UYIRI

Nature writing in Tamil

Archive for February 2022

தமிழில் சூழலியல் படைப்புகளின் நிலை

leave a comment »

சூழலியலைப் புரியவைக்க மொழி மேம்பட வேண்டும்! எனும் தலைப்பில் தி இந்து தினசரியில் (19 Feb, 2022) வெளியான எனது நேர்காணலின் முழு வடிவம்.

பேட்டி கண்டவர்: ஆதி வள்ளியப்பன். தி இந்து வலைதளத்தில் படிக்க இங்கே காண்க:

தமிழில் சூழலியல்-பசுமை எழுத்து வளர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? கடந்த 10 ஆண்டுகளில் சூழலியல் எழுத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்.

ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. எனினும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இன்னும் தரமான பல உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் வரவேண்டும். களப்பணி முறைகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் தமிழில் எழுத முன் வரவேண்டும். சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ போல இன்னும் பல புதினங்களும், இயற்கை சார்ந்த புனைவு இலக்கியங்களும் நிறைய வரவேண்டும். செல்வமணி, அவை நாயகம், ஆசை இவர்களது படைப்புகளைத் தவிர இயற்கை சார்ந்த கவிதைகள் பெரிதாக வந்ததாகத் தெரியவில்லை. (பெருமாள்முருகனின் பறவை, இயற்கை கீர்த்தனைகள் நீங்கலாக). Green Humor போன்ற காட்டூன்களும் தமிழில் வரவேண்டும். இயற்கை சார்ந்த சிறார் இலக்கியங்கள் பல தமிழில் வரவேண்டும்.

மூன்று நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்தி பார்க்கவோ, படிக்கவோ முடியாத தற்போது உள்ள சில இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் இயற்கை பாதுகாப்பு சார்ந்த செய்திகளை பல வகைகளில், பல தளங்களில் (காணொளி, infographics) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சூழலியல் பிரச்சினைகள் அறிவியல்பூர்வமாக முன்வைக்கவும், விவாதிக்கவும் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? குறிப்பாக தொலைக்காட்சி, சமூகஊடக விவாதங்களில் ஆரோக்கியமான போக்கு தென்படுகிறதா?

தொலைக்காட்சி பார்ப்பதில்லை, ஒரு சில வாட்ஸ்அப் குழுக்களைத் தவிர வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அந்தக் குழுக்களிலும் கூட விவாதிப்பதோ, தேவையில்லாமல் எதிர்வினையாற்றுவதோ இல்லை. ஆகவே நிம்மதியாக இருக்கிறேன்.

எனினும், சமகால பிரச்சனைகளை பொதுமக்களுக்கு புரியும்படி எளிய வகையில் உடனுக்குடன் சொல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தேவையாக இருக்கிறது. ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து நிறைய பேசினோம். ஆனால், ஊரடங்கு விளக்கிக் கொள்ளப்பட்டவுடன், நாமும் ‘இயல்பு நிலைக்குத்’ திரும்பிவிட்டோம். அண்மையில் இந்தியாவில் காடுகள் அதிகரித்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியானது. உள்ளே படித்துப் பார்த்தால், தேயிலைத் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும் காடுகள் என ‘கணக்கு’ காண்பித்திருக்கிறார்கள். இது குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் (1972) திருத்தம் குறித்து தமிழில் செய்திகள் கூட வந்ததாகத் தெரியவில்லை.

காலநிலை மாற்றம் பற்றி தமிழகத்தில் குறைந்தபட்சமாகவாவது விழிப்புணர்வு இருக்கிறதா, தமிழக சூழலியல் செயற்பாட்டாளர்களின் காலநிலை மாற்றம் குறித்த அணுகுமுறை எப்படியிருக்கிறது?

நிச்சயமாக காலநிலை மாற்றம் குறித்து பலரும் அறிந்தே இருக்கிறார்கள். குறிப்பாக நகரப்பகுதியில் உள்ளவர்கள் இதை உணர்ந்திருக்கிரார்கள். ஆனால் அவற்றின் விளைவுகளைப் பற்றி இன்னும் முழுமையாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா எனத் தெரியவில்லை. இது குறித்துதான் தமிழில் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள ஒரு மாற்றாக பசுமை ஆற்றல் முன்வைக்கப்பட்டாலும், அதிலும் பல சிக்கல்கள் இருப்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும். The Guardian தினசரியைப் போல. காலநிலை அவரசநிலை குறித்த புரிதலும், அக்கறையும் கொண்ட பல செய்தியாளர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தினசரிகளில் இதற்கென தனியாக ஒரு பக்கத்தையே ஒதுக்க வேண்டும்.

தமிழ்ச் சூழலியல் எழுத்து என்று வரும்போது, காட்டுயிர்கள், இயற்கை குறித்து போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா? இல்லை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய மேம்போக்கான ஆக்டிவிசம் ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?

மேம்போக்காக இருப்பதாகத் தோன்றவில்லை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அளவு குறைக்கப்பட இருந்த போது சென்னையைச் சேர்ந்த பல இளம் இயற்கை ஆர்வலர்கள் பங்கு கொண்டார்கள். கொடைக்கானல் மெர்குரி கழிவினால் ஏற்படும் மாசு, எண்ணூர் கழிமுக மாசு குறித்து கலை வடிவிலும் (ராப், கர்நாடக இசைப் பாடல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் வெகுண்டெழுந்ததைப் பார்த்தோம். கவுத்தி, வேடியப்பன் மலைப்பகுதிகள் பொதுமக்களின் உதவியாலேயே காப்பாற்றப் பட்டன. இப்பொது அப்பகுதியில் சிப்காட் வருவதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இவை அனைத்தும் முறையாக ஒரே இடத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இயற்கையை அழித்தால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை சரியாக புரிய வைத்தால் அனைவரும் அதற்காகப் போராடுவார்கள். அந்தப் புரிதலை ஏற்படுத்துவது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், அதுசார்ந்து படைப்புகளை உருவாக்கும் ஒவ்வொருவரின் கடமை.

சமீபத்திய ஆண்டுகளில் நீங்கள் வாசித்தவற்றில் குறிப்பிடத்தக்க தமிழ் சூழலியல் புத்தகங்களைக் குறிப்பிட முடியுமா?

நூல்களை விட கட்டுரைகள் வாசித்தது தான் அதிகம். நாராயணி சுப்ரமணியன், சுபகுணம், மா, ராமேஸ்வரன், தங்க ஜெயராமன் ஆகியோரது சூழலியல், இயற்கையியல் சார்ந்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. பரிதியின் ‘பட்டினிப் புரட்சி, நக்கீரனின் ‘நீர்எழுத்து, ஜா. செழியனின் ‘பறவைகளுக்கு ஊரடங்கு, சு. பாரதிதாசனின் ‘பாறு கழுகுகளைத் தேடி’, வறீதையா கான்ஸ்தந்தின் ‘கடலம்மா பேசுறங் கண்ணு’ போன்ற நூல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழ்ச் சூழலியல் படைப்புகளில் மொழிநடை, எடிட்டிங் போன்றவை மேம்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா?

இன்னும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து கூடு வைக்கின்றன, கூகை ஒரு வெளிநாட்டுப் பறவை, யானைகள் அட்டகாசம் செய்கின்றன, சிறுத்தைகள் ஊருக்குள் ஊடுருவின என்றே எழுதிக் கொண்டிருக்கிறோம். செஞ்சந்தனம் அல்லது சந்தன வேங்கை என்கிற மரபான பெயர்கள் எப்படியோ உருமாறி செம்மரம் ஆகி விட்டது. வைரசை தமிழில் நச்சுயிரி என்று காலங்காலமாக படித்துவந்திருக்கிறோம். ஆனால் இப்போது அது தீநுண்மியாக திடீர் மாற்றம் அடைந்துவிட்டது. இது குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவோ, கவனம் செலுத்துவதாகவோ தெரியவில்லை.

இயற்கை பாதுகாப்பு குறித்த சொல்லாடலில் மொழி ஒரு முக்கியப் பண்பு வகிக்கிறது. வார்த்தைகளை சரியாகக் கையாளுதல் (மனித-விலங்கு மோதல் அல்ல – மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல்), சரியான பதங்களை, பாரம்பரியப் பெயர்களை உபயோகித்தல், வழக்கொழிந்த பெயர்களை மீட்டெடுத்தல், சரியான துறைச்சொற்களை உருவாக்குதல் யாவும் அவசியம்.

——–

Written by P Jeganathan

February 20, 2022 at 4:14 pm