UYIRI

Nature writing in Tamil

இந்தியா 75: தத்தளிக்கும் காட்டுயிர்களும் வாழிடங்களும்

with 2 comments

எந்த ஒரு துறையையும் பொதுவாக இந்தியச் சுதந்திரத்துக்கு முன், பின் என ஒப்பிடுவது வழக்கமான ஒன்று. பல்லுயிர்ப் பாதுகாப்பு குறித்தும் இந்த வகையில் பகுப்பாய்வு செய்யலாம். ஆங்கிலேய ஆட்சி முறை 1947இல் ஒருவழியாக முடிவுக்கு வந்தாலும், மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதுபோல் 1960வரையிலும்கூட காட்டுயிர்கள் (புலிகளையும் சேர்த்துத்தான்) கேளிக்கைக்காகவும், விருதுகளுக்காகவும், வீரசாகசத்திற்காகவும், வேட்டையாடப்பட்டு வந்தன. இதனால் பல (ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் , ஆசிய யானை, சிங்கம், புலி போன்ற) பெரும் பாலூட்டிகள் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துபோயின. 20ஆம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து முற்றிலும் அழிந்துபோன ஜாவா காண்டாமிருகம், சுமத்ரா காண்டாமிருகம், பாண்தெங் (Banteng) – ஒரு வகை காட்டு மாடு, சிவிங்கிப் புலி (Asiatic Cheetah) போன்றவையாகும். இவற்றில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் அற்றுப்போனது சிவிங்கிப் புலி. இன்னும் பல காட்டுயிர்களின் எண்ணிக்கையும் அவற்றின் வாழிடப் பரப்பும் வெகுவாகக் குறைந்துபோயின. இந்த நிலையை உணர்ந்து பல அரசு-சாரா நிறுவனங்களும் (பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் – Bombay Natural History Society போன்ற), சாலிம் அலி, ம கிருஷ்ணன், எட்வர்ட் பிரிட்சாட்டு கீ (சுருக்கமாக E.P. Gee), கைலாஷ் ஷன்க்லா முதலான இயற்கை ஆர்வலர்களும் இந்தியாவின் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து எழுதவும், பேசவும் ஆரம்பித்தனர்.

இந்தியாவின் கடைசி சிவிங்கிப்புலிகள்! சுதந்திரத்திற்குப் பின் முற்றிலுமாக அழிக்கப்பட்ட உயிரினம். படம். விக்கிபீடியா(மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில விக்கிபீடியா பக்கத்தைக் காண்க – https://en.wikipedia.org/wiki/Asiatic_cheetah)

இதன் விளைவாக உருவானதே இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 (Indian Wildlife Protection Act 1972). இதனைத் தொடர்ந்து 1973இல் புலிகள் பாதுகாப்பு செயல்திட்டம் (Project Tiger) தொடங்கப்பட்டது. பின்னர் காட்டுயிர் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானை காப்பகங்கள் (யானைகள் பாதுகாப்புச் செயல்திட்டம் – Project Elephant -1992இல் தொடங்கப்பட்டது), உயிர்மண்டலக் காப்பகங்கள், பறவைகள் சரணாலயங்கள், பல்லுயிர் பாதுகாப்பகங்கள் (Conservation reserves) என பல பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உருவாயின. ஒருபக்கம் இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம் வளர்ச்சித் திட்டங்களுக்காக (நீர் மின்சாரம், அணைகள், சாலைகள், கனிமச்சுரங்கம் தோண்டுதல் போன்ற) இயற்கை வாழிடங்கள் அழிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் வந்தன. பசுமைப்புரட்சியின் பக்கவிளைவாக இரசாயன உரங்களின் உபயோகம் அதிகரிப்பால் பல வகையான உயிரினங்கள் எண்ணிக்கையில் குறைந்து, பல பகுதிகளில் அற்றும் போயின (எடுத்துக்காட்டு நரிகள் Golden Jackal), காடுகள் அழிக்கப்பட்டு ஓரினக்காடுகளாயின. அதாவது வெட்டுமரத்தொழிலில் இருந்து வரும் வருமானத்துக்காக தேக்கு, சீகை (Black Wattle), யூக்கலிப்டஸ் முதலான ஒரே வகையான மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டன. காபி, தேயிலை போன்ற ஓரினப்பயிர்களுக்காகவும் காடுகள் திருத்தப்பட்டன. விவசாய நிலங்கள் விரிவாக்கத்தினாலும், நகர்ப்புற வளர்ச்சியினாலும் பல நன்னீர் வாழிடங்களும், புல்வெளிகளும் மறைந்துபோயின. பல வகையான வளர்ச்சித் திட்டங்களால் அலையாத்திக் காடுகளும், கடற்கரையோர வாழிடங்களும் வெகுவாகச் சுருங்கிப்போனது. இதனால் ஆமைகள் கூடமைக்கும், வலசைவரும் பல்வேறு கரையோரப் பறவைகளின் முக்கிய வாழிடங்களும் குறுகியும், இல்லாமலும் போனது. இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 ஒருவகையில் காட்டுயிர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பைத் தந்தாலும், அது பூர்விக குடிகளின் பாரம்பரிய உரிமைகளைப் பறித்தும், காலங்காலமாக அவர்கள் வாழ்ந்துவந்த காட்டுப் பகுதிகளிலிருந்து அந்நியப்படுத்தவும் செய்தது. சட்டங்கள் இருந்தாலும் கள்ளவேட்டையும் அது தொடர்பான சந்தையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

A. புலி (Bengal Tiger) Photo: A J T Johnsingh/ Wikimedia Commons, B. ஆசிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் (Indian Rhinoceros), Photo: A J T Johnsingh/ Wikimedia Commons, C. நன்னீர் முதலை (Mugger crocodile) Photo: P. Jeganathan/Wikimedia Commons D. சின்ன புல்வெளி பன்றி (Pygmy Hog). Photo: A J T Johnsingh/ Wikimedia Commons.

இந்த 75 ஆண்டுகளில் காட்டுயிர் பாதுகாப்பில் நாம் சாதித்தவை என ஓரிரு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். ஆசிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் (Indian Rhinoceros), புலி (Bengal Tiger), நன்னீர் முதலை (Mugger crocodile), சின்ன புல்வெளி பன்றி (Pygmy Hog) போன்ற உயிரினங்களை அழிவிலிருந்து மீட்டு ஓரளவிற்கு நல்ல நிலையில் உள்ளன. பாறு கழுகுகள் (Vultures) அவற்றின் எண்ணிக்கையில் 90% மடிந்துபோயின. அடைப்பினப் பெருக்க முறையில் (Captive Breeding) அவற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டிருகிறது (எனினும் அவை இன்னும் அழிவின் விளிம்பில்தான் உள்ளன). பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எனில் அங்கே மனிதர்களே (அதாவது பூர்வ குடிகளே) இருக்கக் கூடாது எனும் மனநிலை வனத்துறையிலும், இயற்கை ஆர்வலர்களிடமும் நிலவிய காலம் போய், பல்லுயிர் பாதுகாப்புக்கு உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் பங்கும் இன்றியமையாதது எனும் புரிதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2006இல் பூர்வ குடிகளின் பாரம்பரிய உரிமைகளை மீட்கும் வகையில் காட்டுரிமைச் சட்டம் (Forest Right Act 2006) இயற்றப்பட்டது. இந்தியாவில் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்களின் (Protected Areas) பரப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்புக்கு காட்டுயிர் ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டும், பொதுமக்களின் உதவியுடனும் (மக்கள் அறிவியல் திட்டங்கள்) செயல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. காட்டுயிர் ஆராய்ச்சி, பல்லுயிர் பாதுகாப்புக்காகப் போராடும், பல அரசு சாராத, குடிமைச் சமூக அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன.

காட்டுயிர் சார்ந்த படிப்புகளும், ஆராய்ச்சிகளும் வெகுவாக அதிகரித்துள்ளது. நசிகபாட்ராகஸ் எனும் ஒருவகை மண்ணுள்ளித் தவளை (Nasikabatrachus spp.), அருணாச்சல் குரங்கு (Arunachal macaque), மருதம்நெய்தல் விசிறித்தொண்டை ஓணான் (Sitana marudhamneydhal), காணி மரநண்டு (Kani maranjandu) என பலவிதமான அறிவியலுக்குப் புதிதான உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அழிந்துபோனதாக நம்பப்பட்டு வந்த காட்டு சிறு ஆந்தை (Forest Owlet), கலுவிகோடி (Jerdon’s Courser) போன்ற பறவைகள், சின்ன பறக்கும் அணில் (Travancore flying squirrel) போன்ற பாலூட்டிகள் மீண்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளன (rediscovered).

A. மண்ணுள்ளித் தவளை (Nasikabatrachus spp.), Photo: Nihal Jabin/Wikimedia Commons. B. மருதம்நெய்தல் விசிறித்தொண்டை ஓணான் (Sitana marudhamneydhal) Photo: Hopeland/Wikimedia Commons. C. காணி மரநண்டு (Kani maranjandu). Photo: Biju Kumar/Wikimedia Commons D.அருணாச்சல் குரங்கு (Arunachal macaque). Photo: Nandini Velho/Wikimedia Commons

காட்டுயிர்களின், அவற்றின் வாழிடங்களின் தற்போதைய நிலை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் நிலையிலும் இல்லை. பருவநிலை அவசரநிலை காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலேயே தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல், அணை கட்டுதல், மணல் கொள்ளை, அயல் தாவரங்களை இயற்கை வாழிடங்களில் நட்டு வைத்தல் போன்ற செயல்களால் நாளுக்கு நாள் இயற்கை வாழிடங்களின் பரப்பளவு குறைந்து, பாதிப்புக்கு உள்ளாகிவருகிறது. பசுமை ஆற்றல் என்று சொன்னாலும் காற்றாலைகள், சூரிய மின்பலகைகள், உயர் அழுத்த மின் தொடர்கம்பிகள், மின் கோபுரங்கள் போன்றவை நிலப்பகுதி எங்கும் பரப்பி விடுவதால் வாழிட மாறுபாடும், இழப்பும் ஏற்படுகிறது. பாறு கழுகுகள் (Vultures), கானமயில் (Great Indian Bustard) போன்ற பல வகையான காட்டுயிர்களும் கொல்லப்படுகின்றன.

அழிவின் விளிம்பில். கானமயில்கள். படம்: T. R. Shankar Raman/Wikimedia Commons

அருகிவரும் வாழிடங்களாலும், காட்டுப் பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமித்ததாலும் இந்தியாவின் பல இடங்களில் மனித – காட்டுயிர் எதிர்கொள்ளல்களும், உரசல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இயற்கையோடும், காட்டுயிர்களோடும் இயைந்து வாழ்ந்துவந்தவர்கள் நாம். ஊரின், வீட்டின் அருகில்கூட பெரிய காட்டுயிர்கள் வந்தாலும் அவற்றின் இருப்பை சகித்துக்கொண்டும் இயல்பாகவும் காலங்காலமாக வாழ்ந்து வந்தவர்கள் நாம். ஆனால், அண்மைய காலங்களில் காட்டுயிர்கள் மீதான சகிப்பின்மை பல இடங்களில் அதிகரித்துவருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவு பல காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் கொஞ்சம்கொஞ்சமாகப் பாதித்துவருகிறது. இவற்றுக்கான ஆராய்ச்சிகள் இந்தியாவில் மேலும் அதிகரிக்க வேண்டும். திருட்டு வேட்டை, காட்டுயிர் கள்ளச் சந்தை, செல்லப் பிராணிகள் சந்தை, காடழிப்பு முதலிய காரணங்களால் விலங்குவழித் தொற்றுநோய்கள் (Zoonotic diseases) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீர் மாசு, வளர்ச்சித் திட்டங்கள் காரணமாகக் கடற்பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் அழிந்தும், வளங்குன்ற வைக்கும் மீன்பிடிப்பு முறைகளால், மீன் வகைகளும், அவற்றோடு சேர்த்து பிடிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் அருகிவருகின்றன. வளர்ச்சியைக் காரணம் காட்டி சுற்றுச்சூழல், காட்டுரிமை சார்ந்த சட்டங்கள் நீர்த்துப்போகவும், தளர்த்தப்படுவதும் அண்மைய காலங்களில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதனால் எஞ்சியிருக்கும் வாழிடங்களும் அதிலுள்ள உயிரினங்களும், காட்டைச் சார்ந்திருக்கும் மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு இப்போது ஓரளவிற்குப் புரிதல் ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும். செல்போன் கோபுர கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் அழிந்துவருகின்றன, மரம் நடுவதால் ஆறுகளை மீட்டெடுக்கலாம், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொண்டு விடலாம் என பொதுமக்களிடையே தவறான புரிதல்களும், அவற்றைப் பரப்பும் அமைப்புகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

வருங்காலங்களில் வளர்ச்சியையும், பெருளாதாரத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், வாழிடங்களைப் பாதுகாத்து, அவற்றைச் சீரழிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும். சீரழிந்த சூழலமைப்புகளை அறிவியல் பூர்வமான முறையில் மீளமைத்து (ecological restoration), சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், அது சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். கொள்கை வகுப்போருக்கும், அரசியல்வாதிகளுக்கும், புறவுலகின் மதிப்பினைப் புரியவைப்பது அவசியம். இன்னும் 25 ஆண்டுகள் கழித்து பாறு கழுகுகளையும், கானமயிலையும், சிங்கத்தையும், அவற்றின் வாழிடங்களையும் வருங்கால இளைய சமுதாயம் பார்த்து மகிழும் வாய்ப்பை நாம் அளிக்க வேண்டுமெனில், இன்னும் பன்மடங்கு கரிசனத்தை நாம் ஒவ்வொருவரும் இயற்கைமீது காட்ட வேண்டும்.


26 August 2022 அன்று தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். நாளிதழில் வெளியான வடிவத்தின் உரலி இங்கே.

2 Responses

Subscribe to comments with RSS.

 1. Very informative article. Thanks a lot for sharing.

  Raveendran Natarajan

  August 26, 2022 at 5:34 pm

 2. வன உயிரிகளைக் காப்பாற்ற வேண்டியதும், போற்றவேண்டியதும் நம் கடமையாகும்.
  அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை
  நன்றி

  கரந்தை ஜெயக்குமார்

  August 27, 2022 at 8:12 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: