UYIRI

Nature writing in Tamil

Archive for December 2013

2013 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்

with one comment

மீன்பிடிக்கும் கூழைக்கடாக்கள்

மீன்பிடிக்கும் கூழைக்கடாக்கள்

மீன்பிடிக்கும் கூழைக்கடாக்கள்: சாம்பல் கூழைக்கடாக்கள் கூட்டமாக சேர்ந்து, ஒரு அரை வளைய அமைப்பை ஏற்படுத்தி, தமது இறக்கையை மடித்துத் தூக்கி, மெல்ல நீந்தி, நீரின் மேற்பரப்பில் இருக்கும் மீன்களை அணைத்து ஆழம் குறைந்த பகுதிக்கு தள்ளிச் செல்லும். தகுந்த இடம் பார்த்து, சுற்றி வளைத்து தடாலெனப் பாய்ந்து தமது பை போன்ற கீழ்அலகினால் மீன்களைப் பிடித்துண்ணும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும்.

*****

நாட்டுக் குரங்கு தம்பதியினர்
நாட்டுக் குரங்கு தம்பதியினர்

நாட்டுக்குரங்கு தம்பதியினர்: நாட்டுக்குரங்கு (Bonnet macaque) சோடி ஒன்று கலவி மேற்கொள்ளும் காட்சி. இந்தக் காட்சியைப் படமெடுத்துக் கொண்டிருந்த போது ஆண் குரங்கு என்னைப் பார்த்து கோபப்படுவது போல் வாயைப் பிளந்து பல்லைக் காட்டியது. உடனே அந்த இடத்தை விட்டு அகன்று விட்டேன். பெண் நாட்டுக்குரங்கின் கருத்தரிக்கும் (estrous cycle) காலம் ஓரிரு நாட்களே. ஆகவே குறுகிய காலத்திற்குள் ஆண் துணையைத் தேடி இணைசேர வேண்டும். அக்காலகட்டத்தில் ஒரிரு முறைதான் கலவி கொள்ளும். ஆணும் ஒரே கலவியில் தனது விந்தணுவை அவளது உடலில் செலுத்தும் (Single mount Ejaculation). நாட்டுக்குரங்கின் சராசரி ஆயுட்காலம் 30. பெண்ணானது சுமார் 27 வயது வரை கருத்தரிக்கும். இந்தக் குரங்குகளுக்கு உணவு கொடுத்தல் தவறு. நாம் கொடுப்பதாலேயே, அவை மீண்டும் மீண்டும் நம்மிடம் உணவினை எதிர்பார்க்கின்றன. (Thanks Dr. Ananda kumar for inputs)

*****

பாறு
பாறு

பாறு: இந்திய பாறுக்கழுகு (Indian Vulture Gyps indicus) பிணந்திண்ணிக்கழுகு என அறியப்படுவவை. ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் வானில் நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்தன. இறந்து போன கால்நடைகளை உண்டு வாழ்பவை. ஆனால் நாம் கால்நடைகளுக்குக் போடும் ஊசி மருந்தான டைக்லோபீனாக் (Diclofenac) இவற்றிற்கு நஞ்சாகியதால், இன்று அழிவின் விளிம்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முதுமலை வனப்பகுதிகளில் மட்டும் இப்போது ஒரு சிறிய கூட்டம் எஞ்சியுள்ளது.

*****

வரையாடு
வரையாடு

வரையாடு: தமிழ்நாட்டின் மாநில விலங்கு. ஓரிடவாழ்வி, அதாவது உலகில் வேறெங்கும் இன்றி, இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் ஒர் உயிரினம். உயரமான மலைப்பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் தென்படும். எண்ணிக்கையில் சுமார் 2000க்கும் குறைவாகவே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அருகிவரும் வாழிடம், கள்ள வேட்டை, அவை வாழும் புல்வெளிப் பகுதிகளில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்ட களைத்தாவரங்களின் பெருக்கம், சாலைகளாலும், ஏனைய நீர்த்தேக்கங்கள், அணைகள் போன்ற கட்டுமானங்களாலும்  துண்டாக்கப்படும் வாழிடங்கள் முதலிய காரணங்களால் நாளுக்கு நாள் அருகி வருகின்றன.

