Archive for the ‘Migration’ Category
“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் நேர்காணல்
“2.0 – படம் அறிவியலுக்கு எதிரான படம்!” – ஆனந்த விகடன் இதழுக்காக (01-05-2019/25-௦4-2019-Online) பத்திரிக்கையாளர் திரு. க. சுபகுணம் அவர்களிடம் பகிர்ந்தவை..
நேர்காணலின் முழு வடிவம் கீழே:
பறவைகள். பூவுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனத்தின் ஈர்ப்பையும் அன்பையும் சற்றுக் கூடுதலாகப் பெற்ற உயிரினம். மனிதனால் இவ்வுலகில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் வெகுவாக பாதிக்கப்படுவதும் பறவைகளே. சூழலியல் பாதுகாப்பில் ஒருவரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் முதலில் அவரைப் பறவை நோக்குதலுக்குப் பழக்கவேண்டும். அதுவே தானாக அவரை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அத்தகைய பறவை நோக்குதலைத் தமிழகத்தில் பரவலாக்கியதில் பல பறவை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அத்தகைய பறவை ஆய்வாளர்களில் முக்கியமானவர் ப.ஜெகநாதன். மக்கள் அறிவியல் (Citizen Science) தமிழ்ச் சமுதாயத்தில் பரவலானதிலும் இவருடைய பங்கு மிக முக்கியமானது. ஆய்வாளர்கள் மக்களிடமிருந்து பிரிந்து நிற்கக்கூடாது, அவர்கள் மக்களுடன் நிற்க வேண்டும். அதை நடைமுறையில் செய்துகொண்டிருப்பவர். இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாக காட்டுயிரியலாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி…
ஆய்வுத்துறையில் குறிப்பாகப் பறவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உந்துதல் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
1996-ம் ஆண்டு மாயவரத்தில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் முதுகலையில் காட்டுயிரியல் படித்துக் கொண்டிருந்தேன். மக்கள் மத்தியில் காட்டுயிர் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டிருந்த சமயம். என் களஆய்வுக்காக தவளைகள், பாம்புகள், முதலைகள் போன்ற உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தேன். ஒகேனக்கல், பிலிகூண்டு, ராசிமணல் போன்ற பகுதிகளின் நதியோரங்களில் தான் களப்பணி. அப்போது பறவைகள் மீது அதீத ஆர்வம் இல்லையென்றாலும், ஓரளவுக்குப் பறவைகளைப் பார்க்கும் பழக்கமிருந்தது. அந்தச் சமயத்தில் என் பெற்றோர்கள் ஒரு இருநோக்கியை பரிசளித்தார்கள். அது மிகவும் பயனுடையதாக இருந்தது. காவிரிக் கரையில் நடந்து செல்லும் போது பல விதமான பறவைகளை முதன் முதலாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆக, பறவைகள்மீது உங்களுக்கு அளப்பரிய ஆர்வம் வந்ததற்கு அந்த இருநோக்கியை காரணமாகச் சொல்லலாமா?
அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நான் பறவைகளைப் பார்க்கத்தொடங்கியது நூல்களில் தான்! சாலிம் அலி எழுதிய இந்தியப் பறவைகள் (The Book of Indian Birds) எனும் நூலை ஆர்வத்துடன் தினமும் புரட்டிக்கொண்டிருப்பேன். அதில் உள்ள பலவகையான பறவைகளின் ஓவியங்களை பார்க்கையில் அவற்றை நேரில் பார்க்கும் ஆசை எழும். பறவை பார்த்தல் எப்போதும் அங்கிருந்துதான் தொடங்கும். நூலில் நாம் பார்க்கும் படங்கள் மனதில் பதியும்போது அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இயல்பாகவே குழந்தையைப்போல் துள்ளிக் குதிப்போம். படத்தில் பார்த்த ஒன்றை நேரில் பார்த்தால் யாருக்குத்தான் ஆனந்தமாக இருக்காது.
அப்படிப் பார்த்ததில் எந்தப் பறவை முதலிடத்தில் உள்ளது?
முதலிடம் என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனினும் இன்னும் நீங்காமல் நினைவில் நிற்பது ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முதன்முதலில் கண்ட மஞ்சள் தொண்டை சிட்டு (Yellow-throated Sparrow), மாயவரம் கல்லூரி விடுதியில் இருந்து பார்த்த கொண்டைக் குயில் (Red-winged Crested Cuckoo), களக்காட்டில் பார்த்த பெரிய இருவாச்சி (Great Pied Hornbill) போன்றவற்றைச் சொல்லலாம். இன்னும் பார்க்க வேண்டிய பறவைகள் எத்தனையோ உள்ளன. ஆக இந்தப் பட்டியல் என்றுமே முடியாது.
இந்தப் பறவைகளை எல்லாம் புத்தகத்தில் பார்த்துப் பழகியபின் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன். அப்படித் தொடங்கிய ஆர்வம்தான் இதுவரை இழுத்து வந்துள்ளது. பறவைகளைப் பார்க்க இருநோக்கி வேண்டுமென்றில்லை, ஆர்வம் இருந்தால் போதும். முதலில் பறவைகளின் படங்களை நாம் பார்க்கவேண்டும். அதை நேரில் பார்க்கையில் நாமே தானாக இனம் காண முயல்வோம். அதுதான் ஆர்வத்தின் முதல்படி. அவற்றின் குரலைக் கேட்டு அறிந்து கொள்வோம். அதன்பிறகு அவற்றைக் கூர்ந்து கவனிக்க இருநோக்கிகள் நமக்குப் பயன்படும்.
பறவை நோக்குதல் பொதுமக்களிடத்தில் பரவுவது அவசியமானதா?
பறவை நோக்குதல் என்பதொரு அருமையான பொழுதுபோக்கு. குழந்தைகள் முன்பெல்லாம் தெருவில் விளையாடுவார்கள், குளத்தில் குளிக்கப்போவார்கள். அவை தற்காலத்தில் மிகவும் குறைந்துவிட்டது. குளம், ஏரி, காடு மேடுகள் எல்லாம் சுற்றும்போது அங்கிருக்கும் மரங்கள் உயிரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் தற்போது இல்லாமலே போய்க்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, செல்போன்கள் அவர்களை ஓரிடத்தில் முடக்கி வைக்கிறது. அதனால், தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, இயற்கைமீது பற்றுதல் ஏற்படுத்த, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனை உதிக்கப் பறவை நோக்குதல் பயன்படும். பறவை என்றில்லை, வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பூச்சிகள், என இயற்கையில் உள்ள எந்த உயிரினாமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நமக்குப் பிடித்தால்தானே பாதுகாக்க நினைப்போம். ஆதலால், இயற்கையைப் பிடிக்க வைக்கவேண்டும். அதற்குப் பறவை நோக்குதல் முதல் படி. அதன்மூலம் பறவைகளை மட்டுமில்லாமல் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களைத் தூண்டும். ஒரு சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப் படுகிறதென்றால் அதை எதிர்த்து மக்களைப் போராட வைக்கும்.
அதையும் தாண்டி, பறவை நோக்குதலில் ஈடுபடும் ஒருவர் பொறியாளராக மாறினால் அணை கட்டுவதாக இருந்தாலும், காட்டின் குறுக்கே சாலை போட நேர்ந்தாலும் அங்கு சூழலியல் தாக்க மதிப்பீடு முறையாகச் செய்யவேண்டுமென்று நினைப்பார். அங்கிருக்கும் உயிரினங்களின் வாழிடம் அழியக்கூடாதென்ற கரிசனத்தோடு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். இதெல்லாமே பறவை நோக்குதல் தரும் பலன்களாகக் கருதலாம். ஒரு பொறுப்புள்ள சூழலியல்வாதியாக மக்களை உருவாக்குதில் இது மிகப்பெரிய பங்காற்றும்.
மக்கள் அறிவியல், தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படுகிறது, நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. மக்களை இதுமாதிரியான அறிவியல்பூர்வ முயற்சிகளில் பங்கெடுக்க வைப்பது எப்படி சாத்தியமானது? இதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா!
நீங்களும்தான் இதைச் செய்கிறீர்கள். விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் திட்டத்தை நடத்துகிறீர்களே, அது எதற்காக?
மாணவர்களுக்கு சமுதாயப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதை எப்படி அணுகவேண்டுமென்ற புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் பத்திரிகையாளராக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளைப் பற்றிய புரிதல் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். அதுதானே சமுதாயத்தின் சிறந்த மனிதராக அவர்களுக்குத் துணைபுரியும்.
இதுவும் கிட்டத்தட்ட அதேபோலத்தான். இதழியல் என்பது ஒரு துறை என்பதையும் தாண்டி அதை பொது மக்களும் செய்யமுடியுமென்ற (Citizen Journalism) நம்பிக்கையை எப்படி நீங்கள் விதைத்தீர்களோ அதையேதான் மக்கள் அறிவியல் (Citizen Science) மூலம் சூழலியல் துறையிலும் செய்யமுடிகிறது. அப்போதுதானே சிறந்த சூழலியல் பாதுகாவலனாக மக்கள் வாழமுடியும்.
மக்கள் அறிவியல் பற்றி இன்னும் விரிவாகக் கூறமுடியுமா… அது எப்படி அறிவியல் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றது? இது எப்படி பறவைகள் அல்லது இயற்கை பாதுகாப்பில் உதவும்?
ஒருவர் ஒரு பறவையைப் பார்க்கிறார். அதன் பெயர், பார்த்த இடம், நேரம் அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்கிறார். இதுவொரு முக்கியமான தரவு (Data). உதாரணத்திற்கு, 1980-களில் தஞ்சாவூரில் ஒருவரிடம் பாறு கழுகின் படமும் பார்த்த நேரம், இடம் போன்ற தகவல்களும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை அவரே வைத்திருந்தால், அவர் இறந்தபின் அது பயனில்லாமல் போய்விடும். பொதுவெளியில் அதாவது eBird, Wikipedia, Wikimedia Commons போன்ற Portal களில் அதை உள்ளிட்டால் அதே தரவுகள் ஆவணமாகும். இங்கெல்லாம் முன்பு பாறுகள் இருந்திருக்கிறது, இப்போது இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் ஆய்வுகளில் பயன்படும். அதுவும், அழிவின் விளிம்பிலிருக்கும் பாறு போன்ற பறவைகளின் தரவுகள் பொக்கிஷங்களைப் போல. அது பல முடிச்சுகளை அவிழ்க்கவும், ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தவும்கூடப் பயன்படும்.
சிட்டுக்குருவியால் அழியும் தருவாயில் இல்லை என்பதை நிரூபிக்கவும் இது போன்ற திட்டங்கள் உதவும். (பார்க்க Citizen Sparrow ).
உதாரணமாக ஒரு ஏரி அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியில் இருந்து இருந்து பலரும் அங்கிருக்கும் பறவைகளை பல்லாண்டு காலமாக தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாகவும் அவற்றை eBirdல் உள்ளிடுவதன் மூலமும் அங்குள்ள பொதுப்பறவைகளையும், அரிய பறவைகளையும், வலசை வரும் பறவைகளையும், அவற்றின் அடர்வையும் (density) அறிய முடியும். சில ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்த ஒரு வகைப் பறவை இந்த ஆண்டு கணக்கெடுப்பில் குறைந்து போனதென்றால் அதை அறிந்து கொண்டு அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.
ஒரு வேளை யாரோனும் அந்த ஏரியில் மண்கொட்டி நிரப்பி கட்டடம் கட்ட வந்தாலோ அல்லது குறிப்பிட்ட வனப்பகுதியின் குறுக்கே பெரிய அகலமான சாலையை போட வந்தாலோ அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை பொதுவெளியில் உள்ள மக்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்தே அந்தத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதை அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்க முடியும்.
ஆக தரவுகள் சேகரிப்பதுதான் இதன் நோக்கமா?
இல்லை. இதுபோன்ற தரவுகளை மக்கள் அறிவியல் மூலமாகச் சேகரிக்க வைப்பது மக்களுக்கும் அதன்மூலம் அறிவியல் சார்பான புரிதலை ஏற்படுத்தவும் தான். அவர்கள் சேகரிக்கும் தரவுகளைப் பொதுத்தளத்தில் பதிவிட ஊக்குவிக்கும் போது, அதன்மூலம் மிகப்பெரிய ஒரு கடலில் நாம் போட்ட துளியும் இருக்கிறதென்று அவர்கள் உணர்வார்கள். அது அறிவியல் மனப்பான்மையோடு அனைத்தையும் அணுகவேண்டுமென்ற சிந்தனையை அவர்களிடம் மேன்மேலும் அதிகரிக்கும்.
மக்கள் அறிவியல் தரவு சேகரிப்பதற்கான கருவி மட்டுமல்ல. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது போன்றவற்றை மக்கள் புரிந்துகொள்ள உதவும் ஒரு செயல்முறை.
மக்கள் அறிவியல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்துகொள்ளவும் அதைக் கணிக்கவும்கூடப் பயன்படுமாமே! உண்மையாகவா?
சூழியல் சுட்டிக்காட்டிகளான பறவைகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து அவைகளோடு இவ்வுலகில் இருக்கும் நமக்கும் எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறியலாம். பூமி சூடாதல், காலந்தவறி பெய்யும் மழை, பனி, உயரும் கடல் மட்டம் போன்றவை பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் வெகுவாக பாதிக்கிறது.
வெப்பநிலை உயர்வால் உலகில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் பல பறவைகள் பாதிப்படைந்துள்ளன. வெகுதூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள. உதாரணமாக ஒரு பழவுண்ணிப் பறவை வகை அது அது வலசை சென்ற இடத்தில் இருந்து கிளம்பி கூடமைக்கும் இடத்திற்கு செல்கிறது. அவ்வேளையில் அங்கே அவை உண்ணும் ஒரு பழ மரம் காலந்தவறி முன்னமே பூத்து காய்த்து பழுத்து ஓய்ந்து விடுகிறது. அப்போது அங்கு வரும் அப்பறவைகளுக்கு போதுமான உணவு கிடைக்காமல் போகலாம். அவை அங்கே செல்வது கூடமைத்து தம் இனத்தைப் பெருக்க. ஆனால் போதிய உணவு இல்லாததால் சில பறவைகள் கூடமைகாமல் போகலாம், அப்படியே கூடமைத்தாலும் குஞ்சுகளுக்கு சரிவர உணவு கிடைக்காமல் அவை இறந்து போகலாம்.
ஒரு பகுதிக்கு ஒரு வகையான பறவை வலசை வரும் நாள் அல்லது வாரம் அதே போல அவை அந்த இடத்தை விட்டு கிளம்பும் நாள் அல்லது வாரம் என்பது மிகவும் முக்கியமான தரவு. இதை பல பறவையாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பதிவு செய்து பொதுவெளியில் உள்ளிடும் போது இது ஒரு முக்கியமானத் தரவாகும். இந்தத் தரவுகள் மூலமாக ஒரு பறவை ஓரிடத்தில் எத்தனை நாட்கள் தங்குகின்றன என்பது தெரியும். அதேபோல் இதற்குமுன் எத்தனை நாட்கள் தங்கியிருந்தன என்பதும் தெரியும். இந்தக் காலகட்டம் தற்போது மாறுபடுகிறது. அதற்குக் காரணம் அந்த இடத்திலிருக்கும் தட்பவெப்ப நிலையில் நடக்கும் மாற்றங்கள். அந்த மாற்றங்களுக்குக் காரணம் காலநிலை மாற்றமா என்பதை ஆராய முடியும். மக்கள் தரவுகளாகப் பதிவேற்றும்போது அதைவைத்து ஆய்வு மாதிரி ஒன்றை உருவாக்கி அந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் என்னென்ன விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமென்றுகூடக் கணிக்கமுடியும். அதற்கு மக்கள் அறிவியல் உதவும்.
இதுமாதிரியான தரவுகளை மக்கள் பதிவிட்டதன் மூலமாகக் கார்னெல் பல்கலைக்கழக (Cornell University) ஆய்வாளர்கள் தற்போது காலநிலை மாற்றத் தால் ஏற்படும் பாதிப்பை கணிக்கின்றனர். வலசைகள் முன்பு எப்படியிருந்தன, இப்போது எப்படி மாறியிருக்கின்றன, காலப்போக்கில் அது எப்படி மாறுபடும் என்பதையும் அவர்கள் இதன்மூலம் சொல்கிறார்கள். மக்கள் அறிவியல் குடிமக்களிடம் அறிவியல்சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆய்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைக்கின்றது. ஆம், அறிவியல் ஆய்வுகளில் மக்களும் பங்கெடுக்க முடியும். மக்கள் அறிவியலைக் கையிலெடுப்பதன் மூலம் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கணிப்பதற்கு மக்கள் உதவவேண்டும்.
சமீப காலங்களில் போலி அறிவியல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அறிவியற்பூர்வமாக ஆதாரமற்றவைகளை அறிவியல் சாயம் பூசிப் பிரசாரம் செய்கிறார்களே! அதை எப்படி அணுகுவது?
இப்போதில்லை, இந்த மாதிரியான பிரச்னைகள் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இன்னமும் பூமி தட்டை என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இவை இருந்துகொண்டேயிருக்கும். இவற்றைக் கண்டு சினங்கொண்டு, மிரண்டு, மன அழுத்தத்தில் அமர்ந்துவிடக்கூடாது. சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். காலநிலை மாற்றமே பொய்யென்று சொல்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அமெரிக்காவின் ஆகப்பெரிய இரண்டு கட்சிகளும் தற்போது சண்டையிட்டுக் கொள்வதே இதுகுறித்துத்தானே. தெரியாமல் பேசுபவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கலாம். தெரிந்தே அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுபவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுவிட வேண்டும். காலப்போக்கில் அவையெல்லாம் நீர்த்துப்போகும். அதைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை.
ஆனால், ஒரு விஞ்ஞானி அமைதியாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமில்லை, அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவரகளுமே இதில் வாய்திறந்து பேசவேண்டும். அதுமாதிரியான போலி அறிவியல்களைத் தக்க ஆதாரங்களோடு போட்டுடைக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களாக அது அவர்களுடைய கடமை.
இந்தப் போலி அறிவியல் சூழலியல் பாதுகாப்பையும் பாதிக்கிறதா! மக்களிடம் பரவிக் கொண்டிருக்கும் இதுமாதிரியான விஷயங்களைக் கலைந்து உண்மைகளை எப்படிக் கொண்டுசெல்வது?
அறிவியல்பூர்வ மனப்பான்மை என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. எதையும் பகுத்தறியும் திறன் சமுதாயத்தில் வளரவேண்டும். அது நம்மிடம் மிகக் குறைவாகவே இருந்தது. தற்போதும் அப்படித்தான் இருக்கிறதென்றாலும் ஓரளவுக்கு அது மாறிவருகிறது. ஒருவர் அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும்போது பெரும்பாலானவர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் அறிவியல் பார்வை வளர்ந்து வருகிறது. முன்பே சொன்னது போல் மக்கள் அறிவியல் மூலமாகவும் அறிவியல்பூர்வ மனப்பாங்கை வளர்த்தெடுக்க முடியும். அறிந்தவர்கள் அனைவரும் இதற்காக உழைத்துக் கொண்டே இருந்தால் போதும் அவை தானாக நீர்த்துப்போய்விடும்.
2.0 படம் பற்றிய உங்கள் கருத்து…
நான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பலர் சொல்வதை வைத்தும் அப்படத்தைப் பற்றிய கட்டுரைகளை படித்ததை வைத்தும் தான் சொல்கிறேன்.
ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்துக் கண்டுபிடிக்கும் விஷயங்களை இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற திரைப்படங்கள் ஒரு நொடியில் தகர்த்துவிடுகின்றன. கைப்பேசி கோபுரங்களால் பறவைகள் அழிவதாக அந்தப் படத்தில் பேசியிருப்பது ஏற்கனவே பலமுறை பொய்ச் செய்தியென்று நிரூபிக்கப்பட்டு புதைக்கப்பட்ட விஷயம். அடிப்படைத் தேடுதல்கூட இல்லாமல், அதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அறிவியலுக்குப் புறம்பானது.
கோடியக்கரை – விருந்தாளிப் பறவைகளின் தாப்பு
கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாரயணன் எழுதிய “பிஞ்சுகள்” குறுநாவல் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகள் படித்துக் கொண்டாட வேண்டிய இந்த நாவல், சூழியல் ரீதியிலும் மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலங்களில் பறவைகள் இரைதேடி தெற்கு நோக்கி வருகின்றன. இவற்றை நாம் வலைசை போதல் அல்லது வலசை வருதல் என்போம். இப்படி வலசை வரும் பறவைகளை இந்நூலில் அவர் விருந்தாளிப் பறவைகள் (Migratory birds) என்கிறார். விருந்தாளிப் பறவைகள் வெகுதூரம் பயணித்து அவை சென்றடையும் இடத்தை அடையும் முன் வழியில் சில இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து இளைப்பாறும். இந்த இடங்களையும், பறவைகள் வலசை வந்து தங்கும் இடங்களையும் அவர் “தாப்பு” என்றழைக்கிறார். பறவையியலாளர்கள் இதை stop-over sites or wintering grounds என்பர். ஒடிஷா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரி (Chilika Lake), ஆந்திர-தமிழக எல்லையில் பரவியிருக்கும் பழவேற்காடு ஏரி (Pulicat Lake), கூந்தங்குளம் (Koothankulam Bird Sanctuary), பள்ளிக்கரணை (Pallikaranai Marsh), இன்னும் பல உள்நாட்டு நீர்நிலைகள் என இந்தியாவில் இது போல பல தாப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட ‘தாப்பு’களில் ஒன்று கோடியக்கரை (Point Calimere). அண்மையில் அங்குச் சென்று வந்தேன்.
அங்கு பாம்பே இயற்கை வரலாறு கழகத்தின் (Bombay Natural History Society – BNHS) இணை இயக்குனரும், பறவையியலாளருமான முனைவர். பாலச்சந்திரனை முன்பே தொடர்பு கொண்டிருந்தேன். பறவைகளின் வலசையைப் பற்றி 1980களிலிருந்து ஆராய்ச்சி செய்து வருபவர் இவர். அவருடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கக் கிளம்பினேன் பறவைகளையும், கோடியக்கரையின் முக்கியத்துவம் பற்றியும் வழியெங்கும் விளக்கிக் கொண்டே வந்தார்.
பறவைகளின் வலசைப் பண்பை ஆராய்வதில் முக்கிய அங்கம், பறவைகளுக்கு வளையமிடுவது (Bird ringing). முதலில் பறவைகளை பாதுகாப்பாக பிடிப்பதற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மெல்லிய வலைகளைக் (Mist net) கொண்டு அவற்றைப் பிடிப்பார்கள். பின்னர் அவற்றின் காலில் அலுமினியத்தால் ஆன தகட்டு வளையத்தை பூட்டுவார்கள். பறவையின் காலின் அளவிற்கேற்ப வளையத்தின் அளவும் இருக்கும். அந்த வளையத்தில் வரிசை எண்ணும், அந்த வளையத்தை இடும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு வேளை இதே பறவை உலகில் வேறெந்த பகுதியிலாவது ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால் இந்தத் தகவல்களை வைத்து இப்பறவை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியும்.
இந்தியப் பறவையியலில் முன்னோடிகளில் ஒருவரான Dr. சலீம் அலியின் தலைமையில் பல BNHS ஆராய்ச்சியாளர்கள் 1970-74 மற்றும் 1980-1992ம் ஆண்டுகளில் சுமார் 2,00,000 பறவைகளுக்கு வளையமிட்டிருக்கின்றனர். இவற்றில் 16 வகையான சுமார் 250 பறவைகள் இந்தியாவிலும் பிற பாகங்களிலும், உலகின் பல பகுதிகளிலும் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இது போலவே உலகின் பல்வேறு இடங்களில் வளையமிடப்பட்ட பறவைகளும் கோடியக்கரையில் பிடிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான், கஸகிஸ்தான் முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட உப்புக்கொத்திகளும், உள்ளான்களும், (waders) சவுதி அரேபியா, காஸ்பியன் கடல் பகுதி, போலந்து முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட ஆலாக்களும் (Terns), ஈரானில் வளையமிடப்பட்ட பெரிய பூநாரைகளும் (Greater Flamingo), ஆஸ்திரேலியாவில் வளையமிடப்பட்ட வளைமூக்கு உள்ளான்களும் (Curlew Sandpiper) கோடியக்கரைக்கு வருவதைப் பார்த்து, பிடிக்கப்பட்டு அறியப்பட்டுள்ளது.
கோடியக்கரை ஆண்டுதோரும் வலசை வரும் பல இலட்சக்கணக்கான பறவைகளுக்கு புகலிடமளிக்கும் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், புதர்க் காடுகள், கடலோரம், கழிமுகம், உவர்நீர்நிலைகள், நன்னீர்நிலைகள் என பல விதமான வாழிடங்கள் இருப்பதால் பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. இதுவரை இங்கு 274 வகைப் பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இப்பகுதி பறவை பாதுகாப்பில் மிக முக்கியமான இடமாகவும் (Important Bird Area) சரணாலயமாகவும் (Point calimere Wildlife and Bird Sanctuary) பாதுகாக்கப்பட்டுள்ளது. பண்ணாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளை குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது ராம்சார் அமைப்பு (Ramsar Convention) ஆகும். இந்த அமைப்பில் அங்கத்தினராக உள்ள 157 நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இதுவரை இந்தியாவில் 25 இடங்களை இந்த அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ராம்சார் ஒப்பந்தத்திற்குட்பட்ட இடமாக (Ramsar site) அறிவித்திருக்கிறது. (ராம்சார் ஈரானில் உள்ள இடத்தைக் குறிக்கும், இங்குதான் முதன் முதலில் இந்த அமைப்பின் ஒப்பந்தக் கூட்டம் நடை பெற்றது) அவற்றில் ஒன்று கோடியக்கரை சரணாலயம். இது தமிழகத்தில் உள்ள ஒரே ராம்சார் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
வலசை வரும் பறவைகளின் பாரம்பரிய இடமாக விளங்கும் கோடியக்கரை வாழிடம் கடந்த முப்பது ஆண்டுகளில் பல மாற்றங்களை அடைந்துள்ளது. கடல் நீரை உப்பளங்களுக்காக உள் நிலப்பகுதிகளுக்கு பாய்ச்சுவது, உப்பளங்களுக்காக நன்னீர் ஓடைகளின் வரத்தை தடுப்பணைகளினால் கட்டுப்படுத்துவதால் மண்ணின் தரமும், வளமும் நாளடைவில் குன்றிப்போனது. இதன் விளைவாக விளைநிலங்கள் உப்பளங்களாகவும், மீன் வளர்ப்புக் குட்டைகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. 1980களில் சுமார் 5,00,000 க்கும் மேற்பட்ட வலசைப் பறவைகளுக்கு புகலிடமாகத் திகழ்ந்தது இப்பகுதி. ஆனால் நாளடைவில் ஏற்பட்ட வாழிடச் சீர்கேட்டினால் சுமார் 1,00,000 க்கும் குறைவான வரத்துப் பறவைகளே இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து சென்ற பல பறவை இனங்கள் தற்போது இங்கே வருவதில்லை. அதில் முக்கியமானது அழிவின் விளிம்பில் இருக்கும் கரண்டிமூக்கு உள்ளான் (Spoon-billed Sandpiper). அண்மைக் காலங்களில் இப்பறவைகள் இங்கே பதிவு செய்யப்படவில்லை.
கோடியக்கரை பறவைகளுக்கு மட்டுமல்ல, வெளிமான், புள்ளிமான், நரி முதலிய பாலுட்டிகளுக்கும், பலவித அரிய தாவரங்களுக்கும் மிக முக்கியமான இடமாகும். முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் (Great Vedaranyam Swamp) அலையாத்திக்காடுகள் யாவற்றையும் கோடியக்கரை காட்டுயிர் சரணாலத்துடன் இணைத்து தேசியப்பூங்காவாக (National Park) அங்கீகரித்துப் பேணுவது அவசியம். இந்தப் பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கீ.மீ. சுற்றுப்பகுதியில் இந்த இடத்தின் சூழல் கெடாமல் இருக்க எந்த ஒரு பெரிய தொழிற்சாலைகள், பெரிய கட்டுமானங்கள் எதையும் ஏற்படுத்தாமல் சூழல் காப்பு மண்டலமாக (Eco-sensitive zone) அறிவிக்கப்படவும் வேண்டும். இப்பகுதிகளுக்கு வரும் நன்னீர் ஓடைகளின் இயல்பான நீர் வரத்தை மீட்டெடுத்தலும், இப்பகுதியினை மாசுறச் செய்யும் தொழிற்சாலைகள் இங்கே மென் மேலும் பெருகாமலும், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கோடியக்கரைப் பகுதியின் சூழலுக்கு பாதிப்படையாத வண்ணம், சரியான முறையில் அப்புறப்படுத்தவும், சிறந்த கழிவு மேலாண்மை திட்டங்களைக் கடைபிடித்தலும் அவசியம். மிக முக்கியமாக இப்பகுதிகளில் பறவைகளை கள்ள வேட்டையாடுவது தெரியவந்தால் அதை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விருந்தாளிப் பறவைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அவற்றின் தாப்புகள் மேலும் சீரழியாமல் பார்த்துக்கொள்வது. நம்மைத் தேடி வரும் விருந்தினரை நல்ல முறையில் உபசரிப்பது நம் பண்பாடு அல்லவா?
*********
கோடியக்கரை பறவைகள் சரணாலயம் பற்றி மேலும் அறிய இந்த இணையதளத்தைக் காணவும்: http://www.pointcalimere.org/index.htm
*********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 22nd July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
வானில் 200 நாட்கள்!
நமது ஊர்ப்புறங்களில் வில் போல் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை குறிப்பாக பனைமரத்தினருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்ததுண்டா? அவைதான் Asian Palm Swift என ஆங்கிலத்தில் அறியப்படும் பனை உழவாரன்கள். இவை பறந்து கொண்டே காற்றில் உள்ள சிறிய பூச்சிகளைப் பிடித்துண்ணும். அந்த வகையைச் சேர்ந்த ஆனால் பனை உழவாரன்களை விட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவையைப் பற்றிய நம்மை அதிசயக்க வைக்கும் உண்மையினை அண்மையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 6 மாதங்களுக்கு மேல் தரையில் இறங்காமலேயே வானில் பறந்து கொண்டே இருந்ததுதான் அது. ஆலாக்கள் (Terns), அல்பட்ராஸ் (Albatross) போன்ற கடல் பறவைகளில் பல கீழிறங்காமல் பல மணி நேரம் பறந்து கொண்டே இருக்கும். அது போலவே ஒரு நாளில் அதிக நேரம் பறக்கும் பறவைகளில் உழவாரன்களும் ஒன்று. எனினும் எவ்வளவு மணிநேரம், எத்தனை நாள் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும் என்கிற விவரங்கள் இதுவரை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இப்போதுதான் முதன்முதலாக அல்பைன் உழவாரன்கள் சுமார் 200 நாட்கள் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் நாட்டு அறிஞர்கள் Nature communication எனும் அறிவியல் இதழில் வெளிவந்த தங்களது ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
அல்பைன் உழவாரன்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவி காணப்படுகின்றன. உயர்ந்த மலைப்பகுதிகளில் பொதுவாக தென்படும் இப்பறவைகளை பிப்ரவரி முதல் மே மாதங்கள் வரையில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலைப் பகுதிகளில் அவ்வப்போது பறந்து திரிவதை நான் கண்டிருக்கிறேன். அம்புக்குறியின் தோற்றத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு அதிவேகமாக, அங்குமிங்கும் சட்டென வளைந்து திரும்பி பறக்கும் இயல்புடையவை. பைனாகுலரின் வழியே ஒரு பறவையை தொடர்ந்து பார்த்து கவனிப்பது கூட சிரமாக இருக்கும் அளவிற்கு வேகமாகப் பறப்பவை. எனில் இவற்றை புகைப்படமெடுப்பதென்பது மிக மிக சிரமமான காரியம்.
இவை மலை முகடுகளிலும், குகைகளுக்கு உள்ளேயும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். வலசை போகும் பண்புள்ள இவை, இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலிருந்து கிழக்கே பறந்து வருவதும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் உயரமான இடங்களிலிருந்து கீழேயும் வலசை வருவதாக அறியப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பைன் உழவாரன்கள் சஹாரா பாலைவனத்தைக் கடந்து மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வலசை போகும்.
பொதுவாக வலசை போகும் பண்பினை அறிய பறவைகளைப் பிடித்து அவற்றின் கால்களில் ஒரு வளையத்தை மாட்டி விடுவார்கள். ஒவ்வொரு வளையத்திற்கும் ஒரு பிரத்தியேக எண், அந்த வளையமிடும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும். அந்தப் பறவை உலகின் வேறு பகுதியில் பிடிக்கப்பட்டால் அவ்வளையத்தில் உள்ள தகவல்களை வைத்து எங்கு எப்போது வளையமிடப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு அறிய முடியும். ஆனால், இப்படி ஒரு வளையமிடப்பட்ட பறவையை திரும்பவும் பிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆயிரக் கணக்கான பறவைகளுக்கு வளையமிட்டால்தான் ஓரிரு பறவைகளையாவது திரும்பவும் பிடிக்கப்படும் சாத்தியம் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் செயற்கைக்கோள் பட்டையினை (satellite collar) பறவையின் முதுகில் பொறுத்தி அவை போகுமிடங்களை ஆராய்ச்சிக்கூடத்தில் அமர்ந்து கொண்டே கணிணியில் பார்த்து அறிய முடியும். அப்பட்டையில் உள்ள சமிக்கைப்பரப்பி (transmitter) மின்கலத்தால் இயங்ககூடியது. சமிக்கைப்பரப்பியின் ஒரு பகுதியான ஜி.பி. எஸ் (GPS) கருவியானது அது பொறுத்தப்படட பறவையின் இருக்குமிடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை முதலிய தகவல்களை செயற்கைக்கோளுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். இதன் மூலம் அப்பறவை எங்கெல்லாம் பறந்து எவ்வளவு தூரம் செல்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். ஆனால் இக்கருவி மிகவும் விலையுயர்ந்தது, இதன் மின்கலத்தின் ஆயுள் காலம் கம்மி, முக்கியமாக இதன் எடை அதிகம். இதனால் உருவில் பெரிய, பருமன் அதிகமாக உள்ள (வாத்து, நாரை, கொக்கு போன்ற) பறவைகளின் உடலில் மட்டுமே பொருத்த முடியும். ஆகவே சிறிய பறவைகளின் வலசைப் பண்பினை அறிவது என்பது இயலாத காரியமாக இருந்தது.
இந்நிலையை மாற்றியது ஒளி-அளவி இடங்காட்டி (light-level geolocator) அல்லது பறவை இடப்பதிவி (Bird logger). இது ஒரு உன்னதமான கண்டிபிடிப்பு. இந்த கருவி செய்வதெல்லாம், இது பொருத்தப்பட்ட பறவை இருக்குமிடத்தின் சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance) இதனுள் இருக்கும் ஒளி உணர்கருவியின் (light sensor)உதவியால் பதிவு செய்வதே ஆகும். சூரிய ஒளியின் தீவிரம் ஒரு நாளின் நேரத்தைப் பொருத்து மாறுபடுமல்லவா? இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்ட பின் அதை வைத்துக்கொண்டு பூமியில் எந்தப் பகுதியில் இந்த நேரத்தில் மதியம் எப்போது என்பதையும் காலைக் கருக்கலையும், அந்தி மாலையையும் கணிக்கமுடியும். இந்த விவரங்களை வைத்துக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும். இது எந்த வகையில் சிறந்தது? இவற்றின் எடை மிகவும் குறைவு. ஒரு சில கிராம்களே இருக்கும். நீண்ட நாள் (1-5 ஆண்டுகள்) வேலை செய்யும், அதாவது ஒளியின் அளவை பதிவு செய்யும். விலையும் மற்ற கருவிகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. எனினும் ஒரிரு குறைகளும் உண்டு. பறவைகளின் இருப்பிடத் தகவல் சற்று துல்லியம் குறைவாக இருக்கும். மேலும் இக்கருவியில் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் பெற பொருத்தப்பட்ட அப்பறவையை மீண்டும் பிடித்தே ஆக வேண்டும்.
இதுபோன்ற ஒரு கருவியைத் தான் சுவிட்சர்லாந்தில் உள்ள 6 அல்பைன் உழவாரன்களுக்கு பொருத்தினார்கள். கூடு கட்டும் இடத்திலேயே அவை பிடிக்கப்பட்டன, ஏனெனில், அவை வலசை போய் திரும்ப அங்கேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் இவற்றை எளிதில் பிடித்து பறவை இடப்பதிவியை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். அவர்கள் பொருத்திய இக்கருவியின் எடை 1.5 கிராம்களே. இவர்கள் பொருத்திய இந்தக் கருவிக்கு வேறோர் சிறப்பு உண்டு. இது ஒளியின் அளவை மட்டும் பதிவு செய்யாமல் அப்பறவைகள் பறக்கும் வேகத்தையும், உடலசைவையும் கூட பதிவு செய்யும் ஒரு முடுக்கமானி (Accelerometer). இந்தத் தகவலின் மூலம் அவை இறக்கை அடித்துப் பறக்கின்றனவா? இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா? அல்லது ஓய்வெடுக்கின்றனவா? என்பதை கணிக்கமுடியும்.
இக்கருவி பொருத்தப்பட்ட 6 பறவைகளில் சுமார் 10 மாதங்கள் கழித்து 3ஐ மட்டும் மீண்டும் பிடிக்க முடிந்தது. அவற்றின் முதுகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பறவை இடப்பதிவியில் பொதித்து வைக்கப்பட்டிருந்த தகவல்களை ஆராய்ந்ததில் அந்த மூன்று பறவைகளும் தரையிறங்காமலேயே சுமார் 6 மாத காலங்கள் வானில் சுற்றித் திரிந்த சங்கதி தெரிந்தது. இது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இங்கு இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அவை எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகத்தான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவு மாறுபடும் அல்லவா? இதை அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஒளி அளவில் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லாமல் சுமார் 6 மாதங்களுக்கு பதிவுகள் அனைத்தும் ஒரே சீராக இருந்ததை வைத்தே இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது. அது எப்படி கீழிரங்காமலேயே இருக்க முடிந்தது இப்பறவையால்? அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின்றன ஆகவே கீழிரங்க அவசியம் ஏதும் இல்லை. சரி ஓய்வு வேண்டாமா? தூங்க வேண்டாமா? உழவாரன்களுக்கு ஒரு விசித்திரமான பண்பு உண்டு அந்தரத்தில் தூங்குவதுதான் அது! ஆம், ஆங்கிலத்தில் இதை aerial roosting என்பர்.
உழவாரன்கள் தம் வாழ்வின் பெரும்பகுதியை வானிலேயே கழிக்கின்றன, கூடமைக்கும் காலத்தைத் தவிர. பறவையியலாளர்களிடையே பலகாலமாக இருந்து வந்த இந்த அனுமானம் இப்போது இந்த ஆராய்ச்சியின் விளைவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி கட்டுரைக்கான உரலி –
http://www.nature.com/ncomms/2013/131008/ncomms3554/full/ncomms3554.html
அல்பைன் உழவாரன் வீடியோவிற்கான உரலி –
http://www.arkive.org/alpine-swift/tachymarptis-melba/video-00.html
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 8th July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDFஐ இங்கே பெறலாம்.
வாருங்கள் விருந்தாளிகளே!
இந்தப் பூமிப்பந்தின் வடபகுதியில் கடுங்குளிர் நிலவும் காலத்தில் இரைதேடி பல பறவைகள் தெற்கு நோக்கி பயணிக்கின்றன. வலசை போதல் (Migration) என்பர் இதை. இப்பறவைகளை சங்கப்புலவர்கள் புலம்பெயர் புட்கள் என்றனர். கி.ராஜநாராயணன் தனது “பிஞ்சுகள்” எனும் நூலில் இவற்றை விருந்தாளிப் பறவைகள் என்றழைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்டு மாதங்களில் இந்தியாவில் பல விருந்தாளிப் பறவைகளை பார்க்கலாம். சுமார் 7-8 மாதங்களுக்குப் பின் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் மீண்டும் வடக்கு நோக்கி பயணிக்கின்றன இப்பறவைகள்.
தென்னிந்தியாவில் பரவலாக தென்படும் ஒரு விருந்தாளி சாம்பல் வாலாட்டி (Grey Wagtail Montacilla cinerea). ஆனைமலைப் பகுதியில் இந்த ஆண்டு முதன்முதலாக பார்த்து நாங்கள் பதிவு செய்த விருந்தாளி இதுவே. பார்க்கப்பட்டது செப்டம்பர் 5ம் நாள்.
அடுத்தது இலை கதிர்குருவி (Greenish Warbler Phylloscopus trochiloides). பதிவு செய்தது செப்டம்பர் 28ம் தேதி.
பழுப்புக் கீச்சானை (Brown Shrike Lanius cristatus) அக்டோபர் முதல் வாரத்தில் பார்த்தோம்.
இந்த மாத இறுதியில் வரும் பிளைத் நாணல் கதிர்குருவிக்காக (Blyth’s Reed Warbler Acrocephalus dumetorum) காத்துக் கொண்டிருக்கிறோம்.
விருந்தாளிப் பறவைகளைப் பார்த்தால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யவும்: Migrantwatch
வலசை போதல், விருந்தாளிப் பறவைகள் பற்றிய சில கட்டுரைகள்:
Welcome back, Warblers , என் பக்கத்து வீட்டு பழுப்புக்கீச்சான்!
தேசாந்திரியின் கானல் நீர்
கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஹிரியூர் எனும் ஊரில் பேருந்து நிலையத்தில் மதிய உணவிற்காக கொஞ்ச நேரம் வண்டி நின்றது. ஒரே விதமாக நெடுநேரம் அமர்ந்திருக்க முடியாமல் கொஞ்சநேரம் நிற்கலாம் என வண்டியை விட்டு கீழிறங்கி வெளியே வந்தேன். பேருந்து நிலையம் அப்படி ஒன்றும் பெரியது இல்லை. சுமார் பத்து வண்டிகள் வரிசையாக வந்து நிறுத்தக்கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் சுத்தமாகவே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காகிதங்களும், சிகரெட்டுத்துண்டுகளும், துப்பி வைத்த வெற்றிலை பாக்கு எச்சிலும் இருந்ததே தவிர பிளாஸ்டிக் குப்பைகளை காணமுடியவில்லை. பேருந்து நிலையத்தைச்சுற்றி மதில் சுவர் இருந்தது. சுத்தமாக இருந்ததற்குக் காரணம் தரை முழுவதும் சிமெண்டினால் பூசி மொழுகிப்பட்டிருந்தது கூட காரணமாக இருக்கலாம். குண்டும் குழியுமாக இருந்திருந்தால் சேரும் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம் செய்வது கடினமான காரியம். ஒரே சீரான சிமெண்டுத் தளத்தை சுத்தம் செய்வது எளிதாகவே இருக்கும்.
நாகணவாய்களும், காகங்களும், கரும்பருந்துகளும் வானில் பறந்தும், அருகிலுள்ள மரங்களில் அமர்ந்துமிருந்தன. எனினும் என்னைக் கவர்ந்தது நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்த தும்பிகளே. சமீப காலமாக எனக்கு தும்பிகளைப் பார்ப்பதும் அவற்றின் குணாதிசியங்களை பதிவு செய்வதிலும் ஆர்வம் மேலோங்கி செல்லுமிடங்களிலெல்லாம் அவற்றை உற்று நோக்குவதே வேலையாக இருக்கிறது. பூச்சியினத்தைச் சார்ந்த தும்பிகள் மிகச்சிறந்த பறக்கும் திறனைக் கொண்டவை. சிறு வயதில் தட்டானைப் பிடித்து விளையாடாதவர்கள் மிகச்சிலரே இருக்கமுடியும். தும்பி அல்லது தட்டான்களில் இரண்டு வகை உண்டு. கண்கள் இரண்டும் அருகருகில் அமைந்து, அமரும்போது இறக்கைகளை விரித்த வண்ணம் வைத்திருப்பவை தட்டான்கள். இவை பரந்த வெளிகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும் பறந்து திரிவதை காணலாம். உருவில் தட்டான்களை விடச் சற்று சிறியதாகவும், மிக மெல்லிய இறக்கைகளையும், கண்கள் சற்று இடைவெளிவிட்டு அமைந்தும், அமரும்போது இறக்கைகளை மடக்கி பின்புறம் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில் பறந்து திரியும்.
ஹிரியூர் பேருந்து நிலையத்தில் பறந்து கொண்டிருந்தவை Wandering Glider or Globe Skimmer (Pantala flavescens) எனும் வகையைச்சேர்ந்த தட்டான்கள். ஐரோப்பா, ரஷ்யா, கனடா, மற்றும் தென் துருவப்பகுதியைத் தவிர உலகில் பல பகுதிகளில் இவை பரந்து காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் தென்மேற்குப்பருவ மழைக்காலத்திற்குச் சற்று முன்பு இவை ஆயிரக்கணக்கில் வானில் பறந்து திரிவதைக் காணலாம். சமீபத்தில் இவற்றைப்பற்றின ஆச்சர்யமான தகவல் ஒன்று கண்டறியப்பட்டது. பல்லாயிரம் தட்டான்கள் கூட்டம் கூட்டமாக அக்டோபர் மாத ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு கடல் கடந்து (சுமார் 3500 கீ.மீ.) வலசை போவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தட்டான்கள் இருந்தாலும் தமிழில் ஒவ்வொன்றிற்கும் தனியாகப் பெயரில்லை. உலகில் பல இடங்களில் தென்படுவதாலும், கடல்கடந்து கண்டம் விட்டு கண்டம் வலசை போவதாலும் நான் ஹிரியூரில் பார்த்த அந்த தட்டானுக்கு தேசாந்திரி என பெயரிட்டுக்கொண்டேன். சற்று நேரம் அத்தட்டான்களை கவனித்தவுடன் அவை அங்கே என்ன செய்கின்றன என்பது தெரிந்தது. அவை முட்டையிட்டுக்கொண்டிருந்தன. ஆமாம், அந்த பளபளப்பான தரையில் தான்.
தட்டான்களின் வாழ்க்கைச் சுழற்சிமுறை நம்மை வியக்க வைக்கும். முதிர்ந்த ஆணும் பெண்ணும் கலவி கொள்ளும் விதமே அலாதியானது. ஆண் தனது வயிற்றுப்பகுதியின் (வால் என நாம் கருதுவது) கடைசியில் இருக்கும் கொக்கி போன்ற உருப்பினால் பெண்ணின் தலையின் பின்புறம் கோர்த்துக்கொள்ளும். பெண் தனது வயிற்றுப்பகுதியின் முனையை மடக்கி ஆணின் வயிற்றுப்பகுதியின் ஆரம்பத்திலுள்ள பை போன்ற அமைப்பில் கொண்டு சேர்க்கும். இப்பையில் தான் ஆணின் விந்தணுக்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இது முடிந்தவுடன் நீர்நிலைகள் இருக்குமிடம் தேடி பறந்து சென்று தட்டானின் வகைக்கேற்ப, நீரின் மேற்பரப்பில், நீரில் மிதக்கும் தாவரங்களில், நீரோரத்திலுள்ள மண்ணில் முட்டையிடும். சில தட்டான் இனத்தில் பெண் முட்டையிட்டு முடிக்கும் வரை ஆண் அதை பிடித்துக்கொண்டே இருக்கும். தேசாந்திரியும் அப்படித்தான்.
நீரிலிட்ட முட்டை பொரிந்து தட்டானின் இளம்பருவம் நீரில் பல காலம் வாழும். முதிர்ச்சியடைந்த பின் நீரிலிருந்து வெளியே நீட்டிகொண்டிருக்கும் தாவரங்களைப் பற்றி மேலே வந்து தனது கூட்டிலிருந்து உறையை பிய்த்துக்கொண்டு இறக்கைகளை விரித்து வானில் பறக்க ஆரம்பிக்கும். தட்டான்கள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சியனத்தைச் சார்ந்தவை. நீருக்கடியில் இருக்கும் போதும் கொசுவின் முட்டைகளையும் மற்ற பூச்சிகளையும் பிடித்துண்ணும். இறக்கையுள்ள தட்டானாக வானில் பறக்கும் போதும் கொசுக்களையும் மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளையும் உண்ணும்.
சரி ஹிரியூருக்கு வருவோம். நீரில் முட்டையிடுவதற்கு பதிலாக தேசாந்திரிகள் ஏன் தரையில் முட்டையிட வேண்டும்? காரணம், அந்த பளபளப்பான தரையிலிருந்து வெளிப்படும் முனைவாக்க ஒளியினால் (polarized light). இது ஒருவகையான ஒளிசார் மாசு (Polarized light pollution). பளிங்குக்கற்களினால் ஆன சமாதி, பளபளப்பான சிமெண்ட்டுத்தரை, காரின் முன் கண்ணாடி முதலியவற்றிலிருந்தும், சாலைகள் அமைக்கப் பயன்படும் அஸ்பால்ட் (asphalt) எனும் ஒரு வகை ஒட்டிக்கொள்ளும் கருமையான கலவைப் பொருளிலிருந்தும் இவ்வகையான முனைவாக்க ஒளி வெளிப்படும். இதனால் இந்த இடங்களெல்லாம் பலவகையான பூச்சிகளுக்கு நீரைப்போன்றதொரு தோற்றத்தை அளிக்கும்.
எங்கோ பிறந்து, முதிர்ச்சியடைந்து, பல இடங்களில் பறந்து திரிந்து, தம்மை உணவாக்க வரும் பல வகையான பறவைகளிடமிருந்து தப்பித்து, தனது துணையைத்தேடி, கலவி கொண்டு, தனது இனத்தை தழைத்தோங்கச்செய்ய சரியான இடம்பார்த்து முட்டையிடும் வேளையில் நீரென்று நினைத்து தரையிலும், கற்களிலும், கண்ணாடிகளிலும் முட்டையிடும் இந்தத் தட்டான்களைப் பார்க்க வேதனையாக இருந்தது. முட்டையிடுவதில் மும்முரமாக இருந்த ஒரு சோடி வேகமாக வந்து திரும்பிய பேருந்தின் சக்கரத்தில் அடிபட்டு தரையோடு தரையாகிப் போனது. மற்ற சோடிகள் தமது முட்டையிடும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தன.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு உயிருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தான் இருக்கிறது. பேருந்து புறப்படத் தயாரானது. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே தேசாந்திரிகள் முட்டையிடும் பரிதாபமான காட்சியை கண்டுகொண்டிருந்த போதே பேருந்து பெங்களூரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 7. புதிய தலைமுறை 23 ஆகஸ்ட் 2012
என் பக்கத்து வீட்டுப் பழுப்புக் கீச்சான்
ஒவ்வொறு முறையும் பகலில் எனது வீட்டிலிருந்து வெளியே போகும் போது என்னையறியாமல் தலையைத் திருப்பி வழியில் உள்ள அந்த மரத்தை எனது கண்கள் நோட்டமிடும். சுமார் 10 அடி உயரமே இருக்கும் அந்த மரத்தின் கீழ்க் கிளையை நோக்கியே எனது பார்வை இருக்கும். நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது பழுப்புப் கீச்சானை (Brown Shrike Lanius cristatus). இங்கு தென்படும் மற்ற பறவைகளை ஒப்பிட்டால் அது அப்படி ஒன்றும் விசித்திரமானதோ, கொள்ளைகொள்ளும் அழகு வாய்ந்ததோ, ரம்யமான குரலைக்கொண்டதோ இல்லை. ஆனாலும் இப்பழுப்புக் கீச்சான் அழகுதான். அதுவும் என் வீட்டினருகே இருக்கும் இம்மரத்தின் கீழ்க் கிளையில் வந்தமரும் இப்பழுப்புக் கீச்சானை எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் தனிச்சிறப்பே பல்லாயிரம் மைல்கள் கடந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் இந்தியாவிற்கு வருகை தருவதே. சைபீரியா அதனையடுத்தப்பகுதிகளில் இவை கூடமைக்கின்றன. அங்கு கடும்குளிர் நிலவும் காலங்களில் தெற்கு நோக்கி பயணிக்கின்றன.
இந்தியாவில் ஒன்பது வகை கீச்சான்கள் தென்படுகின்றன. இவற்றில் மூன்று வகைக்கீச்சான்களே இந்தியத் துணைக்கண்டத்தில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றது ஏனைய யாவும் வலசைவருபவையே. தமிழகத்தில் இம்மூன்றையும், பழுப்புக்கீச்சானையும் காணலாம். இக்கீச்சான்களுக்கு ஒரு விசித்திரமான குணமுண்டு. இவை பிடிக்கும் இரையை முட்கள் உள்ள கிளையில் குத்திச் சேமித்து வைத்து ஆர அமர சாப்பிடும். கசாப்புக்கடையில் மேடைமீது மாமிசத்தை வெட்டித் துண்டாக்கி பின்பு நமக்குக் கொடுப்பதுபோல இப்பறவையும் தனதுணவை முள்ளில் குத்தி வைத்து கூரான முனை கொண்ட அலகாலும், கால் நகங்களாலும் பற்றி இழுத்து, சிறுசிறு துண்டாகக் கிழித்து உட்கொள்ளும். இதனால் இதை ஆங்கிலத்தில் புட்சர் பறவை (Butcher Bird) என்றழைக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2008ல்) நான் இங்கு குடிவந்த போது வீட்டினருகே உள்ள சில்வர் ஓக் மரத்தில் இப்பழுப்புக்கீச்சானைக் கண்டேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அது இங்கு வந்தடையும் மாதங்களில் இம்மரத்தை பார்த்த படியே இருப்பேன். நான் தங்கியிருக்கும் இடத்தைச்சுற்றி தேயிலைத்தோட்டம் பரந்து விரிந்திருக்கும். ஆங்காங்கே நிழலுக்காக வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்கள் தனித்தனியே நின்றுகொண்டிருக்கும். அது தரும் நிழலைப்பார்த்தால் யாரும் அதை நிழலுக்காகத்தான் வளர்க்கிறார்கள் என்பதை நம்பமுடியாது. தேயிலைப் பயிரிடுவோரைக் கேட்டால் தேயிலைக்கு நிழல் தேவை ஆனால் மிக அதிகமான நிழல் தேயிலையை பாதிக்கும் என்பார்கள். ஆகவே அவ்வப்போது அம்மரத்தின் கிளைகளை முழுவதுமாக வெட்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட வேளைகளில் மொட்டையாகக் காட்சியளிக்கும் இம்மரம். இப்படி வெட்டினாலும் மீண்டும் சீக்கிரம் வளர்ந்துவிடும் தன்மையுள்ளதாலேயே இம்மரத்தை தேயிலைத்தோட்டங்களில் தகுந்த இடைவெளியில் நட்டு வைக்கிறார்கள். அவ்வப்போது இம்மரத்தின் தண்டில் மிளகுக் கொடியையும் ஏற்றி வளரவிடுவார்கள். நம் இந்திய மண்ணுக்குச் சொந்தமான மரம் இல்லை இந்த சில்வர் ஓக். ஆகவே இம்மரத்தின் மீது எனக்கு அப்படி ஒன்றும் பெரிய பற்றுதலோ விருப்பமே கிடையாது.
ஆனால் பழுப்புக்கீச்சான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் எனது வீட்டினருகே இருக்கும் இந்த சில்வர் ஓக் மரத்தின் கீழ்க்கிளையில் இப்பழுப்புக்கீச்சானைக் காணலாம். நான் அவ்வழியே போகும்போதும் வரும்போதும் அதைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். பெரும்பாலும் அங்கேதான் அமர்ந்திருக்கும். சாலையிலிருந்து சுமார் 10 மீட்டரிலேயே இருந்தது அம்மரம். நான் நின்று படமெடுக்க முற்படும் போது, தலையை அங்குமிங்கும் திருப்பி கொஞ்சநேரத்தில் சீர்ர்ர்ர்ப்ப்ப்ப் என குரலெழுப்பி அங்கிருந்து பறந்து சென்றுவிடும். நானும் இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம் என பெருமூச்சோடு திரும்பிவிடுவேன். மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து கடைசியில் 2011ல் பிப்ரவரி 22ம் தேதி காலைவேளையில் எப்படியாவது இன்று இப்பழுப்புக் கீச்சானை படமெடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அந்த வழியே எனது காமிராவுடன் மெல்ல நடந்து சென்றேன். எனது நல்ல நேரம், அவ்வேளையில் தனது முதுகைக் காட்டிக்கொண்டு எதிர்பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது அந்தப் பழுப்புக்கீச்சான். மெல்ல நடந்து சென்று சாலையிலிருந்தபடியே எனது 300மிமீ லென்சை அதன் முதுகின் மேல் குவியப்படுத்தினேன். காலை வேளையாதலால் ஓரளவிற்கு நல்ல வெளிச்சமும் இருந்த்து. அப்படியே சில நொடிகள் காமிராவின் வழியாகவே பார்த்துக்கொண்டிருந்த போதே அந்தக்கிளையிலேயே திரும்பி உட்கார்ந்தது. தொடர்ந்து மூன்று படங்கள் எடுத்திருப்பேன், அதுவரையில் அமைதியாக அமர்ந்திருந்த பழுப்புக்கீச்சான் விருட்டென்று பறந்து சென்று தூரமாக இருந்த ஒரு மரத்திற்குச் சென்றடைந்தது. காமிராத்திரையில் பார்த்தபோது மூன்றில் இரண்டு சிறந்த குவியத்துடன் காணப்பட்டது. அப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்தடைந்தேன்.
காமிராவிலிருந்து கணிணிக்குப் படத்தை இறக்கி பெரிய திரையில் பார்த்து மகிழ்ந்தேன். பழுப்புக்கீச்சானின் படம் பல சிறந்த புகைப்படக் கலைஞர்களாலும் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்புகைப்படங்களை ஒப்பிடும்போது நான் எடுத்த படமொன்றும் பிரமாதமானது இல்லை. இருப்பினும் எனது பழுப்புக்கீச்சானின் படம் எனக்கு உசத்தியானதே. அப்படி என்ன இருக்கிறது இந்தப் பழுப்புக்கீச்சானிடம்? ஏன் இதன் மேல் மட்டும் இவ்வளவு ஆசை? நானிருக்கும் ஊரில் இதைப்போல பல பழுப்புக்கீச்சான்கள் பறந்து திரிகின்றன. அவை அனைத்துமே இங்கு வலசை வந்தவைதான். இருப்பினும் இந்தக்குறிப்பிட்ட பழுப்புக்கீச்சானென்றால் பிரியம் தான். அதை எனது பக்கத்து வீட்டுக்காரரைப் போல நினைக்கிறேன். நான் அவ்வழியே போகும்போது அதைப்பார்த்தவுடன் என்முகத்தில் புன்னகை பரவுகிறது. ஆச்சர்யத்துடன் அதைப்பார்த்து தலையசைத்து வணக்கமிடுகிறேன், எனது பக்கத்துவீட்டுக்காரரைப் பார்த்து கையசைப்பதைப்போல. அது எப்போதுமே அக்கிளையிலேயே உட்கார்ந்து கிடப்பதில்லை. வழக்கமாக அமருமிடத்தில் இல்லையென்றால் சுற்றும் முற்றும் எனது கண்கள் அதைத் தேடுகின்றன.
அங்கு வந்தமரும் பழுப்புக்கீச்சான் ஆணா அல்லது பெண்ணா என்பது எனக்குத் தெரியாது. அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண் பெண் இரண்டிற்குமே இறக்கை நிறமும், உருவ அளவும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அதேபோல நான் 2008ல் பார்த்த அதே பழுப்புக்கீச்சான் தான் ஒவ்வொரு ஆண்டும் எனது வீட்டிற்குப்பக்கத்திலுள்ள அந்த குறிப்பிட்ட மரத்தின் கீழ்க்கிளையில் வந்து அமருகிறதா? வேறு ஒரு பழுப்புக்கீச்சானக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அறிவியல் பூர்வமாகத்தான் இதற்கு விடை காண வேண்டும். பறவையியலாளர்கள் செய்வதுபோல் அதைப்பிடித்து அதன் காலில் பளிச்சென்று தெரியும் நிறத்தில் வளையத்தை போட்டு விட்டால் எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். அதற்கொல்லாம் எனக்கு நேரமில்லை. ஆனால் நான் ஒவ்வொறு ஆண்டும் பார்ப்பது ஒரே பழுப்புக்கீச்சானைத்தான் என்று எனது உள்மனது கூறியது.
ஒவ்வொறு ஆண்டும் அக்டோபர் மாத வாக்கில் மேற்குத்தொடர்ச்சிமலையின் ஆனைமலைப்பகுதிக்கு வந்திறங்கும் எல்லா பழுப்புக்கீச்சான்களும் அவை இங்கு இருக்கும் காலம் வரை அதாவது ஏப்ரல் மாத இறுதி வரை தமக்கென ஒரு இடத்தை வரையறுத்துக்கொண்டு அங்கு பறந்து திரிகின்றன. வெகுநாட்கள் கழித்து வந்தாலும் கடந்த ஆண்டு எந்த இடத்தில் சுற்றித்திரிந்தனவோ அதே இடத்திற்கு மறுபடியும் வருகின்றன. இது எல்லா வலசைபோகும் பறவைகளின் இயல்பாகும். இதற்குச் சான்றுகளும் இருக்கிறது. காலில் வளையமிட்ட பறவை ஒன்று, ஒவ்வொறு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து தனக்கென எல்லையை வகுத்துக்கொண்டு அப்பகுதிக்குள் தனது இனத்தைச்சார்ந்த மற்றொரு பறவையை அண்டவிடாமல் விரட்டியடித்து, தனது வீட்டைக்குறிக்கும் வகையில், எல்லையோரத்தில் உரத்த குரலெழுப்புவதும், பாடுவதுமாக இருந்ததாக பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் ஒரே இடத்தில் வந்தமருவதை வைத்துப்பார்க்கும் போது நான் பார்க்கும் பழுப்புக்கீச்சான் எனது பழுப்புக்கீச்சானே என்று நினைக்கத்தோன்றுகிறது.
அப்படி என்னதான் இருக்கிறது அந்த கீழ்க்கிளையில்? நான் பார்க்கும் பல வேளைகளில் அங்கேயே உட்கார்ந்து கிடக்கிறது அது. ஏன் அந்த இடம் அதற்கு அப்படி பிடித்துப்போனது? காரணமில்லாமல் இருக்காது. அந்த உயரத்திலிருந்து பார்த்தால் பூச்சிகளையும், அதன் மற்ற உணவு வைகைகளான பல்லி, ஓணான், சுண்டெலி, சிறிய பறவைகளை கண்டு வேட்டையாட ஏதுவான இருக்குமோ என்னவோ.
சில்வர் ஓக் மரத்தின் கிளைகளை ஆண்டுதோறும் வெட்டிச் சாய்க்கும் வேளையில், சமீபத்தில் எனது பழுப்புக்கீச்சான் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் கிளையையும் வெட்டிவிட்டார்கள். அக்கிளை மூன்று ஆண்டுகளாக வெட்டப்படாமல் முழுசாக இருந்ததே பெரிய ஆச்சர்யம். இது நடந்தது பழுப்புப் கீச்சான் இங்கு இல்லாத சமயத்தில். இந்த ஆண்டும் அது நிச்சயமாக திரும்பி அந்த இடத்திற்கு வந்து மரம் வெட்டப்பட்டதைப் பார்த்திருக்கும். அமர்ந்திருக்க அதற்குப் பிடித்தமான இடம் அந்தக் கிளை. இரண்டு அல்லது மூன்று அடி நீளம்தான் இருக்கும் அந்தச் சிறிய கிளை. வெட்டுவது ஒன்றும் கடினமான காரியமாக இருந்திருக்காது. எளிதில் ஒடித்து எறிந்திருக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பல்லாயிரம் மைல்கள் கடந்து இந்த இடத்திற்கு திரும்பி வரும் அந்தக் கீச்சான் கிளை காணாமல் போனதைப்பார்த்து என்ன நினைத்திருக்கும்? குழம்பிப் போயிருக்குமா? கோபப்பட்டிருக்குமா? நிச்சமாக ஏமாற்றமடைந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. வழக்கமாகப் போகும் பேருந்தில் நாமக்குப் பிடித்த சன்னலோர இருக்கை கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும் நமக்கு?
அது நமக்கு ஒரு சாதாரண கிளை ஆனால் அப்பறவைக்கு அது வீட்டின் ஒரு பகுதி. வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது உங்கள் வீட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஒரு நாள் வீடே காணாமல் போனால் எப்படி இருக்கும். என்ன செய்வீர்கள்? எங்கு போவீர்கள்? எது எப்படியோ, எந்த தொந்தரவும் கொடுக்காத எனது பக்கத்துவீட்டுக்காரரை இப்போதெல்லாம் இந்தப்பக்கம் பார்க்க முடிவதில்லை. வீட்டினருகில் ஏதாவது ஒரு பழுப்புக் கீச்சானைக் காண நேர்ந்தால் இதுதானோ அது என்று நினைக்கத்தோன்றும். அடையாளம் காணவும் வழியில்லை. எங்கே இருக்கிறாய் எனதருமை பழுப்புக்கீச்சானே?
26 பிப்ரவரி 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. இக்கட்டுரைக்கான உரலி இதோ. PDF இதோ.