Archive for May 2022
அருங்காட்சியகங்கள் ஏன் நமக்கு அவசியம்?
அருங்காட்சியகங்களில் பல துறைகள் கொண்ட காட்சிக்கூடங்கள் இருந்தாலும் ஓர் இயற்கை ஆர்வலனாக நான் விரும்பும் பகுதி விலங்கியல் கூடங்கள்தான். காட்டுயிர்களை உயிருடன் அவற்றின் இயற்கையான வாழிடங்களில் மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு, பாடம்செய்துவைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உடல்களைப் பார்ப்பது ஒருவேளை மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். ஆயினும், கண்ணாடிக் கூண்டில் உள்ள, போலியான பளிங்குக் கண்கள் பொருத்தப்பட்ட, கண்ணாடிக் குடுவையில் ஃபார்மால்டிஹைடு திரவத்தில் பதப்படுத்தப்பட்ட, நிறங்களை இழந்த, சில வேளைகளில் கோரமாகத் தோற்றமளிக்கும் இறந்துபோன உயிரினங்களின், அவற்றின் எலும்புக்கூடுகளின் முக்கியத்துவத்தை அறிந்தால் நிச்சயமாக நாம் ஆச்சரியமடைவோம்.
அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்காகப் பாடம்செய்த உடல்களை வைத்திருந்தாலும், அந்த உயிரினங்களின் உபரியான சேகரிப்புகளைப் பதப்படுத்தி பத்திரமாகப் பெட்டிகளுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள். இவற்றுக்குக் காப்பு சேகரிப்புகள் (Reserve collection) என்று பெயர். இவை யாவும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல அறிவியல் கேள்விகளுக்கு விடையளிக்க பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக சரியான விவரங்களைக் கொண்ட (அந்த உயிரினம் சேகரிக்கப்பட்ட நாள், இடம், சேகரித்தவரின் பெயர் முதலான), பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து முறையாகப் பாடம்செய்யப்பட்ட, உயிரின சேகரிப்புகளில் இருந்து அவற்றின் டி.என்.ஏ.வைகூட ஆராய்ச்சியாளர்கள் பிரித்துள்ளனர். இது அந்த உயிரினங்களின் வகைப்பாட்டியலுக்கும், அவை பரவியிருந்த நிலப்பகுதி குறித்த புரிதலுக்கும், அவற்றின் எண்ணிக்கை சார்ந்த விளக்கங்களுக்கும், பரிணாமவியல் கோட்பாடுகளுக்கும் விடையளிக்கும். உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் எழுதும் போது அவற்றுக்கான விளக்கப்படங்களை (illustrations) வரைவதற்குப் பாடம்செய்யப்பட்ட உடல்களே (இன்றுவரையில்) பேருதவி புரிகின்றன.

அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பறவை வகைகளின் பட்டியலைத் தயாரிக்கும்போது சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பறவைகள், விலங்கியல் கூடத்தின் பழையக் குறிப்பேடுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் சுமார் 530 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒளிப்படக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்தில் பறவைகள் சுடப்பட்டு அல்லது பிடிக்கப்பட்டு பாடம்செய்து வைக்கப்பட்டன. இதுபோல பல பறவையியலாளர்கள் சேகரித்த பறவைகள் பாடம்செய்யப்பட நிலையில் உலகின் பல அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்களை (சில சமயம் படங்களுடன்) அந்தந்த அருங்காட்சியகங்கள் அவற்றின் வலைதளங்களில் அனைவரும் காணும்படியாகப் பதிவேற்றம் செய்துள்ளன. இப்படி தமிழ்நாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட இந்தப் பறவைகளின் பாடம்செய்யப்பட்ட உடல்களின் (bird skins) விவரங்கள் Vertnet (www.vertnet.org) போன்ற இணையத் தளங்களில் கிடைக்கின்றன. ஆனால், சுமார் 30 வகையான பறவைகளின் விவரங்கள் (அதாவது இங்கிருந்து சேகரிக்கப்பட்ட பறவைகளின் பாடம்செய்யப்பட்ட உடல்கள்) சென்னை அருங்காட்சியகத்தின் குறிப்புகளிலும், சேகரிப்பிலும் மட்டுமே உள்ளன. இவற்றின் விவரங்கள் உடனடியாக இணையத்தில் கிடைப்பதில்லை. இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள பல அருங்காட்சியகங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
அருங்காட்சியகங்களில் உள்ள பாடம்செய்யப்பட உயிரினங்களின் விவரங்களைப் பொது வெளியில் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுவளப் புத்தாக்க உரிமத்தின் கீழ் (creative commons license) வெளியிட வேண்டும். உலகில் பல அருங்காட்சியகங்கள் இந்த வழியைப் பின்பற்றி அவர்களது தரவுகளை (டிஜிடல்) எண்ணியல் வடிவில் தயார்செய்து விக்கிபீடியா போன்ற பொதுவகங்களில் பதிவேற்றியுள்ளனர். எடுத்துக்காட்டாக நெதர்லாந்தில் உள்ள தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் (Naturalis Biodiversity Center) உள்ள எல்லா உயிரினங்களின் படங்களும், விவரங்களும் GLAM Wiki (“Galleries, Libraries, Archives, and Museums” with Wikipedia) எனும் திட்டத்தின் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது. இவற்றில் இந்தியாவில் உள்ள முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் இமயமலைக் காடையின் (Himalayan Quail) பாடம்செய்யப்பட்ட உடலினை 360o கோணத்தில் தெளிவாகக் காட்டும் காணொலியும் (video) அடக்கம்.
ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், அருங்காட்சியக அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், திருவனந்தபுரத்தில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற முன்னெடுப்புகளை இந்தியாவில் உள்ள எல்லா அருங்காட்சியகங்களிலும் தொடங்க வேண்டும். இதற்கான போதுமான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

இயற்கை கல்வியையும், உயிரியலையும் கள அனுபவத்தின் வாயிலாகவும், பரிசோதனைக் கூடங்களிலும் சொல்லிக்கொடுப்பது நல்லது. அருங்காட்சியகங்களில் நேரத்தைச் செலவிடுவதாலும் பல அறிவியல் சார்ந்த கருத்துகளையும் நாம் நேரிடையாகப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நாம் நூலில் படிக்கும், படத்தில் பார்க்கும் பல உயிரினங்களை, அவற்றின் சரியான உருவ அளவினை அறியவும், அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். அருங்காட்சியக அதிகாரிகளும், பொதுமக்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் காட்சியமைப்புகளைச் சிறந்த முறையில் அமைக்க வேண்டும். காட்சிப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் மேலதிக விவரங்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள சிறந்த ஒலி-ஒளி காட்சிஅமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அரதப்பழசான பாடம் செய்யப்பட்ட உடல்களை அகற்றி புதியனவற்றை வைக்க வேண்டும். இந்தியக் காட்டுயிர் சட்டம் 1972இன் படி எந்த ஓர் உயிரினத்தையும் கொல்லக் கூடாது ஆகவே, இதற்கு முன்பு இருந்ததுபோல் உயிரினங்களைக் கொன்று அவற்றின் உடல்களைச் சேகரிக்க முடியாது. ஆயினும் உயிரியல் பூங்காக்களில் இயற்கையாக மரணமடையும் உயிரினங்களையும், சாலையில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் உயிரினங்களையும் தகுந்த முன்அனுமதி பெற்று பாடம் செய்து காட்சியமைப்புகளை மேம்படுத்தலாம். இதற்கு வனத்துறையின் ஒத்துழைப்பும் அவசியம். அருங்காட்சியகங்களில் உள்ள காட்சியமைப்புகளில் உயிரினங்களின் சரியான விவரங்களை அளிப்பது அவசியம். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் உயிரினங்களின் சரியான தமிழ்ப் பெயர்களைக் கொடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து போகும் அருங்காட்சியகங்களில் சரியான தகவல்களைக் கொடுப்பது மிகவும் அவசியம். அருங்காட்சியகங்கள் நம் அறிவினை விசாலமாக்கும் இடம். அதைத் தொடர்ந்து சரியான வகையில் பராமரிப்பதும், மேம்படுத்துவதும் அரசின் கடமை. அதுபோலவே அங்கு எளிதில் கிடைக்கும் அரிய தகவல்களையும், அறிவினையும் பயன்படுத்திக்கொள்ளுதல் நம் அனைவரின் கடமை.
——-
தி இந்து தமிழ் 18 May 2022 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.
கருகப்போகும் காடுகள் – Fire of Sumatra நூல் அறிமுகம்

காட்டுயிர் பாதுகாப்பு அதில் உள்ள சிக்கல்கள், இயற்கை வரலாறு குறித்து பலரும் பல கட்டுரைகள் வழியாகப் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி. எனினும் கற்பனைக் கதைகள், புதினங்கள் வழியாக (non-fiction) இந்தத் தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதென்பதும் ஒரு சிறந்த வழியே. அதுவும் அந்தக் கதை உயிரோட்டமாகவும், விறுவிறுப்பாகவும், படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் இருக்கும்போது சொல்லவரும் கருத்துகள் எளிதில் மனதில் பதியும். புள்ளிவிவரங்களையும், அறிவியல் முறைகளையும், கோட்பாடுகளையும், விளக்கங்களையும், மட்டுமே கொண்ட கட்டுரைகளைவிட இதையெல்லாம் கொண்ட கதை படிப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர் குறித்துப் பேசும், குழந்தைகளுக்கான படைப்புகள் இந்த வகையில் அதிகமாக இருக்கும். ஆனால், முழுநீள நாவல்கள் குறைவே. மேலை நாடுகளில் இது போன்ற படைப்புகளைக் காணலாம். ஆனால், இந்தியாவில் அதுவும் ஆங்கிலத்தில் இவ்வகையான படைப்புகள் அரிதே. அண்மையில் (2021) வெளியான C.R. ரமண கைலாஷ் எழுதிய “Fire of Sumatra” புலிகள், அவற்றின் வாழ்க்கை முறை, மனிதர்களால் அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஓர் ஆங்கில நாவல்.
இந்த நாவலின் பெயரில் உள்ளது போல் இந்த நாவலின் காட்சிக்களம் சுமத்ரா தீவாக இருந்தாலும், புலிகள், அவற்றின் வாழிடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலக அளவில் பொதுவானதே. கதைக்களமும், கதாபாத்திரங்களும் கற்பனையாக இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகளும், நிகழ்வுகளும் அறிவியல் துல்லியம் கொண்டவை. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு புலியின் குடும்பமும், அவற்றைக் காப்பாற்ற முயலும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆர்வலர்கள் சிலருமே. புலிக் குடும்பத்தில் ஐந்து பேர் – அம்மா, அப்பா, மூன்று குட்டிகள். புலிகளில் பெரும்பாலும் பெண் புலிகளே குட்டியைப் பேணுகின்றன. அரிதாகவே ஆண் புலி குட்டிகளைப் பராமரிக்கின்றன, இந்தக் கதையில் வருவதுபோல.
அம்மா புலியான சத்ரா குட்டிகளுக்காக இரை தேட அவற்றை விட்டுச் செல்லும்போது காட்டுத்தீயில் சிக்கி மயங்கிவிடுகிறாள். கண்விழித்துப் பார்க்கும்போது, சில காட்டுயிர் ஆர்வலர்களால் காப்பாற்றப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறாள். அங்கு ஏற்கனவே பொறியில் சிக்கி காலை இழந்த வாலி எனும் மற்றொரு புலியைச் சந்திக்கிறாள். அவர்கள் தங்களது நிலைமைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கின்றனர். சத்ரா, தனது குட்டிகளைப் பிரிந்து வாடுகிறாள். அவள் மீண்டும் காட்டுக்குள் சென்றாளா? குட்டிகளோடு சேர்ந்தாளா? என்பதைத்தான் மிக அழகாகவும், சுவாரசியமாகவும் சொல்கிறது இந்த நாவல்.
அதே வேளையில் புலிகளில் வாழ்க்கை முறையையும், அவற்றைக் குறித்த பல இயற்கை வரலாற்றுக் குறிப்புகளும், அவற்றுக்கு மனிதர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் புலிகளே சொல்வதுபோல அமைத்திருப்பது நிச்சயம் வாசகர்களைக் கவரும். சொல்லப்படும் சில கருத்துகள் நம்மை ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கும். எடுத்துக்காட்டாக, புலிக்குட்டிகளில் ஒன்று தன் தந்தையிடம், “மனிதர்கள் புத்திசாலிகளா?” எனக் கேட்கிறாள் (பக்கம் 86). அதற்குத் தந்தைப் புலி சொல்லும் பதில், “நம்மை திறமையாகக் கொல்வதாலும், நமது வாழிடத்தையும் அழிப்பதாலும் அவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்வதா? அல்லது இவற்றையெல்லாம் செய்வதால் அவர்களுக்குப் பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை அறியாமல் இருப்பதால், அவர்களை மனப்பக்குவம் இல்லாத மூடர்கள் என்று சொல்வதா எனத் தெரியவில்லை”.