*****

குவளைக்குள் சிலந்தி
குவளைக்குள் சிலந்தி

குவளைக்குள் சிலந்தி: அது ஒரு அதிகாலை நேரம், அடுப்படிக்குள் நுழைந்து காபி போடுவதற்கு தயாரான வேளையில், குவளையை எடுக்கச் சென்றபோது அதனுள் ஒரு சிலந்தி. உற்று நோக்கிய போது அது எதையோ மும்முரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கு அன்றைய காலை உணவு ஒர் கரப்பான்பூச்சி. பெரிய சிலந்திகளைப் பார்த்தால் சிலர் பயப்படுவார்கள், இன்னும் சிலர் அடித்தே கொன்று விடுவார்கள். ஆனால் சிலந்திகள் நமக்கு நன்மை செய்யும் உயிரினம். கரப்பான் போன்ற பூச்சிகளைத் தின்று அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன. என் வீட்டில் எனக்குத் தெரிந்து இது போன்ற பெரிய 6 சிலந்திகள் என்னுடன் என் வீட்டில் வாழ்கின்றன!

*****

பழந்திண்ணி வவ்வால்
பழந்திண்ணி வவ்வால்

பழந்திண்ணி வவ்வால்: புளியமரத்தின் கிளையினை தன் கால்களால் பற்றி, தனது இறக்கையினால் உடலை போர்வை போல் போர்த்தி, தலைகீழாகத் தொங்கிக்கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஒரு பழந்திண்ணி வவ்வால். இவை பறவை இனத்தைச் சேர்ந்தவை அல்ல. நம்மைப் போல் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி இனம். இவற்றின் இறக்கை மாறுபாடடைந்த கை. விரல்களுக்கிடையில் உள்ள மெல்லிய தோல் தான் இறக்கையாகிறது. காற்றில் பறந்து செல்வதற்கேற்ப பரிணமித்துள்ள வவ்வால் இனம் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.

*****

யானைகளும் செங்கல் சூளைகளும்
யானைகளும் செங்கல் சூளைகளும்

யானைகளும் செங்கல் சூளைகளும்: கோவையில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் எடுக்கப்பட்ட படம். படத்திலுள்ள கோபுரங்கள் யாவும் ஒவ்வொரு செங்கல் சூளை என்பதை அறியவும். சரி இதற்கும் யானைகளுக்கும் என்ன சம்பந்தம்? செங்கல் சூளைகளில் தீ மூட்ட பனைமரங்கள் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.  அப்பனைமரத்தின் உள்ளிருக்கும் மென்மையான மாவு போன்ற பகுதியைச் சுவைப்பதற்காக யானைகள் அப்பகுதிக்கு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரக் காடுகளின் ஓரத்தில், அதுவும் யானைகளின் வழித்தடங்களில் கணக்கில்லாமல் செங்கல் சூளைகளை தொடங்கலாம். ஆனால் யானைகள் அங்கே வரக்கூடாது. வந்தால் விரட்டி அடிப்போம்.

*****

சாலையில் சிங்கவால் குரங்குகள்
சாலையில் சிங்கவால் குரங்குகள்

சாலையில் சிங்கவால் குரங்குகள்: சுற்றிலும் தேயிலை நடுவில் தீவு போல் ஒரு சிறிய காட்டுப்பகுதி. அதில் சுமார் 100 சிங்கவால் குரங்குகள் (சோலை மந்தி). இதுதான் வால்பாறையில் உள்ள புதுத்தோட்டம் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் அரிய வகை குரங்கினம் இது. அடர்ந்த, சீரழிக்கப்படாத காட்டில் இவை மர விதானங்களில் மட்டுமே வசிக்கும். ஆனால் இந்த தீவுக் காட்டில் போதிய இடமும், தடையின்றி இடம்பெயர தொடர்ந்த மரவிதானமும் இல்லாத காரணத்தால் இவை தரைக்கு வந்து விட்டன. அந்தச் சிறிய காட்டின் குறுக்கே நாளுக்கு நாள் அகலப்படுத்தப்படும் சாலை. சீறி வரும் வாகனங்கள், பொறுப்பின்றி இக்குரங்குகளுக்கு உணவிடும் விவரமறியாத சுற்றுலாவினராலும் ஆண்டிற்கு ஓன்றிரண்டு சாலையில் அடிபட்டு இறக்கின்றன.

*****

பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை

பிளாஸ்டிக் குப்பைகள், கட்டிடங்கள், பறவைகள் – இதுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். பல நாட்களாக தினசரிகளில் படித்தும், நண்பர்கள் வாயிலாகவும் அறிந்து இருந்தாலும் இந்த ஆண்டுதான் அங்கு சென்று பறவைகளை கண்டுகளிக்க வாய்ப்பு அமைந்தது. வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டிகளையும், நீல தாழை கோழிகளையும்  (படத்தில் இருக்கும் பறவை)அதிக அளவில் பார்க்க முடிந்தது. இந்த இடம் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. ஏரியின் மத்தியில் பிளாஸ்டிக் குப்பை மேடு வேறு. அசுத்தமான இடத்தில் இந்த பறவைகளைப் பார்க்க பாவமாக இருந்தது.

*****

மனிதன்-சிறுத்தை எதிர்கொள்ளல்
மனிதன்-சிறுத்தை எதிர்கொள்ளல்

மனிதன்-சிறுத்தை எதிர்கொள்ளல்: உத்தராஞ்சல் சென்றிருந்த போது அங்குள்ள ஒரு வனப்பாதையில் பார்த்தது. மனிதனின் கால்தடமும், சிறுத்தையின் கால்தடமும் எதிரெதிரே அமைந்திருந்தது. சிறுத்தைகள் வேண்டுமென்றே (சில சினிமாக்களிலும், பத்திரிக்கைகளிலும் சித்தரிப்பது போல) மனிதர்களைத் தாக்குவதில்லை. அவை நாம் இருக்கும் இடத்தின் அருகில் இருந்தாலே அவற்றிற்கும் நமக்கும் மோதல் எனக் கொள்ளலாகாது. அவை பெரும்பாலும் மனிதர்களை விட்டு விலகிச் செல்லவே விரும்புகின்றன. அதை நினைவுபடுத்தும் வண்ணம் இந்த படம் அமைந்ததில் மகிழ்ச்சி.

*****

சிவப்பு நத்தை
சிவப்பு நத்தை

சிவப்பு நத்தை: Indrella ampulla என அறிவியல் அறிஞர்களால் அழைக்கப்படும் இந்த அழகான சிவப்பு நத்தையை பார்க்க வேண்டுமென்பது எனது நெடுநாளைய ஆசை. இந்த ஆண்டுதான் அது நிறைவேறியது. இரவில் வண்டியில் சென்ற போது முன் சென்ற எங்களது ஒரு வண்டி சட்டென நின்றது. இறங்கிச் சென்று பார்த்த போது இந்த நத்தை சாலையைக் கடந்து மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. எதிரே வாகனம் வரும் அறிகுறி தெரிந்தவுடன் அதை எடுத்து சாலையின் (அது செல்லும் திசையில்) எதிர்புறம் கொண்டு விட்டோம். அப்படி என்ன சிறப்பு இந்த நத்தைக்கு? மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் அரிய வகை நத்தை இது. ஈரப்பதம் மிக்க காடுகளிலேயே பார்க்க முடியும்.

******

கருந்தொண்டை பட்டாணிக்குருவி
கருந்தொண்டை பட்டாணிக்குருவி

ஒரு வாரம் 200 பறவை வகைகள்: பறவைகளைக் காண அன்மையில் உத்தராஞ்சலில் (தற்போதைய உத்தரகண்ட்) இருக்கும் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்திற்கும் அதனை அடுத்த வனப்பகுதிகளுக்கும் சென்றிருந்தேன். ஒரு வார காலத்தில் சுமார் 200 வகையான பறவைகளை கண்டு களித்தோம். அதில் ஒன்று தான் இந்த கருந்தொண்டை பட்டாணிக்குருவி (Black-throated Tit). (Thanks Harsha and Ritesh for this memorable birding trip).

Written by P Jeganathan

December 31, 2013 at 10:55 pm

ஊசிவால் குளவிகள்

leave a comment »

வீட்டினுள் சன்னலுக்குப் பக்கத்தில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்த போது அங்கு பறந்து வந்த பூச்சியின் மேல் கவனம் திரும்பியது. கண்ணாடி சன்னல் கதவு மரச்சட்டங்கள் கொண்டது. அந்தப் பூச்சி மரச்சட்டத்தினருகில் பறந்து கொண்டே இருந்தது. எனது கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் அதன் உருவம். அப்படி ஒன்றும் பெரிய பூச்சி இல்லை, இருந்தாலும் பறக்கும் போது அதன் நீண்ட கால்கள் கீழே தொங்கிக் கொண்டும், வயிற்றுப்பகுதியிலிருந்து ஊசி போன்ற நீண்ட அமைப்பும் இருந்ததை காணமுடிந்தது. இந்த வகைப் பூச்சியை பார்ப்பது இதுதான் முதல் முறை. கரிய நிறத்தில் இருந்தது. பறந்து கொண்டே இருந்ததால் சரியாக வேறு அங்க அடையாளங்களை கவனிக்க முடியவில்லை. சுமார் 30 வினாடிகள் மரச்சட்டத்தின் மேலும் கீழும் பறந்து திடீரென பார்வையை விட்டு அகன்றது.

இரண்டு நாள் கழித்து களப்பணிக்காக நாற்றுப்பண்ணைக்குச் சென்ற போது மறுபடியும் இப்பூச்சியைக் கண்டேன். அப்போது காமிரா கையில் இருந்தது. சிறு பூச்சிகளை படமெடுக்க உதவும் மேக்ரோ லென்சை (Macro lens) பொருத்தி தயாராக வைத்துக்கொண்டேன். வழக்கம் போல பறந்துகொண்டே இருந்தது, அமரும் போது தானே படமெடுக்க முடியும். ஆகவே அப்பூச்சியை கவனிக்க ஆரம்பித்தேன். கீழே விழுந்து கிடந்த ஒரு பழைய பெரிய மரத்தண்டின் மேற்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. நீளவாக்கில் தரையில் கிடந்து மட்கி வரும் மரத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பறந்தபடியே இருந்தது. மரத்தின் மேற்பரப்பில் அவ்வப்போது கால்களை தட்டித் தட்டி பறப்பது போலத் தெரிந்தது. வெகு அருகில் வேகமாகச் சென்றால் கண் காணமுடியாத இடத்திற்கு பறந்தோடிவிடும் என்பதால், மெல்ல மெல்ல அம்மரத்தின் அருகில் சென்று அமர்ந்த்தேன். மழை பெய்திருந்ததால் தரையும், அந்த மட்கும் மரமும் ஈரமாக இருந்தது. சுமார் 5 நிமிட கவனிப்பிற்குப் பின் புரிந்தது அந்தப் பூச்சி ஒரு குளவி வகையைச் சேர்ந்தது என்பது. அதுவும் ஒரு விசித்திரமான ஊசிவால் குளவி வகை என்பது புரிந்தது. இந்த வகையான குளவியை புகைப்படங்களில் கண்டதுண்டு எனினும் நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை.  ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த போதே கண்களை விட்டு அகன்றது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன், ஒருவேளை திரும்பவும் அங்கு பறந்து வரக்கூடும் எனும் நம்பிக்கையில். ஆனால் மழைதான் வந்தது. இரண்டாவது முறையும் படம் பிடிக்க முடியாததால் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

ஓரிரு நாட்கள் கழித்து வீட்டில் இருந்தபோது அப்பா என்னை அழைத்து, அன்று பார்த்த பூச்சி வாசல் கதவின் அருகில் இருப்பதாகச் சொன்னார். சென்று பார்த்தபோது ஊசிவால் குளவி (Ichneumon Wasp)!

வீட்டில் சன்னலை திறந்து வைத்திருக்கும் போது சில நேரங்களில் பூச்சிகள் உள்ளே வந்து, வெளியில் செல்ல முடியாமல் சுவற்றிலும், கண்ணாடி சன்னல் கதவுகளிலும் முட்டி முட்டி பறந்து கொண்டிருக்கும். அவை வெளியேற முடியாமல் தவிப்பதை பார்க்க பாவமாக இருக்கும். ரீங்காரமிடும் பூச்சிகளாக இருந்தால் நமக்குத் தெரிந்து விடும். ஆனால் சில பூச்சிகள் ஓசை ஏதும் எழுப்பாமல் பறந்துகொண்டிருந்தால் அவை நம் கவனத்திற்கு வராது, நாம் பார்த்தால் ஒழிய. அப்படிப்பட்ட பூச்சிகள் சில சன்னல் ஓரங்களில் மடிந்து கிடக்கும். அதைத் தவிர்க்க ஏதாவது பூச்சிகள் வெளியே போக முடியாமல் பறந்து கொண்டிருந்தால் உடனே சன்னலை அல்லது வாசல் கதவை திறந்து வைத்து அவை வெளியே பறந்து செல்ல ஏது செய்வது என் வழக்கம். அவை வெளியேறும் வரை காத்திருந்து கதவை உடனடியாக மூடிவிடுவேன். இந்த ஊசிவால் குளவியும் அப்படித்தான் உள்ளே வந்திருக்க வேண்டும். வாசல் கதவின் ஓரத்தில் இருந்த ஒட்டடையில் சிக்கிக் கொண்டு மெதுவாக சிரமத்துடன் மேலே ஏறுவதும் பின்பு கீழே விழுவதுமாக இருந்தது. பாவம், வெகுநேரமாக இப்படி வெளியே போக முயன்று களைத்துப் போயிருக்க வேண்டும். அது வெளியே செல்ல கதவைத் திறக்கும் முன் காமிராவில் வீடியோவும், படமும் எடுத்துக்கொண்டேன். பின்பு ஒரு விளக்குமாத்துக் குச்சியை எடுத்து அதனருகில் வைத்த போது அதன் மேலே மெல்ல ஏறிக்கொண்டது. வெளியில் எடுத்துச் சென்றவுடன் பறந்து போய் விடும் என நினைத்தேன். ஆனால் அக்குச்சியில் அமர்ந்து கால்களால் உடலை சுத்தம் செய்து கொண்டிருந்து விட்டு ஒரிரு நிமிடங்களில் பறந்து சென்றது. அத்தருணத்தில் இந்த ஊசிவால் குளவியை பல கோணங்களில் படமெடுத்துக் கொண்டேன்.

வீட்டுக்குள் வந்த ஊசிவால் குளவியின் பக்கவாட்டுத் தோற்றம்

வீட்டுக்குள் வந்த ஊசிவால் குளவியின் பக்கவாட்டுத் தோற்றம்

ஒரு வித்தியாசமான பூச்சியினத்தை அருகில் பார்த்து படமெடுத்துக் கொண்டதும் அதைவிட உயிருடன் அப்பூச்சியை வெளியே பறக்க விட்டது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது. அப்படி என்ன சிறப்பு இந்த ஊசிவால் குளவிக்கு?

பூச்சி வகையில் ஹைமனோப்டிரா வரிசையில் (Order-Hymenoptera) இக்நியூமோனிடே குடும்பத்தைச்  (Family – Ichneumonidae) சார்ந்தது இந்த இக்நியூமன் குளவிகள் (Ichneumon wasps). நான் பார்த்த குளவிக்கு கருப்பான உடல். ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட மெல்லிய இறக்கைகள் அதில் கருப்புக் கோடு போன்ற நரம்புகள். தலையில் இரு புறமும் பெரிய கூட்டுக்கண்கள், முன்னே இரு உணர் நீட்சிகள். மார்புப் பகுதியையும் தலையையும் இணைக்கும் காம்பு போன்ற கழுத்து. மார்புப் பகுதியில் (Thorax) ஆறு கால்கள். முதலிரண்டு சோடி கால்களும் ஒரே நீளமாகவும், பின்னிரண்டு கால்கள் அதைவிட ஒருமடங்கு நீளமாகவும் இருந்தது. இந்தக் கால்தான் இவை பறக்கும் போது தொங்கிக் கொண்டிருக்கும். மார்புப் பகுதியை அடுத்து நீள் உருளை வடிவில் ஆறு கண்டங்களைக் கொண்ட வயிற்றுப்பகுதி. மார்புப் பகுதியில் இணைந்திருக்கும் கண்டம் சன்னமாகவும் இறுதிக் கண்டம் பருத்தும் இருந்தது. ஆச்சர்யக்குறியைப் கிடைமட்டமாக வைத்தது போல. இந்த வயிற்றுப் பகுதியின் கடைசிக் கண்டத்தில் இருந்து நீண்ட ஊசி போன்ற முட்டையிடும் நீட்சி (ovipositor). அந்நீட்சியின் முனை (சுமார் 3-4 மில்லி மீட்டருக்கு) வெள்ளையாக இருந்தது. தலையிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சுமார் 2 செமீ நீளமும், அதே அளவு முட்டையிடும் நீட்சியும் இருந்தது. இதை வைத்தே இதை ஒரு பெண் குளவி என்று சொல்லிவிடலாம். இவ்வளவு நீளமான முட்டையிடும் நீட்சியை வைத்துக்கொண்டு இக்குளவி செய்வது என்ன? இந்த ஊசிவால் குளவிகளின் சிறப்பம்சமே அவற்றின் முட்டையிடும் பண்புதான்.

ஊசிவால் குளவியின் மேற்புறத்தோற்றம்

ஊசிவால் குளவியின் மேற்புறத்தோற்றம்

பெண் குளவி மட்கிப்போன மரங்களின் மேற்பரப்பில் தனது உணர்நீட்சிகளால் தட்டித் தட்டி பறக்கும். அப்படிச் செய்வதன் மூலம் மரத்தின் உள்ளே இருக்கும் பூச்சிகளின் வேற்றிளரிகள் (லார்வா), புழுக்கள் இருப்பதை அறிந்துகொள்ளும். எதற்காக? ஊசிவால் குளவிகள் ஒட்டுயிரிகள் (Parasites). அவை மரக்கட்டைகளின் உள்ளே வசிக்கும் இளம் பருவத்திலுள்ள பூச்சிகள் சிலவற்றின் உடலிலோ, அவற்றைன் அருகிலோ தமது நீண்ட ஊசிபோன்ற நீட்சியின் உதவியால் முட்டையிடும். ஊசிவால் குளவியின் முட்டை பொரிந்து அந்தப் புழு இளம்பருவ பூச்சியினை (அவை உயிருடன் இருக்கும் போதே) கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும். ஊசிவால் குளவி கூட்டுப்புழு பருவம் அடையும் நிலையில் தான் சாப்பிட்டு வந்த ஓம்புயிரி உயிரிழக்கும். இது கொஞ்சம் கொடூரமாகத் தெரிந்தாலும் இயற்கையின் நியதி இதுதான். ஒரு உயிரினம் வாழ இன்னோர் உயிரினம் உயிரிழக்கத்தான் வேண்டும். ஒட்டுயிரி (Parasite)வாழ ஓம்புயிரியின் (host) உதவி அவசியம். அதுபோலவே ஓம்புயிரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஊசிவால் குளவி போன்ற ஒட்டுயிரிகளின் சேவையும் அவசியம்.

******

தி ஹிந்து தீபாவளி மலர் 2013ல் வெளியான கட்டுரை.

Written by P Jeganathan

December 17, 2013 at 2:00 pm

பாண்டிச்சேரியும் பவழ மல்லியும்

leave a comment »

காலை 6:30 மணி வாக்கில் பஸ் பாண்டிச்சேரி வந்தடைந்தது. பஸ் ஸ்டாண்டினுள் நுழைந்து கோரிமேடு போகும் டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். மெல்ல ஊர்ந்து சென்று சாலையோரத்திலிருந்த ஒரு கோயில் முன் நின்றது பஸ். முதல் சவாரி, ஆகவே கண்டக்டர், டிரைவர் சீட்டின் முன்னே ஒரு கற்பூரத்தை வைத்து (பிளாஸ்டிக் உறையை பிரிக்காமலேயே) கொளுத்தி, அதில் ஊதுவத்தியை பற்ற வைத்தார். பிளாஸ்டிக் எரியும் நாற்றம் தான் அதிகம் வந்தது. கோயிலுக்குச் சென்று உண்டியலில் காசை போட்டு விட்டு வந்ததும் வண்டி கிளம்பியது. அக்கோயிலில் முன்னே வேப்பமரமும், அரச மரமும் இணைந்து வளர்ந்திருந்தன.

பாண்டியிலிருந்து கோரிமேடு சுமார் 5 கி.மீ. கோரிமேடு செல்ல 4 ரூபாய் 50 பைசா டிக்கெட். பத்து ரூபாய் கொடுத்ததும் மீதி 5 ரூபாய் கொடுத்தார், 50 பைசா கொடுக்கவில்லை. டவுன் பஸ் ஆதலால் வண்டி தேர் போல மெதுவாக ஊர்ந்து சென்றது. யாராவது கை காட்டினால் உடனே நிறுத்தப்பட்டது. காலை நேரமாதலால் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. முத்தையால் பேட்டை, லாஸ் பேட்டை என வீதி வீதியாக வலம் வந்து கடைசியில் கோரிமேடு வந்தடைந்தது. ஜிப்மருக்கு (JIPMER) எதிரில் வண்டி நின்றது. வரும் வழியில், பஸ்ஸில் சினிமாப் பாட்டை ரசித்துக்கொண்டே சாலையோரத்தை வேடிக்கை பார்த்து வந்தேன். உடனடியாக என் கண்ணில் பட்டது வழியெங்கிலும் இருந்த மரங்களே. சாலையோரத்திலும், சாலையின் நடுவில் உள்ள திட்டிலும் வித விதமான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தன. சன்னலோர இருக்கையில் அமர்ந்து எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்பதை பட்டியலிட ஆரம்பித்தேன்.

பூவரசுமரமல்லிகைமயில்கொன்றைநுணா (மஞ்சணத்தி), மகிழ மரம், அரசமரம், இலவம்பஞ்சுமரம், , வாதாமரம்(நாட்டுவாதாம்), இயல்வாகைபனைதென்னைவாதமடக்கி, ஏழிலைப்பாலைவேப்பமரம் யூகலிப்டஸ், ஆஸ்திரேலிய அக்கேசியா, தூங்குமூஞ்சி மரம்ஆலமரம்,  என அந்த 5 கீ.மீ தூரத்தில் இத்தனை வகை மரங்கள். ஜிப்மருக்கு அருகில் சாலையின் இருபுறமும் ஒரு ஆலமரம் வளர்ந்து ஒரு நுழைவாயிலைப்போல அழகாகக் காட்சி தந்தது. ஜிப்மருக்கு முன்னே உள்ள ஒரு வட்ட வடிவப் பாத்தியில் கொன்றை மரம் வைக்கப்பட்டிருந்தது. இப்போது சுமார் 2 அடி உயரம் இருந்தது. வளர்ந்து பெரிதானவுடன் பூப்பூக்கத் தொடங்கினால் கோடைகாலத்தில் அவ்வழியே போவோர் அழகிய மஞ்சள் கொன்றைப் பூக்களைக் காணலாம்.

பாண்டிசேரிக்குக் கடைசியாக நான் வந்தது 2012ம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில். தானே புயல் தாக்கியிருந்த சமயம். அடித்த புயல் காற்றில் சாலையெங்கும் பல மரங்கள் கீழே விழுந்து கிடந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தும், ஊரெங்கும் குப்பையாகவும் இருந்தது. அப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஹாஸ்டலில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு மின்வெட்டு இரவில் நரி ஊளையிட்டதைக் கேட்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

இதை நரிகளைப்பற்றிய ஒரு கட்டுரையில் பதிவு செய்திருந்தேன். அதைப் படித்துவிட்டு “தமிழ்நாட்டுப் பறவைகள்” நூலை எழுதிய முனைவர் க. ரத்னம், எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் புதுச்சேரியில் அடித்த புயலைப் பற்றி பாரதியார் எழுதிய கட்டுரையை, தானே புயல் தாக்கிய சமயத்தில் எந்தப் பத்திரிக்கையும் நினைவு கூறவில்லை என குறிப்பிட்டிருந்தார். மகாகவி பாரதியார் கட்டுரைகள் நூலை புரட்டியபோது 1916ம் ஆண்டு நவம்பர் மாதம் சுதேசமித்திரன் இதழில் எழுதிய “புதுச்சேரியில் புயற் காற்று” எனும் தலைப்பில் அப்போது வீசிய புயல்காற்றினைப் பற்றி விவரித்திருந்தார். அதில் ஓரிடத்தில் தெருவெங்கும் மரங்கள் ஒடிந்து கிடந்ததையும், தென்னையும், பூவரசும் அதில் அதிகம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தானே புயல் வீசி ஒன்றரை ஆண்டுகள் கழிந்து இங்கு நண்பரின் திருமணத்திற்காக வந்திருந்தேன். அப்படியே கோரிமேட்டில் வசிக்கும் சித்தப்பாவின் வீட்டிற்கும் சென்று வந்தேன். அவரது வீட்டைச்சுற்றி பலா (அதில் காகம் கூடு கட்டியிருந்தது), மா, அரளி, தென்னை எனப் பல மரங்கள் இருந்தாலும் என் கவனத்தை ஈர்த்தது பவழ மல்லிகை. தஞ்சாவூரில் ஐ.கே.எஸ் பள்ளிக்கூடத்தில் 8ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது நடராஜ் வாத்தியாரிடம் கணக்கு டியூஷன் (இலவசமாகத்தான்) போகும் போது அவர் வீட்டின் வாசலில் இந்த மரத்தைக் கண்டதுண்டு. அப்போதெல்லாம் அந்த வாசனை எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இப்போது அப்படியெல்லாம் தோன்றுவதில்லை.

தரையில் கிடக்கும் பவழ மல்லிப் பூக்கள்

தரையில் கிடக்கும் பவழ மல்லிப் பூக்கள்

பவழ மல்லியை ஒரு பெரிய புதர்த் தாவரம் என்று சொல்லலாம். இரவில் பூக்கும், காலையில் மரத்தினடியில் பார்த்தால் அழகிய சிவப்பு நிற காம்புகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் கொட்டிக் கிடக்கும். பாரிஜாதம் என சமஸ்கிருதத்தில் அறியப்படுகிறது. இதன் அறிவியல் (இலத்தீன்) பெயர் Nyctanthes arbor-tristis. அதாவது Nyctanthes என்றால் இரவு மலர், arbor-tristis என்றால் சோகமான மரம். ஏன் இப்படி பெயரிட்டார்கள் எனத் தெரியவில்லை. இதன் ஆங்கிலப் பொதுப் பெயர் Night flowering Jasmine. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் காய் ஆரம்பத்தில் பச்சையாகவும் பின் அடர் பழுப்பாகவும் இருக்கும். இது ஒரு இயல் தாவரம் (அதாவது இந்தியப் பகுதிகளில் இயற்கையாகவே வளர்வது). மேற்கு வங்கத்தின் மாநில மலர் இது. தென் கிழக்காசிய நாடுகளிலும் தென்படுகிறது. இலையுதிர் காடுகளில் வளரும்.

இந்த மரத்தைப் பற்றிய பல புராணக் கதைகளும் உள்ளன. எனினும் அதையெல்லாம் நான் இங்கே விளக்கப் போவதில்லை. ஆனால் இம்மரத்தைப்பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை அண்மையில் அறிந்து கொண்டேன். திரிபுரா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் அங்குள்ள கிராம மக்கள் பவழமல்லி மரம் பூக்கும் விதத்தை வைத்தே மழை வருவதை முன்கூட்டியே கணிக்கிறார்கள் என்பது தான் அது.

வேப்ப மரம் பூப்பதை வைத்து அது சித்திரை மாதமென்றும், அது கோடை காலமென்றும் சொல்கிறோம். அதே போல திரிபுராவில் உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் ஒரு பருவத்தில் அதிக மழை வருமா, ஓரளவிற்கு மழை வருமா, அல்லது பருவ மழை பொய்த்துவிடுமா என்பதை பவழ மல்லி பூக்கும் விதத்தை வைத்தே சொல்லிவிடுகின்றனர். இதை உறுதி செய்ய ஆராய்ச்சியாளர்கள் 2002லிருந்து 2007 வரை 270 பழவ மல்லி மரங்களின் பூக்கும் விதத்தை அவதானித்து அதை ஆவணப்படுத்தினர். அதே கால கட்டத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (Indian Meteorological Department) வெளியிடும் வானிலை அறிக்கையையும் சேகரித்தனர். பின்பு பல கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வயதான பெரியவர்களிடம் அவர்கள் ஊரிலுள்ள பவழ மல்லி மரங்கள் பூக்கும் விதத்தை வைத்து அதிக மழை வருமா, அல்லது குறைவாக மழை பொழியுமா என கேட்டறிந்து அதையும் பதிவு செய்தனர்.

Photo: Wikipedia

Photo: Wikipedia

இந்த ஆராய்ச்சியின் தரவுகள் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. திரிபுராவில் பவழ மல்லி ஆண்டு தோறும் பூக்கும். எனினும் ஒரு கொத்தில் அதிக பூக்களும், அதன் மொட்டுகள் பெரிதாகவும், இலைகள் மிகவும் சொரசொரப்பாகவும் இருந்தால் கன மழை பெய்யும் எனவும், ஜூன் மாதத்தில் பூத்து இலைகள் சற்று வழவழப்பாகவும் (தூவிகள் அற்றும்), பூவின் காம்பு ஆழ்ந்த ஆரஞ்சு நிறத்திலும் இருந்தால் மிதமான மழை பொழியும் என்பதையும் (சுமார் 80% துல்லியத்தில்) அங்குள்ள மக்கள் கணித்தனர். இவர்களது கணிப்பையும் அதாவது மரபு அறிவையும், வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தது தெரிய வந்தது.

Indian Journal of Traditional Knowledge எனும் ஆய்விதழில் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது. காலங்காலமாக ஒரு சமூகத்தில் இருந்து வரும் மரபு அறிவை (Traditional Knowledge) ஆவணப்படுத்தும் அவசியத்தை இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள்

ப. ஜெகநாதன். (2012). நம் முகத்தில் நரி முழித்தால்…புதிய தலைமுறை, 20 செப்டம்பர், பக்கங்கள் 34-35.

மகாகவி பாரதியார் கட்டுரைகள். (2002). தொகுப்பாசியர்கள் – ஜெயகாந்தன் & சிற்பி பாலசுப்பிரமணியம். சாகித்திய அகாதெமி, புதுதில்லி.

Krishen, P (2006). Trees of Delhi-A field guide. Dorling Kindersley (India) Pvt. Ltd.

Gledhill, D. (2008). The names of plants. Cambridge University Press. New York.

Acharya, S. (2011). Prediction of rainfall variation through flowering phenology of night-flowering jasmine (Nyctanthes arbour-tristis L.; Verbenaceae) in Tripura. Indian Journal of Traditional Knowledge. Vol. 10 (1). Pp 96-101.

சொல்வனம் இணைய இதழில் (இதழ் 96) 30-11-2013 அன்று வெளியான எனது கட்டுரையின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=30204

Written by P Jeganathan

December 10, 2013 at 1:03 am