Archive for the ‘Rainforest’ Category
கருகப்போகும் காடுகள் – Fire of Sumatra நூல் அறிமுகம்

காட்டுயிர் பாதுகாப்பு அதில் உள்ள சிக்கல்கள், இயற்கை வரலாறு குறித்து பலரும் பல கட்டுரைகள் வழியாகப் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி. எனினும் கற்பனைக் கதைகள், புதினங்கள் வழியாக (non-fiction) இந்தத் தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதென்பதும் ஒரு சிறந்த வழியே. அதுவும் அந்தக் கதை உயிரோட்டமாகவும், விறுவிறுப்பாகவும், படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் இருக்கும்போது சொல்லவரும் கருத்துகள் எளிதில் மனதில் பதியும். புள்ளிவிவரங்களையும், அறிவியல் முறைகளையும், கோட்பாடுகளையும், விளக்கங்களையும், மட்டுமே கொண்ட கட்டுரைகளைவிட இதையெல்லாம் கொண்ட கதை படிப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர் குறித்துப் பேசும், குழந்தைகளுக்கான படைப்புகள் இந்த வகையில் அதிகமாக இருக்கும். ஆனால், முழுநீள நாவல்கள் குறைவே. மேலை நாடுகளில் இது போன்ற படைப்புகளைக் காணலாம். ஆனால், இந்தியாவில் அதுவும் ஆங்கிலத்தில் இவ்வகையான படைப்புகள் அரிதே. அண்மையில் (2021) வெளியான C.R. ரமண கைலாஷ் எழுதிய “Fire of Sumatra” புலிகள், அவற்றின் வாழ்க்கை முறை, மனிதர்களால் அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஓர் ஆங்கில நாவல்.
இந்த நாவலின் பெயரில் உள்ளது போல் இந்த நாவலின் காட்சிக்களம் சுமத்ரா தீவாக இருந்தாலும், புலிகள், அவற்றின் வாழிடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலக அளவில் பொதுவானதே. கதைக்களமும், கதாபாத்திரங்களும் கற்பனையாக இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகளும், நிகழ்வுகளும் அறிவியல் துல்லியம் கொண்டவை. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு புலியின் குடும்பமும், அவற்றைக் காப்பாற்ற முயலும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆர்வலர்கள் சிலருமே. புலிக் குடும்பத்தில் ஐந்து பேர் – அம்மா, அப்பா, மூன்று குட்டிகள். புலிகளில் பெரும்பாலும் பெண் புலிகளே குட்டியைப் பேணுகின்றன. அரிதாகவே ஆண் புலி குட்டிகளைப் பராமரிக்கின்றன, இந்தக் கதையில் வருவதுபோல.
அம்மா புலியான சத்ரா குட்டிகளுக்காக இரை தேட அவற்றை விட்டுச் செல்லும்போது காட்டுத்தீயில் சிக்கி மயங்கிவிடுகிறாள். கண்விழித்துப் பார்க்கும்போது, சில காட்டுயிர் ஆர்வலர்களால் காப்பாற்றப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறாள். அங்கு ஏற்கனவே பொறியில் சிக்கி காலை இழந்த வாலி எனும் மற்றொரு புலியைச் சந்திக்கிறாள். அவர்கள் தங்களது நிலைமைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கின்றனர். சத்ரா, தனது குட்டிகளைப் பிரிந்து வாடுகிறாள். அவள் மீண்டும் காட்டுக்குள் சென்றாளா? குட்டிகளோடு சேர்ந்தாளா? என்பதைத்தான் மிக அழகாகவும், சுவாரசியமாகவும் சொல்கிறது இந்த நாவல்.
அதே வேளையில் புலிகளில் வாழ்க்கை முறையையும், அவற்றைக் குறித்த பல இயற்கை வரலாற்றுக் குறிப்புகளும், அவற்றுக்கு மனிதர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் புலிகளே சொல்வதுபோல அமைத்திருப்பது நிச்சயம் வாசகர்களைக் கவரும். சொல்லப்படும் சில கருத்துகள் நம்மை ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கும். எடுத்துக்காட்டாக, புலிக்குட்டிகளில் ஒன்று தன் தந்தையிடம், “மனிதர்கள் புத்திசாலிகளா?” எனக் கேட்கிறாள் (பக்கம் 86). அதற்குத் தந்தைப் புலி சொல்லும் பதில், “நம்மை திறமையாகக் கொல்வதாலும், நமது வாழிடத்தையும் அழிப்பதாலும் அவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்வதா? அல்லது இவற்றையெல்லாம் செய்வதால் அவர்களுக்குப் பின்னாளில் ஏற்படப் போகும் விளைவுகளை அறியாமல் இருப்பதால், அவர்களை மனப்பக்குவம் இல்லாத மூடர்கள் என்று சொல்வதா எனத் தெரியவில்லை”.
கதைக்களம் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவில் நடைபெறுகிறது. ஆகவே அங்குள்ள சில காட்டுயிர்கள் குறித்தும், வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பேராபத்துகள் குறித்தும் நாம் இந்த நாவலின் வழியே அறிய முடிகிறது. குறிப்பாக, பாமாயில் (எண்ணெய்ப்பனை) சாகுபடிக்காகக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து. பாமாயில் தோட்டமிடுவதற்காக, மழைக்காடுகளை வெட்டிச் சாய்த்து அந்த இடத்தை தீ வைத்துக் கொளுத்தும் கொடுமை நடக்கிறது (இது கதையில் மட்டுமல்ல இன்றும் நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வுதான்). அந்தக் காடுகளில் தென்படும் ஒரு அரிய வகை வாலில்லாக் குரங்கினம் ‘ஒராங்ஊத்தன்’ (Orangutan). மரவாழ் உயிரினங்களான இவை காடழிப்புக் காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த நாவலின் ஒரு பகுதியில் (பக்கம் 161) தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்லும் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அந்த இடத்தில், தப்பிச் செல்ல முடியாமல் கருகிப்போன ஒரு ஒராங்ஊத்தனின் சடலத்தைக் காண்கிறார். அது தனது இரு கைகளாலும் எதையே கட்டிப்பிடித்துக்கொண்டே எரிந்துபோயிருக்கிறது. கொஞ்சம் கவனித்துப்பார்க்கும்போது அதன் கரங்களுக்குள் இருப்பது கருகிப்போன குட்டி ஒராங்ஊத்தன் என்பதை அறிகிறார். இதைப் படிக்கும்போதே இந்தக் கொடூரமான காட்சி நம் கண்முன்னே வந்து நெஞ்சை உருக வைக்கிறது. அதே வேளையில் இதுபோன்ற நிலை இந்தியக் காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் நிகழப்போகிறது என்பதை நினைக்கும்போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.
சமையல் எண்ணெய்களில் மலிவான பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 13 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் பயிரிடுவதற்கான ஒப்புதலைச் சென்ற ஆண்டு (ஆகஸ்டு 2021) இந்திய அரசு அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள இயற்கை ஆர்வலர்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதனால், சுமார் 100க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இதில் மலேசியாவும், இந்தோனேசியாவும் செய்த பெரும் தவறை இந்தியாவும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பாமாயில் சாகுபடிக்காக அந்த நாடுகளில் இருந்த பல்லுயிர்ப்பன்மை வாய்ந்த மழைக்காடுகளைத் திருத்தி அழித்துவிட்டனர், அதுபோல இங்கும் நடக்கவிடக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய சமையல் எண்ணெய் உற்பத்தித் திட்டத்தில் பாமாயிலின் (National Mission on Edible Oils – Oil Palm – NMEO-OP) உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்போவதாகவும், இதைப் பயிரிடுவதற்கான மானியங்களும், உதவித்தொகைகளும் அளிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், முதலான வடகிழக்கு மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உலக அளவில் பல்லுயிர்ப்பன்மை மிகுந்த இடங்கள். இங்குள்ள இயற்கையான வாழிடங்களை எந்த வகையிலும் சீர்குலைப்பது அங்குள்ள காட்டுயிர்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எளிமையான ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் நடையில் உள்ளது இந்த நாவல். எனினும் நடுவில் சற்றே விறுவிறுப்பு குறைந்து தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வு எழுகிறது. நாவலாசிரியர் ரமண கைலாஷ் அவர்கள் எட்டு வயதாக இருந்தபோது பாதி கருகிய நிலையில் இருந்த ஒராங்ஊத்தனின் படத்தைக் கண்டிருக்கிறார் (அந்தப் படங்களை இங்கே காணலாம்). அதன் பாதிப்பில் விளைந்ததுதான் இந்த நாவலும், அதில் அவர் விவரித்திருக்கும் கருகிய ஒராங்ஊத்தன் காட்சியும். அவரது பதினான்கு வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் கதைக்கரு, அதில் விளக்கப்பட்டுள்ள காட்டுயிர்களின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை இந்தச் சிறு வயதில் உள்வாங்கி இப்படிப்பட்ட நாவலை எழுதிய அவரை வியந்து பாராட்டலாம். எனினும், எனது எண்ண ஓட்டங்கள் சற்றே வேறுபட்டிருந்தது. இவரைப் போன்ற இளைய தலைமுறை இயற்கை ஆர்வலர்களை நாம் எந்த அளவுக்கு எதிர்மறையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியிருக்கிறோம் என்கிற கவலைதான் மேலோங்கியிருந்தது.
—-
தி இந்து தமிழ் 07 May 2022 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.
இது ஒரு நல்ல வாய்ப்பு – ஒலி வடிவம்
தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு ஒலி வடிவில்.
இந்தக் கட்டுரையை ஒலிவடிவில் பேசித் தந்த மேகலா சுப்பையாவுக்கும், காணொளி ஆக்கித் தந்த வெ. இராஜராஜனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பின்னணி இசை உபயம்
Naoya Sakamata – Dissociation” is under a Creative Commos license (CC BY 3.0). Music promoted by BreakingCopyright: http://bit.ly/2PjvKm7
“Steffen Daum – Goodbye My Dear” is under a Creative Commons license (CC-BY 3.0) Music promoted by BreakingCopyright: https://youtu.be/X7evDQiP3yI
பறவைகளின் குரலோசை ஒலிப்பதிவு
குயில் (ஆண்) – Peter Boesman, XC426536. Accessible at www.xeno-canto.org/426536.
குயில் (பெண்) – Mandar Bhagat, XC203530. Accessible at www.xeno-canto.org/203530
காகம் – Vivek Puliyeri, XC191299. Accessible at www.xeno-canto.org/191299.
சிட்டுக்குருவி – Nelson Conceição, XC533271. Accessible at www.xeno-canto.org/533271
செண்பகம் – Peter Boesman, XC290517. Accessible at www.xeno-canto.org/290517
செம்மூக்கு ஆள்காட்டி – AUDEVARD Aurélien, XC446880. Accessible at www.xeno-canto.org/446880.
தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்
தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் (Protected areas of Tamil Nadu)
தமிழகத்தின் இயற்கைச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் இங்குள்ள பல வகையான சூழல் தொகுப்புகள் தான். இதனாலேயே தமிழகம் பல வகையான வாழிடங்களையும், கானுயிர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
பண்டைய தமிழர் தமிழகத்தின் சூழல் தொகுப்பினை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரித்திருந்தனர். காடும் காடு சார்ந்த நிலப்பகுதி முல்லை எனவும், மலையும் மலையைச் சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், வயலும் வயலைச் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடலைச் சார்ந்த பகுதி நெய்தல் எனவும், முல்லையும், குறிஞ்சியும் பல காரணிகளால் சிதைவடைந்து அதன் இயல்பிழந்திருப்பின் அதனை பாலை எனவும் பிரித்திருந்தனர்.
புவியமைப்பினை பொறுத்து தமிழகத்தில் நான்கு வகை இயற்கையான சூழல் தொகுப்புகள் இருப்பதை அறியலாம். அவை முறையே:
1. மலைகள் (Mountanins)
2. மேட்டுநிலங்களும் சமவெளிகளும் (Plateau and plains)
3. நன்னீர்நிலைகள் (Freshwater region)
4. கடற்பகுதி (Coastal region)

தமிழ் நாட்டில் உள்ள சில இயற்கையான வாழிடங்கள்: மலைகள், நன்நீர்நிலைகள், கடற்பகுதிகள், மேட்டுநிலங்கள், சமவெளிகள் (Photos: Wikimedia Commons)
இது தவிர செயற்கையான அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வேளாண்நிலப்பகுதிகள் (Agricultural region) மற்றும் மனிதர்கள் வாழும் ஊர்ப்புறங்களும் நகர்ப்புறங்களும் (Human habitations) ஒரு வகையான சூழல் தொகுப்பே. ஒவ்வொரு சூழல் தொகுப்பிலும் பல வகையான வாழிடங்களைக் காணமுடியும்.
இந்த சூழல் தொகுதிகளில் இருக்கும் பல வகையான வாழிடங்களும், அதில் வாழும் உயிரினங்களும் காட்டுயிர்ச் சரணாலயம், தேசியப் பூங்கா, புலிகள் காப்பகம், உயிர்மண்டலக் காப்பகம், பல்லுயிர்ப் பாதுகாப்பகம் என பல வகைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
காட்டுயிர்ச் சரணாலயங்கள் (Wildlife Sanctuaries)
சரணாலயங்கள் அமைக்கப்படுவது பொதுவாக ஒரு சில வகை உயிரினங்களுக்காகவே. உதாரணமாக களக்காடு காட்டுயிர்ச் சரணலயம் சோலைமந்திகளுக்காவே (சிங்கவால் குரங்கு) ஏற்படுத்தப் பட்டது. அதாவது ஒரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரினத்தை பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. அந்த உயிரினம் ஒரு விலங்காக மட்டுமல்லாமல் தாவரமாகவோ அல்லது தாவரச் சமுதாயமாகக் (Plant community) கூட இருக்கலாம். இதனால் அந்த குறிப்பிட்ட உயிரினம் மட்டுமல்லாமல் அதன் வாழிடமும் சேர்ந்து பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் இது வரை 11 இடங்கள் காட்டுயிர்ச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1. முதுமலை காட்டுயிர்ச் சரணாலயம்
2. கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்
3. களக்காடு காட்டுயிர்ச் சரணாலயம்
4. இந்திரா காந்தி காட்டுயிர்ச் சரணாலயம்
5. முண்டந்துறை காட்டுயிர்ச் சரணாலயம்
6. வல்லநாடு வெளிமான் சரணாலயம்
7. சிறீவில்லிப்புத்தூர் நரை அணில் சரணாலயம்
8. கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
9. கொடைகானல் காட்டுயிர்ச் சரணாலயம்
10. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
11. காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்
தேசியப் பூங்காக்கள் (National Parks)

கிண்டி தேசியப் பூங்காவில் வெளிமான். Photo: A J T Johnsingh/wikicommons
இயற்கைச் சூழலில் வாழும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தை மட்டும் முன்னிருத்தி சரணாலயங்கள் என பாதுகாக்காமல் அவற்றின் உயிர்ச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்படுபவை தேசியப் பூங்காக்கள். தமிழகத்தில் இது வரை 5 இடங்கள் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் காட்டுயிர் சரணாலத்தினை ஒட்டிய சில பகுதிகளையும் சேர்த்து பழனி தேசியப் பூங்காவாக மேம்படுத்தும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1. கிண்டி தேசியப் பூங்கா
2. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா
3. இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
4. முதுமலை காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
5. முக்குறுத்தி தேசியப் பூங்கா
புலிகள் காப்பகங்கள் (Tiger Reserves)

மேல் கோதையாறு, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். Photo: A J T Johnsingh/Wikimedia commons
அருகிவரும் வேங்கைப் புலிகளின் பாதுகாப்பிற்காக 1973ல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் (Project Tiger – http://projecttiger.nic.in/) கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகளை கள்ள வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதுவுமே இத்திட்டத்தின் தலையாய நோக்கம்.
1. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்
2. ஆனைமலை புலிகள் காப்பகம்
3. முதுமலை புலிகள் காப்பகம்
4. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
யானைகள் காப்பகங்கள் (Elephant Reserves)
இந்திய வனங்களில் பரவியுள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக யானைகள் திட்டம் (Project Elephant) இந்திய அரசால் 1992ல் தொடங்கப்பட்டது. யானைகளின் வாழிடங்களையும், அவற்றின் வழித்தடங்களையும் பாதுகாத்தல், மனிதர்-யானை எதிர்கொள்ளலை மட்டுப்படுத்துதல், சமாளித்தல், கோயில்களிலும், வனத்துறையிலும் வளர்க்கப்படும் யானைகளின் நலன் காத்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
இதன் விளைவாக யானைகள் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் யானைகளுக்கான காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை 32 யானைக் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. யானைகள் பல இடங்களுக்கு வெகுதுரம் சுற்றித்திரிவதாலும், வலசை போவதால் இவற்றின் காப்பகங்களும் அவை அடிக்கடி செல்லக்கூடிய பரந்த பலவகையான வாழிடங்களை உள்ளடக்கிய நிலவமைப்பில் அமைந்துள்ளது. சில காப்பகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரந்து அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 4 யானைக் காப்பகங்கள் உள்ளன.
1. நீலகிரி யானைக் காப்பகம் (நீலகிரி- கிழக்குத் தொடர்ச்சிமலை பகுதிகள் சேர்ந்தது)
2. நிலாம்பூர் யானைக் காப்பகம் (நிலாம்பூர்-அமைதிப்பள்ளத்தாக்கு-கோயம்பத்தூர் பகுதிகள் சேர்ந்தது)
3. ஸ்ரீவில்லிப்புத்தூர் யானைக் காப்பகம் (கேரளாவில் உள்ள பெரியார் யானைக் காப்பகத்துடன் சேர்ந்தது)
4. ஆனைமலை யானைக் காப்பகம் (ஆனைமலை – பரம்பிக்குளம் பகுதிகள் சேர்ந்தது)
உயிர்மண்டலக் காப்பகம் (Biosphere Reserves)

அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம். Photo: Seshadri. K.S / Wikimedia Commons
யுனெஸ்கோவின் (UNESCO) மனிதனும் உயிர்மண்டலமும் (Man and Biosphere-MAB) திட்டம் 1971ல் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல உயிர்மண்டலக் காப்பகங்கள் நிறுவப்பட்டன. பல்லுயிரியத்திற்கு பெயர்போன பகுதிகளின் இயற்கை எழில் மற்றும் வளம் குறையாமல் போற்றிப் பேனுதல், அவற்றின் சூழல் சீரழியாமலும், வளங்குன்றாமலும் பாதுகாத்தல், காடுசார் பொருட்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் உள்ளூர் சமூகத்தினரின் பங்களிப்பை ஊக்குவித்தல், இங்கு வாழும் பழங்குடியினரின் கலாசாரத்தை குலைக்காமல் அவர்களின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து அதனை ஒட்டிய முன்னேற்றம் காண்பது, காடுவிளை பொருட்கள் நீடித்து நிலைக்க அவற்றின் பயன்பாட்டை முறையான மேலாண்மையினால் ஒழுங்குபடுத்துதல், பல்லுயிர் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை இப்பகுதியில் வாழ்வோருக்கு ஏற்படுத்துதல், வாழிட மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அறிவியல் ஆராய்ச்சியையும், பாரம்பரிய அறிவையும் ஒருங்கினைத்தல் முதலியவையே இந்த மனிதனும் உயிர்கோளமும் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
இந்தியாவில் 3 உயிர்மண்டலக் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் மூன்று தமிழகப் பகுதிகளில் உள்ளன. உயிர்மண்டலக் காப்பகங்களுக்கு மாநில வரம்புகள் கிடையாது.
1. நீலகிரி உயிர்மண்டலக் காப்பகம்
2. மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம்
3. அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம்
பறவைகள் சரணாலயங்கள் (Bird Sanctuaries)
பறவைகளுக்கு நாம் வகிக்கும் அரசியல் எல்லைகள் கிடையாது. ஆகவே அவை ஓரிடத்தில் மட்டும் வாழாமல் பல விதமான இடங்களில் பறந்து வாழும் இயல்புடையவை. குறிப்பாக நீர்ப்பறவைகளில் பல ஓரிடத்தில் கூட்டமாகக் கூடுகட்டி இனவிருத்தி செய்யும் இயல்புடையவை. உலகின் வடக்கு பகுதியிலிருந்து அங்கு கடும் குளிர் நிலவும் காலங்களில் தமது இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி இரைதேட வரும் வலசைப் பறவைகளுக்கு உள்நாட்டு நீர்நிலைகள் முக்கியமான வாழிடம். உள்நாட்டுப் பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான வாழிடங்கள் உள்ள பகுதிகளையும், வலசை வரும் பறவைகளுக்காகவும் தமிழகத்தில் 13 பறவைகள் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளான.
1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
2. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
3. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம்
4. கரிக்கிளி பறவைகள் சரணாலயம்
5. சித்ரங்குடி பறவைகள் சரணாலயம்
6. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்
7. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
8. வடுவூர் பறவைகள் சரணாலயம்
9. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
10. மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
11. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
12. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
13. ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்
பல்லுயிர்ப் பாதுகாப்பகம் (Conservation Reserve)
பல்லுயிர்ப் பாதுகாப்பு என்பது அரசு துறைகளின் வேலை மட்டுமல்ல. அருகி வரும் வாழிடங்கள், கள்ளவேட்டை, சுற்றுச்சூழல் மாசு முதலிய பல காரணங்களால் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் பல உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இதை உணர்ந்த பல சமூகங்கள் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சியோ, அரசு துறைகளின் ஊக்குவிப்போ இல்லாமல் தாமாகவே பல்லுயிர் பாதுகாப்பிற்கு பங்களித்து வருகின்றன. அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதில்லை. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பல உயிரினங்களைக் காண முடியும். சரணாலங்களின் விதிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கு உட்படாத இது போன்ற இடங்களில் பொது மக்களால் வாழிடங்களோ, உயிரிங்களோ பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற வாழிடங்களை, பல்லுயிர்ப் பாதுகாப்பகமாக அறிவிக்க ஏதுவாக இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தில் (1972) 2003ல் சீர் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் இரண்டு பல்லுயிர் பாதுகாப்பகங்கள் உள்ளன.
1. திருபுடைமருதூர் பல்லுயிர்ப் பாதுகாப்பகம்
2. சுசீந்திரம் – தேரூர் – மணக்குடி பல்லுயிர்ப் பாதுகாப்பகம்
பாதுகாக்கப்படாத வாழிடங்கள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மேயும் காட்டெருதுகள் (Gaur). Photo: By PJeganathan (Own work) [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)%5D, via Wikimedia Commons
இயற்கைச் செல்வம் என்பது தேசியப்பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படுவது இல்லை. அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் அவற்றின் குணத்தைப் பொறுத்து அவை பல இடங்களில் அல்லது எல்லா இடங்களிலும் பரவியுள்ளன. பொதுவாகத் தென்படும் உயிரினம் முதல் அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் பல உயிரினங்கள் தமிழகத்தின் பாதுகாக்கப்படாத இடங்களிலும் தென்படுகின்றன. காரணம் அந்த உயிரினங்கள் வாழ ஏதுவான வாழிடங்கள் அரசியல் சட்டங்களால் பாதுகாக்கப்படாத இடங்களிலும் உள்ளன. உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தேயிலைத் தோட்டத்திலும் யானைகளும், சிறுத்தைகளும் திரிவதுண்டு. தேயிலை காபி முதலிய ஓரினப்பயிர்கள் பரந்து விரிந்திருக்கும் பகுதிகளில் மழைக்காட்டுத் துண்டுச் சோலைகள் தீவுகள் போல ஆங்காங்கே திட்டுத் திட்டாக அமைந்துள்ளன. இந்தச் துண்டுச் சோலையில் நீலகிரி கருமந்தி, சோலைமந்தி முதலிய அரிய ஓரிட வாழ்விகள் வாழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இது போல் தனியாருக்குச் சொந்தமான பல இடங்கள் உள்ளன. நீலகிரி, வால்பாறை, பழனிமலை, மேகமலை முதலிய பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பல ஓரினப்பயிர் நிலங்கள் மற்றும் அங்குள்ள காடுகளை உதாரணமாகச் சொல்லலாம்.
சமவெளிகள் மிகவும் ஆபத்துக்குள்ளான வாழிடமாகும். பெரும்பாலான அரசுப் பதிவுகளில் இது போன்ற இடங்கள் தரிசு அல்லது பயணில்லாத நிலமாக (waste land) குறிக்கப்படுகின்றது. மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கள், வேளாண்மை விரிவாக்கம் முதலிய காரணங்களுக்காக சமவெளிகளில் உள்ள வாழிடங்கள் வெகுவாக அழிக்கவும், மாற்றத்திற்கும் உள்ளாகின்றன. கடற்கரையோரப் பகுதிகளுக்கும் இதே நிலைதான்.
பாதுகாக்கப்பட்ட நன்னீர்நிலைகளைத் தவிர எண்ணிலடங்கா குளங்களும், ஏரிகளும், கண்மாய்களும் சிறியதும் பெரியதுமாக தமிழகம் முழுதும் பரவியுள்ளது. எனினும் இவற்றில் பல சரியாகத் தூர்வாரத காரணத்தாலும், நகரமயமாக்கத்தாலும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டன. மணற்கொள்ளை ஆற்றுச்சூழலை பெரிதும் பாழ்படுத்தி அங்கு வாழும் உயிரினங்களையும் அந்த நிலவமைப்பையே மாற்றியும் வருகிறது. தொழிற்சாலை கழிவுகளினாலும், வேறு பல காரணிகளாலும் பல நீர்நிலைகள் மாசடைந்து போய்விட்டது.
இதுபோன்ற பகுதிகளில் வாழும் உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க, அந்த மொத்த நிலவமைப்பையே பாதுகாக்க, சரியான முறையில் பராமரிக்க திட்டங்களும், மேலாண்மைக் கொள்கைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். தாவரங்களும் விலங்குகளும் பாதுகாப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படவேண்டும், வாழவேண்டும் என்று அவசியம் இல்லை. எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தான், மற்ற உயிரினங்களுக்குக் கிடையாது. ஆகவே இது போன்ற பகுதிகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் போற்றிப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
இயற்கையை அழித்தா வளர்ச்சி?
கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.
சுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.
சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.

சாலையோரங்களில் வாழும் இயற்கையான தகரை/பெரணி (Fern) தாவரங்களை (இடது) வெட்டி அகற்றுவதால் அங்கே உண்ணிச் செடி (Lantana camera) போன்ற களைச்செடிகள் மண்டும்.
இது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.
தினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.
இந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.
சாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.
சாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.
நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.
பொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.
இதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.

இயற்கையான வாழிடங்களின் வழியே அமைக்கப்படும் அகலமான சாலைகள் பல உயிரினங்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.
யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.
மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.
நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.
———-
மார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.
தவளைகள் பாடிய தாலாட்டு
மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு காட்டுப் பாதை வழியே வேலை நிமித்தம் ஒரு மழைக்கால மாலை வேளையில் தனியே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. சுமார் 50 கி.மீ காட்டுப்பகுதி, ஏற்றமும், இறக்கமும், வளைவுகளும், நெளிவுகளும் நிறைந்த பாதை அது. பலவகையான வாழிடங்களைத் தாண்டிப் போகவேண்டும். இதன் பெரும்பகுதி மழைக்காட்டின் வழியாகவும், பின்னர் மூங்கில் காடு, தேக்கு மரக்காடு இலையுதிர் காடுகளைத் தாண்டி விளைநிலங்களைக் கடந்து நகரத்தை அடையும் அந்த பாதை. போகும் வழியில் காட்டின் உள்ளே ஓரிரு சிறிய குடியிருப்புப் பகுதிகளையும் தாண்டிச் செல்லவேண்டும்.
பகலில் சில முறை அவ்வழியே சென்றிருந்தாலும் இரவு நேரத்தில் போனதில்லை. வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு 6 மணியளவில் புறப்பட்டேன். பொதுவாக காட்டுப்பாதையில் ஜீப்பில் சென்றால் வேகமாகச் செல்வதில்லை. ஏதாவது காட்டுயிர்கள் சாலையைக் கடக்கலாம். மாலையிலும் இரவிலும் சற்று கவனமாகவே வண்டியை ஓட்ட வேண்டும்.
அந்திமாலைப் பொழுது. அடையும் வேளையாதலால், பலவித பறவைகளின் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தது. காட்டின் நடுவே இருந்த ஒரு வெட்ட வெளியில் சென்ற தந்திக்கம்பிகளில் செந்தலைப் பஞ்சுருட்டான் கூட்டம் ஒன்று அமர்ந்து கத்திக் கொண்டிருந்தன. அவ்வப்போது காற்றில் மேலெழும்பி பறந்து கொண்டிருந்த பூச்சிகளைப் பிடித்து மீண்டும் கம்பியில் அமர்ந்தன. தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி, ஆட்டி பிடித்த பூச்சியை உயிரிழக்க வைத்து, அவை திங்கமுடியாத பாகங்களையும் விலக்கிக் கொண்டிருந்தன. துடுப்புவால் கரிச்சான் இரண்டு அங்குமிங்கும் பறந்து அப்பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருந்தன. பறக்கும் போது கூடவே அவற்றின் குஞ்சம் போன்ற வால் சிறகும் அவற்றை பின் தொடர்ந்ததைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது. அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து வாலை வெடுக் வெடுக்கென ஆட்டிக் கொண்டு பிடித்த பூச்சியை விழுங்கிக் கொண்டிருந்தன. இருநோக்கியில் பார்த்தபோது மேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்த அப்பூச்சிகள் ஈசல்கள் எனத்தெரிந்தது.
கரிய மேகங்கள் வானில் சூழ ஆரம்பித்தது. நேரமின்மையால் வண்டியைக் மெல்ல மெல்ல நகர்த்தினேன். மரக்கிளைகளால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட காட்டுப் பாதையாதலால் விளக்கை போட்டுக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. பலவகையான தகரைச் செடிகள் (பெரணிகள் Ferns) சாலையோரத்தை அலங்கரித்திருந்தன. இயற்கையாக வளர்ந்த இந்த காட்டுத் தாவரங்களை எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான். குண்டும் குழியுமாக இருந்தது அந்தச் சாலை. காட்டுச் சாலை இப்படித்தான் இருக்க வேண்டும். காட்டில் சாலைகள் இருப்பதே காட்டுயிர்களுக்கும், வாழிடங்களுக்கும் கேடுதான். நமக்கு சாலைகள் அவசியம் தான், ஆனால் இயற்கையான வாழிடத்தின் வழியே செல்லும் சாலைகள் அங்குள்ள காட்டுயிர்களுக்கு மென்மேலும் தொந்தரவு கொடுக்காத வகையில் இருக்க வேண்டும். செப்பனிடப்படாத, அகலப்படுத்தப்படாத சாலையும் பல வகையில் காட்டுயிர்களுக்கு நன்மை பயக்கும்.
இதையெல்லாம் யோசித்தவாரே ஒன்று அல்லது இரண்டாம் கியரில் வண்டியை ஓட்டிக் கொண்டே சென்றேன். மதிய வேளையில் மழை பெய்திருக்க வேண்டும். சாலையெங்கும் ஈரமாகவும், ஓரங்கள் சகதிகள் நிறைந்தும் இருந்தது. முற்றிலுமாக இருட்டிவிட்டிருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன். பறவைகளின் ஒலி முற்றிலுமாக நின்றுபோய் தவளைகளின் ஒலி கேட்க ஆரம்பித்ததை. அவற்றின் குரலும் பல விதங்களில் இருந்தது. சில தவளைகளின் குரலை வைத்தே தவளை ஆராய்ச்சியாளர்கள் அது இன்ன தவளை வகை எனச் சொல்லி விடுவார்கள். வழி நெடுக தவளைகளின் பாட்டைக் கேட்டுக் கொண்டே, இரவில் தனியாக, வேறு வாகனங்கள் ஏதும் அதிகம் வராத காட்டுப் பாதையில் பயணம் செய்வது ஒரு புது வித அனுபவமாக இருந்தது.
சட்டென ஒரு எண்ணம் உதித்தது. கொஞ்ச நேரம் தவளைகளின் குரல்களை கேட்டு விட்டுச் சென்றால் என்ன எனத் தோன்றியது. வண்டியை ஓரமாக நிறுத்தி கேட்க ஆரம்பித்தேன்.
இடைவெளியில்லாத டிக்.. டிக்.. டிக்..
சற்று நிதானமான இடைவெளியுடைய டக்..டக்..டக்..
மெல்ல ஆரம்பித்து பின் இடைவிடாமல் உச்சஸ்தாயியை அடையும்…டொக்…..டொக்…..டொக்…..டொக்…..டொக்….டொக்..
ஒரே ஒரு முறை குரலெழுப்பி பின் சில நிமிடங்கள் அமைதியடையும்..க்ராக்கக்கக்.
இன்னுமொரு குரலொலி கேட்டது.
சரியாக மூடாத குழாயிலிருந்து, நிறம்பிய வாளியில் மெல்லச் சொட்டும் நீரின் ஒலி ஒத்த தகுந்த இடைவெளியுடனான டப்………டப்………டப்………
இதை இதற்கு முன் கேட்டதுண்டு. மரத்தின் உச்சியிலிருந்து வரும் இந்த குரல் மழைத்துளித் தவளைக்குச் (Raorchestes nerostagona) சொந்தமானது.
நிச்சயமாக ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகை. இவையனைத்தும் புதர் தவளைகள் (Bush frogs) இனத்தைச் சேர்ந்தவை. நான் கேட்டுக்கொண்டிருந்தது அனைத்துமே ஆண் தவளைகள். ஆம், தனது இணையக் கவரவே அவை அப்படிக் குரலெழுப்புகின்றன. இந்த ஆண் புதர் தவளைகளை எளிதில் பார்ப்பது சிரமம். ஆனால் பார்த்து விட்டால் அதுவும் அவை குரலெழுப்பும் போது பார்த்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தவளைகளின் மெல்லிய தோலுள்ள கீழ்த்தாடை அவை ஒலியெழுப்ப்பும் போது பலூன் போல உப்பி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். எழுப்பும் ஒலியை வெகுதொலைவு கொண்டு செல்லவே இவற்றின் கீழ்த்தாடை ஒரு ஒலிபெருக்கியைப் போல செயல்படுகிறது.
கையில் டார்ச் இருந்தாலும், இவை இருக்குமிடத்தை கண்டறிவதில் ஆர்வமின்றி சிறிது நேரம் கண்களை மூடி அவற்றின் குரலொலியில் லயித்திருந்தேன்.
டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…டொக்…டொக்…டொக்…டப்….க்ராக்கக்கக்…டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…டொக்…டொக்……..டொக்……க்ராக்கக்கக்….டிக்..டிக்..டிக்….டப்….டக்..டக்..டக்….டப்….டொக்…….டொக்… டொக்….க்ராக்கக்கக்……
மழைக்காடு என்றுமே தூங்குவதில்லை. மழைக்காட்டுப் பகல் பறவைகளின் இசையாலும், சிள் வண்டுகளின் இரைச்சலாலும் நிரம்பியிருக்கும். மாலை வேளையில் சிறிய ஓய்விற்குப் பின் இரவில் மீண்டும் மழைக்காடு உயிர்த்தெழுவது இந்த தவளைப்பாட்டுக் கச்சேரியால் தான். மழைக்காட்டுக்குள் குறிப்பாக மழைக்காலங்களில் இந்த ஜுகல்பந்தியை நிச்சயமாகக் கேட்கலாம்.
இரவில் தவளைகள் பாடிய அந்த தாலாட்டை கண் மூடி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ட்டப்… என்று ஒரு மழைத்துளி எனது நெற்றியில் விழுந்து தெரித்து அந்த கணநேர இன்பத்தைக் கலைத்தது. சற்று நேரத்தில் இலேசான தூரல் போட ஆரம்பித்தது. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன். வண்டியின் முன் சில அடிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு சாலை முழுவதுமாக பனிபடர்ந்தது. இருளில் விளக்கு வெளிச்சத்தில் மெல்ல வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து சிறிய குடியிருப்புப் பகுதியை கடந்து சென்றேன். அந்தப் பகுதியில் சாலை ஒரே சீராக இருந்தது. மழை நின்றிருந்தது சாலை தெளிவாகத் தெரிந்தது. திடீரென சாலையின் ஒரு பக்கத்திலிருந்து தவளை ஒன்று குதித்து வண்டியை நோக்கி வருவது தெரிந்தது. வண்டியின் விளக்கினால் கவரபட்டு வரும் பூச்சிகளைப் பிடிப்பதற்காகவோ, என்னவோ பல வேளைகளில் இப்படி இந்தத் தவளைகள் வண்டியை நோக்கி வருவதுண்டு. பல சக்கரங்களில் அரைபட்டும் சாவதுண்டு. வண்டியை வளைத்து நெளித்து ஓட்டி வழியில் வந்த பல தவளைகளை அரைத்துவிடாமல் கடந்து சென்று கொண்டிருந்தேன்.
மலைப்பாதை கீழிறங்கி காட்டுச் சாலை முடிந்து விளை நிலங்களை நோக்கிப் பயணமானேன். இங்கே பாதை சீராகவும், இருவழிச்சாலையாகவும் இருந்தது. தவளைகளின் ஒலி இங்கே அவ்வளவாக இல்லை. சாலையிலிருந்து சற்று தொலைவிலிருந்து க்ரோக்… க்ரோக்… க்ரோக்…எனும் ஒலி வந்தது. இது சமவெளிகளில் தென்படும் வேறு வகையான தவளை. சாலை அகலமாக அகலமாக தவளைகளின் ஒலியற்ற நகரப்பகுதி மெல்ல வர ஆரம்பித்தது.
இப்பயணத்தின் முடிவில் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. சாலையில் பனிபடர்ந்து, மழை பொழியும் நேரத்தில் எனது வண்டிச் சக்கரங்களில் அரைபட்டு எவ்வளவு தவளைகள் உயிரிழந்திருக்கும்? அப்போது முடிவு செய்தேன், அவ்வழியே இனி எப்போதும் இரவில் குறிப்பாக மழைக்காலங்களில் பயணம் செய்வதே இல்லை என.
பெட்டிச் செய்தி
சிலருக்கு தவளைகளைக் கண்டால் அருவருப்பும், பயமும் கொள்வார்கள். ஆனால் அவை பல பூச்சிகளையும், கொசுக்களையும் சாப்பிட்டு நமக்கு நன்மை செய்பவை. தவளைகள் அழகானவை, குறிப்பாக இந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் மழைக்காடுகளில் தென்படும் புதர் தவளைகள். பார்த்தவுடன் நம்மை ஈர்க்கக்கூடிய பச்சை, இளம்பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு, செங்கல் நிறம், ஆரஞ்சு நிறம், மிட்டய் நிறம் என பல வண்ணங்களிலும், அழகிய புள்ளிகளையுடைய, வரிகளுடைய வடிவங்களில் உள்ள தவளைகள் பல இங்கு தென்படுகின்றன. இவை சுமார் 3 செ.மீ நீளமே இருக்கும்.
சில தவளைக் குஞ்சுகள் நம் விரல் நகத்தின் அளவை விட சிறியவை. இத்தவளைகள் பெரும்பாலும், மர இலைகளின் மேலோ, கீழோ, கிளைகளிலோ அமர்ந்திருக்கும். மழைக்காட்டின் விதானம், மத்தியப் பகுதி, தரைப்பகுதி என பல அடுக்குகளில் இவை வாழ்கின்றன.
பம்பாய் புதர் தவளை கத்துவது தட்டச்சு செய்வது போலிருப்பதால் இதற்கு தட்டச்சுத் தவளை என்றே பெயர். இதை கீழ்க்கண்ட இந்த வீடியோவில் காணலாம்:
காட்டு நீரோடைகளில், இலைச்சருகுகளில், நமக்கு எட்டாத உயரத்தில் மரத்தின் மேல் வாழும் தவளையிங்களும் உண்டு. இவை உருவில் சற்று பெரியவை.
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 7th October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
களக்காடு தந்த பரிசுகள்
இயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப்பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதை களக்குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. எனது களக்காடு-முண்டந்துறை களக்குறிப்பேட்டை அன்மையில் திறந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னே வந்தது: புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள். குறிப்புகளைக் காணக்காண கண் முன்னே விரிந்தன பல காட்சிகள்.
****
சிலம்பனும் நானும் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்த தடத்தின் மறு முனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி கேட்டது. இருநாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடிகள் இரண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், அவரிடமிருந்த அரிவாளால் வழியில் இருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கணைத்துக் கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்தால் ஒரு வேளை ஏதெனும் பெரிய காட்டுயிர்கள் நாம் போகும் வழியில் இருந்தால், விலகிச் சென்றுவிடும். மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது சட்டென சிலம்பன் நின்று, என்னிடம் சொன்னார், “அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு” என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில் காட்டு வாழைகள் நிறைந்த அந்த பகுதியில் சுமார் 20மீ தூரத்தில் ஒரு புலி இடமிருந்து வலமாக நடந்து சென்றது. புலியை இயற்கையான சூழலில் அப்போதுதான் நான் முதல் முறையாகப் பார்த்தேன்.
****
ஒரு நான் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப்பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடிபருத்த ஒரு பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன. அம்மரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து ஏதோ ஒரு கருப்பான காட்டுயிர் உர்ர்..என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி இருவரும் ஓட ஆரம்பித்தோம். உருண்டு, புரண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப்பகுதியை வந்தடைந்தோம். பின்பு தான் உணர்ந்தோம் அது ஒரு கரடி என. கரடிகளுக்கு நுகரும் சக்தி அதிகம், எனினும் கண் பார்வையும், கேட்கும் திறனும் சற்று கம்மி. மரத்தின் கீழிருக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கு சென்று அதை திடுக்கிடச் செய்ததால்தான் எங்களைக் கண்டு உறுமி விரட்டியிருக்கிறது.
****
காட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. ஒரு நாள் மாலை யானைகளின் பிளிறல் வீட்டின் அருகில் கேட்டது. இரவானதும் வீட்டின் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலக்கும் ஒலி கேட்டு அங்கிருந்த சன்னலைத் திறந்த போது யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அதை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை (அங்கு மின்வசதிகள் கிடையாது) அணைத்துவிட்டு கண்ணாடி சன்னல்கள் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தையும் தெளிவானக் காண வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்ததை அக்கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையை வைத்து நுகர்ந்தது. பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. இரவுநேரத்திலும், நிலவின் ஒளியில் ஒரு யானைத்திரளை வெகு அருகில் கண்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.
****
களப்பணிக்காக ஒரு நாள் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த போது தரையிலிருந்து சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் அருகிலிருந்த ஒரு பெரிய ஆத்துவாரி மரத்தினைப் பற்றிக் கொண்டு மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தண்டினைப் பற்றி மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு இலாவகமாக மரக்கிளைகளினூடே ஏதோ தரையில் நடந்து செல்வது போல அனாயாசமாக மரம் விட்டு மரம் தாவி சென்றது. நீலகிரி மார்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்பு புலி என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே மிக அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம் இது.
****
இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்தது 1999ல். நான் இருந்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பத்தில். இது 1988ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். இப்போது இந்த புலிகள் காப்பத்திற்கு வயது 25. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக எனது 25 வது வயதில் அங்கு சென்ற எனக்கு, களப்பணியின் போது பல வித அனுபவங்களையும், பல மறக்க முடியாத தருணங்களையும் எனக்களித்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் தான். படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்பேன் என கனவிலும் நினைத்திராத பல உயிரிங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான்.
மழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ஒன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்றிய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாக இங்கு பதினோரு மாதங்கள் தங்கியிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியாகும் (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal) ஆகும். இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைகாட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொள்ளும் வேளையில் இக்கானகத்தின் செல்வங்கள் பலவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
உலகில் உள்ள பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி. இந்த மலைத்தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், கொடமாடியாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தமிரபரணி, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி போன்ற ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.
புலிகள் காப்பகங்கள் புலிகளை மட்டும் பாதுகாப்பதில்லை. புலிகளையும் சேர்த்து பல வித வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கிறது. புலிகள் பாதுகாப்பு இன்றியமையாதது. ஏனெனில் அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கும் நன்மை புரிவது.
*******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 3oth September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
அண்டங்காக்கையும் தவளைக்குஞ்சும்
ஜூலை மாதம். ஒரு மழைக்கால மதிய வேளை. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப்பகுதி. இலேசான தூரல். நான் நின்று கொண்டிருந்த பாறை மழையில் நனைந்து, அடர்ந்த மேகத்தைக் கிழித்துக் கீழிறங்கிய இலேசான சூரிய ஒளிபட்டு பளபளத்தது. அந்தப் பாறை செங்குத்தாகக் கீழிறங்கியது. பள்ளத்தாக்கில் பல வித பச்சை நிறத்தில் மழைக்காட்டின் கூரை. மெல்ல வீசிய குளிர் காற்று மழைச்சாரலை தள்ளிக்கொண்டே இருந்தது. திடீரென மேகங்கள் விலகி, வானம் முற்றிலுமாக வெளுத்தது. மறைந்திருந்த சூரியன் வெளியே வந்து சுள்ளெனச் சுட்டது. தூரத்தில் மலை முகடுகளுக்கிடையே வெள்ளைவெளேரென அருவி கொட்டியது தெளிவாகத் தெரிந்தது. இது ஓரிரு நிமிடங்கள் தான். எங்கிருந்தோ வந்த வெண்மேகங்கள் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் நிரப்பின. எதிரே என்ன இருக்கிறதென்பதே தெரியாமல் போனது.
தூரத்தில் ஏதோ ஒரு பறவை வெண்மேகங்களைக் கிழித்துக்கொண்டு பறந்து வந்தது. அது அண்டங்காக்கை. வெள்ளைப் பின்னனியில் கருப்பு நிற காகத்தை எளிதில் இனங்காண முடிந்தது. கண்ணெதிரே இருந்த பாறையின் கீழே இறங்கியது. மெல்ல மேலேறி நடந்து வந்தபோது முதலில் தலை மட்டும் தெரிந்தது. மேகங்கள் இலேசாக விலக ஆரம்பித்தன. காகம் மெல்ல பாறைக்கு மேலே வந்து நின்றது. பிறகு பள்ளத்தாக்கை நோக்கித் திரும்பி நின்று கா…கா… எனக் கரைந்தது. மெல்லிய மேகங்களால் திரையிடப்பட்ட பச்சைநிற மழைக் காட்டுக் கூரையின் பின்னனியில், இலேசான மழைத் தூரலில், அந்த கரிய அண்டங்காக்கையைப் பார்க்க மிக அழகாக இருந்தது. மழையில் நனைந்து கொண்டே கரைந்த அந்த காகத்தைப் பார்த்ததும் சிறு வயதில் காகத்தைப் பற்றி சொல்லி விளையாடும் விடுகதையொன்று நினைவுக்கு வந்தது. அது கரைந்த சற்று நிமிடத்திற்கெல்லாம் இன்னொரு அண்டங்காக்கையும் அங்கே வந்தமர்ந்தது.
பாறையின் மேல் மெல்லிய படலமாக மழை நீர் தவழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது. பாசி படராத அந்தப் பாறையில் நீரோட்டம் இருப்பதே தெரியவில்லை. பாறையின் மேல் ஆங்காங்கே சிறு சிறு கற்கள் சிதறிக்கிடந்தன. கொஞ்சம் உற்று கவனித்த போது பாறையின் சில இடங்களில் அவ்வப்போது சிறிய அசைவுகள் ஏற்படுவதை காணமுடிந்தது. அவை தவளைக்குஞ்சுகள் (தலைப்பிரட்டை). அந்தப் பாறையின் மேல் வால் நீண்ட பல தவளைக் குஞ்சுகள் தென்பட்டன. அருகில் சென்று பார்த்த போது முட்டை வடிவ உடலும் அதன் கீழே பின்னங்கால்கள் இரண்டும், நீண்ட வாலும் தெரிந்தது. முனை கூரான வால், உடலின் நீளத்தை விட மூன்று மடங்கு நீண்டிருந்தது. அவை அதிகம் நகர்வதில்லை. பாறையோடு பாறையாக ஒட்டிக்கொண்டிருந்தன. உருமறைத் தோற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தவளைக்குஞ்சு. தட்டையான உடலில், இரண்டு கண்கள் மட்டும் நீர் படலத்தின் மேலே துருத்திக் கொண்டிருந்தது. மொத்தத்தில் உருவில் பெரிய மனித விந்தணு போன்றதொரு வடிவம்.
காகங்கள் இரண்டும் பாறையின் சமமான பகுதியில் தத்தித் தத்தி வந்தன. எதையோ தேடுவது போலிருந்தது. ஒரு காகம் அங்கிருந்த சிறிய சப்பட்டைக் கல்லை திருப்பியது. அக்கல்லின் ஓரமாக ஒதுங்கியிருந்த வால் நீண்ட அந்தத் தவளைக் குஞ்சை தனது கூரிய அலகால் கொத்தி எடுத்து விழுங்கியது. சுமார் கால் மணிநேரம் அவை மும்முரமாக தவளைக் குஞ்சை தேடி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன. தேடுவதிலும் ஒரு நேர்த்தி இருந்தது. முதலில் அசையாமல் ஓரிடத்தில் இருந்தே நோட்டம் விட்டன. தவளைக் குஞ்சைக் கண்டால் அதனருகில் நடந்து சென்று தலையை ஒரு பக்கம் சாய்த்து தரையைப் பார்ப்பதும், பிறகு கொத்தித் தின்னுவதுமாக இருந்தன.
சட்டென அதில் ஒரு காகம் பள்ளத்தாக்கை நோக்கிப் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு முதலில் வந்த காகமும் அதைத் தொடர்ந்தது. இறக்கையை அகல விரித்து மேலும் கீழும் அடித்தவண்ணம் பறந்து சென்றது. பள்ளத்தாக்கில் பறந்து சென்றதால் அதன் மேற்புறத் தோற்றத்தைக் காணமுடிந்தது. சற்றே மேல்நோக்கி வளைந்த அதன் முதன்மைச் சிறகுகள் நம் கை விரல்களைப் போன்ற தோற்றத்தைத் தந்தது. இது போன்ற அமைப்பை பொதுவாக கழுகு வகை பறவைகளில் காணலாம். திட்டுத் திட்டாக கலைந்து செல்லும் பால் போன்ற மேகத்தினூடே கம்பீரமாகப் பறந்து சென்றது. அண்டங்காக்கையினை பல முறை பார்த்திருந்தாலும் கானகத்தின் பின்னனியில், தவழும் மேகங்களுக்கிடையில் பறந்து சென்ற அந்த எழிலார்ந்த காட்சி அதன் அழகை மேலும் கூட்டியது.
*********
புத்திசாலிப் பறவைகள்
காகங்கள் புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் (Tool using ability) திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், மீந்து போன உணவு முதல் பழங்கள், பூச்சிகள், தவளைகள், மற்றப் பறவைகளின் குஞ்சு, முட்டை எனப் பல வகையான உணவை உட்கொள்பவை.
இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாக (Natural scavengers) கருதப்படுகின்றன. இந்தத் தகவமைப்பினாலேயே இவை மனித அடர்த்தி மிகுந்த நகரங்கள், காட்டுப் பகுதி எனப் பல இடங்களில் பரவிக் காணப்படுகின்றன.
நம்மில் கலந்தவை
காகங்கள் நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்த ஒரு பறவையினம். நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. இதை “விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகை பாடலின் மூலமும் அறியலாம்.
இப்பாடலை இயற்றியது சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கை பாடினியார் நச்செள்ளையார். காகத்தைப் பற்றி பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.
*********
காகங்கள் கோர்விடே (Corvidae Family) குடும்பத்தைச் சார்ந்தவை. இக்குடும்பத்தில் கோர்வஸ் பேரினத்தை (Corvus Genus) சேர்ந்த 12 வகை காகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் அண்டங்காக்கை (Large-billed Crow), காக்கை (House Crow) என இரண்டு வகைக் காகங்களைக் காணலாம்.
காகங்கள் இனத்தைச் சார்ந்த வால்காக்கையை (Rufous Treepie) மரங்கள் அடர்ந்த தமிழக நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் காணலாம்.
வெண் வால்காக்கை (White-bellied Treepie) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்கு மலைத் தொடரின் சில காட்டுப் பகுதிகளிலும் மட்டுமே தென்படும் ஓரிட வாழ்வி (Endemic species).
இமயமலைப் பகுதிகளில் தென்படும் காக்கை குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பறவைகள் சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டவை. Red-billed Chough எனும் செம்மூக்குக் காக்கையின் அலகும், காலும் சிவப்பு நிறத்திலிருக்கும், அல்பைன் காக்கையின் (Alpine or Yellow-billed Chough) அலகு மஞ்சள் நிறமாகவும், கால்கள் இளஞ்சிவப்பாகவும் இருக்கும்.
காகங்களை அவதானித்து அவற்றைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை 1905ல் டக்ளஸ் திவர் (Douglas Dewar) எனும் புகழ்பெற்ற பறவையியலாளர் ‘The Indian Crow’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை இலவசமாகக் கீழ்க்கண்ட உரலியிருந்து பெறலாம்: <https://archive.org/details/indiancrowhisboo00dewa>
*********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 9th September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
தலைதெறிக்க ஓடியது சிறுத்தை!
நாங்கள் நால்வர். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மழைக்காட்டுப் பகுதியில் கானுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தோம். அதுவரை வானை மூடிக்கொண்டிருந்த மழை மேகங்கள் விலகி வெயில் அடிக்க ஆரம்பித்தது. அது வரை பெய்த மழையால் மரங்களிலிருந்து நீர் சொட்டிக் கொண்டேயிருந்தது. பறவைகளின் பாடல்கள் வழியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த அழகிய மழைக்காட்டின் நெடிந்துயர்ந்த மரங்களையும், அவற்றின் தண்டிலும், கிளைகளிலும் படர்திருக்கும் பல வித பச்சை நிற பாசிகளையும், சிறு செடிகளையும், தரையில் வளர்ந்திருக்கும் பல வண்ண மலர்ச் செடிகளையும், காட்டின் திறப்பில் எதிரே தெரிந்த, மேகக்கூட்டங்கள் தழுவிய உயர்ந்த மலைச்சிகரங்களையும், காட்டுயிர்களையும் கண்டுகளித்த நிம்மதியில், களைப்பு தெரியாமல் (அவ்வப்போது அட்டைகளை கால்களிலிருந்து பிய்த்து எடுத்து தூர எறிந்து கொண்டே) நடந்தோம்.
வளைந்து நெளிந்து செல்லும் மழைக்காட்டின் பாதையில் பேசாமல் மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். மாலை 5 மணி. முன்னே சென்று கொண்டிருந்தவர் சட்டென எங்களை கையைக் காட்டி நிறுத்தினார். எங்கள் முன்னே காட்டுத்தடத்தின் ஓரத்தில் சுமார் 30 மீ தூரத்தில் ஒரு சிறுத்தை அமர்ந்திருந்தது. ஆமாம் சிறுத்தை. மகிழ்ச்சி தாளவில்லை எங்களுக்கு. உடனடியாக தடத்தைவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டோம். எங்களது கண்களாலும், சைகைகளாலும் பேசிக்கொண்டோம்.
அச்சிறுத்தை அமர்ந்திருந்த இடம் மரங்களில்லா ஒரு திறந்த வெளி. காட்டுத்தடத்தின் ஓரத்தில் அமர்ந்து கீழேயிருந்த பள்ளத்தாக்கை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அமர்ந்திருந்தது என்று சொல்வதைவிட கிட்டத்தட்ட படுத்திருந்து, தலையை மட்டும் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். என்ன ஒரு அழகு. காட்டில் எத்தனை வகை உயிரினங்களைக் கண்டாலும் ஒரே ஒரு சிறுத்தையை பார்ப்பதற்கு ஈடு இணையே கிடையாது. இயற்கை ஆர்வலர்களுக்கு இது புரியும்.
சிறுத்தைக்கென்று ஒரு வசீகரம் உண்டு. அதைக் காணும் போது இனம் புரியாத ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். அது நிச்சயமாக பயம் கிடையாது. சொல்லப்போனால் இயற்கை ஆர்வலர்கள் என்று இல்லை, மனிதர்கள் அனைவருக்கும் சிறுத்தையை இயற்கைச் சூழலில் பார்க்க ஆர்வம் இருக்கும். இதை நான் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிறுத்தையைப் பார்த்து பயம் கொள்பவர்கள் அதைப் பற்றி அறியாதவர்களே. அப்படிப்பட்டவர்கள் முதன் முதலில் சிறுத்தையைப் பார்க்கும்போது ஒரு வித அச்சம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிறுத்தையின் குணாதிசியத்தைப் பற்றி அறிந்து கொண்டால், அதை ஒரு முறை பார்த்தவுடன் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் நிச்சயமாகத் தோன்றும். அந்த ஈர்ப்பு சக்தி சிறுத்தைக்கு உண்டு.
வால்பாறையில் பல வேளைகளில் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கும் ஒரு தவறான பழக்கம் உண்டு. அப்போது கூண்டில் அடைபட்ட அந்த சிறுத்தையைப் பார்க்க வரும் கூட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும். ஒரு சினிமா ஸ்டாருக்குக் கூட அவ்விதமான கூட்டம் கூடாது. என்னதான் இவ்வூர்க்காரர்கள் பலர் சிறுத்தையை நினைத்து பயந்தாலும், அதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் கூண்டில் அடைபட்ட, மன உளைச்சலில் இருக்கும் ஒரு பரிதாபமான உயிரைக் காண வருவார்கள். பெண்களும், ஆண்களும், வயதானோரும், இளைஞர்களும், சிறுமியரும், சிறுவர்களும் அலையெனத் திரண்டு வருவார்கள். அப்போதெல்லாம் எனக்குத் தோன்றும், இவர்களுக்கு மட்டும் சிறுத்தையப் பற்றி தெரிந்திருந்தால் இப்படி கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்திருக்க மாட்டார்கள். சிறுத்தையை இயற்கையான சூழலில் பார்ப்பதையே அவர்கள் விரும்பியிருப்பார்கள். சிறுத்தையைப் பற்றி அறிந்திருந்தால் சுதந்திரமாகச் சுற்றும் சிறுத்தையைக் கண்டு பயப்படாமல், அதைப் பார்ப்பதை ஒரு பாக்கியமாக நினைத்திருப்பார்கள். அக்கணம் ஒரு சுவைமிக்க, மயிர்கூச்செறிய வைக்கும், வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்.

கூண்டில் பிடிக்கப்பட்ட சிறுத்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும். அப்போது அதனருகில் சென்று பார்ப்பது அதன் நிலைமையை மேலும் மோசமாக்கும். படம்: கணேஷ் ரகுநாதன்.
அன்மையில் வண்டலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகித்து அதை கூண்டு வைத்துப் பிடிக்க ஏற்பாடுகள் நடந்தன (1) (2) (3). சென்ற ஆண்டு பெரம்பலூர் பகுதியில் வனப்பகுதியில் அருகாமையில் இருக்கும் ஒரு கிராமத்தில் சிறுத்தையைப் கண்டதாலேயே அதை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது (4). சிறுத்தையைப் பற்றி அறிந்திருந்தால் அவர்களில் சிலர் அதைக் கூண்டு வைத்து பிடிக்கச் சொல்லி அதிகாரிகளை நிர்பந்தப் படுத்தியிருக்க மாட்டார்கள். எவரையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் குணங்களை மதிப்பிடுவது தவறு. அது சிறுத்தையின் விஷயத்திலும் பொருந்தும். சிறுத்தையை ஊருக்குள் பார்ப்பதாலேயே (குறிப்பாக வனப்பகுதியை அடுத்துள்ள பகுதிகளில்) அதை கூண்டு வைத்துப் பிடிப்பது தவறு. உண்மையில் சிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள உயிரினங்கள். மனிதர்கள் உள்ள பகுதிகளில் உலாவுவதை அவை பெரும்பாலும் தவிர்க்கின்றன. மனிதர்களுக்கு ஊறுவிளைவிப்பவை எனக்கருதப்படும் சிறுத்தைகளை பொறிவைத்துப் பிடித்து வேறு இடங்களில் சென்று விடுவிப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. மாறாக இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
ஒரிடத்திலிருந்து சிறுத்தையை பிடித்துவிட்டால், அச்சிறுத்தை உலவிவந்த இடத்தை வேறொரு சிறுத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். தாய் சிறுத்தையானது அதன் குட்டிகளுக்கு குறைந்தது 2-3 ஆண்டுகள் கூட இருந்து அவற்றிற்கு இரையை வேட்டையாடவும், மனிதர்களிடமிருந்து விலகிச் செல்லவும் கற்றுக்கொடுக்கும். ஒரு வேளை தாய் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தால் அதன் சிறுத்தைக் குட்டிகள் தாயின் மேற்பார்வையின்றி சுதந்திரமாகச் சுற்றித்திரிந்து எதிர்பாராவிதமாக மனிதர்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுக்கக்கூடும். ஆகவே ஒரிடத்தில் சிறுத்தைகள் நடமாடுவதைக் கண்டால் அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது நல்லது. நாம் அவற்றை தொந்தரவு செய்தால் ஒழிய அவை நம்மை அநாவசியமாகத் தாக்கவருவதில்லை என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.
நான் பார்த்துக் கொண்டிருந்த சிறுத்தைக்கு வருவொம். அதைக் கண்ட மகிழ்ச்சியில் ஓரிரு கணங்கள் திளைத்த பின் உடனடியாக எனது காமிராவை எடுத்து அதைப் படமெடுக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு அழகு. அந்த மாலை வேளையில் வீசிய சூரியக்கதிர்கள் அதன் உடலில் தெரித்து, பொன்னிற மேனியை ஜொலிக்கச் செய்தது.
அவ்வேளையில் நாங்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் இருந்த மரத்தின் மேலே ஒரு நீலகிரி கருமந்தி தாவிக் குதித்து விக்குவது போன்ற உரத்த குரலெழுப்பியது. சிறுத்தையைக் கண்டு எழுப்பும் எச்சரிக்கைக் ஒலி அது. மெதுவாகத் திரும்பிய சிறுத்தை எங்களைக் கண்டது. கொடிய மிருகங்கள் வெகு அருகில் நின்று கொண்டிருப்பதைக் பார்த்தவுடன் அதன் கண்களில் குழப்பம், பயம், மிரட்சி.
கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பிப் பார்க்காமல் காட்டுக்குள் ஓடியது அந்தச் சிறுத்தை. ஆம், எங்களைக் கண்டு தலைதெறிக்க ஓடியது அந்தச் சிறுத்தை!
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 26th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
நாம் வாழ, நம் யானைகளும் வாழ…
ஒரு நாள் காலை நண்பர் தொலைபேசியில் அழைத்து அய்யர்பாடிகாரனும், சின்ன மோனிகாவும் வனப்பகுதியின் ஓரமாக தேயிலைத் தோட்டத்தின் அருகில் இருப்பதாகச் சொன்னார். கூடவே ஒரு ஆச்சர்யமான சங்கதியையும் சொன்னார். அவன் படுத்து உறங்கிக் கொண்டிருகிறான், அவள் நின்று கொண்டிருக்கிறாள் என. வியப்பு மேலிட உடனே அந்த இடத்திற்கு விரைந்தேன். அவர் சொன்னபடியேதான் இருந்தது நான் இதுவரை கண்டிறாத அந்தக் காட்சி. சற்று நேரத்தில் அவளும் மெதுவாக தனது கால்களை மடக்கி பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். இரவெங்கும் சுற்றியலைந்து உணவு தேடும் போதும், இடம்பெயரும் போதும் வழியெங்கும் மனிதர்களால் ஓட ஓட விரட்டப்பட்டதாலோ என்னவோ பகலில் அவர்களிருவரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஆள் அரவமற்ற அந்த இடத்தில் அவர்கள் இருவரும் நிம்மதியாகத் தூங்குவதைக் கண்டு எங்களுக்கு நிம்மதியாக இருந்தது.
ஒவ்வொரு யானையையும் அடையாளம் கண்டு பெயரிடுவது ஆராய்ச்சியாளர்களின் இயல்பு அய்யர்பாடிக்காரனையும், சின்ன மோனிகாவையும் போல வால்பாறை பகுதியில் சுமார் 80-100 யானைகள் இருக்கிறார்கள். வால்பாறையைச் சுற்றிலும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது காலகாலமாக நிகழ்ந்து வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய மனிதர்களாகிய நாம் யானைகளின் வழித்தடங்களில் (elephant corridors) வீடு கட்டி வசிக்க ஆரம்பித்தோம். ஆகவே, இந்த வால்பாறை பகுதி மனிதர்களுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் யானை முதலிய காட்டுயிர்களுக்கும் தான். தற்போது சுமார் 220 சதுர கி.மீ பரப்பில் அமைந்த, தேயிலைத் தோட்டங்களும், துண்டாக்கப்பட்ட மழைக்காட்டுச் சோலைகளும் உள்ள இப்பகுதியில் மக்கள் தொகை சுமார் ஒரு இலட்சம். ஆகவே மனித அடர்த்தி மிகுந்த இடத்தில் யானைகளுடன் மனிதர்களோ, மனிதர்களுடன் யானைகளோ எதிர்கொள்ள நேரிடுவது பல வேளைகளில் தவிர்க்க முடியாது. இதன் விளைவுகளில் முதலாவது பொருட்சேதம், இரண்டாவது உயிர்ச்சேதம். அதாவது, ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, பருப்பு முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால், அக்கட்டிங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளின் அருகாமையில் இருப்பின் அங்கும் சில வீடுகளிலும் சேதம் ஏற்படுகிறது. இந்த பொருட்சேதத்தை பல வழிகளில் ஈடுகட்ட முடியும். ஆனால் மனித உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது. இதைத் தவிர்க்க இப்பகுதியில் வனத்துறையும், யானை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
முதலில் மனித உயிரிழப்பு ஏன், எப்படி, எப்போது, எங்கு ஏற்படுகிறது என்பது ஆராயப்பட்டது. இப்பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக யானைகளின் இடம்பெயர்வையும், பண்புகளையும் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் Dr. ஆனந்தகுமாரும் அவரது குழுவினரும் இதற்கான விடைகளைக் கண்டறிந்தனர். சுற்றிலும் வனப்பகுதியைக் கொண்ட, மனிதர்களின் அடர்த்தி மிகுந்த வால்பாறை பகுதியில் ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானைகளும் மனிதர்களும் எதிர்பாராவிதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும், சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் முக்கிய காரணம். டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. ஆகவே வனத்துறைனரின் உதவியுடன் வால்பாறையில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. யானைகளின் இருப்பிடம், முன்கூட்டியே பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பப்பட்டது, யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றி வாழும் (சுமார் 2 கீ.மீ. சுற்றளவில்) பொதுமக்களுக்கு அவர்களுடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டது, அப்பகுதியின் மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. இவ்விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே நாளடைவில் செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர். 2011ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்ட இத்திட்டங்களினால் மனித உயிரிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதிலும் 2013ம் ஆண்டு எந்த ஒரு மனித உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வினைப் பற்றிய விரிவான கட்டுரையை இங்கே காணலாம்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல கால காலமாக இருந்து வரும் ஒன்று. இதை நம் இலக்கியங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் நாம் அறியலாம். சமீப காலமாக இந்த எதிர்கொள்ளல் அதிகரித்திருப்பதென்னவோ உண்மைதான். அதற்கான காரணங்களில் முக்கியமானவை மக்கள் தொகைப் பெருக்கம், காடழிப்பு, கள்ளவேட்டை, விவசாய முறைகளில் மாற்றம் முதலியவை தான் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அழிந்து வரும் பேருயிர் யானை. அதைப் பாதுகாப்பது நம் கடமை. யானைகளால் ஏற்படும் சேதங்களால் பாதிக்கப்படுவோர் அவற்றை எதிரியாகப் பாவிப்பது இயல்புதான். ஆகவே இதுபோன்ற மனித-யானை எதிர்கொள்ளலால் ஏற்படும் விளைவுகளை, வால்பாறையில் செயல்படுத்தப்பட்டது போன்ற அறிவியல் ஆய்வுத் தரவுகளைக் கொண்டு கையாளவும், சமாளிக்கவும் வேண்டும். பாதிப்பினை தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். வால்பாறையில் பின்பற்றப்படும் செயல்திட்டங்கள் அனைத்தும் மனிதர்-யானை எதிர்கொள்ளல் இருக்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும் என நினைப்பதும் தவறு. இடத்திற்குத் தகுந்தவாறு எதிர்கொள்ளாலைத் தணிக்க, சரியான திட்டங்களை அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டும். இது வனத்துறையின் பணிமட்டுமே அல்ல. எல்லா அரசுத்துறைகளும், ஆராய்ச்சியாளர்களும், பத்திரிக்கையாளர்களும், குறிப்பாக பொதுமக்களும் இவற்றில் பங்கு பெறவேண்டும். அப்போதுதான் எந்த ஒரு செயல் திட்டமும் நீண்ட காலம் நீடித்துப் பலன் தரும். இதுவே யானைகள் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். இங்கே நாமும் நிம்மதியாக வாழ வேண்டும், யானைகளும் வாழ வேண்டும்.
வால்பாறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரிவாகக் காண கீழ்கண்ட வீடியோவைக் காண்க
யானைகளைப் பற்றி மேலும் அறிய காண்க:
யானை அழியும் பேருயிர் எழுதியவர் ச. முகமது அலி
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 12th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
2013 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்
மீன்பிடிக்கும் கூழைக்கடாக்கள்: சாம்பல் கூழைக்கடாக்கள் கூட்டமாக சேர்ந்து, ஒரு அரை வளைய அமைப்பை ஏற்படுத்தி, தமது இறக்கையை மடித்துத் தூக்கி, மெல்ல நீந்தி, நீரின் மேற்பரப்பில் இருக்கும் மீன்களை அணைத்து ஆழம் குறைந்த பகுதிக்கு தள்ளிச் செல்லும். தகுந்த இடம் பார்த்து, சுற்றி வளைத்து தடாலெனப் பாய்ந்து தமது பை போன்ற கீழ்அலகினால் மீன்களைப் பிடித்துண்ணும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும்.
*****
நாட்டுக்குரங்கு தம்பதியினர்: நாட்டுக்குரங்கு (Bonnet macaque) சோடி ஒன்று கலவி மேற்கொள்ளும் காட்சி. இந்தக் காட்சியைப் படமெடுத்துக் கொண்டிருந்த போது ஆண் குரங்கு என்னைப் பார்த்து கோபப்படுவது போல் வாயைப் பிளந்து பல்லைக் காட்டியது. உடனே அந்த இடத்தை விட்டு அகன்று விட்டேன். பெண் நாட்டுக்குரங்கின் கருத்தரிக்கும் (estrous cycle) காலம் ஓரிரு நாட்களே. ஆகவே குறுகிய காலத்திற்குள் ஆண் துணையைத் தேடி இணைசேர வேண்டும். அக்காலகட்டத்தில் ஒரிரு முறைதான் கலவி கொள்ளும். ஆணும் ஒரே கலவியில் தனது விந்தணுவை அவளது உடலில் செலுத்தும் (Single mount Ejaculation). நாட்டுக்குரங்கின் சராசரி ஆயுட்காலம் 30. பெண்ணானது சுமார் 27 வயது வரை கருத்தரிக்கும். இந்தக் குரங்குகளுக்கு உணவு கொடுத்தல் தவறு. நாம் கொடுப்பதாலேயே, அவை மீண்டும் மீண்டும் நம்மிடம் உணவினை எதிர்பார்க்கின்றன. (Thanks Dr. Ananda kumar for inputs)
*****
பாறு: இந்திய பாறுக்கழுகு (Indian Vulture Gyps indicus) பிணந்திண்ணிக்கழுகு என அறியப்படுவவை. ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் வானில் நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்தன. இறந்து போன கால்நடைகளை உண்டு வாழ்பவை. ஆனால் நாம் கால்நடைகளுக்குக் போடும் ஊசி மருந்தான டைக்லோபீனாக் (Diclofenac) இவற்றிற்கு நஞ்சாகியதால், இன்று அழிவின் விளிம்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முதுமலை வனப்பகுதிகளில் மட்டும் இப்போது ஒரு சிறிய கூட்டம் எஞ்சியுள்ளது.
*****
வரையாடு: தமிழ்நாட்டின் மாநில விலங்கு. ஓரிடவாழ்வி, அதாவது உலகில் வேறெங்கும் இன்றி, இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் ஒர் உயிரினம். உயரமான மலைப்பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் தென்படும். எண்ணிக்கையில் சுமார் 2000க்கும் குறைவாகவே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அருகிவரும் வாழிடம், கள்ள வேட்டை, அவை வாழும் புல்வெளிப் பகுதிகளில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்ட களைத்தாவரங்களின் பெருக்கம், சாலைகளாலும், ஏனைய நீர்த்தேக்கங்கள், அணைகள் போன்ற கட்டுமானங்களாலும் துண்டாக்கப்படும் வாழிடங்கள் முதலிய காரணங்களால் நாளுக்கு நாள் அருகி வருகின்றன.
*****
குவளைக்குள் சிலந்தி: அது ஒரு அதிகாலை நேரம், அடுப்படிக்குள் நுழைந்து காபி போடுவதற்கு தயாரான வேளையில், குவளையை எடுக்கச் சென்றபோது அதனுள் ஒரு சிலந்தி. உற்று நோக்கிய போது அது எதையோ மும்முரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கு அன்றைய காலை உணவு ஒர் கரப்பான்பூச்சி. பெரிய சிலந்திகளைப் பார்த்தால் சிலர் பயப்படுவார்கள், இன்னும் சிலர் அடித்தே கொன்று விடுவார்கள். ஆனால் சிலந்திகள் நமக்கு நன்மை செய்யும் உயிரினம். கரப்பான் போன்ற பூச்சிகளைத் தின்று அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன. என் வீட்டில் எனக்குத் தெரிந்து இது போன்ற பெரிய 6 சிலந்திகள் என்னுடன் என் வீட்டில் வாழ்கின்றன!
*****
பழந்திண்ணி வவ்வால்: புளியமரத்தின் கிளையினை தன் கால்களால் பற்றி, தனது இறக்கையினால் உடலை போர்வை போல் போர்த்தி, தலைகீழாகத் தொங்கிக்கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஒரு பழந்திண்ணி வவ்வால். இவை பறவை இனத்தைச் சேர்ந்தவை அல்ல. நம்மைப் போல் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி இனம். இவற்றின் இறக்கை மாறுபாடடைந்த கை. விரல்களுக்கிடையில் உள்ள மெல்லிய தோல் தான் இறக்கையாகிறது. காற்றில் பறந்து செல்வதற்கேற்ப பரிணமித்துள்ள வவ்வால் இனம் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.
*****
யானைகளும் செங்கல் சூளைகளும்: கோவையில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் எடுக்கப்பட்ட படம். படத்திலுள்ள கோபுரங்கள் யாவும் ஒவ்வொரு செங்கல் சூளை என்பதை அறியவும். சரி இதற்கும் யானைகளுக்கும் என்ன சம்பந்தம்? செங்கல் சூளைகளில் தீ மூட்ட பனைமரங்கள் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. அப்பனைமரத்தின் உள்ளிருக்கும் மென்மையான மாவு போன்ற பகுதியைச் சுவைப்பதற்காக யானைகள் அப்பகுதிக்கு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரக் காடுகளின் ஓரத்தில், அதுவும் யானைகளின் வழித்தடங்களில் கணக்கில்லாமல் செங்கல் சூளைகளை தொடங்கலாம். ஆனால் யானைகள் அங்கே வரக்கூடாது. வந்தால் விரட்டி அடிப்போம்.
*****
சாலையில் சிங்கவால் குரங்குகள்: சுற்றிலும் தேயிலை நடுவில் தீவு போல் ஒரு சிறிய காட்டுப்பகுதி. அதில் சுமார் 100 சிங்கவால் குரங்குகள் (சோலை மந்தி). இதுதான் வால்பாறையில் உள்ள புதுத்தோட்டம் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் அரிய வகை குரங்கினம் இது. அடர்ந்த, சீரழிக்கப்படாத காட்டில் இவை மர விதானங்களில் மட்டுமே வசிக்கும். ஆனால் இந்த தீவுக் காட்டில் போதிய இடமும், தடையின்றி இடம்பெயர தொடர்ந்த மரவிதானமும் இல்லாத காரணத்தால் இவை தரைக்கு வந்து விட்டன. அந்தச் சிறிய காட்டின் குறுக்கே நாளுக்கு நாள் அகலப்படுத்தப்படும் சாலை. சீறி வரும் வாகனங்கள், பொறுப்பின்றி இக்குரங்குகளுக்கு உணவிடும் விவரமறியாத சுற்றுலாவினராலும் ஆண்டிற்கு ஓன்றிரண்டு சாலையில் அடிபட்டு இறக்கின்றன.
*****
பிளாஸ்டிக் குப்பைகள், கட்டிடங்கள், பறவைகள் – இதுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். பல நாட்களாக தினசரிகளில் படித்தும், நண்பர்கள் வாயிலாகவும் அறிந்து இருந்தாலும் இந்த ஆண்டுதான் அங்கு சென்று பறவைகளை கண்டுகளிக்க வாய்ப்பு அமைந்தது. வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டிகளையும், நீல தாழை கோழிகளையும் (படத்தில் இருக்கும் பறவை)அதிக அளவில் பார்க்க முடிந்தது. இந்த இடம் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. ஏரியின் மத்தியில் பிளாஸ்டிக் குப்பை மேடு வேறு. அசுத்தமான இடத்தில் இந்த பறவைகளைப் பார்க்க பாவமாக இருந்தது.
*****
மனிதன்-சிறுத்தை எதிர்கொள்ளல்: உத்தராஞ்சல் சென்றிருந்த போது அங்குள்ள ஒரு வனப்பாதையில் பார்த்தது. மனிதனின் கால்தடமும், சிறுத்தையின் கால்தடமும் எதிரெதிரே அமைந்திருந்தது. சிறுத்தைகள் வேண்டுமென்றே (சில சினிமாக்களிலும், பத்திரிக்கைகளிலும் சித்தரிப்பது போல) மனிதர்களைத் தாக்குவதில்லை. அவை நாம் இருக்கும் இடத்தின் அருகில் இருந்தாலே அவற்றிற்கும் நமக்கும் மோதல் எனக் கொள்ளலாகாது. அவை பெரும்பாலும் மனிதர்களை விட்டு விலகிச் செல்லவே விரும்புகின்றன. அதை நினைவுபடுத்தும் வண்ணம் இந்த படம் அமைந்ததில் மகிழ்ச்சி.
*****
சிவப்பு நத்தை: Indrella ampulla என அறிவியல் அறிஞர்களால் அழைக்கப்படும் இந்த அழகான சிவப்பு நத்தையை பார்க்க வேண்டுமென்பது எனது நெடுநாளைய ஆசை. இந்த ஆண்டுதான் அது நிறைவேறியது. இரவில் வண்டியில் சென்ற போது முன் சென்ற எங்களது ஒரு வண்டி சட்டென நின்றது. இறங்கிச் சென்று பார்த்த போது இந்த நத்தை சாலையைக் கடந்து மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. எதிரே வாகனம் வரும் அறிகுறி தெரிந்தவுடன் அதை எடுத்து சாலையின் (அது செல்லும் திசையில்) எதிர்புறம் கொண்டு விட்டோம். அப்படி என்ன சிறப்பு இந்த நத்தைக்கு? மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் அரிய வகை நத்தை இது. ஈரப்பதம் மிக்க காடுகளிலேயே பார்க்க முடியும்.
******
ஒரு வாரம் 200 பறவை வகைகள்: பறவைகளைக் காண அன்மையில் உத்தராஞ்சலில் (தற்போதைய உத்தரகண்ட்) இருக்கும் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்திற்கும் அதனை அடுத்த வனப்பகுதிகளுக்கும் சென்றிருந்தேன். ஒரு வார காலத்தில் சுமார் 200 வகையான பறவைகளை கண்டு களித்தோம். அதில் ஒன்று தான் இந்த கருந்தொண்டை பட்டாணிக்குருவி (Black-throated Tit). (Thanks Harsha and Ritesh for this memorable birding trip).