Archive for February 2018
கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம். சுமார் 457 சதுர கி.மீ பரப்பில் அமைந்த கன்னியாகுமரி வனக்கோட்டப் பகுதி 2002 ம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த வனப்பகுதியின் மத்தியில் இருந்த கானி பழங்குடியினரின் குடியிருப்புப் பகுதி, அங்கு செல்லும் சாலை மற்றும் அரசு இரப்பர் நிறுவனத்திற்கு (Arasu Rubber Corporation) குத்தகை விடப்பட்ட பகுதி யாவற்றையும் சரணாலயப் பகுதியிலிருந்து நீக்கிவிட்டு 402.39 சதுர கி.மீ பரப்பை கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமும் கேரளாவில் உள்ள நெய்யார் காட்டுயிர் சரணாலயமும் இதைச் சுற்றிலும் அமைந்துள்ளன. வறண்ட இலையுதிர் காடு, ஈர இலையுதிர் காடு, புதர் காடு, தேக்குமரக் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மூங்கில் அடர்ந்த காடு, மலையுச்சிப் புல்வெளி என பல வகையான வாழிடங்களைக் கொண்டுள்ளது இச்சரணாலயம். பல காட்டோடைகளும், ஆறுகளும் உருவாகும் இந்த வனப்பகுதி பல அரிய உயிரினங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, பல விதமான பறவைகள், வரை கமுகு (Hill Areca nut Bentinckia condapanna) போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படக்கூடிய பல அரிய தாவரங்கள் யாவையும் தன்னகத்தே கொண்டுள்ளது இச்சரணாலயம்.

வரை கமுகு (Hill Areca nut| With fruits). Photo: P. Jeganathan/Wikimedia Commons
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணாலயம்
கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணாலயம்
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் கொடைகானல், பழனி மற்றும் பெரியகுளம் தாலுக்காவிலுள்ள 608.95 சதுர கி.மீ பரப்பில் அமைந்த வனப்பகுதி 2013ம் ஆண்டு கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணலயமாக அறிவிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியான பழனி மலைப்பகுதியை உள்ளடக்கிய இந்த சரணாலயத்தில் முட்புதர் காடு, இலையுதிர் காடு, பசுமை மாறா காடு, ஈர இலையுதிர் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சிப் புல்வெளி என பலவகையான வாழிடங்கள் உள்ளன. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, வரையாடு, நரை அணில், மலபார் மலையணில், கடம்பை மான், கேளையாடு, காட்டெருது முதலிய பாலூட்டிகளும், பல அரிய தாவர வகைகளும், சுமார் 100 வகைப் பறவையினங்களும் இங்கு தென்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவைகளான நீலகிரி காட்டுப்புறா (Nilgiri wood pigeon), நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), குட்டை இறக்கையன் (White-bellied blue robin) முதலிய அரிய பறவைகளும் இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம் 1989ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 480 சதுர கி.மீ பரப்பில் அமைந்த இச்சரணாலயத்தின் கீழ்மேற்குப் பகுதியில் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகமும், வட மேற்குப் பகுதியில் தமிழகத்தில் உள்ள மேகமலை காப்புக்காடும், கிழக்கில் திருநெல்வேலி வனக்கோட்டத்திலுள்ள சிவகிரி காப்புக்காடும் உள்ளது. இந்தச் சரணாலயத்தின் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், மீதி மதுரை மாவட்டத்திலும் பரவியுள்ளது. தாழ்வான பகுதி, மிதமான உயரத்தில் அமைந்த மத்திய கட்டப் பகுதி (mid elevation), மலையுச்சி என பல நிலைகளைக் கொண்ட புவியமைப்பினைக் கொண்டதால், உயரத்திற்கேற்ற பல வன வகைகளும் இந்தச் சரணாயலத்தில் உள்ளது. மலையுச்சிகளில் இருக்கும் புல்வெளிகளும், சோலைக்காடுகளும், மழைக்காடுகளும், ஈர இலையுதிர்காடுகளும், தரைக்காடுகளும் இந்தச் சரணாலயத்தின் முக்கிய வாழிடங்களில் சில.

நரை அணில் Grizzled giant squirrel. Photo: Aparna K / Wikimedia Commons
யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, கடம்பை மான் அல்லது மிளா (Sambar Deer), புள்ளிமான், கேளையாடு, முள்ளம்பன்றி, சோலைமந்தி, நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, தேவாங்கு என பல வகையான பாலுட்டிகள் இருந்தாலும், இங்கு தென்படும் நரை அணிலே (Grizzled Giant Squirrel) இந்த சரணாலத்தின் சிறப்பு. இந்த மலையணில் வகை தென்னிந்தியாவிலும், இலங்கையில் மட்டுமே தென்படும் ஒர் அரிய உயிரினம். சுமார் 220 வகையான பறவையினங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 வகை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் ஓரிடவாழ்விகளாகும் (Western Ghats Endemics).
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
வல்லநாடு வெளிமான் சரணாலயம்
வல்லநாடு வெளிமான் சரணாலயம்

வல்லநாடு வெளிமான் சரணாலயம் முகப்பு. Photo: P. Jeganathan / Wikimedia Commons
இரலை மானின (Antelope) வகையைச் சேர்ந்த வெளிமானுக்கான (Blackbuck) சரணாலயம் இது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறீவைகுந்தம் தாலுக்காவில் 16.41 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இச்சரணாலயம் நிறுவப்பட்டது 1987ல். வாழிட இழப்பாலும், திருட்டு வேட்டையாலும் அபாயத்திற்குள்ளான வெளிமான்கள் இந்த இடத்தைத் தவிர தமிழகத்தில் கிண்டி தேசிய பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோடியக்கரை காட்டுயிர் சரணாலயம் ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.
வெளிமான்களைத் தவிர இச்சரணாலயத்தில் காட்டுப்பூனை, காட்டு முயல் (Black-naped Hare), அழுங்கு (Pangolin), முதலிய பாலுட்டிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை வகைகளும், பல வித ஊர்வனங்களும் தென்படுகின்றன. குடைசீத்த மரங்கள் (Acacia planifrons) கொண்ட இலையுதிர் மற்றும் புதர் காட்டு வகை வாழிடத்தைக் கொண்டது இச்சரணாலயம்.

வல்லநாடு வெளிமான் சரணாலயம் முகப்பு. Photo: P. Jeganathan / Wikimedia Commons
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.