Archive for October 2017
சிவப்பு நீலன் வண்ணத்துப்பூச்சி
சிவப்பு நீலன் வண்ணத்துப்பூச்சி: கருப்பும், சிவப்பும், ஆரஞ்சும் வெள்ளையுமாக இருக்கும் இந்த அழகிய சிறிய வண்ணத்துப்பூச்சியின் ஆங்கிலப் பெயர் Red pierrot Talicada nyseus. இதன் தமிழ்ப் பெயர் சிவப்பு நீலன். நீல நிறமே இல்லை பின்னர் ஏன் இந்தப் பெயர். நீலன்கள் (Lycaenidae) வகையைச் சேர்ந்ததனால் இதற்கு இந்தப் பெயர்.
நீங்கள் நகரத்தில் வசிப்பவரா? இந்த அழகிய வண்ணத்துப்பூச்சியை உங்கள் வீட்டுக்கே வரவழைக்க வேண்டுமானால் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். Kalanchoe, எனும் தாவரத்தையும், “கட்டிப்போட்டால் குட்டிப்போடும்” எனப்படும் Bryophyllum pinnatum எனும் தாவரத்தையும் வீட்டில் வளர்த்தால் போதும். இந்த வண்ணத்துப்பூச்சியின் தோற்றுவளரிகளுக்கு (இளம்பருவ புழுக்கள்) இத்தாவரம் தான் முக்கிய உணவு. ஆகவே இவ்வண்ணத்துப்பூச்சி இத்தாவரத்தில் வந்து முட்டையிடுவதையும், அவற்றிலிருந்து புழுக்கள் வளர்ந்து கூட்டுப்புழுவாக மாறுவதையும் காணலாம். அவை முதிர்ச்சியடைந்த சமயத்தில் அவற்றுடன் நேரம் செலவிட்டு கொஞ்சம் பொறுமையோடு உற்று கவனித்தால் அழகிய வண்ணத்துப்பூச்சி பிறந்து காற்றில் பறந்து செல்வதையும் காணலாம்.
வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள, வண்ணத்துப்பூச்சிகளின் தமிழ்ப் பெயர்களை அறிந்து கொள்ள டாக்டர் ஆர். பானுமதி எழுதிய “வண்ணத்துப்பூச்சிகள் – அறிமுகக் கையேடு” எனும் அழகான நூலைப் படிக்கவும்.
காவிரிக் கரையில் தலைப்பிரட்டைகள்
தலைப்பிரட்டைகள்: குடகுப் பகுதியில், காவிரி நதிக்கரையில் ஒரு காலை வேளையில் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த போது ஆழம் குறைவான ஆற்றுக் கரையில் கூட்டமாக ஏதோ நீந்திவருவதைக் கண்டேன். மீனாக இருக்குமோ என சற்று அருகில் சென்று பார்த்தபோது அத்தனையும் தலைப்பிரட்டைகள்! எந்தத் தவளையின் இளம்பருவம் எனத் தெரியவில்லை. முட்டை வடிவில் கரும்பச்சை உடல் அவற்றின் மேல் இளஞ்சிவப்புக் கண்கள். நீண்ட கரும் புள்ளிகளைக் கொண்ட வால். அதை அசைத்து அசைத்து அவையனைத்தும் நீந்திச் சென்ற காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது.
புள்ளிச்சில்லையும் ஈசலும்
புள்ளிச்சில்லை (Scaly-breasted munia Lonchura punctulata): பொதுவாக தானியங்களையே உணவாகக் கொள்ளும் இப்பறவை அன்று ஈசலை (winged termite) பிடித்துண்ணுவதைப் பார்த்தேன். இப்பண்பினைப் பற்றி நூல்களில் படிந்திருந்தாலும் முதன்முதலில் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஹார்ஸ்லி மலைப்பகுதியில் (Horsley Hills) இக்காட்சியை நேரில் கண்டுகளித்தேன்.
செந்தலைப் பஞ்சுருட்டான்
செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut-headed bee-eater Merops leschenaulti): ஒரிடத்தில் அமர்ந்து நோட்டம் விட்டு, பறந்து செல்லும் பூச்சிகளைக் கண்டதும் பறந்து சென்று காற்றிலேயே அவற்றை லாவகமாகப் பிடிக்கும். மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தமர்ந்து பிடித்த இரையை உண்ணும். தட்டானை அலகில் பிடித்து வைத்துக் கொண்டு மின்கம்பியில் அமர்ந்திருந்த இப்பறவையைப் படம் பிடிக்க முயற்சித்த போது எனக்கு எதிரே அமராமல் வேறிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டது. ஒரு புதரின் மறைவில் காத்திருந்து அங்கு வந்தவுடன் இலைகளினூடாக எடுக்கப்பட்டப் படம். ஆகவேதான் இந்த பச்சைப் படலம்.
கரையோர நண்டெல்லாம்…
கரையோர நண்டெல்லாம்: தரங்கம்பாடிக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த கோட்டையை விட என்னை அதிகம் கவர்ந்தது கடற்கரையோர நண்டுகள் தான். பக்கவாட்டில் நடந்து செல்லும். அருகில் செல்ல முயற்சித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவை தோண்டி வைத்திருக்கும் குழிக்குள் புகுந்து கொண்டு மெல்ல அவற்றின் முல்லை அரும்பு போன்ற கண்களை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கும். இவற்றை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
தொடர்புள்ள கட்டுரை: கடற்கரைக் கோலங்கள்