மனம் கவரும் மருதம்
இளவேனில் காலத்தில் (முன்கோடை அதாவது ஏப்ரல் – ஜூன் மாதங்களில்) பூக்கும் மரங்களில் ஒன்று மருதமரம். பொள்ளாச்சி போகும் வழியில் அட்டகட்டிக்கு முன் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த மருத மரங்களில் இளஞ்சிவப்பு (Pink or Mauve) நிற பூக்கள் பூத்துக்குலுங்கின. பச்சையான இலைகளுக்கு மத்தியில் செம்பூக்கள் பூத்திருந்தது மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது. சாலையெங்கும் பூவிதழ்கள் விழுந்து கிடந்தன. அதைத் தாண்டிப் போகவே மனமில்லை.
இம்மரம் ஆங்கிலத்தில் Queen’s Pride of India, Queen’s Flower Tree எனவும், ஹிந்தியில் Jarul என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Lagerstroemia reginae (L. flos-reginae, L.speciosa). Magnus von Lagerström எனும் சுவீடன் நாட்டு வியாபாரி தனது கிழக்கிந்தியப் பயணத்தின் போது தாவரங்களைச் சேகரித்து வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படும் கார்ல் லின்னேயஸுக்கு (Carl Linnaeus) கொண்டு சேர்த்தார். ஆகையால் இவ்வகையான மரங்களின் பேரினத்தை (Genera) Lagerstroemia என லின்னேயஸ் பெயரிட்டார். இம்மரத்தின் சிறப்பினப் பெயர் reginae அதாவது மாட்சிமை மிக்க (Imperial) என்று பெயர் (Sahni 2000). மருத மரம் என அறியப்பட்டாலும், இது பூமருது என தற்போது அறியப்படுகிறது (Brandis 1990, கிருஷ்ணமூர்த்தி 2007). மகாராஷ்டிராவின் மாநில மலர் மருதம் ஆகும்.
மருத மரம் சங்ககாலத் தாவரங்களில் ஒன்று. பெயரை வைத்தே இதை அறிய முடியும். நான்கு திணைகளில் ஒன்றான மருதம் வயலும் வயலைச் சார்ந்த இடத்தைக் குறிக்கும். இப்பகுதியுடன் தொடர்புடைய மரமான மருத மரத்தின் பூவினை வைத்தே இந்தத் திணைக்கும் பெயரிட்டனர் நம் முன்னோர்கள். எனினும் இப்போது இம்மரத்தினை சமவெளிகளில் பார்ப்பது அரிது. காட்டினுள் குறிப்பாக ஆற்றோரக்காடுகளில் பார்க்க முடியும். நான் சாலையோரத்தில் பார்த்த இம்மரங்கள் அனைத்தும் இப்பகுதியில் அழகிற்காக கொண்டு வந்து வைக்கப்பட்டவை. சமவெளிகளில் ஆற்றோரக்காடுகளில் காணப்படும் மற்றுமொரு மரம் நீர் மருது இதன் வேறு பெயர்கள் – குலமருது, வெள்ளை மருது (நீர்மத்தி என ஹோக்கனெக்கல் பகுதியில் வாழ்வோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்). இதன் அறிவியல் பெயர் Terminalia arjuna. சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் மருத மரம் இதுவல்ல (Terminalia arjuna) என்றும் செம்மருதம் என குறிப்பிடப்பட்டிருப்பதால் Lagerstroemia reginae தான் என கு. வி. கிருஷ்ணமூர்த்தி (2007) கூறுகிறார். இடை மருதூர் (திருவிடைமருதூர்), பருப்படம், திருஇடையாறு (திருஎடையார்) ஆகிய ஊர்களில் உள்ள சிவத்தலங்களில் இம்மரம் தல மரமாக விளங்குகிறது.
இணையத்தில் மருத மரத்தைப் பற்றி தேடிய போது விக்கிபீடியாவில் கிடைத்த தகவல்: திருச்சி அருகே உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் தலமரமாக விளங்குவது மருத மரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது நீர்மருதா அல்லது பூமருதா எனத் தெரியவில்லை. அடுத்த முறை திருச்சிக்கு போகும் போது அங்கு போய் அதைப் பார்த்து வரவேண்டும்.
குறிப்பெடுக்க உதவிய ஆதாரங்கள்:
- Brandis, D. (1990). Indian Trees. Bishen Singh Mahendra Pal Singh, Dehra dun, India.
- கிருஷ்ணமூர்த்தி, கு. வி. (2007) தமிழரும் தாவரமும். பாரதிதாசன் பல்கலைக்கழம். திருச்சிராப்பள்ளி. (K.V. Krishnamurthy.2007. The Tamils and Plants (in Tamil), Bharathidasan University, Tiruchirappalli.)
- Sahni, K.C. (2000). The Book of Indian Trees. Bombay Natural History Society and Oxford University Press, India.
சொல்வனம் இணைய இதழில் (இதழ் 88) 29-6-2013 அன்று வெளியான எனது கட்டுரையின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=26881
தகவல்கள் அடங்கிய சிறப்பான கட்டுரை
malaramuthan
May 4, 2019 at 1:11 pm
நன்றி
P Jeganathan
July 19, 2019 at 11:12 pm
மனம் கவரும் மருதம் கட்டுரையில், என் ஆய்வுக்குத் தேவையான அரிய குறிப்புகள் உள்ளன.மருதத் திணை விவசாயம் என்பது இயற்கையாகத் தண்ணீர் தேங்குகிற சேற்று நிலத்தில் எருமைகளை விட்டு உழப்பிச் செய்கிற பழங்குடி விவசாயமே தவிர ஆறுகளிலிருந்து வாய்க்கால் வெட்டி, நீர்ப் பாசனம் செய்து உழவு மாடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கலப்பை விவசாயம் அன்று. என்பதற்கான ஆதாரம் தங்களின் கட்டுரையில் உள்ளது. நன்றி !
-எஸ்.இராமச்சந்திரன்,கல்வெட்டாய்வாளர், த.நா தொல்லியல் துறை (ஓய்வு)
maanilavan@gmail.com
S.Ramachandran
April 23, 2022 at 6:06 pm
கட்டுரை உதவியாக இருத்ததில் மகிழ்ச்சி. தாங்கள் அளித்த தகவல் வியப்பளிக்கிறது. நன்றி
P Jeganathan
May 7, 2022 at 2:04 pm