UYIRI

Nature writing in Tamil

தென்னிந்திய இயற்கை சார்ந்த ஆங்கில வழி காபிடேபிள் நூல்கள்

leave a comment »

தென்னிந்திய இயற்கை சார்ந்த ஆங்கில வழி நூல்கள் –  ஓர் அறிமுகம் – தொடர்ச்சி

விளக்கப் படங்கள் (Illustrations), ஓவியங்கள் (paintings), நிழற்படங்கள் நிறைந்தும், குறைவான உரைநடையைக் கொண்டும் இருக்கும் பெரிய அளவில் உள்ள நூல்களை காபி டேபிள் (coffee table) நூல்கள் என்பர். இந்த வகை நூல்கள் பொதுவாக விலை அதிகமாக இருக்கும். இந்தியாவின் பழமையான காட்டுயிர் ஆராய்ச்சி அமைப்பான பாம்பே நேசுரல் ஹிஸ்டிரி  சொசைட்டி (Bombay Natural History Society – BNHS) இது போன்ற பல நூல்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் தென்னிந்தியாவைப் பற்றி மட்டுமே கொண்ட நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், இங்குத் தென்படும் உயிரினங்களையும், வாழிடங்களையும் அந்த நூல்களில் காணலாம். தென்னிந்தியாவைப் பற்றி மட்டுமே உள்ள காபிடேபிள் நூல்களும் குறைவே. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். குறைவான பிரதிகளே அச்சடிப்பதால் இந்த நூல்களில் சில இப்போது  கிடைப்பதில்லை. 

ம. கிருஷ்ணன் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல. ஒரு சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும்கூட. அவரது கறுப்பு-வெள்ளை படங்கள் யாவும் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக அவர் எடுத்த யானைப் படங்கள் யாவும் மிகவும் அருமையானவை. எண்வய (டிஜிடல்) காமிராக்கள் இல்லாத காலம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புகைப்படம் எடுப்பது மட்டுமல்ல பிலிம் சுருள்களை இருட்டு அறையில் கழுவி உருத்துலக்குதலையும், புகைப்படத்தாளில் படமாக அச்சேற்றுவதையும்  அவரே செய்வார். அவர் எடுத்த படங்களையும், கட்டுரைகளையும் கொண்ட M Krishnan – Eye in the jungle – Photographs and writings எனும் நூலை ஆஷிஷ் & சாந்தி சந்தோலா, T.N.A. பெருமாள் ஆகியோர்  தொகுத்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பற்றிய ஒரு அருமையான நூல் Sahyadris : India’s Western Ghats – A Vanishing Heritage. காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் சந்தேஷ் கடூரின் படங்களையும், காட்டுயிர் விஞ்ஞானி கமல் பாவாவின் உரையையும் கொண்டது இந்த நூல். கர்நாடாவில் உள்ள தாரோஜி கரடிகளுக்கான சரணாலயம் குறித்த நூல்  Daroji: An Ecological Destination. இதை எழுதியது, கரடிகள் குறித்து ஆராய்ச்சி செய்த சமத் கொத்தூர், வனத்துறை அதிகாரி விஜய் மோகன்ராஜ், ஒளிப்படக் கலைஞர்  கணேஷ் H. சங்கர்.

பெங்களூரில் உள்ள காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனமான ATREE பல ஆண்டுகளாகக் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியைச் செய்துவருகின்றனர். இந்த நிலப்பகுதி, பண்பாடு, வரலாறு, வாழ்வியல் குறிப்புகளுடன், கண்கவரும்  படங்களுடன் கூடிய ஒரு அருமையான படைப்பு Trails of Tamiraparani. V விஷ்ணு, I.A.S. (திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியாளர்), M சுபத்ரா தேவி (மூத்த காட்டுயிரியலாளர்), M மதிவாணன் (திட்ட ஒருங்கிணைப்பாளர்), வினோத் M குமார் (ஆராய்ச்சியாளர்), P மரிய அந்தோணி (ஆராய்ச்சியாளர்) ஆகியோர் இந்த நூலை உருவாக்கப் பெரும் பங்களித்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சில அழகிய தாவரங்கள், அவற்றின் பாகங்கள், அத்தாவரங்களோடு இணைந்து வாழும் காட்டுயிர்கள் ஆகியவற்றின் மிக அருமையான ஓவியங்களைக் கொண்ட நூல் Hidden kingdom: Fantastical plants of the Western Ghats. ஓவியங்களைத் தீட்டியது நிருபா ராவ். தாவர பாகங்களின் விவரங்களை நுணுக்கமாக அவரது ஓவியங்களில் கொண்டுவந்திருப்பார். நூலின் உரை சுனிதி ராவ், தாவரவியலாளர் சித்தார்த் மச்சாடோ, ஒளிப்படக் கலைஞர் பிரசஞ்சித் யாதவ் ஆகியோர் நூலில் உள்ள தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிக்குப் பங்களித்ததுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: