ஈச்சங்கள் கனவு
சென்னையிலிருந்து நெல்லூருக்கு இரயிலில் காலை 10 மணியளவில் வந்தடைந்தேன். இரயில் நிலையம் ஊரை விட்டு ஒதுக்குப் புறமாக இருந்ததால் பைபாஸ் வழியாக கடப்பாவை நோக்கிப் பயணமானோம். இதற்கு முன் இவ்வழியே அவசர கதியில் ஏதேனும் வேலையாக ஓரிரு முறை பயணித்திருந்தேன். ஆதலால் அவ்வப்போது நிறுத்தி பறவைகளைப் பார்த்துக்கொண்டும், வழியில் தென்படுவதை படமெடுத்துக் கொண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை. இம்முறை அப்படி ஏதும் நிர்பந்தங்கள் இல்லாததால், கொஞ்சம் மெதுவாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றோம். வழியெங்கிலும் இருபுறமும் மீன்வளர்ப்புக் குட்டைகள் (ஒரு காலத்தில் விளைநிலங்களாக இருந்திருக்கும்) இருந்தன. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் நெல்லும் சாகுபடி செய்து வந்தனர். மீன் குட்டைகளை கடக்கும் போதெல்லாம் கவுச்சி வாடை அடித்தது. இதற்கு முன் பயணித்த போதும் கவனித்திருக்கிறேன், சாலையோரமெங்கும் பனைமரங்கள் இருக்கும். கள் இறக்குவார்கள். இம்முறையும் கண்டேன். சாலையோரத்தில் ஒரு பெரிய பிளாஸ்டிக் கேனில் வைத்து ஒரு பெண்மணி கள் விற்றுக் கொண்டிருந்தார். ஒருவர் அதை பிளாஸ்டிக் குவளையில் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார்.
இளம் பிராயத்தில் குடித்தது (சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்), அதன் பின் பனங்கள்ளின் வாசனையைக் கூட நுகரும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்போது எங்கள் ஊரில் பனங்கள்ளும், தென்னங்கள்ளும் கிடைக்கும். என் மாமாவின் தோப்பிலேயே கள் இறக்குவார்கள். கலப்படமில்லாத ஒரு மரத்துக்கள்ளை குடித்திருக்கிறேன். வீட்டில் உள்ள சிறுவர்களுக்குக் கூட ஒரு டம்ளரில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். வீட்டுப் பெண்களும் அடுப்பங்கரையில் ஒரு லோட்டாவில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பார்கள். ஐயாக்குட்டி மாமா காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் பாட்டிலை முழுவதுமாக மடக் மடக் என்று குடிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். கள் குடிப்பது (அளவோடுதான்) என்பது அப்போதைய சமூகத்திற்கு சர்வ சாதாரணமான ஒரு செயல். பனங்கள்ளை வயிறு முட்டக் குடிக்கலாம், ஓரளவிற்குத்தான் போதையேறும். தென்னங்கள் அப்படியல்ல. அளவோடு குடிக்க வேண்டும். இல்லையெனில் எங்காவது விழுந்தோ அல்லது வாந்தியெடுத்துக் கொண்டோ கிடக்க வேண்டும். அன்று நெல்லூரில் கள் விற்பனை செய்வதைப் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தது. ஆனாலும், தெரியாத இடத்தில் அதுவும் குறிப்பாக பரிச்சயம் இல்லாத மனிதர்களிடம் கள் வாங்கிக் குடிக்க ஏனோ மனம் வரவில்லை.
சுமார் 25 கி.மீ. பயணித்த பின் கனிகிரி நீர்த்தேக்கம் வந்தது. கரைமேல் ஏறி பார்த்த போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். மடையானையும், ஓரிரு வெள்ளைக் கொக்குகளையும் தவிர பறவைகள் ஏதும் அங்கு இல்லை. தூரத்தில் ஏதோ ஒரு பறவைக் கூட்டம் (வாத்து?) தூரத்தில் நீந்திக்கொண்டிருந்து. கொஞ்சம் தூரம் பயணித்த பின் சாலையோரத்தில் இருந்த ஈச்ச மரத்தில் ஒருவர் ஏறிக்கொண்டிருந்தார். அதைக் கண்டவுடனேயே வண்டியை நிறுத்தச் சொன்னேன். கள் இறக்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்று மரத்தின் மேல் இருந்தவரிடம், அவர் கள் இறக்குவதை போட்டோ எடுக்கலாமா என்று கேட்டேன். புன்னகைத்தவாரே, “தீஸ்கோ” என்றார். அந்த ஈச்சமரம் அப்படி ஒன்றும் உயரமில்லை. அதில் அவர் ஏணி வைத்துத்தான் ஏறி இருந்தார். பாதுகாப்பிற்காக, ஒரு வடத்தால் தன்னைச் மரத்தோடு சேர்த்து சுற்றிக்கொண்டு, உச்சிப்படியில் நின்று கொண்டிருந்தார். மரத்தில் இருந்த பானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு நீளமானது. அதைப் பிடித்து மெல்ல பத்திரமாக பானையை கீழே தரையில் இறக்கி வைத்தார்.
பனை, தென்னை போலல்லாமல், ஈச்ச மட்டையின் அடிப்புறம் தண்டோடு ஒட்டியிருக்கும். செதில் செதிலாக அம்மட்டைகள் மரத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சி வரை அமைந்திருப்பதால், மரத்தை மார்போடு சேர்த்து அணைத்து ஏற முடியாது. ஆகவே தான் ஈச்ச மரத்தில் கள் எடுக்க ஏணி வைத்து ஏற வேண்டியிருந்தது. பனை, தென்னையில் கள் எடுப்போர் மரமேறும் விதமே அலாதியானது. சிறு வயதில் அக்காட்சியை வாய் பிளந்து பார்த்ததுண்டு. வட்டமான கயிற்றை (தலவடை) கால்களைச் சுற்றி இறுக்கிக் கொண்டு மரமேறுவார்கள். இடுப்பில் தென்னம்பாலையால் ஆன ஒரு கூடை இருக்கும். அதில் அரிவாள், உளி முதலியவற்றை போட்டு எடுத்துக் கொண்டு மேலே ஏறுவார்கள்.
இக்கூடையின் வடிவம் வித்தியாசமானது. அடிப்பாகத்தில் இரண்டு கூரிய முனைகளையும் (தென்னம்பாலையின் கூர்மையான முனைப்பகுதி) மேலே வட்ட வடிவிலும் இருக்கும். இதை நம் தலையில் கவிழ்த்துக் கொண்டால் “Batman”ன் தலைக் கவசம் போல இருக்கும். சிறு வயதில் அதைத் தொட்டுப் பார்க்கவும், எனக்கே சொந்தமாக ஒன்றை வைத்துக் கொள்ளவும் என ஆசைப்பட்டதுண்டு. ஆனால் கேலி செய்வார்களோ என கூச்சப்பட்டு யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் இதன் பெயர் தெரியவில்லை. உடனே கிராமத்தில் வளர்ந்த அம்மாவிடமும், பெரியம்மாவிடமும் கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை. பின்னர், கிராமத்தில் உள்ள ஐயாப்பிள்ளை மாமாவிற்கு போன் செய்து கேட்டேன். யோசித்து விட்டு உடனே ஞாபகத்திற்கு வரவில்லை என்றும் நாளை சொல்கிறேன் என்றும் உறுதியளித்தார். தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டு விட்டு விடை தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் பெருமாள் முருகன் எழுதிய “ஆளண்டாப் பட்சி” நினைவுக்கு வந்தது. அந்த நாவலில் ஒரு அத்தியாயம் முழுக்க கள் பற்றியும் அதை இறக்குவதைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கும். புரட்டிப் பார்த்த போது அதிலும் விடை கிடைக்கவில்லை. மறுநாள் அம்மாவிடமிருந்து போன் வந்தது. அதன் பெயர் அருவா பெட்டி. மாமாவுக்கு இருப்பு கொள்ளவில்லையாம் நான் போன் செய்ததிலிருந்து. மறுநாள் காலை சைக்கிளை எடுத்துக் கொண்டு இலுப்பூருக்குச் சென்று, அங்கிருந்த நாடாரிடம் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அம்மாவுக்கு போன் பேசி என்னிடம் தெரிவிக்குமாறு சொல்லியிருக்கிறார். அண்மையில் ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய “பனை மரமே! பனை மரமே! எனும் நூலில் இந்த அரிவாள் பெட்டியின் படமும் விளக்கமும் இருந்தது. இது ஆவணப்படுத்தப்பட்டதைப் பார்த்து மனநிம்மதி அடைந்தேன். அண்மையில் இதைப் பற்றி காட்சன் சாமுவேல் எழுதிய விரிவான கட்டுரைகளில் (1, 2) கண்டேன்.
பனை, தென்னை போல ஈச்ச மரங்களை கூட்டமாகப் பார்க்க முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இருக்கும். திருநெல்லிக்காவலில் இருந்து திருத்தங்கூருக்கு போகும் வழியில் ஒரு ஈச்ச மரம் வயல் வரப்பில் வளர்ந்திருக்கும். சிறு வயதில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் அது. ஒரு முறை பல தூக்கணாங்குருவிகள் அதில் கூடு கட்டியிருந்தன. வயலோரம் இருந்த வாய்க்காலில் நீர் வற்றிப் போன பின் அந்தக் கூடுகளும் காணாமல் போய் விட்டன.
சித்திரை மாதத்தில் தெருவில் தேர் வரும் போது வீட்டின் நிலையில் இரு மூலையிலும் ஈச்சங்குலைகளை தோரணம் போல தொங்க விடுவார்கள். துவர்ப்பாக இருக்கும் அந்த செங்காய்களை சிறு வயதில் சுவைத்து முகம் சுழித்ததுண்டு. பள்ளிக்கூட வாசலில் கூடையில் வைத்து வீசம்படியில் அளந்து ஐந்து, பத்து பைசாவுக்கு விற்கும் வயதான பாட்டியிடம் கருப்பு நிற ஈச்சப்பழங்களை வாங்கித் தின்றதும் நினைவில் இன்றும் இருக்கிறது. ஈச்சப்பழம் சுவையானது. எனக்குப் பிடித்த பழங்களில் ஒன்று. எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுவேன். ஆனால் வெகு அரிதாகவே கிடைக்கும்.
பனங்கள்ளையும், தென்னங்கள்ளையும் ருசித்திருந்தாலும் ஈச்சங்கள்ளை இதுவரை குடித்ததில்லை. தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் கள்ளையும் குடிப்பதற்கான வாய்ப்பு வருமா எனத்தெரியாது. எனவே ஈச்சங்கள் இறக்கப்படுவதைப் பார்த்ததும் நெடுநாளைய கனவு அன்று ஆந்திராவில் நனவாகப் போகிறது என எண்ணிக் கொண்டேன்.
பானைக்குள் கள் நுரைத்துக்கொண்டிருந்தது. பல வகைப் பூச்சிகளையும் பார்க்க முடிந்தது. தேனீக்கள், ஈ வகைகள், பட்டுப் பூச்சிகள் யாவும் கள்ளின் மணத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளே விழுந்து செத்துக் கிடந்தன. கீழிரங்கி வந்தவர், இடுப்பில் சொருகி வைத்திருந்த உளியை எடுத்து ஒரு நீளமான கட்டையில் தீட்டிக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். பெயரைக் கேட்டேன். கிருஷ்ணா என்றார். எதற்காக போட்டோ எடுக்கிறேன் எனக் கேட்டார். பத்திரிக்கைக்கா என வினவினார். சும்மா பொழுது போக்கிற்காக என்றேன். கள் கொஞ்சம் கிடைக்குமா என்றேன். இப்போது நன்றாக இருக்காது சாயங்காலம் வா இருந்தால் தருகிறேன் என்றார். உளியை தேய்த்து முடித்த பின் ஏணியை எடுத்து அடுத்த மரத்தில் வைத்து மரமேற ஆயத்தமானார். நான் செய்வதறியாமல் ஏமாற்றத்துடன் கிழே கலயத்தில் இருந்த ஈச்சங்கள்ளை நாக்கில் எச்சில் ஊற பார்த்துக் கொண்டேயிருந்தேன். இன்னொரு முறை சாயங்காலமாக அங்கெ போக வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
உயிர் மூச்சு – தி இந்து தமிழ் இணைப்பிதழில் 15 Jun 2019 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.
Leave a Reply