Archive for April 2015
இயற்கையை அழித்தா வளர்ச்சி?
கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.
சுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.
சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.

சாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.
இது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.
தினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.
இந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.
சாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.
சாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.
நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.
பொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.
இதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.

இயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.
யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.
மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.
நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.
———-
மார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.