UYIRI

Nature writing in Tamil

Archive for the ‘Books’ Category

இயற்கையைக் கூர்ந்துநோக்குதல்

with 3 comments

“பார்ப்பதற்கும், கூர்ந்துநோக்குவதற்கும் என்ன வேறுபாடு?” சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரியில் இயற்கை குறித்த பயிலரங்கில் இந்தக் கேள்வியை மாணவர்களிடையே கேட்டபோது, அனைவரும் அமைதியாகவும், தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டும்,  ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டும் இருந்தனர். தொடக்கத்திலேயே இந்தக் கேள்வியைக் கேட்டதால் ஒருவேளை கூச்சத்தால் யாரும் விளக்கமளிக்க முன்வரவில்லை போலும். அவர்களது விரிவுரையாளர்களும் அங்கே அமர்ந்திருந்ததால் சற்றுத் தயங்கியிருக்கக் கூடும். ஆகவே, எளிமையாகப் புரியவைக்க, “ ‘மெர்சல்’  படத்தில் விமானநிலையக் காட்சியில் நடிகர் விஜய் என்ன உடை அணிந்திருப்பார்?” என்று கேட்டேன். வகுப்பறையின் பல இடங்களில் இருந்து பதில்கள் வந்தபடி இருந்தன.  “வேட்டி சட்டை” என்றார் ஒருவர்.  “பச்சை கலர் சட்டை, வெள்ளை வேட்டி” என்றார் மற்றொருவர். இன்னொருவர்,  “சட்டைக்கு உள்ளே அவர் வெள்ளை நிற முண்டா பனியன்  போட்டிருப்பார்” என்றார். அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் பார்ப்பதற்கும், கூர்ந்துநோக்குவதற்கும் உள்ள வேறுபாடு.

அடுத்ததாக அந்த மாணவர்களிடம் நான் கேட்டது, “நடிகர் அஜித்குமார் நடித்த பத்து படங்களின் பட்டியல்”. எதிர்பார்த்தது போலவே பலரும் அவர்களுக்குத் தெரிந்த பெயர்களைச் சொல்லிக்கொண்டே போனார்கள். எனது அடுத்த கேள்வி, “உங்கள் கல்லூரி வளாகத்தில் தென்படும் பத்து மரங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.” மூன்று அல்லது நான்கு மரங்களுக்கு மேல் அதுவும் ஓரிருவரைத் தவிர யாரும் பதில் சொல்லவில்லை.  

நமக்குப் பிடித்தவற்றைத்தான் நாம் சரியாகக் கவனித்து உள்வாங்குகிறோம். அப்படிக் கூர்ந்து கவனிப்பதாலேயே அவை நம் மனதிலும் பதிந்துவிடுகிறது. அந்த மாணவர்களின் குறையைச் சுட்டிக்காட்டுவதற்காகவோ, அவர்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதற்காகவோ அந்தக் கேள்விகள் கேட்கப்படவில்லை.  இயற்கையைக் கூர்ந்துநோக்குதல் ஒரு நல்ல பண்பு. அதைப் புரியவைக்க கையாளப்பட்ட ஓர் உத்திதான் அது. 

புறவுலகின்பால் நாட்டம் ஏற்பட்டால்தான் அவற்றைக் கூர்ந்துநோக்க முற்படுவோம், அதன் தொடர்ச்சியாக அவற்றைப் பாதுகாக்கவும் போராடுவோம். அந்த நாட்டத்தைப் பல விதங்களில் ஏற்படுத்த முடியும். நேரடிக் கள அனுபவம் ஒரு சிறந்த வழி. அதற்கு அடுத்ததாக கள அனுபவங்களின் பகிர்வுகளை அதைப் பெற்றவர்களின் வாயால் சொல்லக் கேட்பது. ஆயினும், நாம் பெற்ற அனுபவங்களைப் பலரிடமும் கொண்டுசேர்க்க சிறந்த வழிகளில் ஒன்று அவற்றைக் கட்டுரைகளாகப் பதிவுசெய்தல். மேலும் அது  அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தாய்மொழியில் இருப்பது இன்னும் நல்லது. இந்த நூலின் நோக்கமும் அதுதான்.

குமரன் சதாசிவம் அவர்கள் தமிழ் வாசகர்கள் பலர் அறிந்திராத ஓர் இயற்கையியலாளர். புகழ்பெற்ற Marine Mammals of India (இந்திய கடல்வழ் பாலூட்டிகள்) என்ற நூலின் ஆசிரியர். ஆங்கில இதழ்களில் வெளியான அவரது இயற்கை சார்ந்த கட்டுரைகளுக்குத் தமிழ் வடிவம் தந்திருப்பது ஆதி வள்ளியப்பன் அவர்கள்.

இயற்கை ஒவ்வொரு நாளும் நமக்குப் புதிது புதிதாக அறிவையும், அனுபவங்களையும் பெற்றுத் தரும். இயற்கையின் விந்தைகளைக் கண்டு ரசிக்க  வெகுதூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டின் மொட்டைமாடி, கொல்லைப்புறம் என எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் இயற்கையின் அங்கமான பறவைகளையும், பூச்சிகளையும் பார்த்து ரசிக்க முடியும். ஏன், நம் வீட்டுக்குள்ளேயே, நம்முடனேயே வாழும் பல்லி, சிலந்தி, பலவகையான பூச்சிகள் யாவையும் கூர்ந்துநோக்கினால் நம்மை வியப்பில் ஆழ்த்தும், சிந்தனையைத் தூண்டும் பல காட்சிகளை நாம் காணலாம். எனினும், நாம் அனைவரும் எல்லா அனுபவங்களையும் பெறுவது என்பது இயலாதது. ஆனால், இந்த நூலின் ஆசிரியர் தாம் அனுபவித்த ஒன்றை விவரிப்பதை ஊன்றிப் படிக்கும் போது நாமும் கிட்டத்தட்ட அந்த அனுபவத்தை மனதளவில் பெறுகிறோம்.

கானுலாவின் போது காட்டுப்பன்றியை நேருக்குநேர் சந்தித்தது, அழகர்கோயில் மலைப் பகுதியில் கண்ட பறவைகள், பூச்சிகள் குறித்த கள அனுபவம் சார்ந்த கட்டுரைகள், இமைகள் இல்லாத உயிரினங்கள் யாவை, அவை எப்படித் தூங்கும்? காயம்பட்ட காட்டுயிர்களின் நிலை போன்ற இயற்கையின் விந்தைகளையும், புதிர்களையும் விவரிக்கும் கட்டுரைகளையும், சிறுத்தை-மனிதர்கள் எதிர்கொள்ளல், இயற்கை பாதுகாப்பு குறித்துப் பேசும் கட்டுரைகளையும் உள்ளடக்கியது இந்த நூல்.

புள்ளிவிவரங்களையும், போதனைகளையும் மட்டுமே கொண்ட படைப்புகளால் இயற்கையின்பால் நாட்டத்தைக் ஏற்படுத்துவது கடினம். இயற்கையின் விந்தைகளை எளிமையாக, வியக்கத்தக்க வகையில் விவரிக்கும்போது அது படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். நாமும் இயற்கையைக் கூர்ந்துநோக்க வேண்டும், அத்தகைய அனுபவங்களைப் பெற வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கும். இந்த நூல் அதற்கு நிச்சயமாக வழிவகை செய்யும்.

இயற்கையியலாளர் குமரன் சதாசிவத்தின் ஆங்கிலக் கட்டுரைகளை எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவை “இயற்கையைத் தேடும் கண்கள்” ‘காட்டின் குரல் கேட்கிறதா?’ என இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளது. அவற்றில் ஒன்றான ‘காட்டின் குரல் கேட்கிறதா? ‘எனும் நூலுக்கு எழுதிய மதிப்புரை.

ஆதி வள்ளியப்பனின் அனைத்து நூல்களையும் அவரது வலைத்தளத்தில் காணலாம் https://adhivalliappan.in/valliappan/

Written by P Jeganathan

June 11, 2022 at 6:39 pm

Posted in Books

Tagged with , ,

கருகப்போகும் காடுகள் – Fire of Sumatra நூல் அறிமுகம்

with one comment

காட்டுயிர் பாதுகாப்பு அதில் உள்ள சிக்கல்கள், இயற்கை வரலாறு குறித்து பலரும் பல கட்டுரைகள் வழியாகப் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி. எனினும் கற்பனைக் கதைகள், புதினங்கள் வழியாக (non-fiction) இந்தத் தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதென்பதும் ஒரு சிறந்த வழியே. அதுவும் அந்தக் கதை உயிரோட்டமாகவும், விறுவிறுப்பாகவும், படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் இருக்கும்போது சொல்லவரும் கருத்துகள் எளிதில் மனதில் பதியும். புள்ளிவிவரங்களையும், அறிவியல் முறைகளையும், கோட்பாடுகளையும், விளக்கங்களையும், மட்டுமே கொண்ட கட்டுரைகளைவிட இதையெல்லாம் கொண்ட கதை படிப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர் குறித்துப் பேசும், குழந்தைகளுக்கான படைப்புகள் இந்த வகையில் அதிகமாக இருக்கும். ஆனால், முழுநீள நாவல்கள் குறைவே. மேலை நாடுகளில் இது போன்ற படைப்புகளைக் காணலாம். ஆனால், இந்தியாவில் அதுவும் ஆங்கிலத்தில் இவ்வகையான படைப்புகள் அரிதே. அண்மையில் (2021) வெளியான C.R. ரமண கைலாஷ் எழுதிய “Fire of Sumatra” புலிகள், அவற்றின் வாழ்க்கை முறை, மனிதர்களால் அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஓர் ஆங்கில நாவல்.

இந்த நாவலின் பெயரில் உள்ளது போல் இந்த நாவலின் காட்சிக்களம் சுமத்ரா தீவாக இருந்தாலும், புலிகள், அவற்றின் வாழிடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலக அளவில் பொதுவானதே. கதைக்களமும், கதாபாத்திரங்களும் கற்பனையாக இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகளும், நிகழ்வுகளும் அறிவியல் துல்லியம் கொண்டவை. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு புலியின் குடும்பமும், அவற்றைக் காப்பாற்ற முயலும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆர்வலர்கள் சிலருமே. புலிக் குடும்பத்தில் ஐந்து பேர் – அம்மா, அப்பா, மூன்று குட்டிகள். புலிகளில் பெரும்பாலும் பெண் புலிகளே குட்டியைப் பேணுகின்றன. அரிதாகவே ஆண் புலி குட்டிகளைப் பராமரிக்கின்றன, இந்தக் கதையில் வருவதுபோல.
அம்மா புலியான சத்ரா குட்டிகளுக்காக இரை தேட அவற்றை விட்டுச் செல்லும்போது காட்டுத்தீயில் சிக்கி மயங்கிவிடுகிறாள். கண்விழித்துப் பார்க்கும்போது, சில காட்டுயிர் ஆர்வலர்களால் காப்பாற்றப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறாள். அங்கு ஏற்கனவே பொறியில் சிக்கி காலை இழந்த வாலி எனும் மற்றொரு புலியைச் சந்திக்கிறாள். அவர்கள் தங்களது நிலைமைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கின்றனர். சத்ரா, தனது குட்டிகளைப் பிரிந்து வாடுகிறாள். அவள் மீண்டும் காட்டுக்குள் சென்றாளா? குட்டிகளோடு சேர்ந்தாளா? என்பதைத்தான் மிக அழகாகவும், சுவாரசியமாகவும் சொல்கிறது இந்த நாவல்.

அதே வேளையில் புலிகளில் வாழ்க்கை முறையையும், அவற்றைக் குறித்த பல இயற்கை வரலாற்றுக் குறிப்புகளும், அவற்றுக்கு மனிதர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் புலிகளே சொல்வதுபோல அமைத்திருப்பது நிச்சயம் வாசகர்களைக் கவரும். சொல்லப்படும் சில கருத்துகள் நம்மை ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கும். எடுத்துக்காட்டாக, புலிக்குட்டிகளில் ஒன்று தன் தந்தையிடம், “மனிதர்கள் புத்திசாலிகளா?” எனக் கேட்கிறாள் (பக்கம் 86). அதற்குத் தந்தைப் புலி சொல்லும் பதில், “நம்மை திறமையாகக் கொல்வதாலும், நமது வாழிடத்தையும் அழிப்பதாலும் அவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்வதா? அல்லது இவற்றையெல்லாம் செய்வதால் அவர்களுக்குப் பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை அறியாமல் இருப்பதால், அவர்களை மனப்பக்குவம் இல்லாத மூடர்கள் என்று சொல்வதா எனத் தெரியவில்லை”.

கதைக்களம் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவில் நடைபெறுகிறது. ஆகவே அங்குள்ள சில காட்டுயிர்கள் குறித்தும், வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பேராபத்துகள் குறித்தும் நாம் இந்த நாவலின் வழியே அறிய முடிகிறது. குறிப்பாக, பாமாயில் (எண்ணெய்ப்பனை) சாகுபடிக்காகக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து. பாமாயில் தோட்டமிடுவதற்காக, மழைக்காடுகளை வெட்டிச் சாய்த்து அந்த இடத்தை தீ வைத்துக் கொளுத்தும் கொடுமை நடக்கிறது (இது கதையில் மட்டுமல்ல இன்றும் நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான்). அந்தக் காடுகளில் தென்படும் ஒரு அரிய வகை வாலில்லாக் குரங்கினம் ‘ஒராங்ஊத்தன்’ (Orangutan). மரவாழ் உயிரினங்களான இவை காடழிப்புக் காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த நாவலின் ஒரு பகுதியில் (பக்கம் 161) தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்லும் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அந்த இடத்தில், தப்பிச் செல்ல முடியாமல் கருகிப்போன ஒரு ஒராங்ஊத்தனின் சடலத்தைக் காண்கிறார். அது தனது இரு கைகளாலும் எதையே கட்டிப்பிடித்துக்கொண்டே எரிந்துபோயிருக்கிறது. கொஞ்சம் கவனித்துப்பார்க்கும்போது அதன் கரங்களுக்குள் இருப்பது கருகிப்போன குட்டி ஒராங்ஊத்தன் என்பதை அறிகிறார். இதைப் படிக்கும்போதே இந்தக் கொடூரமான காட்சி நம் கண்முன்னே வந்து நெஞ்சை உருக வைக்கிறது. அதே வேளையில் இதுபோன்ற நிலை இந்தியக் காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் நிகழப்போகிறது என்பதை நினைக்கும்போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.

சமையல் எண்ணெய்களில் மலிவான பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 13 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் பயிரிடுவதற்கான ஒப்புதலைச் சென்ற ஆண்டு (ஆகஸ்டு 2021) இந்திய அரசு அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள இயற்கை ஆர்வலர்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதனால், சுமார் 100க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இதில் மலேசியாவும், இந்தோனேசியாவும் செய்த பெரும் தவறை இந்தியாவும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பாமாயில் சாகுபடிக்காக அந்த நாடுகளில் இருந்த பல்லுயிர்ப்பன்மை வாய்ந்த மழைக்காடுகளைத் திருத்தி அழித்துவிட்டனர், அதுபோல இங்கும் நடக்கவிடக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய சமையல் எண்ணெய் உற்பத்தித் திட்டத்தில் பாமாயிலின் (National Mission on Edible Oils – Oil Palm – NMEO-OP) உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்போவதாகவும், இதைப் பயிரிடுவதற்கான மானியங்களும், உதவித்தொகைகளும் அளிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், முதலான வடகிழக்கு மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உலக அளவில் பல்லுயிர்ப்பன்மை மிகுந்த இடங்கள். இங்குள்ள இயற்கையான வாழிடங்களை எந்த வகையிலும் சீர்குலைப்பது அங்குள்ள காட்டுயிர்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எளிமையான ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் நடையில் உள்ளது இந்த நாவல். எனினும் நடுவில் சற்றே விறுவிறுப்பு குறைந்து தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வு எழுகிறது. நாவலாசிரியர் ரமண கைலாஷ் அவர்கள் எட்டு வயதாக இருந்தபோது பாதி கருகிய நிலையில் இருந்த ஒராங்ஊத்தனின் படத்தைக் கண்டிருக்கிறார் (அந்தப் படங்களை இங்கே காணலாம்). அதன் பாதிப்பில் விளைந்ததுதான் இந்த நாவலும், அதில் அவர் விவரித்திருக்கும் கருகிய ஒராங்ஊத்தன் காட்சியும். அவரது பதினான்கு வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் கதைக்கரு, அதில் விளக்கப்பட்டுள்ள காட்டுயிர்களின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை இந்தச் சிறு வயதில் உள்வாங்கி இப்படிப்பட்ட நாவலை எழுதிய அவரை வியந்து பாராட்டலாம். எனினும், எனது எண்ண ஓட்டங்கள் சற்றே வேறுபட்டிருந்தது. இவரைப் போன்ற இளைய தலைமுறை இயற்கை ஆர்வலர்களை நாம் எந்த அளவுக்கு எதிர்மறையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியிருக்கிறோம் என்கிற கவலைதான் மேலோங்கியிருந்தது.

—-

தி இந்து தமிழ் 07 May 2022 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.

Written by P Jeganathan

May 7, 2022 at 3:02 pm

Posted in Books, Mammals, Rainforest

Tagged with , ,

தமிழில் சூழலியல் படைப்புகளின் நிலை

leave a comment »

சூழலியலைப் புரியவைக்க மொழி மேம்பட வேண்டும்! எனும் தலைப்பில் தி இந்து தினசரியில் (19 Feb, 2022) வெளியான எனது நேர்காணலின் முழு வடிவம்.

பேட்டி கண்டவர்: ஆதி வள்ளியப்பன். தி இந்து வலைதளத்தில் படிக்க இங்கே காண்க:

தமிழில் சூழலியல்-பசுமை எழுத்து வளர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? கடந்த 10 ஆண்டுகளில் சூழலியல் எழுத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்.

ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. எனினும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இன்னும் தரமான பல உயிரினங்கள் குறித்த களக் கையேடுகள் வரவேண்டும். களப்பணி முறைகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் தமிழில் எழுத முன் வரவேண்டும். சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ போல இன்னும் பல புதினங்களும், இயற்கை சார்ந்த புனைவு இலக்கியங்களும் நிறைய வரவேண்டும். செல்வமணி, அவை நாயகம், ஆசை இவர்களது படைப்புகளைத் தவிர இயற்கை சார்ந்த கவிதைகள் பெரிதாக வந்ததாகத் தெரியவில்லை. (பெருமாள்முருகனின் பறவை, இயற்கை கீர்த்தனைகள் நீங்கலாக). Green Humor போன்ற காட்டூன்களும் தமிழில் வரவேண்டும். இயற்கை சார்ந்த சிறார் இலக்கியங்கள் பல தமிழில் வரவேண்டும்.

மூன்று நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்தி பார்க்கவோ, படிக்கவோ முடியாத தற்போது உள்ள சில இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் இயற்கை பாதுகாப்பு சார்ந்த செய்திகளை பல வகைகளில், பல தளங்களில் (காணொளி, infographics) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சூழலியல் பிரச்சினைகள் அறிவியல்பூர்வமாக முன்வைக்கவும், விவாதிக்கவும் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? குறிப்பாக தொலைக்காட்சி, சமூகஊடக விவாதங்களில் ஆரோக்கியமான போக்கு தென்படுகிறதா?

தொலைக்காட்சி பார்ப்பதில்லை, ஒரு சில வாட்ஸ்அப் குழுக்களைத் தவிர வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அந்தக் குழுக்களிலும் கூட விவாதிப்பதோ, தேவையில்லாமல் எதிர்வினையாற்றுவதோ இல்லை. ஆகவே நிம்மதியாக இருக்கிறேன்.

எனினும், சமகால பிரச்சனைகளை பொதுமக்களுக்கு புரியும்படி எளிய வகையில் உடனுக்குடன் சொல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தேவையாக இருக்கிறது. ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து நிறைய பேசினோம். ஆனால், ஊரடங்கு விளக்கிக் கொள்ளப்பட்டவுடன், நாமும் ‘இயல்பு நிலைக்குத்’ திரும்பிவிட்டோம். அண்மையில் இந்தியாவில் காடுகள் அதிகரித்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியானது. உள்ளே படித்துப் பார்த்தால், தேயிலைத் தோட்டங்களையும், தென்னந்தோப்புகளையும் காடுகள் என ‘கணக்கு’ காண்பித்திருக்கிறார்கள். இது குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் (1972) திருத்தம் குறித்து தமிழில் செய்திகள் கூட வந்ததாகத் தெரியவில்லை.

காலநிலை மாற்றம் பற்றி தமிழகத்தில் குறைந்தபட்சமாகவாவது விழிப்புணர்வு இருக்கிறதா, தமிழக சூழலியல் செயற்பாட்டாளர்களின் காலநிலை மாற்றம் குறித்த அணுகுமுறை எப்படியிருக்கிறது?

நிச்சயமாக காலநிலை மாற்றம் குறித்து பலரும் அறிந்தே இருக்கிறார்கள். குறிப்பாக நகரப்பகுதியில் உள்ளவர்கள் இதை உணர்ந்திருக்கிரார்கள். ஆனால் அவற்றின் விளைவுகளைப் பற்றி இன்னும் முழுமையாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா எனத் தெரியவில்லை. இது குறித்துதான் தமிழில் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள ஒரு மாற்றாக பசுமை ஆற்றல் முன்வைக்கப்பட்டாலும், அதிலும் பல சிக்கல்கள் இருப்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும். The Guardian தினசரியைப் போல. காலநிலை அவரசநிலை குறித்த புரிதலும், அக்கறையும் கொண்ட பல செய்தியாளர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தினசரிகளில் இதற்கென தனியாக ஒரு பக்கத்தையே ஒதுக்க வேண்டும்.

தமிழ்ச் சூழலியல் எழுத்து என்று வரும்போது, காட்டுயிர்கள், இயற்கை குறித்து போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா? இல்லை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய மேம்போக்கான ஆக்டிவிசம் ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?

மேம்போக்காக இருப்பதாகத் தோன்றவில்லை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அளவு குறைக்கப்பட இருந்த போது சென்னையைச் சேர்ந்த பல இளம் இயற்கை ஆர்வலர்கள் பங்கு கொண்டார்கள். கொடைக்கானல் மெர்குரி கழிவினால் ஏற்படும் மாசு, எண்ணூர் கழிமுக மாசு குறித்து கலை வடிவிலும் (ராப், கர்நாடக இசைப் பாடல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் வெகுண்டெழுந்ததைப் பார்த்தோம். கவுத்தி, வேடியப்பன் மலைப்பகுதிகள் பொதுமக்களின் உதவியாலேயே காப்பாற்றப் பட்டன. இப்பொது அப்பகுதியில் சிப்காட் வருவதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இவை அனைத்தும் முறையாக ஒரே இடத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இயற்கையை அழித்தால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை சரியாக புரிய வைத்தால் அனைவரும் அதற்காகப் போராடுவார்கள். அந்தப் புரிதலை ஏற்படுத்துவது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், அதுசார்ந்து படைப்புகளை உருவாக்கும் ஒவ்வொருவரின் கடமை.

சமீபத்திய ஆண்டுகளில் நீங்கள் வாசித்தவற்றில் குறிப்பிடத்தக்க தமிழ் சூழலியல் புத்தகங்களைக் குறிப்பிட முடியுமா?

நூல்களை விட கட்டுரைகள் வாசித்தது தான் அதிகம். நாராயணி சுப்ரமணியன், சுபகுணம், மா, ராமேஸ்வரன், தங்க ஜெயராமன் ஆகியோரது சூழலியல், இயற்கையியல் சார்ந்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. பரிதியின் ‘பட்டினிப் புரட்சி, நக்கீரனின் ‘நீர்எழுத்து, ஜா. செழியனின் ‘பறவைகளுக்கு ஊரடங்கு, சு. பாரதிதாசனின் ‘பாறு கழுகுகளைத் தேடி’, வறீதையா கான்ஸ்தந்தின் ‘கடலம்மா பேசுறங் கண்ணு’ போன்ற நூல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழ்ச் சூழலியல் படைப்புகளில் மொழிநடை, எடிட்டிங் போன்றவை மேம்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா?

இன்னும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து கூடு வைக்கின்றன, கூகை ஒரு வெளிநாட்டுப் பறவை, யானைகள் அட்டகாசம் செய்கின்றன, சிறுத்தைகள் ஊருக்குள் ஊடுருவின என்றே எழுதிக் கொண்டிருக்கிறோம். செஞ்சந்தனம் அல்லது சந்தன வேங்கை என்கிற மரபான பெயர்கள் எப்படியோ உருமாறி செம்மரம் ஆகி விட்டது. வைரசை தமிழில் நச்சுயிரி என்று காலங்காலமாக படித்துவந்திருக்கிறோம். ஆனால் இப்போது அது தீநுண்மியாக திடீர் மாற்றம் அடைந்துவிட்டது. இது குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவோ, கவனம் செலுத்துவதாகவோ தெரியவில்லை.

இயற்கை பாதுகாப்பு குறித்த சொல்லாடலில் மொழி ஒரு முக்கியப் பண்பு வகிக்கிறது. வார்த்தைகளை சரியாகக் கையாளுதல் (மனித-விலங்கு மோதல் அல்ல – மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல்), சரியான பதங்களை, பாரம்பரியப் பெயர்களை உபயோகித்தல், வழக்கொழிந்த பெயர்களை மீட்டெடுத்தல், சரியான துறைச்சொற்களை உருவாக்குதல் யாவும் அவசியம்.

——–

Written by P Jeganathan

February 20, 2022 at 4:14 pm

பெயர் பாடும் பறவைகள்

leave a comment »

பறவைகளுக்கு எப்படி பெயர் வைக்கிறாங்க தெரியுமா? பறவைகளோட நிறம், உருவம், அவை சாப்பிடும் இரை இதையெல்லாம் வைத்து பெயர் குடுப்பாங்க. சில பறவைகளுக்கு அதோட குரலையும் பாடுற விதத்தையும் வைத்தும் பெயர் குடுப்பாங்க. வாங்க அந்த மாதிரி தன்னோட பெயரையே சொல்லிப் பாடுகிற சில பறவைகளை சந்திக்கலாம்.

