Archive for November 2017
பெருஞ்செதில் பச்சை ஓணான்
பெருஞ்செதில் பச்சை ஓணான்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மட்டுமே தென்படும் ஒரு வகை அரிய அழகான ஓணான். Large-scaled Forest Calotes (Calotes grandisquamis)ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. உடலை விட இதன் வால் நீளமானது. பச்சை நிறத்தில் இருந்தாலும் அவ்வப்போது அடர் பச்சையாகவும், உடலில் கரிய திட்டுக்களும், மஞ்சள் நிறமும், பச்சை கலந்த இளநீலமும் உடலில் தோன்றி மறையும். இலைகளின் மேல் இருக்கும் போது உருமறைந்து இருக்கவே இந்த தகவமைப்பு.
நெட்டைக்கால் ஈக்கள்
நெட்டைக்கால் ஈக்கள்: கானகத்தின் அதிகம் அறியப்படாத அழகுகளில் நெட்டைக்கால் ஈக்களும் (Long-legged flies)ஒன்று. டோலிகோபோடிடே (Dolichopodidae) எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. சூரிய ஒளி இவற்றின் உடலின் மேல் படும்போது பல நிறங்களில் மின்னும். நிழலான பகுதியில் வளர்ந்திருக்கும் தாவரங்களின் இலைகளின் மேற்பரப்பில் துரித கதியில் வலம் வரும். அது பயணிக்கும் விதத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கும். இலையின் மேல் எல்லா இடத்தையும் சுற்றிவிட்டு அடுத்த இலைக்குப் பறந்து செல்லும். உருவில் சுமார் 1 செ.மீ அளவுதான் இருக்கும். தன்னைவிட உருவில் சிறிய பூச்சிகளை பிடித்துண்ணவே இலை மேல் இந்த நடை பயணம்.
வெள்ளைக்கண்ணி
வெள்ளைக்கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus): கண்ணைச்சுற்றி வெண்மையான வளையம் இருப்பதாலேயே இப்பெயர் பெற்றது. தேன்சிட்டின் அளவே இருக்கும். வனப்பகுதிகளிலும் அதனையடுத்த தோட்டங்களிலும் காணலாம். பொதுவாக கூட்டமாகத் திரியும். பூச்சிகளைப் பிடித்துண்ணும், சில வேளைகளில் பூக்களில் உள்ள மதுவையும், சிறு பழங்களையும் உண்ணும்.
பூஞ்சைகள்: அதிசயமான உயிரினங்கள்
பூஞ்சைகள்: மழைக்காலம் வந்தால் பல அழகான பூஞ்சைகளையும், குடைக்காளான்களையும் காணலாம். அவை அழகு மட்டுமல்ல. தாவரங்களையும், இறந்து போன உயிரினங்களையும் மட்கச் செய்து மண்ணோடு மண்ணாகக் கலக்கச் செய்கின்றன. இறந்ததை உண்டு வாழும் இவை, தாவரமும் இல்லை விலங்கும் இல்லை. அவை இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு அதிசயமான உயிரி.
தொடர்புள்ள கட்டுரைகள்: பூஞ்சைக்கு வந்த மவுசே, ஒளிரும் காளான்கள்.