Archive for February 2015
பொங்கல் பறவைகள்
சக்கரைப் பொங்கல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் என் அம்மா செய்யும் சக்கரைப் பொங்கலென்றால் கேட்கவே வேண்டாம். பச்சை அரிசியும், வெல்லமும், பாசிப்பயறும், முந்திரிப்பருப்பும், காய்ந்த திராட்சையும், ஏலக்காயும் சேர்த்து பொங்கல் செய்து, அதில் நெய்யை ஊற்றி கம கமவென மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை கையில் எடுத்து, வாயில் வைக்கும் முன்பே நாக்கில் எச்சில் ஊறும். நெய் மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை விழுங்கும் போது, நாக்கில் தங்கும் அதன் அளவான இனிப்பும், இளஞ்சூட்டில் தொண்டையில் இறங்கும் போது உள்ள இதமான அந்த உணர்வும் மனதில் என்றென்றும் தங்கியிருக்கும். அம்மா அவளது அன்பைக் கலந்து செய்ததாயிற்றே!
பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதனால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகளுக்கு போவது முடியாத காரியம். அப்போதெல்லாம் அம்மா குறைபட்டுக் கொள்வாள். “நீ வராம இந்த வருசம் பொங்கலே நல்லா இல்லாடா, சக்கரை பொங்கல் செஞ்சி உன்னை நெனச்சிகிட்டே சாப்பிட்டேண்டா” என்பாள். வாய்ப்பு கிடைக்கும் வேளையில் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் சக்கரைப் பொங்கல் செய்து தருவாள்.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டில் சிறப்பாக நடந்தது. பல ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அதில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் எனது மகிழ்ச்சிக்கு காரணம் சக்கரப் பொங்கல் மட்டுமல்ல. எனது அப்பாவுடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கச் சென்றதனாலும் தான்.
ஆம், இந்த ஆண்டு (2015) பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்ற நவம்பர் மாதம், தமிழக பறவை ஆர்வலர்கள் குழுவினர் சந்திப்பு, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பதிவைக் காணவும்.
தஞ்சை, கரந்தையிலிருந்து வயல் வெளிகள் சூழ்ந்த சுற்றுச்சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமுத்திரம் ஏரிக்குச் சென்றோம். அப்பா பைக் ஓட்ட நான் பின்னே அமர்ந்து வேண்டிய இடங்களிலெல்லாம் நிறுத்தச் சொல்லி பறவைகளைப் பார்த்து வந்தேன். சமுத்திரம் ஏரி மிகப் பழமையானது. அதைப் பற்றிய சுவாரசியமான செவிவழிக் கதையை அப்பா சொன்னார். மராத்திய காலத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த ஏரி. அப்போதிருந்த அரசி சமுத்திரத்தையே பார்த்தது கிடையாதாம். ஆகவே அரண்மனையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஷார்ஜா மாடி அல்லது தொள்ளக்காது மண்டபத்தின் மேலேறிப் பார்த்தால் தெரியும் படி இந்தப் பரந்த ஏரியை வெட்டினார்களாம். சமுத்திரம் இது போலத்தான் இருக்கும் என அரசிக்கு காண்பிப்பதற்காக வெட்டப்பட்ட ஏரியாம் இது. ஆனால் இப்பொது இந்த பழைய மாளிகைகளின் மேலே ஏற முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே ஏறிப் பார்த்தாலும், காங்கிரீட் கட்டிடங்களின் வழியாக சமுத்திரம் ஏரி தெரியுமா என்பதும் சந்தேகமே.
சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்திருந்தது. ஆகவே பறவைகள் மிக அதிகமாக இல்லை, எனினும் சுமார் 20 வகைப் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டோம் (பட்டியலை இங்கே காணலாம்). மோகன் மாமாவும் பறவை பார்ப்பதில் எங்களுடன் சேர்ந்து கொண்டார். வெயில் ஏற ஆரம்பித்ததும் வீடு திரும்பி சக்கரைப் பொங்கலைச் சுவைத்தேன். வீட்டில் பெற்றோர்களுடன் இருந்தது, பறவைகளைப் பார்த்தது, பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பிற்கு பங்களித்தது என இனிமையாகக் கழிந்தது பொங்கல்.
பண்டிகை நாட்களில் பறவைகள் பார்ப்பது இந்தியாவில் இப்போது பெருகி வருகிறது. மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து eBird எனும் இணையத்தில் உள்ளிடுவார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பு (Onam Bird Count) நடத்தப்பட்டது.
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை, தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (Climate Change) கணிக்க முடியும்.
