கோடைகாலத்தில் மரங்களை நோக்கி…ஒரு பயணம்
வேப்பமரம் பூப்பது எப்போது? மழைகாலத்திலா? கோடையிலா? புறவுலகை ஓரளவுக்கு அவதானிப்பவர்கள் கூட இதற்கான விடையை அறிவார்கள். இது தெரியாதவர்களுக்கு வேறு ஒரு கேள்வி. வீட்டில் வேப்பம்பூ ரசம் வைப்பது எப்போது? இப்போது ஓரளவிற்கு விடை தெரிந்திருக்கும். கோடையில் பூக்கும் வேப்பமரத்தில் இருந்து உதிரும் பூக்களை சேகரித்து தூசு தட்டி, காயவைத்து தமிழ்ப் புத்தாண்டு அன்று ரசம் வைப்பார்கள். அதாவது ஏப்ரல் மாதங்களில் இது நிகழும். எப்போதாவது நம் வீட்டின் அருகில் இருக்கும் வேப்ப மரங்களில் பல காலந்தவறி பூத்ததை கவனித்ததுண்டா?
கோடையில் பூக்கும் இன்னோர் மரம் சரக்கொன்றை. இலைகளை எல்லாம் உதிர்த்து மரம் முழுவதும் அழகிய மஞ்சள் நிறப் பூங்கொத்துக்களை சரம் சரமாக பூத்துக் குலுங்குவதைக் கண்டதுண்டா? சுட்டெரிக்கும் வெயிலிலும் நம் கண்களையும், மனதையும் குளிரவைத்துவிடும் அந்தக்காட்சி. எனினும் அண்மைக் காலங்களில் இந்தியாவின் பல இடங்களில் இம்மரம் கோடையில் மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் பூப்பதாக அறிவிப்புகள் வருகின்றன.
இவை மட்டுமல்ல, கொஞ்சம் கவனித்துப் பார்த்திருந்தோமானால் நாம் பொதுவாகக் காணக்கூடிய மரங்களில் பூப்பூக்கும் காலம் ஒரே சீராக இல்லாமல் அவ்வப்போது மாறி வருவதை உணரலாம். இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஆமாம் என்றோ இல்லை என்றோ அறுதியிட்டுக் கூற நம்மிடம் போதிய தரவுகள் இல்லை. அதற்கான தரவுகளை சேகரிக்கும் மக்கள் அறிவியல் திட்டமே சீசன் வாச் (Seasonwatch). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் நாம் அனைவரும் பங்குபெற்று நமது அவதானிப்புகளை தொடர்ந்து பதிவு செய்தால் காலப்போக்கில் போதிய தரவுகள் இல்லாத குறையை தீர்க்க முடியும்.
ஓரிடத்தில் உள்ள மரத்தினை சீசன் வாச் இணைய தளத்தில் (http://www.seasonwatch.in/index.php) பதிவு செய்து வாரா வாரம் அம்மரத்தை அவதானித்து அவற்றின் தளிர், இலை, காய்ந்த இலை, மொட்டு, மலர், காய் பழம் முதலியவை கொஞ்சம் இருக்கிறதா, நிறைய இருக்கிறதா அல்லது சுத்தமாக இல்லையா என்பதை கவனித்து பார்த்ததை உள்ளிடுவதன் மூலம் அந்த மரங்களின் வாழ்வியல் நிகழ்வுகளை (Phenology) தொடர்ந்து பதிவு செய்யமுடியும்.

சீசன் வாச் திட்டத்தில் கணக்கை ஏற்படுத்த, மரங்களைப் பார்த்து நாம் சேகரித்த தகவலை எப்படி உள்ளிடுவது என்பதை விளக்கும் காட்சிப்படங்களை இங்கே காணலாம்
இந்தியா முழுவதும் இதுபோல் சுமார் 25000 மரங்கள் 751 மரம் பார்க்கும் ஆர்வலர்களால் இதுவரை தொடர்ந்து அவதானிக்கப்பட்டு தரவுகள் உள்ளிடப்பட்டுள்ளது. இவற்றில் இந்திய அளவில் 625 பள்ளிகள் பங்குபெற்று வருகின்றன இப்பள்ளி வளாகங்களில் உள்ள மரங்களை இங்குள்ள ஆசிரியர்களும், மாணாக்கர்களும் பல ஆண்டுகளாக அவதானித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பெரும்பாலானவை கேரளாவில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
பருவந்தோறும் மரம் நோக்கும் செயல்பாடு (Tree Quests)
இது தவிர அண்மையில் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் இன்னும் ஒரு செயல்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மரத்தைத் தொடர்ந்து பார்ப்பது மட்டுமல்லாமல் பல மரங்களை ஒரே முறை தற்செயலாகப் பார்த்தும் (casual observation) தகவலைப் பதிவிடலாம். இந்த பருவந்தோறும் மரம் நோக்கும் செயல்பாடு (Tree Quests) இந்தியா முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும். ஓரிரு நாட்களில் இந்தியா முழுவதும் மரங்களைப் பார்த்து சீசன் வாச் செயலி (Seasonwatch App) முலம் பார்த்ததை உள்ளிடுவதன் மூலம் அந்த மரங்களின் வாழ்வியல் நிலையை அறிய முடியும். இது போல பலரும், பல இடங்களில் இருந்து சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து பங்களித்து தரவுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்தால் சில ஆண்டுகளில் மரங்களின் வாழ்வியலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும்.

இது குறித்த காட்சிப்படங்களை இங்கே காணலாம்.
இந்தத் திட்டங்களில் யார் பங்கு கொள்ளலாம்?
மரங்களை விரும்பும் எவரும் இச்செயல்பாட்டில் பங்குபெறலாம்
எப்படிப் பங்களிப்பது?
சீசன் வாச் செயலியை உங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்யவும். (https://play.google.com/store/apps/details?id=seasonwatch.in). வெளியே சென்று மரங்களைப் பார்த்து தளிர், இலை, காய்ந்த இலை, மொட்டு, மலர், காய் பழம் முதலியவை கொஞ்சம் உள்ளதா, நிறைய உள்ளதா அல்லது எதுவும் இல்லையா என்பதை கவனிக்கவும். செயலியில் உங்களது கணக்கின் உள்ளே சென்று, ‘Casual’ எனும் பக்கத்தில் உங்கள் மரத்தைத் தேர்ந்தெடுத்து, மரம் இருக்குமிடத்தைக் குறித்து, நீங்கள் பார்த்ததை உள்ளிடவும். இதை விளக்கும் சிறிய காணொளிப்பதிவுவை கிழே காண்க:
எந்தெந்த மரங்களை கவனிக்கலாம்?
இந்தப் பட்டியலில் உள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்கவும்
http://www.seasonwatch.in/species.php
மரத்தை அவதானிப்பது எப்படி?
மேலுள்ள பட்டியலில் இருந்து நன்கு வளர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- மரத்தில் உள்ளது முதிர்ந்த இலையா(Mature leaves), இளந்தளிரா (கொழுந்தா) (Fresh leaves) என கவனித்துப் பார்க்கவும்.
- இளந்தளிரோ முதிர்ந்த இலைகளோ இல்லையெனில் ஏதுமில்லை (None) எனக் குறிக்கவும்.
மரத்தில் பாதிக்கும் குறைவாக (மூன்றில் ஒரு பங்கு – 1/3 அல்லது அதற்கும் குறைவாக) - இளந்தளிர்களோ, முதிர்ந்த இலைகளோ இருந்தால் கொஞ்சம் (Few) எனக் குறிக்கவும்.
- மரத்தில் பாதிக்கும் மேல் இளந்தளிர்களோ, முதிர்ந்த இலைகளோ இருந்தால் நிறைய (Many) எனக் குறிக்கவும்.
- ஒரு வேளை சரியாக கவனித்துப் பார்க்க முடியாமல் போனால் மட்டுமே தெரியவில்லை (Don’t Know) எனக் குறிக்கவும்.
இது போலவே மொட்டு, மலர், காய், பழம், ஆகியவற்றை கவனித்து தகுந்தவாறு படிவத்தில் குறிக்கவும்.
தகவலை உள்ளிடுவது எப்படி?
சீசன் வாச் செயலியை உங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்யவும். (https://play.google.com/store/apps/details?id=seasonwatch.in). இணைய தளத்தின் மூலமாகவும் உங்களது தகவலை உள்ளிடலாம்.
ஒரு வேளை உங்களிடம் கைபேசி இல்லையெனில் நீங்கள் பார்த்ததை இந்த Excel படிவத்தில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் (sw@seasonwatch.in) அனுப்பவும். உங்களது தகவல் இணையத்தில் உள்ளிடப்படும்.
இதில் பங்குபெறுவோருக்கு பரிசுகள் உண்டா?
ஆம். அதிக மரங்களைப் பார்த்து தகவலை அளிப்பவருக்கு பரிசு உண்டு. குறைந்தபட்சம் 5 மரங்களைப் பார்த்து தகவலை அளிப்பவர்களின் பெயர்கள் சீசன் வாச் செய்திமடலில் குறிப்பிடப்படும்.
அனைவருக்கும் பகிருங்கள்
இந்த செயல்பாடு குறித்த கிழ்க்கண்ட விளம்பரத்தாள்களை அனைவரிடமும் பகிரவும்.
மேலும் விவரங்களுக்கு
தொடர்புக்கு
மின்னஞ்சல் – sw@seasonwatch.in
வாட்ஸ்அப் எண்- +91 734 956 7602
Reblogged this on SALEM ORNITHOLOGICAL FOUNDATION.
Salem Ornithological Foundation
March 15, 2019 at 4:46 pm