Archive for November 2013
வன்னி மரத்தைப் பார்க்கப் பயணம்
தல மரங்கள் எனும் concept எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மரங்களை அதுவும் நம் மண்ணுக்குச் சொந்தமான மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் காரணிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஆமோதித்து அரவணைத்துக் கொள்வது இயற்கைப் பாதுகாவலர்களின் கடமை என்பது எனது எண்ணம். சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மரங்களை நமது நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டிச் சாய்க்காமலிருக்க, ஒரு வழி, அம்மரங்களின் அடித்தண்டில் மஞ்சளையும், குங்குமத்தையும் பூசி வைத்து அம்மரத்தை சாமியாக்கிவிடுவது. இதில் எந்த தவறும் இல்லை. சரி அது போகட்டும், தல மரங்களுக்கு வருவோம். தேவாரத்திருத்தலங்கள் எனும் நூலை வாங்கிப் புரட்டிய போது தேவாரத்தில் பாடப்பட்ட கோயில்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில் கருந்திட்டைக்குடி எனும் பெயரைக் கண்டதும் என் கண்கள் அகல விரிந்தன. நான் பிறந்த இடமாயிற்றே அது. தஞ்சாவூரிலிருந்து திருவையாறு போகும் வழியில் இருக்கும் கரந்தை என்றழைக்கப்படும் (வழக்கில் கரந்தட்டான்குடி) கருந்திட்டைக்குடியில் உள்ள செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவன் நான். வீட்டிலிருந்து ராஜாராம் மடத்தெருவில் இருந்த ஈவ்லின் இங்லிஷ் ஸ்கூலுக்குப் (Evelyn English School) போக தினமும் வசிட்டேசுவரர் கோயில் (கருணாசுவாமி கோயில்) காம்பவுண்டைச் சுற்றியுள்ள சந்தின் வழியாக ஸ்கூலை அடைவது வழக்கம். ஆலயம் திறந்திருந்தால் அதன் ஒரு வாயிலில் நுழைந்து சன்னிதி தெரு வழியாகவும் போய் விடலாம். தேவாரத்திருத்தலங்களில் ஒன்றான இந்த கருநாசுவாமி ஆலயத்தின் தலமரம் வன்னி மரம் என்பதை அறிந்தேன். அக்கோயில் வழியாகப் போகும் போது சந்நிதியின் உள்ளேயிருந்த வில்வமரத்தைப் பார்த்ததுண்டு. ஆனால் வன்னி மரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. ஆகவே வன்னி மரத்தைக் காணவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அண்மையில் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.
மு. வரதராசனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில், தேவாரத்தில் திருவையாற்றின் அழகை வர்ணித்துப் பாடியதை விளக்கியிருந்ததைப் படித்ததில் இருந்து திருவையாறு போய் வரவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். சிறுவனாக இருந்த காலத்தில், திருவையாற்றுக் காவிரிக்கரைப் படித்துரையில் ஆடி அமாவாசை அன்று, என் அப்பா அவரது அப்பாவிற்கு திதி கொடுக்கச் சென்ற போது, நானும் கூடச் சென்றது நினைவின் மூலையில் (மங்கலாக) இன்னும் இருக்கிறது. சரி ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துவிடலாம் என திருச்சியிலிருந்து ஒரு நாள் காலை புறப்பட்டு கல்லணை வழியாக திருவையாறு பயணமானோம். கல்லணைக்கு பலமுறை சென்றிருந்தாலும் அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறு சென்றதில்லை. அந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என, திருவெறும்பூரிலிருந்து வேங்கூர் வந்தடைந்து காவிரிக் கரையோரமாக இருந்த சாலையில் பயணமானோம். அது ஆடி மாதம் (1st August 2013). காற்று ஆளைத் தள்ளுமளவிற்கு அடித்துக்கொண்டிருந்தது. இந்த ஆண்டு பருவ மழை பொய்க்காத காரணத்தால் முக்கொம்பிலிருந்து தண்ணீரை திறந்து விட்டிருந்தார்கள். ஆடிப்பெருக்கிற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருந்தன. ஆற்றில் தண்ணீர் ஓடுவதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது.
கல்லணையில் பறவைகளைப் பார்க்க சிறிது நேரம் செலவிடலாம் என பாலத்தின் மேலிருந்து பார்த்த போது சிறிய நீர்க்காகக் (Little cormorant) கூட்டமொன்று மிக மும்முரமாக நீந்திக்கொண்டும், நீரில் மூழ்கி மீன் பிடித்துக்கொண்டும் இருப்பதைக் காணமுடிந்தது. நாமக்கோழிக் (Common coot) கூட்டமும் நீர் தேங்கியிருந்த மதகுப் பகுதிகளின் அருகில் நீந்திக்கொண்டிருந்தன. இவ்வளவு நாட்களாக தேங்கிக்கிடந்த நீரில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் நீரின் வேகம் தாளாமல் சுழன்று சுழன்று ஆற்றோட்டத்தில் கலந்து பயணித்தன. எனினும் எனது கவனத்தை ஈர்த்தது Pied Kingfisher எனும் கருப்புவெள்ளை மீன்கொத்திகளே! பாலத்தின் கீழிருந்த மதகுச் சுவற்றின் மேலே அமர்ந்து அவற்றின் கீழே ஓடிக்கொண்டிக்கும் நீரினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. மீனைக் கண்டவுடன் அமர்ந்த இடத்திலிருந்து உயர எழும்பி இறக்கைகளை படபடவென அடித்து ஒரே இடத்தில் பறந்து, திடீரென நீரில் அம்புபோல் பாய்ந்தன. முழ்கி வெளியே வரும் போது அலகில் மீனிருக்கும். அவை பறக்கும் அழகை நாள் பூராகவும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். ஓரளவிற்கு மனம் நிறையும் அளவிற்கு படமெடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து மனமில்லாமல் அகன்றேன்.
கோவிலடி, திருச்சென்னம்பூண்டி முதலிய ஊர்களைக் கடந்து சென்றது பாதை. இரு புறமும் வயதான மிகப் பெரிய மரங்கள் அடர்ந்த அகலப்படுத்தாத சாலை. மகாராஜபுரம் எனும் ஊரினைக் கடந்து சென்ற போது அவ்வூரிலுள்ள கால்நடை மருத்துவமனையின் வாசலில் ஒரு பெரிய, நெடுதுயர்ந்த வெள்ளை மருத மரத்தைக் (Terminalia arjuna) கண்டேன். ஊர்களின் வழியே போன போது, திண்ணை வைத்த ஓட்டு வீடு, வீட்டின் முன் பூவரச மரங்கள், அதன் கீழ் கயிற்றுக் கட்டில், மரச்சக்கரம் கொண்ட இரட்டை மாட்டு வண்டி என கிராமத்தின் அழகு குலையாமல் இருப்பதைக் காண முடிந்தது. பிளாஸ்டிக் குப்பைகளும் அவ்வளவாகத் கண்ணில் தட்டுப்படவில்லை. ஆயினும் எனது மகிழ்ச்சியெல்லாம் திருக்காட்டுப்பள்ளியின் அருகாமையை அடையும் வரையில் தான். சாலையோரமாக எங்களுடனேயே பயணித்துக் கொண்டிருந்த கொள்ளிடத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்த லாரிகளின் எண்ணிக்கை தான் என்னை முதலில் கலக்கமடையச் செய்தது.
அதைத் தாண்டி வந்தவுடன் கூத்தூர் பகுதியில், மும்முரமாகி இருந்தது சாலையை அகலப்படுத்தும் பணி. மிகப் பெரிய, வயதான பல தூங்குமூஞ்சி மரங்களும், புளிய மரங்களும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. எங்களது வண்டிக்கு முன்னே சென்ற மணல் லாரியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே வந்தது. மணல் லாரிகளின் சீரான போக்குவரத்திற்கு சாலையை அகலப்படுத்தித் தானே ஆக வேண்டும். மரங்கள் முக்கியமா? மணல் முக்கியமா? நமக்குத் தெரியாதா எதுவென்று?
ஆச்சனூரை தாண்டியபோது சாலையோரத்தில் இருந்த பள்ளிக்கூடத்தை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் நிழலில் சில மாணவர்கள் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். கொடுத்து வைத்தவர்கள். தில்லைஸ்தானத்தைத் தாண்டி திருவையாறு போகும் வழியில் ஆற்று நீரோட்டத்தின் மேல் பல உழவாரக்குருவிகள் (Palm swift) கூட்டங்கூட்டமாக பறந்து கொண்டிருந்தன.
மதிய வேளையில் திருவையாறு வந்தடைந்தோம். ஆலயம் சாத்தியிருந்ததால் வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்தோம். மாடப்புறாக்களும், மைனாக்களும் மதில் சுவற்றில் உள்ள ஓட்டைகளில் கூடு கட்டியிருந்தன. மதில் சுவற்றின் மேலுள்ள நந்திக்கும், கோயில் கோபுரத்திலுள்ள சிற்பங்களுக்கும் பல வண்ணங்களில் பெயின்ட் அடித்திருந்தனர். பார்க்க சகிக்கவில்லை. பழமை வாய்ந்த, அழகிய சிற்பங்கள் கொண்ட கோயில் கோபுரங்களைச் சுத்தப்படுத்தி வைத்தால் மட்டும் போதாதா? பெயின்ட் அடித்து அதன் அழகை, தூய்மையை சீர்குலைக்க வேண்டுமா? aesthetic sense நமக்கெல்லாம் இவ்வளவு தானா? நொந்து கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று தியாகராஜர் நினைவிடத்திற்குச் சென்றோம். அதன் முன்னே ஒரு பெரிய அழகான அரசமரமும், வேப்பமரமும் இணைந்து உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தது. மதிய உணவை ஆண்டவர் அல்வா கடையில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே திருவையாறுக்கு பெயர்போன அசோகாவையும் வாங்கிக்கொண்டு கரந்தையை நோக்கி வன்னியைக் காண பயணமானோம்.
கருநாசுவாமி கோயிலுக்குள் நுழைந்த போது மாலை 4 மணி. கோயிலைச் சுற்றி வந்தபோது பழைய நினைவுகளும் கூடவே வந்தன. உள் பிரகாரத்தில் இருந்தது அந்த பழைய வன்னி மரம். மரத்தைப் பார்த்து, தொட்டு, படமெடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
வன்னி மரத்தைப் பற்றி கார்த்தி பெரியப்பாவிடம் கேட்ட போது, தஞ்சாவூரில் வடக்கு வாசலில் உள்ள காசி பிள்ளையார் கோயிலிலும் (தற்போது கண்ணாடி பிள்ளையார் கோயில் என்றும் அறியப்படுகிறது) பார்த்திருப்பதாகச் சொன்னார், அதோடு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய வன்னி வீதி எனும் கட்டுரைக்கான உரலியையும் அனுப்பினார் (அக்கட்டுரையை இங்கே காண்க). மகாபாரதத்திற்கும் வன்னி மரத்திற்கும் உள்ள தொடர்பை அறிய அக்கட்டுரையைப் படிக்கவும். காசி பிள்ளையார் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோயிலின் பின் பகுதியில் மூலைக்கு ஒன்றாக இரண்டு வன்னி மரங்கள் (கிளைகள் வெட்டப்பட்டு) இருந்தன. ஏனோ தெரியவில்லை அக்கோயிலைச் சுற்றிலும் இருந்த மரங்கள் பலவற்றிலும் கிளைகள் வெட்டப்பட்டிருந்தன. கருநாசாமி கோயிலில் இருந்த மரத்தை விட உருவில் பெரிய மரங்கள் அவை.
இந்த வன்னி மரங்களைக் கண்டவுடன் தான் இம்மரங்களை ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புதர்க்காடுகளில் பார்த்தது ஞாபகம் வந்தது. அங்கே இவை உயரமாக வளர்வதில்லை. எனது இடுப்பு உயரம்தான் இருக்கும், வெகு அரிதாகவே இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இங்குள்ள மண்ணும், தட்பவெப்ப சூழலும், ஆடு மேய்ப்பவர்கள் அடிக்கடி வெட்டி விடுவதும் காரணமாக இருக்கலாம். இம்மரத்தை இம்மாநில மக்கள் வணங்குகிறார்கள். தெலுங்கில் ஜம்மிச் செட்டு என்றழைக்கப்படுகிறது. குறிப்பாக தசரா சமயங்களில் இம்மர இலைகளைப் பறித்து வந்து அதை பெரியவர்கள் கையில் கொடுத்து, அவர்களை தமது தலையில் (அட்சதையைப்போல) தூவி ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
நீங்கள் ஆந்திர மாநிலத்தில் வசித்திருந்தால், அல்லது தெலுங்குப் படம் பார்ப்பவராக இருந்தால் வன்னி மரத்தை (அதாவது ஜம்மிச் செட்டு)அறிந்திருப்பீர்கள். ஓய்! (Oye!) என்று ஒரு தெலுங்கு படம். சித்தார்த்தும், ஷாம்லியும் (அஞ்சலி படத்தில் குழந்தையாக நடித்த அதே ஷாம்லிதான்) நடித்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் சித்தார்த் ஷாம்லியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஜம்மி செட்டு வேண்டும் என்று கேட்பார். அக்காட்சியை (படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்குப் பிறகு) இங்கே காணலாம்.
வன்னி மரத்தின் அறிவியல் பெயர் Prosopis cineraria. இம்மரம் அவரை குடும்பத்தைச் சேர்ந்தது (Family: Fabaceae). மேற்கு, கிழக்கு ஆசியாவின் வறண்ட நிலப் பகுதிகளில் வளரும். இது ராஜஸ்தானின் மாநில மரமாகும். அங்கே இதை கேஜ்ரி (Khejri) என்றழைக்கின்றனர். இம்மரக்கிளைகளில் முட்கள் காணப்படும். இம்மரம் கோதாவரி ஆற்றின் கிழக்குப் பகுதியிலுள்ள வறண்ட பாறைகள் கொண்ட நிலப்பகுதிகளில் வளர்கின்றன. இவை அடர்ந்த காடுகளில் வெகு அரிதாகவே தென்படுகின்றன.
கோவையில் உள்ள காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனமான SACON ஐ சேர்ந்த காட்டுயிர் அறிஞர்களான குணசேகரனும், முனைவர் பாலசுப்ரமணியனும், தமிழகத்தில் உள்ள 1165 கோயில்களுக்குச் சென்று அங்குள்ள தலமரங்களின் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் பட்டியலிட்டனர். சுமார் ஐந்து ஆண்டுகள் (2002-2006) நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று பார்த்த 1165 கோயில்களில் 846 சிவத்தலங்கள், 246 வைணவத் தலங்கள், 23 அம்மன் கோயில்கள், 48 முருகன் கோயில்கள், 2 இவற்றில் சேராத தெய்வங்களைக் கொண்ட கோயில்கள். இவர்கள் பார்த்த இந்த கோயில்களில் தலமரங்கள் இருந்தது 820 கோயில்களில். இவர்களது ஆராய்ச்சியின் மூலம் 112 வகையான தாவரங்கள் (41 குடும்பத்தைச் சேர்ந்தவை) தலமரங்களாக இருப்பதை அறிந்தனர். இவற்றில் மரவகைகள் 83, புதர்செடிகள் 17, கொடியினங்கள் 7, புற்கள் 3 வகை, சிறு செடிகள் 2 வகை (தொட்டாச்சிணுங்கியும், துளசியும் – எந்த ஊர் கோயில்கள் எனத் தெரியவில்லை). இந்த கணக்கெடுப்பின் வாயிலாக வில்வ மரம்தான் அதிக கோயில்களில் தலமரமாக இருப்பதும் (324 கோயில்களில்) அதனைத் தொடர்வது வன்னி மரம் (63 கோயில்களில்) தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி கட்டுரையை இந்த உரலியிலிருந்து பெறலாம். இந்த கட்டுரையில் வேதாரண்யத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருக்கும் அடித்தண்டு சுமார் 800 செமீ சுற்றளவு உள்ள ஒரு மிகப் பழைய வன்னிமரத்தின் புகைப்படம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக வன்னி மரத்தைப் பார்க்கச் செல்லும் பயணம் இன்னும் முடிந்தபாடில்லை.
குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள்.
Gamble, J. S. (1995). Flora of the Presidency of Madras. Vol.1. Bishen Singh Mahendra Pal Singh. Dehra Dun, India.
Gunasekaran, M & Balasubramanian, P. (2012) Ethnomedicinal uses of Sthalavrikshas (temple trees) in Tamil Nadu, southern India. Ethnobotany Research & Applications 10:253-268. Downloaded from http://www.ethnobotanyjournal.org/vol10/i1547-3465-10-253.pdf
ஜெயசெந்தில்நாதன் (2009). தேவார வைப்புத் தலங்கள்-தல விளக்க வழிகாட்டி. வர்த்தமானன் பதிப்பகம். சென்னை.
சொல்வனம் இணைய இதழில் (இதழ் 95) 17-11-2013 அன்று வெளியான எனது கட்டுரையின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=29950
குப்பைத் தொட்டியைத் தேடி…
நான் இருப்பது வால்பாறையில். தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கிறேன். அந்தத் தோட்டங்களைச் சுற்றிலும் வனப்பகுதி இருப்பதால் வீட்டுக்கு அருகிலும் அவ்வப்போது காட்டு விலங்குகளைக் காண முடியும். வீடென்றிருந்தால் குப்பை சேரத்தான் செய்யும். காய்கறிக் கழிவு, மட்கும் குப்பையைத் தவிர, ஏனைய பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டிலுள்ள குப்பை டப்பாவில் சேகரித்து, மாதம் ஒருமுறை வால்பாறையில் உள்ள, பெரிய குப்பை கொட்டுமிடத்தில் கொண்டுசேர்ப்பது வழக்கம். வீட்டின் அருகில் வீசியெறிந்தால் காட்டுயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படும், வீட்டைச் சுற்றி பிளாஸ்டிக் குப்பைகள் சிதறி அந்த இயற்கையான சூழலைப் பாழ்படுத்தும். அவற்றை ஒன்றுசேர்த்து எரிப்பதென்பது ஆரோக்கியமானது அல்ல என்பதாலேயே இந்தக் கரிசனம்.
பயணம் ஆரம்பம்
சமீபத்தில் பொள்ளாச்சி போகும் வேலை இருந்ததால் வழக்கம்போல குப்பையை ஒரு சாக்குப்பையில் கட்டி, போகும் வழியில் எங்காவது குப்பைத்தொட்டி தென்பட்டால் அதில் சேர்த்துவிடலாம் என எண்ணி, காரில் அந்த மூட்டையை எடுத்துச் சென்றேன். அந்தப் பையைப் பார்த்ததும் காரோட்டி என்னவென்று கேட்டார். குப்பை என்றவுடன் ஒரு மாதிரியாகப் பார்த்தார். ஏதோ ஞாபகத்தில் அட்டகட்டியில், அதைக் குப்பைத்தொட்டியில் போட மறந்துவிட்டேன். ஆழியாரில் குப்பைத்தொட்டியைப் பார்த்தால் நிறுத்தும்படி சொன்னேன். ஆழியார் வந்தது. குப்பை மேடும் இருந்தது. ஆனால், குப்பைத்தொட்டியைக் காணவில்லை. சரி, அடுத்த ஊரில் இருக்கும் என நினைத்து ஆவலுடன் வழியெல்லாம் குப்பைத்தொட்டியைத் தேடிய எனக்கும் காரோட்டிக்கும் மிஞ்சியது ஏமாற்றமே.
நிழல் பார்த்துக் குப்பை கொட்டுவோம்
ஆனால், வழியெங்கும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. ஆழியாரிலிருந்து நாலுமுக்கு சுங்கம் வரும் வரை வழியில் தென்னந்தோப்புகள் இருக்கும். ஆழியாருக்கும் குரங்கு அருவிக்கும் வால்பாறைக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் அந்தத் தென்னந்தோப்பு நிழலைக் கண்டதும், அந்த இடத்தின் மேல் காதல் கொண்டு, தாங்கள் வரும் கார், வேன் முதலிய வாகனங்களை நிறுத்துவார்கள். சாலையோரமாக ஜமக்காளம், பாய் போட்டு அமர்ந்து, கொண்டுவந்த கட்டுச்சோற்றை பிளாஸ்டிக் தட்டில் வைத்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டு, பிளாஸ்டிக் கப்பில் தண்ணீரையும் அருந்திவிட்டு (சிலர் வேறு வகை தண்ணீரையையும் அருந்திவிட்டு), எல்லாம் முடிந்தபின், ஜமக்காளத்தைத் தூசு இல்லாமல் உதறி மடித்துக் காரினுள் பத்திரமாக வைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அவர்கள் வந்துபோனதற்கு அடையாளமாக அந்த பிளாஸ்டிக் குப்பைகளை விட்டுச் சென்றிருப்பார்கள். இவர்கள் போட்டுச்சென்ற குப்பையோடு குப்பையாக எனது குப்பையையும் போடச் சொன்னார் காரோட்டி. சுமார் 10 நிமிடங்கள் சுத்தம், சுகாதாரம் பற்றி அவருக்கு நான் உரையாற்றிய பிறகு, தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டுப் பேசாமல் காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.
குப்பை உங்களை வரவேற்கிறது
ஆழியாரில் சாலையோரத்தில் எந்தக் குப்பைத்தொட்டியும் இல்லாததால் அடுத்து வந்த புளியங்கண்டியில் இருக்கும் என நினைத்து, வழியெங்கும் குப்பைத்தொட்டியைத் தேடி அலைந்தன என் கண்கள். அங்கும் இல்லை. பின் அங்கலக்குறிச்சி (வரவேற்கும் பலகை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பை), வேடசந்தூர், நாலுமுக்கு சுங்கம், சண்முகாபுரம், பில்சின்னாம்பாளையம் கடந்து, கடைசியாகச் சமத்தூர் வந்தடைந்தபோது ஒரு குப்பைத்தொட்டி சாலையோரமாக (சுற்றிலும் குப்பைகள் சூழ) வீற்றிருந்தது. குப்பைத்தொட்டியின் உள்ளே இடமில்லாமல் இல்லை. குப்பைத்தொட்டியைப் பார்த்து மட்டிலா மகிழ்ச்சி அடைந்தது என் வாழ்வில் அதுதான் முதல்முறை.
கிடப்பில் போடப்பட்ட ‘குப்பை’
இந்தச் சாலையில் போகும் பயணிகளில், குப்பைத்தொட்டியில்தான் குப்பையைப் போட வேண்டும் எனும் வறட்டுப் பிடிவாதமுடையவர்கள் ஆழியாரிலிருந்து சுமார் 15 கி.மீ. கடந்து சமத்தூர் வர வேண்டும். ஆங்காங்கே குப்பைத்தொட்டியை வைத்துப் பராமரித்தால் நிச்சயமாக மக்களிடையே கண்ட இடத்தில் குப்பையை வீசி எறியும் பழக்கம் நிச்சயமாகக் குறையும் என்பது என் நம்பிக்கை. இந்த எண்ணத்தில் பொள்ளாச்சியில் உள்ள உதவி ஆட்சியருக்கும், கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு கடிதம் எழுதினேன் (அக்கடிதத்தை இங்கே காணலாம்). அந்தக் கடிதத்துடன் அங்கலக்குறிச்சியில் பார்த்த குப்பையையும் படம் எடுத்து அனுப்பியிருந்தேன். கடிதம் அனுப்பி 23 நாட்கள் கழித்து உதவி ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் (ஆனைமலை), செயல் அலுவலருக்கும் (கோட்டூர் பேருராட்சி) தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பி, அதன் நகலை எனக்கு அனுப்பியிருந்தார் (இந்த பதில் கடிதத்தை இங்கே காணலாம்).
இது நடந்து சுமார் சுமார் 5 மாதங்களுக்கும் மேலாகிறது. அவ்வழியே போய்வரும்போது அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே பயணிக்கிறேன். இதுவரை எந்த மாற்றமும் இல்லை. தகுந்த மாற்றத்தை உடனடியாக எதிர்பார்க்கவும் முடியாது. பொதுவாக, அரசு அலுவலகங்கள் மெதுவாகத்தான் செயல்படும் என்பது தெரிந்ததே. எனது கவலை, கோபம் எல்லாம் பொதுமக்களின்மீதுதான்.
எந்தச் சீர்கேட்டின் அடையாளம்?
சமத்தூரில் பார்த்த குப்பைத்தொட்டியைச் சுற்றிலும் குப்பை கொட்டப்பட்டுச் சிதறிக்கிடந்தது. அங்கலக்குறிச்சி என்ற பலகை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் (அதாவது, ஊரின் நுழைவாயிலிலேயே) குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. இப்படி, சாலையோரமெங்கும் பெருமளவில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எப்படி அப்புறப்படுத்துவது? ஊரெங்கிலும் இப்படி பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பது வெறும் சுற்றுச்சூழல் சீரழிவை மட்டுமா காட்டுகிறது? தனிமனித ஒழுக்கம், கலாச்சாரம், சமுதாயம் போன்றவற்றிலும் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டையுமல்லவா சுட்டிக்காட்டுகிறது. நமது பொறுப்பின்மையையும் சுற்றுப்புறச் சுகாதாரத்தில் நாம் கொண்டுள்ள அக்கறையின்மையையும் அல்லவா வெளிப்படுத்துகிறது.
குப்பையை குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும் என்கிற அறிவை பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எப்படிப் புகட்டுவது? கண்ட இடத்தில் குப்பைகளைத் தூக்கியெறியாமல் இருக்க என்ன செய்யலாம்? 10 மீட்டர் தூரத்துக்கு ஒன்றாக சாலையோரமெங்கும் குப்பைத்தொட்டியை வைக்கலாமா? இது கொஞ்சம் அதிகப்படியாக இருந்தால், ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று வைக்கலாமா? அதுவும் முடியாவிட்டால், ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு குப்பைத்தொட்டியை வைத்து, வழியில் நடுநடுவே ‘அடுத்த குப்பைத்தொட்டி இன்னும் 2 கிலோமீட்டர் தூரத்தில்’என்று பலகை வைக்கலாமா?
உலாலால லேலோ…
அரசியல்வாதிகளிடமும், நடிகர்களிடமும், அவர்களுடைய பிறந்த நாள்களின்போது அவர்களுடைய தொண்டர்களும் ரசிகர்களும் மரம், செடி, கொடி, புல், பூண்டு நடுவதோடு, ‘‘குப்பையைக் குப்பைத்தொட்டியில் போடவும்” என்று அறிக்கைவிட்டு, அதன்படி நடந்து காட்டச் சொல்லலாமா? நம்மைக் கவர்ந்திழுக்கும் நடிக, நடிகையரின் கவர்ச்சிகரமான படங்களை வைத்து ‘குப்பை கொட்ட இங்கே வருக’என்று விளம்பரப் பலகை வைக்கலாமா? ஒழுங்காகக் குப்பை கொட்டுபவர்களுக்கு இலவசப் பொருட்கள் கொடுத்து ஊக்குவிக்கலாமா? ஐ.பி.எல். விளையாடும் கிரிக்கெட் வீரர்களை, “உலாலால லேலோ… குப்பையக் குப்பைத் தொட்டியிலே கொட்டுங்கோ..” என்று பாட்டுப் பாட வைக்கலாமா?
இப்படிப் பல வழிகளில், நூதன முறையில் அறிவு புகட்டியும், வேண்டுகோள் விடுத்தும்கூட சொல்வதைக் கேட்காதவர்களை என்ன செய்யலாம்? என்ன செய்தால் இந்தப் பிரச்சினை ஒழியும்? ஏதாவது ஒரு நல்ல யோசனை சொல்லுங்கள்.
——
தி இந்து தமிழ் நாளிதழில் (20 நவம்பர் 2013 அன்று) வெளியான கட்டுரை இது. இக்கட்டுரையின் உரலி இதோ. PDF இதோ.
உயிரெழுத்து இதழுக்கான நேர்காணல்
உயிரெழுத்து மாத இதழில் (அக்டோபர் 2013 மலர் 7, இதழ் 4) வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர்/பசுமை எழுத்தாளர் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்களின் கேள்விகளும் எனது பதில்களும்.
மனித – விலங்கு மோதல்
மனித விலங்கு மோதல் சார்ந்து உங்களுடைய அனுபவங்கள். குறிப்பாக, யானை, சிறுத்தை போன்றவற்றுடன் மோதல் நிகழும் பகுதியில் இருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
முதலில் மனித-விலங்கு மோதல் என்ற பதத்தை மாற்றி மனிதர்-காட்டுயிர் எதிர்கொள்ளல் எனக்கொள்ளவேண்டும். எனது வீட்டை புலியோ, சிறுத்தையோ, யானையோ கடந்து சென்றால் அவை என்னை தாக்க வருகின்றன என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராவிதமாக நான் இக்காட்டுயிர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அவற்றின் வெகு அருகில் சென்று விட்டால், அவை பயத்தினாலோ, தம்மை தற்காத்துக்கொள்ளவோ என்னைத் தாக்கினால் அது எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு சமமானதே. அது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. எந்த ஒரு காட்டுயிரும் தானாக (சினிமாவில் காட்டுவதுபோல்) எந்த ஒரு மனிதரையும் துரத்தித் துரத்தி கடிப்பதோ, மிதிப்பதோ இல்லை, பழிவாங்குவதும் இல்லை. ஆகவே இது மோதல் அல்ல. நீங்கள் ஆட்கொல்லிகளைப் பற்றி (man-eaters) கேட்கலாம். இந்த ஓரிரு தனிப்பட்ட புலியோ, சிறுத்தையோ தொடர்ந்து மனிதர்களை குறிவைத்து தாக்கினால் அங்குள்ள அனைத்து இரைக்கொல்லிகளும் (Predators) அப்பண்பு உள்ளவையே எனக் கூறவே முடியாது. அப்படித் தாக்கும் அந்தத் தனிப்பட்ட விலங்கினை அந்த இடத்திலிருந்து விலக்கத்தான் வேண்டும். எனினும் அப்படி அடையாளம் காண்பது என்பதும் சிரமம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் இடம், நேரம், சூழல் அனைத்தையும் ஆராய்ந்து, மேன்மேலும் மனித உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.
நான் தற்போது பணி புரிவது வால்பாறையில். சுமார் 220 சதுர கி.மீ. பரப்பளவவில் அமைந்துள்ள இங்கு பெரும்பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிரம்பியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்து தேயிலை பயிரிட ஏதுவான உயரமும், சூழலும் இருந்ததால் இங்குள்ள மழைக்காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை அமைத்தனர். பயிரிடத் தகுதியில்லாத சில இடங்களில் காடுகளை அப்படியே விட்டு வைத்து விட்டனர். பச்சைப் பாலைவனம் என சூழியலாளர்களால் அழைக்கப்படும் தேயிலைத் தோட்டத்தில் இன்று இந்தத் துண்டுச்சோலைகள் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் இருப்பது ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி தேசிய பூங்கா), பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் வனவிலங்கு சரணாலயம் முதலிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் உள்ள (யானை, சிறுத்தை முதலிய) விலங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்திற்கேற்ப உணவு, நீர், உறைவிடம் தேடி வனத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறோர் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்க்கு முன் இப்பகுதியில் நாம் குடியேறி இவ்வுயிரினங்களின் உறைவிடங்களை அழித்து விட்டு, இன்று அவை நாமிருக்கும் இடங்களுக்கு வரக்கூடாது என்று சொல்கிறோம்.
இவ்வளவு காலம் இல்லாமல், ஏன் இப்போது மனித – விலங்கு மோதல் எதிர்கொள்ளல் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது?
மனித-விலங்கு எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்தே இருந்து வரும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகையினால் காட்டுயிர்களின் உறைவிடங்கள் நாளுக்கு நாள் அருகி வருகிறது. காடழிப்பு, காட்டுயிர்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், சரியான (அறிவியல் பூர்வமான) மேலாண்மையின்மை, நீண்டகால தீர்வு காணும் எண்ணத்துடன் செயல்படாமை முதலியவையே இவ்வகையான நிகழ்வுகளுக்குக் காரணம். மேலும் காட்டுயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை வனத்துறையினர் மட்டும் தான் சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. பல அரசுத் துறைகளும், ஊடகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் – ஊடகங்கள் காட்டுயிர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதும், இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிது படுத்துவதும் செய்தித்தாள்களிலும், செய்திகளிலும் பார்க்கலாம். ஏற்பட்ட சம்பவத்தின் தீவிரத்தையும், இப்பிரச்சனையை தீர்க்க/சமாளிக்க/தணிக்க செய்ய வேண்டியவைகளை நன்கு உணர்ந்து செயல் பட வேண்டியது ஊடகங்களில் கடமை. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் யானையை ஏதோ ஒரு வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
விலங்குகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
யானை, சிறுத்தை போன்ற காட்டுயிர்கள் நம் வீட்டின் வெகு அருகில் இருந்தால் நாம் எப்படிப்பட்ட மனவுளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறோம். அதே போலத்தான் ஓரிடத்திலிருந்து யானைகளை பட்டாசு வெடித்து, டயரை எரியவிட்டு மேலே விட்டெறிந்து துரத்தும் போது அவையும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றன. அச்சமயத்தில் குட்டியுடன் இருக்கும் போது இந்த அழுத்தம் பன்மடங்காகிறது. பகலில் இப்படி ஓட ஓட விரட்டுவதால் அவை ஓரிடத்தில் நிம்மதியாக இருந்து சாப்பிட முடியாமல் (யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-200 கி.லோ எடை உணவும், சுமார் 200 லிட்டர் நீரும் அவசியம்) போகிறது. விளைவு, இரவு நேரங்களில் ரேஷன் கடைகளுக்கும், சத்துணவுக்கூடங்களுக்கும், அவற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு முதலியவற்றை சாப்பிடுகின்றன.
இது போலவே சிறுத்தை போன்ற இரைக்கொல்லிகளை நம் வீட்டினருகே பார்த்த உடனேயே அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் முறையிடுவதால் அவர்களும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி கூண்டு வைத்து அவற்றை பிடித்துவிடுகின்றனர். அதைக் கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் பிரச்சனை தீர்ந்து விடாது. இது ஒரு நீண்ட காலத் தீர்வு அல்ல. அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் போதும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் மன அழுத்தம், குழப்பம், மன உளைச்சல் காரணமாக அவை எரிச்சலைடைகின்றன. அவை கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க நினைக்கும் போது காயங்களும் ஏற்படுகின்றது. அந்த குறிப்பிட்ட விலங்கை வேறு இடங்களில் கொண்டு விடும் போது காயம் காரணமாக அவை வேட்டையாட முடியாமல் அங்குள்ள கால்நடைகளைத் தாக்குகின்றன. இது கிட்டத்தட்ட சில இந்திய சினிமாக்களில் காண்பிப்பது போல் ஒரு நல்லவனை/நிரபராதியை ஜெயிலில் போட்டு குற்றவாளி ஆக்கி அவன் விடுதலையாகும் போது கெட்டவனாக மாறி வருவது போலத்தான்.
இதனால் தமிழகத்தில் இறந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை என்ன?
இவ்வகையான புள்ளிவிபரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் மனித-விலங்கு எதிர்கொள்ளலால் தான் ஒரு விலங்கு மரணமடைந்தது என அறுதியிட்டுக் கூறுவது எல்லா சமயங்களிலும் சாத்தியமில்லை. எனது சக ஊழியர் ஆனந்தகுமாரின் கூற்றுப்படி வால்பாறை பகுதியில் 4 யானைகள் (2 – தவறுதலாக பூச்சிமருந்தை உட்கொண்டு, 2 – மின்வேலி மின்சாரத்தினால் தாக்கப்பட்டு) மரணமடைந்துள்ளன. சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2007-2012 வரை வால்பாறை அதனை அடுத்தப் பகுதிகளில் 12 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றிற்கு உடலில் (பெரும்பாலும் முகத்தில்) காயம் ஏற்பட்டது. வேறு இடங்களில் கொண்டுசெல்லப்பட்டவை உயிருடன் இருக்கின்றனவா இல்லையா என்பதை செல்லுவது கடினம்.
இதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்க முடியுமா?. மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க என்.சி.எஃப் அமைப்பு (Nature Conservation Foundation – NCF) மேற்கொண்டுள்ள முயற்சியின் அறிவியல் பின்னணி ?
நான் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் வால்பாறையை மையமாக வைத்தே. மேலும் நான் மனித-விலங்கு எதிர்கொள்ளலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. எனது நண்பர்களும், சக ஊழியர்களும் இப்பணியில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது பணி, அவர்களது நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களிடன் கொண்டு போய் சேர்ப்பது.
எனது சக ஊழியர் ஆனந்தகுமார் வால்பாறைப் பகுதியில் யானைகளின் இடம்பெயர்வையும், அவற்றின் பண்புகளையும், யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதத்தில், எங்கெங்கே பாதிப்பு ஏற்படுகின்றது, அந்த பாதிப்புகளை தணிக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
வால்பாறையைச் சுற்றிலும் வனப்பகுதியாதலால் காலகாலமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வேளையில் அவை மனிதர்களையும், குடியிருப்புகளையும் எதிர்கொள்வதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. யானை-மனிதர்கள் எதிர்கொள்ளலை சரியான முறையில் சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும், அவற்றின் இடம்பெயறும் பண்பை அறிந்திருத்தல் அவசியம். யானைகளின் நடமாட்டத்தைப் பற்றிய அறிவு இங்கு வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
வால்பாறைப் பகுதியில் உள்ள யானைத் திரள்களை பின் தொடர்ந்து அவை போகும் இடத்திற்கெல்லாம் சென்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அவை இருக்குமிடத்தை குறித்துக்கொள்ளப்பட்டது. யானைகளால் ஏற்படும் சேதங்கள் யாவும் நேரில் சென்று மதிப்பிடப்பட்டது. மனித உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. வால்பாறைப் பகுதியில் ஒர் ஆண்டில் சுமார் 80-100 யானைகள் நடமாடுகின்றன. எனினும் மூன்று யானைக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 யானைகள் 8-10 மாதங்கள் இப்பகுதியில் நடமாடுகின்றன. இங்குள்ள காலங்களில் யானைகள் பகலில் பெரும்பாலும் மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், ஆற்றோரக்காடுகளிலும்தான் தென்பட்டன. காபி, சூடக்காடு (யூகலிப்டஸ்), தேயிலை தோட்டப் பகுதிகளை அவை அதிகம் விரும்புவதில்லை. எனினும் இரவு நேரங்களில் ஒரு துண்டுச்சோலையிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும்போது மட்டுமே தோட்டப்பகுதிகளின் வழியாக சென்றன.
இந்த ஆராய்ச்சி முடிவின் படி நடு ஆறு – சோலையார் ஆற்றோரக் காடுகள் யானைகள் நடமாட்டத்திற்கான முக்கியமான பகுதிகள் என்பது அறியப்பட்டது. ஆற்றங்கரையின் இருபுறமும் சுமார் 20 மீ அகலத்தில் இயற்கையாக வளரும் இம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும், தாவரங்களையும் நட்டு வளர்த்தால் யானைகளின் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும், அவை மனிதர்களை எதிர்கொள்வதை வெகுவாகக் குறைக்கவும் முடியும். ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால் அவற்றை எடுக்கும் வேளையில் இந்தக் கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ இருப்பதால் அங்கும் சில வீடுகளிலும் சேதங்கள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கட்டிடங்களை, குடியிருப்புப் பகுதியிலிருந்து தூரமாக அமைப்பது, உணவுப் பொருட்களை ஓரிடத்தில் வைத்திடாமல் நடமாடும் விநியோகமாக மாற்றுவதால் இவற்றிற்கு யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும்.
மனித-யானை எதிர்கொள்ளல் வால்பாறையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தாலும், அதிகமாக இருப்பது துண்டுச்சோலைகள் இல்லாத அல்லது மிகக் குறைவான வனப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் தான். மனிதர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான்.
மனித-யானை எதிர்கொள்ளலின் மற்றொரு விளைவு மனித உயிரிழப்பு. இதை மட்டுப்படுத்த, முற்றிலுமாக தவிர்க்க, பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களை கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதுவே, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்து நிலைக்கவும், யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். மனித அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில், ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானையும் மனிதனும் எதிர்பாரா விதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும் சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் இதற்கான முக்கிய காரணம். அதிக உயிரிழப்பு ஏற்பட்டது டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் தான். ஆகவே, தமிழக வனத்துறையினரின் ஆதரவுடன், வால்பாறைப் பகுதியில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவை ஏற்படுத்தினோம்.
யானைகள் இருக்குமிடத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க மூன்று முறைகள் பின்பற்றப்பட்டது.
1. யானைகள் நடமாட்டம், இருக்குமிடம் முதலிய தகவல்கள் மாலை வேளைகளில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.
2. யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் (2 கி.மீ.சுற்றளவில்) உள்ள பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் அவர்களுடைய கைபேசியில் யானைகள் இருக்குமிடம் பற்றிய குறுஞ்செய்தியை (SMS) ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டது.
3. மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. யானைகள் அச்சுற்றுப்புறங்களில் (2 கி.மீ. தூரத்துக்குள்ளாக) இருந்தால் இவ்விளக்கு எரிய வைக்கப்படும். இந்த விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே செயல்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டது. நாளடைவில் பொதுமக்களே இவ்விளக்கை செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.
வால்பாறைப்பகுதியில்மனித-யானைஎதிர்கொள்ளலால்ஏற்படும்விளைவுகளைசமாளிக்க, சரியான (அறிவியல்பூர்வமான) முறையில்கையாள, பாதிப்பினைதணிக்கஎடுக்கப்படும்நடவடிக்கைகள், நீண்டகாலம்நீடித்துநிலைக்கபொதுமக்களைஈடுபடுத்துதல்எந்தஅளவிற்குஅவசியம்என்பதைஇந்த ஆராய்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது.
சாலைபலி (Roadkill)
காடுகளைப் பிளந்து செல்லும் சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி பற்றி. இந்தச் சாலைகள் உயிரினங்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.
இந்த நீளவாக்கில் அமைந்த கட்டமைப்புகள் காட்டுயிர்களின் வழித்தடங்களில் (animal corridors) குறுக்கீடுகளாகவும் சில உயிரினங்களுக்கு நீளவாக்கில் அமைந்த தடைகளாகவும் (barrier) அமைகிறது. காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை பகுதியில் வாகனப் போக்குவரத்தினால், உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியை 2011 தொடங்கியுள்ளோம்.
இது மனஅழுத்தத்தை (ஸ்டிரெஸ்) தரும் அனுபவமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?
தினமும் காலை வேளையில் சாலையில் நடந்து சென்று இப்படி உயிரிழந்த காட்டுயிர்களை எண்ணுவதும், பட்டியலிடுவதும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுப்பதில்லை. எனினும் மென்மேலும் இவ்விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளனின் கடமை.
குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் இந்தச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் உயிரினங்கள் தொடர்பாக ஏதாவது கணக்கெடுப்பு இருக்கிறதா?
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இவ்வகையான ஆராய்ச்சி அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆராய்ச்சி முடிந்தவுடன் பரிந்துரைகளைக் கொண்ட கட்டுரையையும், ரிப்போட்டையும் எழுதி பதிப்பித்த பின் அந்த வேலை முடிந்து விடும். அது மட்டுமே போதாது. ஆராய்ச்சியின் முடிவில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? அப்படியே செயல் படுத்தப்பட்டாலும் அவை எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்ததா? எந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எங்களது ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை. எனினும் இது வரை செய்த களப்பணியின் தரவுகள் சில – கோடைகாலத்தை விட மழைக்காலங்களில் சாலையில் பல உயிரினங்கள் அதிலும் குறிப்பாக தவளைகளும், பாம்புகளும் அரைபட்டுச் சாகின்றன. பாலூட்டிகளைப் பொறுத்தவரை கடம்பை மான், கேளையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலையணில், மரநாய், புனுகுப் பூனை, முள்ளம்பன்றி, சருகு மான் முதலியன சாலையில் அரைபட்டு உயிரிழந்துள்ளன.
இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?
ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்
1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,
2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,
3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது.
காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.
பசுமை இலக்கியம்
தமிழில் பசுமை எழுத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது என்னைவிட இத்துறையில் மூத்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும்நான் பார்த்த வரையில் இயற்கை வரலாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள் தான் அதிகம். இவையும் அவசியம் தான். அதே வேளையில் பல வித உயிரினங்களின் கையேடுகள் (Field guides), இத்துறை சார்ந்த தரமான நூல்கள், மொழிபெயர்ப்புகள் இன்னும் வரவேண்டும். வேங்கைப்புலிகளைப் பற்றிய கானுறை வேங்கை (கே. உல்லாஸ் கரந்த் – தமிழில் தியடோர் பாஸ்கரன்), பறவையியலைப் பற்றிய நூலான “அதோ அந்த பறவை போல (எழுதியவர் ச. முகமது அலி) போன்ற சில நூல்களைத் தவிர இத்துறை சார்ந்த நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதோடு களப்பணி முறைகள், விளக்கக் கையேடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். பாலுட்டிகள், பறவைகள், சில பாம்புகள் தவிர பல உயிரினங்களுக்கு தமிழில் பெயரே கிடையாது. அவற்றிற்கெல்லாம் பெயரிட வேண்டும்.
துறைசார்ந்த நூல்களும் (technical, reference books) கையேடுகளும், கட்டுரைகளும் மட்டுமே பசுமை இலக்கியம் இல்லை. சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, புறவுலகு சார்ந்த தத்துவார்த்தமான சொல்லாடல்களும், புதினங்களும், கவிதைகளும், குழந்தைகளுக்கான கதைகளும் என மென்மேலும் பதிப்புகள் வெளிவரவேண்டும். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
தமிழ் ஊடகச் சூழல் இயற்கை பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறதா. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் நடக்கின்றனவா?
சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு முதலியவை பெரும்பாலான மாத, வார இதழ்களிலும், தினசரிகளிலும் கிட்டத்தட்ட பக்கத்தை நிரப்பும் ஒரு அம்சமாகவே இருக்கும். சில பத்திரிக்கைகளில் இவ்வகையான பகுதிகள் இருக்கவே இருக்காது. சினிமாவும், அரசியலும் தான் மேலோங்கி இருக்கும். ஆன்மீகத்திற்கு, சிறுவர்களுக்கு, சினிமாவிற்கு, சமையலுக்கு என தினமும் ஒரு இணைப்பை தினசரிகள் வழங்கும் போது சுற்றுச்சூழலுக்கு, இயற்கை வரலாறு சங்கதிகளுக்கு என ஏன் வரக்கூடாது? காட்டுயிர், புதிய கல்வி, துளிர், பூவுலகு, கலைக்கதிர் முதலிய பத்திரிக்கைகளைத் தவிர. இது போன்ற பத்திரிக்கைகள் இருப்பது கூட எத்தனை பேருக்கு தெரியும்?
அதுபோல சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலி எழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.
எனினும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனும் எண்ணமுடையவர்கள், ஊடகங்களை மட்டுமே குறை கூறாமல், முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் அணுகி அவர்களுக்கு விளக்கமளித்தும், பத்திரிக்கையாளர்களுக்கு பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற கருத்தரங்குகளை நாங்கள் இப்பகுதியில் நடத்தியும், பங்கு கொண்டும் இருக்கிறோம். ஒரு சில ரிப்போட்டர்களிடம் மாற்றத்தைக் காணவும் முடிகிறது.
புத்தகம், இதழ்களில் எழுதுவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு பரவலாகும் என்று நம்புகிறீர்களா?
அதுவும் உதவும். சுற்றுச்சூழல் மாசு இப்பூமிப்பந்தினை விழுங்கிக் கொண்டும், இயற்கையான வாழிடங்கள் அருகியும் வரும் இச்சூழலில் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த புறவுலகின் பால் கரிசனம் கொண்டுள்ளவர்கள் எல்லா வகையான ஊடகச் சூழலையும் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.
——————————————————————————
இக்கட்டுரையின் PDF ஐ இங்கே பெறலாம்.