UYIRI

Nature writing in Tamil

பச்சை நிறமே, மரகதப் பச்சை நிறமே!

leave a comment »

காட்டோடை சல சல வென விடாமல் ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது. இலேசாக தென்றல் வீசியதில் ஓடைக்கரையில் இருந்த அத்தி மரத்திலிருந்து ஓரிரு பழுத்த இலைகள் உதிர்ந்து நீரோடையில் விழுந்து பயணிக்க ஆரம்பித்தன. விதவிதமான தகரைச் செடிகளும் (பெரணிகள் – Ferns), காட்டுக் காசித்தும்பை செடிகளும் (Impatiens), ஓடைக்கரையோரம் வளர்ந்து அந்த ஓடையின் அழகிற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. நான் அருகில் இருந்த பாறையின் மேல் அமர்ந்திருந்தேன். ஒரு குறிப்பிட்ட ஊசித்தட்டானைக் காண்பதற்காக.

காட்டு நீரோடை படம்: Radha Rangarajan

காட்டு நீரோடை படம்: Radha Rangarajan

அதன் பெயர் மரகதத்தும்பி, ஆங்கிலத்தில் Stream Glory என்பர். இதன் அழகை குறிப்பாக ஆண் மரகதத்தும்பியின் அழகை சொல்லில் வர்ணிக்க முடியாது. இதை நேரில் பார்ப்பவர்கள் வியப்பில் திக்குமுக்காடிப் போவார்கள். மரகதத்தும்பி, கிழக்கத்திய நாடுகளில் (oriental region) வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தென்படும். ஆணின் வாயுறுப்புகள் (Mandibles), மார்பு (Thorax), வயிறு (Abdomen – நாம் வால் என நினைப்பது) அனைத்தும் மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். இரு பெரிய கரிய கூட்டுக் கண்கள் (Compound Eyes) தலையில் அமைந்திருக்கும். பூச்சிகளைப் பிடிக்க உதவும் கூர்மையான முட்கள் அமைந்த  கால்களும் பச்சை நிறமே. இரண்டு சோடி இறக்கைகளில், முன்னிறக்கைகள் ஒளி ஊடுருவும் வகையில் நிறமற்று இருக்கும். அமர்ந்திருக்கும் போது மடக்கி வைக்கப்பட்டிருக்கும் பின்னிறக்கையின் மேற்புறம் தூரத்திலிருந்து பார்க்கும் போது கரிய நிறத்தில் இருந்தாலும் சூரிய ஒளியில் பார்த்தால் பளபளக்கும் செப்பு நிறத்தில் இருக்கும். எனினும் நம் கண்ணைக் கவர்வது தகதகவென மின்னும் மரகதப் பச்சை நிறமும், பளபளக்கும் கருப்பு முனைகளைக் கொண்ட இப்பின்னிறக்கையின் உட்புறமே.

ஆண் மரகதத்தும்பி

ஆண் மரகதத்தும்பி

பெண் மரகதத்தும்பியின் உடல் மஞ்சள் கலந்த ஆனால் பளபளக்கும் பச்சை நிறம். இவற்றின் இறக்கைகள் தேன் நிறத்தில் ஒளி ஊடுறுவும் தன்மையுடன் இருக்கும். இறக்கைகளில் இரண்டு வெண்புள்ளிகள் இருக்கும். இவை ஓடைக்கு அருகில் வருவது பெரும்பாலும் இனப்பெருக்க காலங்களில் மட்டுமே. ஓடையின் அருகில் இருக்கும் தாவரங்களின் மேலோ, நீரிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும், குச்சி அல்லது பாறையின் மீதோ அமர்ந்திருக்கும். இவற்றைக் கவர ஆண் தும்பி பல முயற்சிகளை மேற்கொள்ளும். முதலில் முட்டையிடுவதற்கான சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை நீரின் அடியில் இருக்கும் குச்சியிலோ, வேரிலோ தான் முட்டையிடும். நீரோட்டம் சரியான அளவிலும், நல்ல சூரிய வெளிச்சமும் இருக்க வேண்டும்.

பெண் மரகதத்தும்பி

பெண் மரகதத்தும்பி

ஆண் தும்பி அந்த இடத்தைச் சுற்றிப் பறந்து வலம் வந்து அந்தப் பகுதியை தனதாக்கிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நல்ல இடத்தை பிடிக்க போட்டியும் வரும். அப்போது அங்கு நுழையும் ஆண் தும்பியை துரத்தி விடும். அல்லது பலம் வாய்ந்த ஆணாக இருப்பின் அமர்ந்தவாறே தனது வயிற்றுப்பகுதியை மேலே தூக்கிய நிலையில், பளபளக்கும் இறக்கையை ஒரு முறை வேகமாக விரித்துக் காண்பித்தால் போதும். பின்னர் தனது துணையைத் தேடி ஆண் தும்பி அதன் முன்னே நடனமாடும். ஆம், அப்படித்தான் தெரியும் நமக்கு. பெண் அமர்ந்திருக்கும் இடத்தினருகில் சென்று ஆண் 8 வடிவத்தில் முதலில் சிறகடித்துப் பறக்கும். அது கண்கொள்ளாக் காட்சி. பிறகு அவளை சம்மதிக்க வைக்க தனது இடத்தைக் காண்பிக்கக் கூட்டிச் செல்லும். அதன் பின் அப்பெண் தும்பி சம்மதித்தால் அவையிரண்டும் இணைசேரும்.

ஆண் மரகதத்தும்பி இறக்கை அடிக்கும் காட்சி பார்ப்பவரின் மனத்தை கொள்ளை கொள்ளும்

ஆண் மரகதத்தும்பி இறக்கை அடிக்கும் காட்சி பார்ப்பவரின் மனத்தை கொள்ளை கொள்ளும்

அடுத்து முட்டையிடும் பணி. சரியான இடம் பார்த்து பெண் தும்பி தனது முட்டைகளை இடும்போது ஆணும் அதைச் சுற்றிப் பறந்து பாதுகாக்க்கும். சில வேளைகளில் பெண்ணானது நீருக்கு அடியிலும் மூழ்கி முட்டையிட வேண்டியிருக்கும். இந்த முட்டை பொரிந்து இதன் தோற்றுவளரி (லார்வா) பல ஆண்டுகள் நீரினடியிலேயே வாழும். முழு வளர்ச்சியடைந்த பின் சரியான வேளையில் நீரினருகில் இருக்கும் தாவரங்களின் மேலேறி தோலுரித்து வெளிவந்து பறக்க ஆரம்பிக்கும்.

நான் அமர்ந்திருந்த தெளிந்த ஓடையின் அருகில், மரங்களினூடாக சுள்ளெனெ சூரிய ஒளி வீச ஆரம்பித்தது. ஓடிக்கொண்டிருந்த தெளிந்த நீரை குத்திக் கிழித்து ஓடைத்தரையைக் காட்டியது அந்த சூரிய ஒளி. நீரின் அடியில் இருந்த பாசிகளும், நீர்த்தாவரங்களும் நீரோட்டத்தின் போக்கிற்கு அசைந்தாடிக் கொண்டிப்பது தெரிந்தது. நீரினடியில் மீன் கூட்டமொன்று வோகமாக நீந்திப் போவது தெரிந்தது. தூரத்தீல் சிறிய மீன்கொத்தி ஒன்று மரக்கிளையில் அமர்ந்து ஓடும் நீரையே பார்த்துக் கொண்டிருந்தது. ஓடையின் அருகிலிருந்து  ஒரு சீகாரப்பூங்குருவி (Malabar Whistling Thrush) தனது இரம்மியமான குரலில் பாட ஆரம்பித்தது.  நான் அமர்ந்திருந்த பாறையின் பக்கம் காட்டுநீர்நாயின் (Small-clawed Otter) எச்சம் பரவிக் கிடந்தது. நேற்று இரவுதான் அவை இங்கே வந்திருக்க வேண்டும், ஏனெனில் நண்டின் ஓட்டுத் துகள்களைக் கொண்ட அந்த எச்சத்தின் அருமையான மணம் இன்னும் போகவில்லை.

சூரிய ஒளி மெல்ல தலைக்கேறியது. இரண்டு ஆண் மரகதத்தும்பிகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு வந்தன. நான் காண வந்த காட்சி இதுதான். காட்டோடை பல அற்புதங்கள் பொதிந்த இடம் தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை மரகதம் போன்ற தும்பிகள் இல்லாமல் எந்த ஒரு நீரோடையும் முழுமையடைவதில்லை.

ஆண் மரகதத்தும்பியின் பின்னிறக்கை

ஆண் மரகதத்தும்பியின் பின்னிறக்கை

**********

IMG_4291_700

“தட்டான்கள் என அழைக்கப்பட்டாலும் சங்க இலக்கியங்களில் இவை தும்பி எனப்படுகின்றன. தட்டான்களில் இரு வகையுண்டு. அமரும்போது இறக்கையை பக்கவாட்டில் விரித்து (ஏரோ ப்ளேன் போல) வைத்திருப்பவை தட்டான்கள். இவற்றின் கண்கள் அருகருகே இருக்கும். இறக்கையை மடக்கி வைத்துக் கொண்டு அமருபவை ஊசித்தட்டான்கள். இவை பெரும்பாலும் தட்டான்களைவிட உருவில் சிறியதாகவும், ஒல்லியான உடலையும் கொண்டிருக்கும். தட்டான்களுக்கு ஆறு கால்களும், இரண்டு சோடி இறக்கைகளும் இருக்கும். தட்டான்கள் நமக்கு நன்மை செய்யும் பூச்சியினம். நீரினடியில் இருக்கும் தோற்றுவளரிப் பருவத்திலும், பல பூச்சிகளையும், கொசுக்களின் முட்டைகளையும் உட்கொள்கின்றன. அவை முதிர்ந்த பறக்கும் தட்டான்களானதும் கொசுக்களையும், இன்னும் பிற பூச்சியினங்களையும் உணவாகக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப் படுத்துகின்றன. உலகில் சுமார் 6000 வகையும், அவற்றில் சுமார் 536 வகை, இந்தியாவில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இந்தியத் தட்டான்களை இனங்கான, அவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள K. A. Subramaniyan எழுதிய “Dragonflies of India” ஐ நாடவும். இந்நூலை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான உரலி

http://www.vigyanprasar.gov.in/digilib/Showmetaxml.aspx?BookID=364

**********

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 15th July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDFஐ இங்கே பெறலாம்.

Advertisements

Written by P Jeganathan

July 17, 2014 at 9:57 pm

Posted in Insects

Tagged with ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: