UYIRI

Nature writing in Tamil

Archive for April 2019

அரை நாளில் ஐயாயிரம்

with 2 comments

சென்ற ஆண்டு நடந்து முடிந்த கோவை புத்தகத் திருவிழாவிற்கு கடைசி நாளன்று (20-29 ஜுலை 2018) சென்றிருந்தேன். போகவோ கூடாது என நினைத்திருந்போதிலும், வேறு ஒரு வேலையாக கோவைக்கு நண்பர் செலவகணேசுடன் சென்றிருந்த போது அவரும், “வாங்க சார் சும்மா உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார். அது எப்படி பார்த்துவிட்டு சும்மா வரமுடியும்? உள்ளே சென்றால் இருக்கும் காசெல்லாம் புத்தகமாகிவிடும் என்பதால் தானே புத்தகத் திருவிழாவுக்கே போகாமல் இருப்பது. வாங்கி சேர்த்த புத்தகங்களை வைக்கவே வீட்டில் இடமில்லை. பல புத்தகங்கள் பாதி படித்தும், படிக்காமலும் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் முழுவதும் படித்து முடித்து விட்டு வாங்கலாம் என நினைத்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கு செல்வதே இல்லை. எனினும் அவ்வப்போது இணையம் வழியாக ஓரிரு புத்தகங்களை வாங்குவதும் உண்டு. ஆனால் அப்படி வாங்குவதற்கும் புத்தகத் திருவிழாவிற்குப் போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டல்லவா. ஒரு வழியாக எனக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கொடிசியா வளாகத்தில் நுழைந்தேன். பர்சில் உள்ள பணத்திற்கு மட்டும் புத்தகம் வாங்கலாம், கையில் பை எடுத்துச் செல்லக் கூடாது, அங்கு ஒருவேளை பிளாஸ்டிக் பையில் புத்தகத்தைக் கொடுத்தால் அந்தக் கடையில் வாங்கக்கூடாது, ஒரு மணி நேரத்திற்கும் மேல் உள்ளே இருக்கக் கூடாது இவையே அந்தக் கட்டுப்பாடுகள்.

ஆனால் நடந்ததோ தலைகிழ். முதலாவது கடையிலேயே இருந்த பாதி பணமும் தீர்ந்து விட்டது (சுமார் ஐநூறு ரூபாய்கள்), இரண்டாவது கடையில் புத்தகங்களை வாங்கிய பின் பணம் போதாமல் வங்கி அட்டையை நீட்டியபோது அந்த வசதி பெரிய ஸ்டால்களில் மட்டும்தான் உள்ளது என்றனர். அவர்களே வெளியே மொபைல் ஏடிஎம் இருக்கிறது அங்கே பணம் எடுத்துக் கொள்ளலாம் என யோசனை சொன்னார்கள். வாங்கிய புத்தகங்களை அப்படியே வைத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்து தேவைக்கு அதிகமாகவே பணத்தை எடுத்துக் கொண்டு உள்ளே மீண்டும் நுழைந்தோம். வாயிலில் “இனி ஒரு விதி செய்வோம்” என பாரதியின் முகத்துடன் அச்சடிக்கப்பட்ட துணிப்பையை விற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் ஆளுக்கு இரண்டை வாங்கி மாட்டிக்கொண்டு தெம்புடன் உள்ளே நுழைந்தோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியின் அளவெல்லாம் கிடையாது என்றாலும், நிறைய கடைகள் இருந்தன. புத்தகங்கள் மட்டும் இல்லாமல், எழுதுபொருட்கள், மின்னூல், குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்கள் கொண்ட கடைகளும் இருந்தன. பாதி விலைக்கும், இரண்டு எடுத்தால் ஒன்று இலவசம் எனும் வகையில் பழைய புத்தகங்களும் சில கடைகளில் கிடைத்தன. வரிசையாக இருந்த பதிப்பக, புத்தகக் கடைகள் மட்டுமல்லாமல், ஓரங்களில் ஒரே ஒரு மேசையை மட்டும் போட்டு சிறிய, புதிய பதிப்பகத்தார்களும் அவர்களது புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்கான நூல்களும், பதிப்பகங்களும் 2-3 இருந்தது மகிழ்ச்சி அளித்தது. இயற்கை சார்ந்த நூல்களும், பதிப்பகங்களும் இருந்தன. Coimbatore Nature Society யின் Birds of Coimbatore நூலை அவர்களது கடையில் பார்க்க முடிந்தது, பூவுலகின் நண்பர்கள், தும்பி போன்ற பதிப்பகங்களும் இருந்தன. சென்றுவந்த கடைகளில் நான் கவனித்த வரை பிளாஸ்டிக் பையை தரவில்லை.

நான் வாங்குவது பெரும்பாலும் இயற்கை சார்ந்த நூல்களையே, ஆகவே எல்லா கடைகளிலும் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும் ஒரு சிலவற்றைத் தவிர இருந்த எல்லாக் கடைக்குள்ளும் சென்று பார்த்துவிட்டுத்தான் வந்தேன். கடைசிநாள், அதுவும் ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேலையாக இருந்தாலும் கூட்டம் அப்படி ஒன்றும் இல்லை. ஆனால், நேரம் ஆக ஆக கூட்டம் சற்றே பெருகி வந்ததைக் காண முடிந்தது.

அங்கிருந்த பாதி கடைகளை தாண்டியவுடன் கையில் இருந்த இரண்டு பைகளும் கணத்தது. கூடியவரை புத்தகங்களை திணித்தாகிவிட்டது. இதற்கு மேல் வைத்தல் பை கிழிந்துவிடும் எனும் நிலையில் வேறு வழியில்லாமல் வெளியே வந்து புத்தகங்களை வண்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு மீண்டும் ஒரே ஒரு பையுடன் உள்ளே நுழைந்தோம். அந்தப் பையும் பாதி நிறைந்தவுடன் கடைகளும் முடிந்துவிட்டது. பின்னர்தான் பசித்தது. அங்கேயே பல உணவுக் கடைகள் இருந்தன. இரண்டு சப்பாத்தியை வாங்கி அமர்ந்து கொண்டே எதிரே மேடையில் ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தோம். சற்று தூரமாக இருந்ததால் சரியாக காதில் விழவில்லை, ஆனால் நாஞ்சில் நாடன் மேடையில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அவரது நவம் எனும் புத்தகத்தை வாங்கியிருந்தோம். கூட்டம் முடிந்தவுடன் அவரிடம் சென்று அதில் ஆட்டோகிராப் வாங்கலாம் என நினைத்தோம். ஆனால் அவர் கிழிறங்கி வந்தபோது அவரைச்சுற்றி சிறு கூட்டம் திரண்டிருந்தது. அருகில் செல்ல கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது, எனவே வெளியே வந்து விட்டோம்.

நுழைவாயிலில் விசித்திரமாக உடையணிந்த இருவர் நின்றிருந்தார்கள். ஒருவரின் உடையில் பல செடிகள் இருந்தன, இன்னொருவர் உடையில் பிளாஸ்டிக் பைகள் தொங்கிகொண்டிருந்தது. பின்னால் இருந்து பார்த்தபோதே பார்த்தவுடன் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்தது. அவர்களின் அருகில் சென்று பேச்சு கொடுத்தோம். செடி உடைகாரர் பசுமை செல்வா, பிளாஸ்டிக் உடைக்காரர் இராமசாமி. இருவரும் திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் பணிபுரிகின்றனர். இது போன்ற கூட்டம் கூடும் இடங்களில் மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாள் முழுவதும் இந்த உடைகளையும், கையில் பதாகைகளையும் ஏந்தி நிற்கின்றனர். அவர்களது சேவையை பாராட்டிவிட்டு ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்தவுடன் கணக்குப் பார்த்ததில் சுமார் ஐயாயிரம் ருபாய் காலியாது தெரிந்தது. அரை நாளில் ஐயாயிரம் கொஞ்சம் அதிகம் தான் எனத் தோன்றியது, நல்ல வேளை கடைசி நாள் அன்று சென்றேன். சிறியதும் பெரியதுமாக 44 புத்தகங்கள் மூன்று பைகளில் இருந்தன. ஞாபகார்த்தத்திற்காக எல்லா புத்தகத்திலும் எனது பெயரையும், வாங்கிய தேதி, இடம் முதலிய விவரங்களை பொறித்த பிறகு சில நூல்களை வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். இந்த முறை எப்படியாவது வாங்கிய எல்லா புத்தகத்தையும் படித்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டு சிறிதாக இருந்த புத்தங்களை எல்லாம் முடிந்த வரை ஒரே இரவில் படித்தும் முடித்தேன். சுமார் 10 புத்தகங்கள் குறிப்பெடுக்கப் பயன்படுபவை எனவே அவற்றை வேண்டும் போது படித்துக்கொள்ளலாம் என தூர வைத்துவிட்டேன். மிச்சமிருப்பது சுமார் 15 புத்தகங்கள். இவை அனைத்தையும் படித்த பின் தான் அடுத்த புத்தகத் திருவிழாவிற்குப் போகவேண்டும் என மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

கோவையை அடுத்து ஈரோட்டிலும், இந்த ஆண்டு சென்னையிலும் புத்தகத் திருவிழாக்கள் நடந்து முடிந்து விட்டன. எப்படியோ அதையெல்லாம் கடந்தாகிவிட்டது. அண்மையில் திருப்பூரில் அதுவும் நான் வசிக்கும் வீட்டினருகிலேயே புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக அறிந்தேன் (2019 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 13 வரை). எப்படியாவது இந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. அப்படியே தப்பித்தவறி அந்தப் பக்கம் செல்ல நேரிட்டாலும் பர்சை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுப் போய்விட வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததென்னவோ அதற்கு நேர் எதிர். நண்பர் நல்லசிவன் ஒரு நாள் மாலை அழைத்து கிளம்பி இருங்கள் நான் வந்து புத்தகத் திருவிழாவிற்கு வண்டியில் அழைத்துச் செல்கிறேன் என்றார். எனது நிலைப்பாட்டை சொன்னேன், எதுவும் வாங்க வேண்டாம் அரை மணி நேரத்தில் திரும்பி வந்துவிடலாம் எனச்சொல்லி, நான் பேசி முடிக்கும் முன்னரே அலைபேசியை வைத்து விட்டார். பிறகு என்ன நடந்தது என்பதை ஊகிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐயாயிரம் இல்லை, அரைநாள் இல்லை, என்றாலும் ஓரிரு மணி நேரத்திலேயே கணிசமான ஒரு தொகை புத்தகமாக மாறியது.

இப்போது இன்னும் ஒரு முடிவை எடுத்துள்ளேன், புத்தகத் திருவிழாவுக்கும் போகக்கூடாது, அங்கே சும்மா போய் விட்டு வரலாம் எனும் அழைக்கும் நண்பர்களையும் நம்பக்கூடாது.

Written by P Jeganathan

April 23, 2019 at 9:00 am

Posted in Books

Tagged with