UYIRI

Nature writing in Tamil

Archive for April 2017

வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க என்ன செய்யலாம்?

leave a comment »

வைகையில் தெர்மோக்கோல் அட்டைகள்: மதுரை ஆட்சியர் விளக்கம் – தி இந்து http://tamil.thehindu.com/tamilnadu/article9658399.ece

இந்த செய்தியின் உரலியை கணினித் திரையில் பார்த்தவுடனேயே அதைச் சுட்டி அப்பக்கத்திற்குச் சென்றேன். தலைப்பைப் பார்த்தவுடன் செய்தியின் சாரத்தை நம் மனது ஊகிக்கும் அல்லவா? யாரோ தெர்மொக்கோலை வைகை ஆற்றில் மிதக்கவிட்டு அதன் சூழலுக்குக் கேடு விளைவித்திருகிறார்கள் என்றுதான் மனதில் தோன்றியது. அந்தப் பக்கத்தில் இருந்த படத்தைப் பார்த்ததும் ஆற்றிலிருந்து சிலர் தெர்மோக்கோல் அட்டைகளை அகற்றுவது போலிருந்தது. ஆனால் ஐந்து பத்தியே இருந்த அந்த நம்ப முடியாத செய்தியை ஒரு நிமிடத்திற்குள் இரண்டு முறை படித்தபின் சிரிப்பும், கோபமும் வந்தது. பின்னர் அது வேதனையாக மாறியது.

அதாவது அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க நீர்ப்பரப்பில் தெர்மோக்கோல் (Styrofoam) அட்டைகளைப் போட்டு மறைக்கின்றார்களாம். ஒரு பொறுப்பற்ற, கோமாளித்தனமான, சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் ஒரு செயலை (தெர்மோக்கோல் மட்கிப் போகாது, புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இராசயனப் பொருளை கொண்டது) செய்துள்ளார்கள். அதுவும் உலக பூமி தினத்தன்று நடந்ததை நினைத்து கோபப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவர் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து மீம் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும் கோபம் கொஞ்சம் தணிந்தது. இணையத்தில் இன்னும் பல மீம்ஸ் இச்சம்பவம் குறித்து பல பார்க்க முடிந்தது. அவை யாவும் சாம்பந்தப்பட்டவர்களை கேலி செய்யும் வகையிலேயே இருந்தது. உருப்படியான மாற்று யோசனைகள் ஏதும் சரியாக கொடுக்கப்படவில்லை. ஆகவே சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டு யோசித்து, நண்பர்களிடமும் யோசனை கேட்டு வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுப்பதற்கான சில வழிமுறைகளைப் பட்டியலிட்டேன். அவை யாவன:

1. நீர்த்தேக்கத்தை நிரப்பும் அளவிற்கு பல இடங்களில் இருந்து படகுகளை வர வழைத்து அணையில் விட வேண்டும். அதற்கு முன் படகின் மேல் பெரிய குடையை இணைக்க வேண்டும். படகில் இருவர் இருக்க வேண்டும். ஒருவர் படகை ஓட்ட இன்னொருவர் குடை காற்றில் பறந்து போகா வண்ணம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள.

2. நீர்ப்பரப்பின் மேல் ஒரு பிரும்மாண்டமான சாமியானா பந்தல் போடலாம். அல்லது இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்றால் நீர்த்தேக்கத்தின் பரப்பை ஒத்த எவர் சில்வர் தகட்டை அதன் மேல் வைத்தால் ஆவியாகும் நீராவி அந்தத் தகட்டில் படிந்து மீண்டும் நீர்தேக்கத்தின் மேலேயே நீராகச் சொட்டும். “அணை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது” என புதிய மொழி புழக்கத்திற்கு வரும்.

3. அமெரிக்காவில் ஏதோ பந்துகளைக் கொட்டி குளத்தை நிரப்பி நீர் ஆவியாவதை தடுத்தார்களாம். ஆயினும் இந்த திட்டத்தினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டினை அறிந்து பந்துகளை திரும்பவும் பொறுக்கி எடுத்து விட்டார்கள் (இந்த உரலியைக் காண்க). ஆகவே அந்த பந்துகளைக் கொட்டாமல் கிரிக்கெட், வாலிபால், கூடைப்பந்து என பல வகையான தன்னார்வ விளையாட்டு வீரர்களை அழைத்து வந்து கரையோரமாக விளையாடச் சொல்ல வேண்டும். அவர்கள் அடிக்கும் பந்துகள் யாவும் நீரில் விழுந்து நாளடைவில் நீர்த்தேக்கம் முழுதும் பந்துகளாக மிதக்கும். நீரும் ஆவியாகாது.

4. எண்ணெய்ப் படலம் நீர் பரப்பில் இருந்தால் நீர் ஆவி ஆகாது. ஆகவே பொதுமக்களை அணையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லலாம். ஆனால் குளிக்க வருபவர்கள் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் முதலியவற்றை உபயோகிக் கக்கூடாது. அவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

5. சரி வாங்கிய தெர்மோக்கோல் அட்டைகளை என்ன செய்வது? அதை உபயோகித்தே ஆகவேண்டும் என்றால் அவை பறக்காமல் இருக்க என்ன செய்வது? நீர்த்தேக்கத்தை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். பின்னர் கிணற்றின் மேல் கம்பியால் ஆன வலை போடுவார்களே அது போல ஒரு பெரிய கம்பி வலையை வைக்க வேண்டும். இப்போது தெர்மோக்கோல் அட்டைகளை உள்ளே விட்டால் அவை பறந்து மேலே போகாது.

இப்போதைக்கு என் அறிவுக்கு எட்டியவை இவையே. இது குறித்து பலரும் யோசித்தால் இன்னும் சிறந்த யோசனைகள் வர வாய்ப்பிருக்கிறது. உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள். சுமார் 10 அல்லது 15 வழிமுறைகள் சேர்ந்த பிறகு அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.

உங்களது அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது. எடுங்கள் பேனாவை!

Written by P Jeganathan

April 25, 2017 at 8:56 pm

Posted in Environment

Tagged with , ,