பார்த்த இடத்திலேயே பாம்புக் கழுகை மறுபடியும் பார்த்தேன். இந்த முறை சற்று உயரப் பறந்து கொண்டிருந்தது. குரலெழுப்பிக்கொண்டே. எனினும் பறப்பதில் ஒரு ஒழுங்கின்மை தெரிந்தது. அக்கழுகைச் சுற்றி சிறிய பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பைக்கை நிறுத்தி விட்டு கூர்ந்து கவனித்த போது அச்சிறிய பறவைகள் சாம்பல் தகைவிலான் அல்லது காட்டுத்தகைவிலான் (Ashy woodswallow) எனத் தெரிந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பைனாகுலர் வைத்து பார்த்தேன். இது ஒரு சிறிய மைனா அளவுள்ள பறவை. காட்டுப்பகுதிகளில் சிறு கூட்டமாக உயர பறந்து கொண்டிருப்பதை அவ்வப்போது காணலாம். சில நேரங்களில் கூட்டமாக ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமர்ந்திருக்கும்.
இந்தச் சிறிய பறவை அதன் உருவில் பண்மடங்குள்ள கழுகினை சூழ்ந்து அதை விரட்டியடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. முதலில் மூன்று பறவைகள் அக்கழுகினை துரத்தின. பிறகு அதில் ஒரு பறவை குறைந்தது 5 நிமிடங்கள் வெகுதுரத்திற்கு அக்கழுகினை துரத்திக் கொண்டே இருந்தது. கழுகினைச் சுற்றிப் பறந்து அவ்வப்போது அதனருகில் சென்று கொத்துவது போலத் தெரிந்தது. சிறிய பறவைகளையும், பாம்புகளையும் பிடித்துத் தின்னும் கழுகையே அந்த சிறிய பறவையின் தைரியத்தை பார்க்க வியப்பாக இருந்தது. என் தலைக்கு மேலை நடந்த இந்த சண்டைக்காட்சியை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அலுவலகத்திற்கு நேரமான காரணத்தால், மனமில்லாமல் பைக்கை கிளப்பிக் கொண்டு புறப்பட்டேன்.
இணையத்தில் தேடிய போது செவ்வயிற்றுக் கழுகையும் (Rufous-bellied Hawk Eagle) கூட இந்த காட்டுத்தகைவிலான்கள் கூடிச் சென்று தாக்கும் நிழற்படம் காணக்கிடைத்தது (அப்படத்தை இங்கே காண்க). ஆங்கிலத்தில் இப்பண்பினை mobbing behaviour என்பார்கள். கரும்பருந்தினை (Black kite) காகங்கள் துரத்துவதையும், காகங்களை கரிச்சான் குருவிகள் (Black Drongo) துரத்துவதையும் பார்த்திருக்கிறேன். எனினும் இப்பண்பினை இவ்விரண்டு பறவைகளிடத்தும் பார்ப்பது இதுதான் முதல் முறை.
கொண்டலாத்தியின் கூட்டைக் கண்டேன்
இன்று பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையோரத்திலிருந்து ஒரு கொண்டலாத்தி பறந்து செல்வதைப் பார்த்தேன். அது அமர்ந்திருந்த இடத்தை நெருங்கியவுடன் அந்த இடத்தை நோட்டமிட்டபோது சில்வர் ஓக் மரத்துளையில் இருந்து தலை நீட்டி எட்டிப்பார்த்தது ஒரு கொண்டலாத்தி. உடனே பைக்கை நிறுத்தி அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.
கொண்டலாத்தியின் கூடு துர்நாற்றமடிக்கும், அதில் குப்பை கூளங்களை சேமித்து வைத்திருக்கும் என படித்தது நினைவுக்கு வந்தது. அருகில் சென்று பார்க்கவில்லை. கூடு வைக்கும் பறவைகளை தொந்தரவு செய்யக்கூடாதல்லவா? எனினும் எடுத்த புகைப்படத்தை கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்த போது கூட்டிலிருந்து மெல்லிய கயிறு போல ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. இது இப்பறவை கொண்டு வந்து சேர்த்ததா எனத் தெரியவில்லை. கொண்டலாத்தியை இங்கே இதற்கு முன் பார்த்திருந்தாலும் இவற்றின் கூட்டினைக் காண்பது இதுவே முதல் முறை.
காக்கை, சிட்டுக்குருவி போல் அடிக்கடி தென்படும் பறவையல்ல கொண்டலாத்தி. எப்போதாவது தரையில் நடந்து தனது நீண்ட அலகால் கொத்திக் கொத்தி பூச்சிகளையும், புழுக்களையும் எடுத்து தின்பதைக் காணலாம். பெரும்பாலும் தனியாகவே தென்படும். வெளிறிய பழுப்புப் தலையும் வயிறும், இறக்கையும் வாலும் கருப்பு வெள்ளை பட்டைகளைக் கொண்டும் இருக்கும். இவற்றின் நீண்ட அலகைப் பார்த்து சிலர் இவற்றை மரங்கொத்தி என்று தவறாகக் நினைத்துக்கொள்வார்கள்.
கொண்டலாத்தியின் அழகு அதன் விசிறி போன்ற கொண்டைதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்பதால் அவை கொண்டைபோன்ற தோற்றத்தை அளிக்கும். எனினும் எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. அப்படி கொண்டையோடு காணும்போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்தான் எனக்கு நினைவுக்கு வரும். அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும் பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும் (பறந்து செல்லும் காட்சியை இங்கே காண்க).
கொண்டலாத்தியின் குரல் எனக்குப் பரிச்சயமானதுதான். இவை உரக்கக் குரலெழுப்புவதில்லை. எனினும் தூரத்திலிருந்து குரலெழுப்பினாலும் அடையாளம் காணுமளவிற்கு தெளிவாகக் கேட்கும். இதன் குரலை வைத்தே இதற்குப் பெயரிட்டார்கள். இதன் ஆங்கிலப்பெயர் Hoopoe (Upupa epops). இப்பறவை குரலெழுப்புவது ஊப்..ஊப்..ஊப்.. என்றிருக்கும். இதனாலேயே Hoopoe எனப் பெயர் பெற்றது. குக்..குக்..குக்.. எனக் குரலெழுப்புவதால் குக்குருவான் (Barbet)எனப் பெயர் பெற்றதைப் போல. இவ்வாறு உச்சரிப்பதை வைத்தே பெயரிடுவதை ஆங்கிலத்தில் Onomatopoetic என்பர்.
கொண்டலாத்தி ஆதி காலத்திலிருந்தே மனிதனை தன் அழகால் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகப் புராணங்கள் பலவற்றிலும், திருக்குர்ஆனிலும் கூட இப்பறவையினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. கொண்டலாத்தி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. நம் பஞ்சாப் மாநிலப் பறவையும் கூட இதுதான். பறவைகளைப் பற்றிய அருமையான தமிழ் புதுக்கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? அந்த கவிதை நூலின் பெயரும் “கொண்டலாத்தி”!