பெயர் பாடும் பறவைகள் கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Pratam Booksன் StoryWeaver எனும் குழந்தைகள் நூல்களை பதிப்பிக்கும் இணைய தளத்தில் வெளியான ஒரு மின் நூல். இது 2016ல் The Hindu In Schoolல் எழுதிய Birds that call their names எனும் சிறு கட்டுரையின் நூல் வடிவம். இந்த நூலின் ஆங்கில பதிப்பினை இங்கே காணலாம்.

Written by P Jeganathan

March 3, 2021 at 8:00 pm

சிற்றுயிர்களையும் கொண்டாடுவோம்

with one comment

சிற்றுயிர்கள் அழகானவை!

பூச்சி எனும் ஒரு சொல் பலரிடம் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலும் முகச் சுழிப்பும், அருவருப்பும், பயமும் தான் இருக்கும். வெகு சிலரிடம் மட்டுமே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். ஒரு பூச்சியைக் கண்டவுடன் உடனடியாக நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வது அவற்றை அடித்துக் கொல்ல முயற்சிப்பதும், அதில் பெரும்பாலும் வெற்றி பெறுவதுமே ஆகும். வெகு சிலரே பூச்சிகளைக் கண்டதும் அவற்றை படமெடுக்க கேமிராவை எடுப்பார்கள்.

ஆறு கால்களையும், கூட்டுக் கண்களையும், தலைப் பகுதி, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி என உடல் மூன்று பகுதிகளாகவும், உணர்நீட்சிகளையும் கொண்டவை பூச்சிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூச்சிகளின் பன்மையம் நம்மை வியக்க வைக்கும். இது வரை சுமார் 1.5 மில்லியன் வகையான பூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பூச்சியின் (தட்டானும் பூச்சி வகையே) உடல் பாகங்கள். Artwork: Wikimedia Commons

கண்ணுக்கே தெரியாத சுமார் 15௦ மைக்ரோ மீட்டர் நீளமே உள்ள குளவியில் இருந்து சுமார் 1 அடி நீளமுள்ள குச்சிப் பூச்சி வரை உருவில் சிறியதும் பெரியதுமாக இருப்பவை பூச்சிகள். தரையில் ஊர்ந்தும் (எறும்புகள்), நீரில் நீந்தியும் (தட்டான்களின் தோற்றுவளரிகள்), வானில் பறந்தும் (வண்ணத்துப்பூச்சிகள்), மண்ணுக்குள்ளும் (சில் வண்டின் இளம் பருவம்) வாழக்கூடியவை பூச்சிகள். இவற்றில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களைக் கொண்டவையும் உண்டு, கண்ணுக்கு எளிதில் புலப்பாடாத உருமறைத்தோற்றம் கொண்டவையும் உண்டு. பகலாடிகளும் உண்டு, இரவாடிப் பூச்சிகளும் உண்டு. சில பூச்சிகள் இன்னும் வியக்கத்தக்க வகையில் தமது இனத்தை ஒத்த உயிரினங்களின் நிறத்தையும் ஒப்புப்போலி தோற்றத்தையும் கொண்டிருக்கும். பசலைச் சிறகன் வண்ணத்துப்பூச்சியின் பெண் பூச்சி வெந்தய வரியனை நிறத்திலும் உருவிலும் ஒத்திருப்பது போல. இலைப்பூச்சி பசுமையான இலையைப் போலவே தோற்றமளிக்கும். நமக்கும் முன்னே சுமார் 4௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை. பூக்கும் தாவரங்களுடன் ஒருமித்துப் பரிணமித்தவை பூச்சிகள்.

பூச்சிகளைப் பற்றிய சரியான புரிதல் இன்னும் நம்மிடையே இல்லை. அறிவியல் ஆராய்ச்சிகளாக இருக்கட்டும், அவற்றைப் பற்றிய இயற்கை வரலாற்று செய்திகளாக இருக்கட்டும், ஏன் ஓரிடத்தில் எத்தனை வகையான பூச்சி வகைகள் உள்ளன என்பது குறித்த அடிப்படை தரவுகள் கூட நம்மிடையே சரியாக இல்லை. அறிவியல் பூர்வமான புரிதல் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும். பூச்சிகளைப் பற்றிய சில அடிப்படை தகவல்கள் கூட பலருக்குத் தெரிவதில்லை. எட்டுக்கால் பூச்சியும், சிலந்தியும், பூரானும், தேளும், மரவட்டையும் பூச்சி வகையைச் சார்ந்தவை அல்ல என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

என் பெயர் எட்டுக்கால் பூச்சி தான் ஆனால் நான் பூச்சி வகை அல்ல!

 

இவையெல்லாம் நம்மைச்சுற்றி இருக்கும் காட்டுயிர்கள். ஆம் காட்டுயிர் என்றால் காடுகளில் மட்டுமே வசிக்கும் உயிரினம் என்று அர்த்தமாகாது. நாம் வசிக்கும் வீடுகூட பல்லிக்கும், சிலந்திக்கும் உகந்த வாழிடமாகிறது. இயற்கையான சூழலில், வளர்ப்பு உயிரினங்கள் அல்லாத எல்லா உயிரினங்களுமே காட்டுயிர்கள் தான். பறவைகள், பாலுட்டிகள், ஊர்வனங்கள், இருவாழ்விகள் யாவும்,  எப்போதுமே அவற்றின் அழகாலும், கண்கவரும் வண்ணங்களாலும், விசித்திரமான குணாதிசயங்களாலும், உருவில் பெரியதாக இருப்பதாலும் நம்மை எளிதில் கவர்ந்துவிடும். இது போன்ற பேருயிர்கள் இயல்பாகவே நம் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன.

புலி, யானை, பாடும் பறவைகள், கழுகு வகைகள், பாம்புகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற வசீகரமான உயிரினங்களுக்கு கிடைக்கும் கவனம் பல சிற்றுயிர்களுக்குக் கிடைப்பதில்லை. எனினும் மேற்சொன்ன உயிரினங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத எண்ணிலடங்கா பல சிறிய உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. ஏனைய உயிரினகளைப் போல் அவையும் இந்த இயற்கைச் சூழலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மகரந்தச்சேர்க்கை முதல் மட்கச்செய்வது வரை பல வகையில் இந்த பூமியின் செயல்பாட்டிற்கு பேருதவி புரிகின்றன. இது போன்ற அதிகம் கண்டுகொள்ளப்படாத சிற்றுயிர்களைப் பற்றிய ஒரு அருமையான நூல் இது. இயற்கையை அவதானிக்க நாம் வெகுதொலைவு செல்லவேண்டியதில்லை. நாம் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிப் முதலில் பார்க்கத் தொடங்கினாலே போதும். அதைத்தான் இந்த நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன் செய்திருக்கிறார். அவரது வீட்டினருகே அதுவும் நகரப்பகுதியில் தென்பட்ட பூச்சிகளையும் ஏனைய சிற்றுயிர்களையும் பதிவு செய்து அவற்றை இந்த நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

இது போன்ற சிற்றுயிர்களை கவனத்துடன் அவதானித்து அவற்றை படமும் பிடித்துள்ளார். விலையுயர்ந்த காமிராவோ, மேக்ரோ லென்சாலோ அல்ல. படங்கள் அனைத்தும் கைபெசி காமிரா! இந்த உயிரினங்களை அடையாளம் காண்பதென்பது சற்றே சவாலான வேலைதான். இதற்காக India biodiversity Portal – https://indiabiodiversity.org/, iNaturalist – https://www.inaturalist.org/ போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் இணைந்து அங்குள்ளவர்களின் உதவியுடன் பல உயிரினங்களை அடையாளம் கண்டுள்ளார். நாம் எடுக்கும் காட்டுயிரினங்களின் படங்களை நாமே வைத்துக்கொண்டிருப்பதால் பெரிய பயன் ஏதும் இருக்கப்போவதில்லை. இது போல், மக்கள் அறிவியல் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் பல உயிரினங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அல்லாமல், அறிவியல் ஆராய்ச்சிக்கும் உதவும்.

நாம் கால்களில் மிதிபடக்கூடிய, விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்குள் வந்து வெளியேற முடியாமல் தவிகின்ற, நம் கண்களுக்கு அருவருக்கத்தக்கதாகத் தெரிகின்ற, நம்மை பயப்பட வைக்கின்ற, நாம் வெறுத்து ஒதுக்குகின்ற எண்ணிலடங்கா சிறிய உயிரினங்களை எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் சற்று நேரம் உற்று நோக்கினால் நம் முன் ஒரு புதிய உலகம் தெரிய ஆரம்பிக்கும். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.


ஆதி வள்ளியப்பன் எழுதிய “எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – பெருநகரில் ஒரு தனி உலகம்எனும்  நூலிற்கான  முகவுரை

Written by P Jeganathan

March 2, 2020 at 9:00 am

அரை நாளில் ஐயாயிரம்

with 2 comments

சென்ற ஆண்டு நடந்து முடிந்த கோவை புத்தகத் திருவிழாவிற்கு கடைசி நாளன்று (20-29 ஜுலை 2018) சென்றிருந்தேன். போகவோ கூடாது என நினைத்திருந்போதிலும், வேறு ஒரு வேலையாக கோவைக்கு நண்பர் செலவகணேசுடன் சென்றிருந்த போது அவரும், “வாங்க சார் சும்மா உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார். அது எப்படி பார்த்துவிட்டு சும்மா வரமுடியும்? உள்ளே சென்றால் இருக்கும் காசெல்லாம் புத்தகமாகிவிடும் என்பதால் தானே புத்தகத் திருவிழாவுக்கே போகாமல் இருப்பது. வாங்கி சேர்த்த புத்தகங்களை வைக்கவே வீட்டில் இடமில்லை. பல புத்தகங்கள் பாதி படித்தும், படிக்காமலும் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் முழுவதும் படித்து முடித்து விட்டு வாங்கலாம் என நினைத்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கு செல்வதே இல்லை. எனினும் அவ்வப்போது இணையம் வழியாக ஓரிரு புத்தகங்களை வாங்குவதும் உண்டு. ஆனால் அப்படி வாங்குவதற்கும் புத்தகத் திருவிழாவிற்குப் போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டல்லவா. ஒரு வழியாக எனக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கொடிசியா வளாகத்தில் நுழைந்தேன். பர்சில் உள்ள பணத்திற்கு மட்டும் புத்தகம் வாங்கலாம், கையில் பை எடுத்துச் செல்லக் கூடாது, அங்கு ஒருவேளை பிளாஸ்டிக் பையில் புத்தகத்தைக் கொடுத்தால் அந்தக் கடையில் வாங்கக்கூடாது, ஒரு மணி நேரத்திற்கும் மேல் உள்ளே இருக்கக் கூடாது இவையே அந்தக் கட்டுப்பாடுகள்.

ஆனால் நடந்ததோ தலைகிழ். முதலாவது கடையிலேயே இருந்த பாதி பணமும் தீர்ந்து விட்டது (சுமார் ஐநூறு ரூபாய்கள்), இரண்டாவது கடையில் புத்தகங்களை வாங்கிய பின் பணம் போதாமல் வங்கி அட்டையை நீட்டியபோது அந்த வசதி பெரிய ஸ்டால்களில் மட்டும்தான் உள்ளது என்றனர். அவர்களே வெளியே மொபைல் ஏடிஎம் இருக்கிறது அங்கே பணம் எடுத்துக் கொள்ளலாம் என யோசனை சொன்னார்கள். வாங்கிய புத்தகங்களை அப்படியே வைத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்து தேவைக்கு அதிகமாகவே பணத்தை எடுத்துக் கொண்டு உள்ளே மீண்டும் நுழைந்தோம். வாயிலில் “இனி ஒரு விதி செய்வோம்” என பாரதியின் முகத்துடன் அச்சடிக்கப்பட்ட துணிப்பையை விற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் ஆளுக்கு இரண்டை வாங்கி மாட்டிக்கொண்டு தெம்புடன் உள்ளே நுழைந்தோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியின் அளவெல்லாம் கிடையாது என்றாலும், நிறைய கடைகள் இருந்தன. புத்தகங்கள் மட்டும் இல்லாமல், எழுதுபொருட்கள், மின்னூல், குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்கள் கொண்ட கடைகளும் இருந்தன. பாதி விலைக்கும், இரண்டு எடுத்தால் ஒன்று இலவசம் எனும் வகையில் பழைய புத்தகங்களும் சில கடைகளில் கிடைத்தன. வரிசையாக இருந்த பதிப்பக, புத்தகக் கடைகள் மட்டுமல்லாமல், ஓரங்களில் ஒரே ஒரு மேசையை மட்டும் போட்டு சிறிய, புதிய பதிப்பகத்தார்களும் அவர்களது புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்கான நூல்களும், பதிப்பகங்களும் 2-3 இருந்தது மகிழ்ச்சி அளித்தது. இயற்கை சார்ந்த நூல்களும், பதிப்பகங்களும் இருந்தன. Coimbatore Nature Society யின் Birds of Coimbatore நூலை அவர்களது கடையில் பார்க்க முடிந்தது, பூவுலகின் நண்பர்கள், தும்பி போன்ற பதிப்பகங்களும் இருந்தன. சென்றுவந்த கடைகளில் நான் கவனித்த வரை பிளாஸ்டிக் பையை தரவில்லை.

நான் வாங்குவது பெரும்பாலும் இயற்கை சார்ந்த நூல்களையே, ஆகவே எல்லா கடைகளிலும் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும் ஒரு சிலவற்றைத் தவிர இருந்த எல்லாக் கடைக்குள்ளும் சென்று பார்த்துவிட்டுத்தான் வந்தேன். கடைசிநாள், அதுவும் ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேலையாக இருந்தாலும் கூட்டம் அப்படி ஒன்றும் இல்லை. ஆனால், நேரம் ஆக ஆக கூட்டம் சற்றே பெருகி வந்ததைக் காண முடிந்தது.

அங்கிருந்த பாதி கடைகளை தாண்டியவுடன் கையில் இருந்த இரண்டு பைகளும் கணத்தது. கூடியவரை புத்தகங்களை திணித்தாகிவிட்டது. இதற்கு மேல் வைத்தல் பை கிழிந்துவிடும் எனும் நிலையில் வேறு வழியில்லாமல் வெளியே வந்து புத்தகங்களை வண்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு மீண்டும் ஒரே ஒரு பையுடன் உள்ளே நுழைந்தோம். அந்தப் பையும் பாதி நிறைந்தவுடன் கடைகளும் முடிந்துவிட்டது. பின்னர்தான் பசித்தது. அங்கேயே பல உணவுக் கடைகள் இருந்தன. இரண்டு சப்பாத்தியை வாங்கி அமர்ந்து கொண்டே எதிரே மேடையில் ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தோம். சற்று தூரமாக இருந்ததால் சரியாக காதில் விழவில்லை, ஆனால் நாஞ்சில் நாடன் மேடையில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அவரது நவம் எனும் புத்தகத்தை வாங்கியிருந்தோம். கூட்டம் முடிந்தவுடன் அவரிடம் சென்று அதில் ஆட்டோகிராப் வாங்கலாம் என நினைத்தோம். ஆனால் அவர் கிழிறங்கி வந்தபோது அவரைச்சுற்றி சிறு கூட்டம் திரண்டிருந்தது. அருகில் செல்ல கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது, எனவே வெளியே வந்து விட்டோம்.

நுழைவாயிலில் விசித்திரமாக உடையணிந்த இருவர் நின்றிருந்தார்கள். ஒருவரின் உடையில் பல செடிகள் இருந்தன, இன்னொருவர் உடையில் பிளாஸ்டிக் பைகள் தொங்கிகொண்டிருந்தது. பின்னால் இருந்து பார்த்தபோதே பார்த்தவுடன் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்தது. அவர்களின் அருகில் சென்று பேச்சு கொடுத்தோம். செடி உடைகாரர் பசுமை செல்வா, பிளாஸ்டிக் உடைக்காரர் இராமசாமி. இருவரும் திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் பணிபுரிகின்றனர். இது போன்ற கூட்டம் கூடும் இடங்களில் மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாள் முழுவதும் இந்த உடைகளையும், கையில் பதாகைகளையும் ஏந்தி நிற்கின்றனர். அவர்களது சேவையை பாராட்டிவிட்டு ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்தவுடன் கணக்குப் பார்த்ததில் சுமார் ஐயாயிரம் ருபாய் காலியாது தெரிந்தது. அரை நாளில் ஐயாயிரம் கொஞ்சம் அதிகம் தான் எனத் தோன்றியது, நல்ல வேளை கடைசி நாள் அன்று சென்றேன். சிறியதும் பெரியதுமாக 44 புத்தகங்கள் மூன்று பைகளில் இருந்தன. ஞாபகார்த்தத்திற்காக எல்லா புத்தகத்திலும் எனது பெயரையும், வாங்கிய தேதி, இடம் முதலிய விவரங்களை பொறித்த பிறகு சில நூல்களை வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். இந்த முறை எப்படியாவது வாங்கிய எல்லா புத்தகத்தையும் படித்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டு சிறிதாக இருந்த புத்தங்களை எல்லாம் முடிந்த வரை ஒரே இரவில் படித்தும் முடித்தேன். சுமார் 10 புத்தகங்கள் குறிப்பெடுக்கப் பயன்படுபவை எனவே அவற்றை வேண்டும் போது படித்துக்கொள்ளலாம் என தூர வைத்துவிட்டேன். மிச்சமிருப்பது சுமார் 15 புத்தகங்கள். இவை அனைத்தையும் படித்த பின் தான் அடுத்த புத்தகத் திருவிழாவிற்குப் போகவேண்டும் என மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

கோவையை அடுத்து ஈரோட்டிலும், இந்த ஆண்டு சென்னையிலும் புத்தகத் திருவிழாக்கள் நடந்து முடிந்து விட்டன. எப்படியோ அதையெல்லாம் கடந்தாகிவிட்டது. அண்மையில் திருப்பூரில் அதுவும் நான் வசிக்கும் வீட்டினருகிலேயே புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக அறிந்தேன் (2019 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 13 வரை). எப்படியாவது இந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. அப்படியே தப்பித்தவறி அந்தப் பக்கம் செல்ல நேரிட்டாலும் பர்சை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுப் போய்விட வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததென்னவோ அதற்கு நேர் எதிர். நண்பர் நல்லசிவன் ஒரு நாள் மாலை அழைத்து கிளம்பி இருங்கள் நான் வந்து புத்தகத் திருவிழாவிற்கு வண்டியில் அழைத்துச் செல்கிறேன் என்றார். எனது நிலைப்பாட்டை சொன்னேன், எதுவும் வாங்க வேண்டாம் அரை மணி நேரத்தில் திரும்பி வந்துவிடலாம் எனச்சொல்லி, நான் பேசி முடிக்கும் முன்னரே அலைபேசியை வைத்து விட்டார். பிறகு என்ன நடந்தது என்பதை ஊகிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐயாயிரம் இல்லை, அரைநாள் இல்லை, என்றாலும் ஓரிரு மணி நேரத்திலேயே கணிசமான ஒரு தொகை புத்தகமாக மாறியது.

இப்போது இன்னும் ஒரு முடிவை எடுத்துள்ளேன், புத்தகத் திருவிழாவுக்கும் போகக்கூடாது, அங்கே சும்மா போய் விட்டு வரலாம் எனும் அழைக்கும் நண்பர்களையும் நம்பக்கூடாது.

Written by P Jeganathan

April 23, 2019 at 9:00 am

Posted in Books

Tagged with

மரங்கள்-நினைவிலும் புனைவிலும்:வணக்கத்துக்குரிய நூல்!

leave a comment »

பல்லாண்டு காலமாக வைத்து வளர்த்த, நம்மோடு சேர்ந்து வளர்ந்த, தினமும் பார்த்து வந்த மரங்கள் திடீரென ஒருநாள் இல்லாமல் போனால் நமக்கு எப்படி இருக்கும்? சாலையோரம் நின்று கொண்டிருந்த மரங்கள் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டு வீழ்ந்து கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலும், புயல் வீசி எத்தனையோ மரங்கள் கண் முன்னே வீழ்ந்து கிடந்ததைக் கண்ட வேளையிலும் நம் மனதில் ஏற்படும் துயரத்தின் வலியை அவ்வளவு எளிதில் வார்த்தைகளால் விவரித்து விட முடியுமா? இல்லாமல் போன அந்த மரத்தால் ஏற்படும் வெற்றிடம் நம் மனதிலும் குடிகொள்ளும் அல்லவா? மரத்துடன் உணர்வு பூர்வமாக தொடர்பே இல்லாத மனிதர்கள் இருக்க முடியுமா? ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் தொடர்புகொண்ட ஒரு மரம் இருக்கத்தான் செய்கிறது. அது அவர்களின் நினைவுகளின் வாசலில் எப்போதும் வராமல் போனாலும் ஏதோ ஒரு மூலையில் அது அசையாமல் நின்று கொண்டிருக்கும். இது போன்ற நினைவுகள்தான் “மரங்கள்- நினைவிலும் புனைவிலும்”, எனும் நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

Marangal Ninaivilum punaivilum
மரங்களை ஒருபுறம் நாம் நேசித்தாலும், அவற்றின் மகத்துவங்களை அறிந்திருந்தாலும் சில நேரங்களில் அவற்றை இடையூறாகத்தான் பார்க்கிறோம், நாமே வெட்டிச்சாய்க்கிறோம், அல்லது வெட்டத் துணை போகிறோம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ. சில நேரங்களில் மரங்களை நம்மில் ஒருவராகவே பாவிக்கிறோம், அவற்றுடன் பேசுகிறோம், தொந்தரவாகவே இருந்தாலும் சகித்துக் கொள்கிறோம், வெட்ட வந்தால் வெகுண்டெழுந்து போராடி வெட்டப்படாமல் பாதுகாக்கிறோம், தோல்வியும் அடைகிறோம். இப்படி மனிதனுக்கும் மரத்திற்கும் இருக்கும் உணர்வு பூர்வமான பிணைப்புகளை இந்த நூலின் கட்டுரைகளின் பல வரிகளில் காணலாம். படிக்கும் போது அது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருப்பதை உணர முடியும். இலையில்லா மரமாய், பசுந்தளிர்களை ஏந்தி, கொத்துக் கொத்தாய்ப் பூ பூத்து, கனிகள் நிறைந்த மரமாய் அதை ஒவ்வொரு நிலையிலும் காணும் போதும் நமக்குள் தோன்றும் வெவ்வேறு உணர்வுகளைப் போலவே இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும் போதும் வித வித மான உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்.

இந்த நூலில் மொத்தம் 29 கட்டுரைகளை மதுமிதா தொகுத்தளித்துள்ளார் அவரது மனோரஞ்சிதத்தையும் சேர்த்து. சா. கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணதாசன், பாவண்ணன், நாஞ்சில் நாடன், அ. முத்துலிங்கம், தோப்பில் முஹம்மது மீரான் என இன்னும் பல மூத்த எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் உள்ளடக்கியது இத்தொகுப்பு. நூலின் இறுதியில் கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளனர். எனினும் இந்த தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் எங்கே, எப்போது வெளி வந்தவை எனும் தகவலைத் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்நூலில் எனக்குப் பிடித்த கட்டுரைகள் பல. அவற்றில் மிகவும் பிடித்தவை நாஞ்சில் நாடனின் ‘சிறு மீன் சினையினும் நுண்ணிது’, ச. விசயலட்சுமியின் ‘மெளனத் தவமிருக்கும் உயிர்முடிச்சு’, வண்ணதாசனின் ‘ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்‘, சா. கந்தசாமியின் “தெங்கு முதல் மயில் கொன்றை வரை”, கல்யாண்குமாரின் ‘மரங்களின் மகாத்மா’, தமிழ்நதியின் ‘வேம்பின் குயில்களும் மேப்பிள் மரங்களும்’.

அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. உங்கள் ஊரில் உள்ள சாலையோரமாக உள்ள மரங்களில் பெருக்கல் குறி போடப்பட்டிருந்தால் உங்களுக்கு அந்த மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அங்குள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் இந்த நூலை கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஒன்று அல்ல 3, 4 படிகளை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் பல உயர் அதிகாரிகளிடம் இந்நூலை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை இந்த நூலைப் படித்தபின் அவர்கள் மனம் மாறி மரங்களை வெட்டாமலும் போகலாம்.

ஔவையார் இப்போது இருந்தால் இப்படியும் பாடியிருப்பார்

“சாலையோர மரமும், அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும், வீழும் அன்றே”

ஒரு இயற்கையியல் ஆராய்ச்சியாளனாக இந்த நூலைப் படிக்கும் போது ஒரு சில கட்டுரைகளில் சொல்லப்பட்ட அறிவியல் துல்லியமற்ற கருத்துக்களை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

மூன்று கட்டுரைகளில் குல்மோகர் மரம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள் (சா. கந்தசாமியின் கட்டுரையைத் தவிர). இதன் தமிழ் பெயர் மயில் கொன்றை என்கிறது கே. எம். மேத்யூவின் The Flora of the Palni Hills. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மயிற்கொன்றை எனவும், விக்கிபிடியா இதை செம்மயிற்கொன்றை அல்லது மயிற்கொன்றை எனவும் அழைக்கிறது. அறிவியலாளர்களால் Delonix regia என்றழைக்கப்படும் இதன் பூர்விகம் மடகாஸ்கர் தீவு.

மயில் கொன்னை என்பது வேறு அது Caesalpinia pulcherrima எனும் சிறு மரம் இது மேற்கிந்தியத்தீவுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதன் மலரும் குல்மோகர் மலரை கிட்டத்தட்ட ஒத்து இருப்பதாலும், இவை அயல் தாவரங்களாதலாலுமே இந்தப் பெயர்க் குழப்பம்.

Left: மயில் கொன்னை Caesalpinia pulcherrima. Photo: Wikimedia commons
Right: மயில் கொன்றை Delonix regia Photo: Wikimedia Commons

சா. கந்தசாமியின் கட்டுரையில் மருதமரம் எனக் குறிப்பிட்டிருப்பது Terminalia arjuna அதாவது வெள்ளை மருது, ஆனால் கு. வி. கிருஷ்ணமூர்த்தி “தமிழரும் தாவரமும்” நூலில் சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் மருத மரம் இதுவல்ல என்றும் செம்மருதம் என குறிப்பிடப்பட்டிருப்பதால் Lagerstroemia reginae தான் என்கிறார். தோப்பில் முஹம்மது மீரானின் ‘ஒரு மரமும் கொஞ்சம் பறவைகளும்’ கட்டுரையில் வெளிநாட்டுப் பறவைகள் மாமரத்தில் கூடு கட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வலசை வரும் பறவைகள் இங்கே கூடுகட்டுவதில்லை. சரி இதையெல்லாம் இவ்வளவு நுணுக்கமாக பார்க்க வேண்டுமா என்றால் என்னைப் பொறுத்தவரை ஆமாம் பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன்.

எனினும் ஒரு ஆராய்ச்சியாளனாக இந்த நூலில் இருந்து நான் கற்றுக் கொண்டது பல. தாவரவியல் படித்த ஒருவன் ஒரு மரத்தைப் பற்றி விவரிப்பதற்கும், மொழி வளமும் கற்பனைத்திறனும் கொண்ட படைப்பாளன் ஒருவன் விவரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். உதாரணமாக இந்நூலில் மரங்கள் குறித்து, எளிமையாகப் புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சில சொற்களை, வாக்கியங்களை தாவரவியல் நூல்களில் பார்க்க முடிவதில்லை.

இந்த நூலை படித்துக் கொண்டிருந்தபோது எனக்குள் இருக்கும் ஆராய்ச்சியாளனின் புத்தி சில கேள்விகளுக்கான விடைகளைத் தேடியது. இந்த நூலில் எத்தனை வகையான மரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன? எந்தக் கட்டுரையில் அதிகமான மரங்கள் இடம்பெற்றிருக்கின்றன? அந்த மரங்கள் யாவை? பல எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட மரம் எது? என் அப்பாவும் நானுமாகச் சேர்ந்து வேலைமெனக்கெட்டு இதையெல்லாம் பட்டியலிட்டோம். நூலைப் படித்துவிட்டு முடிந்தால் நீங்களே பட்டியலிட்டுப் பாருங்கள். பொறுமை இல்லையெனில் எழுதுங்கள் சொல்கிறேன்.

புறவுலகை போற்ற, பாதுகாக்க முதலில் அவற்றை பார்த்து ரசிக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் காப்பாற்றவும் செய்வோம். இயற்கையின் ஒரு அங்கமான மரங்களை போற்றிப் பாதுகாக்க மரத்தின் பயனை மட்டுமே சொல்லிப் புரிய வைப்பதைவிட மரங்களை மரங்களாகப் பார்க்கக் கற்றுத் தரவேண்டும். தாவரங்களையும் மரங்களையும் இனங்கான கையேடுகள் உதவும். ஆனால் மரங்களின் மேல் பரிவு காட்டவும், கரிசனம் கொள்ளவும் அதன் நீட்சியாக அவற்றைப் பாதுகாக்கவும் இது போன்ற உணர்வுபூர்வமான அனுபவப் பகிர்வுகளே பேருதவி புரியும்.

கி. ராஜநாராயணன் கரிசல் காட்டுக் கடுதாசியில் ஆல், அரசு போன்ற மரங்களை அடுப்பெரிக்க பயன்படுத்துவதில்லை ஏனெனில் அவை வணக்கத்துக்குரிய மரங்கள் என்று குறிப்பிடுவார் (இந்நூலில் உள்ள நாஞ்சில் நாடனின் கட்டுரையைப் படித்தால் ஏன் அவற்றை அடுப்பெரிக்க பயன்படுத்துவதில்லை என்பது விளங்கும்). அதுபோல மரங்கள் குறித்த இந்த நூலும் வணக்கத்துக்குரியது !

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 29th April 2017 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDFஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

May 1, 2017 at 2:16 am

தாவர நூல்கள்

with 5 comments

தாவரங்களைப் பற்றிய நான் படித்த, படிக்கப் போகும் சில நூல்களைப் பற்றிய எனது கருத்துக்களை சுருக்கமாகத் தந்துள்ளேன். தாவரங்களின் பால் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் எனும் நம்பிக்கையில். இதில் தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆதார நூல்கள் யாவும் அடக்கம்.

 

1.

தமிழரும் தாவரமும்

ஆசிரியர்: கு. வி. கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: பாரதிதாசன் பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி

kvk_700

நூலாசிரியர் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் (Plant Science) துறையின் தலைவராக இருந்தவர். பண்டைய காலந்தொட்டு இன்று வரை தமிழர்களின் வாழ்வில், பண்பாட்டில் கலந்திருக்கும் தாவரங்கள் பற்றி இந்நூலில் விரிவாக அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட தாவரங்கள், தலமரங்களும் அவை இருக்கும் தலங்கள் முதலிய தகவல்களையும் இந்நூலில் காணலாம். தமிழார்வமும், தாவர ஆர்வமும் உள்ள அனைவரிடனும் இருக்க வேண்டிய அவசியமான நூல்.

 

 

 

 

 

 

2.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்

ஆசிரியர்: இரா. பஞ்சவர்ணம்

வெளியீடு:தாவரத் தகவல் மையம், பண்ருட்டி

kabilarin kurinjipattu thavarangalநூலின் தலைப்பை வைத்தே இந்நூலின் உள்ளடக்கத்தை அறிய முடியும். “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் சூர்யா ஜோதிகாவிடம் 100 பூக்களின் பெயரை விடாமல் சொல்லிக் கொண்டே போவார், நினைவிருக்கிறதா? அவையனைத்தும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ள பூக்களின் பெயர்கள். இந்நூலில் அப்பூக்களை அடையாளம் கண்டு படங்களுடன் விளக்கப்ட்டுள்ளது.

கபிலரின் இப்பூக்கள் பற்றி இதற்கு முன் பலர் ஆராய்ந்துள்ளனர். அதில் ஒன்றை இந்த வலைப்பூவில் காணலாம். இந்நூலில் அடையாளம் காணப்பட்ட பூக்களையும் இது சம்பந்தமாக செய்யப்பட்ட மற்ற ஆய்வுகளின் தரவுகளையும் யாராவது ஒப்பீடு செய்தால் நன்றாக இருக்கும்.

நான் இந்த நூலை வாங்கியதோடு சரி, இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. எனினும் அவ்வப்போது புரட்டிப் பார்த்ததில் இந்நூலாசிரியர் தாவரங்களை வகைப்படுத்துதலிலும், பெயரிடுதலிலும் ஒரு புதுமையை புகுத்தியிருப்பது தெரிந்தது. அதாவது வகைப்பாட்டியலில் (Taxonomy) உயிரினங்களுக்கு அறிவியலாளர்கள் பெயரிடுவது போல இரு சொல் பெயரீட்டு முறையில் (binominal classification) ஒவ்வொரு தாவரத்திற்கும் தமிழில் பெயரிட்டுள்ளார். இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி.

இந்நூலைப்பற்றிமேலும்அறிந்துகொள்ள http://www.plantinfocentre.com இணையதளத்தைக்காணவும்.

 

3.

வனங்கள் ஓர் அறிவியல் விளக்கம் & தமிழ்நாட்டுத் தாவரங்கள்

ஆசிரியர்: ச. சண்முகசுந்தரம்

வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்

3_thamilnattu thavarangal & vanam_700

அண்மையில் வாங்கியவை. முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை. எனினும், முதல் பார்வையிலேயே சொல்லிவிடலாம், இரண்டு நூல்களுமே மிகவும் அருமையான படைப்புகள். ஆசிரியர் ஒரு ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. முதல் நூலை வேகமாகப் புரட்டியதில் இந்தியாவில் தென்படும் வனங்களின்வகைகளுக்கு அருமையான சில தமிழ் பதங்களை கொடுத்திருந்தார். தமிழ்நாட்டுத் தாவரங்கள் நூலில் பல வகையான தாவரங்களின் விளக்கங்கள் பாதி பக்கத்திற்கு தரப்பட்டிருந்தது. ஆங்காங்கே சில கோட்டோவியங்களையும் காண முடிந்தது.

 

 

4.

மரங்கள்: ஆசிய-பசிபிக் மரங்கள் பற்றிய குழந்தைகளுக்கான புத்தகம்

மொழிபெயர்ப்பாளர்: நிர்மலா பாலா

வெளியீடு: National Book Trust, India.

Marangal_asia pacific stories

குழந்தைகளுக்கான நூல் எனக்குறிப்பிட்டிருந்தாலும் இது அனைவருக்குமான நூல். யுனெஸ்கோவில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய- பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 18 நாடுகளிலிருந்து பெறப்பட்ட அந்நாடுகளின் மரங்கள், வனப்பகுதிகள் பற்றி சுவாரசியமாக கதை வடிவிலும், தகவல்களாகவும் தரப்பட்டுள்ளது. இந்நாடுகளில் தென்படும் மரங்கள், வனங்களின் சூழலியல் ஒழுங்கு, மரங்களின் பயன்கள், அழிக்கப்பட்டு வரும் வனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்நூலைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

 

 

 

 

5.

சங்க இலக்கியத் தாவரங்கள்

ஆசிரியர்: கு. சீநிவாசன்

வெளியீடு: தமிழ்ப் பல்கலைக் கழகம்

sanga ilakiya thavarangal

தலைப்பை வைத்தே நூலினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இப்படி ஒரு நூல் இருப்பது எனக்குத் தெரிய வந்தது நாஞ்சில் நாடனின் “பனுவல்போற்றுதும்” நூலின் வாயிலாகத் தான்.  அதை அறிந்ததிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் போதெல்லாம் அரண்மனைவளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழக பதிப்புத்துறைக்கு சென்று விசாரித்து வந்தேன். இந்நூல் out of stock. மறு பதிப்பு வர இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அண்மையில் தான் இந்நூலின் நகல் கிடைத்தது. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. இது என்னுடைய  prized  possession.

 

 

 

 

 

6.

சாயாவனம்

ஆசிரியர்: சா. கந்தசாமி

வெளியீடு: காலச்சுவடு

sayavanam

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இந்தநூல். ஆனால் இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்துவது நம்மை ஆச்சர்யப்படவைக்கும். வளர்ச்சிப் பணிக்காக வனத்தை அழிக்கும் இந்த நூலின் கதாநாயகனான சிதம்பரம் போன்றோர் இவ்வுலகில் இப்போது ஏராளமானோர் உள்ளனர். அவன் போன்றோர் மென்மேலும் உருவாகாமல் இருக்க இந்தநூலை அனைவரும் படித்து அடுத்தவர்களுக்கும் இந்நூலை படிக்குமாறு பரிந்துரைக்கவேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்நூலை பாடமாக வைப்பது அவசியம்.

 

 

 

 

 

 

 7.

மரங்கள்: நினைவிலும் புனைவிலும்

தொகுப்பாசிரியர்: மதுமிதா

வெளியீடு: சந்தியா பப்ளிகேஷன்

Marangal Ninaivilum punaivilum

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மரம் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு ஓரிரு மரங்கள் இருக்கலாம், சிலருக்கு பல மரங்கள் இருக்கலாம். அந்த சிலர் எழுத்தாளர்களாக இருந்தால் அவர்கள் தமது வாழ்வில் கண்டு வியந்த, தமது வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி எழுதாமல் இருக்கவே மாட்டார்கள். நாஞ்சில் நாடனின் ஆலமரமும், மதுமிதாவின் மனோரஞ்சிதமும் அதற்கு சில எடுத்துக்காட்டு. இவர்களைப் போல பல படைப்பாளிகளின் நினைவில் இருக்கும் மரங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

 

 

 

 

 

English Books

8.

The Tree: A Natural History of What Trees Are, How They Live, and Why They Matter

ஆசிரியர்: Colin Tudge

வெளியீடு: Broadway Books

trees colin tudge

மரங்கள் எப்போது இவ்வுலகில் தோன்றின, எப்படி பரிணமித்தன, பல்வேறு சூழலுக்கு தம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன, எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன, முதலிய பல இயற்கை வரலாறு செய்திகளையும், உலகில் தென்படும் பல வகையான மரங்களைப் பற்றிய பல அரிய, நம்மை வியப்பிலாழ்த்தும் தகவல்களை இந்நூலினைப் படித்து அறிந்து கொள்ள முடியும்.

 

 

 

 

 

 

9.

Trees of Delhi: A Field Guide

ஆசிரியர்: Pradip Krishen

வெளியீடு: DK Publishing (Dorling Kindersley)

trees of delhi_700

இவரது முதல் நூல். தாவரங்களுக்கான களக்கையேடுகளில் தலை சிறந்தது எனலாம். தில்லியில் அதன் சுற்றுப்புறத்தில் தென்படும் சுமார் 252 வகையான மரங்களின் தகவல்களைக் கொண்டது. பூ, காய், இலை, மரப்பட்டை, கிளை என ஒரு மரத்தினை அடையாளம் காண உதவும் அனைத்து பாகங்களின் அழகிய தெளிவான படங்களைக் கொண்டது இக்கையேடு. பல மரங்களைப் பற்றிய வியக்க வைக்கும் பல தகவல்களையும் தந்திருக்கிறார். ப்ரதீப் க்ரிஷென் ஒரு முன்னாள் ஆவணப்படத் தயாரிப்பாளர். இவர் எழுத்தாளர் அருந்ததி ராயின் முன்னாள் கணவர்.

 

 

 

 

10.

Jungle Trees of Central India

ஆசிரியர்: Pradip Krishen

வெளியீடு: Penguin Books India

jungle trees of central india

மத்திய இந்தியாவில் தென்படும் மரங்களுக்கான களக்கையேடு. இம்மரங்களில் பல இந்தியா முழுவதிலும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ள பல மரங்களைக் கண்டறியவும் இந்நூல் பயன்படும். மிக நேர்த்தியான வடிவமைப்பில், நான்கு ஆண்டுகள் உழைப்பில் விளைந்தது இந்நூல். ஒரு மரத்தினை அடையாளம் காணத் தேவையான பாகங்கள் அனைத்தையும் அழகிய, தெளிவான சுமார் 2000 படங்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

11.

The Book of Indian Trees

ஆசிரியர்: K. C. Sahni

வெளியீடு: Oxford University Press & Bombay Natural History Society

the book of indian trees

சுமார் 150 இந்திய மரங்களைப் பற்றிய தகவல்களை இந்நூலில் அறியலாம். மரங்களின் பாகங்கள் கோட்டோவியங்கள், புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கும். மரங்களின் வணிகப் பயன்கள், மரங்களைப் பற்றி அது தென்படும் இடங்களில் மக்களால் சொல்லப்படும் கதைகள், மரங்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்குமிடையேயான உறவு என பல சுவையான தகவல்களைக் கொண்டது இந்நூல்.

 

 

 

 

 

 

12.

Discover Avenue Trees – A Pocket Guide

ஆசிரியர்: S. Karthikeyan

வெளியீடு: http://www.ecoedu.in

 

karthikeyan avenue trees

இந்நூலின் ஆசிரியர் S.கார்த்திகேயென் ஒரு அருமையான, அனுபவம் மிக்க இயற்கையியலாளர். ஏற்காடு மலைப்பகுதியில் மூங்கணத்தான்கள் (Madras Tree Shrew) குறித்து ஆராய்ச்சி செய்தவர். பெங்களூரு மாநகரத்தில் தென்படும் மரங்களைப் பற்றிய சுவையான தகவல்களை கொண்ட இவரது வலைதளத்தில் வெளியான தொடரின் சுருக்கமான கையடக்க நூல் வடிவம் இது. அண்மையில் இவரை பெங்களூரில் சந்தித்த போது இந்நூலில் அவரது ஆட்டோகிராப்பை வாங்கிக்கொண்டேன். அழகான வடிவமைப்பு. மரங்களைப் பார்க்கச் செல்லும் போது உதவிக்காக இந்நூலை சட்டைப் பைக்குள் வைத்து கூட எடுத்துச் செல்லலாம்.

13.

Our Tree

ஆசிரியர்: Pranab & Smita Chakravarti

வெளியீடு: National Book Trust, India

our trees

குழந்தைகளுக்கான நூல். மரம் ஓரிடத்தில் சும்மா நின்று கொண்டிருக்கவில்லை, அது பல விதமான உயிரினங்களின் புகலிடமாகிறது என்பதை படங்கள் மூலம் விளக்கும் நூல்.

 

 

 

 

 

 

14.

Trees and Tree Tales – Some common Trees of Chennai

ஆசிரியர்: Prof. K.N. Rao

வெளியீடு: Oxygen Books

trees and tree tales

சென்னையில் தென்படும் பல வகையான மரங்களைப் பற்றியும் அவை சார்ந்த சுவையான சில தகவல்களையும் கொண்டது இந்நூல். ஆசிரியர் ஒரு ஓய்வு பெற்ற தாவரவியல் துறை பேராசிரியர். பனைமர வகைகள், நாம் வணங்கும் மரங்கள், அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள், அழகிய இலைகளைக் கொண்ட மரங்கள், நாம் அதிகம் அறியப்படாத மரங்கள், பழம் தரும் மரங்கள் என சென்னையில் உள்ள மரங்களை இவ்வாறாக வகைப்படுத்தி இந்த நூலில் விளக்கியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவ்வகை மரங்களை சென்னையில் எந்தெந்த பகுதியில் காணலாம் என்பதையும் தந்துள்ளார். எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் மொழி நடை. சென்னைவாசிகள் மட்டுமல்ல ஆர்வமுள்ள அனைவருக்குமான நூல் இது. ஆனால் தற்போது out of stock. ஆகவே ஒருவேளை எங்காவது இந்நூலைக் கண்டால் உடனே வாங்கிவிடுவது நல்லது.

 

 

15.

The Trees in My Forest

ஆசிரியர்: Bernd Heinrich

வெளியீடு: HarperCollins Publishers

 

the trees in my forest

இந்நூலின் ஆசிரியர் வெர்மொன்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு உயிரியல் பேராசிரியர். இயற்கை அறிவியல் நூல்கள் பல இயற்றியவர். இந்த நூலின் சிறப்பம்சம் வனத்தில் அவர் காணும் மரங்களை அவரே அழகான கோட்டோவியங்களாகவும், விளக்கப்படங்களாகவும் சித்தரித்திருப்பது. அவருக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த வனப்பகுதியில் உள்ள மரங்களைப் பற்றியும் அங்குள்ள கானுயிர்கள் பற்றியும் எளிய நடையில் விளக்குகிறார். ஓரின மரத்தோட்டங்களுக்காக (monoculture tree plantations) வனங்களை அழிப்பதையும், ஒரே வகையான அயல் மரத்தோட்டத்தை (exotic tree plantation) ஏற்படுத்த பல்லாயிரம் இயல் தாவரங்களை (native plants) அழிப்பதையும் முற்றிலும் எதிர்க்கிறார். அதை சூழல்சாவு (ecodeath) என சித்தரிக்கிறார். வனத்தை பராமரிப்பது அபத்தம் என்றும், வனம் என்பது தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் என்றும் விளக்குகிறார்.

இந்திய வனத்துறை அதிகாரிகள் பலர் படித்து அறிவு பெற வேண்டிய மிக முக்கியமான நூல் இது.

 

Reference books

16.

Forest Plants of the Nilgiris

தொகுப்பு & வெளியீடு: Keystone Foundation

 

forest plants of the nilgiris

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் தென்படும் தாவரங்கள் இரண்டு தொகுதிகளில் தரப்பட்டுள்ளது. இக்களக்கையேட்டில் இப்பகுதியில் காணக்கூடிய மரங்கள், கொடிகள், பெருங்கொடிகள் (lianas), புதர்கள், சிறு செடிகள், புற்கள் யாவும் விளக்கப்பட்டுள்ளது. நீலகிரிப் பகுதியில் வாழும் குரும்பர் இனத்தவரான திரு எல். பாலசுப்ரமணியம் இத்தாவரங்களின் விளக்கப்படங்களை (illustration) வரைந்திருப்பது இந்நூலின் சிறப்பு. தாவரங்களின் புகைப்படங்களும் தரப்பட்டுள்ளது. மற்றுமொரு சிறப்பு ஒவ்வொரு தாவரத்தின் ஆங்கிலப் பெயர், அறிவியல் பெயர் மட்டுமல்லாது குரும்பர், இருளர் மற்றும் பல பூர்வீகக் குடியினரின் பெயர்களையும் கொண்டுள்ளது இந்நூல்.

 

 

 

 

17.

The Flora of The Palni Hills Vol 1, 2 & 3

ஆசிரியர்: K. M. Matthew

வெளியீடு: The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli.

the flora of the palni hills_vol_123_700

பல ஆண்டுகள் களப்பணியில் விளைந்தது இந்த ஆதார நூல் (Reference book). K.M. மேத்யூ ஒரு தலைசிறந்த தாவரவியலாளர். இவரது நூல்கள் இந்தியத் தாவரவியலுக்கு மாபெரும் பங்களிப்பாகும். இவரது இந்த மூன்று பாகங்கள் கொண்ட ஆதார நூலில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான பழனி மலைத் தொடரில் தென்படும் தாவரங்களை பல ஆண்டுகள் களப்பணியில் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். முதல் தொகுதி அல்லி இணையாத தாவரங்களையும் (Polypetalae), இரண்டாம் தொகுதி அல்லி இணைந்த தாவரங்களையும் (Gamopetalae), ஒரு வட்டப்பூவிதழ் உடைய தாவரங்களையும் (Monochlamydae), மூன்றாவது தொகுதி ஒரு வித்திலைத் தாவரங்களையும் (Monocotyledones) உள்ளடக்கியது. இவர் சேகரித்த அனைத்துத் தாவரங்களும் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி (St. Joseph College), தாவரவியல் துறை, ரபினட் உலர் தாவரத்தொகுப்பில் (The Rapinat Herbarium) பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

இயல் விருது பெற்ற இயற்கையியல் எழுத்தாளரான தியோடோர் பாஸ்கரன் அவரது முதல் இயற்கையியல் கட்டுரைத் தொகுப்பிற்கு K.M. மேத்யூ சொன்ன வாக்கியத்தையே தலைப்பாக வைத்திருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அந்த நூலில் உள்ள “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக..” எனும் கட்டுரையை படிக்கவும்.

 

18.

Illustrations on the Flora of the Palni Hills

ஆசிரியர்: K. M. Matthew

வெளியீடு: The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli.

illustrations on the flora of the palni hills_1&2_700

மேலே குறிப்பிட்ட மூன்று தொகுதிகளில் பழனிமலைத்தொடரில் தென்படும் தாவரங்களை அடையாளம் காண உதவும் விளக்கக் குறிப்புகள் தரப்பட்டுள்ளது. இத்தாவரங்களின் விளக்கப்படங்கள் (illustrations) இந்த இரண்டு தொகுதிகளில் தரப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

19.

K.M. மேத்யூ எழுதிய மேலும் இரண்டு ஆதார நூல்கள்

An Excursion Flora of Central Tamil Nadu, India மற்றும் Materials for the Flora of the Tamil Nadu Carnatic. முதலாவது நூலை அவரது மாணவரான எஸ். ஜான் பிரிட்டோ தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

A Pocket Flora of the Sirumalai Hills, South India – K.M. மேத்யூவின் மற்றொரு மாணவரான J.M.பள்ளித்தனம் எழுதியது சிறுமலை பகுதியில் தென்படும் தாவரங்களைப் பற்றிய நூலாகும்.

k m matthew_works_700

 

சொல்வனம் இணைய இதழில் (இதழ் 103) 23-4-2014 அன்று வெளியான  நூல் அறிமுகத்தின் மறுபதிப்புஅதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=32809

Written by P Jeganathan

April 25, 2014 at 1:47 am

நூல் அறிமுகம்: My Husband and other animals

with one comment

பாம்புகளையும், முதலைகளையும் பிடித்துக்கொண்டு அலைபவரின் மனைவி அவரது வாழ்வில் நிச்சயமாக பல வித சுவாரசியமான அனுபவங்களைப் பெற்றிருக்கக் கூடும். அதுவும் தானே ஒரு கானுயிர் ஆர்வலராக இருந்தால் கேட்கவே வேண்டாம். தான் அவருடன் சேர்ந்து பார்த்த, பயணித்த, அனுபவங்களை மிக அழகாக சிறு கட்டுரைகளாக பதிவு செய்து அதையே ஒரு நூலில் பொதித்தால், அதுதான், “My Husband & other animals”. கணவர் – ரோமுலஸ் விட்டேகர். மெட்ராஸ் முதலைப் பண்ணையை (Madras Crocodile Bank Trust and Centre for Herpetology (MCBT) ) நிறுவியவர், ஒரு காலத்தில் பாம்புகளை அவற்றின் தோலுக்காகக் கொன்று கொண்டிருந்த, பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்களான இருளர்களுக்கு புணர்வாழ்வளித்து பாம்புகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தியவர், மிகச் சொற்ப எண்ணிக்கையில் இருந்த நன்னீர் முதலைகளை (Mugger crocodile) அழிவிலிருந்து மீட்ட பெருமைக்குறியவர், கங்கை, சம்பல் நதிகளில் தென்படும் கரியால் (Gharial) எனும் அரிய வகை ஆற்று முதலையினத்தையும் காப்பாற்ற பாடுபட்டு வருபவர், கருநாகத்தைப் (King Cobra) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர், உலகின் பல பகுதிகளுக்குச் சென்று ஊர்வன பற்றிய ஆவணப்படங்களை எடுத்தவர், அமெரிக்காவில் பிறந்து சிறு வயது முதலே இந்தியாவில் வளர்ந்தவர். இவரது மனைவி இந்நூலின் ஆசிரியர் ஜானகி லெனின்.

The Hindu நாளிதழில் வாராவாரம் (சனிக்கிழமை தோறும் Metroplusல்) வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஜானகி லெனின் அடிப்படையில் கானுயிர் ஆவணப் படம் எடுப்பவர். இவரது கட்டுரைகளின் சிறப்பம்சம் ரத்தினச் சுருக்கமான, சொல்லவந்ததைத் தெளிவாக, சுவாரசியமாக, கட்டுரையின் தேவைக்கேற்ப நகைச்சுவையாகவோ, உணர்ச்சிபூர்வமாகவோ, ஆதங்கத்துடனோ, கோபத்துடனோ, ஆராய்ந்து சொல்லப்பட்ட விதம். நாளிதழில் வெளிவரும் தொடர் வாசிப்போரை கவர்ந்திழுக்கும் வண்ணம் தலைப்பைப் பெற்றிருக்க வேண்டும். கட்டுரையின் நீளத்திற்கும், வார்த்தைகளுக்கும் உச்சவரம்பு இருக்கும். அதற்குள் சொல்ல வந்ததை தொய்வில்லாமல் வெளிப்படுத்த வேண்டும். இந்தப் பண்புகளையெல்லாம் கொண்டிருக்கிறது இவரது கட்டுரைகள். ஒரு சிலவற்றைத் தவிர.

My husband and other animals_book cover

கட்டுரைகள் பலதரப்பட்டவை. மெட்ராஸ் முதலைப் பண்ணையில் வாழ்ந்த வாழ்க்கை, அங்குள்ள உயிரினங்களிப் பற்றி, வெளிநாட்டுப் பயணங்களில் பார்த்த உயிரினங்கள் பற்றி, பாம்பு பிடிக்க இந்திய வனப்பகுதிகளில், வெளிநாடுகளில் ரோமுலஸுடன் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள், அவர்கள் வசிக்கும் புதர்காடு சூழ்ந்த பண்ணை வீட்டினருகில் பார்த்த சிறுத்தை, முள்ளம்பன்றி, பாம்புகள், பறவைகள் பற்றி, அவர்களோடு வசிக்கும் செல்லப்பிராணிகளைப் பற்றி, அவர்கள் வீட்டுக்குள் வசிக்கும் தேரை, தவளை, தேள், பாம்பு பற்றி, இந்தியாவின் பல்லுயிர்ப் பாதுகாப்பு, மனித-விலங்கு எதிர்கொள்ளல், தனது கணவரின் சிறு பிராயத்தில் பாம்பு பிடிப்பதில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், இருளர்களின் வாழ்வு, முதலைப் பண்ணை தொடங்கிய கதை, பாம்புக்கடி பற்றிய அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அறிவியல் ஆராய்ச்சியால் விளைந்த உண்மையான தரவுகள், முடநம்பிக்கைகள் என நூல் முழுவதும் பல சுவாரசியமான, அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய, ஆச்சர்யமளிக்கும், தகவல்களைக் கொண்டுள்ளன இவரது கட்டுரைகள்.

இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இது போன்ற சமீபத்திய பசுமை இலக்கியப் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ம. கிருஷ்ணன் (Jungle and backyard, Nature’s spokesman: M. Krishnan and Indian wildlife), தியடோர் பாஸ்கரன் (The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist), ஏ. ஜே. டி. ஜான்சிங் (Field Days: A Naturalist’s Journey Through South and Southeast Asia) ஆகியோரின் நூல்களைச் சொல்லலாம். எனினும் தொடர்ச்சியாக இரண்டாண்டுகளாக (இன்னும் முடிவு பெறாமால்) இவர் போல யாரும் இதுவரை எழுதி வருவதாக எனக்குத் தெரியவில்லை. ஹிந்து நாளிதழின் Science and technology இணைப்பில் D. பாலசுப்ரமணியன் Speaking of science எனும் தலைப்பில் கட்டுரைகளை பல ஆண்டுகளாக எழுதிவருகிறார். அவரது கட்டுரைகள், அறிவியலின் பல துறைகளையும்  தொழில்நுட்பத்தையும் பொதுமக்களுக்கு எளிமைப்படுத்திச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும். எனினும் கானுயிர் சம்பந்தமான கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருவது இதுவே முதல் முறை.

இந்தத் தொகுப்பு புகழ்பெற்ற அமெரிக்க பசுமை இலக்கியப் படைப்பாளரான David Quammen னுடைய Natural acts, The Boilerplate Rhino போன்ற நூல்களை நினைவுபடுத்துகின்றது. இந்நூலின் (அல்லது தொடரின்) தலைப்பு My Husband & other animals கூட கொஞ்சம் வித்தியாசமானதுதான். புகழ்பெற்ற இயற்கையியலாளாரான Gerald Durrell ன் புகழ்பெற்ற “My family and other animals” நூலினை ஒத்த தலைப்பு. எனினும் இந்தத் தலைப்பு அவரது கணவரை அவமதிப்பது போன்று இருப்பதாக சிலர் எண்ணலாம். அப்படி நினைப்பவர்களுக்கு குட்டு வைக்கும் வகையில் அவரது 100வது கட்டுரையில் (My Husband and Other Animals – Is my husband an animal?) இப்படிப்பட்ட தலைப்பை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை மிக அழகாக விளக்கியுள்ளார்.

அழகான அட்டைப்படத்துடன், கனமில்லாத இந்த நூல் 90 கட்டுரைகளைக் கொண்டது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் 3 அல்லது 4 பக்கங்களே உள்ளன. எளிமையான ஆங்கிலத்தில் சுவாரசியமான தகவல்கள், ஏராளமாகப் பொதிந்திருப்பதால், ஒரு கட்டுரையைப் படிக்க அதிகபட்சம் 5-10 நிமிடமே ஆகும். எதற்காவது (யாருக்காவது) காத்துக் கிடக்கும் நேரத்தில் 1-2 கட்டுரைகளை (நீங்கள் படிக்கும் வேகத்தைப் பொறுத்து) படித்து முடித்து விடலாம்.  ஆங்கிலத்தில் இவ்வகையான நூல்களை Easy Read என்பர். இந்நூலின் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

My Husband and other animals. ஆசிரியர்: Janaki Lenin (ஜானகி லெனின்) பதிப்பகம்: Westland (2012), விலை: Rs. 250. 

இந்த நூல் அறிமுகத்தின் சில பகுதிகள் திசை எட்டும்: மொழியாக்கக் காலாண்டிதழில் (ஜனவரி-மார்ச் 2014) வெளியானது.

Written by P Jeganathan

March 17, 2014 at 1:42 pm

உயிரெழுத்து இதழுக்கான நேர்காணல்

with one comment

உயிரெழுத்து மாத இதழில் (அக்டோபர் 2013 மலர் 7, இதழ் 4) வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர்/பசுமை எழுத்தாளர் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்களின் கேள்விகளும் எனது பதில்களும். 

மனித – விலங்கு மோதல்

மனித விலங்கு மோதல் சார்ந்து உங்களுடைய அனுபவங்கள். குறிப்பாக, யானை, சிறுத்தை போன்றவற்றுடன் மோதல் நிகழும் பகுதியில் இருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

முதலில் மனித-விலங்கு மோதல் என்ற பதத்தை மாற்றி மனிதர்-காட்டுயிர் எதிர்கொள்ளல் எனக்கொள்ளவேண்டும். எனது வீட்டை புலியோ, சிறுத்தையோ, யானையோ கடந்து சென்றால் அவை என்னை தாக்க வருகின்றன என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராவிதமாக நான் இக்காட்டுயிர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அவற்றின் வெகு அருகில் சென்று விட்டால், அவை பயத்தினாலோ, தம்மை தற்காத்துக்கொள்ளவோ என்னைத் தாக்கினால் அது எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு சமமானதே. அது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. எந்த ஒரு காட்டுயிரும் தானாக (சினிமாவில் காட்டுவதுபோல்) எந்த ஒரு மனிதரையும் துரத்தித் துரத்தி கடிப்பதோ, மிதிப்பதோ இல்லை, பழிவாங்குவதும் இல்லை. ஆகவே இது மோதல் அல்ல. நீங்கள் ஆட்கொல்லிகளைப் பற்றி (man-eaters) கேட்கலாம். இந்த ஓரிரு தனிப்பட்ட புலியோ, சிறுத்தையோ தொடர்ந்து மனிதர்களை குறிவைத்து தாக்கினால் அங்குள்ள அனைத்து இரைக்கொல்லிகளும் (Predators) அப்பண்பு உள்ளவையே எனக் கூறவே முடியாது. அப்படித் தாக்கும் அந்தத் தனிப்பட்ட விலங்கினை அந்த இடத்திலிருந்து விலக்கத்தான் வேண்டும். எனினும் அப்படி அடையாளம் காண்பது என்பதும் சிரமம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் இடம், நேரம், சூழல் அனைத்தையும் ஆராய்ந்து, மேன்மேலும் மனித உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.

நான் தற்போது பணி புரிவது வால்பாறையில். சுமார் 220 சதுர கி.மீ. பரப்பளவவில் அமைந்துள்ள இங்கு பெரும்பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிரம்பியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்து தேயிலை பயிரிட ஏதுவான உயரமும், சூழலும் இருந்ததால் இங்குள்ள மழைக்காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை அமைத்தனர். பயிரிடத் தகுதியில்லாத சில இடங்களில் காடுகளை அப்படியே விட்டு வைத்து விட்டனர். பச்சைப் பாலைவனம் என சூழியலாளர்களால் அழைக்கப்படும் தேயிலைத் தோட்டத்தில் இன்று இந்தத் துண்டுச்சோலைகள் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் இருப்பது ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி தேசிய பூங்கா), பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் வனவிலங்கு சரணாலயம் முதலிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் உள்ள (யானை, சிறுத்தை முதலிய) விலங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்திற்கேற்ப உணவு, நீர், உறைவிடம் தேடி வனத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறோர் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்க்கு முன் இப்பகுதியில் நாம் குடியேறி இவ்வுயிரினங்களின் உறைவிடங்களை அழித்து விட்டு, இன்று அவை நாமிருக்கும் இடங்களுக்கு வரக்கூடாது என்று சொல்கிறோம்.

இவ்வளவு காலம் இல்லாமல், ஏன் இப்போது மனித – விலங்கு மோதல் எதிர்கொள்ளல் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது?

மனித-விலங்கு எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்தே இருந்து வரும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகையினால் காட்டுயிர்களின் உறைவிடங்கள் நாளுக்கு நாள் அருகி வருகிறது. காடழிப்பு, காட்டுயிர்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், சரியான (அறிவியல் பூர்வமான) மேலாண்மையின்மை, நீண்டகால தீர்வு காணும் எண்ணத்துடன் செயல்படாமை முதலியவையே இவ்வகையான நிகழ்வுகளுக்குக் காரணம். மேலும் காட்டுயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை வனத்துறையினர் மட்டும் தான் சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. பல அரசுத் துறைகளும், ஊடகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் – ஊடகங்கள் காட்டுயிர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதும், இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிது படுத்துவதும் செய்தித்தாள்களிலும், செய்திகளிலும் பார்க்கலாம். ஏற்பட்ட சம்பவத்தின் தீவிரத்தையும், இப்பிரச்சனையை தீர்க்க/சமாளிக்க/தணிக்க செய்ய வேண்டியவைகளை நன்கு உணர்ந்து செயல் பட வேண்டியது ஊடகங்களில் கடமை. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் யானையை ஏதோ ஒரு வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

ele_near human habitation_Photo_P Jeganathan

விலங்குகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

யானை, சிறுத்தை போன்ற காட்டுயிர்கள் நம் வீட்டின் வெகு அருகில் இருந்தால் நாம் எப்படிப்பட்ட மனவுளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறோம். அதே போலத்தான் ஓரிடத்திலிருந்து யானைகளை பட்டாசு வெடித்து, டயரை எரியவிட்டு மேலே விட்டெறிந்து துரத்தும் போது அவையும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றன. அச்சமயத்தில் குட்டியுடன் இருக்கும் போது இந்த அழுத்தம் பன்மடங்காகிறது. பகலில் இப்படி ஓட ஓட விரட்டுவதால் அவை ஓரிடத்தில் நிம்மதியாக இருந்து சாப்பிட முடியாமல் (யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-200 கி.லோ எடை உணவும், சுமார் 200 லிட்டர் நீரும் அவசியம்) போகிறது. விளைவு, இரவு நேரங்களில் ரேஷன் கடைகளுக்கும், சத்துணவுக்கூடங்களுக்கும், அவற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு முதலியவற்றை சாப்பிடுகின்றன.

இது போலவே சிறுத்தை போன்ற இரைக்கொல்லிகளை நம் வீட்டினருகே பார்த்த உடனேயே அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் முறையிடுவதால் அவர்களும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி கூண்டு வைத்து அவற்றை பிடித்துவிடுகின்றனர். அதைக் கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் பிரச்சனை தீர்ந்து விடாது. இது ஒரு நீண்ட காலத் தீர்வு அல்ல. அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் போதும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் மன அழுத்தம், குழப்பம், மன உளைச்சல் காரணமாக அவை எரிச்சலைடைகின்றன. அவை கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க நினைக்கும் போது காயங்களும் ஏற்படுகின்றது. அந்த குறிப்பிட்ட விலங்கை வேறு இடங்களில் கொண்டு விடும் போது காயம் காரணமாக அவை வேட்டையாட முடியாமல் அங்குள்ள கால்நடைகளைத் தாக்குகின்றன. இது கிட்டத்தட்ட சில இந்திய சினிமாக்களில் காண்பிப்பது போல் ஒரு நல்லவனை/நிரபராதியை ஜெயிலில் போட்டு குற்றவாளி ஆக்கி அவன் விடுதலையாகும் போது கெட்டவனாக மாறி வருவது போலத்தான்.

Photo: Ganesh Raghunathan

Photo: Ganesh Raghunathan

இதனால் தமிழகத்தில் இறந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை என்ன?

இவ்வகையான புள்ளிவிபரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் மனித-விலங்கு எதிர்கொள்ளலால் தான் ஒரு விலங்கு மரணமடைந்தது என அறுதியிட்டுக் கூறுவது எல்லா சமயங்களிலும் சாத்தியமில்லை. எனது சக ஊழியர் ஆனந்தகுமாரின் கூற்றுப்படி வால்பாறை பகுதியில் 4 யானைகள் (2 – தவறுதலாக பூச்சிமருந்தை உட்கொண்டு, 2 – மின்வேலி மின்சாரத்தினால் தாக்கப்பட்டு) மரணமடைந்துள்ளன. சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2007-2012 வரை வால்பாறை அதனை அடுத்தப் பகுதிகளில் 12 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றிற்கு உடலில் (பெரும்பாலும் முகத்தில்) காயம் ஏற்பட்டது. வேறு இடங்களில் கொண்டுசெல்லப்பட்டவை உயிருடன் இருக்கின்றனவா இல்லையா என்பதை செல்லுவது கடினம்.

இதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்க முடியுமா?. மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க என்.சி.எஃப் அமைப்பு (Nature Conservation Foundation – NCF) மேற்கொண்டுள்ள முயற்சியின் அறிவியல் பின்னணி ?

நான் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் வால்பாறையை மையமாக வைத்தே. மேலும் நான் மனித-விலங்கு எதிர்கொள்ளலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. எனது நண்பர்களும், சக ஊழியர்களும் இப்பணியில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது பணி, அவர்களது நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களிடன் கொண்டு போய் சேர்ப்பது.

எனது சக ஊழியர் ஆனந்தகுமார் வால்பாறைப் பகுதியில் யானைகளின் இடம்பெயர்வையும், அவற்றின் பண்புகளையும், யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதத்தில், எங்கெங்கே பாதிப்பு ஏற்படுகின்றது, அந்த பாதிப்புகளை தணிக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.

வால்பாறையைச் சுற்றிலும் வனப்பகுதியாதலால் காலகாலமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வேளையில் அவை மனிதர்களையும், குடியிருப்புகளையும் எதிர்கொள்வதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. யானை-மனிதர்கள் எதிர்கொள்ளலை சரியான முறையில் சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும், அவற்றின் இடம்பெயறும் பண்பை அறிந்திருத்தல் அவசியம். யானைகளின் நடமாட்டத்தைப் பற்றிய அறிவு இங்கு வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

வால்பாறைப் பகுதியில் உள்ள யானைத் திரள்களை பின் தொடர்ந்து அவை போகும் இடத்திற்கெல்லாம் சென்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அவை இருக்குமிடத்தை குறித்துக்கொள்ளப்பட்டது. யானைகளால் ஏற்படும் சேதங்கள் யாவும் நேரில் சென்று மதிப்பிடப்பட்டது. மனித உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. வால்பாறைப் பகுதியில் ஒர் ஆண்டில் சுமார் 80-100 யானைகள் நடமாடுகின்றன. எனினும் மூன்று யானைக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 யானைகள் 8-10 மாதங்கள் இப்பகுதியில் நடமாடுகின்றன. இங்குள்ள காலங்களில் யானைகள் பகலில் பெரும்பாலும் மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், ஆற்றோரக்காடுகளிலும்தான் தென்பட்டன. காபி, சூடக்காடு (யூகலிப்டஸ்), தேயிலை தோட்டப் பகுதிகளை அவை அதிகம் விரும்புவதில்லை. எனினும் இரவு நேரங்களில் ஒரு துண்டுச்சோலையிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும்போது மட்டுமே தோட்டப்பகுதிகளின் வழியாக சென்றன.

விவரங்களை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டியை வைத்துச் சொடுக்கவும் Map: NCF

விவரங்களை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டியை வைத்துச் சொடுக்கவும் Map: NCF

இந்த ஆராய்ச்சி முடிவின் படி நடு ஆறு – சோலையார் ஆற்றோரக் காடுகள் யானைகள் நடமாட்டத்திற்கான முக்கியமான பகுதிகள் என்பது அறியப்பட்டது. ஆற்றங்கரையின் இருபுறமும் சுமார் 20 மீ அகலத்தில் இயற்கையாக வளரும் இம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும், தாவரங்களையும் நட்டு வளர்த்தால் யானைகளின் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும், அவை மனிதர்களை எதிர்கொள்வதை வெகுவாகக் குறைக்கவும் முடியும். ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால் அவற்றை எடுக்கும் வேளையில் இந்தக் கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ இருப்பதால் அங்கும் சில வீடுகளிலும் சேதங்கள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கட்டிடங்களை, குடியிருப்புப் பகுதியிலிருந்து தூரமாக அமைப்பது, உணவுப் பொருட்களை ஓரிடத்தில் வைத்திடாமல் நடமாடும் விநியோகமாக மாற்றுவதால் இவற்றிற்கு யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும்.

மனித-யானை எதிர்கொள்ளல் வால்பாறையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தாலும், அதிகமாக இருப்பது துண்டுச்சோலைகள் இல்லாத அல்லது மிகக் குறைவான வனப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் தான். மனிதர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான்.

Elephant sms_GAN4551_700

மனித-யானை எதிர்கொள்ளலின் மற்றொரு விளைவு மனித உயிரிழப்பு. இதை மட்டுப்படுத்த, முற்றிலுமாக தவிர்க்க, பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களை கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதுவே, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்து நிலைக்கவும், யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். மனித அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில், ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானையும் மனிதனும் எதிர்பாரா விதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும் சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் இதற்கான முக்கிய காரணம். அதிக உயிரிழப்பு ஏற்பட்டது  டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் தான். ஆகவே, தமிழக வனத்துறையினரின் ஆதரவுடன், வால்பாறைப் பகுதியில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவை ஏற்படுத்தினோம்.

யானைகள் இருக்குமிடத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க மூன்று முறைகள் பின்பற்றப்பட்டது.

1. யானைகள் நடமாட்டம், இருக்குமிடம் முதலிய தகவல்கள் மாலை வேளைகளில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.

2. யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் (2 கி.மீ.சுற்றளவில்) உள்ள பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் அவர்களுடைய கைபேசியில் யானைகள் இருக்குமிடம் பற்றிய குறுஞ்செய்தியை (SMS) ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டது.

3. மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. யானைகள்  அச்சுற்றுப்புறங்களில் (2 கி.மீ. தூரத்துக்குள்ளாக) இருந்தால் இவ்விளக்கு எரிய வைக்கப்படும். இந்த விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே செயல்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டது. நாளடைவில் பொதுமக்களே இவ்விளக்கை செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.

Photo: Kalyan Varma

Photo: Kalyan Varma

வால்பாறைப்பகுதியில்மனித-யானைஎதிர்கொள்ளலால்ஏற்படும்விளைவுகளைசமாளிக்க, சரியான (அறிவியல்பூர்வமான) முறையில்கையாள, பாதிப்பினைதணிக்கஎடுக்கப்படும்நடவடிக்கைகள், நீண்டகாலம்நீடித்துநிலைக்கபொதுமக்களைஈடுபடுத்துதல்எந்தஅளவிற்குஅவசியம்என்பதைஇந்த ஆராய்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது.

சாலைபலி (Roadkill)

காடுகளைப் பிளந்து செல்லும் சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி பற்றி. இந்தச் சாலைகள் உயிரினங்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.

linear intrusions_4_2100

இந்த நீளவாக்கில் அமைந்த கட்டமைப்புகள் காட்டுயிர்களின் வழித்தடங்களில் (animal corridors) குறுக்கீடுகளாகவும் சில உயிரினங்களுக்கு நீளவாக்கில் அமைந்த தடைகளாகவும் (barrier) அமைகிறது. காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை பகுதியில் வாகனப் போக்குவரத்தினால், உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியை 2011 தொடங்கியுள்ளோம்.

இது மனஅழுத்தத்தை (ஸ்டிரெஸ்) தரும் அனுபவமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?

தினமும் காலை வேளையில் சாலையில் நடந்து சென்று இப்படி உயிரிழந்த காட்டுயிர்களை எண்ணுவதும், பட்டியலிடுவதும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுப்பதில்லை. எனினும் மென்மேலும் இவ்விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளனின் கடமை.

குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் இந்தச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் உயிரினங்கள் தொடர்பாக ஏதாவது கணக்கெடுப்பு இருக்கிறதா?

Photo: Ganesh Raghunathan

கேளையாடு Photo: Ganesh Raghunathan

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இவ்வகையான ஆராய்ச்சி அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆராய்ச்சி முடிந்தவுடன் பரிந்துரைகளைக் கொண்ட கட்டுரையையும், ரிப்போட்டையும் எழுதி பதிப்பித்த பின் அந்த வேலை முடிந்து விடும். அது மட்டுமே போதாது. ஆராய்ச்சியின் முடிவில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? அப்படியே செயல் படுத்தப்பட்டாலும் அவை எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்ததா? எந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எங்களது ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை. எனினும் இது வரை செய்த களப்பணியின் தரவுகள் சில – கோடைகாலத்தை விட மழைக்காலங்களில் சாலையில் பல உயிரினங்கள் அதிலும் குறிப்பாக தவளைகளும், பாம்புகளும் அரைபட்டுச் சாகின்றன. பாலூட்டிகளைப் பொறுத்தவரை கடம்பை மான், கேளையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலையணில், மரநாய், புனுகுப் பூனை, முள்ளம்பன்றி, சருகு மான் முதலியன சாலையில் அரைபட்டு உயிரிழந்துள்ளன.

இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?

ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்

1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,

2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,

3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது.

காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.

பசுமை இலக்கியம்

தமிழில் பசுமை எழுத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது என்னைவிட இத்துறையில் மூத்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும்நான் பார்த்த வரையில் இயற்கை வரலாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள் தான் அதிகம். இவையும் அவசியம் தான். அதே வேளையில் பல வித உயிரினங்களின் கையேடுகள் (Field guides), இத்துறை சார்ந்த தரமான நூல்கள், மொழிபெயர்ப்புகள் இன்னும் வரவேண்டும். வேங்கைப்புலிகளைப் பற்றிய கானுறை வேங்கை (கே. உல்லாஸ் கரந்த் – தமிழில் தியடோர் பாஸ்கரன்), பறவையியலைப் பற்றிய நூலான “அதோ அந்த பறவை போல (எழுதியவர் ச. முகமது அலி) போன்ற சில நூல்களைத் தவிர இத்துறை சார்ந்த நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதோடு களப்பணி முறைகள், விளக்கக் கையேடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். பாலுட்டிகள், பறவைகள், சில பாம்புகள் தவிர பல உயிரினங்களுக்கு தமிழில் பெயரே கிடையாது. அவற்றிற்கெல்லாம் பெயரிட வேண்டும்.

துறைசார்ந்த நூல்களும் (technical, reference books) கையேடுகளும், கட்டுரைகளும் மட்டுமே பசுமை இலக்கியம் இல்லை. சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, புறவுலகு சார்ந்த தத்துவார்த்தமான சொல்லாடல்களும், புதினங்களும், கவிதைகளும், குழந்தைகளுக்கான கதைகளும் என மென்மேலும் பதிப்புகள் வெளிவரவேண்டும். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

தமிழ் ஊடகச் சூழல் இயற்கை பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறதா. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் நடக்கின்றனவா?

சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு முதலியவை பெரும்பாலான மாத, வார இதழ்களிலும், தினசரிகளிலும் கிட்டத்தட்ட பக்கத்தை நிரப்பும் ஒரு அம்சமாகவே இருக்கும். சில பத்திரிக்கைகளில் இவ்வகையான பகுதிகள் இருக்கவே இருக்காது. சினிமாவும், அரசியலும் தான் மேலோங்கி இருக்கும். ஆன்மீகத்திற்கு, சிறுவர்களுக்கு, சினிமாவிற்கு, சமையலுக்கு என தினமும் ஒரு இணைப்பை தினசரிகள் வழங்கும் போது சுற்றுச்சூழலுக்கு, இயற்கை வரலாறு சங்கதிகளுக்கு என ஏன் வரக்கூடாது? காட்டுயிர், புதிய கல்வி, துளிர், பூவுலகு, கலைக்கதிர் முதலிய பத்திரிக்கைகளைத் தவிர. இது போன்ற பத்திரிக்கைகள் இருப்பது கூட எத்தனை பேருக்கு தெரியும்?

nerupu kuziyil kuruviஅதுபோல சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலி எழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.

எனினும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனும் எண்ணமுடையவர்கள், ஊடகங்களை மட்டுமே குறை கூறாமல், முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் அணுகி அவர்களுக்கு விளக்கமளித்தும், பத்திரிக்கையாளர்களுக்கு பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற கருத்தரங்குகளை நாங்கள் இப்பகுதியில் நடத்தியும், பங்கு கொண்டும் இருக்கிறோம். ஒரு சில ரிப்போட்டர்களிடம் மாற்றத்தைக் காணவும் முடிகிறது.

புத்தகம், இதழ்களில் எழுதுவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு பரவலாகும் என்று நம்புகிறீர்களா?

அதுவும் உதவும். சுற்றுச்சூழல் மாசு இப்பூமிப்பந்தினை விழுங்கிக் கொண்டும், இயற்கையான வாழிடங்கள் அருகியும் வரும் இச்சூழலில் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த புறவுலகின் பால் கரிசனம் கொண்டுள்ளவர்கள் எல்லா வகையான ஊடகச் சூழலையும் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.

——————————————————————————

இக்கட்டுரையின் PDF ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

November 1, 2013 at 1:46 pm