UYIRI

Nature writing in Tamil

Archive for December 2019

இயற்கை பாதுகாப்பு சார்ந்த படிப்புகள்

leave a comment »

காட்டுயிர் ஆராய்ச்சி செய்யும் என் போன்றவர்களை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இரண்டு. முதலாவது, உங்களுக்கு இயற்கையின் மீது (அல்லது பறவைகள் மீது) எப்படி ஆர்வம் வந்தது? இரண்டாவது நீங்கள் என்ன படித்தீர்கள்? முதல் கேள்விக்கு பதில் அளிப்பது கடினம், ஆகவே ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு, இரண்டாவது கேள்விக்கு தாவி விடுவது வழக்கம்.

நான் திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வே.ரா கல்லூரியில் 1996 ஆண்டு இளங்கலை விலங்கியல் படித்து முடித்தேன். மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான் அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வியே எழுந்தது. மேற்படிப்புக்கு எதை தேர்ந்தெடுப்பது என்கிற தெளிவான எண்ணம் அப்போது என்னிடம் இல்லை. முதுகலை பட்டமாக நுண்ணுயிரியலும் (Micro Biology) உயிர் வேதியியலும் (Bio-Chemistry) சற்று பிரபலமாக இருந்த காலம் அது. எனினும் அவற்றைத் தேர்ந்தெடுக்க மனம் ஒப்பவில்லை. காரணம், அப்படிப்புகளில் அவ்வளவு ஆர்வம் வரவவில்லை அதனால், அந்தத் துறைகளில் என்னால் சோபிக்க முடியம் என்கிற நம்பிக்கையும் அவ்வளவாக இல்லை.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே மலையேற்றம், கானுலா செல்லுதல், ஒரு சிறிய கேமிராவை வைத்துக் கொண்டு மரங்களையும், சிறிய உயிரினங்களையும் படமெடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த எனது நண்பர் ஒருவர் மாயவரத்தில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் இது சம்பந்தமான படிப்பு ஒன்று உள்ளது என்றார். இணையதளங்கள் இல்லாத காலம் அது. ஆகவே ஒரு நாள், நானும் அவரும் நேரிலேயே அக்கல்லூரிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து விட்டு வந்தோம். அப்போது எனக்கு அறிமுகமானது தான் முதுகலை காட்டுயிர் உயிரியியல் அல்லது காட்டுயிரியியல் (Wildlife biology). இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து எனக்கு “பழக்கப்படா உயிரின வாழ்வியலில்” முதுகலைப் பட்டம் கிடைத்தது. ஆம் Wildlife Biologyஐ அவ்வளவு அழகாக மொழிபெயர்த்து சான்றிதழில் அச்சடித்துத் தந்தார்கள்!

தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப காலத்தில் எங்கே, என்ன வகையான பட்டயப் படிப்புகள், பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் உள்ளன என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. மிகவும் பிரபலமாக இருக்கும் படிப்புகள் சிலவற்றின் தகவல்களை (பொறியியல், மருத்துவம் போன்ற) பலர் கூறக் கேட்டும், விளம்பரங்கள் மூலமும், இணையத்திலும் எளிதில் பெறமுடியும். ஆனால் அதிகம் அறியப்படாத துறைகளைப் பற்றியும் அவற்றைப் பயிற்றுவிக்கும் கல்லூரிகள் குறித்தும் நாம் சற்று ஆராய்ந்தே தேடித் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக இயற்கை பாதுகாப்பு குறித்த படிப்புகள் என்னென்ன, அது சார்ந்த படிப்புகளை எங்கே படிக்கலாம் எனும் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. அந்தக் குறையை இந்த தகவல் திரட்டு ஓரளவிற்காவது தீர்க்கும் என நம்புகிறேன்.

இயற்கை பாதுகாப்பு சார்ந்த படிப்புகளை பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

 • காட்டுயிரியல் (Wildlife Science),
 • சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science),
 • காட்டியல் (Forestry),
 • கடல்சார் உயிரியல் (Marine Biology).

இயற்கை பாதுகாப்பு உயிரியல் (Conservation Biology) என்பது ஒரு துறையாக இந்தியாவில் அறிமுகமானது 80களின் கடைசியில் தான். இத்துறையை இன்னதென எளிதில் வரையறுக்க முடியாது. இது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை முக்கியமாக இயற்கை அறிவியலையும், சமூக அறிவியலையும், இயற்கை வள மேலாண்மையையும் உள்ளடக்கிது. இது குறித்த படிப்புகளை Wildlife Sciences என வகைப்படுத்தலாம். இந்தத் துறையில் சூழலுக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பை நுணுக்கமாக தெரிந்து கொள்வதும், அவற்றைப் பேணிக்காக்க செய்ய வேண்டியது எப்படி என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science) எனும் துறை மேற்சொன்ன துறையையும் அறிமுக அளவில் உள்ளடக்கி இருந்தாலும், பெரும்பாலும் காற்று, நீர், நில மாசு ஏற்படுவதை எப்படித் தடுக்கலாம், அவற்றை எப்படி மதிப்பீடு செய்யலாம், கையாளலாம் என்பதைப் பற்றியது.

வனவியல் அல்லது காட்டியல் (Forestry) துறை காடு சார்ந்த வளங்களை எப்படி மேலாண்மை செய்தல், பாதுகாத்தல், மனிதர்களுக்குப் பயன் தரும் காட்டு வளங்களை அறிவியல் முறைப்படி எடுத்தல், இயற்கையில் ஏற்படும் தீ, நோய் (மரங்களுக்கும், காட்டுயிர்களுக்கும்) முதலிய பேரிடர்கள் வராமல் பாதுகாத்தல், வந்தால் அவற்றிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து, வளங்களை பாதுகாத்தல், மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேலாண்மை, சீரழிந்து போன இயற்கையான பகுதிகளை மிளமைத்தல் போன்றவை இத்துறையில்  பயிற்றுவிக்கப்படும்.

கடல்சார் உயிரியல் (Marine Biology)

கடலில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவற்றிற்கும் அவை வாழும் சூழலுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றியும், கடலின் பௌதிக, உயிரியல், காலநிலை அம்சங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதே கடல்சார் உயிரியல் ஆகும். இது ஒரு சுருக்கமான விளக்கமே. கடல் சார் உயிரியலில் இன்னும் பல உள்துறைகள் உள்ளன உதாரணமாக மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, கடல் வாழ் உயிரினங்களை மனிதர்களின் உணவிற்காக அபரிமிதமாக பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் படித்தல் போன்றவையும் உள்ளடக்கியது.

இவை தவிர இன்னும் பல துறைகளையும் இயற்கை பாதுகாப்பு சார்ந்த படிப்பாக கருத முடியும். இவற்றில் பல இயற்கைப் பாதுகாப்பில் நேரிடையாகவோ அல்லது சிறிய பங்கோ வகிக்கும். அவற்றில் சிலவற்றை கிழே காணலாம்.

 • சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் குறித்த பட்ட,  பட்டயப்படிப்புகள் (Environmental Law)
 • சூழலியல், உயிர்த் தகவலியல் (Ecological and Bio Informatics)
 • இயற்கை, சுற்றுச்சூழல் கல்வி (Nature, Environmental education)
 • இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கும் படிப்புகள் (Policy studies)
 • காட்டுயிர் மருத்துவம் (Wildlife veterinary). இந்தத் துறை இந்தியாவில் இன்னும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. இந்திய அளவில் ஒரே ஒரு கல்லூரியில் மட்டுமே இத்துறையில் முதுகலைப் பட்டம் வழங்கப்படுகிறது.
 • தொலையுணர்தல் (Remote Sensing), புவியியல் தகவல் முறைமை (Geographical Information System – GIS) சார்ந்த படிப்புகள்.
 • சமூக அறிவியலின் (Social science) கொள்கைகளை இயற்கை பாதுகாப்பு அம்சங்களில் பின்பற்றுவதால் இது சார்ந்த படிப்புகளும் இத்துறைக்கு அவசியமாகிறது.
 • உயிரினங்களின் குறிப்பாக மனிதரல்லாத குரங்கு வகைகளின் (Non-Human Primates) குணத்தை ஆராயும் துறையில் (Animal Behavior) ஈடுபடுவோருக்கு உளவியல் (Psycology) துறையின் பின்புலம் மிகவும் உதவிபுரியும்.

சேகரித்த அனைத்து வகையான படிப்புகளையும் கிழ்க்கண்ட கூகுள் ஷீட்டில் பட்டியலிட்டுள்ளேன். ஒருவேளை இந்த பட்டியலில் இல்லாத விவரங்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கட்டாயம் இங்கே Commentsல் தெரிவிக்கவும்.

https://docs.google.com/spreadsheets/d/1HCc-vKdl6c0ODTL1SzO4N3dVE6IAjZ2JaATHCX3u5lA/edit#gid=1040840788

இந்தக் தகவல் திரட்டில் தரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அந்தந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை. இக்கட்டுரையை முடிக்கும் வரை (3rd November 2018) இந்த வலைதளங்களின் உரலிகள் (weblinks) சரியாக செயல்பட்டன. எதிர்காலத்தில் இவை செயல்படாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. அது போலவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிப்புகளை வழங்கும் கல்லூரிகளின், பல்கலைக்கழகங்களின், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும், நற்பெயரையும் பற்றிய விவரங்களை ஆராய்ந்து பட்டியலிடவில்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிப்புகளை இக்கட்டுரை மூலம் அறிந்து வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முன் மேற்சொன்ன விவரங்களை மறுபரிசீலனை செய்து பின்னர் முடிவெடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த தகவல் திரட்டினை ஒரு நிலவரைபடமாக இங்கே காணலாம்

https://public.tableau.com/profile/abinand3565#!/vizhome/WildlifecoursesIndia/Dashboard1

 

இந்த தகவல்களை திரட்ட, கட்டுரையை எழுத பல்வேறு வகையில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி.


இந்து தமிழ் திசை இயர்புக் 2௦19 ல் “ஐ.எஃப். எஸ்., மாநில வனப் பணி அதிகாரியாக என்ன படிக்க வேண்டும்? – இயற்கைப் பாதுகாப்பு சார்ந்த படிப்புகள்” (பக்கம் 287-297) எனும் தலைப்பில் வெளி வந்த கட்டுரையின் முழு பதிப்பு.

Written by P Jeganathan

December 20, 2019 at 6:34 pm