UYIRI

Nature writing in Tamil

மணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…

with 13 comments

அண்மையில் மரங்கள்: நினைவிலும் புனைவிலும் எனும் நூலினை படித்தேன். தாம் கண்டு வியந்த, தம் வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி பல எழுத்தாளார்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல். தொகுத்தவர் மதுமிதா. இந்நூலில் அவர் “மனோரஞ்சிதம்” எனும் கட்டுரையையும் எழுதியுள்ளார். இந்த நூலைப் படிக்கும் போது, மனிதனின் வாழ்வில் மரங்கள் பல வகையில், பல நிலைகளில் நிறைந்திருக்கிறது என்பது புலனாகும்.

இந்நூலில் இருந்த பல கட்டுரைகள் பிடித்திருந்தாலும், என்னைக் ஈர்த்தது “மனோரஞ்சிதம்”. இதைப்படித்தவுடன் இத்தாவரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மதுமிதாவின் விளக்கத்தை படித்த போது இது மரமல்ல, ஒரு வகை புதர் அல்லது கொடி என்பது புரிந்தது. இத்தாவரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க அப்பாவிடமும், பெரியப்பாவிடமும் மனோரஞ்சிதம் பற்றி கேட்டேன்.

உடனே அப்பா, மோகன் மாமாவிடம் அதை சொல்லியிருகிறார். தஞ்சாவூரில் இருக்கும் மோகன் மாமாவுக்கு பல வித தாவரங்களை வளர்ப்பதில் அதீத ஆர்வம். நான் சிறு வயதில் தஞ்சையில் இருந்த போது ஹவுசிங் யூனிட்டில் இருந்த விசாலமான தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருந்திருக்கும் அவரது வீட்டிற்குப் போவதுண்டு. அழகான சிறிய ஓட்டு வீடு. சுற்றிலும் பல பூஞ்செடிகள், கொடிகள், மரங்கள், நிறைந்த அழகான தோட்டம். அவர் தோட்டக்கலையில் வல்லவர். அவரிடன் இச்செடி பற்றி கேட்டவுடனேயே அப்பாவை அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர் கொடுத்து நட்டு வைத்த மனோரஞ்சிதத்தை காட்டியிருக்கிறார். அப்பாவும் அவரது கேமிராவில் அத்தாவரத்தினை படமெடுத்து மின்னஞ்சலில் அனுப்பினார்.

மனோரஞ்சிதம் செடியும் இளம் மலர்: Photos M Panchapakesan

மனோரஞ்சிதம் செடியும், இளம் மலரும், காய்த்திரளும் : Photos: M. Panchapakesan

மரங்கள் நூலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சென்னையில் வசிக்கும் எனது கார்த்தி பெரியப்பா. அண்மையில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது எதிர்வீட்டில் மனோரஞ்சிதம் இருப்பதாகச் சொல்லி என்னை அங்கு கூட்டிச் சென்றார். மனோரஞ்சித்தை பார்க்க/நுகர வேண்டுமென எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது அன்று நிறைவேறியது.

மனோரஞ்சிதம் சீதா மர இனத்தைச் சார்ந்தது (Annonaceae). சிறியதாய் இருக்கும் போது புதர்செடி போலவும் வளர வளர மேலேறும் கொடியாகப் போகும். இதன் தண்டில் முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். இலைகள் ஒன்று மாற்றி ஒன்றாக அமைந்திருக்கும் (Alternate leaves). மலரின் புற இதழ்கள் மூன்று (புல்லி வட்டம்- sepals). இவை ஒன்றன் மேல் ஒன்று அடுக்காக இல்லாமல் தனித்தனியாக அவற்றின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு – தொடு இதழ் ஒழுங்கில் – (Valvate) அமைந்திருக்கும். அகவிதழ்கள் (அல்லி வட்டம் – Petals) ஆறு. உள் புறம் மூன்றும் வெளிப்பக்கம் மூன்றும் வட்டமைவில் (whorled)இருக்கும். கொக்கி போன்று வளைந்த காம்பில் பூ அமைந்திருக்கும்.

