UYIRI

Nature writing in Tamil

Archive for the ‘Environment’ Category

இருப்பது ஒரே ஒரு பூமிதான்!

leave a comment »

பருவநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவு, மாசு – போன்ற மனித செயற்பாடுகள் நாம் வாழும் இந்தப் பூவுலகை நாளுக்கு நாள் அபாய நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில் பல கோடி மக்கள், உணவு, உறைவிடம், உடல்நலம், வேலைவாய்ப்பு, கல்வி போன்ற இன்றியமையாத் தேவைகளைகூட நிறைவேற்ற இயலாமல் தவிக்கின்றனர். அண்மையில் கோவிட் பெருந்தொற்று நமது நிலையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

அனைவருக்கும் நியாயமான, சமத்துவமான எந்த ஒரு ஏற்றத்தாழ்வும், பாகுபாடும் இல்லாத, இயற்கையோடு இயைந்த சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவது தான் இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரே வழி.

இயற்கையை மேன்மேலும் சீரழிப்பதை விட்டுவிட்டு ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சரி செய்ய ஆவனசெய்ய வேண்டும். இருப்பதைப் பாதுகாத்து, நாம் அழித்ததை மீளமைத்து, நாம் அனைவரும் வாழ வழிவகை செய்யும் வளங்குன்றாத எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

அரசின் கடமைகள்

தற்போது உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் மூன்று முதன்மைச் சிக்கல்கள்: பருவநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவும் பல்லுயிர்ப் பன்மய இழப்பும், சூழல் மாசுபாடும் குப்பைகளும். அரசாங்கத்தால் மட்டுமே தனது கொள்கை முடிவுகளால் ஒரு நாட்டின் பல்வேறு படிநிலைகளில் இந்த மூன்று தலையாய சிக்கல்களைப் போக்குவதற்குத் தேவையான நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

பசுங்குடில் வளி வெளியீட்டை உடனடியாகக் குறைத்தல்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்க்கப் பசுங்குடில் வளிகளின் வெளியீட்டைத் தற்போதுள்ள அளவிலிருந்து 2030-க்குள் 45 விழுக்காடு குறைக்க வேண்டும். 2050-இல் பசுங்குடில் வளி வெளியீட்டைமுற்றிலும் தவிர்க்கவேண்டும். உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையைப் பின்பற்றி போர்க்கால அடிப்படையில் செயலாற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இயற்கை பாதுகாப்பும், மீளமைப்பும்

உலக நாடுகள் அனைத்தும் இயற்கையான வாழிடங்களைப் பாதுகாத்து, அவற்றை மேன்மேலும் சீரழிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, நிலத்திலும், கடலிலும் உள்ள சீரழிந்த சூழலமைப்புகளில் அறிவியல் பூர்வமான மீளமைப்பு (restoration) பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். எதிர்கால மீளமைப்புப் பணிகள் சிறந்த செயல்திட்டங்களையும், தேவையான பொருளாதார உதவிகளையும் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

அமேசான் காடுகள் அழிக்கப்பட்ட காட்சி (படம். விக்கிபீடியா)

காற்றையும், நீரையும் தூய்மைப்படுத்துதல்

காற்று மாசு பருவநிலை மாற்றத்துக்கு வித்திடுவது மட்டுமின்றி, ஒவ்வோர் ஆண்டும் பல கோடி மக்களைச் சிறு வயதிலேயே மரிக்கச் செய்கிறது. உலகின் பல பகுதிகளில் மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. அதே வேளையில் நெகிழி (பிளாஸ்டிக்), இரசாயனக் கழிவுகள், குப்பைக் கழிவுகள் யாவும் இன்னும் ஆற்றிலும், கடலிலும் கலந்து அப்பகுதிகளை மாசு படுத்தி அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களைக் கொல்கின்றன. இது மட்டுமின்றிப் பல லட்சம் டன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நீர்ச் சூழலில் கலந்துள்ளதால் மனிதர்களின் உடல்நலத்துக்கும் மோசமான தீங்கினை விளைவிக்கின்றன.

காற்று மாசு. படம். விக்கிபீடியா

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை முற்றிலுமாகத் தடை செய்தல், முறையான கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், காற்றின் தரத்திற்காக உலக நல அமைவனம் (WHO) வரையறை செய்துள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றுதல், தூய்மையான, அதே வேளையில் கட்டுப்படியாகும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெருக்க வழிசெய்தல் போன்ற செயற்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

நகரங்களில் வாழ்பவர்களின் கடமைகள்

உலகில் சுமார் 800 கோடி மனிதர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களே பெரும்பாலும் மேற்சொன்ன மூன்று தலையாயச் சிக்கல்களின் மோசமான விளைவுகளால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இயற்கைச் சூழலுக்கு இயைந்து, நீடித்து நிலைக்கும் வகையில் மக்களின் வாழ்விடங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்குவது நகர்புறத்தில் உள்ள அதிகாரிகளின் கடமை. அதே வேளையில் இப்பகுதிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளையும் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். மாசு ஏற்படுத்தும் எல்லா வகையான தனியார் ஊர்திகளையும் தவிர்த்து, கூடியவரையில் மிதிவண்டி, பொதுப் போக்குவரத்து போன்றவற்றைப் பயன்படுத்தும் பசுமையான பயணத்துக்கு அனைவரையும் ஊக்குவிக்கவும், அதற்கென இயற்கைச் சூழலுக்கு இயைந்த கட்டமைப்புகளை உருவாக்கவும் வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள இயற்கையான வாழிடங்களையும், நீர்நிலைகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து, மேன்மேலும் அவை சீரழியாமல் தடுக்கவும் ஆவனசெய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் முறையான கழிவு மேலாண்மை வசதிகளை உருவாக்க வேண்டும். நகரில் வாழ்வோர் குப்பை போடுவதைக் குறைப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதையெல்லாம் செய்வோருக்கு தகுந்த சன்மானங்களையும் வழங்க வேண்டும்.

பிளாஸ்டிக் (நெகிழி) குப்பை. படம்: விக்கிபீடியா

சுற்றுச்சூழல் சார்ந்த நிதி நிர்வாகமும், முதலீடும்

வளங்குன்றா வளர்ச்சியை அடைய, அதைத் தக்கவைக்கச் சரியான நிதி நிர்வாகமும், முதலீடும் தேவை. மாசுபாடும், பசுங்குடில் வளிகளும் இல்லாமற் செய்யும் அல்லது குறைக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த முறைகளுக்கு மாறுவதற்குத் தொழிலகங்களை ஊக்குவிக்க வேண்டும். இயற்கைச் சூழலைப் பாதிக்காத, இயற்கையைப் போற்றும் செயல்பாடுகளில் முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

வளர்ச்சி நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வங்கிகள், பல தரப்பட்ட முதலீட்டாளர்கள் போன்றோர் பூமியின் எதிர்காலத்தைப் பற்றிய கரிசனத்தோடு பூமிக்கு ஏற்படும் இயற்கைச் சூழல் பாதிப்புகளைப் போக்குவதற்குத் தேவையான நிதியை அளிக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை (குறிப்பாக வளரும் நாடுகளில்) தாங்கக்கூடிய, தகவமைத்துக் கொள்ளக்கூடிய வேளாண் முறைகளையும் கட்டமைப்புகளையும் ஊக்குவித்தல், பருவநிலைப் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளுக்கும் கண்காணிப்பகங்களுக்கும் நிதியுதவி அளித்தல் முதன்மைத் தேவைகள். இயற்கைச் சூழலுக்கு உகந்த, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான, பல்லுயிர்ப் பன்மயப் பாதுகாப்புச் சார்ந்த, மாசுபாட்டைக் குறைக்கவல்ல, வளங்குன்றாத வாழ்வாதாரத்தைக் குறிக்கோளாகக் கொண்ட திட்டங்களை ஊக்கப்படுத்தி நிதியளிக்க வேண்டும்.

வர்த்தகமும், தொழிலகமும்

வர்த்தகமும், தொழிலகங்களும் நமக்கு வேண்டியவற்றை நீண்ட காலத்துக்கு அளிக்கும்படியான பொருளாதாரத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவை. வளங்குன்றா வளர்ச்சியை மதித்து, குறைந்த மூலதன வளத்தைக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்லும் முறையான பொருளாதார மாதிரிகளே இன்றைய தேவை. நுகர்வோரால் அல்ல பெரிய தொழிலதிபர்களால்தான் எதிர்பார்த்த அளவுக்குப் பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இயற்கைச் சூழலுக்கு உகந்த வர்த்தக உத்திகளை உருவாக்கவும் பின்பற்றவும் வேண்டும். மக்கள் உடல்நலம், இயற்கை, இயற்கைச் சூழல் ஆகியவற்றைப் பாதிக்காத, வளங்குன்றா வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

வர்த்தகத்தினால் ஏற்படும் (செயல்முறை, உற்பத்தி, சேவை) கார்பன் கால்தடத்தை (Carbon Footprint) குறைத்தல், பசுமை ஆற்றலைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவும் மேம்படுத்தவும் வேண்டும். வர்த்தகத்தினால் ஏற்படும் பசுங்குடில் வளி வெளியேற்றத்தைக் குறைக்க இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இவற்றையெல்லாம் வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்கவும் வேண்டும்.

மாசுபாட்டுக்கும், பசுங்குடில் வளிகளின் வெளியேற்றத்துக்கும் காரணமான புதைபடிவ ஆற்றலைப் (Fossil energy) பயன்படுத்தும் போக்குவரத்தைக் கூடியவரை தவிர்த்து நடைமுறைக்கு உகந்த மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை சீரழிவுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் வித்திடும் வகையில் இல்லாமல் உணவு உற்பத்தி, பதனிடுதல், விநியோகம் போன்ற செயற்பாடுகள் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளைவிக்கப்பட்ட, காலத்துக்கு ஏற்ற, குறைவான அல்லது வேதிப் பொருள்கள் முற்றிலும் இல்லாத, கூடிய வரையில் அடைக்கப்படாத (non -packaged), உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும்.

இரயிலில் கொடுக்கப்படும் உணவுப் பொருட்கள்/பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி பொட்டலங்கள்

அரசு சாராத, சமூக அக்கறை கொண்ட அமைப்புகளின் கடமைகள்

அரசுத் துறைகளுக்கும் பெரும் தொழிலதிபர்களுக்கும் கொள்கை வகுப்பவர்களின் கவனத்துக்குப் பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை அவ்வப்போது எடுத்துச் சொல்வதும் குரல் கொடுப்பதும் அரசு சாராத, சமூக அக்கறை கொண்ட அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றி கடமை. அந்தந்த இடத்துக்குத் தகுந்த இயற்கைச் சூழல் சார்ந்த சிக்கல்களுக்காகக் குரல் கொடுப்பதும், பாதுகாப்பு திட்டங்களை வகுப்பதும், அரசுடனும் கொள்கை வகுப்பவர்களோடும் பொதுமக்களோடும் ஒன்றுசேர்ந்து அவற்றைச் செயல்படுத்துவதும் தேவை. இயற்கைச் சூழல் நலன் விழையும் இயக்கங்களும் தம் செயற்பாட்டில் எந்த விதத்திலும் இயற்கையையும் சூழலையும் பாதிக்கும் வகையில் இல்லாமல் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதற்குப் பாடுபட வேண்டும்.

சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் குறித்த அறிவியலும் அது சார்ந்த கல்வியும்

பருவிநிலை மாற்றம், இயற்கைச் சூழல் சீரழிவு, மாசுபாடு ஆகியவற்றின் பாதிப்புகளை எதிர்கொள்ளப் போவது வருங்காலச் சந்ததியினர்தாம். ஆகவே, சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அறிவையும் முறைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இங்குதான் அறிவியலும், கல்வியும், விழிப்புணர்வும் துணை புரியும்.

அண்மைக் காலங்களில் இயற்கையைப் பற்றிய புரிதலும் தொழில்நுட்பத் திறனும் வெகுவாக முன்னேற்றமடைந்துள்ளன. இதைப் பயன்படுத்திப் பல்கலைக்கழகங்களும், அரசும், அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்களும் இயற்கைச் சூழலுக்கு உகந்த புதிய வகை ஆற்றல் உற்பத்தி, கட்டமைப்புகள், குறைந்த அளவு கார்பன் கால் தடம் கொண்ட தொழிற்சாலைகளுக்கான மறுசுழற்சி, மறுபயன்பாடு செய்யக்கூடிய மூலப்பொருள் உற்பத்தி முதலியன குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட வேண்டும். சீரழிந்த இயற்கை வளங்களை (காடுகள், புல்வெளிகள், பவளப்பாறைகள்) சரி செய்வதற்கு அந்தந்த இடத்துக்கு உகந்த, அறிவியல் முறையிலான நீண்டகால மீளமைப்புத் திட்டங்களைத் தொடங்க வேண்டும்.

இயல் தாவர நாற்றுப் பண்ணை. அறிவியல் பூர்வமான சூழல் மீளமைப்பு மிகவும் அவசியம். படம். T. R. சங்கர் ராமன்
வால்பாறையில் நடைபெறும் மழைக்காட்டு மீளமைப்புப் பணி. படம். T. R. சங்கர் ராமன்

இயற்கையின் உறுப்புகளான மரங்கள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றின்மூலம் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களை அறியும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் மாசுபாட்டைக் கண்டறியும் பணிகளிலும் பொதுமக்களையும் ஈடுபடவைக்கும் மக்கள் அறிவியல் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்.

வர்த்தகக் கல்லூரிகளுடன் (Business Schools) சேர்ந்து தொழில் முனைவோர்களுக்கான இயற்கைச் சூழல் சார்ந்த, பசுமை வர்த்தக மாதிரிகள் (Green Business Models) குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

பொதுமக்கள் இயற்கையோடு இயைந்த, சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையிலான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், அவற்றின் தேவையைப் பற்றிய புரிதலை உண்டாக்கவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் கருத்துகளைப் பரப்ப வேண்டும். இது போன்ற விழிப்புணர்வுத் திட்டங்களில் கல்வியாளர்கள், ஊடகங்கள், கலைஞர்கள், அனைவரும் ஒன்றுசேர்ந்து செயலாற்ற வேண்டும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை எல்லா வயதினருக்குமான கல்வித் திட்டங்களில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு தலைமுறையினரும், நாமும் அடுத்து வருவோரும் எவ்விதமான பாதிப்புகளை எதிர்கொள்வோம் எனும் அறிவையும் அவற்றைச் சரிசெய்ய எந்த வகையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதையும் அறிந்துணர்வார்கள்.

இளம் தலைமுறையினருக்கு புறவுலகின் மதிப்பினை புரிய வைப்பது அவசியம்

இளம் தலைமுறையினர் புறவுலகைப் போற்றி மதிக்கும் வகையில் அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் கானுலா, இயற்கை நடை போன்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

தனிமனிதரின் கடமைகள்

இயற்கை சீரழிவு, சூழல் மாசு ஆகியவற்றுக்கு எதிராக அனைவரும் குரல்கொடுக்க வேண்டும். பருவநிலை அவரசநிலையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் கொள்கைகளை வகுத்துச் செயல்படும் அரசியல் தலைவர்களை ஆதரித்தல் வேண்டும்.

இயற்கைக்கு இயைந்த நகர்புற வளர்ச்சித் திட்டங்கள், முறையான கழிவு மேலாண்மை, தடையில்லாத பொதுப் போக்குவரத்து போன்ற இன்றியமையாத் தேவைகளைப் பெறப் பாடுபட வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கைக்கு எதிரான (நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், மாசுபடுத்துதல், காடழிப்பு போன்ற) செயல்களுக்கு எதிராகச் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமல்லாமல் களத்திலும் இறங்கிப் போராட வேண்டும். அவற்றுக்கு அறிவியல் பூர்வமாகத் தீர்வுகளைக் காண முற்பட வேண்டும்.

நமது வீடுகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாவண்ணம் அமைக்க வேண்டும். தனி ஊர்திகளைத் தவிர்த்து. நடந்து அல்லது மிதிவண்டியில் செல்லுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், நெகிழிப் பைகளைப் பயன்படுத்தாமல் இருத்தல், நீரைச் சிக்கனமாகச் செலவழித்தல், மின்சாரத்தை மிச்சப்படுத்துதல், பதப்படுத்தி நெகிழி டப்பாக்களில் அடைத்துவைக்கப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்த்தல், நாம் வசிக்கும் பகுதிகளின் அருகிலேயே விளையும் தானியங்களையும், உணவுப்பொருள்களையும் வாங்குதல், உணவினை வீணாக்காதிருத்தல், வசதிக்கு ஏற்ப இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்களை வாங்குதல், இயற்கையை அழித்து, சூழலைக் கெடுத்து உருவாக்கப்பட்ட பொருள்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருள்களையும் தவிர்க்கும் பொறுப்பான நுகர்வோராக இருத்தல், இளைய சமுதாயத்துக்குப் புறவுலகை நேசிக்கக் கற்றுக்கொடுப்பதற்கென இயற்கையான வாழிடங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்று இயற்கையின் விந்தைகளை நேரில் காணும் வாய்ப்பை அளித்தல் என நமது அன்றாட நடவடிக்கைகளில் கொஞ்சங்கொஞ்சமாக முடிந்த வரையில் மாற்றத்தைக் கொண்டுவந்து எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இவை அனைத்தையும் ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் மனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

Photo: Wikimedia Commons

இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் தம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள்தாம் ஒவ்வொரு சமுதாயமும் இயற்கையைப் போற்றும், சூழலைக் காக்கும் அறிவார்ந்த சமுதாயமாக மாறுவதற்கு வித்திடும். இந்தப் பிரபஞ்சத்தில் பல கோடி விண்மீன் மண்டலங்கள் உள்ளன, அவற்றில் பல கோடிக் கோள்கள் உள்ளன. ஆனால், நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமிதான்! அதைப் பாதுகாப்பது நம் கடமை.

5 ஜூன் 2022 அன்று தி இந்து தமிழ் தினசரியில் (ஆன்லைன்) வெளியான கட்டுரையின் திருத்திய பதிப்பு.

Written by P Jeganathan

June 7, 2022 at 12:13 pm

Posted in Environment

Tagged with

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?

with one comment

இந்து தமிழ் திசை நாளிதழில் 18/03/2021 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கடல் சூழலியல்-வள அரசியல் குறித்து பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், பழங்குடியினர் நலன் குறித்து திரு. எஸ். சி. நடராஜ், பொது சுகாதாரம், மருத்துவம் குறித்து திரு. ஜி. ஆர். இரவீந்திரநாத், பொதுக்கல்வி குறித்து பேராசிரியர் வீ. அரசு என பல துறைசார் வல்லுனர்களின் கட்டுரைகள் இதே தலைப்பில் வெளியானது.

இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான சில கருத்துக்களை இந்தக் கட்டுரை மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு முழுப்பட்டியல் அல்ல.

பருவநிலை அவசரநிலை முதலில் பருவநிலை மாற்றம் குறித்தும்,  அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான காரணங்கள் யாவற்றையும் பற்றி       எல்லா அரசியல் கட்சிகளுக்கும் புரிதல் ஏற்பட வேண்டும். அதன் பிறகு வளர்ச்சி எனும் பெயரில் எடுக்கப்படும் எல்லா  செயல் திட்டங்களிலும்  அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும், அவை எந்த வகையில் இயற்கைச் சீரழிவுக்கும், புவிவெப்பமயமாதலுக்கு  காரணமாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படவேண்டும். பருவநிலை அவசரநிலையை பிரகடனம் (Climate Emergency Declaration) செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், இயற்கைக்கு இணக்கமான வளங்குன்றாத வளர்ச்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும். நிலையான, உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு  சீரழிக்கப்படாத சுற்றுச்சூழல் தான் முக்கிய முதலீடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நில, நீர், காற்று மாசு – இயற்கை அன்னை இலவசமாக  நம்  அனைவருக்கும் தந்த பரிசு. நாம் வாழும் இந்த நிலம், பருகும் நீர், சுவாசிக்கும் காற்று. நிலத்தை பாழ் படுத்தும் எந்த வகையான செயல் திட்டங்களையும் ஊக்கப்படுத்தக் கூடாது. இயற்கை விவசாயத்திற்கு  மானியங்களும், கடனுதவிகளும் தாராளமாகத் தந்துதவி ஊக்குவிக்க வேண்டும். திடப்பொருள் கழிவு மேலாண்மையை (குறிப்பாக மருத்துவ, பிளாஸ்டிக் கழிவு) சரிவரச் செய்ய வேண்டும். இரசாயன, தொழிற்சாலை, சாயக் கழிவுகளை ஆறு, குளங்கள், கடல் முதலான நீர்நிலைகளில் வெளியேற்றுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். காற்று மாசினை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் (குறிப்பாக நகரங்களிலும், தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளிலும்) வழி வகை செய்ய வேண்டும். தூய்மையான நீரையும், காற்றையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற வழி செய்ய வேண்டும். 

நீர்வளங்கள் பாதுகாப்பும் மேலாண்மையும் – குளம், ஏரி, ஆறு, சதுப்பு நிலங்கள், கடல் பகுதி முதலான நீர்நிலைகளை மேன்மேலும்  மாசுபடாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும், சீரழியாமலும் சரிவரப் பாதுகாக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குழாய் மூலமாகவும், நதிகளை இணைப்பதன் மூலமாகவும் நிரத்தரத் தீர்வு காணமுடியாது என்பதையும், இது இயற்கையை மேன்மேலும்  சீர்குலைக்கும் என்பதையும் அறிய வேண்டும். தூய்மை செய்கிறோம் எனும் பெயரில் ஆறுகளின், ஏரிகளின் கரைகளை சிமெண்டு (வைத்துப்) பூசி அவற்றை மூச்சடைக்க வைக்காமல் கழிவுகளை அகற்றி, மாசை நீரில் கலக்கும் தொழிற்சாலைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் வேண்டும்.  

இயற்கையான வாழிடங்களின் பாதுகாப்பு – இயற்கையான வாழிடங்கள் (காடு, வெட்டவெளிப் புல்வெளிகள், நீர் நிலைகள்) மேன்மேலும் ஆக்கிரமிக்கப்படாமலும், அயல் தாவரங்களால் பாதிப்படையாமலும் பாதுகாக்கப்பட வேண்டும். வெட்டவெளிகள்  பாழ் நிலங்கள் (Waste lands) அல்ல அதுவும் ஒரு வகையான இயற்கையான வாழிடம் என்பதை அறிய வேண்டும். இந்த வாழிடங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல்  அவ்வாழிடங்களில் சீரழிந்த பகுதிகளை அங்குள்ள தாவரங்களை மட்டும் வைத்து வளர்த்து அறிவியல் பூர்வமாக மீளமைத்தலும் (Ecological restoration) முக்கியம் என்பதை அறிய வேண்டும். அதற்காக திறந்த வெளி புதர் காடுகளிலும், வெட்டவெளிப் புல்வெளிகளிலும் யூக்கலிப்டஸ் முதலான அயல் தாவரங்களை நட்டு வைத்து வளர்ப்பது மீளமைத்தல் ஆகாது என்பதையும் அறிய வேண்டும். இது போல வளர்த்து வைத்த ஓரினத்தாவரங்கள், காடுகள் ஆகிவிடாது என்பதையும், இவற்றால் வனப்பரப்பு அதிகரித்து விட்டதாகச் சொல்வதையும் ஏற்க முடியாது.    

வனத்துறை மேம்பாடு – வனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள்) வேட்டைத் தடுப்புக் காவலர்களின் (Anti-poaching watchers) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லாத வனத்துறையின் கீழ் உள்ள இடங்களிலும் இது போன்ற வேட்டைத் தடுப்புக் காவலர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை அளிப்பதோடு, ஆயுள், விபத்து காப்பீடுகளையும் அளிக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான உபகரணங்களையும் (காமிரா, ஜி.பி.எஸ்), நவீன ஆயுதங்களையும் வழங்க வேண்டும். வனப் பாதுகாப்பு, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டங்களை தளர்த்தவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் கடுமையாக்கவும், தேவையான இடங்களில் விரிவாக்கவும் வேண்டும். திருட்டு வேட்டையை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு சரகத்திற்கும் பறக்கும் படையை அமைக்கவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களையும் (Wildlife Biologist) காட்டுயிர் மருத்துவர்களையும் (Wildlife Veterinarians) எல்லா பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரப் பணியில் அமர்த்தி அவர்களின் ஊதியத்தையும் சீரமைக்க வேண்டும்.

மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் – மாறிவரும் பொருளாதாரச் சூழலை சமாளிக்க, இயற்கை வளங்களைக்  குன்ற வைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணங்களால் (யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் கட்டமைப்புகள், விவசாயப் பெருக்கத்திற்காக வனப்பகுதிகளின் ஓரங்களை  ஆக்கிரமித்தல்,  இயற்கையான வாழிடங்களின் ஊடே  செல்லும் சாலை, இரயில் தடம், மின் கம்பிகள் முதலான நீள் கட்டமைப்புத் திட்டங்கள்) மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேன்மேலும்  அதிகரிக்கின்றது. இதனால் மனித உயிர் இழப்பும், காட்டுயிர் உயிர் இழப்பும், வாழிட இழப்பும் ஏற்படுகிறது. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க வனத்துறையுடன், வருவாய்த் துறை, காவல் துறை போன்ற துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு (Protected areas) வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் (குறிப்பாக மயில்) சேதம் அதிக அளவில் இருப்பின் அதை உறுதி செய்த பிறகு, அங்கும் அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளுக்கும் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டங்களை தொடங்குவதும் அவசியம். காட்டுயிர்களின் உயிருக்கு ஆபத்தில்லாத பயிர்களைப் பாதுகாக்கும் முறைகளை கண்டறிந்து அந்த முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.

விலங்குவழி நோய்த்தொற்றுப் பரவல் கண்காணிப்பும் மேலாண்மையும் – எதிர்காலத்தில் விலங்குவழி பெருந்தொற்றின் தீமைகளைக் குறைக்க ஒரே நலவாழ்வு கோட்பாட்டை (One Health Concept) முதன்மைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நல்வாழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவமைப்பு, சுற்றுச்சூழல், அதிலுள்ள காட்டுயிர்கள் ஆகிய எல்லாவற்றின் நலனையும் கருத்தில் கொண்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக் காரணமான காட்டுயிர் கள்ளச் சந்தை, காட்டுயிர் வேட்டை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். விலங்குவழி நோய்த்தொற்று பரவல், மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்க வேண்டும்.

இயற்கைக் கல்வி – இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறிந்த கருத்தாக்கங்கள் கொண்ட பாடத்திட்டத்தினை பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா தளத்திலும் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கும் இந்த கருத்தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகமாக உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு காட்டுயிர்களின் பால் இயல்பாகவே இருக்கும் நல்உணர்வுகளையும், உணர்வுபூர்மவான ஈர்ப்பையும், பிடிப்பையும் போற்றியும், அவை குன்றாமல் இருக்கவும்    ஆவன செய்ய வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக்கான  காரணங்களையும், அவை பரவாவண்ணம், தனிமனிதராக செய்ய வேண்டிவற்றையும், பொது சுகாதாரத்தை வலியுறுத்தியும், இயற்கை சீரழிவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோகாமல் இருப்பதையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

அழிவின் விளிம்பில் இருக்கும் வாழிடங்கள், காட்டுயிர்கள் பாதுகாப்பு – யானை, புலி முதலான பேருயிர்கள்  மட்டுமல்லாது, அதிகம் அறியப்படாத உயிரினங்களின் (உதாரணமாக அலங்கு, வௌவால் வகைகள் போன்றவை) பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். பாறு கழுகுகள் போன்ற அழிவில் விளிம்பில் இருக்கும் பறவைகளைப் பாதுகாக்க நெடுங்காலத் திட்டங்களை தொடங்க வேண்டும். வனத்துறையால் பாதுகாக்கப்படாத பகுதிகளில் உள்ள புதர்காடுகள், வெட்டவெளிப் புல்வெளிகள், கடலோரப் பகுதிகள் முதலான வெகுவாக அழிக்கப்பட்டுவரும் வாழிடங்களையும், அங்குள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.

நகரச் சூழல் மேம்பாடு – நகர்ப்புறங்களில் உள்ள உயிர்ப் பன்மையம் குறித்த விழிப்புணர்வையும், அவற்றின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள (பூங்கா, ஏரி, குளம் முதலான) இயற்கையான பகுதிகளை  ஆக்கிரமிப்பு செய்யாமல், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோர மரங்களை வெட்டாமல், மேன்மேலும்  இயல் வகை தாவரங்களையும், மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்கை வலியுறுத்தி அவர்களையும் அதில் ஈடுபட வைக்க வேண்டும். கார்பனை அதிகமாக வெளியிடும் செயல்பாடுகளை வெகுவாகக் குறைக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்.

——

உலக அளவில் தேர்தல் அறிக்கைகளில் பொதுவாக இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் துறைசார் வல்லுனர்கள், ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில கட்டுரைகளை இங்கே காணலாம்.

  • சுற்றுச்சூழல் குறித்த விரிவான தேர்தல் அறிக்கையை “பூவுலகின் நண்பர்கள்” குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. காண்க செய்தி.

——

Written by P Jeganathan

March 18, 2021 at 11:46 pm

நம் உயிர் போலே மன்னுயிர் காப்போம்

leave a comment »

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானில் வளரும் மரமெலாம் நான்,

காற்றும் புனலும் கடலுமே நான்.

                                                                                      – பாரதியார்

இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அதை ஒரு தொழிலாகவோ, பொழுது போக்காகவோ மேற்கொண்டு பலரும் பல விதச் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இது போன்ற எந்த அடையாளமும் இல்லாமல், சில இயற்கை ஆர்வலர்களின் செயல்பாடுகளை ஒத்த, இன்னும் சொல்லப்போனால் அது போன்றவர்கள் செய்வதை மிஞ்சிவிடக்கூடிய ஒரு செயலைச் செய்துள்ளனர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொத்தகுடி எனும் சிற்றூர் மக்கள்.

ஊரில் உள்ள தெருவிளக்குகளுக்கான சுவிட்ச் இருக்கும் பெட்டியில் ஒரு பறவை கூடு கட்டியிருந்ததைப் பார்த்து, அதைத் தினமும் திறந்தால் அவற்றுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால் சுமார் நூறு வீடுகள் இருக்கும் அந்த சிற்றுரே தெரு விளக்குகள் இல்லாமல் சுமார் 45 நாள்கள் இருளில் மூழ்கியிருந்தது. மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் இருந்த கூட்டில் குண்டுகரிச்சானின் (Oriental Magpie Robin) முட்டைகளைக் கண்டவுடன் மாலைவேளையில் தினமும் விளக்கை போடும் இளைஞர் கருப்புராஜா, அவ்வூர் மக்களிடம் இதைச் சொல்லியிருக்கிறார். ஊர்மக்களும், இனிமேல் அந்தப் பெட்டிக்கு அருகில் செல்ல வேண்டாம் எனக் கூட்டாக முடிவு செய்தனர். ஒரு சிலர் தொடக்கத்தில் எதிர்த்தாலும், பின்னர் புரிந்து கொண்டு இசைந்துள்ளனர்(பார்க்க செய்திகள் 1, 2, 3).

குண்டுகரிச்சான் கூட்டைப் பாதுகாக்கப் பொத்தகுடி ஊர்மக்களுடன் இணைந்து செயல்பட்ட கருப்புராஜா. (Screenshots from Youtube and Karuppuraja)

கருப்பு ராஜாவுடன் ஒரு சிறிய உரையாடல் (ஒலி வடிவில்)

குண்டுகரிச்சானின் கூடு. படங்கள்: கருப்புராஜா

இயற்கையை பாதுகாப்பதற்கென்றே உள்ள அரசுத்துறையும், அமைச்சகமும் இருந்தாலும் பல வேளைகளில் அவையே இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் நாம் காண்கிறோம். (எ.கா.தொழிற்சாலைகளுக்காக சரணாலயத்தின் பரப்பளவைக் குறைத்தல், வளர்ச்சி எனும் பெயரில் அணைகளைக் கட்ட காடுகளை அழித்தல், இதற்கெல்லாம் ஏதுவாக சட்டங்களைத் திருத்துதல், ‘தொந்தரவு செய்யும் உயிரினம்’ எனப் பெயரிட்டு அவற்றை கொல்லுதல்). பறவை ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் நேசிக்கும் பறவைகளுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கும் அருகில் சென்று விரட்டிப் படமெடுத்தல், அவற்றின் குரலோசையை ஒலிபரப்பி, உணவிட்டு வரவழைத்துப் பார்த்தல், படமெடுத்தல் போன்ற வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சிலரையும் நாம் காண்கிறோம்.

இன்னொரு புறம் பிற உயிர்களுக்காகப் பல தியாகங்களைச் செய்பவர்களையும் காண்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் கிராமத்தில் ஊருக்குள் உள்ள மரங்களின் மீது சங்குவளை நாரைகளும், கூழைக்கடாக்களும் கூடு வைத்துக் குஞ்சு பொரிக்கும். இது போலவே கர்நாடகாவில் உள்ள கொக்ரேபேலூர் கிராமத்திலும், ஆந்திராவில் உள்ள வெதுருப்பட்டு கிராமத்திலும் காணலாம். கேரளாவில் உள்ள திருச்சூர் பேருந்து நிலையம் அல்லது இரயில் நிலையத்துக்குச் செல்பவர்கள் அப்பகுதியில் சாலை ஓரத்தில் நடைபாதையெங்கும் வெள்ளைத் திட்டுகளாகப் பரவியிருக்கும் பறவைகளின் எச்சங்களைக் காணலாம். கூடமைக்கும் காலங்களில் அந்த இடமெங்கும் பறவைகளின் எச்ச வாடை வீசுவதையும்,  உணவுக்காக இடைவிடாமல் கத்தும் பறவைக் குஞ்சுகளின் குரலொலியையும் கேட்கலாம். இவை நீர்க்காகங்கள், இராக்கொக்கு முதலான பறவைகளின் கூடுகளே. இந்தக் கூடுகள் உள்ள பகுதிகளில் எல்லாம் குடியிருப்புகளும், கடைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பறவைகளின் வாசனையும், குரலொலிகளும் அங்கு வாழும் மக்களை ஒன்றும் செய்வதில்லை. அவர்கள் அவற்றைப் பார்த்தும், நுகர்ந்தும், கேட்டும் முகம் சுளிப்பதில்லை.

திருச்சூர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள இந்திய நீர்க்காகங்களின் கூடுகள்

இது போலவே, உத்தரக்கான்ட் மாநிலத்தில் நான் பார்த்த சில காட்சிகள் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. தென்னிந்தியாவுக்கு ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் வலசை வரும் தகைவிலான்கள் (Barn swallow) இனப்பெருக்கம் செய்ய மார்ச் மாத இறுதியில் இருந்து இமயமலைப் பகுதிகளுக்கு வலசை போக தொடங்கும். ஏப்ரல்-மே மாதங்களில் அவை கூடு கட்டுவது எங்கு தெரியுமா? அங்குள்ள வீடுகளிலும், கடைகளிலும் தான்! களப்பணிக்காக மசூரி, தேராதூன், கோபெஷ்வர், தார்ச்சுலா முதலிய பகுதிகளில் 2௦16 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பயணம் மேற்கொண்ட போது அங்கு கடைகளின் உள்ளே சுவரின் மூலைகளிலும், எரியும் பல்புகளின் மேலும் இவை கூடு கட்டியிருந்ததைக் கண்டேன். இவை ஈரமான மண்ணைத் தமது சிறிய அலகால் சேகரித்துக் கூடு கட்டும். ஒரு துணிக்கடையின் உள்ளே கடை முதலாளி அமரும் இடத்துக்கு மேலேயே இரண்டு தகைவிலான் கூடுகள் இருந்தன. ஒரு கூடு அவரது கல்லாவிற்கு நேர் மேலே அமைந்திருந்தது. எச்சம் கிழே விழும் இடத்தில் ஒரு அட்டையை வைத்திருந்தார். தினமும் அதை அப்புறப்படுத்துவதும் அவரது வேலைகளில் ஒன்று. இதை 3-4 மாதங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். தாய்ப்பறவை நாங்கள் அங்கே நின்று கொண்டிருக்கும் போதே எங்களைப் பொருட்படுத்தாமல் குஞ்சுகளுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது. எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. விடுமுறை நாள்களில் அவர் கடையைச் சாத்திவிட்டால் என்னவாகும் எனக் கேட்டேன். இப்பறவை கூடு வைக்கும் காலங்களில் கடைக்கு விடுமுறையே கிடையாது என்றார். இவர் மட்டுமல்ல உத்தரக்கான்ட் மாநிலத்தின் பல இடங்களில் இது போல் இப்பறவைகளின் கூடுகளை வைத்துப் பாதுகாக்கும் பல மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தலைக்கு மேலே தகைவிலான் கூடு!

கூட்டில் தகைவிலான் குஞ்சுகள்

குஞ்சுக்கு உணவூட்டும் தகைவிலான்

அண்மையில் கொரோனா வைரஸ் வௌவால்கள் மூலமாகப் பரவுகின்றது என்ற தவறான புரிதலில் பலர் வௌவால்கள் வந்தடையும் இடங்களைச் சேதப்படுத்தியும், அவை உள்ள மரங்களை வெட்டவும் செய்தனர். காலங்காலமாக நாம் வழிபடும் இடங்களில் வௌவால்கள் பறந்து செல்வதையும், அவற்றின் எச்சங்களை மிதித்துக் கொண்டும், எச்சவாடையை நுகர்ந்து கொண்டுந்தான் சென்று வந்து கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி நண்பர் தஞ்சாவூர் கவிராயர் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது வீட்டில் வௌவால்களுக்கு என ஒரு தனி அறையை ஒதுக்கிய அவரது நண்பரைப் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தியைச் சொன்னார். திருச்சோற்றுத்துறையில் வசிக்கும் அந்த குடும்பத்தினர், வௌவால்கள் வந்து அடையும் வீட்டின் அறையை அவற்றுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதென அங்கு அதிகமாகப் புழங்குவதையே குறைத்துக் கொண்டனராம். வீட்டை விற்கும் நிலை வந்தால் அந்த வௌவால்களைக் காப்பாற்றுபவர்களிடமே கொடுக்கவேண்டும் என்று குடும்பத்தின் முதியவர் சொன்னாராம். இப்படி நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் உயிர் நேயத்துடன் செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சக உயிரினம் வாழ்வதற்காக நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும்? நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை அறிந்தோ, அறியாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பிற உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் காக்கவே செய்கிறோம். நாம்வீட்டில் ஒட்டடை அடிக்கும் போது எட்டுக்கால் பூச்சிகளை விளக்குமாறால் அடிக்காமல் விட்டிருப்போம், யானைகள் வழித்தடம் என அறிந்த பின் அப்பகுதியில் வீட்டு மனை வாங்காமல் இருந்திருப்போம், சில காட்டுயிர்களையும் அவற்றின் உடல் பாகங்களையும் உண்பதால் பல நோய்கள் குணமாகும் என நம்பாமல் அவற்றை முற்றிலும் தவிர்த்திருப்போம் வாழிடங்களைப் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருக்கலாம் இப்படி இன்னும் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். இது போன்ற செயல்பாடுகள் தனி மனிதராகவோ, ஒரு அமைப்பின் மூலமாகச் செய்யப்படுபவை. ஆனாலும் ஒரு சமூகமே பல்லுயிர்ப் பாதுகாப்பை இயல்பாகவே, எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல்  செய்வதும், அவர்கள் பாதுகாக்கும் உயிரினங்களால் தமது இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு வந்தாலும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பிற உயிரினங்களை வாழ வைப்பது என்பதும், ஒத்து வாழ்வதும் (coexisting) அரிதே.

இயற்கையோடு இயைந்த வாழ்வை இந்தியாவின் பல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பலரும் இயல்பாகவே கடைப்பிடித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ராஜஸ்தானில் உள்ள பிஷ்னாய் இன மக்களைச் சொல்லலாம். இப்படிப் பிற உயிரினங்களையும் மதித்துப் போற்ற இவர்களுக்கெல்லாம் உந்து சக்தியாக இருப்பது எது? உலக மதங்கள் பலவும், நீதி நூல்களும், பிற உயிர்களைக் கொல்லாமையையும், துன்புறுத்தாமல் இருத்தலையும் (அதாவது அகிம்சையை) போதிக்கின்றன. எனினும் இவை மட்டுமே உயிரினப் பாதுகாப்புக்கு உதவுவதில்லை. உளவியல் நோக்கில் பார்த்தோமானால், ஓர் உயிரினத்தைக் கொல்லாமல் இருக்க, ஒத்து வாழ நம்மைத் தூண்டுவது கருணை, கரிசனம், பச்சாதாபம், சகிப்புத்தன்மை போன்றவற்றை சொல்லலாம்.

பொத்தகுடி மக்களின் செயலை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  ஆயினும் இவை யாவும் எல்லா நேரங்களிலும் எல்லாரிடத்திலும் இருப்பது அரிதே. மேற்சொன்ன திருச்சூர், வெதுருப்பட்டு, கூந்தன்குளம் எடுத்துக்காட்டுகளில் ஓர் ஒற்றுமையைக் காணலாம். இவை அனைத்தும் கூடமைக்கும் பறவைகள். கூட்டைக் கலைப்பதும், குட்டிகளுடன் இருக்கும் உயிரினங்களுக்குக் கேடு செய்வதும் உணர்வுப்பூர்வமாக மனிதர்களைப் பாதிக்கும் என்கிற காரணத்தால் நாம் அப்படிச் செய்யாமல் அவற்றை ஒரு விதக் கருணையுடன், அனுதாபப்பட்டு விட்டுவிடுகிறோம் எனலாம். அப்போது நம் உள்மனதில் நம்மையும் அறியாமல், அந்த உயிரினங்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்க்கிறோம். அதாவது அவற்றிற்கு ஏற்படும் அல்லது ஏற்படப்போகும் வலியை நாம் உணர்கிறோம். இதுவே ஒத்துணர்வாற்றல் அல்லது ஒன்றுணர்ச்சி (Empathy) ஆகும்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

                                                         – திருக்குறள், அதிகாரம்: இன்னாசெய்யாமை, குறள்:315

சிந்திக்கும் திறனுள்ளதால் மனிதர்களை அறிவுஜீவிகள் என்கிறோம். அதுபோலவே புலனை அறியும் திறன் உள்ளதால் (Sentience) புலனறி ஜீவிகள் அல்லது புலனரிவுயிரிகள் (Sentient beings) என்றும் சொல்லலாம். பிற உயிரினங்கள் சிலவற்றுக்கும் புலனறிதிறன் உள்ளதால் அவற்றையும் புலனறி ஜீவிகள் எனலாம்.

இந்தப் பண்புகளைக் கொண்டிருப்பதும், வளர்த்துக்கொள்வதும் பல்லுயிர்ப் பாதுகாப்புக்கு (Biodiversity Conservation) இன்றியமையாதது. இங்கு ஒன்றை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும். விலங்கு உரிமை, விலங்கு நலன் கருத்தாக்கத்துக்கும் மேற்சொன்ன பண்புகள் அடிப்படைத் தேவையாக இருந்தாலும், நான் சொல்ல வருவது காட்டுயிர்ப் பாதுகாப்பு அறிவியலின் (Conservation Biology) பின்னணியில் இருந்து என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இவையிரண்டுக்கும் உள்ள வேறுபாடு குறித்த விரிவான விளக்கங்களை திரு. தியொடோர் பாஸ்கரன் எழுதிய “சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலாச்சார அரசியலும்”, “கிழே விழுந்த குயில் குஞ்சு” முதலிய கட்டுரைகளில் காணலாம் (கையிலிருக்கும் பூமி, 2௦18 உயிர்மை பதிப்பகம்).

கூட்டைக் கலைக்கக் கூடாது எனும் எண்ணம் ஏற்பட்டு அதற்காகப் பல தியாகங்களைச் செய்யும் போது அங்கே சகிப்புத்தன்மையை நாம் காண முடிகிறது. இதுவும் நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பண்பு. ஆனால், கூட்டைக் காப்பாற்றும் போது இருக்கும் இந்தச் சகிப்புத்தன்மை பாம்பைக் கண்டவுடன் அடிக்கும்போதும், யானையும், காட்டுப்பன்றியும் நமது விளைநிலங்களை சேதப்படுத்தும் போதும் காணாமல் போய்விடுகிறது. அதாவது நமது உயிருக்கும், உடைமைக்கும் தீங்கு ஏற்படும் என நாம் என்னும் போது மேற்சொன்ன பண்புகள் நம்மிடையே இருப்பதில்லை. அதனால், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் செய்யத்துணிகிறோம்.

வேகமாக மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில், அதற்காக  இயற்கை வளங்களை க்குன்றவைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இவ்வேளையில் மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இயற்கை பாதுகாப்புக்கு அறிவியல் இன்றியமையாதது, அதற்கு இணையாக மக்களின் ஆதரவும் இன்றியமையாதது. இயற்கையின்பால் இயல்பாகவே மனிதர்களுக்கு உள்ள நல்லுணர்வுகளை போற்றி, அவை எவ்வேளையிலும் குன்றாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும். இதை இயற்கை ஆர்வலர்களும், இயற்கைக் கல்வியாளர்களும் புரிந்து கொண்டு, அறிவியல் தரவுகளையும், முடிவுகளையும் மட்டுமே எடுத்துச் சொல்லாமல், மக்களுக்கு இயற்கையின் மேல் உணர்வுப்பூர்வமான ஈர்ப்பையும், பிடிப்பையும் கொண்டுவரப் பாடுபடவேண்டும். குறிப்பாக ஆட்சிபுரிவோருக்கும், தொழிலதிபர்களுக்கும், கொள்கை வகுப்பவர்களுக்கும் இந்தப் பண்புகளைப் பற்றிச் சரியான தருணங்களில் எடுத்துச் சொல்லவேண்டும். விட்டுக்கொடுத்தலும், அனுசரித்துப்போவதும் மனிதர்களிடையே மட்டும் இல்லாமல் இயற்கையுடனும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான நீதிநெறி முறைகளின் அடித்தளம் கருணையுடன் கூடிய மனிதப் புலன் உணர்வுகளைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். பொத்தகுடி மக்கள் காட்டிய உயிர் நேயம்ம் நமக்கு உணர்த்துவதும் இதைத்தான்.

இந்து தமிழ் நாளிதழ் உயிர்மூச்சு இணைப்பிதழில் 15 ஆகஸ்டு 2020 அன்று “தன்னுயிர்போல் காக்கும் மனிதர்கள் நம்மிலும் உண்டு!” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். அதற்கான உரலி இங்கே.

வௌவாலும், வாட்ஸப்பும், கொரோனாவும்

leave a comment »

ரோஹன் சக்கரவர்த்தி (Rohan Chakravarty) ஒரு கார்டூனிஸ்ட் (Cartoonist). அவர்  கார்டூன் வரைவது எல்லாம் இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர் பற்றியும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் தான். அவரது இணையதளம் http://www.greenhumour.com/.

கார்டூனை தமிழில் கேலிச்சித்திரம், பகடிப்படம் எனலாம். ஆனால் இவரது சித்திரங்களை அப்படிப் பெயரிட ஏனோ மனம் ஒப்பவில்லை. ஏனெனில் அவரது சித்திரங்கள், படக்கதைகள் யாவும் கேலி செய்வது போலவும், வேடிக்கையாகவும் இருந்தாலும்,  காட்டுயிர், சுற்றுச்சூழல் குறித்த மிகவும் ஆழமான கருத்துகளையும், பிரச்சனைகளையும் மிகவும் எளிதில் புரியவைக்கும் தன்மை கொண்டவை. இவரது படைப்புகளை பசுமை இலக்கியத்தின் ஒரு அங்கமாகத்தான் பார்க்கவேண்டும். இவரது பல சித்திரங்கள் காட்டுயிர்களின் (பறவை, பாலுட்டி, தவளை, பூச்சி என பலதரபட்ட உயிரினங்கள்) பண்புகளை வேடிக்கையாக விளக்கியும், அவைகளுக்கு  மனிதர்களால் ஏற்படும் இன்னல்களை விளக்குவதாகவும், அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளை சம்மந்தப்பட்ட அந்த  உயிரினங்களே விளக்குவது போலவும்  இருக்கும்.

இயற்கைக்கும், காட்டுயிர்களுக்கும் ஊறுவிளைவிக்கும் எவராக இருந்தாலும், (பறவை ஆர்வலர்கள், கானுயிர் ஒளிப்படக்கலைஞர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என) பாரபட்சமின்றி அவர்களின் தவறுகளையும், அச்செயல்களால்  ஏற்படும் விளைவுகளையும் வெளிப்படையாக, அவர்களின் தலையில் நங்கென்று அழுத்திக் கொட்டுவது போல இருக்கும் ரோஹனின் சித்திரங்களும், படக்கதைகளும், விளக்கப்படங்களும்.

கொரோனா காலத்தில் வௌவால்கள் பற்றி சரியான புரிதல் இல்லாமல் அவற்றைப் பற்றிய பல எதிர்மறையான தகவல்கள் சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸப்பில் பரவியது. அப்போது அவற்றின் முக்கியத்துவத்தையும், கொரோனா வைரஸ் பரவும் முறை, காரணம் குறித்து பல விளக்கச் சித்திரங்களை இவர் வரைந்தார். இந்த பதிவில் உள்ளது அவற்றில் ஒன்று. இந்தச் சித்திரம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அவற்றை இங்கே காணலாம்.

http://www.greenhumour.com/2020/04/coronavirus-and-bats.html

வௌவால்கள் பற்றி எதிர்மறையான செய்திகளைக் சமூக வலைதளங்களில் கண்டால் இந்த விளக்கப்படத்தை தரவிறக்கம் செய்து மீள்பதிவு செய்யலாம்.

இந்த சித்திரத்தை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளித்த ரோஹன் சக்கரவர்த்திக்கும், சித்திரத்தில் (GIMP, Scribus மென்பொருட்களின் வழியே) சில மாறுதல்களைச் செய்ய உதவிய ஓவியர் பூபதிக்கும் என் நன்றிகள்.

Written by P Jeganathan

June 9, 2020 at 9:00 am

வௌவாலும் அல்ல…வைரசும் அல்ல…நாம் தான் காரணம்!

leave a comment »

விஞ்ஞான் பிரச்சார் (Vigyan Prasar) அமைப்பு அறிவியல் பூர்வமான கருத்துகளை இந்திய மொழிகளில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு திட்டத்தினை தொடங்கியுள்ளது. இத்திட்டம் தமிழ் நாட்டில் அறிவியல் பலகை எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது.

கோவிட் 19 நோய் தொற்று காலத்தில் வௌவால்கள் மீது அறிவியல் ஆதாரமற்ற பல எதிர்மறையான செய்திகள் பரப்பப்படுகிறது. இவற்றைப் பற்றி விளக்கவும் வௌவால்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் கொண்ட இணையவழி உரையை (Webinar) அறிவியல பலகை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான திரு. ஸ்ரீகுமார் ஏற்பாடு செய்திருந்தார். வௌவாலும் அல்ல…வைரசும் அல்ல…நாம் தான் காரணம்! எனும் தலைப்பில் இணையவழி உரை, 16 மே 2௦2௦ அன்று காலை (11:3௦ -12:3௦ வரை) நிகழ்த்தப்பட்டது.

இதற்கான தரவுகளையும், காட்சியளிப்பையும் தயாரிக்க வௌவால் ஆராய்ச்சியாளர்களான திரு ரோஹித் சக்கரவர்த்தி (Rohit Chakravarty) முனைவர் க்ளேர் வேட்லி (Claire wordley) ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். ATREE அமைப்பின் அங்கமான அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு மதிவாணன், அவர்களது குழுவினர் திருநெல்வேலி பகுதிகளில்,  வௌவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்திக் கொண்டிருக்கும் விவரங்களை தந்துதவினார். இவர்கள் அனைவருக்கும், திரு. ஸ்ரீகுமார் அவர்களுக்கும், அறிவியல் பலகைக்கும் மனமார்ந்த நன்றி.

நடத்திய உரைபதிவு செய்யப்பட்டு அறிவியல் பலகையின் YouTube Channelல் பதிவேற்றப் பட்டுள்ளது. அந்தக் காணொளியை இங்கே காணலாம்.

Written by P Jeganathan

June 3, 2020 at 2:52 am

இது ஒரு நல்ல வாய்ப்பு – ஒலி வடிவம்

with 2 comments

 

தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு ஒலி வடிவில்.

இந்தக் கட்டுரையை ஒலிவடிவில் பேசித் தந்த மேகலா சுப்பையாவுக்கும்,  காணொளி ஆக்கித் தந்த வெ. இராஜராஜனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பின்னணி இசை உபயம்

Naoya Sakamata – Dissociation” is under a Creative Commos license (CC BY 3.0). Music promoted by BreakingCopyright: http://bit.ly/2PjvKm7

“Steffen Daum – Goodbye My Dear” is under a Creative Commons license (CC-BY 3.0) Music promoted by BreakingCopyright: https://youtu.be/X7evDQiP3yI

பறவைகளின் குரலோசை ஒலிப்பதிவு

குயில் (ஆண்) – Peter Boesman, XC426536. Accessible at www.xeno-canto.org/426536.

குயில் (பெண்) – Mandar Bhagat, XC203530. Accessible at www.xeno-canto.org/203530

காகம் – Vivek Puliyeri, XC191299. Accessible at www.xeno-canto.org/191299.

சிட்டுக்குருவி – Nelson Conceição, XC533271. Accessible at www.xeno-canto.org/533271

செண்பகம் – Peter Boesman, XC290517. Accessible at www.xeno-canto.org/290517

செம்மூக்கு ஆள்காட்டி – AUDEVARD Aurélien, XC446880. Accessible at www.xeno-canto.org/446880.

இது ஒரு நல்ல வாய்ப்பு

with one comment

இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்காக, நாமே ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு.

உறவுகளைப் புதுப்பிக்க, மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இயற்கையுடனான நமக்குள்ள உறவுகளைச் சொல்கிறேன். எவ்வளவு அமைதியாக இருக்கிறது? இதற்கு முன் அனுபவிக்காத அமைதி. எப்போதும் இப்படியே இருந்துவிடாதா என ஏங்க வைக்கும் அமைதி. இத்தனை காலமாக எவ்வளவு இரைச்சல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்? நாம் வகுத்து வைத்த எல்லைகளில் போரிட்ட இரைச்சல், தரையின் அடியிலும், கடலின் அடியிலும் அணுகுண்டை வெடிக்க வைத்த போது ஏற்பட்ட இரைச்சல், மலைகளை வெடி வைத்துத் தகர்த்ததனால் எழுப்பிய இரைச்சல், கனரக வாகனங்கள் காட்டை அழிக்கும் போது எழுந்த இரைச்சல், மதப் பண்டிகைகள், கேளிக்கைகள் என நாம் ஏற்படுத்திக் கொண்ட இரைச்சல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Atomic bombing Nagasaki (Photo: Wikimedia commons) | A 21 kiloton underwater nuclear weapons effects test (Photo: Wikimedia Commons)

இந்த இரைச்சலை எல்லாம் சகித்துக் கொண்டு, இவற்றிலிருந்து கொஞ்ச நாட்களாவது விலகி இருக்க வேண்டுமென, அமைதியான இடங்களுக்குச் சென்றதும், அங்கு சென்றும் இரைச்சலை ஏற்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறதா? தேடிச்சென்ற அமைதி இப்போது தேடாமலேயே வந்துவிட்டது. அதை அனுபவிக்க வேண்டாமா? இத்தனை நாட்களாக நமது காதுகளை நாமே செவிடாக்கிக் கொண்டும், நம்மைச் சுற்றியிருந்த பல உயிரினங்களின் குரல்வளைகளை நெரித்து, அவற்றை பேசவிடாமலும் செய்து கொண்டிருந்தோம். நம் உலகம் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது நாமிருக்கும் உலகின் குரலை கேட்க எவ்வளவு நன்றாக இருக்கிறது?

இன்று காலை வீட்டினருகில் ஒரு அணில் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. ஆண் குயில் தூரத்தில் கூவியது. பெண் குயில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து கெக்… கெக்… கெக்… என கத்தியது. ஆண் குயில் கருப்பு. பெண் குயில் உடலில் பழுப்பும் வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். இவற்றின் நிறம் மட்டுமல்ல எழுப்பும் குரலொலியும் வேறு. காகங்கள் கரைந்தன. தெருமுனையில் சிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. பொதுவாக வீட்டின் முகப்பில் இருந்தோ, மொட்டை மாடியில் இருந்தோ அவை இருக்கும் திசை நோக்கி பார்த்தால் மட்டுமே தென்படும். இதுவரையில் வீட்டினுள் இருந்தபடி அவற்றின் குரலை கேட்டதில்லை. ஆனால் இன்று கேட்டது. தூரத்தில் செண்பகம் ஒன்று ஊப்..ஊப்..ஊப்..என தொடந்து கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை இப்பகுதியில் இருப்பதை இன்றுதான் அறிய முடிந்தது. அந்தி சாயும் வேலையில் ஒரு செம்மூக்கு ஆள்காட்டி வீட்டின் மேல் பறந்து கொண்டே கத்துவது கேட்டது. வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்த போது சப்போட்டா மரத்தில் இருந்து வௌவால்கள் இரண்டு பறந்து சென்றன. இவர்கள் யாவரும் என் தெருக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். இந்த அமைதியான தருணம், இவர்களையெல்லாம் அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

தூய்மைப் பணியாளர்

சில உறவுகைளை களைவதற்கும் கூட இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்கும் குப்பைகளுக்கும் இடையேயான உறவைச் சொல்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும், தெருவில் அந்த வயதான பெண்மணி நான்கு பெரிய ட்ரம்களைக் கொண்ட வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். ஒவ்வொரு நாளும் வீட்டு குப்பை டப்பாவும் நிரம்பி வழியும். அதில் பிளாஸ்டிக் குப்பை, காய்கறி கழிவு எல்லாம் சேர்ந்தே இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குப்பை டப்பா நிரம்புவதே இல்லை. நொறுக்குத்தீனி இல்லை, ஆகவே பிளாஸ்டிக் குப்பையும் இல்லை. அப்படியே இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் பருமன் அதிகரிக்கும் எனும் கவலையால், வாயைக் கட்டவும் கற்றுக் கொண்டாகிவிட்டது. வெளியில் செல்வது சரியல்ல என்பதால் ரசத்தில் மூன்று தக்காளிக்கு பதிலாக ஒன்று மட்டுமே. அதிகம் ஆசைப்படாமல், மேலும் மேலும் வேண்டும் என எண்ணாமல், இருப்பதை வைத்து சமாளிக்க, சிறியதே அழகு, குறைவே நிறைவு என்பதை இந்த அமைதியான நேரம் கற்றுத் தந்திருக்கிறது.

மற்றவர்களின் துயரங்களை உற்று நோக்கவும், அவர்கள் நிலையில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் சிறிய கூண்டில் புலி ஒன்று ஓயாமல் அங்குமிங்கும் திரும்பித் திரும்பி நடந்து கொண்டே இருந்ததும், கோயிலில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட யானை இடைவிடாமல் தலையையும், தும்பிக்கையையும் மேலும் கீழும் ஆட்டி, கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்ததும் நினைவுக்கு வந்தது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு. என் வீட்டு சன்னல் வழியாகப் பார்த்தால் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் வளர்ப்புக் கிளிகளின் கூண்டு தெரியும். வெகுதொலைவில் இருந்து, அமேசான் காடுகளில் இருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ நம்மால் கடத்திக் கொண்டுவரப்பட்டவை அவை. வளர்ப்பு உயிரிகளின் நேசம் காரணமாக ஏற்பட்ட கள்ள சந்தையின் விளைவு. ஒவ்வொரு முறை நாம் கடைக்குச் சென்று அழகாக இருக்கிறதென்று கிளிகளை வாங்கி வரும் போது, நாமும் அந்தக் கள்ளச் சந்தையை ஊக்குவிக்கிறோம்.

Photo: Wikimedia Commons

கூண்டுக்குள் மட்டும்தான் அடைத்து வைத்திருக்கிறோமா? நம்மைத் தவிர இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சுதந்திரமாக உலவ விடாமல், ஒடுக்கியுமல்லவா வைத்திருக்கிறோம். காபி, தேயிலை, யூக்கலிப்டஸ் என ஓரினப்பயிர்களை வளர்க்க, அகலமான சாலைகளை, இரயில் பாதைகளை அமைக்க, உயர் அழுத்த மின் கம்பிகளை கொண்டுசெல்ல, இராட்சத நீர் குழாய்களையும், கால்வாய்களையும் கட்ட, நகரங்களை விரிவாக்கி கட்டடங்களை எழுப்ப, மலைகளை வெட்டி, காடுகளைத் திருத்தி இயற்கையான வாழிடங்களை துண்டு துண்டாக்கி, அங்கு வாழும் யானைகள், சிங்கவால் குரங்குகள், மலையணில்கள், பறவைகள், சின்னஞ்சிறிய தவளைகள் முதலான பல உயிரினங்களின் வழித்தடத்தை மறித்தும், அவற்றின் போக்கை மாற்றியும், அவற்றில் பலவற்றை பலியாக்கிக் கொண்டுமல்லவா இருக்கிறோம். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் போது நம்மால் அடைத்து வைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நிலையையும் சற்றே உணர இது ஒரு நல்ல வாய்ப்பு.

இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் பல வகையான நீள் குறுக்கீடுகள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அனுசரித்து நடக்கவும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் புரிந்து கொள்ளச் சொல்வது நாம் ஆக்கிரமித்த பகுதியில் ஏற்கனவே வசித்து வந்த உயிரினங்களை, அவற்றின் குணாதிசயங்களை. எத்தனை யானைகளை பிடித்து கட்டிவைத்திருப்போம், எத்தனை சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வேறு இடங்களில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்? எத்தனை மயில்களை நஞ்சிட்டுக் கொன்றிருப்போம்? எத்தனை பாம்புகளை அடித்தே சாகடித்திருப்போம்? சினிமாவில் நிகழ்வது போல் எந்த காட்டுயிரியும் நம்மை துரத்தித் துரத்தி வந்து கொல்வதில்லை. “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல அவை நம்மைக் காணும் போதெல்லாம் விலகியே செல்ல முற்படும் என்பதை நாம் அறியவேண்டும். எதிர்பாராவிதமாக நாம் அவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் ஏற்படும் அந்த அசாதாரணமான சந்திப்பில், பயத்தில் அவை தாக்க நேரிட்டு மனிதர்கள் காயமுறவோ, இறக்கவோ செய்யலாம். ஆறறிவு கொண்ட நாம் கவனமாக இருக்க வேண்டாமா? எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டாமா? கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிரி அது நம் மேல் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம், அதுபோல காட்டுயிர்கள் வாழும் பகுதியில் நாமும் வாழ நேர்ந்தால் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது வீட்டில் இருப்பவர்களிடம் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள். இருந்தாலும் அவர்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டிவிடுகிறோமா? அல்லது கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வருகிறோமா? எனவே, எல்லா உயிரினங்களுடனும் எச்சரிக்கையுடன், சரியான இடைவெளியில் சேர்ந்து வாழ பழகிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

Coronavirus – Photo: Wikimedia Commons

யாரையும் குற்றம் சொல்லாமல் இருக்கக் கற்றுக்கொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பு. வைரஸை தமிழில் தீநுண்மி என்கின்றனர். ஒரு உயிரினம் என்ன செய்ய வேண்டுமோ, அதாவது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதைத்தான் அதுவும் செய்கிறது. பல்கிப்பெருகிக்கொண்டுள்ளது, நாம் வளர எத்தனையோ வகையான உயிரினங்களை அழிக்கிறோம்? நமக்கு என்ன பெயர்? மனிதர்கள் என்பதை மாற்றி தீயவர்கள் என வைத்துக் கொள்ளலாமா?

இந்த அமைதியான நேரத்தில் இனிவரும் காலங்களில் இந்த உலகிற்கும், நமக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப்பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள, சிந்திக்க, அதை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட, இது ஒரு நல்ல வாய்ப்பு.

தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/547821-good-chance.html

“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் நேர்காணல்

leave a comment »

“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் இதழுக்காக (01-05-2019/25-௦4-2019-Online) பத்திரிக்கையாளர் திரு. க. சுபகுணம் அவர்களிடம் பகிர்ந்தவை..

நேர்காணலின் முழு வடிவம் கீழே:

பறவைகள். பூவுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனத்தின் ஈர்ப்பையும் அன்பையும் சற்றுக் கூடுதலாகப் பெற்ற உயிரினம். மனிதனால் இவ்வுலகில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் வெகுவாக பாதிக்கப்படுவதும் பறவைகளே. சூழலியல் பாதுகாப்பில் ஒருவரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் முதலில் அவரைப் பறவை நோக்குதலுக்குப் பழக்கவேண்டும். அதுவே தானாக அவரை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பறவை நோக்குதலைத் தமிழகத்தில் பரவலாக்கியதில் பல பறவை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அத்தகைய பறவை ஆய்வாளர்களில் முக்கியமானவர் ப.ஜெகநாதன். மக்கள் அறிவியல் (Citizen Science) தமிழ்ச் சமுதாயத்தில் பரவலானதிலும் இவருடைய பங்கு மிக முக்கியமானது. ஆய்வாளர்கள் மக்களிடமிருந்து பிரிந்து நிற்கக்கூடாது, அவர்கள் மக்களுடன் நிற்க வேண்டும். அதை நடைமுறையில் செய்துகொண்டிருப்பவர். இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாக காட்டுயிரியலாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி…

ஆய்வுத்துறையில் குறிப்பாகப் பறவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உந்துதல் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

1996-ம் ஆண்டு மாயவரத்தில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் முதுகலையில் காட்டுயிரியல் படித்துக் கொண்டிருந்தேன். மக்கள் மத்தியில் காட்டுயிர் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டிருந்த சமயம். என் களஆய்வுக்காக தவளைகள், பாம்புகள், முதலைகள் போன்ற உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தேன். ஒகேனக்கல், பிலிகூண்டு, ராசிமணல் போன்ற பகுதிகளின் நதியோரங்களில் தான் களப்பணி. அப்போது பறவைகள் மீது அதீத ஆர்வம் இல்லையென்றாலும், ஓரளவுக்குப் பறவைகளைப் பார்க்கும் பழக்கமிருந்தது. அந்தச் சமயத்தில் என் பெற்றோர்கள் ஒரு இருநோக்கியை பரிசளித்தார்கள். அது மிகவும் பயனுடையதாக இருந்தது. காவிரிக் கரையில் நடந்து செல்லும் போது பல விதமான பறவைகளை முதன் முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆக, பறவைகள்மீது உங்களுக்கு அளப்பரிய ஆர்வம் வந்ததற்கு அந்த இருநோக்கியை காரணமாகச் சொல்லலாமா?

அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நான் பறவைகளைப் பார்க்கத்தொடங்கியது நூல்களில் தான்! சாலிம் அலி எழுதிய இந்தியப் பறவைகள் (The Book of Indian Birds) எனும் நூலை ஆர்வத்துடன் தினமும் புரட்டிக்கொண்டிருப்பேன். அதில் உள்ள பலவகையான பறவைகளின் ஓவியங்களை பார்க்கையில் அவற்றை நேரில் பார்க்கும் ஆசை எழும். பறவை பார்த்தல் எப்போதும் அங்கிருந்துதான் தொடங்கும். நூலில் நாம் பார்க்கும் படங்கள் மனதில் பதியும்போது அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இயல்பாகவே குழந்தையைப்போல் துள்ளிக் குதிப்போம். படத்தில் பார்த்த ஒன்றை நேரில் பார்த்தால் யாருக்குத்தான் ஆனந்தமாக இருக்காது.

அப்படிப் பார்த்ததில் எந்தப் பறவை முதலிடத்தில் உள்ளது?

முதலிடம் என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனினும் இன்னும் நீங்காமல் நினைவில் நிற்பது ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முதன்முதலில் கண்ட மஞ்சள் தொண்டை சிட்டு (Yellow-throated Sparrow), மாயவரம் கல்லூரி விடுதியில் இருந்து பார்த்த கொண்டைக் குயில் (Red-winged Crested Cuckoo), களக்காட்டில் பார்த்த பெரிய இருவாச்சி (Great Pied Hornbill) போன்றவற்றைச் சொல்லலாம். இன்னும் பார்க்க வேண்டிய பறவைகள் எத்தனையோ உள்ளன. ஆக இந்தப் பட்டியல் என்றுமே முடியாது.

இந்தப் பறவைகளை எல்லாம் புத்தகத்தில் பார்த்துப் பழகியபின் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன். அப்படித் தொடங்கிய ஆர்வம்தான் இதுவரை இழுத்து வந்துள்ளது. பறவைகளைப் பார்க்க இருநோக்கி வேண்டுமென்றில்லை, ஆர்வம் இருந்தால் போதும். முதலில் பறவைகளின் படங்களை நாம் பார்க்கவேண்டும். அதை நேரில் பார்க்கையில் நாமே தானாக இனம் காண முயல்வோம். அதுதான் ஆர்வத்தின் முதல்படி. அவற்றின் குரலைக் கேட்டு அறிந்து கொள்வோம். அதன்பிறகு அவற்றைக் கூர்ந்து கவனிக்க இருநோக்கிகள் நமக்குப் பயன்படும்.

பறவை நோக்குதல் பொதுமக்களிடத்தில் பரவுவது அவசியமானதா?

பறவை நோக்குதல் என்பதொரு அருமையான பொழுதுபோக்கு. குழந்தைகள் முன்பெல்லாம் தெருவில் விளையாடுவார்கள், குளத்தில் குளிக்கப்போவார்கள். அவை தற்காலத்தில் மிகவும் குறைந்துவிட்டது. குளம், ஏரி, காடு மேடுகள் எல்லாம் சுற்றும்போது அங்கிருக்கும் மரங்கள் உயிரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் தற்போது இல்லாமலே போய்க்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, செல்போன்கள் அவர்களை ஓரிடத்தில் முடக்கி வைக்கிறது. அதனால், தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, இயற்கைமீது பற்றுதல் ஏற்படுத்த, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனை உதிக்கப் பறவை நோக்குதல் பயன்படும். பறவை என்றில்லை, வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பூச்சிகள், என இயற்கையில் உள்ள எந்த உயிரினாமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நமக்குப் பிடித்தால்தானே பாதுகாக்க நினைப்போம். ஆதலால், இயற்கையைப் பிடிக்க வைக்கவேண்டும். அதற்குப் பறவை நோக்குதல் முதல் படி. அதன்மூலம் பறவைகளை மட்டுமில்லாமல் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களைத் தூண்டும். ஒரு சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப் படுகிறதென்றால் அதை எதிர்த்து மக்களைப் போராட வைக்கும்.

அதையும் தாண்டி, பறவை நோக்குதலில் ஈடுபடும் ஒருவர் பொறியாளராக மாறினால் அணை கட்டுவதாக இருந்தாலும், காட்டின் குறுக்கே சாலை போட நேர்ந்தாலும் அங்கு சூழலியல் தாக்க மதிப்பீடு முறையாகச் செய்யவேண்டுமென்று நினைப்பார். அங்கிருக்கும் உயிரினங்களின் வாழிடம் அழியக்கூடாதென்ற கரிசனத்தோடு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். இதெல்லாமே பறவை நோக்குதல் தரும் பலன்களாகக் கருதலாம். ஒரு பொறுப்புள்ள சூழலியல்வாதியாக மக்களை உருவாக்குதில் இது மிகப்பெரிய பங்காற்றும்.

மக்கள் அறிவியல், தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படுகிறது, நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. மக்களை இதுமாதிரியான அறிவியல்பூர்வ முயற்சிகளில் பங்கெடுக்க வைப்பது எப்படி சாத்தியமானது? இதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா!

நீங்களும்தான் இதைச் செய்கிறீர்கள். விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தை நடத்துகிறீர்களே, அது எதற்காக?

மாணவர்களுக்கு சமுதாயப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதை எப்படி அணுகவேண்டுமென்ற புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் பத்திரிகையாளராக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளைப் பற்றிய புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். அதுதானே சமுதாயத்தின் சிறந்த மனிதராக அவர்களுக்குத் துணைபுரியும்.

இதுவும் கிட்டத்தட்ட அதேபோலத்தான். இதழியல் என்பது ஒரு துறை என்பதையும் தாண்டி அதை பொது மக்களும் செய்யமுடியுமென்ற (Citizen Journalism) நம்பிக்கையை எப்படி நீங்கள் விதைத்தீர்களோ அதையேதான் மக்கள் அறிவியல் (Citizen Science) மூலம் சூழலியல் துறையிலும் செய்யமுடிகிறது. அப்போதுதானே சிறந்த சூழலியல் பாதுகாவலனாக மக்கள் வாழமுடியும்.

மக்கள் அறிவியல் பற்றி இன்னும் விரிவாகக் கூறமுடியுமாஅது எப்படி அறிவியல் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றது? இது எப்படி பறவைகள் அல்லது இயற்கை பாதுகாப்பில் உதவும்?

ஒருவர் ஒரு பறவையைப் பார்க்கிறார். அதன் பெயர், பார்த்த இடம், நேரம் அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்கிறார். இதுவொரு முக்கியமான தரவு (Data). உதாரணத்திற்கு, 1980-களில் தஞ்சாவூரில் ஒருவரிடம் பாறு கழுகின் படமும் பார்த்த நேரம், இடம் போன்ற தகவல்களும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை அவரே வைத்திருந்தால், அவர் இறந்தபின் அது பயனில்லாமல் போய்விடும். பொதுவெளியில் அதாவது eBird, Wikipedia, Wikimedia Commons போன்ற Portal களில் அதை உள்ளிட்டால் அதே தரவுகள் ஆவணமாகும். இங்கெல்லாம் முன்பு பாறுகள் இருந்திருக்கிறது, இப்போது இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் ஆய்வுகளில் பயன்படும். அதுவும், அழிவின் விளிம்பிலிருக்கும் பாறு போன்ற பறவைகளின் தரவுகள் பொக்கிஷங்களைப் போல. அது பல முடிச்சுகளை அவிழ்க்கவும், ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தவும்கூடப் பயன்படும்.

சிட்டுக்குருவியால் அழியும் தருவாயில் இல்லை என்பதை நிரூபிக்கவும் இது போன்ற திட்டங்கள் உதவும். (பார்க்க Citizen Sparrow ).

உதாரணமாக ஒரு ஏரி அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியில் இருந்து இருந்து பலரும் அங்கிருக்கும் பறவைகளை பல்லாண்டு காலமாக தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாகவும் அவற்றை eBirdல் உள்ளிடுவதன் மூலமும் அங்குள்ள பொதுப்பறவைகளையும், அரிய பறவைகளையும், வலசை வரும் பறவைகளையும், அவற்றின் அடர்வையும் (density) அறிய முடியும். சில ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்த ஒரு வகைப் பறவை இந்த ஆண்டு கணக்கெடுப்பில் குறைந்து போனதென்றால் அதை அறிந்து கொண்டு அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.

ஒரு வேளை யாரோனும் அந்த ஏரியில் மண்கொட்டி நிரப்பி கட்டடம் கட்ட வந்தாலோ அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியின் குறுக்கே பெரிய அகலமான சாலையை போட வந்தாலோ அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை பொதுவெளியில் உள்ள மக்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்தே அந்தத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதை அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்க முடியும்.

ஆக தரவுகள் சேகரிப்பதுதான் இதன் நோக்கமா?

இல்லை. இதுபோன்ற தரவுகளை மக்கள் அறிவியல் மூலமாகச் சேகரிக்க வைப்பது மக்களுக்கும் அதன்மூலம் அறிவியல் சார்பான புரிதலை ஏற்படுத்தவும் தான். அவர்கள் சேகரிக்கும் தரவுகளைப் பொதுத்தளத்தில் பதிவிட ஊக்குவிக்கும் போது, அதன்மூலம் மிகப்பெரிய ஒரு கடலில் நாம் போட்ட துளியும் இருக்கிறதென்று அவர்கள் உணர்வார்கள். அது அறிவியல் மனப்பான்மையோடு அனைத்தையும் அணுகவேண்டுமென்ற சிந்தனையை அவர்களிடம் மேன்மேலும் அதிகரிக்கும்.

மக்கள் அறிவியல் தரவு சேகரிப்பதற்கான கருவி மட்டுமல்ல. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது போன்றவற்றை மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு செயல்முறை.

மக்கள் அறிவியல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்துகொள்ளவும் அதைக் கணிக்கவும்கூடப் பயன்படுமாமே! உண்மையாகவா?

சூழியல் சுட்டிக்காட்டிகளான பறவைகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து அவைகளோடு இவ்வுலகில் இருக்கும் நமக்கும் எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறியலாம். பூமி சூடாதல், காலந்தவறி பெய்யும் மழை, பனி, உயரும் கடல் மட்டம் போன்றவை பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் வெகுவாக பாதிக்கிறது.

வெப்பநிலை உயர்வால் உலகில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பல பறவைகள் பாதிப்படைந்துள்ளன. வெகுதூரத்தில் இருந்து  வலசை வரும் பறவைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள. உதாரணமாக ஒரு பழவுண்ணிப் பறவை வகை அது அது வலசை சென்ற இடத்தில் இருந்து கிளம்பி கூடமைக்கும் இடத்திற்கு செல்கிறது. அவ்வேளையில் அங்கே அவை உண்ணும் ஒரு பழ மரம் காலந்தவறி முன்னமே பூத்து காய்த்து பழுத்து ஓய்ந்து விடுகிறது. அப்போது அங்கு வரும் அப்பறவைகளுக்கு போதுமான உணவு கிடைக்காமல் போகலாம். அவை அங்கே செல்வது கூடமைத்து தம் இனத்தைப் பெருக்க. ஆனால் போதிய உணவு இல்லாததால் சில பறவைகள் கூடமைகாமல் போகலாம், அப்படியே கூடமைத்தாலும் குஞ்சுகளுக்கு சரிவர உணவு கிடைக்காமல் அவை இறந்து போகலாம்.

ஒரு பகுதிக்கு ஒரு வகையான பறவை வலசை வரும் நாள் அல்லது வாரம் அதே போல அவை அந்த இடத்தை விட்டு கிளம்பும் நாள் அல்லது வாரம் என்பது மிகவும் முக்கியமான தரவு. இதை பல பறவையாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பதிவு செய்து பொதுவெளியில் உள்ளிடும் போது இது ஒரு முக்கியமானத் தரவாகும். இந்தத் தரவுகள் மூலமாக ஒரு பறவை ஓரிடத்தில் எத்தனை நாட்கள் தங்குகின்றன என்பது தெரியும். அதேபோல் இதற்குமுன் எத்தனை நாட்கள் தங்கியிருந்தன என்பதும் தெரியும். இந்தக் காலகட்டம் தற்போது மாறுபடுகிறது. அதற்குக் காரணம் அந்த இடத்திலிருக்கும் தட்பவெப்ப நிலையில் நடக்கும் மாற்றங்கள். அந்த மாற்றங்களுக்குக் காரணம் காலநிலை மாற்றமா என்பதை ஆராய முடியும். மக்கள் தரவுகளாகப் பதிவேற்றும்போது அதைவைத்து ஆய்வு மாதிரி ஒன்றை உருவாக்கி அந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் என்னென்ன விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென்றுகூடக் கணிக்கமுடியும். அதற்கு மக்கள் அறிவியல் உதவும்.

இதுமாதிரியான தரவுகளை மக்கள் பதிவிட்டதன் மூலமாகக் கார்னெல் பல்கலைக்கழக  (Cornell University) ஆய்வாளர்கள் தற்போது காலநிலை மாற்றத் தால் ஏற்படும் பாதிப்பை கணிக்கின்றனர். வலசைகள் முன்பு எப்படியிருந்தன, இப்போது எப்படி மாறியிருக்கின்றன, காலப்போக்கில் அது எப்படி மாறுபடும் என்பதையும் அவர்கள் இதன்மூலம் சொல்கிறார்கள். மக்கள் அறிவியல் குடிமக்களிடம் அறிவியல்சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆய்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கின்றது. ஆம், அறிவியல் ஆய்வுகளில் மக்களும் பங்கெடுக்க முடியும். மக்கள் அறிவியலைக் கையிலெடுப்பதன் மூலம் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கணிப்பதற்கு மக்கள் உதவவேண்டும்.

சமீப காலங்களில் போலி அறிவியல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அறிவியற்பூர்வமாக ஆதாரமற்றவைகளை அறிவியல் சாயம் பூசிப் பிரசாரம் செய்கிறார்களே! அதை எப்படி அணுகுவது?

இப்போதில்லை, இந்த மாதிரியான பிரச்னைகள் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இன்னமும் பூமி தட்டை என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இவை இருந்துகொண்டேயிருக்கும். இவற்றைக் கண்டு சினங்கொண்டு, மிரண்டு, மன அழுத்தத்தில் அமர்ந்துவிடக்கூடாது. சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். காலநிலை மாற்றமே பொய்யென்று சொல்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அமெரிக்காவின் ஆகப்பெரிய இரண்டு கட்சிகளும் தற்போது சண்டையிட்டுக் கொள்வதே இதுகுறித்துத்தானே. தெரியாமல் பேசுபவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கலாம். தெரிந்தே அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுபவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுவிட வேண்டும். காலப்போக்கில் அவையெல்லாம் நீர்த்துப்போகும். அதைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை.

ஆனால், ஒரு விஞ்ஞானி அமைதியாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லை, அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவரகளுமே இதில் வாய்திறந்து பேசவேண்டும். அதுமாதிரியான போலி அறிவியல்களைத் தக்க ஆதாரங்களோடு போட்டுடைக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களாக அது அவர்களுடைய கடமை.

இந்தப் போலி அறிவியல் சூழலியல் பாதுகாப்பையும் பாதிக்கிறதா! மக்களிடம் பரவிக் கொண்டிருக்கும் இதுமாதிரியான விஷயங்களைக் கலைந்து உண்மைகளை எப்படிக் கொண்டுசெல்வது?

அறிவியல்பூர்வ மனப்பான்மை என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. எதையும் பகுத்தறியும் திறன் சமுதாயத்தில் வளரவேண்டும். அது நம்மிடம் மிகக் குறைவாகவே இருந்தது. தற்போதும் அப்படித்தான் இருக்கிறதென்றாலும் ஓரளவுக்கு அது மாறிவருகிறது. ஒருவர் அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும்போது பெரும்பாலானவர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் அறிவியல் பார்வை வளர்ந்து வருகிறது. முன்பே சொன்னது போல் மக்கள் அறிவியல் மூலமாகவும் அறிவியல்பூர்வ மனப்பாங்கை வளர்த்தெடுக்க முடியும். அறிந்தவர்கள் அனைவரும் இதற்காக உழைத்துக் கொண்டே இருந்தால் போதும் அவை தானாக நீர்த்துப்போய்விடும்.

2.0 படம் பற்றிய உங்கள் கருத்து

நான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பலர் சொல்வதை வைத்தும் அப்படத்தைப் பற்றிய கட்டுரைகளை படித்ததை வைத்தும் தான் சொல்கிறேன்.

ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்துக் கண்டுபிடிக்கும் விஷயங்களை இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற திரைப்படங்கள் ஒரு நொடியில் தகர்த்துவிடுகின்றன. கைப்பேசி கோபுரங்களால் பறவைகள் அழிவதாக அந்தப் படத்தில் பேசியிருப்பது ஏற்கனவே பலமுறை பொய்ச் செய்தியென்று நிரூபிக்கப்பட்டு புதைக்கப்பட்ட விஷயம். அடிப்படைத் தேடுதல்கூட இல்லாமல், அதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அறிவியலுக்குப் புறம்பானது.

தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்

leave a comment »

தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் (Protected areas of Tamil Nadu)

தமிழகத்தின் இயற்கைச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் இங்குள்ள பல வகையான சூழல் தொகுப்புகள் தான். இதனாலேயே தமிழகம் பல வகையான வாழிடங்களையும், கானுயிர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பண்டைய தமிழர் தமிழகத்தின் சூழல் தொகுப்பினை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரித்திருந்தனர். காடும் காடு சார்ந்த நிலப்பகுதி முல்லை எனவும், மலையும் மலையைச் சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், வயலும் வயலைச் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடலைச் சார்ந்த பகுதி நெய்தல் எனவும், முல்லையும், குறிஞ்சியும் பல காரணிகளால் சிதைவடைந்து அதன் இயல்பிழந்திருப்பின் அதனை பாலை எனவும் பிரித்திருந்தனர்.

புவியமைப்பினை பொறுத்து தமிழகத்தில் நான்கு வகை இயற்கையான சூழல் தொகுப்புகள் இருப்பதை அறியலாம். அவை முறையே:

1. மலைகள் (Mountanins)
2. மேட்டுநிலங்களும் சமவெளிகளும் (Plateau and plains)
3. நன்னீர்நிலைகள் (Freshwater region)
4. கடற்பகுதி (Coastal region)

தமிழ் நாட்டில் உள்ள சில இயற்கையான வாழிடங்கள்: மலைகள், நன்நீர்நிலைகள், கடற்பகுதிகள், மேட்டுநிலங்கள், சமவெளிகள் (Photos: Wikimedia Commons)

இது தவிர செயற்கையான அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வேளாண்நிலப்பகுதிகள் (Agricultural region) மற்றும் மனிதர்கள் வாழும் ஊர்ப்புறங்களும் நகர்ப்புறங்களும் (Human habitations) ஒரு வகையான சூழல் தொகுப்பே. ஒவ்வொரு சூழல் தொகுப்பிலும் பல வகையான வாழிடங்களைக் காணமுடியும்.

இந்த சூழல் தொகுதிகளில் இருக்கும் பல வகையான வாழிடங்களும், அதில் வாழும் உயிரினங்களும் காட்டுயிர்ச் சரணாலயம், தேசியப் பூங்கா, புலிகள் காப்பகம், உயிர்மண்டலக் காப்பகம், பல்லுயிர்ப் பாதுகாப்பகம் என பல வகைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

காட்டுயிர்ச் சரணாலயங்கள் (Wildlife Sanctuaries)

கோடியக்கரை புதர்க் காடு

சரணாலயங்கள் அமைக்கப்படுவது பொதுவாக ஒரு சில வகை உயிரினங்களுக்காகவே. உதாரணமாக களக்காடு காட்டுயிர்ச் சரணலயம் சோலைமந்திகளுக்காவே (சிங்கவால் குரங்கு) ஏற்படுத்தப் பட்டது. அதாவது ஒரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரினத்தை பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. அந்த உயிரினம் ஒரு விலங்காக மட்டுமல்லாமல் தாவரமாகவோ அல்லது தாவரச் சமுதாயமாகக் (Plant community) கூட இருக்கலாம். இதனால் அந்த குறிப்பிட்ட உயிரினம் மட்டுமல்லாமல் அதன் வாழிடமும் சேர்ந்து பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் இது வரை 11 இடங்கள் காட்டுயிர்ச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

1. முதுமலை காட்டுயிர்ச் சரணாலயம்
2. கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்
3. களக்காடு காட்டுயிர்ச் சரணாலயம்
4. இந்திரா காந்தி காட்டுயிர்ச் சரணாலயம்
5. முண்டந்துறை காட்டுயிர்ச் சரணாலயம்
6. வல்லநாடு வெளிமான் சரணாலயம்
7. சிறீவில்லிப்புத்தூர் நரை அணில் சரணாலயம்
8. கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
9. கொடைகானல் காட்டுயிர்ச் சரணாலயம்
10. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
11. காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்

தேசியப் பூங்காக்கள் (National Parks)

கிண்டி தேசியப் பூங்காவில் வெளிமான். Photo: A J T Johnsingh/wikicommons

இயற்கைச் சூழலில் வாழும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தை மட்டும் முன்னிருத்தி சரணாலயங்கள் என பாதுகாக்காமல் அவற்றின் உயிர்ச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்படுபவை தேசியப் பூங்காக்கள். தமிழகத்தில் இது வரை 5 இடங்கள் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் காட்டுயிர் சரணாலத்தினை ஒட்டிய சில பகுதிகளையும் சேர்த்து பழனி தேசியப் பூங்காவாக மேம்படுத்தும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1. கிண்டி தேசியப் பூங்கா
2. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா
3. இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
4. முதுமலை காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
5. முக்குறுத்தி தேசியப் பூங்கா

புலிகள் காப்பகங்கள் (Tiger Reserves)

மேல் கோதையாறு, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். Photo: A J T Johnsingh/Wikimedia commons

அருகிவரும் வேங்கைப் புலிகளின் பாதுகாப்பிற்காக 1973ல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் (Project Tiger – http://projecttiger.nic.in/) கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகளை கள்ள வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதுவுமே இத்திட்டத்தின் தலையாய நோக்கம்.

1. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்
2. ஆனைமலை புலிகள் காப்பகம்
3. முதுமலை புலிகள் காப்பகம்
4. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

யானைகள் காப்பகங்கள் (Elephant Reserves)

ஆனைமலை – பரம்பிக்குளம் பகுதிகளில் உள்ள ஒரு யானைகளின் வழித்தடம்

இந்திய வனங்களில் பரவியுள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக யானைகள் திட்டம் (Project Elephant) இந்திய அரசால் 1992ல் தொடங்கப்பட்டது. யானைகளின் வாழிடங்களையும், அவற்றின் வழித்தடங்களையும் பாதுகாத்தல், மனிதர்-யானை எதிர்கொள்ளலை மட்டுப்படுத்துதல், சமாளித்தல், கோயில்களிலும், வனத்துறையிலும் வளர்க்கப்படும் யானைகளின் நலன் காத்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் ஆகும்.

இதன் விளைவாக யானைகள் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் யானைகளுக்கான காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை 32 யானைக் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. யானைகள் பல இடங்களுக்கு வெகுதுரம் சுற்றித்திரிவதாலும், வலசை போவதால் இவற்றின் காப்பகங்களும் அவை அடிக்கடி செல்லக்கூடிய பரந்த பலவகையான வாழிடங்களை உள்ளடக்கிய நிலவமைப்பில் அமைந்துள்ளது. சில காப்பகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரந்து அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 4 யானைக் காப்பகங்கள் உள்ளன.

1. நீலகிரி யானைக் காப்பகம் (நீலகிரி- கிழக்குத் தொடர்ச்சிமலை பகுதிகள் சேர்ந்தது)

2. நிலாம்பூர் யானைக் காப்பகம் (நிலாம்பூர்-அமைதிப்பள்ளத்தாக்கு-கோயம்பத்தூர் பகுதிகள் சேர்ந்தது)

3. ஸ்ரீவில்லிப்புத்தூர் யானைக் காப்பகம் (கேரளாவில் உள்ள பெரியார் யானைக் காப்பகத்துடன் சேர்ந்தது)

4. ஆனைமலை யானைக் காப்பகம் (ஆனைமலை – பரம்பிக்குளம் பகுதிகள் சேர்ந்தது)

உயிர்மண்டலக் காப்பகம் (Biosphere Reserves)

அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம். Photo: Seshadri. K.S / Wikimedia Commons

யுனெஸ்கோவின் (UNESCO) மனிதனும் உயிர்மண்டலமும் (Man and Biosphere-MAB) திட்டம் 1971ல் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல உயிர்மண்டலக் காப்பகங்கள் நிறுவப்பட்டன. பல்லுயிரியத்திற்கு பெயர்போன பகுதிகளின் இயற்கை எழில் மற்றும் வளம் குறையாமல் போற்றிப் பேனுதல், அவற்றின் சூழல் சீரழியாமலும், வளங்குன்றாமலும் பாதுகாத்தல், காடுசார் பொருட்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் உள்ளூர் சமூகத்தினரின் பங்களிப்பை ஊக்குவித்தல், இங்கு வாழும் பழங்குடியினரின் கலாசாரத்தை குலைக்காமல் அவர்களின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து அதனை ஒட்டிய முன்னேற்றம் காண்பது, காடுவிளை பொருட்கள் நீடித்து நிலைக்க அவற்றின் பயன்பாட்டை முறையான மேலாண்மையினால் ஒழுங்குபடுத்துதல், பல்லுயிர் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை இப்பகுதியில் வாழ்வோருக்கு ஏற்படுத்துதல், வாழிட மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அறிவியல் ஆராய்ச்சியையும், பாரம்பரிய அறிவையும் ஒருங்கினைத்தல் முதலியவையே இந்த மனிதனும் உயிர்கோளமும் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
இந்தியாவில் 3 உயிர்மண்டலக் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் மூன்று தமிழகப் பகுதிகளில் உள்ளன. உயிர்மண்டலக் காப்பகங்களுக்கு மாநில வரம்புகள் கிடையாது.

1. நீலகிரி உயிர்மண்டலக் காப்பகம்
2. மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம்
3. அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம்

பறவைகள் சரணாலயங்கள் (Bird Sanctuaries)

கரைவேட்டி பறவைகள் சரணாலயம், அரியலூர் மாவட்டம்.

பறவைகளுக்கு நாம் வகிக்கும் அரசியல் எல்லைகள் கிடையாது. ஆகவே அவை ஓரிடத்தில் மட்டும் வாழாமல் பல விதமான இடங்களில் பறந்து வாழும் இயல்புடையவை. குறிப்பாக நீர்ப்பறவைகளில் பல ஓரிடத்தில் கூட்டமாகக் கூடுகட்டி இனவிருத்தி செய்யும் இயல்புடையவை. உலகின் வடக்கு பகுதியிலிருந்து அங்கு கடும் குளிர் நிலவும் காலங்களில் தமது இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி இரைதேட வரும் வலசைப் பறவைகளுக்கு உள்நாட்டு நீர்நிலைகள் முக்கியமான வாழிடம். உள்நாட்டுப் பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான வாழிடங்கள் உள்ள பகுதிகளையும், வலசை வரும் பறவைகளுக்காகவும் தமிழகத்தில் 13 பறவைகள் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளான.

1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
2. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
3. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம்
4. கரிக்கிளி பறவைகள் சரணாலயம்
5. சித்ரங்குடி பறவைகள் சரணாலயம்
6. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்
7. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
8. வடுவூர் பறவைகள் சரணாலயம்
9. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
10. மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
11. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
12. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
13. ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்

பல்லுயிர்ப் பாதுகாப்பகம் (Conservation Reserve)

திருபுடைமருதூர் பல்லுயிர்ப் பாதுகாப்பகம், திருநெல்வேலி மாவட்டம்

பல்லுயிர்ப் பாதுகாப்பு என்பது அரசு துறைகளின் வேலை மட்டுமல்ல. அருகி வரும் வாழிடங்கள், கள்ளவேட்டை, சுற்றுச்சூழல் மாசு முதலிய பல காரணங்களால் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் பல உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இதை உணர்ந்த பல சமூகங்கள் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சியோ, அரசு துறைகளின் ஊக்குவிப்போ இல்லாமல் தாமாகவே பல்லுயிர் பாதுகாப்பிற்கு பங்களித்து வருகின்றன. அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதில்லை. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பல உயிரினங்களைக் காண முடியும். சரணாலங்களின் விதிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கு உட்படாத இது போன்ற இடங்களில் பொது மக்களால் வாழிடங்களோ, உயிரிங்களோ பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற வாழிடங்களை, பல்லுயிர்ப் பாதுகாப்பகமாக அறிவிக்க ஏதுவாக இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தில் (1972) 2003ல் சீர் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில்  இரண்டு பல்லுயிர் பாதுகாப்பகங்கள் உள்ளன.

1. திருபுடைமருதூர் பல்லுயிர்ப் பாதுகாப்பகம்

2. சுசீந்திரம் – தேரூர் – மணக்குடி பல்லுயிர்ப் பாதுகாப்பகம்

பாதுகாக்கப்படாத வாழிடங்கள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மேயும் காட்டெருதுகள் (Gaur). Photo: By PJeganathan (Own work) [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)%5D, via Wikimedia Commons

இயற்கைச் செல்வம் என்பது தேசியப்பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படுவது இல்லை. அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் அவற்றின் குணத்தைப் பொறுத்து அவை பல இடங்களில் அல்லது எல்லா இடங்களிலும் பரவியுள்ளன. பொதுவாகத் தென்படும் உயிரினம் முதல் அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் பல உயிரினங்கள் தமிழகத்தின் பாதுகாக்கப்படாத இடங்களிலும் தென்படுகின்றன. காரணம் அந்த உயிரினங்கள் வாழ ஏதுவான வாழிடங்கள் அரசியல் சட்டங்களால் பாதுகாக்கப்படாத இடங்களிலும் உள்ளன. உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தேயிலைத் தோட்டத்திலும் யானைகளும், சிறுத்தைகளும் திரிவதுண்டு. தேயிலை காபி முதலிய ஓரினப்பயிர்கள் பரந்து விரிந்திருக்கும் பகுதிகளில் மழைக்காட்டுத் துண்டுச் சோலைகள் தீவுகள் போல ஆங்காங்கே திட்டுத் திட்டாக அமைந்துள்ளன. இந்தச் துண்டுச் சோலையில் நீலகிரி கருமந்தி, சோலைமந்தி முதலிய அரிய ஓரிட வாழ்விகள் வாழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இது போல் தனியாருக்குச் சொந்தமான பல இடங்கள் உள்ளன. நீலகிரி, வால்பாறை, பழனிமலை, மேகமலை முதலிய பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பல ஓரினப்பயிர் நிலங்கள் மற்றும் அங்குள்ள காடுகளை உதாரணமாகச் சொல்லலாம்.

சமவெளிகள் மிகவும் ஆபத்துக்குள்ளான வாழிடமாகும். பெரும்பாலான அரசுப் பதிவுகளில் இது போன்ற இடங்கள் தரிசு அல்லது பயணில்லாத நிலமாக (waste land) குறிக்கப்படுகின்றது. மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கள், வேளாண்மை விரிவாக்கம் முதலிய காரணங்களுக்காக சமவெளிகளில் உள்ள வாழிடங்கள் வெகுவாக அழிக்கவும், மாற்றத்திற்கும் உள்ளாகின்றன. கடற்கரையோரப் பகுதிகளுக்கும் இதே நிலைதான்.

பாதுகாக்கப்பட்ட நன்னீர்நிலைகளைத் தவிர எண்ணிலடங்கா குளங்களும், ஏரிகளும், கண்மாய்களும் சிறியதும் பெரியதுமாக தமிழகம் முழுதும் பரவியுள்ளது. எனினும் இவற்றில் பல சரியாகத் தூர்வாரத காரணத்தாலும், நகரமயமாக்கத்தாலும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டன. மணற்கொள்ளை ஆற்றுச்சூழலை பெரிதும் பாழ்படுத்தி அங்கு வாழும் உயிரினங்களையும் அந்த நிலவமைப்பையே மாற்றியும் வருகிறது. தொழிற்சாலை கழிவுகளினாலும், வேறு பல காரணிகளாலும் பல நீர்நிலைகள் மாசடைந்து போய்விட்டது.

இதுபோன்ற பகுதிகளில் வாழும் உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க, அந்த மொத்த நிலவமைப்பையே பாதுகாக்க, சரியான முறையில் பராமரிக்க திட்டங்களும், மேலாண்மைக் கொள்கைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். தாவரங்களும் விலங்குகளும் பாதுகாப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படவேண்டும், வாழவேண்டும் என்று அவசியம் இல்லை. எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தான், மற்ற உயிரினங்களுக்குக் கிடையாது. ஆகவே இது போன்ற பகுதிகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் போற்றிப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.

மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின்  ஒரு பகுதி.

இப்போதாவது விழித்துக்கொள்வோமா? – அச்சுறுத்தும் புவி வெப்பமாதல்

with one comment

Photo: Wikimedia Commons

Photo: Wikimedia Commons

கடுமையான பருவ நிலையினால் ஏற்படும் பாதிப்புகள் அன்மைக் காலமாக பெருகிக் கொண்டே வருகின்றன. உலகலாவிய காப்பீட்டு நிறுவனமான மியூனிச் ரெ (Munich Re) 2012ல் பதிப்பித்த ஆராய்ச்சி அறிக்கை, அதீத (extreme) பருவநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை 1980களிலிருந்தே இருமடங்காகிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. கலிபோர்னியாவில் உள்ள டெத் பள்ளத்தாக்கில் (Death Valley) 2013ம் ஆண்டு ஜூனில் 54.0 C வெப்பநிலை பதிவானது. இதுவே இப்பூமிப்பந்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை. அதே ஆண்டு, ஆஸ்திரேலியாவிலும் கடும் வெப்பமும், வட இந்தியாவிலும் (குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில்), அமேரிக்காவிலும், மத்திய ஐரோப்பா, அர்ஜண்டினா, கனடா முதலிய பகுதிகளில் கடும் மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அமெரிக்காவின் சில மத்திய மாநிலங்களில் மே கடைசியில் பனிப்பொழிவும், ஏனைய பகுதிகளில் குறிப்பாக டெக்சாஸ் மாநிலத்தில் கடும் வறட்சியும் ஏற்பட்டது. இந்தியாவிலும் பல பகுதிகளில் (குறிப்பாக வட மாநிலங்களில்) ஜனவரி மாதத்தில் கடும் குளிரும் மே மாதங்களில் கடும் வெப்பமும் ஏற்படுகிறது. இந்த நிலை வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமாதலா (Global Warming)?. ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பேரிடர் (புயல், வெள்ளம், கடும் வெப்பம்) நிகழ்விற்காக மட்டுமே பூமிச் சூடாதலை காரணம் காட்ட முடியாது. தினசரி வெப்பநிலையையும் நீண்ட கால தட்பவெப்பநிலையையும் (climate) நிர்ணயிக்கும் காரணிகள் பல. ஒரு குறிப்பிட்ட பகுதியின் காலநிலையில் (weather) ஏற்படும் இயற்கையான மாறுதல், காற்றுமண்டலத்திலும், கடலிலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (oscillation), சூரிய சுழற்சி (solar cycle), எரிமலை வெடிப்பு, சுற்றுப்புற மாசு போன்றவைகளை காரணிகளாகச் சொல்லலாம். எனினும் கடும் வெப்பம், கடுங்குளிர், வறட்சி மற்றும் கடும் மழை, பனிப்பொழிவு, வெள்ளம் முதலியவற்றை புவி வெப்பமாதலுடன் சம்பந்தப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியும்.

2015 சென்னை வெள்ளம். Photo: Wikimedia Commons

2015 சென்னை வெள்ளம். Photo: Wikimedia Commons

உயரும் வெப்பநிலை

கடந்த பல ஆண்டுகளாக உலக அளவில் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள உயர்வையே புவி வெப்பமடைதல் என்கிறோம். இதனால் வெப்பமும் குளிரும் அதிகரிப்பது இயல்பே. எனினும் உலகின் தட்பவெப்பம் உயரும் போது குளிரைவிட தற்போது வெப்பமே அதிகரிக்கின்றது. அமெரிக்காவில் வாஷிங்டன் D.Cல் மட்டும் 2000ம் ஆண்டிலிருந்து கடும் வெப்பம் மற்றும் கடுங்குளிருக்கான பதிவு 7க்கு 1 என்ற விகிதத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல கடந்த இருபது ஆண்டுகளாக உலக அளவிலும் கிட்டத்தட்ட இதே விகிதத்தில் இருப்பதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (World Meterological Organization) வெளியிட்ட அறிக்கை (The Global Climate 2001-2010: A Decade of Climate Extremes) தெரிவிக்கின்றது.

உலகில் சராசரி வெப்பநிலை உயர்வும், ஒட்டுமொத்த வெப்பநிலை பரவியிருத்தலில் உயர்வும், கடும் வெப்பமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு எனவும், ஆனால் தற்காலத்தில் அவை மிகவும் அதிகம் என நாசா (NASA) விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹான்சென் குழுவினரின் ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக அறியமுடிகிறது.

ஒவ்வோர் ஆண்டும் வெப்பநிலை கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இதுவரை கணக்கெடுத்ததில் இதுதான் வெப்பமயமான ஆண்டு. ஜூன் 2016 வரை பதிவான நிலம் மற்றும் கடல் பகுதியின் சராசரி வெப்பநிலை 19ம் நூற்றாண்டின் இறுதியில் (தொழில்புரட்சிக் காலம்) இருந்ததை விட 1.3 செல்சியஸ் அதிகம் என்பதை நாசா தெரிவித்துள்ளது.

கடுங்குளிர்

உலகின் வடதுருவப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிர் ஏற்படுவதும் தற்காலத்தில் நிகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆர்க்டிக் பகுதி ஏனைய வடதுருவப்பகுதிகளைவிட இருமடங்கு சூடாவதே எனக் கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் ஜெனிபர் பிரான்சிஸ் மற்றும் ஸ்டீபன் வேவ்ரஸ் ஆகியோரின் ஆராய்ச்சி முடிவுகளின் படி 1980களிலிருந்து (கிட்டத்தட்ட இந்தியாவின் பரப்பளவில் உள்ள) ஆர்க்டிக் பகுதியின் கோடைகாலத்தில் வேகமாக உருகும் பனிக்கட்டிகள் மற்றும் ஆர்க்டிக் கடலுக்கு பூமியிலிருந்து தொடர்ச்சியாக செலுத்தப்பட்டுவரும் வெப்பத்தினாலும் காற்றுமண்டலத்தின் போக்கில் (குறிப்பாக வடதுருவத்தில் வீசும் அதிவேகக் காற்றோட்டத்தில் – jet stream air current) மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியமுடிகிறது. இக்காற்றோட்டம் வீசும் பாதை வட அமெரிக்கா மற்றும் யூரேசியாவின் மேல் இருப்பதால், இதில் ஏற்படும் மாறுதல்களினால் இப்பகுதிகளில் கடும் வெப்பம் அல்லது கடுங்குளிர் ஏற்படுகிறது.
ஆகவே, வெப்பநிலையில் ஏற்படும் இந்த தீவிரமான ஏற்றத்தாழ்வுகள் ஏதே இயல்பான ஒன்று அல்ல என்பதும், அதற்கு புவி வெப்பமாதலும் ஒரு காரணமே என்பதும் மேற்சொன்ன ஆராய்ச்சிகளின் முடிவுகளிலிருந்து புலப்படும்.

வெள்ளமும் வறட்சியும்

சரி வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் காரணம்? புவி வெப்பமாதலின் விளைவாக பூமியின் வட அரைகோளத்தில் (northern hemisphere) நீண்ட கோடைகாலமும், அதிக மழைபொழிவும் இருக்கும் என பெரும்பாலான பருவநிலை மாதிரிகள் (climate models) கனிப்பதாக ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழுவின் (Intergovernmental Panel on Climate Change – IPCC) அறிக்கை கூறுகிறது. தேவையான ஈரப்பதமின்றி குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தரையில் நிலவும் அதிகமான வெப்பநிலை மற்றும் அதிக அளவு நீராவியை தக்கவைத்துக் கொள்ளும் காற்றுமண்டலத்தின் திறனாலும் மண் வறண்டு போய் வறட்சி ஏற்படுகிறது. இவ்வுலகில் 1970லிருந்து பல பகுதிகள் வறண்டு போனதற்கும் அதனால் ஏற்பட்ட காட்டுத்தீ நிகழ்வுகளுக்கும் புவி வெப்பமடைதலும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதே வேளையில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வுலகின் கடல் பகுதிகளும் சூடாகி வருகின்றன. உலக அளவில்மிகப் பெரிய பவளப் பாறைத் திட்டுக்கள் வெளுத்துப் போய் இறந்து கொண்டிருகின்றன. கடலில் இருந்து அதிக அளவில் ஆவியாகும் நீரானது சூடான காற்றுமண்டலத்தில் சேர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் நீரின் அளவு தற்போது காற்றுமண்டலத்தில் 1970 களில் இருந்ததை விட 4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த நீரானது ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு நிலப்பகுதியில் பெரும் மழையாகவோ, கடும் பனிப்பொழிவாகவோ வீசி, அங்கே பெரும் வெள்ளத்தை உலகில் பல்வேறு இடங்களில் (இந்தியா உட்பட) ஏற்படுத்துகிறது. விஞ்ஞானி கெவின் ட்ரென்பெர்த் குறிப்பிட்டது போல்

”…தற்போது நிகழும் எல்லா வானிலை தொடர்பான பேரிடர்களும் பருவநிலை மாற்றத்தினால் தான், ஏனெனில் புறச்சூழல் முன்பை விட வெப்பமாகவும் ஈரப்பதம் மிக்கதுமாக இருக்கிறது.”

என்ன செய்ய வேண்டும்?

இதற்கெல்லாம் நாம் என்ன செய்யமுடியும்? முதலாவதாக இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமயமாதல் தான் என்பதை உணர வேண்டும். பருவநிலை மாற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 97 சதவிகதம் பேர் இந்த புவி வெப்பமயமாதல் மனிதனால் ஏற்படுத்தப்பட்டதே என்பதை தெளிவாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதாவது நாம் படிம எரிபொருட்களான (fossil fuel) பெட்ரோல், டீசல், நிலக்கரி முதலியவற்றை எரிப்பதனால் வெளியாகும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு – CO2) புறச்சூழலில் அதிகரிப்பதனாலேயே. புறச்சூழலில் CO2 வின் அடர்த்தி மே 2013ல் 400 பி.பி.எம் (parts per million-PPM) எனும் அளவினைக் கடந்து விட்டது. இது 1700ன் இறுதியில் 280 PPMஆக இருந்தது. கடைசியாக CO2 400 PPM ஆக இருந்தது 3-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது இவ்வுலகில் கடல் மட்டம் உயர்ந்தும், நிலவிய பருவநிலையும் வேறு. ஆனால் தற்போதைய நிலை ஒருபோதும் இதற்கு முன் இருந்ததில்லை. இது மனித நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட விளைவே.

சுற்றுப்புற சூழலில் உள்ள CO2 ன் மாதாந்திர செறிவு நிலை (Trends in monthly CO2 concentration - Courtesy: http://www.esrl.noaa.gov/gmd/ccgg/trends/ Accessed on 19-11-2016

சுற்றுப்புற சூழலில் உள்ள CO2 ன் மாதாந்திர செறிவு நிலை (Trends in monthly CO2 concentration – Courtesy: http://www.esrl.noaa.gov/gmd/ccgg/trends/ Accessed on 19-11-2016

இரண்டாவதாக, உலகில் உள்ள அனைவரும் சேர்ந்து CO2, மீத்தேன் போன்ற, பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும். இது பொருளாதாரத்தில் உயர்ந்த நாடு இது, வளர்ந்து வரும் நாடு என்ற பாகுபாடெல்லாம் புயலுக்கும் வெள்ளத்திற்கும் தெரியாது. புவிவெப்பமயமாதல் உலகின் எல்லா பகுதியையும் குறிப்பாக ஆசியப் பகுதியை வெகுவாக பாதிக்கும் என உலக காலநிலை பேரிடர் குறியீடு (global climate risk index) சுட்டிக்காட்டுகிறது. காலநிலை மாற்றத்தினால் பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஆகவே உலகில் உள்ள நாம் அனைவரும் சேர்ந்து படிம எரிபொருட்களின் உபயோகம், கார்பனை அதிகமாக உபயோகிக்கும் செயல்கள் போன்றவற்றை வெகுவாகக் குறைத்தும், புதுப்பிக்கப்படத்தக்க சத்தி (renewable energy), சக்திப் பயன்பாட்டில் சிக்கனம், கார்பன் சேமிப்பு (Carbon sequestration) முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கி அதன் படி செயல்பட வேண்டும்.

கடைசியாக, நமது நிலம், வனம், நீர்நிலைகள் ஆகியவற்றை பயன்படுத்தும் விதமும், பராமரிக்கும் விதமும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி காலநிலை மாற்றத்திற்கு வித்திடும். ஆயினும், இதன் விளைவால் உருவாகும் இயற்கைப் பேரிடர்களும் அவை ஏற்படுத்தும் கடுமையான பின்விளைவுகளிலிருந்தே இதை நாம் அறிய முடியும். அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்திலும், சென்னையிலும் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் அதனால் ஏற்பட்ட சேதங்களுமே இதற்கு உதாரணம். சகட்டு மேனிக்கு காடுகளையும் பரந்த புல்வெளிகளையும் அழித்தல், நீர்நிலைகளையும், சரிவான மலைப்பகுதிகளையும் ஆக்கிரமித்து கட்டுப்பாடின்றி கட்டிடங்களை கட்டிவைப்பது, இயற்கையான வாழிடங்களை சீரழித்து மாற்றியமைத்தல் முதலிய காரணங்களாலும், சரியான கட்டமைப்பு வசதிகள், பேரிடர் மேலாண்மை இல்லாததாலுமே வானிலை தொடர்பான பேரிடர்களுக்குப் பிறகு ஏற்படும் சேதங்கள் நம்மை நிலைகுலையச் செய்கிறன்றன.

2012 உத்தரகாண்ட் வெள்ளம். Photo: Wikimedia Commons

2012 உத்தரகாண்ட் வெள்ளம். Photo: Wikimedia Commons

இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. இந்த கணத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் செயல் பட்டால் நிச்சயமாக பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், இயற்கைப் பேரிடர்களின் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். வனப்பகுதி, நீர்நிலைகள், இயற்கையான புல்வெளிகள், சமவெளிகளை மதித்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் இயற்கையோடு இயைந்த வளங்குன்றா வளர்ச்சி முறைகளை பின்பற்ற வேண்டும். இதைஅண்மையில் இங்கு ஏற்பட்ட வெள்ளம், வறட்சி முதலிய இயற்கைப் பேரிடர்களைப் பார்த்தே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கால நிலை மாற்றத்தின் பாதிப்புகளை, கட்டுபடுத்த, எதிர்கொள்ள இந்த பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் விரைந்து செயலாற்ற வேண்டும்.


13 ஜுலை 2013ல் தி ஹிந்து ஆங்கிலத்தில் வெளியான “Living in an extreme world”ஐ தழுவி எழுதப்பட்ட இந்த கட்டுரை தி ஹிந்து தமிழ் உயிர்மூச்சு பகுதியில் 19 நவம்பர் 2016 அன்று வெளியானது. அதற்கான உரலி இங்கே. அதன் PDF இங்கே.

Written by P Jeganathan

November 19, 2016 at 7:39 pm