ஆகவே, பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் பழக வேண்டும். பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த இது போன்ற பொங்கல் தின பறவைகள் மற்றும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதலியவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பறவைகளைக் கணக்கெடுப்பதும், அவற்றை குறித்துக் கொள்வதும், பின்பு eBirdல் உள்ளிடுவதும் முக்கியம் தான் என்றாலும், முதலில் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் எண்ணத்தை அனைவரிடமும் வளர்க்க வேண்டும். இது போன்ற நற்செயல்கள் தான், நமக்கு புறவுலகின் பால் நாட்டத்தை ஏற்படுத்தவும், இயற்கையை ரசிக்கவும், நாம் வாழும் சூழலைப் போற்றிப் பாதுகக்க வேண்டும் என்கிற அக்கறையை ஏற்படுத்தும்.
நம் பெற்றோர்கள் நம்மிடம் வைத்திருக்கும் பாசத்தையும், கரிசனத்தையும் போல், நாம் நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைப் போல், நமது சுற்றுப்புறச்சூழலின் மேலும், அதில் வாழும் உயிரினங்களின் மேலும் நாம் அன்பு காட்ட வேண்டும்.
என் அம்மா எனக்கு சக்கரைப் பொங்கலைப் பாசத்துடன் தருவது போல் இந்த பூமித்தாய் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பறவைகளையும் இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் கொடுத்திருக்கிறாள். எனக்கு சக்கரைப் பொங்கல் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு இல்லையில்லை அதையும் விட அதிகமாகப் பிடித்தது பறவைகள் பார்ப்பது. உங்களுக்கு?
——
வண்ணத் தூதர்களைத் தேடி எனும் தலைப்பில் 14 பிப்ரவரி 2015 அன்று தி ஹிந்து தமிழ் தினசரியின் உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரையின் உரலி இதோ, PDF இதோ.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு – 2015 (GBBC-2015)
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு 13-16 பிப்ரவரியில் நடக்கவுள்ளது. அமெரிக்க நாடுகளில் 1998ல் தொடங்கப்பட்ட இந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC), இந்தியாவில் முதன் முதலில் 2013ல் நடத்தப்பட்டது. சென்ற ஆண்டு இந்தியா முழுவதிலிருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 3000 பறவைப் பட்டியல்களை eBird இணையத்தில் உள்ளிட்டார்கள். சுமார் 800 வகையான பறவைகள் இந்த நான்கு நாட்களில் பதிவு செய்யப்பட்டது. பறவை பட்டியல் உள்ளிட்டதில், உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடத்தில் (முதலிடம் கேரளாவிற்கு), 605 பறவைப் பட்டியல்கள் உள்ளிடப்பட்டது, இதில் 348 பறவை வகைகளும் பதிவு செய்யப்பட்டது.

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2013 மற்றும் 2014ல். (விளக்கப்படத்தை பெரிதாகக் காண படத்தின் மேல் சுட்டவும்)
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும்.
இவ்வகையான கணக்கெடுப்பில் ஆர்வமுள்ள, புறவுலகின் மேல் கரிசனம் உள்ள யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் புறவுலகின் பால் ஆர்வத்தை ஏற்படுத்தும். தங்களைச் சுற்றியுள்ள பறவைகளை பார்த்து மகிழ்வதுடன், அறிவியல் ஆராய்ச்சிக்கும் பங்களிக்கும் வாய்ப்பாக அமையும். இந்தக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கோ வெகு தூரம் சென்று பறவைகளைக் கண்டுகளித்து, கணக்கெடுக்கத் தேவையில்லை. தங்கள் வீடுகளில் இருந்தோ, தங்களது பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்தோ, பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலிருந்தோ பறவைகளை கவனித்து eBirdல் பட்டியலிடலாம்.
இந்த ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றியும், நாம் பார்த்து கணக்கிட்ட பறவைகளின் வகைகளையும், அவற்றின் எண்ணிக்கையையும் eBirdல் எவ்வாறு உள்ளிட்டு பட்டியல் தயார் செய்வது என்பதையும் விளக்கும் ஓர் அறிமுகக் கையேட்டை (An Introductory Guide to Great Backyard Bird Count – GBBC & eBird) இங்கே (PDF-32MB) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். (கீழே உள்ள படத்தைச் சுட்டவும் – click the image below to download)
இந்தியாவில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பைதரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மேலும் விவரங்களுக்கு காண்க: www.birdcount.in
தொடர்புக்கு: மின்னஞ்சல் – birdcountindia@gmail.com