UYIRI

Nature writing in Tamil

Archive for May 2019

காளிதாசின் வெண்வால் மஞ்சள்சிட்டு

leave a comment »

திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் அங்காங்கே அழகான வெட்ட வெளிகளும், முட்புதர் காடுகளும் தென்பட்டன. மே மாத வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வறண்ட நிலப்பகுதி அது. வெட்ட வெளிகளில் புற்கள் காய்ந்து போய் ஆங்காங்கே வெள்வேல் மரங்களும், குடைசீத்த மரங்களும் பரவியிருந்தன. இது போன்ற இயற்கையான வாழிடங்களை வளமற்ற இடங்களாக நம்மில் பலர் கருதுவதுண்டு. ஆனால் இந்த இடங்கள் பல வகையான உயிரினங்களுக்குச் சொந்தமானவை. இவ்வாழிடங்களில் மட்டுமே தென்படக்கூடிய சில வகையான பறவைகளும் உண்டு. சின்னக் கீச்சான், சாம்பல் சிலம்பன், கல்கவுதாரிகள், வானம்பாடிகள், காடைகள் வலசை வரும் சாம்பல் கிச்சான், பூனைப்பருந்துகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். பறவை ஆர்வலர்கள் பொதுவாக இது போன்ற பகுதிகளில் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஒரு சில மணி நேரங்களில் பல வகையான பறவைகளைக் காணக்கூடிய இடங்களுக்கே அடிக்கடிச் செல்வார்கள். இதனால் தமிழ் நாட்டில் உள்ள பல வறண்ட நிலப் வாழிடப்பகுதிகளில் எந்த வகையான பறவைகள் இருக்கின்றன, எவை வலசை வருகின்றன என்பதைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் கூட நம்மிடம் இல்லை. இந்தக் குறையை கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்த்து வைத்துக் கொண்டிருந்தவர் திரு சண்முகம் காளிதாஸ்.

திருப்பூர் மாவட்டத்தில் இது போன்ற பல பரந்த வறண்ட நிலப் பகுதிகளில் உள்ள பறவைகளை ஆவணப்படுத்தியதில் காளிதாசின் பங்கு போற்றுதலுக்குரியது. அவருடன் சேர்ந்து ஒரு நாள் இந்தப் பகுதிகளில் பறவைகளை கண்டுகளிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், மே மாதம் 2ம் தேதி காலை அருளகம் அமைப்பைச் சேர்ந்த நண்பர் சு. பாரதிதாசன் கைபேசியில் அழைத்து காளிதாஸ் தனது உயிரை மாய்த்துக் கொண்ட துயரமான செய்தியைச் சொன்னார். தாராபுரத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காளிதாசுடன் சேர்ந்து பயணிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அங்கே அவரது அந்திமச் சடங்கிற்கு செல்வேன் என கனவிலும் நினைக்கவில்லை.

Shanmugam Kalidass eBird profile

கோவையில் 2015ல் நடைபெற்ற இரண்டாம் தமிழ் பறவையாளர்கள் சந்திப்பில் தான் ச. காளிதாஸ் எனக்கு அறிமுகமானார். அவரை கடைசியாகச் சந்தித்ததும் 2017ல் ஏலகிரியில் நடந்த தமிழ் பறவையாளர்கள் சந்திப்பில்தான். இடையில் ஓரிரு முறை தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமாகவும்தான் பேசிக்கொண்டோம். நெருங்கிய பழக்கம் ஏதும் இல்லையென்றாலும் eBirdல் அவரது பறவைப் பட்டியல்களை தொடர்ந்து பார்த்து விடுவேன். அவரும் தினமும் பறவைகளைப் பார்த்து பட்டியலிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

Tamil Birders Meet 2017, Yelagiri. Shanmugam Kalidass (extreme left). Photo. AMSA.

கடைசியாக அவரை ஏலகிரியில் சந்தித்தபோது திருப்பூர் மாவட்டத்தில் பறவை நோக்கல் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பறவை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து பறவை கணக்கெடுப்புகள் நடத்த வேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். எனினும் பேசியது பேசியதாகவே இருந்துவிட்டது, அதன் பிறகு இது குறித்து அவரை நான் தொடர்பு கொள்ளவேயில்லை. அதை நினைத்து இப்போது வருந்திக் கொண்டிருக்கிறேன்.

இயற்கை ஆர்வலர்கள் சு. பாரதிதாசன், அம்சா முதலியோரின் ஊக்குவிப்பில் பறவை நோக்கலில் தொடங்கி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பறவைகள் குறித்த கருத்தரங்கங்களை நடத்துதல், பறவைகள் கணக்கெடுப்பில் பங்கெடுத்தல் என இயற்கைப் பாதுகாப்பில் கரிசனம் கொண்டவராக உருவாகி வந்தவர் காளிதாஸ். அவர் பறவைகளைப் பார்த்து ரசித்து பட்டியலிடுவதை மட்டுமே செய்து கொண்டிருக்கவில்லை. இப்பகுதிகளில் உள்ள பலருக்கும் பறவை நோக்கலை அறிமுகப்படுத்தி அவர்களை தொடர்ந்து பறவைகளைப் பார்த்து பதிவு செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் நடைபெற்று வரும் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பிறகாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்ததுடன், பொருட்செலவிட்டு பொதுப் பறவைகளின் படங்களைக் கொண்ட விளக்கத்தாள்களையும் அவர்களுக்கு அளித்து வந்துள்ளார். இத்தனைக்கும் இவர் வசதி படைத்த குடும்பத்தையோ, அறிவியல் பின்புலமுள்ள பட்டங்களையோ பெற்றிருக்கவில்லை. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவரான இவர், தனியார் வருமான வரி தணிக்கையார் அலுவலகத்தில் கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் போதும் திருப்பூர் பகுதிகளில் புதிய இடங்களுக்குச் சென்று அதாவது இதுவரை பொதுப்பறவைகளைக்கூட பார்த்து பதிவு செய்யப்படாத இடங்களுக்கு சாலை வழி பயணம் செய்து அவற்றை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இதை அவர் 2016ல் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையில் தனது அனுபவப் பகிர்வில் தெரிவித்துள்ளார்.

2016 பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் காளிதாசின் அனுபவப் பகிர்வு

இப்படிப்பட்ட சாலை வழி பறவைக் கணக்கெடுப்பில் திருப்பூர் மாவட்டத்திற்கான பல புதிய பறவைகளை பதிவுசெய்துள்ளார். அப்படிப்பட்ட பதிவுகளில் அருமையானது காங்க்கேயத்திற்கு அருகே அவர் கண்ட வெண்வால் மஞ்சள்சிட்டு (White-tailed Iora). தொடர்பற்ற பரவலைக் கொண்ட இப்பறவை இந்தியாவின் சில வட மாநிலங்களிலும் நடுவில் எங்கும் பதிவுசெய்யப்படாமல் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கை முதலிய பகுதிகளில் திட்டுத்திட்டாக பரவி காணப்படுகின்றன. வட தமிழ்நாட்டிலும் அதன் பின் தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில் இவற்றிற்கு இடைபட்ட நிலப்பகுதியான திருப்பூர் பகுதியில் காளிதாசால் பதிவுசெய்யப்பட்டது பறவையாலர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 

திருப்பூர் மாவட்டத்தில் காளிதாஸ் கண்ட வெண்வால் மஞ்ச்ள்சிட்டு White-tailed Iora (Marshall’s Iora) Aegithina nigrolutea

காளிதாஸ் இருந்திருந்தால் திருப்பூர் பகுதியில் இன்னும் பல பறவைகளைப் பார்த்து பதிவு செய்திருப்பார், இன்னும் பல பறவை ஆர்வலர்களை உருவாக்கியிருப்பார். ஒரு காலத்தில் இங்குள்ள பரந்த வெட்ட வெளிகளில் கானமயில்களும், வெளிமான்களும் திரிந்து கொண்டு இருந்திருக்கக்கூடும். ஆனால் கானமயில்களுடன் சேர்ந்து காளிதாசும் இப்பொது இல்லாமல் போனது பரிதாபத்திற்குரியதே. காளிதாஸ்…நீங்கள் இல்லாமல் போனது உங்களது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டும் இழப்பல்ல திருப்பூர் மாவட்டப் பறவைகளுக்கும் தான்.


உயிர் இதழில் (மே-ஜூன் 2018, பக்கம் 19-20) வெளியான அஞ்சலியின் மறு பதிப்பு.

நாளை (2 மே 2019) காளிதாசின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.

Written by P Jeganathan

May 1, 2019 at 12:35 pm

Posted in Birds

Tagged with , ,