கதைக்களம் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவில் நடைபெறுகிறது. ஆகவே அங்குள்ள சில காட்டுயிர்கள் குறித்தும், வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பேராபத்துகள் குறித்தும் நாம் இந்த நாவலின் வழியே அறிய முடிகிறது. குறிப்பாக, பாமாயில் (எண்ணெய்ப்பனை) சாகுபடிக்காகக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து. பாமாயில் தோட்டமிடுவதற்காக, மழைக்காடுகளை வெட்டிச் சாய்த்து அந்த இடத்தை தீ வைத்துக் கொளுத்தும் கொடுமை நடக்கிறது (இது கதையில் மட்டுமல்ல இன்றும் நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான்). அந்தக் காடுகளில் தென்படும் ஒரு அரிய வகை வாலில்லாக் குரங்கினம் ‘ஒராங்ஊத்தன்’ (Orangutan). மரவாழ் உயிரினங்களான இவை காடழிப்புக் காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த நாவலின் ஒரு பகுதியில் (பக்கம் 161) தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்லும் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அந்த இடத்தில், தப்பிச் செல்ல முடியாமல் கருகிப்போன ஒரு ஒராங்ஊத்தனின் சடலத்தைக் காண்கிறார். அது தனது இரு கைகளாலும் எதையே கட்டிப்பிடித்துக்கொண்டே எரிந்துபோயிருக்கிறது. கொஞ்சம் கவனித்துப்பார்க்கும்போது அதன் கரங்களுக்குள் இருப்பது கருகிப்போன குட்டி ஒராங்ஊத்தன் என்பதை அறிகிறார். இதைப் படிக்கும்போதே இந்தக் கொடூரமான காட்சி நம் கண்முன்னே வந்து நெஞ்சை உருக வைக்கிறது. அதே வேளையில் இதுபோன்ற நிலை இந்தியக் காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் நிகழப்போகிறது என்பதை நினைக்கும்போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.
சமையல் எண்ணெய்களில் மலிவான பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 13 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் பயிரிடுவதற்கான ஒப்புதலைச் சென்ற ஆண்டு (ஆகஸ்டு 2021) இந்திய அரசு அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள இயற்கை ஆர்வலர்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதனால், சுமார் 100க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இதில் மலேசியாவும், இந்தோனேசியாவும் செய்த பெரும் தவறை இந்தியாவும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பாமாயில் சாகுபடிக்காக அந்த நாடுகளில் இருந்த பல்லுயிர்ப்பன்மை வாய்ந்த மழைக்காடுகளைத் திருத்தி அழித்துவிட்டனர், அதுபோல இங்கும் நடக்கவிடக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய சமையல் எண்ணெய் உற்பத்தித் திட்டத்தில் பாமாயிலின் (National Mission on Edible Oils – Oil Palm – NMEO-OP) உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்போவதாகவும், இதைப் பயிரிடுவதற்கான மானியங்களும், உதவித்தொகைகளும் அளிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், முதலான வடகிழக்கு மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உலக அளவில் பல்லுயிர்ப்பன்மை மிகுந்த இடங்கள். இங்குள்ள இயற்கையான வாழிடங்களை எந்த வகையிலும் சீர்குலைப்பது அங்குள்ள காட்டுயிர்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எளிமையான ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் நடையில் உள்ளது இந்த நாவல். எனினும் நடுவில் சற்றே விறுவிறுப்பு குறைந்து தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வு எழுகிறது. நாவலாசிரியர் ரமண கைலாஷ் அவர்கள் எட்டு வயதாக இருந்தபோது பாதி கருகிய நிலையில் இருந்த ஒராங்ஊத்தனின் படத்தைக் கண்டிருக்கிறார் (அந்தப் படங்களை இங்கே காணலாம்). அதன் பாதிப்பில் விளைந்ததுதான் இந்த நாவலும், அதில் அவர் விவரித்திருக்கும் கருகிய ஒராங்ஊத்தன் காட்சியும். அவரது பதினான்கு வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் கதைக்கரு, அதில் விளக்கப்பட்டுள்ள காட்டுயிர்களின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை இந்தச் சிறு வயதில் உள்வாங்கி இப்படிப்பட்ட நாவலை எழுதிய அவரை வியந்து பாராட்டலாம். எனினும், எனது எண்ண ஓட்டங்கள் சற்றே வேறுபட்டிருந்தது. இவரைப் போன்ற இளைய தலைமுறை இயற்கை ஆர்வலர்களை நாம் எந்த அளவுக்கு எதிர்மறையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியிருக்கிறோம் என்கிற கவலைதான் மேலோங்கியிருந்தது.
—-
தி இந்து தமிழ் 07 May 2022 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.