UYIRI

Nature writing in Tamil

காளிதாசின் வெண்வால் மஞ்சள்சிட்டு

leave a comment »

திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் அங்காங்கே அழகான வெட்ட வெளிகளும், முட்புதர் காடுகளும் தென்பட்டன. மே மாத வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வறண்ட நிலப்பகுதி அது. வெட்ட வெளிகளில் புற்கள் காய்ந்து போய் ஆங்காங்கே வெள்வேல் மரங்களும், குடைசீத்த மரங்களும் பரவியிருந்தன. இது போன்ற இயற்கையான வாழிடங்களை வளமற்ற இடங்களாக நம்மில் பலர் கருதுவதுண்டு. ஆனால் இந்த இடங்கள் பல வகையான உயிரினங்களுக்குச் சொந்தமானவை. இவ்வாழிடங்களில் மட்டுமே தென்படக்கூடிய சில வகையான பறவைகளும் உண்டு. சின்னக் கீச்சான், சாம்பல் சிலம்பன், கல்கவுதாரிகள், வானம்பாடிகள், காடைகள் வலசை வரும் சாம்பல் கிச்சான், பூனைப்பருந்துகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். பறவை ஆர்வலர்கள் பொதுவாக இது போன்ற பகுதிகளில் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஒரு சில மணி நேரங்களில் பல வகையான பறவைகளைக் காணக்கூடிய இடங்களுக்கே அடிக்கடிச் செல்வார்கள். இதனால் தமிழ் நாட்டில் உள்ள பல வறண்ட நிலப் வாழிடப்பகுதிகளில் எந்த வகையான பறவைகள் இருக்கின்றன, எவை வலசை வருகின்றன என்பதைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் கூட நம்மிடம் இல்லை. இந்தக் குறையை கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்த்து வைத்துக் கொண்டிருந்தவர் திரு சண்முகம் காளிதாஸ்.

திருப்பூர் மாவட்டத்தில் இது போன்ற பல பரந்த வறண்ட நிலப் பகுதிகளில் உள்ள பறவைகளை ஆவணப்படுத்தியதில் காளிதாசின் பங்கு போற்றுதலுக்குரியது. அவருடன் சேர்ந்து ஒரு நாள் இந்தப் பகுதிகளில் பறவைகளை கண்டுகளிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், மே மாதம் 2ம் தேதி காலை அருளகம் அமைப்பைச் சேர்ந்த நண்பர் சு. பாரதிதாசன் கைபேசியில் அழைத்து காளிதாஸ் தனது உயிரை மாய்த்துக் கொண்ட துயரமான செய்தியைச் சொன்னார். தாராபுரத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காளிதாசுடன் சேர்ந்து பயணிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அங்கே அவரது அந்திமச் சடங்கிற்கு செல்வேன் என கனவிலும் நினைக்கவில்லை.

Shanmugam Kalidass eBird profile

கோவையில் 2015ல் நடைபெற்ற இரண்டாம் தமிழ் பறவையாளர்கள் சந்திப்பில் தான் ச. காளிதாஸ் எனக்கு அறிமுகமானார். அவரை கடைசியாகச் சந்தித்ததும் 2017ல் ஏலகிரியில் நடந்த தமிழ் பறவையாளர்கள் சந்திப்பில்தான். இடையில் ஓரிரு முறை தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமாகவும்தான் பேசிக்கொண்டோம். நெருங்கிய பழக்கம் ஏதும் இல்லையென்றாலும் eBirdல் அவரது பறவைப் பட்டியல்களை தொடர்ந்து பார்த்து விடுவேன். அவரும் தினமும் பறவைகளைப் பார்த்து பட்டியலிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

Tamil Birders Meet 2017, Yelagiri. Shanmugam Kalidass (extreme left). Photo. AMSA.

கடைசியாக அவரை ஏலகிரியில் சந்தித்தபோது திருப்பூர் மாவட்டத்தில் பறவை நோக்கல் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பறவை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து பறவை கணக்கெடுப்புகள் நடத்த வேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். எனினும் பேசியது பேசியதாகவே இருந்துவிட்டது, அதன் பிறகு இது குறித்து அவரை நான் தொடர்பு கொள்ளவேயில்லை. அதை நினைத்து இப்போது வருந்திக் கொண்டிருக்கிறேன்.

இயற்கை ஆர்வலர்கள் சு. பாரதிதாசன், அம்சா முதலியோரின் ஊக்குவிப்பில் பறவை நோக்கலில் தொடங்கி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பறவைகள் குறித்த கருத்தரங்கங்களை நடத்துதல், பறவைகள் கணக்கெடுப்பில் பங்கெடுத்தல் என இயற்கைப் பாதுகாப்பில் கரிசனம் கொண்டவராக உருவாகி வந்தவர் காளிதாஸ். அவர் பறவைகளைப் பார்த்து ரசித்து பட்டியலிடுவதை மட்டுமே செய்து கொண்டிருக்கவில்லை. இப்பகுதிகளில் உள்ள பலருக்கும் பறவை நோக்கலை அறிமுகப்படுத்தி அவர்களை தொடர்ந்து பறவைகளைப் பார்த்து பதிவு செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் நடைபெற்று வரும் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பிறகாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்ததுடன், பொருட்செலவிட்டு பொதுப் பறவைகளின் படங்களைக் கொண்ட விளக்கத்தாள்களையும் அவர்களுக்கு அளித்து வந்துள்ளார். இத்தனைக்கும் இவர் வசதி படைத்த குடும்பத்தையோ, அறிவியல் பின்புலமுள்ள பட்டங்களையோ பெற்றிருக்கவில்லை. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவரான இவர், தனியார் வருமான வரி தணிக்கையார் அலுவலகத்தில் கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பின் போதும் திருப்பூர் பகுதிகளில் புதிய இடங்களுக்குச் சென்று அதாவது இதுவரை பொதுப்பறவைகளைக்கூட பார்த்து பதிவு செய்யப்படாத இடங்களுக்கு சாலை வழி பயணம் செய்து அவற்றை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இதை அவர் 2016ல் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையில் தனது அனுபவப் பகிர்வில் தெரிவித்துள்ளார்.

2016 பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் காளிதாசின் அனுபவப் பகிர்வு

இப்படிப்பட்ட சாலை வழி பறவைக் கணக்கெடுப்பில் திருப்பூர் மாவட்டத்திற்கான பல புதிய பறவைகளை பதிவுசெய்துள்ளார். அப்படிப்பட்ட பதிவுகளில் அருமையானது காங்க்கேயத்திற்கு அருகே அவர் கண்ட வெண்வால் மஞ்சள்சிட்டு (White-tailed Iora). தொடர்பற்ற பரவலைக் கொண்ட இப்பறவை இந்தியாவின் சில வட மாநிலங்களிலும் நடுவில் எங்கும் பதிவுசெய்யப்படாமல் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கை முதலிய பகுதிகளில் திட்டுத்திட்டாக பரவி காணப்படுகின்றன. வட தமிழ்நாட்டிலும் அதன் பின் தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில் இவற்றிற்கு இடைபட்ட நிலப்பகுதியான திருப்பூர் பகுதியில் காளிதாசால் பதிவுசெய்யப்பட்டது பறவையாலர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 

திருப்பூர் மாவட்டத்தில் காளிதாஸ் கண்ட வெண்வால் மஞ்ச்ள்சிட்டு White-tailed Iora (Marshall’s Iora) Aegithina nigrolutea

காளிதாஸ் இருந்திருந்தால் திருப்பூர் பகுதியில் இன்னும் பல பறவைகளைப் பார்த்து பதிவு செய்திருப்பார், இன்னும் பல பறவை ஆர்வலர்களை உருவாக்கியிருப்பார். ஒரு காலத்தில் இங்குள்ள பரந்த வெட்ட வெளிகளில் கானமயில்களும், வெளிமான்களும் திரிந்து கொண்டு இருந்திருக்கக்கூடும். ஆனால் கானமயில்களுடன் சேர்ந்து காளிதாசும் இப்பொது இல்லாமல் போனது பரிதாபத்திற்குரியதே. காளிதாஸ்…நீங்கள் இல்லாமல் போனது உங்களது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டும் இழப்பல்ல திருப்பூர் மாவட்டப் பறவைகளுக்கும் தான்.


உயிர் இதழில் (மே-ஜூன் 2018, பக்கம் 19-20) வெளியான அஞ்சலியின் மறு பதிப்பு.

நாளை (2 மே 2019) காளிதாசின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.

Written by P Jeganathan

May 1, 2019 at 12:35 pm

Posted in Birds

Tagged with , ,

அரை நாளில் ஐயாயிரம்

with 2 comments

சென்ற ஆண்டு நடந்து முடிந்த கோவை புத்தகத் திருவிழாவிற்கு கடைசி நாளன்று (20-29 ஜுலை 2018) சென்றிருந்தேன். போகவோ கூடாது என நினைத்திருந்போதிலும், வேறு ஒரு வேலையாக கோவைக்கு நண்பர் செலவகணேசுடன் சென்றிருந்த போது அவரும், “வாங்க சார் சும்மா உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார். அது எப்படி பார்த்துவிட்டு சும்மா வரமுடியும்? உள்ளே சென்றால் இருக்கும் காசெல்லாம் புத்தகமாகிவிடும் என்பதால் தானே புத்தகத் திருவிழாவுக்கே போகாமல் இருப்பது. வாங்கி சேர்த்த புத்தகங்களை வைக்கவே வீட்டில் இடமில்லை. பல புத்தகங்கள் பாதி படித்தும், படிக்காமலும் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் முழுவதும் படித்து முடித்து விட்டு வாங்கலாம் என நினைத்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கு செல்வதே இல்லை. எனினும் அவ்வப்போது இணையம் வழியாக ஓரிரு புத்தகங்களை வாங்குவதும் உண்டு. ஆனால் அப்படி வாங்குவதற்கும் புத்தகத் திருவிழாவிற்குப் போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டல்லவா. ஒரு வழியாக எனக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கொடிசியா வளாகத்தில் நுழைந்தேன். பர்சில் உள்ள பணத்திற்கு மட்டும் புத்தகம் வாங்கலாம், கையில் பை எடுத்துச் செல்லக் கூடாது, அங்கு ஒருவேளை பிளாஸ்டிக் பையில் புத்தகத்தைக் கொடுத்தால் அந்தக் கடையில் வாங்கக்கூடாது, ஒரு மணி நேரத்திற்கும் மேல் உள்ளே இருக்கக் கூடாது இவையே அந்தக் கட்டுப்பாடுகள்.

ஆனால் நடந்ததோ தலைகிழ். முதலாவது கடையிலேயே இருந்த பாதி பணமும் தீர்ந்து விட்டது (சுமார் ஐநூறு ரூபாய்கள்), இரண்டாவது கடையில் புத்தகங்களை வாங்கிய பின் பணம் போதாமல் வங்கி அட்டையை நீட்டியபோது அந்த வசதி பெரிய ஸ்டால்களில் மட்டும்தான் உள்ளது என்றனர். அவர்களே வெளியே மொபைல் ஏடிஎம் இருக்கிறது அங்கே பணம் எடுத்துக் கொள்ளலாம் என யோசனை சொன்னார்கள். வாங்கிய புத்தகங்களை அப்படியே வைத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்து தேவைக்கு அதிகமாகவே பணத்தை எடுத்துக் கொண்டு உள்ளே மீண்டும் நுழைந்தோம். வாயிலில் “இனி ஒரு விதி செய்வோம்” என பாரதியின் முகத்துடன் அச்சடிக்கப்பட்ட துணிப்பையை விற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் ஆளுக்கு இரண்டை வாங்கி மாட்டிக்கொண்டு தெம்புடன் உள்ளே நுழைந்தோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியின் அளவெல்லாம் கிடையாது என்றாலும், நிறைய கடைகள் இருந்தன. புத்தகங்கள் மட்டும் இல்லாமல், எழுதுபொருட்கள், மின்னூல், குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்கள் கொண்ட கடைகளும் இருந்தன. பாதி விலைக்கும், இரண்டு எடுத்தால் ஒன்று இலவசம் எனும் வகையில் பழைய புத்தகங்களும் சில கடைகளில் கிடைத்தன. வரிசையாக இருந்த பதிப்பக, புத்தகக் கடைகள் மட்டுமல்லாமல், ஓரங்களில் ஒரே ஒரு மேசையை மட்டும் போட்டு சிறிய, புதிய பதிப்பகத்தார்களும் அவர்களது புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்கான நூல்களும், பதிப்பகங்களும் 2-3 இருந்தது மகிழ்ச்சி அளித்தது. இயற்கை சார்ந்த நூல்களும், பதிப்பகங்களும் இருந்தன. Coimbatore Nature Society யின் Birds of Coimbatore நூலை அவர்களது கடையில் பார்க்க முடிந்தது, பூவுலகின் நண்பர்கள், தும்பி போன்ற பதிப்பகங்களும் இருந்தன. சென்றுவந்த கடைகளில் நான் கவனித்த வரை பிளாஸ்டிக் பையை தரவில்லை.

நான் வாங்குவது பெரும்பாலும் இயற்கை சார்ந்த நூல்களையே, ஆகவே எல்லா கடைகளிலும் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும் ஒரு சிலவற்றைத் தவிர இருந்த எல்லாக் கடைக்குள்ளும் சென்று பார்த்துவிட்டுத்தான் வந்தேன். கடைசிநாள், அதுவும் ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேலையாக இருந்தாலும் கூட்டம் அப்படி ஒன்றும் இல்லை. ஆனால், நேரம் ஆக ஆக கூட்டம் சற்றே பெருகி வந்ததைக் காண முடிந்தது.

அங்கிருந்த பாதி கடைகளை தாண்டியவுடன் கையில் இருந்த இரண்டு பைகளும் கணத்தது. கூடியவரை புத்தகங்களை திணித்தாகிவிட்டது. இதற்கு மேல் வைத்தல் பை கிழிந்துவிடும் எனும் நிலையில் வேறு வழியில்லாமல் வெளியே வந்து புத்தகங்களை வண்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு மீண்டும் ஒரே ஒரு பையுடன் உள்ளே நுழைந்தோம். அந்தப் பையும் பாதி நிறைந்தவுடன் கடைகளும் முடிந்துவிட்டது. பின்னர்தான் பசித்தது. அங்கேயே பல உணவுக் கடைகள் இருந்தன. இரண்டு சப்பாத்தியை வாங்கி அமர்ந்து கொண்டே எதிரே மேடையில் ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தோம். சற்று தூரமாக இருந்ததால் சரியாக காதில் விழவில்லை, ஆனால் நாஞ்சில் நாடன் மேடையில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அவரது நவம் எனும் புத்தகத்தை வாங்கியிருந்தோம். கூட்டம் முடிந்தவுடன் அவரிடம் சென்று அதில் ஆட்டோகிராப் வாங்கலாம் என நினைத்தோம். ஆனால் அவர் கிழிறங்கி வந்தபோது அவரைச்சுற்றி சிறு கூட்டம் திரண்டிருந்தது. அருகில் செல்ல கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது, எனவே வெளியே வந்து விட்டோம்.

நுழைவாயிலில் விசித்திரமாக உடையணிந்த இருவர் நின்றிருந்தார்கள். ஒருவரின் உடையில் பல செடிகள் இருந்தன, இன்னொருவர் உடையில் பிளாஸ்டிக் பைகள் தொங்கிகொண்டிருந்தது. பின்னால் இருந்து பார்த்தபோதே பார்த்தவுடன் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்தது. அவர்களின் அருகில் சென்று பேச்சு கொடுத்தோம். செடி உடைகாரர் பசுமை செல்வா, பிளாஸ்டிக் உடைக்காரர் இராமசாமி. இருவரும் திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் பணிபுரிகின்றனர். இது போன்ற கூட்டம் கூடும் இடங்களில் மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாள் முழுவதும் இந்த உடைகளையும், கையில் பதாகைகளையும் ஏந்தி நிற்கின்றனர். அவர்களது சேவையை பாராட்டிவிட்டு ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்தவுடன் கணக்குப் பார்த்ததில் சுமார் ஐயாயிரம் ருபாய் காலியாது தெரிந்தது. அரை நாளில் ஐயாயிரம் கொஞ்சம் அதிகம் தான் எனத் தோன்றியது, நல்ல வேளை கடைசி நாள் அன்று சென்றேன். சிறியதும் பெரியதுமாக 44 புத்தகங்கள் மூன்று பைகளில் இருந்தன. ஞாபகார்த்தத்திற்காக எல்லா புத்தகத்திலும் எனது பெயரையும், வாங்கிய தேதி, இடம் முதலிய விவரங்களை பொறித்த பிறகு சில நூல்களை வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். இந்த முறை எப்படியாவது வாங்கிய எல்லா புத்தகத்தையும் படித்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டு சிறிதாக இருந்த புத்தங்களை எல்லாம் முடிந்த வரை ஒரே இரவில் படித்தும் முடித்தேன். சுமார் 10 புத்தகங்கள் குறிப்பெடுக்கப் பயன்படுபவை எனவே அவற்றை வேண்டும் போது படித்துக்கொள்ளலாம் என தூர வைத்துவிட்டேன். மிச்சமிருப்பது சுமார் 15 புத்தகங்கள். இவை அனைத்தையும் படித்த பின் தான் அடுத்த புத்தகத் திருவிழாவிற்குப் போகவேண்டும் என மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

கோவையை அடுத்து ஈரோட்டிலும், இந்த ஆண்டு சென்னையிலும் புத்தகத் திருவிழாக்கள் நடந்து முடிந்து விட்டன. எப்படியோ அதையெல்லாம் கடந்தாகிவிட்டது. அண்மையில் திருப்பூரில் அதுவும் நான் வசிக்கும் வீட்டினருகிலேயே புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக அறிந்தேன் (2019 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 13 வரை). எப்படியாவது இந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. அப்படியே தப்பித்தவறி அந்தப் பக்கம் செல்ல நேரிட்டாலும் பர்சை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுப் போய்விட வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததென்னவோ அதற்கு நேர் எதிர். நண்பர் நல்லசிவன் ஒரு நாள் மாலை அழைத்து கிளம்பி இருங்கள் நான் வந்து புத்தகத் திருவிழாவிற்கு வண்டியில் அழைத்துச் செல்கிறேன் என்றார். எனது நிலைப்பாட்டை சொன்னேன், எதுவும் வாங்க வேண்டாம் அரை மணி நேரத்தில் திரும்பி வந்துவிடலாம் எனச்சொல்லி, நான் பேசி முடிக்கும் முன்னரே அலைபேசியை வைத்து விட்டார். பிறகு என்ன நடந்தது என்பதை ஊகிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐயாயிரம் இல்லை, அரைநாள் இல்லை, என்றாலும் ஓரிரு மணி நேரத்திலேயே கணிசமான ஒரு தொகை புத்தகமாக மாறியது.

இப்போது இன்னும் ஒரு முடிவை எடுத்துள்ளேன், புத்தகத் திருவிழாவுக்கும் போகக்கூடாது, அங்கே சும்மா போய் விட்டு வரலாம் எனும் அழைக்கும் நண்பர்களையும் நம்பக்கூடாது.

Written by P Jeganathan

April 23, 2019 at 9:00 am

Posted in Books

Tagged with

பறவைப் பித்தர்கள்

leave a comment »

பறவை நோக்குவோர் வேடிக்கையானவர்கள். அவர்களுக்கு பல ஆசைகளும், பல வகையான ஆசைகளும், புதிது புதிதாக உதித்துக் கொண்டே இருக்கும். ஒரே ஆண்டில் முடிந்த அளவிற்கு தங்கள் நாட்டில் இருந்து அல்லது மாநிலத்தில் இருந்து அதிக வகையான பறவைகளைப் பார்த்து விட வேண்டும் என்பது பொதுவானது. ஆனால் eBird எனும் இணைய தளம் வந்தவுடன் இவற்றோடு வேறு பல ஆசைகளும் வந்து சேர்ந்து கொண்டது. இதுவரை தங்கள் களப்புத்தகத்தில் மட்டுமே குறிப்புகளை எழுதி வந்தவர்கள் அதிலிருந்து மாறி தாங்கள் பார்க்கும், படமெடுக்கும் பறவைகளை, அவற்றின் எண்ணிக்கைகளை eBird செயலி மூலம் பதிவிட ஆரம்பித்தார்கள். இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் பறவைகளின் பரவலும், நிலையையும் அறிந்து கொள்ள முடியும். பறவை நோக்குவோரும் அவர்கள் இந்த ஆண்டு, இந்த மாதம் எத்தனை வகையான பறவைகளை, எங்கெங்கே பார்த்திருக்கிறார்கள் எனும் தகவலை அறிந்து கொள்ள முடியும். இதனால், எதிர் வரும் பறவைப் பயணங்களில் எங்கே எப்போது எந்த வகையான பறவைகளைப் பார்க்கலாம் எனும் தகவல்களைத் திரட்டி சரியான முறையில் திட்டமிடமுடிகிறது.

அவரவர் கற்பனைக்கு ஏற்ப, வசதி வாய்ப்புக்கு ஏற்ப இந்த திட்டமிடலும், பறவை நோக்கும் ஆசைகளும் பலதரப்பட்டவைகளாக இருக்கும். பறவைகள் கணக்கெடுப்பு நாட்களில் அதிக பட்டியல்களை உள்ளிடவேண்டும், நாள் முழுக்க பறவைகளைப் பார்த்து பதிவிட வேண்டும், பல மாவட்டங்களுக்கு சென்று பறவைகளைப் பார்க்க வேண்டும் போன்றவை. இவற்றில் என்னைப் பொறுத்தவரை கிறுக்குத்தனமான ஒரு ஆசை இந்த ஆண்டின் முதல் பறவை நான் பார்த்ததாகத்தான் இருக்க வேண்டும் என நள்ளிரவு 12:00 க்கு எழுந்து பறவைகளை பார்க்கத் தொடங்குவது. பல வேளைகளில் காகமும், மாடப்புறாவும்தான் இருக்கும். ஒழுங்காகத் திட்டமிட்டு இரவாடிப் பறவைகள் இருக்கும் வாழிடத்திற்குச் சென்று காத்திருந்தால் நாள் தொடங்கி சில நிமிடங்களில் நமக்கு நல்வாய்ப்பு அமைந்தால் ஏதாவது ஆந்தைகளை பார்க்கவோ, அவற்றின் குரலைக் கேட்கவோ முடியும், இல்லையெனில் பட்டியலில் பறவைகளே இருக்காது.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு 14-17 ஜனவரியில் நடைபெற்றது. எனக்கும் ஒரு ஆசை வந்தது. வீட்டின் அருகில் ஒரு கோயில் உள்ளது. அங்கே கூகையை (வெண்ணாந்தை) எளிதில் காணலாம். ஆகவே நள்ளிரவு அங்கே சென்று முதல் பறவையாக அதைப் பார்த்துவிடலாம் என திட்டமிட்டேன். பொதுவாக பொங்கல் கொண்டாடுவது தஞ்சை கரந்தையில் உள்ள பெற்றோர்களுடன் தான். பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பும் வீட்டின் மொட்டைமாடியில் இருந்து குடும்பத்தோடு சேர்ந்து செய்வதும் வழக்கம். இந்த கூகை பார்க்கும் திட்டத்தை சொன்னவுடன், ‘இதெல்லாம் வேண்டாத வேலை, ராத்திரி நேரத்துல தெருவுல ஒரே நாயா கெடக்கு, தனியா போற வேலையெல்லாம் வேண்டாம், துரத்த ஆரம்பிக்கும், பனி வேற கொட்டுது, ஆந்தை நீ வருவன்னு என்ன உட்காந்துகிட்டு கெடக்குதா? பேசாம படு” என அம்மா சொன்னாள். மனைவி என்னைப் பார்க்கும் பார்வையிலிருந்தே, ’என்ன விட்டுட்டு நீ மட்டும் தனியா போறியா? எனக் கேட்பது தெரிந்தது. அப்பாவைக் கூப்பிட்டால் உடனே வந்து விடுவார், ஆனால் அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லை. முதல் நாள் இல்லையென்றால் என்ன அடுத்து வரும் நாட்களில் பார்க்கலாம் என, முடிவை மாற்றிக் கொண்டு அம்மா சொன்னது போல் ‘பேசாமல் படுத்தேன்’.

பொங்கல் தினங்களில் பறவைகளை கணக்கெடுப்பது 2015ல் தொடங்கியது. இது ஐந்தாவது ஆண்டு. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள எல்லா பறவை ஆர்வலர்களும் இந்த நான்கு தினங்களில் பறவைகளைப் பார்த்து பதிவிடுவார்கள். இதனால் காலப்போக்கில் இந்த நாட்களில் இப்பகுதிகளில் உள்ள பறவைகளின் பரவல், எண்ணிக்கை, நிலை என்ன என்பதை நாம் கணிக்க முடியும். ஆண்டு தோறும் பறவை ஆர்வலர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே வருவதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனினும் சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை முதலிய மாவட்டங்களில் மட்டுமே ஓரளவிற்கு பறவை நோக்குவோர் உள்ளனர். பெரம்பலூர், நாமக்கல், கரூர், தேனீ போன்ற மாவட்டங்களில் இது வரை நடந்துள்ள கணக்கெடுப்புகளில் மிகக் குறைவான அல்லது ஒருவர் கூட இல்லாதது ஒரு பெரிய குறை. எதிர் வரும் காலங்களில் அங்கு பல கூட்டங்கள், பறவை நோக்கல் உலா போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அருகில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் பறவை ஆர்வலர்களை ஊக்குவிக்க வேண்டும். எனினும் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் எப்படி தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து தரவுகளை சேகரிப்பது? ஒரே வழி நாமே சூறாவளி சுற்றுப் பயணம் தமிழகம் மேற்கொண்டு பறவைகளைப் பார்த்து பட்டியளிடவேண்டியதுதான். இதைத்தான் மூன்று பறவை ஆர்வலர்கள் செய்தார்கள்.

கோவை மாவட்டத்தைத் சேர்ந்த அருள்வேலன் (வங்கி மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்), செல்வகணேஷ் (இவர் பள்ளி ஆசிரியர்), இவர்களுடன் பெங்களூரைச் சேர்ந்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஹரீஷாவும் மூன்றே நாட்களில் (ஜனவரி 14 -16) தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும், தமிழகப் பகுதியில் உள்ள புதுவை, காரைக்காலுக்கும் சென்று பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்துள்ளனர்.

மூன்று நாளில் 33 மாவட்டங்களுக்கு (32 – தமிழ்நாட்டில், புதுச்சேரி&காரைக்கால்) சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பறவைகளைப் பதிவிட்ட மும்மூர்த்திகள் (இடமிருந்து வலமாக) – அருள்வேலன், செல்வகணேஷ், ஹரீஷா.

இதை அறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரும், பறவை ஆர்வலலருமான சுரேந்தர் பூபாலன் நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என யோசித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் போகமுடியாது, ஆகவே அருகில் இருக்கும் பெரிய நீர்நிலைகளுக்கு செல்வது என முடிவு செய்தார். ஒன்றல்ல இரண்டல்ல நான்கு நாட்களில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 40 நீர்நிலைகளுக்கு பயணித்து சென்று அங்குள்ள பறவைகளையும், அந்த நீர்நிலைகளின் நிலையையும் பதிவு செய்துள்ளார்.

பறவைகள் கணக்கெடுப்பில் சுரேந்தர் பூபாலன்

சுரேந்தர் சென்ற நாற்பது ஏரிகளையும் (இள நீலப் புள்ளிகள்) காட்டும் வரைபடம்

புதுக்கோட்டையைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ராஜராஜன் சற்றே புதுமையாக யோசித்திருக்கிறார். பல வகையான பறவைகளை எளிதில் காணக்கூடிய சரணாலம், நீர்நிலைகளுக்குத் தான் பொதுவாக பறவை ஆர்வலர்கள் செல்வார்கள். அப்படியில்லாமல், அவர் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றுகள், புதர் காடு, கடலோரம், சமவெளி ஊர்ப்புறம் என போன்ற பல வகையான வாழிடங்களில் இதுவரை பறவையாளர்கள் பயணிக்காத பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பறவைகளைப் பார்த்து பதிவு செய்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வகையான வாழிடங்களுக்குச் சென்று பறவைகளைப் பதிவு செய்த இராஜராஜன்.

இராஜராஜன் தான் பயணித்த அனுபவத்தை ஒரு சிறிய படமாக தாயாரித்துள்ளார். அதைக் கிழே காணவும்.

 

இது மட்டுமல்லாமல் மேற்குறிப்பட்ட 3 நாட்களில் 33 மாவட்டங்கள் பறவைப் பயணம் மேற்கொண்ட குழுவினரின் பயணத்தைப் பற்றியும் ஒரு சிறிய படத்தைத் தயாரித்துள்ளார். அதையும் கிழே காணவும்

பல இடங்களுக்கு பயணிப்பது எல்லாராலும் இயலாத காரியம். ஆகவே சேலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள் தமிழகத்திலேயே அதிக நேரம் பறவை நோக்கலில் ஈடுபடுவது என முடிவுசெய்தனர். தாரமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான சுப்ரமணிய சிவா அவரது வீட்டின் அருகில், ஊர்ப்புறங்களில், அருகில் உள்ள நீர்நிலைகளுக்கெல்லாம் சென்று, நான்கு நாட்களில் 47 மணி நேரம் பறவை நோக்கலில் ஈடுபட்டார்.

பறவைகளை நோக்கும் சுப்ரமண்ய சிவா

தனி நபர்கள் மட்டுமல்ல பள்ளிகளும், கல்லூரிகளும் கூட்டாக பறவை நோக்கலில் ஈடுபட்டனர். மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியையான ப்ரியா ராஜேந்திரனும் அவரது மாணவிகளும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பயணித்து பறவைகளை பதிவு செய்துள்ளனர். இராஜபாளையம் ராஜுஸ் கல்லூரியில் பணிபுரியும் விஷ்ணு சங்கரும் அவரது மாணவர்களும், பொள்ளாச்சியில் உள்ள நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லுரியின் தாவரவியல் துறை பேராசிரியயையான லோகமதேவியும் அவரது மாணவர்களும் தங்களது வளாகத்தில் உள்ள பறவைகளைப் பதிவிட்டிருக்கிறார்கள்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பயணத்தில் மதுரையைச் சேர்ந்த இறகுகள் அமைப்பின் இரவீந்தரன் மற்றும் லேடி டோக் கல்லூரி பேராசிரியர் ப்ரியா ராஜேந்திரனும் அவரது மாணவியர்களும்.

 

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் இராஜபாளையம் ராஜுஸ் கல்லூரியில் பணிபுரியும் விஷ்ணு சங்கரும் அவரது மாணவர்களும்.

 

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லுரியின் தாவரவியல் துறை பொள்ளாச்சி பேராசிரியர் லோகமாதேவியும் அவரது மாணவிகளும்.

தமிழ் நாட்டில் இதுவரை பதிவு 525 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இந்த பொங்கல் தினங்களில் மட்டுமே 362 வகையான பறவைகளை பார்த்து பதிவிடப்பட்டுள்ளது. பறவை நோக்கல் ஒரு நல்ல பொழுதுபோக்கு எனினும் இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற்று நாம் பார்த்ததை பொது வெளியில் பதிவிடும் போது, அந்தத் தரவுகள் நாம் பார்த்து ரசிக்கும் பறவைகளுக்கும், அவற்றின் வாழிடங்களை பாதுகாப்பதற்கும் பேருதவி புரியும். இந்த ஆண்டு சுமார் 200 பறவை நோக்குவோர் இந்த கணக்கெடுப்பில் பங்கு பெற்றனர். பொறுப்பான, செயல் திறம்மிக்க இது போன்ற பல பறவைப் பித்தர்கள் இன்னும் பன்மடங்காகப் பெருகவேண்டும் என்பதே என் அவா. பறவைகளைக் காக்க பித்தர்களானால் ஒன்றும் தவறேதும் இல்லைதானே?!

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019 அறிக்கை
https://drive.google.com/file/d/1crK1fhc_Lh1vhabrdz3L4f9ZJY2528mm/view


16 மார்ச் 2019 ஆண்டு தி இந்து தமிழ் திசை நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்.

“பறவைப் பித்தர்கள்  – https://tamil.thehindu.com/general/environment/article26552673.ece”

Written by P Jeganathan

March 22, 2019 at 2:07 pm

கோடைகாலத்தில் மரங்களை நோக்கி…ஒரு பயணம்

with one comment

வேப்பமரம் பூப்பது எப்போது? மழைகாலத்திலா? கோடையிலா? புறவுலகை ஓரளவுக்கு அவதானிப்பவர்கள் கூட இதற்கான விடையை அறிவார்கள். இது தெரியாதவர்களுக்கு வேறு ஒரு கேள்வி. வீட்டில் வேப்பம்பூ ரசம் வைப்பது எப்போது? இப்போது ஓரளவிற்கு விடை தெரிந்திருக்கும். கோடையில் பூக்கும் வேப்பமரத்தில் இருந்து உதிரும் பூக்களை சேகரித்து தூசு தட்டி, காயவைத்து தமிழ்ப் புத்தாண்டு அன்று ரசம் வைப்பார்கள். அதாவது ஏப்ரல் மாதங்களில் இது நிகழும். எப்போதாவது நம் வீட்டின் அருகில் இருக்கும் வேப்ப மரங்களில் பல காலந்தவறி பூத்ததை கவனித்ததுண்டா?

கோடையில் பூக்கும் இன்னோர் மரம் சரக்கொன்றை. இலைகளை எல்லாம் உதிர்த்து மரம் முழுவதும் அழகிய மஞ்சள் நிறப் பூங்கொத்துக்களை சரம் சரமாக பூத்துக் குலுங்குவதைக் கண்டதுண்டா? சுட்டெரிக்கும் வெயிலிலும் நம் கண்களையும், மனதையும் குளிரவைத்துவிடும் அந்தக்காட்சி. எனினும் அண்மைக் காலங்களில் இந்தியாவின் பல இடங்களில் இம்மரம் கோடையில் மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் பூப்பதாக அறிவிப்புகள் வருகின்றன.

இவை மட்டுமல்ல, கொஞ்சம் கவனித்துப் பார்த்திருந்தோமானால் நாம் பொதுவாகக் காணக்கூடிய மரங்களில் பூப்பூக்கும் காலம் ஒரே சீராக இல்லாமல் அவ்வப்போது மாறி வருவதை உணரலாம். இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஆமாம் என்றோ இல்லை என்றோ அறுதியிட்டுக் கூற நம்மிடம் போதிய தரவுகள் இல்லை. அதற்கான தரவுகளை சேகரிக்கும் மக்கள் அறிவியல் திட்டமே சீசன் வாச் (Seasonwatch). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் நாம் அனைவரும் பங்குபெற்று நமது அவதானிப்புகளை தொடர்ந்து பதிவு செய்தால் காலப்போக்கில் போதிய தரவுகள் இல்லாத குறையை தீர்க்க முடியும்.

ஓரிடத்தில் உள்ள மரத்தினை சீசன் வாச் இணைய தளத்தில் (http://www.seasonwatch.in/index.php) பதிவு செய்து வாரா வாரம் அம்மரத்தை அவதானித்து அவற்றின் தளிர், இலை, காய்ந்த இலை, மொட்டு, மலர், காய் பழம் முதலியவை கொஞ்சம் இருக்கிறதா, நிறைய இருக்கிறதா அல்லது சுத்தமாக இல்லையா என்பதை கவனித்து பார்த்ததை உள்ளிடுவதன் மூலம் அந்த மரங்களின் வாழ்வியல் நிகழ்வுகளை (Phenology) தொடர்ந்து பதிவு செய்யமுடியும்.

சீசன் வாச் திட்டத்தில் கணக்கை ஏற்படுத்த, மரங்களைப் பார்த்து நாம் சேகரித்த தகவலை எப்படி உள்ளிடுவது என்பதை விளக்கும் காட்சிப்படங்களை இங்கே காணலாம்

இந்தியா முழுவதும் இதுபோல் சுமார் 25000 மரங்கள் 751 மரம் பார்க்கும் ஆர்வலர்களால் இதுவரை தொடர்ந்து அவதானிக்கப்பட்டு தரவுகள் உள்ளிடப்பட்டுள்ளது. இவற்றில் இந்திய அளவில் 625 பள்ளிகள் பங்குபெற்று வருகின்றன இப்பள்ளி வளாகங்களில் உள்ள மரங்களை இங்குள்ள ஆசிரியர்களும், மாணாக்கர்களும் பல ஆண்டுகளாக அவதானித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பெரும்பாலானவை கேரளாவில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

பருவந்தோறும் மரம் நோக்கும் செயல்பாடு (Tree Quests)

இது தவிர அண்மையில் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் இன்னும் ஒரு செயல்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மரத்தைத் தொடர்ந்து பார்ப்பது மட்டுமல்லாமல் பல மரங்களை ஒரே முறை தற்செயலாகப் பார்த்தும் (casual observation) தகவலைப் பதிவிடலாம். இந்த பருவந்தோறும் மரம் நோக்கும் செயல்பாடு (Tree Quests) இந்தியா முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும். ஓரிரு நாட்களில் இந்தியா முழுவதும் மரங்களைப் பார்த்து சீசன் வாச் செயலி (Seasonwatch App) முலம் பார்த்ததை உள்ளிடுவதன் மூலம் அந்த மரங்களின் வாழ்வியல் நிலையை அறிய முடியும். இது போல பலரும், பல இடங்களில் இருந்து சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து பங்களித்து தரவுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்தால் சில ஆண்டுகளில் மரங்களின் வாழ்வியலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும்.

இந்தத் திட்டங்களில் யார் பங்கு கொள்ளலாம்?

மரங்களை விரும்பும் எவரும் இச்செயல்பாட்டில் பங்குபெறலாம்

எப்படிப் பங்களிப்பது?

சீசன் வாச் செயலியை உங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்யவும். (https://play.google.com/store/apps/details?id=seasonwatch.in). வெளியே சென்று மரங்களைப் பார்த்து தளிர், இலை, காய்ந்த இலை, மொட்டு, மலர், காய் பழம் முதலியவை கொஞ்சம் உள்ளதா, நிறைய உள்ளதா அல்லது எதுவும் இல்லையா என்பதை கவனிக்கவும். செயலியில் உங்களது கணக்கின் உள்ளே சென்று, ‘Casual’ எனும் பக்கத்தில் உங்கள் மரத்தைத் தேர்ந்தெடுத்து, மரம் இருக்குமிடத்தைக் குறித்து, நீங்கள் பார்த்ததை உள்ளிடவும். இதை விளக்கும் சிறிய காணொளிப்பதிவுவை கிழே காண்க:

எந்தெந்த மரங்களை கவனிக்கலாம்?

இந்தப் பட்டியலில் உள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்கவும்
http://www.seasonwatch.in/species.php

மரத்தை அவதானிப்பது எப்படி?

மேலுள்ள பட்டியலில் இருந்து நன்கு வளர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மரத்தில் உள்ளது முதிர்ந்த இலையா(Mature leaves), இளந்தளிரா (கொழுந்தா) (Fresh leaves) என கவனித்துப் பார்க்கவும்.
  • இளந்தளிரோ முதிர்ந்த இலைகளோ இல்லையெனில் ஏதுமில்லை (None) எனக் குறிக்கவும்.
    மரத்தில் பாதிக்கும் குறைவாக (மூன்றில் ஒரு பங்கு – 1/3 அல்லது அதற்கும் குறைவாக)
  • இளந்தளிர்களோ, முதிர்ந்த இலைகளோ இருந்தால் கொஞ்சம் (Few) எனக் குறிக்கவும்.
  • மரத்தில் பாதிக்கும் மேல் இளந்தளிர்களோ, முதிர்ந்த இலைகளோ இருந்தால் நிறைய (Many) எனக் குறிக்கவும்.
  • ஒரு வேளை சரியாக கவனித்துப் பார்க்க முடியாமல் போனால் மட்டுமே தெரியவில்லை (Don’t Know) எனக் குறிக்கவும்.

இது போலவே மொட்டு, மலர், காய், பழம், ஆகியவற்றை கவனித்து தகுந்தவாறு படிவத்தில் குறிக்கவும்.

தகவலை உள்ளிடுவது எப்படி?

சீசன் வாச் செயலியை உங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்யவும். (https://play.google.com/store/apps/details?id=seasonwatch.in). இணைய தளத்தின் மூலமாகவும் உங்களது தகவலை உள்ளிடலாம்.

ஒரு வேளை உங்களிடம் கைபேசி இல்லையெனில் நீங்கள் பார்த்ததை இந்த Excel படிவத்தில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் (sw@seasonwatch.in) அனுப்பவும். உங்களது தகவல்  இணையத்தில் உள்ளிடப்படும்.

இதில் பங்குபெறுவோருக்கு பரிசுகள் உண்டா?

ஆம். அதிக மரங்களைப் பார்த்து தகவலை அளிப்பவருக்கு பரிசு உண்டு. குறைந்தபட்சம் 5 மரங்களைப் பார்த்து தகவலை அளிப்பவர்களின் பெயர்கள் சீசன் வாச் செய்திமடலில் குறிப்பிடப்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்

இந்த செயல்பாடு குறித்த கிழ்க்கண்ட விளம்பரத்தாள்களை அனைவரிடமும் பகிரவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் விவரங்களுக்கு

http://www.seasonwatch.in

தொடர்புக்கு

மின்னஞ்சல் – sw@seasonwatch.in
வாட்ஸ்அப் எண்- +91 734 956 7602

Written by P Jeganathan

March 8, 2019 at 9:40 pm

கருவயிற்று ஆலாவின் வாழ்க்கை

leave a comment »

ஓய்வின்றி சதா சுற்றித் திரிந்து கொண்டு இருப்பவர்களையும், பறக்காவட்டிகளையும் குறிக்கும் விதமாக கிராமங்களில் அவர்களை ‘ஏண்டா இப்படி ஆலாப் பறக்குற?’ என்பார்கள். ஆலாக்கள் பொதுவாக அதிகம் உட்காராமல் நீர்நிலைகளின் மேல் பறந்து கொண்டே இருக்கும். ஒரு வேளை இந்தப் பறவையைப் பார்த்துத்தான் அந்த சொலவடை வந்திருக்குமோ என்னவோ.

ஆற்று ஆலா River Tern. Photo by Ramki Sreenivasan/wildventures.com

மீசை ஆலா Whiskered Tern. Photo: P. Jeganathan

ஆலாக்கள் மிகவும் அழகான பறவைகள். கடலோரங்களில் பல வகையான ஆலாக்களைக் காணலாம் இவை அனைத்தும் வலசை வருபவை. உள்நாட்டு நன்நீர்நிலைகளில் குறிப்பாக ஆறுகளிலும், பெரிய ஏரி, நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களில் பொதுவாக ஆற்று ஆலாவையும் (River Tern), வலசை வரும் மீசை ஆலாவையும் – Whiskered tern – (ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நீங்கலாக) காணலாம். மூன்றாவதான கருவயிற்று ஆலா (Black-bellied tern) சற்றே சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இவை பெரும்பாலும் ஆறுகளில் மட்டுமே தென்படுகின்றன.

