Archive for the ‘Marine’ Category
தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்
தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் (Protected areas of Tamil Nadu)
தமிழகத்தின் இயற்கைச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் இங்குள்ள பல வகையான சூழல் தொகுப்புகள் தான். இதனாலேயே தமிழகம் பல வகையான வாழிடங்களையும், கானுயிர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
பண்டைய தமிழர் தமிழகத்தின் சூழல் தொகுப்பினை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரித்திருந்தனர். காடும் காடு சார்ந்த நிலப்பகுதி முல்லை எனவும், மலையும் மலையைச் சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், வயலும் வயலைச் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடலைச் சார்ந்த பகுதி நெய்தல் எனவும், முல்லையும், குறிஞ்சியும் பல காரணிகளால் சிதைவடைந்து அதன் இயல்பிழந்திருப்பின் அதனை பாலை எனவும் பிரித்திருந்தனர்.
புவியமைப்பினை பொறுத்து தமிழகத்தில் நான்கு வகை இயற்கையான சூழல் தொகுப்புகள் இருப்பதை அறியலாம். அவை முறையே:
1. மலைகள் (Mountanins)
2. மேட்டுநிலங்களும் சமவெளிகளும் (Plateau and plains)
3. நன்னீர்நிலைகள் (Freshwater region)
4. கடற்பகுதி (Coastal region)

தமிழ் நாட்டில் உள்ள சில இயற்கையான வாழிடங்கள்: மலைகள், நன்நீர்நிலைகள், கடற்பகுதிகள், மேட்டுநிலங்கள், சமவெளிகள் (Photos: Wikimedia Commons)
இது தவிர செயற்கையான அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வேளாண்நிலப்பகுதிகள் (Agricultural region) மற்றும் மனிதர்கள் வாழும் ஊர்ப்புறங்களும் நகர்ப்புறங்களும் (Human habitations) ஒரு வகையான சூழல் தொகுப்பே. ஒவ்வொரு சூழல் தொகுப்பிலும் பல வகையான வாழிடங்களைக் காணமுடியும்.
இந்த சூழல் தொகுதிகளில் இருக்கும் பல வகையான வாழிடங்களும், அதில் வாழும் உயிரினங்களும் காட்டுயிர்ச் சரணாலயம், தேசியப் பூங்கா, புலிகள் காப்பகம், உயிர்மண்டலக் காப்பகம், பல்லுயிர்ப் பாதுகாப்பகம் என பல வகைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
காட்டுயிர்ச் சரணாலயங்கள் (Wildlife Sanctuaries)
சரணாலயங்கள் அமைக்கப்படுவது பொதுவாக ஒரு சில வகை உயிரினங்களுக்காகவே. உதாரணமாக களக்காடு காட்டுயிர்ச் சரணலயம் சோலைமந்திகளுக்காவே (சிங்கவால் குரங்கு) ஏற்படுத்தப் பட்டது. அதாவது ஒரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரினத்தை பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. அந்த உயிரினம் ஒரு விலங்காக மட்டுமல்லாமல் தாவரமாகவோ அல்லது தாவரச் சமுதாயமாகக் (Plant community) கூட இருக்கலாம். இதனால் அந்த குறிப்பிட்ட உயிரினம் மட்டுமல்லாமல் அதன் வாழிடமும் சேர்ந்து பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் இது வரை 11 இடங்கள் காட்டுயிர்ச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1. முதுமலை காட்டுயிர்ச் சரணாலயம்
2. கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்
3. களக்காடு காட்டுயிர்ச் சரணாலயம்
4. இந்திரா காந்தி காட்டுயிர்ச் சரணாலயம்
5. முண்டந்துறை காட்டுயிர்ச் சரணாலயம்
6. வல்லநாடு வெளிமான் சரணாலயம்
7. சிறீவில்லிப்புத்தூர் நரை அணில் சரணாலயம்
8. கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
9. கொடைகானல் காட்டுயிர்ச் சரணாலயம்
10. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
11. காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்
தேசியப் பூங்காக்கள் (National Parks)

கிண்டி தேசியப் பூங்காவில் வெளிமான். Photo: A J T Johnsingh/wikicommons
இயற்கைச் சூழலில் வாழும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தை மட்டும் முன்னிருத்தி சரணாலயங்கள் என பாதுகாக்காமல் அவற்றின் உயிர்ச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்படுபவை தேசியப் பூங்காக்கள். தமிழகத்தில் இது வரை 5 இடங்கள் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் காட்டுயிர் சரணாலத்தினை ஒட்டிய சில பகுதிகளையும் சேர்த்து பழனி தேசியப் பூங்காவாக மேம்படுத்தும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1. கிண்டி தேசியப் பூங்கா
2. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா
3. இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
4. முதுமலை காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
5. முக்குறுத்தி தேசியப் பூங்கா
புலிகள் காப்பகங்கள் (Tiger Reserves)

மேல் கோதையாறு, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். Photo: A J T Johnsingh/Wikimedia commons
அருகிவரும் வேங்கைப் புலிகளின் பாதுகாப்பிற்காக 1973ல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் (Project Tiger – http://projecttiger.nic.in/) கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகளை கள்ள வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதுவுமே இத்திட்டத்தின் தலையாய நோக்கம்.
1. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்
2. ஆனைமலை புலிகள் காப்பகம்
3. முதுமலை புலிகள் காப்பகம்
4. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
யானைகள் காப்பகங்கள் (Elephant Reserves)
இந்திய வனங்களில் பரவியுள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக யானைகள் திட்டம் (Project Elephant) இந்திய அரசால் 1992ல் தொடங்கப்பட்டது. யானைகளின் வாழிடங்களையும், அவற்றின் வழித்தடங்களையும் பாதுகாத்தல், மனிதர்-யானை எதிர்கொள்ளலை மட்டுப்படுத்துதல், சமாளித்தல், கோயில்களிலும், வனத்துறையிலும் வளர்க்கப்படும் யானைகளின் நலன் காத்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
இதன் விளைவாக யானைகள் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் யானைகளுக்கான காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை 32 யானைக் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. யானைகள் பல இடங்களுக்கு வெகுதுரம் சுற்றித்திரிவதாலும், வலசை போவதால் இவற்றின் காப்பகங்களும் அவை அடிக்கடி செல்லக்கூடிய பரந்த பலவகையான வாழிடங்களை உள்ளடக்கிய நிலவமைப்பில் அமைந்துள்ளது. சில காப்பகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரந்து அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 4 யானைக் காப்பகங்கள் உள்ளன.
1. நீலகிரி யானைக் காப்பகம் (நீலகிரி- கிழக்குத் தொடர்ச்சிமலை பகுதிகள் சேர்ந்தது)
2. நிலாம்பூர் யானைக் காப்பகம் (நிலாம்பூர்-அமைதிப்பள்ளத்தாக்கு-கோயம்பத்தூர் பகுதிகள் சேர்ந்தது)
3. ஸ்ரீவில்லிப்புத்தூர் யானைக் காப்பகம் (கேரளாவில் உள்ள பெரியார் யானைக் காப்பகத்துடன் சேர்ந்தது)
4. ஆனைமலை யானைக் காப்பகம் (ஆனைமலை – பரம்பிக்குளம் பகுதிகள் சேர்ந்தது)
உயிர்மண்டலக் காப்பகம் (Biosphere Reserves)

அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம். Photo: Seshadri. K.S / Wikimedia Commons
யுனெஸ்கோவின் (UNESCO) மனிதனும் உயிர்மண்டலமும் (Man and Biosphere-MAB) திட்டம் 1971ல் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல உயிர்மண்டலக் காப்பகங்கள் நிறுவப்பட்டன. பல்லுயிரியத்திற்கு பெயர்போன பகுதிகளின் இயற்கை எழில் மற்றும் வளம் குறையாமல் போற்றிப் பேனுதல், அவற்றின் சூழல் சீரழியாமலும், வளங்குன்றாமலும் பாதுகாத்தல், காடுசார் பொருட்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் உள்ளூர் சமூகத்தினரின் பங்களிப்பை ஊக்குவித்தல், இங்கு வாழும் பழங்குடியினரின் கலாசாரத்தை குலைக்காமல் அவர்களின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து அதனை ஒட்டிய முன்னேற்றம் காண்பது, காடுவிளை பொருட்கள் நீடித்து நிலைக்க அவற்றின் பயன்பாட்டை முறையான மேலாண்மையினால் ஒழுங்குபடுத்துதல், பல்லுயிர் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை இப்பகுதியில் வாழ்வோருக்கு ஏற்படுத்துதல், வாழிட மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அறிவியல் ஆராய்ச்சியையும், பாரம்பரிய அறிவையும் ஒருங்கினைத்தல் முதலியவையே இந்த மனிதனும் உயிர்கோளமும் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
இந்தியாவில் 3 உயிர்மண்டலக் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் மூன்று தமிழகப் பகுதிகளில் உள்ளன. உயிர்மண்டலக் காப்பகங்களுக்கு மாநில வரம்புகள் கிடையாது.
1. நீலகிரி உயிர்மண்டலக் காப்பகம்
2. மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம்
3. அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம்
பறவைகள் சரணாலயங்கள் (Bird Sanctuaries)
பறவைகளுக்கு நாம் வகிக்கும் அரசியல் எல்லைகள் கிடையாது. ஆகவே அவை ஓரிடத்தில் மட்டும் வாழாமல் பல விதமான இடங்களில் பறந்து வாழும் இயல்புடையவை. குறிப்பாக நீர்ப்பறவைகளில் பல ஓரிடத்தில் கூட்டமாகக் கூடுகட்டி இனவிருத்தி செய்யும் இயல்புடையவை. உலகின் வடக்கு பகுதியிலிருந்து அங்கு கடும் குளிர் நிலவும் காலங்களில் தமது இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி இரைதேட வரும் வலசைப் பறவைகளுக்கு உள்நாட்டு நீர்நிலைகள் முக்கியமான வாழிடம். உள்நாட்டுப் பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான வாழிடங்கள் உள்ள பகுதிகளையும், வலசை வரும் பறவைகளுக்காகவும் தமிழகத்தில் 13 பறவைகள் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளான.
1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
2. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
3. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம்
4. கரிக்கிளி பறவைகள் சரணாலயம்
5. சித்ரங்குடி பறவைகள் சரணாலயம்
6. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்
7. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
8. வடுவூர் பறவைகள் சரணாலயம்
9. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
10. மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
11. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
12. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
13. ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்
பல்லுயிர்ப் பாதுகாப்பகம் (Conservation Reserve)
பல்லுயிர்ப் பாதுகாப்பு என்பது அரசு துறைகளின் வேலை மட்டுமல்ல. அருகி வரும் வாழிடங்கள், கள்ளவேட்டை, சுற்றுச்சூழல் மாசு முதலிய பல காரணங்களால் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் பல உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இதை உணர்ந்த பல சமூகங்கள் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சியோ, அரசு துறைகளின் ஊக்குவிப்போ இல்லாமல் தாமாகவே பல்லுயிர் பாதுகாப்பிற்கு பங்களித்து வருகின்றன. அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதில்லை. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பல உயிரினங்களைக் காண முடியும். சரணாலங்களின் விதிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கு உட்படாத இது போன்ற இடங்களில் பொது மக்களால் வாழிடங்களோ, உயிரிங்களோ பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற வாழிடங்களை, பல்லுயிர்ப் பாதுகாப்பகமாக அறிவிக்க ஏதுவாக இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தில் (1972) 2003ல் சீர் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் இரண்டு பல்லுயிர் பாதுகாப்பகங்கள் உள்ளன.
1. திருபுடைமருதூர் பல்லுயிர்ப் பாதுகாப்பகம்
2. சுசீந்திரம் – தேரூர் – மணக்குடி பல்லுயிர்ப் பாதுகாப்பகம்
பாதுகாக்கப்படாத வாழிடங்கள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மேயும் காட்டெருதுகள் (Gaur). Photo: By PJeganathan (Own work) [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)%5D, via Wikimedia Commons
இயற்கைச் செல்வம் என்பது தேசியப்பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படுவது இல்லை. அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் அவற்றின் குணத்தைப் பொறுத்து அவை பல இடங்களில் அல்லது எல்லா இடங்களிலும் பரவியுள்ளன. பொதுவாகத் தென்படும் உயிரினம் முதல் அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் பல உயிரினங்கள் தமிழகத்தின் பாதுகாக்கப்படாத இடங்களிலும் தென்படுகின்றன. காரணம் அந்த உயிரினங்கள் வாழ ஏதுவான வாழிடங்கள் அரசியல் சட்டங்களால் பாதுகாக்கப்படாத இடங்களிலும் உள்ளன. உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தேயிலைத் தோட்டத்திலும் யானைகளும், சிறுத்தைகளும் திரிவதுண்டு. தேயிலை காபி முதலிய ஓரினப்பயிர்கள் பரந்து விரிந்திருக்கும் பகுதிகளில் மழைக்காட்டுத் துண்டுச் சோலைகள் தீவுகள் போல ஆங்காங்கே திட்டுத் திட்டாக அமைந்துள்ளன. இந்தச் துண்டுச் சோலையில் நீலகிரி கருமந்தி, சோலைமந்தி முதலிய அரிய ஓரிட வாழ்விகள் வாழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இது போல் தனியாருக்குச் சொந்தமான பல இடங்கள் உள்ளன. நீலகிரி, வால்பாறை, பழனிமலை, மேகமலை முதலிய பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பல ஓரினப்பயிர் நிலங்கள் மற்றும் அங்குள்ள காடுகளை உதாரணமாகச் சொல்லலாம்.
சமவெளிகள் மிகவும் ஆபத்துக்குள்ளான வாழிடமாகும். பெரும்பாலான அரசுப் பதிவுகளில் இது போன்ற இடங்கள் தரிசு அல்லது பயணில்லாத நிலமாக (waste land) குறிக்கப்படுகின்றது. மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கள், வேளாண்மை விரிவாக்கம் முதலிய காரணங்களுக்காக சமவெளிகளில் உள்ள வாழிடங்கள் வெகுவாக அழிக்கவும், மாற்றத்திற்கும் உள்ளாகின்றன. கடற்கரையோரப் பகுதிகளுக்கும் இதே நிலைதான்.
பாதுகாக்கப்பட்ட நன்னீர்நிலைகளைத் தவிர எண்ணிலடங்கா குளங்களும், ஏரிகளும், கண்மாய்களும் சிறியதும் பெரியதுமாக தமிழகம் முழுதும் பரவியுள்ளது. எனினும் இவற்றில் பல சரியாகத் தூர்வாரத காரணத்தாலும், நகரமயமாக்கத்தாலும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டன. மணற்கொள்ளை ஆற்றுச்சூழலை பெரிதும் பாழ்படுத்தி அங்கு வாழும் உயிரினங்களையும் அந்த நிலவமைப்பையே மாற்றியும் வருகிறது. தொழிற்சாலை கழிவுகளினாலும், வேறு பல காரணிகளாலும் பல நீர்நிலைகள் மாசடைந்து போய்விட்டது.
இதுபோன்ற பகுதிகளில் வாழும் உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க, அந்த மொத்த நிலவமைப்பையே பாதுகாக்க, சரியான முறையில் பராமரிக்க திட்டங்களும், மேலாண்மைக் கொள்கைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். தாவரங்களும் விலங்குகளும் பாதுகாப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படவேண்டும், வாழவேண்டும் என்று அவசியம் இல்லை. எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தான், மற்ற உயிரினங்களுக்குக் கிடையாது. ஆகவே இது போன்ற பகுதிகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் போற்றிப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
கரையோர நண்டெல்லாம்…
கரையோர நண்டெல்லாம்: தரங்கம்பாடிக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த கோட்டையை விட என்னை அதிகம் கவர்ந்தது கடற்கரையோர நண்டுகள் தான். பக்கவாட்டில் நடந்து செல்லும். அருகில் செல்ல முயற்சித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவை தோண்டி வைத்திருக்கும் குழிக்குள் புகுந்து கொண்டு மெல்ல அவற்றின் முல்லை அரும்பு போன்ற கண்களை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கும். இவற்றை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
தொடர்புள்ள கட்டுரை: கடற்கரைக் கோலங்கள்
கடற்கரைக் கோலங்கள்
அதிகாலையில் எழுந்து பலோலம் கடற்கரையோரம் நடக்க ஆரம்பித்தேன். ஒரு மீனவர் கடலில் இருந்து மீன் பிடித்துவிட்டுத் திரும்பி, அலையோரப் பகுதியிலிருந்து கரைக்கு படகை தன்னந்தனியாக தள்ளிக்கொண்டிருந்தார். அலைவாய்க் கரையிலிருந்து சுமார் 50மீ தூரத்தில் பல படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தூரம் சிறிதாகத் தெரிந்தாலும் சுமார் 5மீ நீளமுள்ள படகை தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து கரைசேர்ப்பதென்பது சுலபமான காரியமல்ல. மணலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க நான்கு நீளமான மரக்கட்டைகளை படகின் அடியில் வைத்து படகின் பின்னாலிருந்து தள்ளிக் கொண்டு வந்தார். சிறிது தூரம் நகர்த்திய பின் இரண்டிரண்டு உருளைகளை பின்னாலிருந்து படகின் முன்னே வைத்துத் தள்ளிக் கொண்டு போனார்.
அவரைத் தாண்டி பார்வையை செலுத்தினேன். அலை ஆரவாரமில்லாமல் அடித்துக் கொண்டிருந்தது. அதிக ஆள் நடமாட்டம் இல்லை. இன்னும் சில மணி நேரத்தில் மனிதக்கூட்டம் அங்கே மொய்க்க ஆரம்பித்துவிடும். ஆங்காங்கே சிலர் ஜாக்கிங், யோகா செய்து கொண்டும் சிலர் நடை பழகிக் கொண்டும் இருந்தனர்.
கடல் உள்வாங்கியிருந்தது. கடற்கரையில் அலையின் தடம் அழகாக இருந்தது. காற்றும், அலையும், கடல்நீரும், மணலும் சேர்ந்து அக்கடற்கரையில் அழகான, விதவிதமான கோலங்களை ஏற்படுத்தியிருந்தன. அவற்றில் ஒரு ஒழுங்கு இருந்தது. படிபடியாக, வரிவரியாக, வளைந்து நெளிந்து, கிளைகிளையாக மணல் கோலங்கள்.
இவற்றைப் பார்த்துப் படம்பிடித்துக் கொண்டே வந்தபோது கண்ணில் தட்டுப்பட்டன நண்டுகள். என்னைக் கண்டவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் குடுகுடுவென பக்கவாட்டில் ஓடி தோண்டி வைத்திருந்த வளைக்குள் ஓடி மறைந்தன.
அந்த நண்டுகள் இட்ட கோலங்களும் மிக அழகாக இருந்தது. ஆம் நண்டுக் கோலங்கள்.
மேலோட்டமாக பார்க்கும் போது அவற்றின் வளையைச் சுற்றிக் கிடந்த நண்டுக் குமிழ்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடப்பதைப் போலிருந்தாலும், கூர்ந்து கவனித்தபோது அதிலும் ஓர் ஒழுங்கு (pattern) காணப்பட்டது. எனினும் அவற்றிலும் பல வடிவங்கள் இருப்பது தெரிந்தது. நண்டு வளையைச் சுற்றி கிடந்த குமிழ்களின் உருவ அளவும், நண்டின் உருவத்திற்கேற்ப இருந்தது. சின்னஞ்சிறிய (குண்டுமணியின் அளவேயுள்ள) நண்டுக் குஞ்சுகளின் கூட்டின் வெளியே மணிமணியாக கடுகின் அளவேயுள்ள குமிழ்கள். சற்று பெரிய (சுமார் 2 செமீ நீளமுள்ள) நண்டுகளின் வளையைச் சுற்றி குண்டுமணியின் அளவு குமிழ்கள். நீள் உருளை வடிவிலும் சில குமிழ்கள். வளையை மையமாக வைத்து அதைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் சூரியக் கதிர்கள் போல குமிழ்கள் பரவிக் கிடந்தன. அந்தக்குமிழ்கள் எப்படி உருவாகின்ற எனப் பார்க்கும் ஆர்வத்தில் அங்கேயே அசையாமல் நின்று கொண்டிருந்தேன்.
தரையில் இருந்த வளைக்குள் இருந்து மெல்ல எட்டிப்பார்த்தது ஒரு நண்டு. உருவில் அப்படியொன்றும் பெரியது இல்லை சுமார் 1 செ.மீ நீளமே இருக்கும். பின்பு பக்கவாட்டில் நகர்ந்து முழுவதுமாக வெளியே வந்தது. அதன் வளையைச் சுற்றிலும் சில குமிழ்கள் இருந்தன. நூல் பிடித்தது போல் ஒரே நேர்க்கோட்டில் வரிசையாக இருந்த குமிழ்களின் பக்கமாக இருந்த அந்த நண்டு சில நொடிகள் கழித்து மெல்ல பக்கவாட்டில் நகர ஆரம்பித்தது. நகர்ந்து கொண்டிருந்த போதே கிடுக்கி போன்ற இரண்டு கைகளாலும் மணலை அள்ளி எடுத்து தனது வாயில் திணித்துக் கொண்டே சென்றது. திணிக்கப்பட்ட வேகத்திலேயே அந்த மணல் அதன் வாயின் மேற்புறம் சேர ஆரம்பித்தது. ஒரு குமிழ் போன்ற தோற்றத்தை அடையும் தருவாயில், வரிசையின் கடையில் இருந்த குமிழுக்கு அருகில் வந்து விட்டது அந்த நண்டு. இப்போது அது தனது ஒரு கையால் வாயிலிருந்த அந்த மணல் குமிழை வெட்டி எடுப்பது போல எடுத்து இலாவகமாக தனது நான்கு கால்களின் உதவியால் கடைசியாக இருந்த குமிழிற்கு அடுத்தாற்போல வைத்தது. கண நேரம் கூட தாமதிக்காமல் உடனே பக்கவாட்டில் நகர்ந்து வளைக்கு அருகே சென்று மறுபடியும் மணலை அள்ளித் திங்க ஆரம்பித்தது. இடமிருந்து வலமாக மெல்ல நகர்ந்து ஒரு குறிப்பிட்ட தூரம் செல்வதும், வலமிருந்து விருட்டென இடப்பக்கமுள்ள வளைக்கு வந்தடைவதுமாக இருந்த அந்தக் காட்சி எனக்கு டைப்ரைட்ரை நினைவு படுத்தியது. தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அதிலுள்ள உருளை (cylinder) இடமிருந்து வலமாகத் தானாக நகரும், பிறகு தாளின் ஓரத்திற்கு வந்தவுடன் அதிலுள்ள கைப்பிடியை வலமிருந்து இடமாக நாம் நகர்ந்த வேண்டும். இதைப் பார்த்திராதவர்கள் டாட் மெட்ரிக்ஸ் அச்சு இயந்திரம் இயங்குவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
அந்த நண்டு சுமார் 5-6 குமிழ்களை உருவாக்கி வைக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். கடல் நண்டுகளில் சில வகைகள் இவ்வகையான அழகான மணி மணியான நண்டுக் கோலங்களை கடற்கரையில் வரைகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை Sunburst அல்லது Sand beads என்பர். நான் பார்த்துக் கொண்டிருந்தது சோல்ஜர் நண்டுகள் (Soldier Crab Dotilla myctiroides) நண்டுகளை. ஏன் இப்படிச் செய்கின்றன என்பதை ஆராய்ந்ததில் பல சுவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த நண்டுகள் மணலை வாயில் அள்ளித் தினித்துக் கொள்வது அதிலுள்ள கரிமப் பொருட்களையும் (organic matters) உட்கொள்வதற்கே. தமது கைகளால் மணலை அள்ளி, வாயுறுப்புகளால் அதற்குத் தேவையான உணவினை உட்கொண்டு, வாயிலிருந்து சுரக்கும் எச்சில் போன்ற திரவத்தால் எடுத்த மணலை உருளையாக்கி, கூர் நகங்களைப் போன்ற முனைகள் கொண்ட கால்களால் எடுத்து கீழே வைக்கின்றன. மேலும் நான் கண்ட நீள் உருளை வடிவ மணல் குமிழ்கள் அவை வளை தோண்டி வெளியே எடுத்துப் போடும் போது உருவாக்கப்பட்டவை. இவை ஏற்படுத்தும் அழகான நண்டுக்கோலங்கள் இவற்றின் வாழிட எல்லையை குறிப்பிடுவதற்காகவும் கூட இருக்கலாம். இது போன்ற சில நண்டு வகைகள் இடும் கோலம் அல்லது உருவாக்கும் வளைகள் அவற்றின் இணையை கவர்வதற்காகவும் தான்.
கடற்கரையில் மெல்ல வெயில் ஏற ஆரம்பித்தது. இன்னும் சற்று நேரத்தில் கடல் நீர் மேலேறி நண்டுகளின் கோலங்களையும், பல அழகான மணல் கோலங்களையும் நனைத்து, அழித்து விடும். நண்டுகளும் கடல் கரையிலிருந்து உள்வாங்கும் வரை மணலுக்குள் சென்று பதுங்கி விடும். அப்படிப் பதுங்கும் போது தமது வளையில் காற்றுக் குமிழியை ஏற்படுத்தி அதனுள் வசிக்கும். அதன் பின் வெளியே வந்து மீண்டும் சளைக்காமல் கோலமிடும் வேளையை தொடர ஆரம்பிக்கும்.
நண்டுக் குமிழ் உருவாகும் வீடியோவைக் காண கீழ்க்கண்ட உரலியை சொடுக்கவும்.
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 14th October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.