UYIRI

Nature writing in Tamil

Archive for September 2013

ஒளிரும் காளான்கள்

with one comment

பள்ளிப் பருவத்தில் என் வீட்டுக் கடிகாரத்தின் எண்களும் முட்களும் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் சாமி மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய இளம்பச்சை நிற விக்கிரகம் இருக்கும். இரவில் மாதா ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். பிற்காலத்தில் உயிரில்லாத இப்பொருட்கள் ஒளிர்வதற்கான காரணம் ரேடியம் (radium) என்ற வேதியியல் தனிமம் எனவும், அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரிபியர் க்யூரி தம்பதியரைப் பற்றியும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

சிறு வயதில் கோடை விடுமுறையில் கிராமத்துக்குப் போனபோது, இரவு நேரங்களில் பச்சை நிறத்தில் மினுக்மினுக் என விட்டுவிட்டு எரிந்துகொண்டே மெல்லப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைக் கண்டு வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறேன். இளஞ்சிவப்பிலும் இளம் பச்சையிலும் ஒளி வீசிக்கொண்டு தரையில் ஊர்ந்து செல்லும் செவ்வட்டை (glowworm) பூச்சியைக் கண்டு கண்கள் அகல விரியப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இந்த ஒளி உமிழும் நிகழ்வு, உயிர்ஒளிர்வு (bioluminescence) எனவும் அதற்கான காரணி லூசிபெரேஸ் (luciferase) எனும் நொதியே (enzyme) என்பதையும் கல்லூரியில் படித்திருக்கிறேன்.

இந்த ஒளிரும் தன்மை காளான்களுக்கும் உண்டு. உலகில் சுமார் 71 வகையான காளான்கள் இப்படி ஒளி உமிழும் தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காளான்களின் வித்துகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காகவே இத்தகைய ஒளி உமிழும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன. இத்தன்மையை இவை எப்படிப் பெறுகின்றன? இவ்வகையான காளான்களின் திசுக்களில் உள்ள லூசிபெரேஸ் எனும் நொதியானது லூசிபெரின் எனும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை (oxidation) ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் தென்படும் பூஞ்சைகளையும் காளான்களையும் ஆவணப்படுத்தி சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் எனது சக ஊழியர்களான ரஞ்ஜனி, திவ்யா, சங்கர் ராமன் ஆகியோருடன் ஈடுபட்டிருந்தேன். அந்நூலுக்காகக் காளான்களை எங்கு பார்த்தாலும் பல கோணங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் சில வகைக் காளான்கள் இரவில் ஒளிரும் தன்மையைக் கொண்டவை என்பதைப் படித்து அறிந்திருந்தேன். ஆனால் பார்த்ததில்லை. (அந்த நூலை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்).

அண்மையில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் களப்பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், சாலையோரமாக வீழ்ந்து கிடந்த மரத்தில் கொத்தாக முளைத்திருந்த காளான்களைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தினேன். அருகில் சென்று பார்த்தபோது அது இரவில் ஒளிரும் காளான் வகை எனத் தெரிந்தது. அப்போதே இரவானதும் அக்காளானை வந்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். வாகனப் போக்குவரத்து இல்லாத நடு இரவில் சக ஊழியர்கள் சிலருடன் அந்த இடத்தை அடைந்தேன். காளான் இருக்கும் இடத்துக்குச் சற்று முன்பே வண்டியை நிறுத்தி அதனருகே நடந்து சென்றேன்.

இரவில் பார்க்கக் கண்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக டார்ச் இல்லாமலேயே அதனருகில் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட பிறை நிலவின் மெல்லிய ஒளி வீசியது. இருட்டில் ஒளிர்வதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாததைக் கண்டு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. காளான்கள் வீசும் ஒளி கும்மிருட்டில்தான் நம் கண்களுக்குப் புலப்படும் என்பதை உணர்ந்து மழைக்காக எடுத்துவந்த குடையைப் பிடித்து அதனுள் இருந்த குடைக்காளான்களைக் கண்டேன். அந்தக் கும்மிருட்டில் அவை மெல்லிய இளம்பச்சை நிற ஒளியை உமிழ்வதைக் கண்டு எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. எதிர்பார்த்து வந்தது நிறைவேறியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இயற்கையின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. அதைப் பார்த்தது என் வாழ்வின் மறக்க முடியாத அற்புதங்களில் ஒன்று!

ஒளிரும்  காளான்.  படம் : கல்யாண் வர்மா

ஒளிரும் காளான்கள். படம் : கல்யாண் வர்மா

தி ஹிந்து தமிழ்  தினசரியில் 23 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை. இதற்கான உரலி இதோ. PDF இதோ.

Written by P Jeganathan

September 25, 2013 at 8:19 pm

Posted in Rainforest

Tagged with ,

எங்கெங்கு காணினும் குப்பையடா…

with 2 comments

பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்தேன். அந்த முக்கால் மணிநேரத்தில் அதிகமாக எனது கண்ணில் பட்டது சாலையோரத்தில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகள் தான். அதைத்தொடர்ந்து, கோவையிலிருந்து திருச்சிக்கு இரயிலில் பயணமானேன். கோவை இரயில் நிலையத்திலிருந்து திருச்சி வரை வழிநெடுக இரயில் தடத்தின் ஓரமாக, குறிப்பாக வழியில் இருந்த எல்லா இரயில் நிலையங்கள் வருவதற்கு முன்னும் அந்த இடத்தைக் கடந்த பின்னும் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை காணத்தவறவில்லை.

Train Garbage

அவற்றைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாகவும், கோபமாகவும் இருந்தது. யார் மீது கோபப்படுவது என்று புரியவில்லை. பிளாஸ்டிக் பைகளை, பாட்டில்களை, குவளைகளை கொடுக்க்கும் கடைக்காரர்கள் மீதா? அதை வாங்குபவர்கள மீதா? வாங்கி கண்ட இடத்தில் தூக்கி வீசுபவர்கள் மீதா? அப்படி தூக்கி எறியப்பட்டதை சுத்தப்படுத்தாத நகராட்சியினரின் மீதா? சும்மா பேருக்கு பிளாஸ்டிக் பைகளை தூக்கிப்போடுவதை தடை செய்யும் அரசின் மீதா? இல்லை இந்தப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீதா? யாரைக் குற்றம் சொல்வதென்று புரியவில்லை.

பிளாஸ்டிக் குப்பை இல்லாத இடமே இல்லை. நம் வாழ்விலும் சுற்றுப்புறச்சூழலிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. நம் வீட்டின் உள்ளேயும், வீட்டைச் சுற்றிலும், ஆற்றில், குளத்தில், சாக்கடையில், கால்நடையின் சானத்தில், வயலுக்குப் போடும் தொழு உரத்தில், மான்களின் குடலில், யானையின் லத்தியில், பறவைகளின் கூட்டில், கடல் அலையில், தேங்கிக் கிடக்கும் நீரில், வற்றிய ஆற்று மணலில், பச்சைப் பசேலன பரந்து விரிந்திருக்கும் வயல்வெளியில் தனியே நின்று கொண்டிருக்கும் கருவேல மரத்தின் முள்ளில் மாட்டி காற்றில் படபடத்துக்கொண்டு, முள்வேலிக் கம்பியில் சிக்கி சலசலத்துக்கொண்டு, எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் குப்பை. கல்யாணமா? காதுகுத்தா? கருமாதியா? அரசியல் பொதுக்கூட்டமா? கோயில் திருவிழாவா? கோடைவாசஸ்தலமா? பிக்னிக் ஸ்பாட்டா? எந்த இடமானாலும், விசேஷமானாலும் அது நடந்து முடிந்ததற்கான, மனிதன் இருக்கிறான் என்பதற்கான அறிகுறி அந்த இடத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தான். குப்பைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

garbage2

இந்தக் குப்பைகள் நிச்சயமாக சுற்றுப்புறத்தை அழகுபடுத்தவில்லை. இதெல்லாம் என் கண்ணில் மட்டும்தான் படுகிறதா? இல்லை அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து என்னைப் போலவே கோபப்படுகிறார்களா? எத்தனை பேருக்கு இந்த மக்காத குப்பைகளைப் பார்க்கும் போது எரிச்சல் வருகிறது? இப்படி இருக்கிறதே என்று கவலைப்படுவது எத்தனைபேர்? அப்படி ஆதங்கப்படுபவர்களில் எத்தனைபேர் பிளாஸ்டிக் பைகளையோ, குவளையையோ உபயோகிக்காமல் இருக்கிறோம்? அவை நமக்குக் கொடுக்கப்படும்போது வேண்டாம் என்கிறோம்?

“சுத்தம் சோறுபோடும்”, “சொர்க்கம் என்பது நமக்கு…சுத்தம் உள்ள வீடுதான், சுத்தம் என்பதை மறந்தால்…நாடும் குப்பை மேடுதான்..”, என்பதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நாம் செய்யவேண்டியதை, செய்யக்கூடியதை செய்வதைல்லை. பிளாஸ்டிக் குப்பைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வருபவை அல்ல. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், சிறுவனாக இருந்தபோது கடைக்குச் செல்ல ஒரு துணிப்பையை எடுத்துச் செல்லும் பழக்கம் அனைவரிடமும் இருந்தது. கல்யாண வீடுகளில் தரும் தாம்பூலப் பையும்  துணியால் ஆனதே. தைலா சில்க், வளநாடு, சாரதாஸ் என எந்தத் துணிக்கடைக்குச் சென்றாலும் அவர்கள் தந்ததும் துணிப் பையையே. இந்த மஞ்சள் பை அதன் மவுசை இப்போது இழந்து விட்டது. அதை ஏந்திச் செல்வோரையும் இந்த உலகம் கேலி செய்கிறது. விசித்திரமாக பார்க்கிறது. அந்த காலத்தில் மளிகைக் கடைகளில் செய்தித்தாள்களினால் ஆன உறையில் அரிசியையும், பருப்பையும், புளியையும், பலசரக்குகளையும் கட்டித்தந்தார்கள். வாங்கும் அளவிற்குத் தகுந்தவாறு பேப்பரைக் கிழித்து, லாவகமாக மடித்து பொட்டலம் போட்டு, மேலே தொங்கும் கண்டிலிருந்து சணலை இழுத்துக் கட்டி, சணலை இரு விரலாலும் திருகி, பிய்த்து முடிச்சு போட்டு கொடுப்பார்கள். கதம்பத்தை, முல்லை, அரும்பை முழம்போட்டு நீர்தெளித்து வைத்த தாமரை இலையில் கட்டிக்கொடுத்தார்கள். ஹோட்டலில் வாழை இலையில், சன்னமான ஈர்க்குச்சியால் ஒன்று சேர்த்து தைக்கப்பட்ட மந்தாரை இலையிலும் சாப்பாடு போட்டார்கள். (இப்போது சில இடங்களில் வாழை இலை போன்ற வடிவிலமைந்த மேலே மெல்லிய பிளாஸ்டிக் உறைகொண்ட பேப்பரால் ஆன இலை!) கோயிலில் உண்டகட்டி, பிரசாதம் எல்லாம் தொண்ணையில் கொடுத்தார்கள். தள்ளு வண்டியில், தலையில் கூடையை சுமந்து தெருவில் காய்கறி விற்பவர்கள் பிளாஸ்டிக் பை கொடுக்கவில்லை. மாறாக வாங்க வந்தவர்கள் பிண்ணப்பட்ட ஒயர் கூடைகளை எடுத்துச் சென்றனர். எடுக்க மறந்த பெண்கள் தங்கள் முந்தானையில் வாங்கி வயிற்றோடு சேர்த்துக் கட்டி எடுத்துச் சென்றனர். கறியும், மீனும் வாங்க மூடி போட்ட பாத்திரத்தையோ, மஞ்சள் பையையோ எடுத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் மீன் வாங்க என தனியாக ஒரு மஞ்சள் பை இருக்கும். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லவில்லை நாங்கள். வசதியான சிலர் “வாட்டர் பேக்” வைத்திருப்பார்கள் (அதன் பின் வந்தது பெட் பாட்டில்கள்). மற்றவர்கள் எல்லாம் பள்ளியில் உள்ள குழாய்களில் தான் தாகத்தைத் தணித்துக் கொண்டோம். மதியம் சாப்பிட்டபின், குழாயைத் திறந்து விட்டு, வட்ட வடிவ டிபன் பாக்ஸின் மூடியை அதன் கீழே வைத்து, விளிம்பில் வாய் வைத்து தண்ணீர் குடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  கிளாசிலும், டவரா செட்டிலும், கடைகளில் டீயும், காபியும் தந்தார்கள். ஐஸ்கிரீம் எடுத்துச் சாப்பிட மரக்கட்டையால் ஆன சிறிய கரண்டியைக் கொடுத்தார்கள். மாரி, கிராக்-ஜாக் பிஸ்கட்டுகள் மெழுகு தடவிய தாளில் மடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயம்.

Garbage3_angalakurichi

நமக்கு சாப்பிட, குடிக்க, வசிக்க எல்லாமே சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்த உலகைப் பற்றி, சுற்றுப்புறச்சூழலைப் பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. அதை அசுத்தப்படுத்த கொஞ்சம் கூடத் தயங்குவதில்லை. நமக்கு நோய் ஏதும் வரக்கூடாது, ஆனால் நாம் வாழும் இந்த உலகு எக்கேடு கெட்டுப் போனாலும் நமக்குக் கவலை இல்லை.

சாலையோரத்தில் கிடக்கும் இந்தக் குப்பைகள் என் கண்களை மட்டும் தான் உறுத்துகிறதா? எனக்கு மட்டும் தான் அவை அசிங்கமாகக் காட்சியளிக்கின்றதா? இப்படித்தான் காலாகாலத்திற்கும் இருக்குமா? இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமா? பார்க்கப் பார்க்கப் பழகி விடுமா? பிடித்துப் போய் விடுமா? அல்லது இதை யாருமே ஒரு பிரச்சனையாக நினைக்கவில்லையா? நான் தான் பிதற்றுகிறேனா? எனக்கு புரியவில்லை. யாராவது வழி சொல்லுங்களேன்.

—-

தி ஹிந்து தமிழ் இணைய இதழில் 13 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை. இதற்கான உரலி இதோ. PDF இதோ.

Written by P Jeganathan

September 16, 2013 at 5:01 pm

Posted in Environment

Tagged with