UYIRI

Nature writing in Tamil

Archive for January 2018

பறவைக் கோலங்கள்

leave a comment »

கோலங்கள், குறிப்பாக மார்கழி மாதத்தில் வாசலில் இடப்படும் கோலங்கள் எப்போதுமே நம்மை வியக்க வைக்கும். சிறு வயதில் அம்மா காலையிலும் மாலையிலும் வாசல் கூட்டி, நீர் தெளித்து, சில வேளைகளில் சாணியையும் கரைத்து மெ ழுகிய பின் இடும் அழகான கோலங்களைக் கண்டு வியந்திருக்கிறேன். தஞ்சை கரந்தையில், எங்கள் வீட்டின் வாசலில், மார்கழி மாதக்  குளிரான காலை நேரங்களில் அம்மா கோலமிடும் போது தூக்கக் கலக்கத்துடன் நானும் என் தங்கையும் கோலத்தின் அருகில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். அதிகாலையில் மிகுந்த சிரத்தையுடன் பெரியதாகவும், சிக்கலாகவும் இடப்படும் கோலம் மாலையில் எளிமையானதாக இருக்கும். ஆனாலும் அழகில் குறைவாக இருக்காது.

மார்கழி கோலம்

அம்மாவின் கோலங்கள் மட்டும் அழகல்ல, அவள் கோலமிடும் விதமும் அழகுதான். முந்தைய நாளே அல்லது வாசலைக்  கூட்டும் போதே கோலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பாள் போலும். கோலமிடும் தருணம் வந்தபின் திண்ணையின் அருகில் இருக்கும் மாடத்திலிருந்து (அப்போது எங்கள் விட்டில் திண்ணையும் இருந்தது மாடமும் இருந்தது) கோலமாவுக்  கிண்ணத்தை எடுத்து வருவாள். கூட்டிய தரையை ஒரு கணம் உற்றுப் பார்த்து எந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமோ அங்கே நிற்பாள். பிறகு குனிந்து கோலமாவை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையில் கெட்டியாகப் பிடித்து அள்ளி சீராகப்  புள்ளிகளை வைத்து கோலமிட ஆரம்பிப்பாள்.

மாலை வேளைகளில் எளிமையான சிறிய கோலங்களைக்  குனிந்து ஒரே மூச்சில் புள்ளி வைத்துக்  கோலமிட்ட பின்னரே நிமிர்நது   நிற்பாள். இவற்றில் பெரும்பாலும் மூன்று புள்ளி, மூன்று வரிசை சிக்குக்  கோலம் அல்லது தாமரைக் கோலம் தான் அதிகமாக இருக்கும். அவள் இடும் எளிமையான கோலங்கள் தான் எனக்குப் பிடித்தவை. அம்மா வாங்கி வைத்திருக்கும் கோலப்புத்தகத்தைப் பார்த்து சில வேளைகளில் நானும் எனது தங்கையும் அந்தக் கோலங்களை சிலேட்டில் வரைந்து பழகிக்கொள்வோம். ஆர்வமிருந்தாலும் ஆண் பிள்ளை கோலமெல்லாம் போடக்கூடாது எனப்  பலர் கேலி செய்ததால் வெட்கப்பட்டு இந்த அருமையான கலையைத்  தொடர்ந்து கற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் கோலங்களைப் பார்த்து ரசிப்பதோடு சரி.

அம்மா சில வேளைகளில் அரிசி மாவிலும் கோலமிடுவது உண்டு. ஒரு நாள் காலை வீட்டினுள் இருந்தபடியே வாசலைப் பார்த்த போது காகம் ஒன்று பக்கவாட்டில் தனது தலையைச் சாய்த்து அலகால் கோலத்தைச்  சுரண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. விவரம் தெரிந்த பின் நான் முதன் முதலில் காகத்தைப் பார்த்தது அந்தத் தருண மாகத்தான் இருக்கும். பின்னர் அருகில் சென்று பார்த்த போது எறும்புகளும் அந்தக் கோலத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.

சிறு வயதில் நான் பார்த்திருந்த எங்கள் தெருவின் மார்கழி மாதக் காலை அழகாக இருக்கும். பொழுது புலரத் தொடங்கி, பொழிகின்ற பனி சற்றே விலகிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ஆள் அரவம் அதிகமில்லாத காலைப் பொழுதுகளில் தெருக்கோடி வரை பார்க்க முடியும். சட்டை போடாத தாத்தாவின் தலைமையில் சிறு கூட்டம் ஒன்று (பெரும்பாலும் டிராயர் போட்ட சிறுவர்கள்தான்) பஜனை பாடலைப் பாடிக் கொண்டு கடந்து செல்லும். மார்கழிக்  கடைசியில் தெருவில் கோலப் போட்டி வைப்பார்கள் எனவே தெருவில் உள்ள எல்லா வீட்டின் வாசலிலும் பெண்கள் மும்முரமாக கோலமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

காலங்கள் செல்லச் செல்ல வழக்கம் போல பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன  எங்கள் தெருவிலும், வாழ்விலும். வயதாகிவிட்டதால், முதுகு வலியினால் அவதிப்படும் அம்மா இப்போதெ ல்லாம் கோலமிடுவதில்லை. பணி நிமித்தம் வெளியூரில் வசிப்பதால் பொங்கலுக்குக் கூட எப்போதாவதுதான் வீட்டுக்குப் போகமுடிகிறது. எனினும் சென்ற ஆண்டு பொங்கல் தினங்களில் வீட்டில் இருந்தது நிறைவாக இருந்தது. மொட்டை மாடியில் மாக்கோலமிட்டு பொங்கல் கொண்டாடினோம்.

மொட்டைமாடியில் பொங்கலோ பொங்கல்

இப்போதெல்லாம் பொங்கல் என்றால் என் போன்ற பறவை ஆர்வலர்கள் மும்முரமாக இருப்பது பறவை கணக்கெடுப்பிற்காகத்தான். ஆம் நான்கு  ஆண்டுகளாக இந்த பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு வீட்டுக்குச் சென்ற போது பறவைகளை நோக்க வெகுதூரம் பயணிக்க முடியவில்லை. ஆகவே, வீட்டிலிருந்தும், தெருவிலிருந்தும் பலவகையான பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டின் எதிரில் இருக்கும் அரச மரத்தில் குக்குருவான்களையும், மைனாக்களையும், குயில்களையும், தெருவில் பறந்து திரிந்து மின்கம்பிகளில் அமர்ந்து கொண்டிருக்கும் காகங்களையும், கட்டைச் சுவர்களின் வாலை இப்படியும் அப்படியுமாக திருப்பிக் கத்திக்கொண்டே கூட்டமாக மாடிவிட்டு மாடிதாவும் தவிட்டுக்குருவிகளையும், காகங்களின் விரட்டலில் இருந்து இறக்கைகளை அசைக்காமலேயே இலாவகமாக காற்றில் மிதந்து விலகிச் செல்லும் கரும்பருந்துகளையும், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் உண்ணிக் கொக்குகளையும், கவனித்துக் கொண்டே தெருவில் நடைபோட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வப்போது பலரின் வீட்டு வாசலில் இருந்த கோலங்களையும் பார்த்து ரசித்தவாறே சென்றேன். சில கோலங்கள் மிகவும் அழகாகவும், சில சுமாராகவும் இருந்தன. ஆனால் சில சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருந்தன இது போன்ற கோலத்தைச் சுற்றி யாரும் அதை மிதிக்கக்கூடாதென கற்களை வேறு வைத்திருந்தது மேலும் வேடிக்கையாக  இருந்தது. கலர் கோலமாவில் போடப்பட்ட கோலங்களே அதிகம். கோலத்தின் நடுவில் சிலரது வீட்டில் மட்டுமே பரங்கிப் பூவை சாணியில் குத்தி வைத்திருந்தனர். பெரும்பாலும் பொங்கல் பானையும், கரும்பும் கொண்ட கோலங்கள் தான் அதிகம். எனினும் சில பறவைகளைக்  கோலங்களிலும் கண்டேன். பச்சைக்கிளி, மயில், இன்னவென்று அடையாளம் காணமுடியாத வாத்து, குருவி இவையே கோலங்களில் அதிகமாகத் தென்பட்டன.

வாத்து கோலம்

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பைப்  பிரபலப்படுத்த கோலங்களைக் கொண்ட விளம்பரத்தாள்களை தயாரிக்கலாமே என யோசனை தோன்றியது. நண்பர் செல்வகணேஷிடம் கேட்ட போது அவரது தங்கைகள் பிரியதர்ஷினியும், பிரியங்காவும் (இருவருமே பறவை ஆர்வலர்களும் கூட) இட்ட கோலத்தை படமெடுத்து பகிர்ந்தார்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2017_ கோலம்- பிரியதர்ஷினி & பிரியங்கா

 

செம்மீசை சின்னான் (Red-whiskered Bulbul) கோலம் – சிவக்குமார்.

அது போலவே திருவண்ணாமலையிலிருந்து பறவை ஆர்வலரும், ஓவியருமான நண்பர் சிவக்குமார் செம்மீசை சின்னானை கோலமிட்டு படமெடுத்து அனுப்பினார். இந்த ஆண்டு பெங்களூரிலிருந்து நண்பரும், பறவை ஆர்வலருமான வித்யா சுந்தர் மார்கழி மாதத்தில் அவரது வீட்டு வாசலில் மிக அழகாகப்  பல வகையானப்  பறவைகளைக்  கோலமிட்டு அவற்றின் படங்களை அனுப்பினார். அவரே இந்த ஆண்டு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பிற்கான விளம்பரத் தாளுக்கு ஒரு அழகிய கோலத்தை வரைந்து அனுப்பினார். அடுக்குமாடிக் குடியிருப்பில், வாசல் சிறியதாக இருப்பதால் பெரிய கோலங்களைப்  போட முடிவதில்லை எனக் குறைபட்டுக் கொண்டார். எனினும் சிறிய வாசலாக இருந்தாலும், யாரும் அதிகம் பார்க்க வாய்ப்பில்லாத இடத்தில் கூட இது போன்ற அழகான, துல்லியமான  படைப்புகளை ஆர்வத்துடன் செய்வது பாராட்டத்தக்கச் செயல்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2018_கோலங்கள் – வித்யா சுந்தர்

This slideshow requires JavaScript.

அம்மாவுக்கு உடல்நிலை சரியாக இருந்திருந்தால் பறவையின்  கோலத்தை இடுமாறு கேட்டிருப்பேன். நிச்சயமாக அவளும் என்னை ஏமாற்றி இருக்க மாட்டாள். அண்மைக் காலங்களில் எனது தங்கையும் அழகாகக் கோலங்களை இட்டு அவ்வப்போது படங்களை அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆகவே அவளிடமும் பறவையுள்ள ஒரு கோலத்தை இடுமாறு கேட்டிருந்தேன், முயல்கிறேன் என்றாள். ஓரிரு நாட்களுக்குப் பின் ஒரு கோலத்தின் படத்தை அனுப்பி இது ‘ஓகேவா’ எனக் கேட்டிருந்தாள். அது பறவைகளின் மூதாதையர்களான டைனசோர் போல இருந்தது. எனினும் அவளை ஏமாற்றமடையச் செய்யவேண்டாம் என்பதால் “சூப்பர், கோலத்தை சுற்றி கற்களை வைக்கவும்” என்று பதில் அனுப்பினேன். அது முதல் அவள் போட்ட கோலங்களின் படங்களை எனக்கு அனுப்புவதே இல்லை.


கோலப் பறவைகள்” எனும் தலைப்பில் 27 ஜனவரி 2018 அன்று தி இந்து தினசரி உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு பதிப்பு. அக்கட்டுரையின் உரலி இங்கே

Written by P Jeganathan

January 29, 2018 at 11:49 pm

Posted in Birds

Tagged with , ,

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

leave a comment »

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

வரையாடு (Nilgiri Tahr). Photo: Kalyan Varma/Wikimedia Commons

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இச்சரணாலயம் 1976ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பரப்பு 850 சதுர கி.மீ. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இப்பகுதி பல்லுயிரியத்திற்கு பெயர் போனது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி. குடைசீத்த மரங்கள் கொண்ட தரைக்காடுகள், புல்வெளிகளையும் புதர்களையும் கொண்ட வெட்ட வெளிப் பகுதிகள், மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள், மலையுச்சிப் புல்வெளிகள், சோலைக்காடுகள் என பல வகையான வாழிடங்களைக் கொண்டது. இதனாலேயே பலவித தாவர மற்றும் விலங்குகளின் பன்மயத்தைக் கொண்டுள்ளது. வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், நரி, சிறுத்தைப்பூனை, கரடி, யானை, மிளா, கேளையாடு (Barking Deer), புள்ளி மான், சருகுமான், காட்டெருது (Gaur), மற்றும் ஓரிடவாழ்விகளான (Endemic species) வரையாடு (Nilgiri Tahr), நீலகிரி கருமந்தி (Nilgiri Langur), சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பழுப்பு மரநாய் (Brown Palm Civet), சின்ன பறக்கும் அணில் (Travancore Flying Squirrel) முதலிய பாலுட்டிகளும், ஆனைமலை சாலியா ஓணான் (Anaimalai Spiny Lizard), மலபார் குழிவிரியன் (Malabar pit viper) முதலிய ஊர்வன இனங்களும், பல வகையான காலில்லாத் தவளைகள் (Caecilians), கொட்டான் எனும் பாதாளத் தவளை (Purple frog), என பல அரிய உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இப்பகுதி. பெரிய இருவாசி (Great Hornbill), கருங்கழுகு (Black Eagle) என சுமார் 218 வகைப் பறவைகள் இப்பகுதியில் தென்படுகின்றன. அவற்றில் நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), மலபார் இருவாசி (Malabar Grey Hornbill), நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher) போன்ற 12 வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்விகள் ஆகும்.

கொட்டான் எனும் பாதாளத் தவளை (Purple frog). Photo by David Raju/Wikimedia Commons

இது தவிர இங்கு மட்டுமே தென்படக்கூடிய காட்டு காசித்தும்பைச் செடிகளும், ஆர்கிடுகளும் (Orchids), ஏனைய பிற அரிய தாவரங்களும் இங்குண்டு. மேலும் காடர்கள், மலை மலசர்கள். மலசர்கள், முதுவர்கள், புலையர்கள், எரவலர்கள் என பல வித பழங்குடியினரும் வாழும் பகுதி இது. இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசிய பூங்காவைச் சுற்றி கேரளா பகுதியில் பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் காட்டுயிர் சரணாலயம், வாழச்சால் காப்புக்காடு, எரவிகுளம் தேசியபூங்கா என தொடர்ச்சியான வனப்பகுதிகளைக் கொண்டுள்ளதால், பலவித காட்டுயிர்களுக்கும், யானைகளுக்குமான மிக முக்கியமான வழித்தடமாக இப்பகுதி அறியப்படுகிறது.

தேன் இழிஞ்சான் (Nilgiri Marten Martes gwatkinsii) சாலையைக் கடக்கும் காட்சி. (இணைக்கப்பட்ட படங்கள்).  Photo: P. Jeganathan/ Wikimedia Commons

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.

மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின்  ஒரு பகுதி.

Written by P Jeganathan

January 28, 2018 at 9:00 am

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்

leave a comment »

களக்காடு காட்டுயிர்ச் சரணாலயம்

சோலைமந்தி (சிங்கவால் குரங்கு) Lion-tailed Macaque. Photo by T. R. Shankar Raman, via Wikimedia Commons

களக்காடு காட்டுயிர் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது 1977ல். திருக்கரங்குடி மற்றும் களக்காடு சரகங்களை உள்ளடக்கிய இப்பகுதி (253 சதுர கி.மீ) சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு) Lion-tailed Macaque பாதுகாப்பிற்காகவே இப்பகுதி சரணாலமாக அறிவிக்கப்பட்டது. பம்பாய் இயற்கை வரலாறு கழகத்தின் (Bombay Natural History Society) முன்னால் இயக்குநரான காலஞ்சென்ற முனைவர் ஜே.சி. டேனியல் 1971ல் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட தரவுகளைக் கொண்டு தமிழக அரசிற்கு விடுத்த வேண்டுகோளுக்கினங்க அப்போதைய அரசு இப்பகுதியை சரணாலயமாக அறிவித்தது.

களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பாயும் சேர்வலாறு. Photo: AJT Johnsingh / Wikimedia commons

முண்டந்துறை காட்டுயிர்ச் சரணாலயம்

முண்டந்துறை காட்டுயிர் சரணாலயம் (567 சதுர கி.மீ.) அம்பாசமுத்திரம், முண்டந்துறை சரகங்கள் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் பகுதிகளை உள்ளடக்கியது. இப்பகுதி 1962ல் புலிகளுக்கான சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1977ல் காட்டுயிர் சரணாலயமாக ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் மூத்த காட்டுயிரியளாலரான A.J.T. ஜான்சிங் 1983-84 களில் இப்பகுதிகளில் களப்பணிகள் மேற்கொண்டு இந்த இடத்தை புலிகள் காப்பகமாக அறிவிக்க பரிந்துரை செய்தார். இதன் விளைவாக ஏப்ரல் 1988ல் இப்பகுதியும், களக்காடு காட்டுயிர் சரணாலயமும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம்.

இது தமிழகத்தின் முதல் (இந்தியாவின் 17ஆவது) புலிகள் காப்பகமாகும். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. புலிகள் பாதுகாப்பிற்கான மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புத் தொகுதியின் (Tiger Conservation Unit – TCU) மிக முக்கியமான நிலப்பகுதியாக அறியப்படுகிறது.

இப்புலிகள் காப்பகம் அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதி. இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது. வேங்கைப்புலி, வரையாடு, யானை முதலிய பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதி மற்றும் இதனை அடுத்து கேரளாவிலுள்ள பெரியாறு புலிகள் காப்பகம், பெப்பாரா, செந்துர்னி மற்றும் நெய்யார் காட்டுயிர் சரணாலயப் பகுதியிலும் (சுமார் 3812 சதுர கி.மீ பரப்பளவில்) 36-40 புலிகள் குடிகொண்டிருக்கலாம் (Occupancy) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின்  ஒரு பகுதி.

Written by P Jeganathan

January 21, 2018 at 9:00 am

கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்

leave a comment »

கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம் (Point Calimere Wildlife Sanctuary)

ஊசிவால் சிரவிக் கூட்டம்

நாகப்படினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியக்கரை காட்டுயிர் சரணாலயம் 1967ல் வெளிமான்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் மொத்தப் பரப்பு 17.26 சதுர கி.மீ. வெளிமான்களைத் தவிர, புள்ளிமான் (Spotted Deer), காட்டுப்பூனை, நரி, கீரி (Indian Grey Mongoose) முதலிய பாலுட்டிகளையும் இச்சரணாலயத்தில் காணலாம். இப்பகுதியின் கடலோர மணற்பாங்கான இடங்களில் பங்குனி ஆமைகளின் (Olive Ridley Turtle) முட்டையிடுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்பகுதியில் ஓங்கில்களையும் (Dolphins) அவ்வப்போது காணமுடியும். இச்சரணாலயத்தின் ஒரு பகுதியான வேதாரண்யம் சதுப்புநிலப்பகுதி சுமார் 48 கி.மீ. நீண்டு பரவியிருக்கிறது. முத்துப்பேட்டை-அதிராம்பட்டினம் பகுதியில் கடலோரமாக அலையாத்திக் காடுகள் பரவியுள்ளது. கோடியக்கரை சரணாலயமாக ஏற்படுத்தப்பட்ட இப்பகுதி 1988ம் ஆண்டு வேதாரண்யம் சதுப்புநிலப்பகுதியையும், தலைஞாயர் வனப்பகுதியையும் இணைத்து கோடியக்கரை காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோடியக்கரை ஆண்டுதோரும் வலசை வரும் பல இலட்சக்கணக்கான பறவைகளுக்கு புகலிடமளிக்கும் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். உப்பங்கழிகள் (Salt pans), சதுப்பு நிலங்கள் (Swamp), அலையாத்திக் காடுகள் (Mangrove Forest), புதர்க் காடுகள் (Dry thorn forest), கடலோரம், கழிமுகம் (Estuary), உவர்நீர்நிலைகள் (Brackish waterbodies), நன்னீர்நிலைகள் (Fresh water source) என பல விதமான வாழிடங்கள் இருப்பதால் பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. சதுப்புநிலப்பகுதி, உப்பங்கழிகள் பகுதிகளில் மட்டுமே 110 வகையான நீர்ப்பறவைகள் இருப்பது பதிவாகியுள்ளது. இவற்றில் 34 வகை பறவைகள் உலகின் வட துருவத்திலிருந்து வலசை வருபவை. இதுவரை இந்தச் சரணாலயத்தில் 274 வகைப் பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய பூநாரை (Greater Flamingo), சிறிய பூநாரை (Lesser Flamingo), கூழக்கடா (Spot-billed Pelican), சங்குவளை நாரை (Painted Stork), பலவகையான உள்ளான்கள் (Waders), ஆலாக்கள் (Terns), கடற்காகங்கள் (Gulls), ஆகிய சில பறவையினங்களை இங்கே பொதுவாகக் காணலாம். அருகி வரும் பறவையினமான கரண்டிவாய் உள்ளான் (Spoon-billed Sandpiper) இங்கே 1996 வரை பார்க்கப்பட்டுள்ளது. இப்பகுதி பறவை பாதுகாப்பில் மிக முக்கியமான இடமாகவும் (Important Bird Area) அறிவிக்கப்பட்டுள்ளது. பண்ணாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளை குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது ராம்சார் அமைப்பு (Ramsar Convention). இந்த அமைப்பில் அங்கத்தினராக உள்ள 157 நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இதுவரை இந்தியாவில் 25 இடங்களை இந்த அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ராம்சார் ஒப்பந்தத்திற்குட்பட்ட இடமாக (Ramsar Site) அறிவித்திருக்கிறது. (ராம்சார் ஈரானில் உள்ள இடத்தைக் குறிக்கும், இங்குதான் முதன் முதலில் இந்த அமைப்பின் ஒப்பந்தக் கூட்டம் நடை பெற்றது) அவற்றில் ஒன்று கோடியக்கரை சரணாலயம். இது தமிழகத்தில் உள்ள ஒரே ராம்சார் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின்  ஒரு பகுதி.

Written by P Jeganathan

January 14, 2018 at 9:00 am

Posted in Protected areas

Tagged with ,

முதுமலை காட்டுயிர்ச் சரணாலயம் & தேசிய பூங்கா

leave a comment »

முதுமலை காட்டுயிர் சரணாலயம் & தேசிய பூங்கா

முதுமலை சரனாலத்தில் உள்ள சிகூர் சமவெளிப் பகுதி. Photo: A J T Johnsingh / Wikimedia Commons

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரின் வடகிழக்குப் பகுதியில் தமிழக, கேரளா மற்றும் கர்நாடக எல்லைகளின் முச்சந்திப்பில் அமைந்துள்ளது முதுமலை காட்டுயிர் சரணாலயம் & தேசிய பூங்கா. மதராஸ் மாகணமாக இருந்த சமயத்தில் (1940ல்) 62 சதுர கி.மீ பரப்பு முதுமலை காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. வடக்கே கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தையும், மேற்கே கேரளாவில் உள்ள வயநாடு காட்டுயிர் சராணாலயத்தையும் கொண்ட இப்பகுதி பல உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு வழித்தடமாகிறது. இது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஒரு பகுதி. ஈர இலையுதிர்காடுகள், வறண்ட இலையுதிர்காடுகள், முட்புதர்காடுகள் முதலிய வாழிடங்களைக் கொண்ட இந்த சரணாலயத்தின் தற்போதய பரப்பளவு 321 சதுர கீ.மீ. இதில் 108 சதுர கி.மீ தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முதுமலை வனப்பகுதியில் சுற்றும் காட்டு யானைக் குடும்பம். Photo: AJT Johnsingh/Wikimedia Commons

யானை (Asian Elephant), வேங்கைபுலி (Tiger), சிறுத்தை (Leopard), செந்நாய் (Dhole or Wild Dog), கழுதைப்புலி (Striped Hyena), நரி (Golden Jackal), காட்டுக்கீரி (Ruddy Mongoose), காட்டுப்பூனை (Jungle Cat), கரடி (Sloth Bear), செம்புள்ளிப் பூனை (Rusty spotted cat), சிறுத்தைப் பூனை (Leopard Cat), புனுகு பூனை (Small Indian Civet), மரநாய் (Common Palm Civet), குள்ள மான் (Four horned Antelope), சருகு மான் (Mouse Deer), வெளிமான் (Blackbuck), மந்தி (Common Langur), தேவாங்கு (Slender Loris), மலபார் மலையணில் (Indian Giant Squirrel), பறக்கும் அணில் (Indian giant flying squirrel), முள்ளம்பன்றி (Indian Porcupine) முதலிய பாலுட்டிகளும், பலவகையான ஊர்வன, தவளை இனங்களும், அரிய வகைத் தாவரங்களும் இங்கே உள்ளன. சுமார் 266 வகைப் பறவையினங்கள் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 49 வகைப் பறவைகள் வலசை வருபவை. ஒரு காலத்தில் தமிழகமெங்கும் பரவலாகத் தென்பட்ட பாறு எனும் பிணந்திண்ணிக் கழுகுகள் (Gyps Vulture spp.) தற்போது அவற்றின் எண்ணிக்கையில் 99%த்தை இழந்து ஓரு சில பறவைகளே மிஞ்சியுள்ளன. மிகவும் ஆபத்திற்குள்ளான பறவையினங்களில் ஒன்றாகிப்போன இவை தமிழகத்தில் இப்போது எஞ்சியிருப்பது முதுமலைப் பகுதிகளில் மட்டுமே.

பாறு கழுகுகள். Photo: The Nature Trust. See detail in this eBird list

நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்தின் 14% நிலப்பரப்பை இந்த தேசியப் பூங்கா கொண்டுள்ளது. பந்திப்பூர் தேசிய பூங்கா, வயநாடு காட்டுயிர்ச் சரணாலயம் சிகூர் மற்றும் சிங்காரா காப்புக்காடுகள் இந்த தேசியப் பூங்காவினைச் சுற்றி அமைந்துள்ளன. பல காட்டோடைகள் இந்த வனப்பகுதியில் உருவாகி பவானி ஆற்றுடன் கலக்கிறது. இதில் முக்கியமான கிளை ஆறு மோயாறு ஆகும்.

மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின்  ஒரு பகுதி.

Written by P Jeganathan

January 7, 2018 at 9:00 am

2017 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்

with 2 comments

கடந்த ஆண்டில் பார்த்த, ரசித்த நினைவில் நிற்கும் தருணங்கள் பல. அவற்றில் படங்களில் பதிவு செய்யப்பட்டவை சில. அவற்றில் சிலவற்றை (மாதத்திற்கு ஒன்றாக) இங்கே காணலாம். இந்த பூமிக்கும், அதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்தப் புத்தாண்டு இனிதே அமைய வேண்டும்.