UYIRI

Nature writing in Tamil

பஷீரின் குடுமிக்கழுகு

with 4 comments

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்குப் போய்க் கொண்டிருந்தது வண்டி. முன் இருக்கையில் அமர்ந்து சாலையோரத்து வனப்பகுதியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அட்டகட்டியைத் தாண்டியவுடன் சாலையோரத்தில் மரங்களில்லா வெட்ட வெளியைத் தாண்டிச் சென்றோம். சாலையை விட்டு சற்றுத் தள்ளி மலைச்சரிவில் இலைகளில்லாத ஒரு மொட்டை மரம் நின்று கொண்டிருந்தது. அதைக் கடந்து செல்லும் போது மரத்தின் மத்தியில் இருந்த பிளவுபட்ட ஒரு கிளையில் ஏதோ அசைவது கண்ணில் தென்பட்டது. உடனே நிறுத்தும்படிச் சொல்லி வண்டியை பின்னால் எடுக்கச் சொன்னேன். அருகில் சென்றதும் தெரிந்தது, அது ஒரு குடுமிக்கழுகின் கூடு. வண்டியை போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் சற்று தள்ளி நிறுத்திவிட்டு இருநோக்கியின் (Binoculars) மூலம் அப்பறவைக் கூட்டைக் கவனிக்கலானேன்.

என் கண்ணுக்கு நேரான மட்டத்தில் சாலையை விட்டு சற்று தூரமாக அமைந்திருந்தது அந்தக் கூடு. அந்தக் கழுகு, கூடு கட்ட மிக அருமையான இடத்தையும், மரத்தையும் தேர்ந்தெடுத்திருந்தது. நெடுந்தோங்கி வளர்ந்திருந்த மரத்தண்டின் மத்தியில் இரு பெரும் கிளைகள் பிளவுபட்டிருந்த இடத்தில் மரச்சுள்ளிகளால் தட்டு போன்ற பெரிய கூடு இருந்தது. அதில் அமர்ந்திருந்தது ஒரு குடுமிக்கழுகு. அது பெட்டையாகத்தான்  இருக்க வேண்டும். நான் கடந்து செல்லும் போது ஒரு வேளை அசையாமல் அமர்ந்திருந்தால் என்னால் அதை கவனித்திருக்க முடியாது. ஆனால் அது அவ்வப்போது எழுந்து சுள்ளிகளை தனது கூரிய அலகால் நகர்ந்தி சரி செய்து வைத்துக் கொண்டிருந்தது. பின்பு உடலை பக்கவாட்டில் அசைத்து அமர்ந்தது. நிச்சயமாக முட்டையிட்டிருக்கும். சிறிது நேர கவனத்திற்குப் பின் அந்த மரத்தின் இடதுபுற மேல் கிளையில் இன்னுமொரு குடுமிக்கழுகு அமர்ந்திருந்ததைக் கண்டேன். அது ஆண் பறவையாகத்தான் இருக்க வேண்டும். ஆணும், பெட்டையும் சேர்ந்து கூடு கட்டினாலும், அடைகாப்பது பெட்டை மட்டுமே.

பெண் காட்டு குடுமிக்கழுகு அதன் கூட்டில்

பெண் காட்டு குடுமிக்கழுகு அதன் கூட்டில்

நான் அக்கழுகினை பார்த்துக் கொண்டிருந்ததையும், காமிராவில் படமெடுப்பதையும் பார்த்த காரோட்டி பஷீர் மெல்ல அருகில் வந்து அங்கே என்ன பார்க்கிறீர்கள் என்றார். இருநோக்கியைக் கொடுத்து கழுகு இருக்கும் திசையில் பார்க்கச் சொன்னேன். கிட்டக்க தெரியுது சார்! அதோட மூக்கு (அலகு) கூர்மையா இருக்கு சார் என்று ஆச்சரியத்துடன் சொன்னார். பறவையின் பெயரைக் கேட்டார். காட்டுக் குடுமிக்கழுகு என்றேன்.  மரக்கிளையில் அமர்ந்திருந்த ஆண் பறவையையும் காட்டி அதை பார்க்கச் சொன்னேன். அதன் உச்சந்தலையிலிருந்து பின்னால் 3-4 சிறகுகள் தனியாகச் சிலுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, இதனால் தான் இதற்கு குடுமிக்கழுகா என்றார். ஆம் என்றேன். தமிழ்நாட்டில் இரண்டு வகையான குடுமிக்கழுகு இருப்பதையும், நாம் பார்ப்பது வனப்பகுதியில் மட்டுமே வாழும் காட்டுக் குடுமிக்கழுகு (Legge’s hawk eagle), மற்றொன்று குடுமிக்கழுகு (Changeable Hawk-eagle) என்றும் சொன்னேன். அவை என்ன சாப்பிடும் என்று கேட்டார். குரங்கு, மந்தி, முயல், காட்டுக்கோழி, மயில் போன்ற உருவில் பெரிய உயிரினங்களையும் பிடித்து இரையாகக் கொள்ளும் திறன் வாய்ந்தது. அவ்வப்போது, பல்லிகள், ஓணான்கள் முதலிய சிறிய ஊர்வனவற்றையும், மைனா, புறா, கிளி போன்ற சிறிய பறவைகளையும் வேட்டையாடி உண்ணும் என்று சொன்னேன். பஷீருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இரயிலுக்கு நேரமானதால் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

ஆண் காட்டு குடுமிக்கழுகு

ஆண் காட்டு குடுமிக்கழுகு

அடிக்கடி இல்லையென்றாலும் இரு மாதத்திற்கு ஒரு முறையாவது வாடகைக் காரில் வால்பாறையிலிருந்து கோவைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும் சூழல் ஏற்படும். ஒரு முறை நான் வழக்கமாக அழைக்கும் காரோட்டி வராததால் பஷீரை அனுப்பி வைத்தார். அதிலிருந்துதான் அவரைத் தெரியும். பஷீர் ஒரு பொறுப்பான காரோட்டி. எப்போதும் நிதானமாக வண்டியை ஓட்டிச் செல்வார். வளைவுகளில் முந்துவதில்லை. மேலேறி வரும் வாகனத்திற்கு ஒதுங்கி வழிகொடுப்பது என மலைப்பாதையில் வண்டி ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுபவர். முக்கியமாக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போது போன் வந்தால் அதை எடுத்துப் பேச மாட்டார். முக்கியமான அழைப்பாக இருந்தால் என்னிடம் கேட்டுவிட்டு வண்டியை நிறுத்திய பின் பேசுவார். வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதும் கூட தேவைப்பட்டால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசும் குணமுள்ளவர். அவரது வண்டியில் போவது இது இரண்டாவது முறை. அதிகம் பேசாத அவர், இந்த குடுமிக்கழுகினை பார்த்தது முதல், பறவைகளைப் பற்றியும், காட்டுயிர்களைப் பற்றியும் வழியெங்கிலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.

இது நடந்து ஒரு மாதம் கழித்து (ஏப்ரலில்) ஒரு நாள் எனக்கு பஷீரிடமிருந்து போன் வந்தது. “சார்..முட்டை பொரிஞ்சி, குஞ்சு வெளியில வந்துடுச்சின்னு நெனக்கிறேன் சார்” என ஆர்வம் மேலோங்க கத்திச் சொன்னார். என்னை விட அதிகமாக பயணம் செய்பவர் அவர். அவ்வழியே போய் வரும் போதெல்லாம் அக்கூட்டினை கண்காணித்து வந்திருக்கிறார். எப்படித் தெரியும் எனக் கேட்டேன். வண்டியை நிறுத்தி சற்று நேரம் கூட்டை பார்த்த போது ஏதோ சிறியதாக அசைந்தது என்றார்.

அது நடந்து சில நாட்களில் கோவைக்குச் செல்லும் வேலையிருந்த போது பஷீரின் வண்டியில் பயணம் செய்தேன். அப்போது அக்கூட்டினை பார்த்த போது பஞ்சு போன்ற தூவிகளைக் கொண்ட சிறிய குஞ்சு அசைவது தெரிந்தது. அதைச் சுற்றி பச்சை இலைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. பிறந்த அந்த கழுகுக்குஞ்சினை கூட்டின் கிளைகள் குத்தாமல் இருக்கவே பச்சை இலைகளால் ஆன மெத்தை போன்ற இந்த ஏற்பாடு. இருநோக்கியின் மூலம் கழுகுக்குஞ்சை ஆர்வத்துடன் பார்த்தார் பஷீர். அம்மரத்தின் உச்சியில் ஒரு கழுகு அமர்ந்திருந்தது. பெட்டைக் கழுகாக இருக்கலாம். குஞ்சு பொரித்தவுடன் ஆண் அவ்வப்போது, தான் வேட்டையாடிய இரை உயிரிகளை கூட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கும். பெரும்பாலும் பெண் கூட்டினருகிலேயே இருக்கும்.

கூட்டில் கழுகுக் குஞ்சு

கூட்டில் கழுகுக் குஞ்சு

பஷீருடன் அந்தக் கழுகு கூடு கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மரத்தையும் இடத்தையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த மரத்தின் எந்தக் கிளையில் அமர்ந்து பார்த்தாலும் விசாலமாக முன்னே பரந்து விரிந்திருக்கும் கானகத்தினையும் அதனையடுத்த பகுதிகளையும் பார்க்க முடியும். எதிரி உயிரினங்களிடமிருந்து கூட்டைக் காக்கவும், அம்மரத்தின் உச்சியிலிருந்து கொண்டே அக்கானகத்தின் விதானப்பகுதியை நோட்டமிட்டு வேட்டையாட ஏதேனும் இரை உயிரினங்கள் தென்படுகின்றனவா எனப் பார்ப்பதற்கும் அந்த இடம் ஏதுவாக இருக்கும். இதையெல்லாம் கேட்ட பஷீர் சொன்னார்,” நம்பள மாதிரிதான சார் அதுகளும். நம்ம வசதிக்கு ஏத்த மாதிரிதான நம்ம வீடு பாத்துக்கிறோம்”.

நான்கு மாதம் கழித்து (ஆகஸ்டு) மீண்டும் பஷீருடன் அவ்வழியே பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் சொல்லாமலேயே கூடு இருக்குமிடத்திற்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்தினார். என்னிடமிருந்த இருநோக்கியை வாங்கி கூட்டை பார்க்க ஆரம்பித்தார். அங்கு கழுகு இல்லாததால் அருகிலிருந்த கிளைகளை நோட்டமிட்ட அவரது முகம் மலர்ந்தது. காமிராவை தயார் செய்து கொண்டிருந்த என்னிடம், “சார் கழுகு குஞ்சு வளர்ந்து பெரிசாயிடுச்சி” என்றார். அம்மரத்தின் கிளையில் குடுமிக்கழுகின் இளம் பழுப்பு நிறக் குஞ்சு அமர்ந்திருந்தது. சற்று நேரத்தில் கீ..கீ..கீ.. என உரக்கக் குரலெழுப்ப ஆரம்பித்தது. “அதோட அம்மாவ கூப்பிடுதா சார்” என்றார். சிறு குழந்தை போன்ற அவரது ஆர்வத்தைக் கண்டு புன்னகையுடன், “இருக்கலாம்” என்றேன்.

இளம்பருவக் கழுகு

இளம்பருவக் கழுகு

இந்த ஆண்டு வெளியூருக்கு அதிகம் பயணிப்பதில்லை. ஆகவே, பஷீரை சந்தித்தும் பல நாட்கள் ஆகிறது. இப்போதெல்லாம் அவரிடமிருந்து போனும் வருவதில்லை. எனக்கும் அவரை தொடர்பு கொள்ள நேரமும் கிடைக்கவில்லை. அவரும் என்னைப் போல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கக்கூடும். கழுகுகள் பல வேளைகளில் தான் கட்டிய கூட்டை மறுபடியும் பயன்படுத்தும் குணமுடையவை. ஆகவே, ஒருவேளை மீண்டும் அந்த கூட்டில் அவரது குடுமிக்கழுகினைக் கண்டால் நிச்சயமாக என்னை போனில் அழைத்துப் பேசுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

********

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 5th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.

Advertisements

Written by P Jeganathan

August 6, 2014 at 10:45 am

Posted in Birds

Tagged with

4 Responses

Subscribe to comments with RSS.

 1. Excellent write-up sir.

  aravindamirtharaj

  August 4, 2016 at 4:37 pm

 2. […] Read the Tamil version of this article here. […]

  Basheer’s Hawk Eagle

  April 23, 2017 at 2:07 pm

 3. English version of this article can be seen here – http://blog.ncf-india.org/2017/04/23/basheers-hawk-eagle/

  Jegan

  April 23, 2017 at 2:42 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: