Archive for the ‘Protected areas’ Category
என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?
இந்து தமிழ் திசை நாளிதழில் 18/03/2021 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கடல் சூழலியல்-வள அரசியல் குறித்து பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், பழங்குடியினர் நலன் குறித்து திரு. எஸ். சி. நடராஜ், பொது சுகாதாரம், மருத்துவம் குறித்து திரு. ஜி. ஆர். இரவீந்திரநாத், பொதுக்கல்வி குறித்து பேராசிரியர் வீ. அரசு என பல துறைசார் வல்லுனர்களின் கட்டுரைகள் இதே தலைப்பில் வெளியானது.
இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான சில கருத்துக்களை இந்தக் கட்டுரை மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு முழுப்பட்டியல் அல்ல.
பருவநிலை அவசரநிலை – முதலில் பருவநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான காரணங்கள் யாவற்றையும் பற்றி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் புரிதல் ஏற்பட வேண்டும். அதன் பிறகு வளர்ச்சி எனும் பெயரில் எடுக்கப்படும் எல்லா செயல் திட்டங்களிலும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும், அவை எந்த வகையில் இயற்கைச் சீரழிவுக்கும், புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படவேண்டும். பருவநிலை அவசரநிலையை பிரகடனம் (Climate Emergency Declaration) செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், இயற்கைக்கு இணக்கமான வளங்குன்றாத வளர்ச்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும். நிலையான, உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு சீரழிக்கப்படாத சுற்றுச்சூழல் தான் முக்கிய முதலீடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நில, நீர், காற்று மாசு – இயற்கை அன்னை இலவசமாக நம் அனைவருக்கும் தந்த பரிசு. நாம் வாழும் இந்த நிலம், பருகும் நீர், சுவாசிக்கும் காற்று. நிலத்தை பாழ் படுத்தும் எந்த வகையான செயல் திட்டங்களையும் ஊக்கப்படுத்தக் கூடாது. இயற்கை விவசாயத்திற்கு மானியங்களும், கடனுதவிகளும் தாராளமாகத் தந்துதவி ஊக்குவிக்க வேண்டும். திடப்பொருள் கழிவு மேலாண்மையை (குறிப்பாக மருத்துவ, பிளாஸ்டிக் கழிவு) சரிவரச் செய்ய வேண்டும். இரசாயன, தொழிற்சாலை, சாயக் கழிவுகளை ஆறு, குளங்கள், கடல் முதலான நீர்நிலைகளில் வெளியேற்றுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். காற்று மாசினை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் (குறிப்பாக நகரங்களிலும், தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளிலும்) வழி வகை செய்ய வேண்டும். தூய்மையான நீரையும், காற்றையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற வழி செய்ய வேண்டும்.
நீர்வளங்கள் பாதுகாப்பும் மேலாண்மையும் – குளம், ஏரி, ஆறு, சதுப்பு நிலங்கள், கடல் பகுதி முதலான நீர்நிலைகளை மேன்மேலும் மாசுபடாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும், சீரழியாமலும் சரிவரப் பாதுகாக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குழாய் மூலமாகவும், நதிகளை இணைப்பதன் மூலமாகவும் நிரத்தரத் தீர்வு காணமுடியாது என்பதையும், இது இயற்கையை மேன்மேலும் சீர்குலைக்கும் என்பதையும் அறிய வேண்டும். தூய்மை செய்கிறோம் எனும் பெயரில் ஆறுகளின், ஏரிகளின் கரைகளை சிமெண்டு (வைத்துப்) பூசி அவற்றை மூச்சடைக்க வைக்காமல் கழிவுகளை அகற்றி, மாசை நீரில் கலக்கும் தொழிற்சாலைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் வேண்டும்.
இயற்கையான வாழிடங்களின் பாதுகாப்பு – இயற்கையான வாழிடங்கள் (காடு, வெட்டவெளிப் புல்வெளிகள், நீர் நிலைகள்) மேன்மேலும் ஆக்கிரமிக்கப்படாமலும், அயல் தாவரங்களால் பாதிப்படையாமலும் பாதுகாக்கப்பட வேண்டும். வெட்டவெளிகள் பாழ் நிலங்கள் (Waste lands) அல்ல அதுவும் ஒரு வகையான இயற்கையான வாழிடம் என்பதை அறிய வேண்டும். இந்த வாழிடங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவ்வாழிடங்களில் சீரழிந்த பகுதிகளை அங்குள்ள தாவரங்களை மட்டும் வைத்து வளர்த்து அறிவியல் பூர்வமாக மீளமைத்தலும் (Ecological restoration) முக்கியம் என்பதை அறிய வேண்டும். அதற்காக திறந்த வெளி புதர் காடுகளிலும், வெட்டவெளிப் புல்வெளிகளிலும் யூக்கலிப்டஸ் முதலான அயல் தாவரங்களை நட்டு வைத்து வளர்ப்பது மீளமைத்தல் ஆகாது என்பதையும் அறிய வேண்டும். இது போல வளர்த்து வைத்த ஓரினத்தாவரங்கள், காடுகள் ஆகிவிடாது என்பதையும், இவற்றால் வனப்பரப்பு அதிகரித்து விட்டதாகச் சொல்வதையும் ஏற்க முடியாது.
வனத்துறை மேம்பாடு – வனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள்) வேட்டைத் தடுப்புக் காவலர்களின் (Anti-poaching watchers) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லாத வனத்துறையின் கீழ் உள்ள இடங்களிலும் இது போன்ற வேட்டைத் தடுப்புக் காவலர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை அளிப்பதோடு, ஆயுள், விபத்து காப்பீடுகளையும் அளிக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான உபகரணங்களையும் (காமிரா, ஜி.பி.எஸ்), நவீன ஆயுதங்களையும் வழங்க வேண்டும். வனப் பாதுகாப்பு, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டங்களை தளர்த்தவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் கடுமையாக்கவும், தேவையான இடங்களில் விரிவாக்கவும் வேண்டும். திருட்டு வேட்டையை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு சரகத்திற்கும் பறக்கும் படையை அமைக்கவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களையும் (Wildlife Biologist) காட்டுயிர் மருத்துவர்களையும் (Wildlife Veterinarians) எல்லா பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரப் பணியில் அமர்த்தி அவர்களின் ஊதியத்தையும் சீரமைக்க வேண்டும்.
மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் – மாறிவரும் பொருளாதாரச் சூழலை சமாளிக்க, இயற்கை வளங்களைக் குன்ற வைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணங்களால் (யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் கட்டமைப்புகள், விவசாயப் பெருக்கத்திற்காக வனப்பகுதிகளின் ஓரங்களை ஆக்கிரமித்தல், இயற்கையான வாழிடங்களின் ஊடே செல்லும் சாலை, இரயில் தடம், மின் கம்பிகள் முதலான நீள் கட்டமைப்புத் திட்டங்கள்) மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேன்மேலும் அதிகரிக்கின்றது. இதனால் மனித உயிர் இழப்பும், காட்டுயிர் உயிர் இழப்பும், வாழிட இழப்பும் ஏற்படுகிறது. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க வனத்துறையுடன், வருவாய்த் துறை, காவல் துறை போன்ற துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு (Protected areas) வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் (குறிப்பாக மயில்) சேதம் அதிக அளவில் இருப்பின் அதை உறுதி செய்த பிறகு, அங்கும் அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளுக்கும் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டங்களை தொடங்குவதும் அவசியம். காட்டுயிர்களின் உயிருக்கு ஆபத்தில்லாத பயிர்களைப் பாதுகாக்கும் முறைகளை கண்டறிந்து அந்த முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.
விலங்குவழி நோய்த்தொற்றுப் பரவல் கண்காணிப்பும் மேலாண்மையும் – எதிர்காலத்தில் விலங்குவழி பெருந்தொற்றின் தீமைகளைக் குறைக்க ஒரே நலவாழ்வு கோட்பாட்டை (One Health Concept) முதன்மைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நல்வாழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவமைப்பு, சுற்றுச்சூழல், அதிலுள்ள காட்டுயிர்கள் ஆகிய எல்லாவற்றின் நலனையும் கருத்தில் கொண்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக் காரணமான காட்டுயிர் கள்ளச் சந்தை, காட்டுயிர் வேட்டை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். விலங்குவழி நோய்த்தொற்று பரவல், மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்க வேண்டும்.
இயற்கைக் கல்வி – இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறிந்த கருத்தாக்கங்கள் கொண்ட பாடத்திட்டத்தினை பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா தளத்திலும் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கும் இந்த கருத்தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகமாக உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு காட்டுயிர்களின் பால் இயல்பாகவே இருக்கும் நல்உணர்வுகளையும், உணர்வுபூர்மவான ஈர்ப்பையும், பிடிப்பையும் போற்றியும், அவை குன்றாமல் இருக்கவும் ஆவன செய்ய வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக்கான காரணங்களையும், அவை பரவாவண்ணம், தனிமனிதராக செய்ய வேண்டிவற்றையும், பொது சுகாதாரத்தை வலியுறுத்தியும், இயற்கை சீரழிவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோகாமல் இருப்பதையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.
அழிவின் விளிம்பில் இருக்கும் வாழிடங்கள், காட்டுயிர்கள் பாதுகாப்பு – யானை, புலி முதலான பேருயிர்கள் மட்டுமல்லாது, அதிகம் அறியப்படாத உயிரினங்களின் (உதாரணமாக அலங்கு, வௌவால் வகைகள் போன்றவை) பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். பாறு கழுகுகள் போன்ற அழிவில் விளிம்பில் இருக்கும் பறவைகளைப் பாதுகாக்க நெடுங்காலத் திட்டங்களை தொடங்க வேண்டும். வனத்துறையால் பாதுகாக்கப்படாத பகுதிகளில் உள்ள புதர்காடுகள், வெட்டவெளிப் புல்வெளிகள், கடலோரப் பகுதிகள் முதலான வெகுவாக அழிக்கப்பட்டுவரும் வாழிடங்களையும், அங்குள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
நகரச் சூழல் மேம்பாடு – நகர்ப்புறங்களில் உள்ள உயிர்ப் பன்மையம் குறித்த விழிப்புணர்வையும், அவற்றின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள (பூங்கா, ஏரி, குளம் முதலான) இயற்கையான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோர மரங்களை வெட்டாமல், மேன்மேலும் இயல் வகை தாவரங்களையும், மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்கை வலியுறுத்தி அவர்களையும் அதில் ஈடுபட வைக்க வேண்டும். கார்பனை அதிகமாக வெளியிடும் செயல்பாடுகளை வெகுவாகக் குறைக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்.
——
உலக அளவில் தேர்தல் அறிக்கைகளில் பொதுவாக இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் துறைசார் வல்லுனர்கள், ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில கட்டுரைகளை இங்கே காணலாம்.
- சுற்றுச்சூழல் குறித்த விரிவான தேர்தல் அறிக்கையை “பூவுலகின் நண்பர்கள்” குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. காண்க செய்தி.
- Neha Sinha (2019). How Environment-friendly are election manifestos? Economic and Political Weekly. Vol. 54, Issue No. 20, 18 May, 2019.
- Guha, Asi & Joe, Elphin. (2019). ‘Environment’ in the election manifestos. Economic and Political Weekly. 54. 13-16.
- Mayank Aggarwal (2019). Environment gets voted into party manifestos. Mongabay India. 12th April 2019)
——
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

பெரிய இருவாசி: படம்: கல்யாண் வர்மா (விக்கிமீடியா)
இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா

ஆவுளியா (Dugong dugon) படம்: விக்கிமீடியா
சுமார் 10,500 சதுர கி.மீ பரப்பில் அமைந்த மன்னார் வளைகுடா உயிர்சூழல் மண்டலத்தில் ஒரு பகுதி இந்த தேசிய பூங்கா. இதன் பரப்பு சுமார் 560 சதுர கி.மீ (ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள கடற்கரைப்பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 21 தீவுகளும், அதனையடுத்த கழிமுகப் பகுதிகளும், பவளப்பாறை திட்டுக்களும் (Coral reefs), கடலோரக் காடுகளும், அலையாத்திக் காடுகளும், கடலடிப் புல்வெளிகளும் (sea grass meadows) அடக்கம். அருகி வரும் கடல் பாலூட்டியான ஆவுளியா (Dugong) இப்பகுதிகளில் தென்படுகிறது. பல வகை கடலாமைகள், கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறையைச் சார்ந்து வாழும் மீன்கள், வலசை வரும் பலவகையான நீர்ப்பறவைகள் என பல்வகையான உயிரினங்களின் வாழிடங்களைக் கொண்டது இந்த தேசியப்பூங்கா. இப்பகுதி ராம்சார் இடமாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கிண்டி தேசியப் பூங்கா
கிண்டி தேசியப் பூங்கா
மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள வெகு சில தேசிய பூங்காகளில் ஒன்று கிண்டி தேதியப் பூங்கா. சுமார் 2.7 சதுர. கி.மீ பரப்பில் அமைந்து இந்தியாவின் மிகச்சிறிய தேசியப் பூங்காக்களில் ஒன்று எனும் பெருமையும் இதற்கு உண்டு. தென்னகத்தின் அரிய வகை வாழிடமான வறண்ட பசுமைமாறா புதர்காடுகளைக் கொண்டது. நரி (Golden Jackal), வெளி மான் (Blackbuck), புள்ளி மான் (Spotted Deer), பலவகையான பாம்புகள் பறவைகள், மற்றும் தாவரங்களைக் கொண்டது.

Phoenix pusilla – ஒரு வகை ஈச்ச மரம் – தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே தென்படும் அரிய தாவரம் – கிண்டி தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்: Photo: A J T Johnsingh/Wikimedia Commons
ஒரு காலத்தில் (1670 களில்) தனியார் வேட்டைக்களமாக விளங்கிய இப்பகுதியை இந்திய அரசு 35,000 ரூபாய்க்கு 1821ல் வாங்கி அரசுடைமையாக்கப்பட்டு இங்கே கவர்னர் மாளிகை கட்டப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் 5 சதுர கி.மீ பரப்பில் இருந்த வனப்பகுதியை காப்புக்காடுகளாக 1910ல் அறிவிக்கப்பட்டது. எனினும் 1961 முதல் 1977 வரை, 1.7 சதுர கி.மீ நிலம் கல்வி நிறுவனம், நினைவாலயங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்டது. எஞ்சிய பகுதி பல இயற்கை ஆர்வலர்களின் பரிந்துரையின் பேரில் 1976ல் கிண்டி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்
காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பரவியுள்ள 504.33 சதுர கி.மீ பரப்பில் அமைந்த இச்சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது 2014ல். ஓசூர் மற்றும் தருமபுரி வனக்கோட்டங்களை உள்ளடக்கியத்து இச்சரணாலயம். புதர்காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரி ஆற்றின் கரையோரமாக நீர்மத்தி Terminalia arjuna நிறைந்த ஆற்றோரக் காடு முதலிய வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. நரை அணில், யானை, சிறுத்தை, கரடி, ஆற்று நீர்நாய், செம்புள்ளிப் பூனை, அழுங்கு, குள்ள மான், கடம்பை மான் போன்ற 35 வகை பாலுட்டிகளும் மற்றும் மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடி கழுகு போன்ற சுமார் 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை போன்ற ஊர்வனங்கள் யாவும் இச்சரணாலயத்தில் பதிவுசெய்யப்படுள்ளன.
கர்நாடக மாநிலத்திலுள்ள கொள்ளேகால் வனக்கோட்டம், பிலகிரிரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், தமிழகத்தில் ஈரோடு வனக்கோட்டம் முதலிய வனப்பகுதிகள் இந்தச் சரணாலயத்தைச் சுற்றியுள்ளன. இதனால் பல வித காட்டுயிர்கள் குறிப்பாக யானைகளின் இடம்பெயர்விற்கு இப்பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்

ஆண் புள்ளிமான்கள் இரண்டு சண்டையிடும் காட்சி – (Pic: T. R. Shankar Raman/Wikimedia Commons)
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் புள்ளிமான்களின் (Spotted Deer) பாதுகாப்பிற்காக 2013ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
—
மேலும் விவரங்களுக்கு கிழ்க்கண்ட வலைப்பக்கங்களைக் காணவும்:
கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம். சுமார் 457 சதுர கி.மீ பரப்பில் அமைந்த கன்னியாகுமரி வனக்கோட்டப் பகுதி 2002 ம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த வனப்பகுதியின் மத்தியில் இருந்த கானி பழங்குடியினரின் குடியிருப்புப் பகுதி, அங்கு செல்லும் சாலை மற்றும் அரசு இரப்பர் நிறுவனத்திற்கு (Arasu Rubber Corporation) குத்தகை விடப்பட்ட பகுதி யாவற்றையும் சரணாலயப் பகுதியிலிருந்து நீக்கிவிட்டு 402.39 சதுர கி.மீ பரப்பை கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமும் கேரளாவில் உள்ள நெய்யார் காட்டுயிர் சரணாலயமும் இதைச் சுற்றிலும் அமைந்துள்ளன. வறண்ட இலையுதிர் காடு, ஈர இலையுதிர் காடு, புதர் காடு, தேக்குமரக் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மூங்கில் அடர்ந்த காடு, மலையுச்சிப் புல்வெளி என பல வகையான வாழிடங்களைக் கொண்டுள்ளது இச்சரணாலயம். பல காட்டோடைகளும், ஆறுகளும் உருவாகும் இந்த வனப்பகுதி பல அரிய உயிரினங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, பல விதமான பறவைகள், வரை கமுகு (Hill Areca nut Bentinckia condapanna) போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படக்கூடிய பல அரிய தாவரங்கள் யாவையும் தன்னகத்தே கொண்டுள்ளது இச்சரணாலயம்.

வரை கமுகு (Hill Areca nut| With fruits). Photo: P. Jeganathan/Wikimedia Commons
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணாலயம்
கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணாலயம்
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் கொடைகானல், பழனி மற்றும் பெரியகுளம் தாலுக்காவிலுள்ள 608.95 சதுர கி.மீ பரப்பில் அமைந்த வனப்பகுதி 2013ம் ஆண்டு கொடைக்கானல் காட்டுயிர்ச் சரணலயமாக அறிவிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியான பழனி மலைப்பகுதியை உள்ளடக்கிய இந்த சரணாலயத்தில் முட்புதர் காடு, இலையுதிர் காடு, பசுமை மாறா காடு, ஈர இலையுதிர் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சிப் புல்வெளி என பலவகையான வாழிடங்கள் உள்ளன. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, வரையாடு, நரை அணில், மலபார் மலையணில், கடம்பை மான், கேளையாடு, காட்டெருது முதலிய பாலூட்டிகளும், பல அரிய தாவர வகைகளும், சுமார் 100 வகைப் பறவையினங்களும் இங்கு தென்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவைகளான நீலகிரி காட்டுப்புறா (Nilgiri wood pigeon), நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), குட்டை இறக்கையன் (White-bellied blue robin) முதலிய அரிய பறவைகளும் இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம் 1989ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 480 சதுர கி.மீ பரப்பில் அமைந்த இச்சரணாலயத்தின் கீழ்மேற்குப் பகுதியில் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகமும், வட மேற்குப் பகுதியில் தமிழகத்தில் உள்ள மேகமலை காப்புக்காடும், கிழக்கில் திருநெல்வேலி வனக்கோட்டத்திலுள்ள சிவகிரி காப்புக்காடும் உள்ளது. இந்தச் சரணாலயத்தின் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், மீதி மதுரை மாவட்டத்திலும் பரவியுள்ளது. தாழ்வான பகுதி, மிதமான உயரத்தில் அமைந்த மத்திய கட்டப் பகுதி (mid elevation), மலையுச்சி என பல நிலைகளைக் கொண்ட புவியமைப்பினைக் கொண்டதால், உயரத்திற்கேற்ற பல வன வகைகளும் இந்தச் சரணாயலத்தில் உள்ளது. மலையுச்சிகளில் இருக்கும் புல்வெளிகளும், சோலைக்காடுகளும், மழைக்காடுகளும், ஈர இலையுதிர்காடுகளும், தரைக்காடுகளும் இந்தச் சரணாலயத்தின் முக்கிய வாழிடங்களில் சில.

நரை அணில் Grizzled giant squirrel. Photo: Aparna K / Wikimedia Commons
யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, கடம்பை மான் அல்லது மிளா (Sambar Deer), புள்ளிமான், கேளையாடு, முள்ளம்பன்றி, சோலைமந்தி, நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, தேவாங்கு என பல வகையான பாலுட்டிகள் இருந்தாலும், இங்கு தென்படும் நரை அணிலே (Grizzled Giant Squirrel) இந்த சரணாலத்தின் சிறப்பு. இந்த மலையணில் வகை தென்னிந்தியாவிலும், இலங்கையில் மட்டுமே தென்படும் ஒர் அரிய உயிரினம். சுமார் 220 வகையான பறவையினங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 வகை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் ஓரிடவாழ்விகளாகும் (Western Ghats Endemics).
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
வல்லநாடு வெளிமான் சரணாலயம்
வல்லநாடு வெளிமான் சரணாலயம்

வல்லநாடு வெளிமான் சரணாலயம் முகப்பு. Photo: P. Jeganathan / Wikimedia Commons
இரலை மானின (Antelope) வகையைச் சேர்ந்த வெளிமானுக்கான (Blackbuck) சரணாலயம் இது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறீவைகுந்தம் தாலுக்காவில் 16.41 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இச்சரணாலயம் நிறுவப்பட்டது 1987ல். வாழிட இழப்பாலும், திருட்டு வேட்டையாலும் அபாயத்திற்குள்ளான வெளிமான்கள் இந்த இடத்தைத் தவிர தமிழகத்தில் கிண்டி தேசிய பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோடியக்கரை காட்டுயிர் சரணாலயம் ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.
வெளிமான்களைத் தவிர இச்சரணாலயத்தில் காட்டுப்பூனை, காட்டு முயல் (Black-naped Hare), அழுங்கு (Pangolin), முதலிய பாலுட்டிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை வகைகளும், பல வித ஊர்வனங்களும் தென்படுகின்றன. குடைசீத்த மரங்கள் (Acacia planifrons) கொண்ட இலையுதிர் மற்றும் புதர் காட்டு வகை வாழிடத்தைக் கொண்டது இச்சரணாலயம்.

வல்லநாடு வெளிமான் சரணாலயம் முகப்பு. Photo: P. Jeganathan / Wikimedia Commons
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.