UYIRI

Nature writing in Tamil

வானில் 200 நாட்கள்!

with 2 comments

நமது ஊர்ப்புறங்களில் வில் போல் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை குறிப்பாக பனைமரத்தினருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்ததுண்டா? அவைதான் Asian Palm Swift என ஆங்கிலத்தில் அறியப்படும் பனை உழவாரன்கள். இவை பறந்து கொண்டே காற்றில் உள்ள சிறிய பூச்சிகளைப் பிடித்துண்ணும். அந்த வகையைச் சேர்ந்த ஆனால் பனை உழவாரன்களை விட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவையைப் பற்றிய நம்மை அதிசயக்க வைக்கும் உண்மையினை அண்மையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 6 மாதங்களுக்கு மேல் தரையில் இறங்காமலேயே வானில் பறந்து கொண்டே இருந்ததுதான் அது. ஆலாக்கள் (Terns), அல்பட்ராஸ் (Albatross) போன்ற கடல் பறவைகளில் பல கீழிறங்காமல் பல மணி நேரம் பறந்து கொண்டே இருக்கும். அது போலவே ஒரு நாளில் அதிக நேரம் பறக்கும் பறவைகளில் உழவாரன்களும் ஒன்று. எனினும் எவ்வளவு மணிநேரம், எத்தனை நாள் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும் என்கிற விவரங்கள் இதுவரை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இப்போதுதான் முதன்முதலாக அல்பைன் உழவாரன்கள் சுமார் 200 நாட்கள் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் நாட்டு அறிஞர்கள் Nature communication எனும் அறிவியல் இதழில் வெளிவந்த தங்களது ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

அல்பைன் உழவாரன்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவி காணப்படுகின்றன. உயர்ந்த மலைப்பகுதிகளில் பொதுவாக தென்படும் இப்பறவைகளை பிப்ரவரி முதல் மே மாதங்கள் வரையில் மேற்கு தொடர்ச்சி மலையின்  ஆனைமலைப் பகுதிகளில் அவ்வப்போது பறந்து திரிவதை நான் கண்டிருக்கிறேன். அம்புக்குறியின் தோற்றத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு அதிவேகமாக, அங்குமிங்கும் சட்டென வளைந்து திரும்பி பறக்கும் இயல்புடையவை. பைனாகுலரின் வழியே ஒரு பறவையை தொடர்ந்து பார்த்து கவனிப்பது கூட சிரமாக இருக்கும் அளவிற்கு வேகமாகப் பறப்பவை. எனில் இவற்றை புகைப்படமெடுப்பதென்பது மிக மிக சிரமமான காரியம்.

அல்பைன் உழவாரன், படம்: ராம்கி சீனீவாசன்

அல்பைன் உழவாரன், படம்: ராம்கி சீனீவாசன்

இவை மலை முகடுகளிலும், குகைகளுக்கு உள்ளேயும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். வலசை போகும் பண்புள்ள இவை, இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலிருந்து கிழக்கே பறந்து வருவதும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் உயரமான இடங்களிலிருந்து கீழேயும் வலசை வருவதாக அறியப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பைன் உழவாரன்கள் சஹாரா பாலைவனத்தைக் கடந்து மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வலசை போகும்.

பொதுவாக வலசை போகும் பண்பினை அறிய பறவைகளைப் பிடித்து அவற்றின் கால்களில் ஒரு வளையத்தை மாட்டி விடுவார்கள். ஒவ்வொரு வளையத்திற்கும் ஒரு பிரத்தியேக எண், அந்த வளையமிடும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும். அந்தப் பறவை உலகின் வேறு பகுதியில் பிடிக்கப்பட்டால் அவ்வளையத்தில் உள்ள தகவல்களை வைத்து எங்கு எப்போது வளையமிடப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு அறிய முடியும். ஆனால், இப்படி ஒரு வளையமிடப்பட்ட பறவையை திரும்பவும் பிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆயிரக் கணக்கான பறவைகளுக்கு வளையமிட்டால்தான் ஓரிரு பறவைகளையாவது திரும்பவும் பிடிக்கப்படும் சாத்தியம் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் செயற்கைக்கோள் பட்டையினை (satellite collar) பறவையின் முதுகில் பொறுத்தி அவை போகுமிடங்களை ஆராய்ச்சிக்கூடத்தில் அமர்ந்து கொண்டே கணிணியில் பார்த்து அறிய முடியும். அப்பட்டையில் உள்ள சமிக்கைப்பரப்பி (transmitter) மின்கலத்தால் இயங்ககூடியது. சமிக்கைப்பரப்பியின் ஒரு பகுதியான ஜி.பி. எஸ் (GPS) கருவியானது அது பொறுத்தப்படட பறவையின் இருக்குமிடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை முதலிய தகவல்களை செயற்கைக்கோளுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். இதன் மூலம் அப்பறவை எங்கெல்லாம் பறந்து எவ்வளவு தூரம் செல்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். ஆனால் இக்கருவி மிகவும் விலையுயர்ந்தது, இதன் மின்கலத்தின் ஆயுள் காலம் கம்மி, முக்கியமாக இதன் எடை அதிகம். இதனால் உருவில் பெரிய, பருமன் அதிகமாக உள்ள (வாத்து, நாரை, கொக்கு போன்ற) பறவைகளின் உடலில் மட்டுமே பொருத்த முடியும்.  ஆகவே சிறிய பறவைகளின் வலசைப் பண்பினை அறிவது என்பது இயலாத காரியமாக இருந்தது.

இந்நிலையை மாற்றியது ஒளி-அளவி இடங்காட்டி (light-level geolocator) அல்லது பறவை இடப்பதிவி (Bird logger). இது ஒரு உன்னதமான கண்டிபிடிப்பு. இந்த கருவி செய்வதெல்லாம், இது பொருத்தப்பட்ட பறவை இருக்குமிடத்தின் சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance) இதனுள் இருக்கும் ஒளி உணர்கருவியின்  (light sensor)உதவியால் பதிவு செய்வதே ஆகும். சூரிய ஒளியின் தீவிரம் ஒரு நாளின் நேரத்தைப் பொருத்து மாறுபடுமல்லவா? இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்ட பின் அதை வைத்துக்கொண்டு பூமியில் எந்தப் பகுதியில் இந்த நேரத்தில் மதியம் எப்போது என்பதையும் காலைக் கருக்கலையும், அந்தி மாலையையும் கணிக்கமுடியும். இந்த விவரங்களை வைத்துக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும். இது எந்த வகையில் சிறந்தது? இவற்றின் எடை மிகவும் குறைவு. ஒரு சில கிராம்களே இருக்கும். நீண்ட நாள் (1-5 ஆண்டுகள்) வேலை செய்யும், அதாவது ஒளியின் அளவை பதிவு செய்யும். விலையும் மற்ற கருவிகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. எனினும் ஒரிரு குறைகளும் உண்டு. பறவைகளின் இருப்பிடத் தகவல் சற்று துல்லியம் குறைவாக இருக்கும். மேலும் இக்கருவியில் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் பெற பொருத்தப்பட்ட அப்பறவையை மீண்டும் பிடித்தே ஆக வேண்டும்.

இதுபோன்ற ஒரு கருவியைத் தான் சுவிட்சர்லாந்தில் உள்ள 6 அல்பைன் உழவாரன்களுக்கு பொருத்தினார்கள். கூடு கட்டும் இடத்திலேயே அவை பிடிக்கப்பட்டன, ஏனெனில், அவை வலசை போய் திரும்ப அங்கேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் இவற்றை எளிதில் பிடித்து பறவை இடப்பதிவியை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். அவர்கள் பொருத்திய இக்கருவியின் எடை 1.5 கிராம்களே. இவர்கள் பொருத்திய இந்தக் கருவிக்கு வேறோர் சிறப்பு உண்டு. இது ஒளியின் அளவை மட்டும் பதிவு செய்யாமல் அப்பறவைகள் பறக்கும் வேகத்தையும், உடலசைவையும் கூட பதிவு செய்யும் ஒரு முடுக்கமானி (Accelerometer). இந்தத் தகவலின் மூலம் அவை இறக்கை அடித்துப் பறக்கின்றனவா? இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா? அல்லது ஓய்வெடுக்கின்றனவா? என்பதை கணிக்கமுடியும்.

அல்பைன் உழவாரன்கள் கூட்டம், படம்: ராம்கி சீனீவாசன்

அல்பைன் உழவாரன்கள் கூட்டம், படம்: ராம்கி சீனீவாசன்

இக்கருவி பொருத்தப்பட்ட 6 பறவைகளில் சுமார் 10 மாதங்கள் கழித்து 3ஐ மட்டும் மீண்டும் பிடிக்க முடிந்தது. அவற்றின் முதுகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பறவை இடப்பதிவியில் பொதித்து வைக்கப்பட்டிருந்த தகவல்களை ஆராய்ந்ததில் அந்த மூன்று பறவைகளும் தரையிறங்காமலேயே சுமார் 6 மாத காலங்கள் வானில் சுற்றித் திரிந்த சங்கதி தெரிந்தது. இது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இங்கு இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அவை எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகத்தான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவு மாறுபடும் அல்லவா? இதை அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஒளி அளவில் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லாமல் சுமார் 6 மாதங்களுக்கு பதிவுகள் அனைத்தும் ஒரே சீராக இருந்ததை வைத்தே இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது. அது எப்படி கீழிரங்காமலேயே இருக்க முடிந்தது இப்பறவையால்? அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின்றன ஆகவே கீழிரங்க அவசியம் ஏதும் இல்லை. சரி ஓய்வு வேண்டாமா? தூங்க வேண்டாமா? உழவாரன்களுக்கு ஒரு விசித்திரமான பண்பு உண்டு அந்தரத்தில் தூங்குவதுதான் அது! ஆம், ஆங்கிலத்தில் இதை aerial roosting என்பர்.

உழவாரன்கள் தம் வாழ்வின் பெரும்பகுதியை வானிலேயே கழிக்கின்றன, கூடமைக்கும் காலத்தைத் தவிர. பறவையியலாளர்களிடையே பலகாலமாக இருந்து வந்த இந்த அனுமானம் இப்போது இந்த ஆராய்ச்சியின் விளைவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி கட்டுரைக்கான உரலி –

http://www.nature.com/ncomms/2013/131008/ncomms3554/full/ncomms3554.html

அல்பைன் உழவாரன் வீடியோவிற்கான  உரலி –

http://www.arkive.org/alpine-swift/tachymarptis-melba/video-00.html

 

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 8th July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDFஐ இங்கே பெறலாம்.

Advertisements

Written by P Jeganathan

July 10, 2014 at 9:09 pm

Posted in Birds, Migration

Tagged with ,

2 Responses

Subscribe to comments with RSS.

  1. அருமையான உள்ளக் கிளர்ச்சியூட்டும் பதிவு. நான் இந்து வாசிக்கவில்லை. இங்கு நீங்கள் பதிவிட்டதால் feedly-ல் வாசித்தேன். கட்டுரைக்கு நன்றி.

    தங்கமணி

    August 5, 2014 at 9:23 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: