Archive for February 2014
பறவை ஆர்வலர்களுக்கான நெறிமுறைகள்
நேற்று காலை பத்திரிகையாள நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) பற்றிய சில ஞாயமான கேள்விகளைக் கேட்டார். அவரது கேள்விகளும் அவற்றிற்கான பதிலையும் இங்கே காணலாம்:
1. கணினி வசதியோ, இணையத் தொடர்போ இல்லாதவர்கள் எப்படி இக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள முடியும்?
பறவை பார்ப்போர், இக்கணக்கெடுப்பில் பங்கு கொள்ள நினைத்தால் கணினி, இணைய வசதிகள் உள்ளவர்களின் உதவியை நாடலாம். இந்தியாவில் இது போன்ற கணக்கெடுப்புக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி வருகின்றன. எதிர் காலத்தில் அனைவரும் பங்குகொள்ளும் வசதிகள் ஏற்படலாம். இந்நிலை மாறும், மாற வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் கூட இப்பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
2. ஒரு வேளை பறவைகளை சரியாக அடையாளம் காணாமல், தவறான பறவைகளை உள்ளிட்டால் என்ன செய்வது? அல்லது ஓரிரு பறவைகளை பார்த்துவிட்டு 100க்கணக்கில் பார்த்தாக பொய்த்தகவலை அளித்தால் என்ன செய்வது?
ஒரு வேளை பறவையை தவறாக அடையாளம் கண்டு இணையத்தில் உள்ளிட்டு, அது தவறென உணர்ந்தால் மீண்டும் அதை மாற்றிக்கொள்ள eBirdல் வசதிகள் உள்ளது. ஆனால் ஒருவர் வேண்டுமென்றே அதைச் செய்தால் என்ன செய்வது? அதைத் தடுப்பதற்கும், சீர் செய்யவும் அந்த இணையத்தில் சில வசதிகள் உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் இப்பகுதியில் காணப்படாத பறவை ஒன்றை உள்ளிடுகிறார் என வைத்துக் கொள்வோம். அதை அவர் உள்ளிடும் போதே திரைக்குப் பின்னால் பல வேலைகள் நடைபெறும். இந்த இணையத்தில் உள்ள வடிகட்டிகளால் (filters) அது சரிபார்க்கப்பட்டு அவரிடம் அதற்கான (சரியான விளக்கங்கள், புகைப்படம் முதலிய) ஆதாரங்கள் கேட்கப்படும். அதன் பின் அந்தக் குறிப்பிட்ட பதிவு தமிழ்நாட்டில் உள்ள பல பறவை ஆராய்ச்சியாளார்களுக்கு தெரிவிக்கப்படும். முறையான நுண்ணாய்வுக்குப் பிறகு அப்பதிவு ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கப்படும்.
3. ஒரு வேளை பறவைகளை பார்க்காமலேயே பார்த்தாக ஒருவர் பொய்ப் பட்டியலைத் தயார் செய்து உள்ளிட்டால்?
இதுபோன்ற மக்கள் அறிவியல் (Citizen Science) திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க
இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த போது பறவை பார்த்தலைப் பற்றியும் பேச்சு திரும்பியது. பறவை பார்த்தலின் போது கடைபிடிக்க வேண்டிய, செய்யக் கூடாதவைகளைப் பற்றி விளக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சொல்லியதை சற்று விரிவாகவே கீழே தந்துள்ளேன். பறவை ஆர்வலர்கள் அனைவருக்கும் இது உதவும் என்கிற நம்பிக்கையில்.
பறவை ஆர்வலர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள்:
நேர்மை
- ஆங்கிலத்தில் பறவை பார்த்தலைப் பற்றிய ஒரு கூற்று உண்டு, “No record at all is better than an erroneous one”. இதைத்தான் பறவைபார்த்தலின் Golden Rule என்பர். அதாவது ஒரு பறவையைத் தவறாக அடையாளம் கண்டு அதைப் பார்த்ததாகச் சொல்வதை விட, நாம் பார்த்ததை குறிப்பிடாமலேயே இருத்தல் நலம். நாம் பார்க்கும் பறவை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது தான் என்பதை முற்றிலுமாக உறுதிசெய்துகொண்ட பிறகுதான் நாம் அதை பார்த்ததாகச் சொல்ல வேண்டும். சிறு சந்தேகம் இருந்தாலும் அந்தச் சந்தேகம் தீரும் வரை நாம் பார்க்காததைப் பார்த்ததாகச் சொல்லக்கூடாது. இது பறவை பார்த்தலின் மிக முக்கியமான விதி.
- உதாரணமாக தூரத்தில் பறந்து செல்வது காகமா அல்லது அண்டங்காக்கையா எனத் தெரியாவிட்டால் அதை உங்கள் குறிப்பேட்டில் எழுதாமலேயே இருத்தல் நலம். ஆனால் நீங்கள் பார்த்தது காகமாகத்தான் இருக்கக்கூடும் என நம்பினால் “காகம்?” என எழுதினால் அது உங்களது நேர்மையைக் காட்டும்.
பறவைகள் பாதுகாப்பு
- பறவை பார்த்தலும், பறவைகளைப் படமெடுத்தலும் வெறும் பொழுதுபோக்கிற்காக இல்லாமல், நம்மை மகிழ்விக்கும் பறவைகளுக்கும், அவற்றின் வாழிட பாதுகாப்பிற்கும் நம்மால் முடிந்த அளவில் பங்களிப்பதும், பாடுபடுவதும் பறவை ஆர்வலர்களின் கடமையாகும்.
- பறவைகளை பார்க்க வேண்டும், படமெடுக்க வேண்டும் என்பதற்காக பறவைகளையோ, அவற்றின் வாழிடத்திற்கோ எந்த விதத்திலும் தீங்கிழைக்கவோ, தொந்தரவு செய்வதோ கூடாது.
- பறவைகளின் கூட்டினருகில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கூட்டின் அருகில் செல்வதால், அப்பறவைகள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் அவை அக்கூட்டினை தவிர்த்து விட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. ஒரு வேளை தெரியாமல் கூட்டினருகில் சென்று விட்டால் உடனடியாக அந்த இடத்திலிருந்து அகன்று விடவேண்டும்.
- தாவரங்களினூடாக பதுங்கியிருக்கும் பறவைகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் / படமெடுத்துவிட வேண்டும் என்கிற அதீத ஆர்வத்தில் (அல்லது வெறியில்) சப்தமெழுப்புவதோ, எதையாவது அப்பறவை இருக்குமிடம் நோக்கி விட்டெறிவதோ கூடாது. நாம் பறவைகள் பார்க்க ஒரு இடத்திற்குச் செல்லும் போது, நாம் அங்கிருப்பது பறவைகளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இரவு நேரங்களில் மரத்தில் அடைந்திருக்கும் பறவைகளையும், இரவாடிப் பறவைகளையும் (Nocturnal birds) பார்க்க டார்ச் விளக்கை அவற்றின் மேல் அடித்துப் பார்க்கும் வேளையில் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். டார்ச் மிகுந்த ஒளி உமிழும் தன்மையுடையதாக இருக்கக் கூடாது. மிதமாக ஒளி உமிழும் டார்சையும் கூட நீண்ட நேரம் அவை இருப்பிடம் நோக்கியோ, அவற்றினை முகத்திலோ அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பறவைகளை இரவில் படமெடுக்க அதிக சக்தியுள்ள ப்ளாஷினை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது பறவை இருக்கும் தூரத்தைப் பொறுத்தது என்றாலும், தூரமாக இருக்கும் பறவைகளைப் படமெடுக்கக் கூட ஓரிரு முறைகளுக்கு மேல் உபயோகித்தல் கூடாது. நினைத்துப் பாருங்கள் உங்கள் முகத்தில் டார்ச்சையோ, ப்ளாஷையோ அடித்தால் எப்படிக் கண்கள் கூசுகிறதோ அதே போலத்தான் பறவைகளுக்கும்.
- நீங்கள் பறவை பார்க்கப் போகும் இடங்களில் இதுபோல் யாராவது பறவைகளுக்குத் தகாத முறையில் நடந்து கொண்டால், அவர்களுக்கு அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லவும். அதையும் மீறி அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அவர்கள் செய்வதை ஆவணப்படுத்தி (போட்டோ, வீடியோ மூலமாக) தகுந்த அதிகாரிகளிடம் முறையிடுங்கள்.
- பறவைகளை வேட்டையாடுவதையோ, கண்ணி வைத்துப் பிடிப்பதையோ, வேறு வகையில் கொல்வதையோ பார்க்க நேரிட்டால் உடனடியாக அதை (முடிந்தால் புகைப்பட ஆதாரத்துடன்) வனத்துறையினரிடமோ, தகுந்த அதிகாரிகளிடமோ உடனடியாக தெரிவிக்கவும்.
- வீட்டின் அருகில் பறவைகளுக்கு உணவு / பருக தண்ணீர் வைத்தல், செயற்கைக் கூடுகளை அமைத்தல் நம் பறவைகளின் பால் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என்பது உண்மைதான். அதேவேளையில் அங்கு வரும் பறவைகளுக்கு நம் வீட்டில் வளர்க்கும், வீட்டினருகில் திரியும் பூனை, நாய் முதலிய வளர்ப்புப் பிராணிகளால் எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவு, கூடு வைக்கும் இடங்களை வளர்ப்புப் பிராணிகள் வரமுடியாத படி, அவற்றின் உயரத்திற்கு எட்டாத வண்ணம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வேளை அதுபோன்ற இடத்தை தேர்வு செய்ய முடியாவிடில் அந்த இடத்தில் பறவைகளுக்கு உணவிடுவதை தவிர்க்க வேண்டும்.
பறவைகளின் வாழிடத்தை மதித்தல்
- நாம் பறவை பார்க்கச் செல்லும் முன் அது பொது இடமா? தனியாருக்குச் சொந்தமான இடமா? அல்லது அனுமதி பெற்றுச் செல்ல வேண்டிய இடமா? என்பதை அறிந்து, தேவைப்பட்டால் தகுந்த அனுமதி பெற்ற பின்னரே அங்கு செல்ல வேண்டும்.
- பறவைகள் பார்க்கப் போகும் இடத்தில் குப்பைகளைப் போடுவதைத் தவிர்க்கவும்.
- பறவைகள் பார்க்கச் செல்லும் வேளையில் உரக்கப் பேசமல், அமைதியாக இருத்தல் நலம். இதனால் பறவைகளுக்கும் தொந்தரவில்லை, நீங்களும் அவற்றை நீண்ட நேரம் பார்த்து ரசிக்கலாம்.
- பார்க்கும் பறவைகளை களக்குறிப்பேட்டில் உடனடியாக எழுதிக்கொள்வது நல்லது. எத்தனை, எந்த இடத்தில் பார்த்தோம் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
- பெயர் தெரியாத, இதற்கு முன் பார்த்திராத பறவையைப் பார்க்கும் போது, அதை நன்கு கவனித்து படம் வரைவது, விளக்கமாக குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. இது களக்கையேட்டில் பார்த்து அடையாளம் காண உதவும். சந்தேகமிருப்பின் தெரிந்தவர்களிடம் ஆலோசிக்கவும். பலமுறை சரிபார்த்த பின்னர் முடிவுக்கு வரவும். தமிழ் நாட்டில் பார்க்கப்படும் பறவைகளைப் பற்றி கலந்துரையாட, தகவல்களை பரிமார Tamilbirds (in.groups.yahoo.com/group/Tamilbirds/) எனும் யாஹூ குழுமம் இயங்கி வருகிறது. அதிலுள்ள அனுபவம் மிக்க பறவை ஆர்வலர்களின் உதவியை நாடலாம்.
நமது பட்டியல் நீள வேண்டும் என்பதற்காக அரிய பறவைகளைத்தான் பார்க்க வேண்டும் எனத் தேடி அலைவதைத் தவிர்த்து, நாம் அடிக்கடிப் பார்க்கும் பொதுப் பறவைகளையும் பார்த்து ரசித்து மகிழ்தல் நலம்.
பறந்து வந்த விருந்தினர்
காலையில் ரஹீம் வந்து ஈநாடு பத்திரிக்கையைக் கொடுத்து,”சார், பக்ஷியிலு லக்க பெடுத்தோமே கதா? தானிங்குறிஞ்சி நியூஸ் ஒச்சிந்தி” என்றார். படித்துக் காண்பிக்கச் சொன்னேன். ஆந்திராவில் பல ஆண்டுகள் இருந்தாலும் தெலுகு எழுத, படிக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. உடனே அந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிக்கை நண்பருக்கு போன் செய்து நன்றிகளைச் சொன்னேன்.
குளித்து விட்டு தலையைத் துவட்ட மொட்டை மாடிக்குச் சென்றேன். கூடவே எனது களக்குறிப்பேட்டையும் (field notebook) பேனாவையும் எடுத்துச் சென்றேன். பைனாகுலரை எடுத்துச் செல்லவில்லை. பறவைகளை பார்க்க ஆர்வம் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பேடு அவசியம். பார்த்தை உடனே எழுதி வைக்காவிட்டால் ஒரு சில மணி நேரங்களில் நிச்சயமாக மறந்து போய்விடும்.
முதன் முதலில் பார்த்தது பெண் ஊதாத் தேன்சிட்டு. எதிரே இருந்த கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருந்த நைந்து போன ஒரு சாக்கிலிருந்து சனலை அலகால் பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தது. கூடுகட்டுவதற்காகத்தான். சற்று நேரத்திற்கெல்லாம் ஆண் ஊதாத் தேன்சிட்டு வந்து எதிரில் இருந்த மின்கம்பத்தில் அமர்ந்தது. அதன் பளபள கரு ஊதா நிறம் சூரிய ஒளியில் தகதகவென மின்னியது. என்ன ஒரு அழகான பறவை. வீச்..வீச்..வீச்…எனக் கத்தியது. சற்று நேரத்திற்கெல்லாம் இன்னுமொரு ஆண் ஊதாத் தேன் சிட்டு அப்பக்கமாக வந்ததும் அதைத் துரத்த ஆரம்பித்தது. இரண்டும் கத்திக் கொண்டு, ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டே பறந்து சென்றன.
அடுத்ததாகப் பார்த்தது சிட்டுக்குருவிகளை (2- ஆண் இரண்டு 2-பெண்). மைனாக்கள் (4) பறந்து சென்றன. மறுபடியும் ஊதா தேன்சிட்டு ஒன்று வந்து வீட்டின் எதிரிலிருந்த மசூதியின் கூரான கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து கத்த ஆரப்பித்தது. முதலில் வந்து போனதாகத்தான் இருக்கவேண்டும். மீண்டும் அதை எனது எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளவில்லை. சற்று நேரத்தில் பெண் ஊதா தேன்சிட்டு மீண்டும் சனலை பிய்த்து எடுத்துக் கொண்டு போனது. தூரத்தில் இரண்டு காகங்கள் வீட்டின் தண்ணீர்த் தொட்டியின் மேல் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தன. உண்ணிக்கொக்கு ஒன்று தலைக்கு மேலே பறந்து சென்றது. கீ…கீ..என்ற குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ஒரு பச்சைக்களி எங்கோ வேகமாகப் பறந்து போய்க்கொண்டிருந்தது. ஆணா, பெண்ணா எனத் தெரியவில்லை. ஆண் என்றால் கழுத்தில் கருப்பும் சிவப்புமாக ஒரு வளையம் இருக்கும். அடுத்ததாகப் பார்த்தது நீலவால் பஞ்சுருட்டான். நீர்நிலைகளுக்கு அருகில் அதிகம் வலம் வரும் இப்பறவை ஊருக்குள் என்ன செய்து கொண்டிருந்தது எனத் தெரியவில்லை. ஒரு வேளை அவ்வழியாகப் பறந்து செல்லும் போது பூச்சிகளைக் கண்டு பிடிக்க வந்திருக்குமோ என்னவோ. இது ஒரு வலசை வரும் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் இருக்கும் ஊரின் பெயர் பத்வேல். கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். கட்டிடங்கள் நிறைந்த ஆங்காங்கே ஓரிரு மரங்களுடன் கூடிய அந்தப் பகுதியில் இருபது நிமிட நேரத்திற்குள் இத்தனை பறவைகள். வீட்டினுள் தொலைபேசி மணி அடிக்கும் ஓசை கேட்டதும் உடனே பறவை பார்த்தலை முடித்துக் கொண்டு கீழே வந்தேன். என்னவோ தெரியவில்லை அன்று காலை மின்வெட்டு இல்லாமல் இருந்தது. பொதுவாக இங்கு பகலில் மின்சாரம் இருக்காது. உடனே கணினியை திறந்து எனது பறவைப்பட்டியலை (bird checklist) eBirdல் உள்ளிட்டேன்.
சேலத்திலிருந்து கணேஷ்வர் எனும் பறவை ஆர்வலர் மகிழ்ச்சி ததும்ப ஒரு மின்னஞ்ல் அனுப்பியிருந்தார். கண்ணன்குறிச்சி ஏரியில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது காலை 6:30 மணிக்கு ஏழு பூநாரைகள் பறந்து செல்வதைக் கண்டிருக்கிறார். அதை உடனடியாக பகிர்ந்திருந்தார். அந்த இடத்தில் அந்தப் பறவையை பார்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், தன் வாழ்வில் இது ஒரு அற்புதமான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். படிக்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அந்த கணத்தை தன் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார். அவரது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அது போன்ற தருணங்களை அனுபவித்தவன் நான். பறவை பார்த்தலில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அதை நன்கு உணர்வார்கள். அந்த ஒரு நிகழ்வில் ஏற்படும் குதூகலத்தையும், பூரிப்பையும் வார்த்தையில் சொல்லி விளக்க முடியாது. அதை அனுபவிக்க வேண்டும்.
இது போன்ற (GBBC) திட்டங்களை நடத்துவது ஏதோ பறவைகளை எண்ணுவதற்கும், பட்டியலைப் பதிவு செய்வதற்காக மட்டுமல்ல. இயற்கையின் விந்தைகளை அனைவரும் கண்டுணரவும், அனுபவித்து மகிழவும் வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தான். இதுபோன்ற இயற்கையின் தரிசனங்கள் தான் நாம் வாழும் இப்பூமிப் பந்தினை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை நம்மில் வித்திடும்.
Web links for GBBC
http://www.birdcount.in/events/gbbc/
GBBC In Tamil
https://uyiri.wordpress.com/2014/02/10/gbbc/
_________________________________________________________________________________
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th February 2014 அன்று இணைய பதிப்பில் வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
Great Backyard Bird Count (GBBC) எனும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்தியாவில் இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது. 2014 பிப்ரவரி மாதம் 14 முதல் 17 வரையில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.
இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. சென்ற ஆண்டு (2013) இந்தியா முழுவதிலிருந்தும் 202 பேர் பங்கு பெற்றனர். 438 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 537 பறவை வகைகள் கணக்கிடப்பட்டன. 80283 பறவைகள் எண்ணப்பட்டன. அதிகமாக பார்க்கப்பட்ட/கணக்கிடப்பட்ட பறவைகள்: மைனா, காகம், கரும்பருந்து, மாடப்புறா, கொண்டைக்குருவி, பச்சைக்கிளி, கரிச்சான் குருவி முதலியன (மேலும் விவரங்களுக்கு காண்க PDF).
உலக அளவில் 137998 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 4258 பறவை வகைகள் அவதானிக்கப்பட்டன, எண்ணப்பட்ட மொத்தப் பறவைகள் 33464616! (மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காண்க).

GBBC Countries 2013 (Source: http://gbbc.birdcount.org/)
இதைச் செய்வது எதற்காக?
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும்.
இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு நாம் உயிரினங்களின் வாழிடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
இதன் மூலம் நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும்.
இது போன்ற உலகளாவிய, நாடுதழுவிய கணக்கெடுப்பின் மூலம் சில பறவைகளின் பரவலை வெகு விரைவில் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன என்கிற ஒரு (தவறான) செய்தியை பலரும் சொல்லி வந்த நிலையில், நடத்தப்பட்ட நாடு தழுவிய citizensparrow எனும் திட்டத்தின் மூலம் (2012, 1 ஏப்ரல் -15 ஜூன் வரை) இணைய கணக்கெடுப்பு (online survey) நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவின் வாயிலாக சிட்டுக்குருவிகள் இந்தியாவில் பல இடங்களிலும் பரவியிருப்பதும், பல இடங்களில் நல்ல எண்ணிக்கையில் இருப்பதும், குறிப்பிட்ட ஓரிரு மாநகரங்களில் அருகி வருவதும் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகளை இங்கே காணலாம்.

See http://www.citizensparrow.in for more details
மக்கள் அறிவியல் (citizenscience)
இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர்.
மக்கள் விஞ்ஞானி (citizenscientist)
இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு (migrantwatch.in). seasonwatch எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC)
இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும்.
2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்).
3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (14-17 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
eBird இணையதளம்
ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள்.
பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்
இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும்.
நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும்
பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும்.
நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும்.
பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும்.
ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்).
தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல்.
உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல்
நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இப்போது ஒரு மக்கள் விஞ்ஞானி!
இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள்.
———-
ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பிற்கு உதவும் சில ஆதார வளங்கள்:
உங்கள் குழுவினருக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றிய இந்த காட்சியளிப்பை (Presentation) தரவிறக்கம் (PDF)செய்து கொண்டு அவர்களுக்கு விளக்கமளிக்கவும். Arial Unicode MS எழுத்துருவை (Font) பயன்படுத்தவும்.
இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
eBird இணையதளத்தில் உங்களது பறவைப்பட்டியலை உள்ளிடும் வழிமுறைகளை அறிந்து கொள்ள இந்த காட்சியளிப்பை தரவிறக்கம் (PDF) செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழ்நாட்டில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பை தரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
eBird ன் மொபைல் அப்ளிகேஷன் (Smart phone App) http://bit.ly/1b9xcZ4 (2014 Feb 17 ம் தேதி வரை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)
eBird உதவிப் பக்கம் (http://help.ebird.org/).
eBird ஐ முகநூலிலும் (Facebook) ட்விட்டரிலும் (Twitter) கூட காணலாம்.
இந்தியப் பறவைகள கணக்கெடுப்புத் திட்டம் (BirdCount India) குறித்து மேலும் அறிந்து கொள்ள அதன் Google group, Facebook, Twitter பக்கங்களுக்குச் செல்லவும்.
இந்திய பறவை கணக்கெடுப்புத் திட்டம் பற்றிய கேள்விகள் ஏதுமிருப்பின் தொடர்பு கொள்க
Email: birdcountindia@gmail.com
பிளாஸ்டிக் கவலைகள்
பிளாஸ்டிக் பை, கப், தட்டு, பாட்டில் இவைகளை உபயோகிக்காமல் மனிதர்களால் இருக்க முடியுமா? நான் முயன்று கொண்டிருக்கிறேன். ஆனாலும் எனது முயற்சியில் தோற்றுக் கொண்டும் இருக்கிறேன். இந்தப் பொருட்களெல்லாம் முதுவதுமாக தீயவை அல்ல. நமக்கு உபயோகமாக இருப்பவை தான். எனினும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. இப்பொருட்கள் இல்லாமல் வாழவே முடியாது என்கிற அளவிற்கு போவதிலும், அவற்றை நாம் அப்புறப்படுத்தும் விதத்திலும் தான் எனக்கு உடன்பாடு இல்லை. இவற்றின் தயாரிப்பை தடை செய்ய முடியவே முடியாது. ஒரு சில இடங்களில் தகவல் பலகையில் எழுதியிருப்பதைப் போல, இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதோ, வீசுவதோ கூடாது, இது பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட இடம், மீறிச்செய்வது சட்டப்படி குற்றம், மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், என்றெல்லாம் அறிவித்திருந்தாலும், நடைமுறையில் வெகு சில இடங்களில் மட்டுமே கடைபிடிக்கப்படுவதை நாம் அறிவோம். இப்பொருட்களின் உற்பத்தியை தடைசெய்யாமல், உபயோகத்தை மட்டும் தடை செய்வது எதைக் காட்டுகிறது? இவை இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பதைத்தானே?
என்னைப் பொறுத்தவரை பீடி, சிகரெட், சாராயம் போலத்தான் பிளாஸ்டிக் பையும், கப்பும், பாட்டிலும். அதாவது இவற்றை உபயோகிக்காமல் இருப்பது தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயமாகிவிட்டது. புகைபிடிக்காதவர்கள், மது அருந்தாதவர்கள் போல பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்காதவர்கள். இதில் முதலிரண்டு கட்சியினர் அதிர்ஷ்டசாலிகள். மூன்றாமவர் பாவம் செய்தவர். பொறுப்புணர்ந்து செயல் பட்டாலும், அக்கரையுள்ளவராக இருந்தாலும் இவர்களால் 100 சதமானம் முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருக்கவே முடியாது. இவர்கள் துரதிஷ்டசாலிகள், பாவப்பட்ட ஜென்மங்கள். புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் இல்லாதவர் வாழ்நாளில் ஏதோ ஓரிரு முறை அவை தரும் சுகத்தை அனுபவித்து விட்டு இது தீயது என விலக்கி விடலாம். அல்லது இப்பழக்கங்கள் இருப்பவர்கள் ஒரு காலத்திலிருந்து வேண்டாம் என மன உறுதியுடன் அவற்றைச் செய்யாமல் விட்டுவிடலாம். இவர்களெல்லாம் ஒழுக்கச்சீலர்களாக, நல்லவர்களாக, திருந்தியவர்களாக இந்தச் சமூகத்தால் போற்றப்படுவார்கள். ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை வேண்டாம் என ஒதுங்கி வாழ எத்தனிப்பவர்கள் மற்றவர்களின் ஏளனத்திற்கும், தூற்றுதலுக்கும் ஆளாவார்கள். கடைக்காரர் பிளாஸ்டிக் பையை கொடுக்கும் போது நீங்கள் அதை வேண்டாம் என மறுத்தால் இந்த உலகமே உங்களை பார்த்து எள்ளி நகையாடும். எத்தனை நாளைக்குத் தான் இந்த வைராக்கியத்துடன் இருக்கப்போகிறாய் என்று பார்க்கிறேன் என சவால் விடும். பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் கூடுமான அளவு குறைக்க முடியுமே தவிர முற்றிலுமாக தவிர்க்கவே முடியாது. அந்த அளவிற்கு நம் வாழ்வில் இரண்டரக் கலந்துவிட்டது இந்த பிளாஸ்டிக் எனும் பேய். இது இந்த பூமியை புரையோடச்செய்து கொண்டிருக்கும் ஒரு வகை நோய்.
நீங்கள் பொறுப்புணர்ந்து அக்கடையுடன் பிளாஸ்டிக் பொருட்களை கூடிய வரை தவிர்த்து வாழ்ந்து மற்றவருக்கும், குறிப்பாக உங்களது நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் அதன் தீமையை எடுத்துரைக்கும் போது சற்று கவனமாக செயல் படவேண்டும். கொஞ்சம் அதிகமாக insist செய்தால் சண்டை சச்சரவும், மனஸ்தாபமும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மற்றவர்களையும் உங்கள் வழி நடக்க உபதேசம் செய்த உங்களுக்கே சில நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படின் அதுவும் உபதேசித்தவர்களின் முன்னேயே ஏற்படின் உங்கள் மனம் எப்படி பதைபதைக்கும். இப்போது புரிகிறதா, அவர்கள் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள் என?
பிளாஸ்டிக் பொருட்களை பிடிக்கவில்லை எனில் உபயோகிக்காமல் இருந்தாலும் பார்க்காமல் இருக்க முடியாது. இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்தக் குப்பைகளைக் காணலாம். பஸ்ஸிலும், இரயிலிலும் பயணிக்கும் போதும் சன்னல் வழியாக வெளியே பார்த்தால் சாலையோரமெங்கும், இரயில் தடம் நெடுக அவையும் நம் கூடவே பயணம் செய்வதைக் காணலாம். ஒரு விதத்தில் என் போன்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்போது இந்த கேவலமான காட்சியைக் கண்டாலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சாலையில் நடந்து போனால் இது போன்ற மட்கிப்போகாத பிளாஸ்டிக் குப்பைகளை பார்ப்பது அரிது அல்லது அறவே கிடையாது என்றே சொல்லலாம். இன்றைய தலைமுறையைப் பார்த்து குறிப்பாக பிளாஸ்டிக் உபயோகிப்போரைப் பார்த்து என்னால் இதை பெருமையாக மார்தட்டிச் சொல்லிக் கொள்ள முடியும். எனினும், பிளாஸ்டிக் குப்பை இல்லாத சாலைகளை மீண்டும் காண ஆவலாய் இருக்கிறது. இது கனவில் தான் சாத்தியமோ, என கவலை கொள்கிறது மனம்.
சுற்றுச்சூழல் புதிய கல்வி மாத இதழில் வெளியான (ஜனவரி 2014, மலர்-14 இதழ்-1) கட்டுரையின் மறுபதிப்பு.
இக்கட்டுரையின் PDFஐ இங்கே காணலாம்