மனோரஞ்சிதம் மலர்

மனோரஞ்சிதம் மலர் Photo: P. Jeganathan

இந்தப்பூவை பார்க்கும் போது எனக்கு இட்லித் தட்டுகளின் அமைவுதான் ஞாபகத்திற்கு வந்தது. இட்லித் தட்டை, மாவு ஊற்றியபின் ஒன்றன் மேல் ஒன்று வைக்கும் போது தட்டில் உள்ள குழியின் அடிப்புறம் அதன் கீழேயுள்ள குழியின் மேலே பட்டுவிடாத வண்ணம் வைப்போம் அல்லவா? அதுபோலத்தான் மனோரஞ்சிதத்தின் அகவிதழ் அமைவும். மனோரஞ்சித மலர் இளநிலையில் பச்சையாக இருக்கும். முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகும். இதழ்கள் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் காய் கொத்தாக பச்சை நிறத்திலும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உள்ளே ஒரே ஒரு (ஆமணக்கு விதை போன்ற) கொட்டை இருக்கும்.

மனோரஞ்சிதம் - காய்த்திரள்

மனோரஞ்சிதம் – காய்த்திரள் Photo: P. Jeganathan

மனோரஞ்சிதம் - கனியும் விதையும்

மனோரஞ்சிதம் – கனியும் விதையும் Photo: P. Jeganathan

மனோரஞ்சித மலர் நறுமணம் மிகுந்தது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இம்மலரை அதில் மிதக்க விட்டால் அந்த அறைமுழுவதும் மனோரஞ்சிதத்தின் மணம் கமழுமாம். எந்தப் பழத்தை நினைத்துக்கொண்டு இம்மலரை முகர்கிறோமோ அப்பழத்தின் வாசனையை இம்மலர் தருவதாக நம்பப்படுகிறது. எனினும் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் முதன் முதலில் முகர்ந்தபோது எதையும் நினைக்கவில்லை, மனோரஞ்சிதத்தைத் தவிர. ஆகவே எனக்கு நினைவில் உள்ளது மனோரஞ்சிதத்தின் மணம் தான். சிறுவயதில் சில வாசனையுள்ள பென்சில் அழிப்பான்களை – சென்ட் (ல)ரப்பர் – (eraser) வைத்துக்கொண்டு இப்படி நாங்கள் விளையாடுவதுண்டு. அதுபோலத்தான் இதுவும். மனோரஞ்சித பூவிதழைக் கொண்டு சீனர்கள் தேனீர் தயாரிப்பதாகவும் தெரிகிறது. மனோரஞ்சிதப் பழமும் நறுமணம் வீசும். இதனால் மணிப்பூரியில் மனோரஞ்சிதத்தின் பெயர் சீனி சம்ப்ரா (Chini Champra), அதாவது இனிக்கும் எலுமிச்சை என்று பொருள். இதன் அறிவியல் பெயர் Artabotrys hexapetalus  அதாவது Artabotrys = கொக்கி போன்ற அமைப்புள்ள, hexapetalus = ஆறு பூவிதழ்கள் கொண்ட (Gledhill 2008).

கொக்கி போன்று வளைந்த காம்பில் அமைந்த மலர்

கொக்கி போன்று வளைந்த காம்பில் அமைந்த மலர் Photo: P. Jeganathan

மனோரஞ்சிதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சில தாவரவியல் கையேடுகளை படித்தபோது இது பெரும்பாலும் இதன் மலருக்காகவே வீடுகளில் வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது (Matthew 1999, Pallithanam 2001). Flowers of India எனும் இணையத்தளம் இத்தாவரம் இந்தியாவிலும் ஆசியாவின் வெப்பமண்டலக்காடுகளிலும் தென்படுகிறது என்கிற தகவலை அளிக்கிறது. எனினும் எந்த நூலிலுமே இத்தாவரம் எவ்வகையான வனப்பகுதியில் தென்படுகிறது என்பதைப் பற்றிய விவரம் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.

கேம்பில் (J.S.Gamble) தனது நூலில் இத்தாவரம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் வீட்டுத் தோட்டங்களில் இதன் மலருக்காக வளர்க்கப்படுவதாகவும், தாவரவியலாளர் George King ன் கூற்றுப்படி இத்தாவரம் தென்னிந்திய வனப்பகுதிகளில் இயற்கையாகவே தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Gamble 1995). மனோரஞ்சித வகையைச் சேர்ந்த மற்றுமொறு தாவரமும் மேற்குத்தொடர்ச்சிமலைகளிலும், இலங்கையிலும் தென்படுகிறது (Gamble 1995) இதன் ஆங்கிலப் பெயர் Ceylon Green Champa (Artabotrys zeylanicus).

மரங்கள் நூலின் தொகுப்பாசிரியர் மதுமிதா மனோரஞ்சிதம் முழுவதுமாக அற்றுபோய் விட்டதோ என வருத்தம் தெரிவித்திருந்தார். இனி அவருக்கு அந்தக் கவலை வேண்டாம். மனோரஞ்சிதம் நிச்சயமாக பலரது வீடுகளில் மணம் வீசிக் கொண்டிருக்கும். ஆனால் என் மனம் இப்போது வேறொன்றை அறிந்து கொள்ளத் துடிக்கிறது. மனோரஞ்சிதம் இந்தியாவில் இயற்கையாக வனப்பகுதிகளில் வளர்ந்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? எனில் எங்கே? அறிந்தவர் யாரேனும் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

குறிப்பெடுக்க உதவிய ஆதாரங்கள்:

Gamble, J. S. (1995). Flora of the Presidency of Madras. Vol.1. Bishen Singh Mahendra Pal Singh. Dehra Dun, India.

Gledhill, D. (2008). The names of plants. Cambridge University Press. New York.

Matthew, K.M. (1999). The flora of the Palni hills, South India (Part one). The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.

Pallithanam, J.M. (2001). A Pocket lora of the Sirumalai hills, South India. The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.

<http://www.flowersofindia.net/catalog/slides/Hari%20Champa.html&gt;

சொல்வனம் இணைய இதழில் (இதழ் 88) 29-6-2013 அன்று வெளியான எனது கட்டுரையின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=26881

Written by P Jeganathan

July 6, 2013 at 12:27 am

Posted in Books, Plants

Tagged with

13 Responses

Subscribe to comments with RSS.

 1. fruit smell of Ylang ylang vine is due to the methyl benzoate and accetate group chemicals presnt in the flower

  something something

  July 9, 2013 at 10:45 am

 2. One More piece of information about manoranjitham, MGR Samadhi structure is based on manorajitham layout. not many people know this, they all think its lotus.

  Cell

  March 24, 2015 at 6:42 pm

 3. I saw tis flower

  malathi

  October 4, 2016 at 10:31 pm

 4. what are its medicinal benifits

  k jayapal

  March 10, 2017 at 12:13 pm

  • i love this flower

   SIVARANJANI SENTHIL

   November 25, 2020 at 6:42 pm

 5. Superb information

  Senthil

  March 23, 2018 at 10:00 am

 6. I have seen this flower in singara TNEB garden

  V.M.Eiphen

  June 30, 2018 at 3:06 pm

 7. எங்கள் வீட்டில் 30 செ.மீட்டர் அளவில் இருக்கின்றது.நான் அதை என் கண்கள் பார்த்து வளர்த்து கொண்டு இருகின்றேன்

  Tamil pandi

  July 3, 2018 at 8:41 pm

  • Mr Tamil Pandi – Could you share the seeds. I am fond of this flower and wanted to grow this at my home.

   Shankar Periagaram Ramamurthy

   September 21, 2019 at 4:14 pm

   • I am planning to grow this plant in my home. Do you have the plant or seeds?

    Vinodh Mohan

    December 15, 2019 at 10:00 am

 8. Where can I get this in thanjavur?

  Bee

  May 22, 2020 at 2:58 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: