UYIRI

Nature writing in Tamil

Archive for February 2020

பறவைகள்: மூட நம்பிக்கைகளும், அறிவியல் விளக்கங்களும்.

with 4 comments

1. சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளனவா? அதற்கு கைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சு காரணமா?

House Sparrow

House Sparrow (Male)

சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் இல்லை. இவை உலகெங்கும் பரவியுள்ளன. ஒரு சில நாடுகளில், நகரமயமாதல், இனப்பெருக்கக் காலங்களில் குஞ்சுகளுக்கு ஏற்ற உணவு (பூச்சிகள்) கிடைக்காத காரணங்களால், ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்தும், அற்றும் போயிருக்கலாம். ஆனால், கைபேசி கோபுரங்களில் இருந்து வரும் மின்காந்த அலைகளினால் எண்ணிக்கையில் குறைகின்றன, முற்றிலுமாக அழிந்து வருகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று.

2. ஆந்தை, கூகை இனப் பறவைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வருபவையா?

https://commons.wikimedia.org/wiki/File:Tyto_javanica_stertens,_Thrissur,_India.jpg

Barn Owl. Photo: Wikimedia Commons

செய்திகளில் அவ்வப்போது வெளியிடப்படும், கூகை அல்லது வெண்ணாந்தை, தலை உச்சியில் கொத்தாகச் சிறகுகள் கொண்டு கொம்பு போலக் காட்சியளிக்கும் ஆந்தைகள் வெளிநாட்டில் இருந்து வருபவை என்பது தவறான தகவல். கூகை உலகின் பல பகுதிகளில் பரவலாகத் தென்படும் ஒரு பறவை. அவை கோயில் கோபுரங்கள், பழைய கட்டிடங்களில் பகலில் அடைந்து இரவில் வெளியே வந்து இரைதேடும். தென்னிந்தியாவிற்கு Short-eared Owl (Asio flammeus) எனும் ஒரே ஒரு ஆந்தை வகை மட்டுமே வலசை வருகிறது. ஏனையவை இங்குள்ளவையே.

3. பாறு கழுகுகளை தவறான கருத்துக்களின் பிரதிநிதிகளாக, தீய எண்ணங்களின் உருவகமாக, எதிர்மறையாக வரைபடங்களில் சித்தரிக்கப்படுவது சரியா?

Indian Vulture. Photo Wikimedia Commons

பாறு கழுகுகள் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனம். இவை இறந்த கால்நடைகளையும், பெரிய பாலூட்டிகளான யானை, மான், காட்டெருது முதலிய காட்டுயிர்களின், இறந்த உடல்களையும் உண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க உதவுகின்றன. கால்நடைகளுக்கு வலிநீக்கி மருந்தான டைக்லோபீனாக் (Diclofenac) கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள் இறந்த பின்னும் இம்மருந்து அவற்றின் உடலில் தங்கிவிடுகிறது. இம்மருந்து, இந்த இறந்த கால்நடைகளை உண்ணும் பாறு கழுகுகளுக்கு நஞ்சாகிறது. தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில், மாயாறு பகுதியில் சிறிய எண்ணிக்கையில் இப்பாறு கழுகுகள் உள்ளன. அங்குள்ள பூர்வக்குடியினர் இப்பறவைகளை அவர்களது மூதாதையர்களாக மதிக்கின்றனர். ஆனால் அப்பகுதிகளில் குடியேறிய மக்கள் இப்பாறு கழுகுகளைக் காண்பதைக் கெட்ட சகுனமாக நினைக்கின்றனர்.

Cartoon: Internet/Anantha Vikatan

அழிந்து வரும் ஒரு பறவையினத்தைப் பற்றி, தவறான கண்ணோட்டத்தை பொதுமக்களிடம் பரப்புவது முறையாகாது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, இது போன்ற எதிர்மறைக் கண்ணோட்டங்கள் அப்பறவையினத்தினை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தடங்காலாக அமையும்.

4. வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து கூடமைக்குமா?

பறவைகளுக்கு நாம் வகுத்து வைத்திருக்கும் எல்லைக்கோடுகள் கிடையாது. வடதுருவத்தில் கடும் குளிர் நிலவும் காலங்களில் அங்குள்ள பல பறவையினங்கள் தென் பகுதி நோக்கி வலசை வரும். அப்படி இந்தியா, இலங்கை முதலிய பகுதிகளுக்கு ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் வலசை வர ஆரம்பிக்கும் பறவைகள் சுமார் ஆறு மாதகாலம் இங்கே இருந்துவிட்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மீண்டும் அவை வடக்கு நோக்கிப் பயணிக்கின்றன. அப்படி வலசை வரும் பறவைகள் இங்கே கூடமைத்து இனப்பெருக்கம் செய்வதில்லை. இங்கே கூடமைத்து இனப்பெருக்கம் செய்யும் பறவைகளை உள்ளூர்ப் பறவைகள் (Resident Birds) என்றும், வெகுதூரத்தில் இருந்து உணவுக்காக இங்கே வருபவைகளை விருந்தாளிப் பறவைகள் (Migrant birds) என்றும் அழைக்கலாம்.

5. பறவைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்து வளர்ப்பவர்களை பறவை ஆர்வலர்கள் எனலாமா?

பறவைகளை இயற்கையான சூழலில், அவற்றை எந்த விதத்திலும் துன்புறுத்தாமலும், அவற்றின் வாழிடங்களை எந்த விதத்திலும் சீர்குலைக்காமலும் பார்த்து மகிழ்வோரே பறவை ஆர்வலர் ஆவர். செல்லப்பிராணிகள் விற்கப்படும் கடைகளில் இருந்து பறவைகளை குறிப்பாக வெளிநாட்டுப் பறவைகளை வாங்கி வீட்டில் வளர்ப்பதைப் தவிர்க்க வேண்டும். இப்பறவைகள் (குறிப்பாக கிளிகள்) பெரும்பாலும் அங்கிருந்து திருட்டுத்தனமாக பிடித்து வரப்பட்டவை. அவற்றை நாம் வாங்கினால் மறைமுகமாக அந்தப் பறவைகளின் கள்ள வேட்டைக்கு துணைபுரிகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இப்படி செல்லப்பறவைகள் வர்த்தகத்தால் உலகில் பலவகையான பறவைகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

6. கூண்டில் அடைத்து வளர்க்கப்படும், கள்ளத்தனமாகப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பறவைகளை வெளியேற்றி வானில் பறக்க விடலாமா?

பொதுவாக இது போன்ற பறவைகளின் சிறகுகள் வெட்டப்பட்டு இருக்கும். பறக்க இயலாத இப்பறவைகளை வெளியே விட்டால் வெகுநாட்கள் உயிருடன் இருக்காது. பூனை, நாய் முதலியவை அவற்றை கடித்துக் கொன்றுவிடக் கூடும். அவை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட செல்லப்பறவைகளாக இருந்தால் அவற்றை நம் ஊரில் பறக்க விடுவது கூடாது. ஒருவேளை அது உள்ளூர்ப் பறவையாக இருந்தாலும், பறவைகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் உள்ள கால்நடை அல்லது காட்டுயிர் மருத்துவரிடம் காண்பித்து சோதிக்க வேண்டும். அனுமதி பெற்ற காட்டுயிர் காப்பாளர்களிடம் ஒப்படைத்து, காப்பிடத்தில் வைத்து, ஓரளவிற்கு அவை பறக்கும் நிலையை அடைந்த பின்னரே அவை எங்கே பிடிக்கப்பட்டதோ அங்கேயே கொண்டு விட வேண்டும்.

7. பறவைகளுக்கு இரை போடலாமா?

feeding bank mynas

Feeding Bank Mynas

மனிதர்களால் வளர்க்கப்படாத சுதந்திரமாகச் சுற்றித்திரியும் எந்த ஒரு உயிரினத்திற்கும் உணவளித்தல் முறையன்று. சேவை மனப்பான்மையுடன், நல்லது செய்கிறோம் என நினைத்து உணவிடுவது அவற்றிற்கு பெரும்பாலும் பாதகமாகவே முடியும். நாளடைவில் அந்த உயிரினங்களையே நாம் “தொந்தரவு செய்யும் உயிரினங்களாக” கருதவும் வாய்ப்பு உண்டு. பாலூட்டிகளுக்கு உணவிடுதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பறவைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், அது பறவை வகையையும், எந்த மாதிரியான இரையை அவற்றிற்கு கொடுக்கிறோம், எதற்காகக் கொடுக்கிறோம் என்பதையெல்லாம் பொறுத்தது. காகத்திற்கு இரை போடுவது போல எப்போதாவது இரை போடுவதால் பெரிதாக பாதிப்பு இருக்காது என்றாலும், தொடர்ந்து இரை கொடுப்பது அவற்றின் வாழ்வியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்கு நேரடியான ஒரே பதில் இல்லை என்றாலும், இரைபோடுவதால் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதைப் பற்றிய புரிதல் நம்மிடையே இல்லை. ஆகவே, இரை போடாமலேயே இருந்துவிடுவது நல்லது.

8. மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதா? அதற்கான காரணம் என்ன? அவை விளைநிலத்தில் பயிர்களை சேதப்படுத்துவதை எப்படி அடியோடு நிறுத்துவது?

தோகை விரித்தாடும் ஆண்மயில். Photo: Kalyan Varma

மயில்கள் இதற்கு முன் தென்படாத இடங்களிலும் இப்போது இருப்பது உறுதியாகியுள்ளது. ஈரப்பதம் மிக்க வாழிடங்களில் மழையளவு குறைந்து வறண்டு போனதால் அந்த இடங்களில் மயில்கள் வசிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அங்கெல்லாம் மயில்கள் இப்போது பரவியுள்ளன. கேரளாவில் அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் மேற்சொன்ன முடிவுகள் தெரியவந்தன. இது கிட்டத்தட்ட தமிழகத்தில் சில இடங்களுக்கும் பொருந்தக்கூடும்.

மயில்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதை கட்டுப்படுத்தத்தான் முடியுமே தவிர முற்றிலும் தவிர்க்க முடியாது. மயில்களால் தொந்தரவு ஏற்படும் பகுதிகள் என நம்பப்படும் பகுதிகளில் மயில்களின் கணக்கெடுப்பு நடத்துவது, பயிர்களின் விவரங்கள், சேதம் எவ்வளவு, எப்போது ஏற்படுகிறது என்பவற்றை முதலில் அறியவேண்டும். மயில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் இரைகொல்லி உயிரினங்களின் எண்ணிக்கையையும், பரவலையும் கணக்கிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் அவசியம். விளைநிலங்களுக்கு ஆண்டு தோறும் மயில்கள் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அது எப்போது என்பதைத் தெரிந்து அந்த வேளையில் பயிர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு (Protected Areas) வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் சேதம் அதிக அளவில் இருப்பின் அதை உறுதி செய்த பிறகு, அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளும் அவர்கள் பங்கிற்கு பயிர்களை காப்பீடு செய்தல் அவசியம்.

9. சாதகப் பறவை எது? அவை மழைநீரை மட்டுமே குடிக்குமா?

Left – Pied Cuckoo (Photo: Rama Neelamegam). Right – Pied Cuckoo with caterpillar (Photo:Wikimedia Commons)

சுடலைக்குயில் (Pied Cuckoo) தான் சாதகப் பறவை (வட மொழியில் சாதகா). வட இந்தியப் பகுதிகளில் இப்பறவை வந்தால் மழைவரும் எனும் நம்பிக்கை இன்றும் உள்ளது. புராண இதிகாசங்களில் இப்பறவை மழைநீரை மட்டுமே அருந்தும், மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் என மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருக்கும். அண்மையில் ஆரம்ப கட்ட அறிவியல் ஆய்வுமுடிவுகளால் இப்பறவையின் பரவல், அவற்றின் வலசை போகும் பண்பு பற்றிய தகவல்கள் சில கிடைத்துள்ளன . சுடலைக் குயிலில் மூன்று உள்ளினங்கள் (sub species) உள்ளன. முதலிரண்டு ஆப்பிரிக்காவில் உள்ளவை. மூன்றாவது தென்னிந்தியாவில் ஆண்டுதோறும் வசிப்பவை. இவை தவிட்டுக்குருவி முதலான பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுவிடும். மத்திய, வட இந்தியாவிற்கு மே மாத இறுதியில் மழைக்காலத்தின் தொடக்கத்தில் வரும் சுடலைக்குயில்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வலசை வருபவை. சுடலைக்குயில்கள் புழு, பூச்சி, பழங்கள் முதலியவற்றை இரையாகக் கொள்ளும்.

1௦. சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா? மயில் கறி எண்ணெய் மூட்டு வலியை போக்குமா? இணை சேராமலேயே மயில் முட்டையிடுமா? ஆந்தை அலறினால் கெட்ட சகுனமா? கழுகு கூட்டில் உள்ள குச்சிக்கு மந்திர சக்தி உண்டா? கழுகு வயதானவுடன் அதன் அலகை உடைத்து மீண்டும் வளர்த்துக் கொள்ளுமா? பச்சைக்கிளிளால் நம் எதிர்காலத்தை கணிக்க முடியுமா? அன்னம் பாலையும் நீரையும் பிரித்துக் குடிக்குமா?

இவை அனைத்துக்கும் ஒரே பதிலைக் கூற முடியாது. ஆனால், இவை போன்ற மூடநம்பிக்கைகள் எதற்கும் எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லை என்பது மட்டும் உறுதி.


இந்து தமிழ் திசை – உயிர்மூச்சு இணைப்பிதழில் (இரண்டு பாகமாக) வெளியான கட்டுரைகளின் முழு வடிவம்.

18 Jan 2020
பறவைகள்: மூடநம்பிக்கைகளும் அறிவியலும்
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/535369-birds.html

15 Feb 2020
பறவைகள்: நம்பிக்கைகளும் உண்மையும்
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/539715-birds.html

Written by P Jeganathan

February 17, 2020 at 6:25 am