UYIRI

Nature writing in Tamil

Archive for the ‘Insects’ Category

சிற்றுயிர்களையும் கொண்டாடுவோம்

with one comment

சிற்றுயிர்கள் அழகானவை!

பூச்சி எனும் ஒரு சொல் பலரிடம் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலும் முகச் சுழிப்பும், அருவருப்பும், பயமும் தான் இருக்கும். வெகு சிலரிடம் மட்டுமே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். ஒரு பூச்சியைக் கண்டவுடன் உடனடியாக நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வது அவற்றை அடித்துக் கொல்ல முயற்சிப்பதும், அதில் பெரும்பாலும் வெற்றி பெறுவதுமே ஆகும். வெகு சிலரே பூச்சிகளைக் கண்டதும் அவற்றை படமெடுக்க கேமிராவை எடுப்பார்கள்.

ஆறு கால்களையும், கூட்டுக் கண்களையும், தலைப் பகுதி, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி என உடல் மூன்று பகுதிகளாகவும், உணர்நீட்சிகளையும் கொண்டவை பூச்சிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூச்சிகளின் பன்மையம் நம்மை வியக்க வைக்கும். இது வரை சுமார் 1.5 மில்லியன் வகையான பூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பூச்சியின் (தட்டானும் பூச்சி வகையே) உடல் பாகங்கள். Artwork: Wikimedia Commons

கண்ணுக்கே தெரியாத சுமார் 15௦ மைக்ரோ மீட்டர் நீளமே உள்ள குளவியில் இருந்து சுமார் 1 அடி நீளமுள்ள குச்சிப் பூச்சி வரை உருவில் சிறியதும் பெரியதுமாக இருப்பவை பூச்சிகள். தரையில் ஊர்ந்தும் (எறும்புகள்), நீரில் நீந்தியும் (தட்டான்களின் தோற்றுவளரிகள்), வானில் பறந்தும் (வண்ணத்துப்பூச்சிகள்), மண்ணுக்குள்ளும் (சில் வண்டின் இளம் பருவம்) வாழக்கூடியவை பூச்சிகள். இவற்றில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களைக் கொண்டவையும் உண்டு, கண்ணுக்கு எளிதில் புலப்பாடாத உருமறைத்தோற்றம் கொண்டவையும் உண்டு. பகலாடிகளும் உண்டு, இரவாடிப் பூச்சிகளும் உண்டு. சில பூச்சிகள் இன்னும் வியக்கத்தக்க வகையில் தமது இனத்தை ஒத்த உயிரினங்களின் நிறத்தையும் ஒப்புப்போலி தோற்றத்தையும் கொண்டிருக்கும். பசலைச் சிறகன் வண்ணத்துப்பூச்சியின் பெண் பூச்சி வெந்தய வரியனை நிறத்திலும் உருவிலும் ஒத்திருப்பது போல. இலைப்பூச்சி பசுமையான இலையைப் போலவே தோற்றமளிக்கும். நமக்கும் முன்னே சுமார் 4௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை. பூக்கும் தாவரங்களுடன் ஒருமித்துப் பரிணமித்தவை பூச்சிகள்.

பூச்சிகளைப் பற்றிய சரியான புரிதல் இன்னும் நம்மிடையே இல்லை. அறிவியல் ஆராய்ச்சிகளாக இருக்கட்டும், அவற்றைப் பற்றிய இயற்கை வரலாற்று செய்திகளாக இருக்கட்டும், ஏன் ஓரிடத்தில் எத்தனை வகையான பூச்சி வகைகள் உள்ளன என்பது குறித்த அடிப்படை தரவுகள் கூட நம்மிடையே சரியாக இல்லை. அறிவியல் பூர்வமான புரிதல் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும். பூச்சிகளைப் பற்றிய சில அடிப்படை தகவல்கள் கூட பலருக்குத் தெரிவதில்லை. எட்டுக்கால் பூச்சியும், சிலந்தியும், பூரானும், தேளும், மரவட்டையும் பூச்சி வகையைச் சார்ந்தவை அல்ல என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

என் பெயர் எட்டுக்கால் பூச்சி தான் ஆனால் நான் பூச்சி வகை அல்ல!

 

இவையெல்லாம் நம்மைச்சுற்றி இருக்கும் காட்டுயிர்கள். ஆம் காட்டுயிர் என்றால் காடுகளில் மட்டுமே வசிக்கும் உயிரினம் என்று அர்த்தமாகாது. நாம் வசிக்கும் வீடுகூட பல்லிக்கும், சிலந்திக்கும் உகந்த வாழிடமாகிறது. இயற்கையான சூழலில், வளர்ப்பு உயிரினங்கள் அல்லாத எல்லா உயிரினங்களுமே காட்டுயிர்கள் தான். பறவைகள், பாலுட்டிகள், ஊர்வனங்கள், இருவாழ்விகள் யாவும்,  எப்போதுமே அவற்றின் அழகாலும், கண்கவரும் வண்ணங்களாலும், விசித்திரமான குணாதிசயங்களாலும், உருவில் பெரியதாக இருப்பதாலும் நம்மை எளிதில் கவர்ந்துவிடும். இது போன்ற பேருயிர்கள் இயல்பாகவே நம் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன.

புலி, யானை, பாடும் பறவைகள், கழுகு வகைகள், பாம்புகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற வசீகரமான உயிரினங்களுக்கு கிடைக்கும் கவனம் பல சிற்றுயிர்களுக்குக் கிடைப்பதில்லை. எனினும் மேற்சொன்ன உயிரினங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத எண்ணிலடங்கா பல சிறிய உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. ஏனைய உயிரினகளைப் போல் அவையும் இந்த இயற்கைச் சூழலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மகரந்தச்சேர்க்கை முதல் மட்கச்செய்வது வரை பல வகையில் இந்த பூமியின் செயல்பாட்டிற்கு பேருதவி புரிகின்றன. இது போன்ற அதிகம் கண்டுகொள்ளப்படாத சிற்றுயிர்களைப் பற்றிய ஒரு அருமையான நூல் இது. இயற்கையை அவதானிக்க நாம் வெகுதொலைவு செல்லவேண்டியதில்லை. நாம் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிப் முதலில் பார்க்கத் தொடங்கினாலே போதும். அதைத்தான் இந்த நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன் செய்திருக்கிறார். அவரது வீட்டினருகே அதுவும் நகரப்பகுதியில் தென்பட்ட பூச்சிகளையும் ஏனைய சிற்றுயிர்களையும் பதிவு செய்து அவற்றை இந்த நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

இது போன்ற சிற்றுயிர்களை கவனத்துடன் அவதானித்து அவற்றை படமும் பிடித்துள்ளார். விலையுயர்ந்த காமிராவோ, மேக்ரோ லென்சாலோ அல்ல. படங்கள் அனைத்தும் கைபெசி காமிரா! இந்த உயிரினங்களை அடையாளம் காண்பதென்பது சற்றே சவாலான வேலைதான். இதற்காக India biodiversity Portal – https://indiabiodiversity.org/, iNaturalist – https://www.inaturalist.org/ போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் இணைந்து அங்குள்ளவர்களின் உதவியுடன் பல உயிரினங்களை அடையாளம் கண்டுள்ளார். நாம் எடுக்கும் காட்டுயிரினங்களின் படங்களை நாமே வைத்துக்கொண்டிருப்பதால் பெரிய பயன் ஏதும் இருக்கப்போவதில்லை. இது போல், மக்கள் அறிவியல் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் பல உயிரினங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அல்லாமல், அறிவியல் ஆராய்ச்சிக்கும் உதவும்.

நாம் கால்களில் மிதிபடக்கூடிய, விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்குள் வந்து வெளியேற முடியாமல் தவிகின்ற, நம் கண்களுக்கு அருவருக்கத்தக்கதாகத் தெரிகின்ற, நம்மை பயப்பட வைக்கின்ற, நாம் வெறுத்து ஒதுக்குகின்ற எண்ணிலடங்கா சிறிய உயிரினங்களை எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் சற்று நேரம் உற்று நோக்கினால் நம் முன் ஒரு புதிய உலகம் தெரிய ஆரம்பிக்கும். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.


ஆதி வள்ளியப்பன் எழுதிய “எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – பெருநகரில் ஒரு தனி உலகம்எனும்  நூலிற்கான  முகவுரை

Written by P Jeganathan

March 2, 2020 at 9:00 am

2017 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்

with 2 comments

கடந்த ஆண்டில் பார்த்த, ரசித்த நினைவில் நிற்கும் தருணங்கள் பல. அவற்றில் படங்களில் பதிவு செய்யப்பட்டவை சில. அவற்றில் சிலவற்றை (மாதத்திற்கு ஒன்றாக) இங்கே காணலாம். இந்த பூமிக்கும், அதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்தப் புத்தாண்டு இனிதே அமைய வேண்டும்.


குளவித் தும்பி

leave a comment »

குளவித் தும்பி River heliodor Libellago lineata: படத்தில் உள்ளது ஆண் குளவித்தும்பி. இப்பெயர் வரக் காரணம் மஞ்சள் உடல் கொண்ட குளவியைப் போன்ற தோற்றத்தினால். தூரத்தில் இருந்து பார்த்தால் குளவியைப் போலவே தோன்றும். சுமார் 2 சென்டி மீட்டர் நீளம் தான் இருக்கும். ஆற்றோரத்தில் சில வேளைகளில் இரண்டு ஆண் குளவித்தும்பிகள் ஒன்றை ஒன்று எதிர்த்துப் பறந்து கொண்டிருப்பதைக் காணலாம். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவை பறக்கும் இடத்தினருகிலேயே பெண் குளவித்தும்பி அமர்ந்திருப்பதைக் காணலாம். அவை பறந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பது அவளுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான்.

Written by P Jeganathan

December 10, 2017 at 9:00 am

Posted in Insects

Tagged with ,

மண் அள்ளிய குதிக்கும் எறும்புகள்

leave a comment »

குதிக்கும் எறும்பு Indian jumping ant Harpegnathos saltator: ஆம் இந்த எறும்பு குதிக்கும்! ஆனாலும் எப்போதும் அவை குதித்துக்கொண்டே இருப்பதில்லை. இரையைப் பிடிக்கவோ, எதிரிகளிடமிருந்து தப்பிக்கவோ மட்டும் தான், இருந்த இடத்திலிருந்து சட்டென குதித்துச் செல்கின்றன. உலகிலேயே நீளமான எறுப்புகளில் குதிக்கும் எறும்புகளும் ஒன்று. இவற்றைக் காண்பது அவ்வளவு எளிதல்ல. பொதுவாக தனியே தான் இரைதேடும். ஒரு நாள் இந்த எறும்புகளை அவற்றின் கூட்டினருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டினுள்ளிருந்து தமது நீண்ட கூரிய தாடைகளால் மண்ணை அள்ளிக் கொண்டு வந்து வெளியே கொட்டிக்கொண்டிருந்தன. இவை கட்டும் கூட்டிற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. கூட்டை அடையாளம் காண அதன் நுழைவாயிலில் பல நிறங்களில் பூக்களின் இதழ்களையும், இலைகளையும் வைத்து அலங்கரிப்பதே!

தொடர்புள்ள கட்டுரை: எறும்புகளின் அதிசய உலகம்

Written by P Jeganathan

December 3, 2017 at 9:00 am

Posted in Insects

Tagged with ,

நெட்டைக்கால் ஈக்கள்

leave a comment »

நெட்டைக்கால் ஈக்கள்: கானகத்தின் அதிகம் அறியப்படாத அழகுகளில் நெட்டைக்கால் ஈக்களும் (Long-legged flies)ஒன்று. டோலிகோபோடிடே (Dolichopodidae) எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. சூரிய ஒளி இவற்றின் உடலின் மேல் படும்போது பல நிறங்களில் மின்னும். நிழலான பகுதியில் வளர்ந்திருக்கும் தாவரங்களின் இலைகளின் மேற்பரப்பில் துரித கதியில் வலம் வரும். அது பயணிக்கும் விதத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கும். இலையின் மேல் எல்லா இடத்தையும் சுற்றிவிட்டு அடுத்த இலைக்குப் பறந்து செல்லும். உருவில் சுமார் 1 செ.மீ அளவுதான் இருக்கும். தன்னைவிட உருவில் சிறிய பூச்சிகளை பிடித்துண்ணவே இலை மேல் இந்த நடை பயணம்.

Written by P Jeganathan

November 19, 2017 at 9:00 am

சிவப்பு நீலன் வண்ணத்துப்பூச்சி

leave a comment »

சிவப்பு நீலன் வண்ணத்துப்பூச்சி: கருப்பும், சிவப்பும், ஆரஞ்சும் வெள்ளையுமாக இருக்கும் இந்த அழகிய சிறிய வண்ணத்துப்பூச்சியின் ஆங்கிலப் பெயர் Red pierrot Talicada nyseus. இதன் தமிழ்ப் பெயர் சிவப்பு நீலன். நீல நிறமே இல்லை பின்னர் ஏன் இந்தப் பெயர். நீலன்கள் (Lycaenidae) வகையைச் சேர்ந்ததனால் இதற்கு இந்தப் பெயர்.

நீங்கள் நகரத்தில் வசிப்பவரா? இந்த அழகிய வண்ணத்துப்பூச்சியை உங்கள் வீட்டுக்கே வரவழைக்க வேண்டுமானால் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். Kalanchoe, எனும் தாவரத்தையும்,  “கட்டிப்போட்டால் குட்டிப்போடும்” எனப்படும் Bryophyllum pinnatum எனும் தாவரத்தையும் வீட்டில் வளர்த்தால் போதும். இந்த வண்ணத்துப்பூச்சியின் தோற்றுவளரிகளுக்கு (இளம்பருவ புழுக்கள்) இத்தாவரம் தான் முக்கிய உணவு. ஆகவே இவ்வண்ணத்துப்பூச்சி இத்தாவரத்தில் வந்து முட்டையிடுவதையும், அவற்றிலிருந்து புழுக்கள் வளர்ந்து கூட்டுப்புழுவாக மாறுவதையும் காணலாம். அவை முதிர்ச்சியடைந்த சமயத்தில் அவற்றுடன் நேரம் செலவிட்டு கொஞ்சம் பொறுமையோடு உற்று கவனித்தால் அழகிய வண்ணத்துப்பூச்சி பிறந்து காற்றில் பறந்து செல்வதையும் காணலாம்.

வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள, வண்ணத்துப்பூச்சிகளின் தமிழ்ப் பெயர்களை அறிந்து கொள்ள டாக்டர் ஆர். பானுமதி எழுதிய  “வண்ணத்துப்பூச்சிகள் – அறிமுகக் கையேடு” எனும் அழகான நூலைப்  படிக்கவும்.

Written by P Jeganathan

October 29, 2017 at 9:00 am

புள்ளிச்சில்லையும் ஈசலும்

leave a comment »

புள்ளிச்சில்லை (Scaly-breasted munia Lonchura punctulata): பொதுவாக தானியங்களையே உணவாகக் கொள்ளும் இப்பறவை அன்று ஈசலை (winged termite) பிடித்துண்ணுவதைப் பார்த்தேன். இப்பண்பினைப் பற்றி நூல்களில் படிந்திருந்தாலும் முதன்முதலில் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஹார்ஸ்லி மலைப்பகுதியில் (Horsley Hills) இக்காட்சியை நேரில் கண்டுகளித்தேன்.

Written by P Jeganathan

October 15, 2017 at 9:00 am

செந்தலைப் பஞ்சுருட்டான்

with one comment

செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut-headed bee-eater Merops leschenaulti): ஒரிடத்தில் அமர்ந்து நோட்டம் விட்டு, பறந்து செல்லும் பூச்சிகளைக் கண்டதும் பறந்து சென்று காற்றிலேயே அவற்றை லாவகமாகப் பிடிக்கும். மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தமர்ந்து பிடித்த இரையை உண்ணும். தட்டானை அலகில் பிடித்து வைத்துக் கொண்டு மின்கம்பியில் அமர்ந்திருந்த இப்பறவையைப் படம் பிடிக்க முயற்சித்த போது எனக்கு எதிரே அமராமல் வேறிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டது. ஒரு புதரின் மறைவில் காத்திருந்து அங்கு வந்தவுடன் இலைகளினூடாக எடுக்கப்பட்டப் படம். ஆகவேதான் இந்த பச்சைப் படலம்.

Written by P Jeganathan

October 8, 2017 at 9:00 am

இலைவெட்டி மர்மம்

leave a comment »

DSC_4124_700சில ஆண்டுகளுக்கு முன் டாப் சிலிப் வனப்பகுதியில் நடந்து போய்க்கொண்டிருந்த போது தடத்தின் ஓரமாக ஒரு இஞ்சி வகைத் செடியின் இலை எனது கவனத்தை ஈர்த்தது. காரணம் அந்த இலையின் விளிம்பு. அரைவட்ட வடிவில் அதன் விளிம்பினை மிகவும் நேர்த்தியுடன் யாரோ வெட்டியிருந்தார்கள். நாம் நகவெட்டியை வைத்து நகத்தை வெட்டுவோமே அதுபோல. பார்க்க அழாகாக, அந்த இலையே புது வடிவில் இருந்தது. ஒரு வேளை ஏதாவது கம்பளிப்புழு அல்லது வண்ணத்துப்பூச்சியின் இளம் பருவப் புழுவாக இருக்குமா என்ற சந்தேகத்தில் இலையைத் திருப்பி அதன் அடிப்புறத்தைப் பார்த்தேன். எதுவும் தென்படவில்லை. இலைக்கு நேர் கீழே தரையப் பார்த்தேன். புழுக்களாக இருந்தால் அதன் எச்சத்துகள்கள் கீழே சிந்தியிருக்கும். அப்படி ஏதும் தென்படவில்லை. புரியாத புதிராக இருந்தது. ஆனால் இது ஒன்றும் புதிதல்ல. இயற்கையின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் புரிந்து விடாது. சரி இருக்கட்டும் என ஆவனத்திற்காக ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

இதைப் பார்த்து மூன்று ஆண்டுகள் கழிந்த்து கோவாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் ஒரு மாலை வேளையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தடம் ஓரமாக இருந்த ஒரு செடியின் இலை மிக அழகாக வெட்டப்பட்டிருந்தது. இதற்கு முன் டாப் சிலிப் பகுதியில் வெட்டப்பட்ட இலையைப் போலவே. ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போதே கரிய நிறத்திலிருந்த ஒரு பூச்சி ஒன்று பறந்து வந்தது. உற்று கவனித்த போது அது ஒரு தேனீ வகையினைச் சேர்ந்தது என்பது தெரிந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு சில வினாடிகளில்  இலையை தனது வாயுறுப்புகளால் “ப” வடிவில் வெட்டி எடுத்துக் கொண்டு பறந்து சென்றது. எனது முதல் சந்தேகம் தெளிவானது. இலை வெட்டுவது ஒரு தேனீ வகை. ஆனால் அது நாம் பொதுவாகக் காணும் தேனீக்களைப் போலல்லாமல் கொஞ்சம் கரிய நிறத்திலும், சற்று நீளமாகவும் இருந்தது. இது என்ன வகைத் தேனீ? ஏன் இலையை இப்படி வெட்டி எடுத்துச் செல்கிறது?

5_leaf cutting bees_700

வீடு திரும்பிய பின் சில நூல்களை புரட்டியதிலும், இணையத் தேடுதலிலும் அது ஒரு இலைவெட்டித் தேனீ என்பது புலனானது. அதைப் பற்றி மேலும் படித்ததில் பல வியக்க வைக்கும் உண்மைகள் தெரிந்தது. இவை Megachilidae குடும்பத்தைச் சேர்ந்தவை. இவ்வகைத் தேனீக்கள் கூட்டமாக சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை. தனித்தே வாழ்கின்றன. இலைகளை வெட்டுவதற்கென்றே அமைந்த வாயுறுப்புகளைக் (mandibles) கொண்டுள்ளன. இலைவெட்டித் தேனீக்கள் பலவித தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்குத் துணை போகின்றன. இவை தம் வயிற்றுப் புறத்திலுள்ள மெல்லிய தூவிகளில் மகரந்தத் தூகள்களை சேமித்து எடுத்துச் செல்லும். ஏனைய தேனீக்கள் தம் கால்களில் உள்ள மரகதக்கூடையில் எடுத்துச் செல்லும்.

சில வேளைகளில் நம் வீடுகளில் சாவித் தூவாரங்களிலும், மின்செருகி துவாரங்களிலும் (socket), சுவரில், மரச்சட்டங்களில் உள்ள சிறிய ஓட்டைகளிலும் இவ்வகைத் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதைக் காணலாம். இவற்றின் கூடு இலைகளால் ஆன பல அறைகளைக் கொண்டிருக்கும். இத்தேனீக்கள் ஈரமான களிமண், மரப்பிசின் போன்ற பொருட்களால் கூடுகட்டி, அவற்றில் வெட்டி எடுக்கப்பட்ட இலைகளை கொண்டு வந்து அவற்றை கூட்டின் வடிவத்திற்கு ஏற்ப சுருட்டி நுழைத்து வைக்கும். அந்த இலைக்குழியில் ஒரு முட்டையிடும். அம்முட்டை பொரிந்து வெளிவரும் தோற்றுவளரிக்கான உணவான பூந்தேனையும் (nectar) மகரந்தத்துகள்களையும் (pollen grains) கொண்டுவந்து சேர்க்கும். இவையெல்லாம் வைக்கப்பட்ட இலைக்குழியின் மேல் மேலும் ஒரு வெட்டிய இலையை வைத்து மூடி, அதிலும் ஒரு முட்டையும் அதற்கான உணவினையும் வைக்கும். இப்படி கூட்டின் நீளத்திற்கு ஏற்ப பல அறைகளை தயார் செய்யும். கடைசியில் மேலும் பல இலைகளை வெட்டி வந்து நுழைவாயிலில் தினித்து களிமண் அல்லது பிசினைக் கொண்டு அதன் மேல் பூசி கூட்டினை மழையும் ஏனைய பூச்சிகளும் புகாவண்ணம் அடைத்து விடும். இலையைத் தவிர மலரிதழ்கள், நார்கள் போன்றவற்றை வைத்தும் கூடு கட்டும். பெண் தேனீயே கூடு கட்டும் வேலையைச் செய்யும். தோற்றுவளரிகள் வளர்ந்து சரியான தருனத்தில் (அதாவது பல வித பூக்கள் பூக்கும் காலங்களில்) கூட்டை விட்டு வெளியேறும். முதிர்ந்த இலைவெட்டித்தேனீக்களின் ஆண்கள் கலவி முடிந்தபின் இறந்து போகும். ஆனால் பெண் தேனீ மேலும் சில வாரங்கள் உயிர் வாழ்ந்து தன் கூட்டினைக் கட்டும்.

Photo: Yeshwanth

Photo: Yeshwanth

முன்பு டாப் சிலிப்பில் நான் கண்ட அந்த இலையை, வெட்டியது இது போன்ற இலைவெட்டித் தேனியாகத்தான் இருக்க வேண்டும். அந்த இலையின் படத்தை யாராவது பூச்சியியளாளர்களிடம் காண்பித்திருந்தால் அதை வெட்டியது யாரென்பதைச் சொல்லியிருப்பார்கள். அந்த எண்ணம் அப்போது உதிக்கவில்லை. அப்படிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தால் மீண்டும் பார்த்த போது உடனே அடையாளம் கண்டிருக்க முடியும். எனினும் எதிர்பாராவிதமாக நாமாகக் கண்டறிவதில் உள்ள மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. இயற்கை நமக்கு அந்த வாய்ப்பை அளித்துக் கொண்டே இருக்கும். இந்த மனித குலம் இருக்கும் வரை. இந்த மனித குலம் இயற்கையான வாழிடங்களை விட்டு வைத்திருக்கும் வரை.

இலை வெட்டித் தேனீ  இலையை வெட்டும் காட்சி. காணொளி உபயம்: அஷ்வின் விஸ்வனாதன்

——

பலவித தாவரப்பயிர்களின் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்களில் இலைவெட்டித்தேனீகள் மிகவும் முக்கியமானவை. பூமியின் பல பகுதிகள் விவசாயம் செய்வதற்காக, இயற்கையான நிலப்பகுதி அனைத்தையும் அழித்து அல்லது மாற்றியமைத்து, பல வித பூச்சிக்கொல்லிகளை பயனபடுத்தியதன் விளைவாக பல வகையான அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்கள் அழிந்தும், அருகியும் விருகின்றன. இதனால் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைந்தும், பல வித தாவர நோய்கள் பெருகின. இதைச் சமாளிக்க இயற்கை விவசாயம், வளங்குன்றா விவசாய முறைகளை பின்பற்றுதல், விளைநிலங்களின் அருகில் இயல் தாவரங்களை வளர்த்தல், சீரழிந்த இயற்கைப் பகுதிகளை மீளமைத்தல் முதலிய திட்டங்கள் உலக அளவில் செயல்படுத்தப்படுகிறது.  இதனால்  மண் வளம், பயிர் உற்பத்தி பெருக்கம் மட்டும் அல்லாமல் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் இன்னும் பல பூச்சிவகைகளும் பெருகும். இவ்வகைப் பூச்சிகளை குறிப்பாக பலவகையான தேனீக்களை பண்ணைகளிலும், விவசாய நிலங்களின் அருகில் ஈர்க்க செயற்கையான கூடுகளும் வைக்கப்படுகின்றன. நீலகிரி பகுதியில் கீஸ்டோன் நிறுவன (Keystone Foundation) ஆராய்ச்சியாளர்கள் இவ்வகையான ஆலோசனைகளை அங்குள்ள விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு காண்க:

Creating Pollinator Habitats- by Robert Leo in NEWSLETTER of the NILGIRI NATURAL HISTORY SOCIETYISSUE 4.2 Dec 2013 . (6ம் பக்கம்).

——

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 2nd September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

September 8, 2014 at 10:00 am

பறக்கும் சித்திரங்கள்- பட்டாம்பூச்சிகள்

leave a comment »

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான குதிரைவெட்டி எனுமிடத்தில் களப்பணிக்காக சென்று தங்கியிருந்தோம். இரவாடிகளான மரநாய், புனுகுபூனை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலம். ஆகவே இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் சுற்றுவது அவசியம். அப்படி ஒரு நாள் இரவு களப்பணி முடிந்து இருக்குமிடம் திரும்புகையில் வாசலில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தால் கவரப்பட்டு பல பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டும், வெள்ளையடிகப்பட்ட சுவற்றில் சிறியதும், பெரியதுமாக பல வண்ணங்களில் ஏராளமாக அமர்ந்தும் இருந்தன. இது வழக்கமான காட்சிதான். அதுவும் மழைகாலங்களில் இன்னும் பல வகையான பட்டாம்பூச்சிகளை பார்க்க முடியும். எனினும் அன்று எங்கள் கவனத்தை ஈர்த்தது பெரிய இறக்கைகளைக் படபடத்து பறந்து கொண்டிருந்த ஒரு பூச்சி. அது ஒரு அட்லாஸ் பட்டாம்பூச்சி (Atlas Moth). நான் முதன் முதலில் இப்பூச்சியைக் கண்டதும், பிரமித்துப் போனதும் அப்போதுதான்.

Atlas Moth_Kalyan Varma_700

அட்லாஸ் பட்டாம்பூச்சி. Photo: Kalyan Varma

செம்பழுப்பு நிறத்தில் சித்திரம் வரைந்தது போன்ற பல வடிவங்களில், பல வண்ணங்களில் அமைந்த அதன் இறக்கையின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். இவை அதிகம் தென்படுவது வனப்பகுதிகளில் அதிலும் பறக்கும் நிலையை அடைவது மழைக்காலங்களில் மட்டுமே. இரவில் மட்டுமே பறந்து திரியும். பார்ப்பதற்கு வண்ணத்துப்பூச்சியைப் (Butterfly) போலிருக்கும்.  ஆனால் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் இது பட்டாம்பூச்சி (Moth) என்பது விளங்கும். உலகின் மிகப் பெரிய  பட்டாம்பூச்சிகளிலில் ஒன்றான இது, இறக்கை விரித்த நிலையில் சுமார் 30 செ.மீ. இருக்கும்.

Atlas Moth Antenne_700

அட்லாஸ் பட்டாம்பூச்சியின் உணர்நீட்சிகள்

Atlas Moth_Caterpillar_Kalyan Varma_700

அட்லாஸின் புழுப்பருவம்

இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி அலாதியானது. பறக்கும் நிலையை அடையும் முதிர்ந்த அட்லாஸ் பட்டாம்பூச்சி வாழ்வது சுமார் இரண்டு வாரங்களே. இந்த நேரத்திற்குள் அவற்றின் இணைத்தேடி கலவி கொண்டு சரியான உணவுத் தாவரத்தைக் கண்டு அங்கு சென்று முட்டைகளை இட வேண்டும். சரி முதலில் இரவு நேரத்தில் இணையை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது? பெண் பட்டாம்பூச்சி தன் உடலில் இருந்து ஒரு வகை வேதிப்பொருளை (Pheromone) வெளியிடும். இது காற்றில் கலந்து வெகுதூரம் பயணிக்கும். இதை முதிர்ந்த ஆண் பட்டாம்பூச்சி சிறிய தென்னங்கீற்று வடிவில் இருக்கும் தனது தூவிகள் அடர்ந்த உணர்நீட்சிகளில் உள்ள வேதிஉணர்விகளால் (chemoreceptors) அடையாளம் கண்டு தனது இணைத்தேடி பறந்து வரும். கலவி முடிந்ததும் தகுந்த தாவரத்தில் பெண் பல முட்டைகளை இடும். முட்டைகள் பொரிந்து அதிலிருந்து புழுக்கள் (caterpillar) வர சுமார் இரு வார காலமாகலாம். இப்புழுக்கள் அவை இருக்கும் தாவர இலைகளை விடாமல் தின்று கொண்டே இருக்கும். இளம்பச்சை நிறத்தில், இளநீலப் புள்ளிகளும், ஒவ்வொறு கண்டத்தின் மேலும் வெண்தூவிகளைக் கொண்ட கொம்பு போன்ற நீட்சிகள் உடைய புழு வளர வளர தோலுரிக்கவும் (moulting) செய்யும். சுமார் 4-5 அங்குல நீளம் வளர்ந்தபின் இப்புழு  தனது எச்சிலால் உருவான இழைத் தன்னைச் சுற்றி கட்டிக்கொண்டு கூட்டுப்புழுவாக (Pupa) மாறும். ஒரு சில வாரங்களில் கூட்டை விட்டு முதிர்ந்த பட்டாம் பூச்சி வெளியே வந்துவிடும்.

முதிர்ந்த அட்லாஸ் பட்டாம்பூச்சிக்கு விசித்திரமான ஒரு பண்பு – வாழும் ஓரிரு வாரங்களில் அவை சாப்பிடுவதே இல்லை. ஏனெனில் அவற்றிற்கு வாயுறுப்பு கிடையாது. வாயிலாப்பூச்சி என்பார்களே அது அட்லாஸ் பட்டாம்பூச்சிக்குப் சரியாகப் பொருந்தும். இது எப்படி சாத்தியம்? சில நாட்களே வாழும் முதிர்ந்த பட்டாம்பூச்சி அவற்றின் புழுப்பருவத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் கூட இருக்கும். புழுப்பருவத்திலேயே அபரிமிதமாக சாப்பிட்டு முதிர்ந்த பருவத்திற்குத் தேவையான தகுந்த ஊட்டச்சத்தினை உடலில் சேமித்து வைத்திருக்கும் காரணத்தால் இவற்றிற்கு வாயுறுப்பு அவசியமில்லை.

அட்லாஸ் பட்டாம்பூச்சியைத் தவிர இன்னும் பல அழகிய பட்டாம்பூச்சிகளையும் நம் பகுதிகளில் பார்க்க முடியும். நிலா பட்டாம்பூச்சி (Indian Lunar Moth) எனும் இளம்பச்சை நிறம் கொண்ட இப்பூச்சியின் இறக்கை விரிந்த நிலையில் சுமார் 12 செ.மீ இருக்கும். முன் இறக்கையின் முன் விளிம்பில் சிவப்பு நிறக் கோடும், பின் இறக்கையின் பின் பகுதி குறுகி வால் போல நீண்டும் இருக்கும். நான்கு இறக்கைகளிலும் பொட்டு போன்ற, பெரிய வெள்ளை நிற புள்ளி இருக்கும். இதை அமர்ந்த நிலையில் பார்பதற்கு ஏதோ சிறிய பட்டம் போல் இருக்கும். சுமார் பத்து நாட்களே வாழும் முதிர்ந்த பருவத்திலுள்ள நிலா பட்டாம்பூச்சிக்கும் வாயுறுப்பு கிடையாது.

நிலா பட்டாம்பூச்சி Photo: Wikipedia

நிலா பட்டாம்பூச்சி Photo: Wikipedia

இவை இரண்டையும் தவிர பொதுவாக காணக்கூடியது ஆந்தைக்கண் பட்டாம்பூச்சி (Owlet Moth). அமர்ந்திருக்கும் போது இறக்கையில் கண் போன்ற கரும்புள்ளி ஆந்தை அல்லது ஒரு பெரிய விலங்கு முழித்துப் பார்த்துக் கொண்டிருபதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். இந்த வடிவம் இப்பூச்சியை தின்ன வரும் சிறிய பறவைகள், பல்லிகள் முதலிய இரைக்கொல்லிகளை அச்சமுறச் செய்து விலகிச் சென்றுவிடும்.

இவையெல்லாம் தென்னிந்தியாவில் நான் பார்த்த சில வகைப் பட்டாம்பூச்சிகள். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காடுகளில் தென்படும் பல பட்டாம்பூச்சிகள் நாம் நம்பமுடியாத அளவிற்கு அழகாக இருக்கும். அவற்றையெல்லாம் பார்க்கப்போகும் இரவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆந்தைக்கண் பட்டாம்பூச்சி (Owlet Moth) Photo: Wikipedia

ஆந்தைக்கண் பட்டாம்பூச்சி (Owlet Moth) Photo: Wikipedia

********

பட்டாம்பூச்சி – வண்ணத்துப்பூச்சிவித்தியாசம்

இந்த இரு பூச்சிவகைகளும் செதிலிறகிகள் (Lepidoptera) வரிசையைச் சேர்ந்தவை. இவ்வரிசையில் உலகில் இதுவரை சுமார் 2,00,000 வகையான பூச்சிகள் இருப்பதாக அறியப்படுகிறது. இவற்றில் சுமார் 18,000 வகை மட்டுமே வண்ணத்துப்பூச்சி. மீதி அனைத்தும் பட்டாம்பூச்சிகளே.

பறக்கும் ஓவியங்களைப் போல் பல வண்ணங்ககளை இறக்கையில் சுமந்து பகலில் பறந்து திரிபவை வண்ணத்துப்பூச்சிகள். இவற்றில் பல அமரும் போது இறக்கை மடக்கி உடலின் மேல் வைத்துக் கொள்ளும். வெயில் நேரத்தில் உள் பக்கம் தெரியும்படி மெல்ல தனது இறக்கைகளை விரித்து வைத்துக் கொள்ளும். இவற்றின் உணர் நீட்சிகள் (antennae) நீண்டு, மெலிதாக முனையில் சற்று தடித்தும் இருக்கும்.

பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் இரவாடிகள். எனினும் சில வகை பட்டாப்பூச்சிகள் பகலில் பறக்கும் தன்மை வாய்ந்தவை. இவை அமரும் நிலையில் இறக்கைகளை கிடை மட்டமாக விரித்து வைத்திருக்கும். சில வகை பட்டாம்பூச்சிகள் அமரும் போது முன் இறக்கைகளின் அடியில் பின் இறக்கைகளை உள் பக்கமாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். ஆகவே பின் இறக்கைகளை அவை பறக்கும் போது மட்டுமே பார்க்கமுடியும். மேலும் வண்ணத்துப்பூச்சிகளைப் போலல்லாமல், பறக்கும் பொது இவற்றின் முன் இறக்கைகளில் இருக்கும் கொக்கி போன்ற அமைப்பு பின் இறக்கைகளை பிடித்துக் கொள்ளும். பட்டாம்பூச்சிகளின் உணர்நீட்சிகள் பல விதங்களில் இருக்கும். பொதுவாக தூவிகளுடனோ, பல கிளைகளுடனோ காணப்படும்.

பட்டாம்பூச்சிகளும் நாமும்

நாம் அனைவரும் அறிந்த பட்டாம்பூச்சி வகைகளும் சில உண்டு. மல்பரி (Mulberry) டஸ்ஸார் (Tussar), முகா (Muga) எறி (Eri) பட்டுப்பூச்சிகளே அவை! இவை தானே நமக்கு பட்டு இழைகளை அளிக்கின்றன. மனிதர்களுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும்  உள்ள தொடர்ப்பு இது மட்டுமல்ல. பட்டாம்பூச்சிகள் நாம் வாழும் சூழல்தொகுப்பிற்கு செய்யும் சேவைகள் பல. பகலில் வண்ணத்துப்பூச்சிகள் செய்யும் முக்கியமான வேலையான அயல் மகரந்தச் சேர்க்கையினை இரவில் பட்டாம்பூச்சிகள் செய்கின்றன. இரவில் திரியும் வெளவால்களுக்கும், பறவைகளுக்கும், ஏனையா உயிரினங்களுக்கும் இரையாகின்றன. எனினும் பல வகையான பட்டாம்பூச்சிகள் நாம் பயிரிடும் தாவரங்களையும், கம்பளி, பஞ்சு முதலிய இழைகளாலான துணி வகைகளை அவற்றின் வாழ்வின் ஏதோ ஒரு பருவத்தில் உணவாகக் கொள்கின்றன. இதனாலேயே அவை மனிதர்களுக்கு தீமை பயக்கும் உயிரினங்களாக கருதப்பட்டு பல வகையான பூச்சிகொல்லி மருந்துகளை தெளித்து ஒழித்துக் கட்டப்படுகின்றன. இவ்வுலகில் நாம் தோன்றுவதற்கு முன்மே சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இவ்வகையான அழகிய பட்டாம்பூச்சிகளை ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்பாடு, இயற்கை விவசாயம் மூலமே உயிரினங்களின் அழிப்பை ஓரளவிற்கு குறைக்க முடியும்.

பட்டாம்பூச்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள :

நூல் – Moths of India by Isaac Kehimkar

வலைத்தளங்கள்

இந்தியாவில் தென்படும் பல வித பட்டாம்பூச்சிகளின் படங்களை இந்த வலைதளத்தில் காணலாம் http://www.indiabiodiversity.org/group/indianmoths ஒரு வேளை உங்களிடம் பட்டாம்பூச்சிகளின் படங்கள் இருந்தாலும் இந்த வலைதளத்தில் மேலேற்றினால் செய்தால் அங்குள்ள ஆராய்ச்சியளர்கள் அவற்றின் பெயரையும் அவை பற்றிய தகவல்களையும் அளிப்பார்கள்.

உலகம் முழுவதும் ஜூலை 19-27 பட்டாம்பூச்சிகள் வாரமாக கொண்டாடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://www.nationalmothweek.org  வலைத்தளத்தைக் காணவும்.

********

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 29th July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

July 31, 2014 at 10:21 pm