கருவயிற்று ஆலா Black-bellied Tern. Photo by Ramki Sreenivasan/wildventures.com

கருவயிற்று ஆலாக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலும் (இலங்கையைத் தவிர), தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளன. எனினும் இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகளில் அவற்றின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. வியட்நாமிலும், கம்போடியாவிலும் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. மியன்மாரிலும், தாய்லாந்திலும் அண்மைக் காலங்களில் பார்த்ததாக ஏதும் தகவல்கள் இல்லை. இந்தியாவில் கூட ஒரு சில பகுதிகளில் உள்ள பெரிய ஆறுகளில் மட்டுமே ஆங்காங்கே இவை தென்படுகின்றன. வட இந்தியாவில் ஒரு சில நதிகளின் சில பகுதிகளில் இவற்றை ஓரளவிற்கு அடிக்கடி பார்க்க முடியும். இந்தியாவில் ஆற்றுப் பகுதி காட்டுயிர்களுக்கென பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ‘தேசிய சம்பல் காட்டுயிர் சரணாலயம்’ மட்டுமே. அதுபோலவே காவிரி ஆறு கர்நாடகாவில் உள்ள காவிரி காட்டுயிர் சரணாலயம், அதன் தொடர்ச்சியான தமிழகத்தில் உள்ள காவேரி வடக்கு காட்டுயிர் சரணாலயம் வழியே பாய்வதால் அங்குள்ள இடங்களும் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பகுதியிலும் இவ்வகை ஆலாக்களின் வாழிடம் ஓரளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது. எனினும் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால் பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் (International Union for Conservation of Nature – IUCN) இவற்றை சிவப்புப் பட்டியலில் (Red list) சேர்த்து, அதிக அபாயத்தில் (Endangered) உள்ள பறவை இனங்களின் பிரிவில் வைத்துள்ளது.

இவை ஆற்றின் இடையே உள்ள சிறு மணல் திட்டுகளிலும், ஆற்றுத் தீவுகளிலும் தரையில் கூடமைக்கின்றன. ஆற்றுப் படுகையில் விவசாயம் செய்தல், ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதால் இவற்றின் வாழிடம் சிதைதல், அழிதல், இவை முட்டை வைக்கும் காலங்களில் தடுப்பனைகளில் இருந்து திடீரென தண்ணீரைத் திறந்து விடுவதால் எல்லாக் கூடுகளும் நீருக்குள் மூழ்கிப் போதல், ஆற்று மணல் சூறையாடல், ஆலைக் கழிவுகளும், பூச்சிகொல்லிகளும் ஆற்றில் கலந்து நீரை மாசடையச் செய்தல், இவற்றின் முட்டைகளை தெரு நாய்கள், பூனைகள், மனிதர்கள் தின்பதற்காக எடுத்துச் செல்லுதல் முதலிய பல காரணங்களால் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்தும், பல இடங்களில் இவை அற்றும் போய்விட்டன.

தமிழகத்தில் இந்தப் பறவையின் பரவல், பாதுகாப்பு நிலை குறித்த தரவுகளும், புரிதலும் மிகக் குறைவு. இச்சூழலில் அண்மையில் கொள்ளிடம் ஆற்றில், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை, திருமானூர், அணைக்கரை பகுதிகளில், இப்பறவை பதிவு செய்யப்பட்டது. ஒரு நாள் மாலை இப்பறவையைக் பார்க்க அங்கு சென்றேன். அகண்ட ஆற்றில், நூலிழை போல நீர் ஓடிக்கொண்டிருந்தது. சென்ற சிறிது நேரத்திலேயே கரு வாயிற்று ஆலாவைக் கண்டுவிட்டேன். அங்கு இருந்த ஒரு மணி நேரத்தில் 4 ஆலாக்களை தனித்தனியே கண்டேன். சிறிய ஓடையைப் போல ஓடிக்கொண்டும், அங்காங்கே தேங்கியும் கிடந்த நீரின் மேல் தாழப் பறந்துச் சென்றன அவை. மாலை ஆகஆக நூற்றுக்கணக்கான சின்ன தோல்குருவிகள் (Small Pratincole) பறந்து சென்றன. இவையும் ஆலாக்கள் போல மணலில் இலேசாக குழிதோண்டி அதில் ஓரிரு முட்டைகள் இடும். அந்தி சாயும் நேரம் வரை இருந்து சிவந்த வானத்தின் பின்னணியில் ஆலாக்களும், தோல்குருவிகளும் பறந்து சென்ற அழகான காட்சியைக் கண்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். திரும்பி வரும்போது சில பகுதிகளில் ஆற்றின் நடுவே சிவப்புக் கொடிகள் நட்டுவைக்கப்பட்டிருப்பதைக் பார்த்தவுடன் ஆலாவைக் கண்ட மகிழ்ச்சியெல்லாம் போய் விட்டது. மணல் எடுக்கப் போவதற்கான அறிகுறி அது.

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள வரிசையில் நிற்கும் லாரிகள். படம். ப. ஜெகநாதன்

இதற்கு முன் திருமானூர் பகுதியில் மணல் எடுக்க கனரக வாகனங்களை எடுத்து வந்தபோது அருகில் உள்ள ஊர் மக்களே திரண்டு அதைத் தடுத்திருக்கிறார்கள். ஆற்றில் தண்ணீரும் சரியாக வருவதில்லை, ஆகவே ஆழ்குழாய் அமைத்து அந்த நீரையே பாசனத்திற்கு விடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருகிரார்கள் இப்பகுதி விவசாயிகள். ஒரு காலத்தில் 20-30 அடியில் கிடைத்த நீர், மணல் தோண்டுவதால் இப்போது 100 அடிக்கும் மேல் தோண்டிய பின்னர்தான் கிடைக்கிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதனாலேயே இங்கு மணல் தோண்டுவதை எதிர்க்கிறார்கள். அது மட்டுமல்ல, அருகில் உள்ள தஞ்சை, கும்பகோணம், திருச்சி போன்ற நகரங்களுக்கான குடிநீர் இந்த ஆற்றுக்குள் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.

காவிரி ஆற்றில் (கரூர் அருகே) மணல் அள்ளப்படும் காட்சி. படம்: ப. ஜெகநாதன்.

ஆறு என்பது ஒரு இயற்கையான வாழிடம். ஒரு நுகர்வோரின் பார்வையிலேயே நாம் அதை அணுகுவதால் ஆற்றுக்கு நாம் இழைக்கும் அநீதிகள் நம் கண்களை மறைத்துவிடுகிறது. ஆற்று நீர், ஆற்றங்கரை, ஆற்றோரக்காடுகள், நாணல் புதர்கள், மணல் படுகை, மணல் திட்டுக்கள், பாறைகள், யாவும் ஆற்றின் அங்கம். அவை அனைத்தும் ஆற்றில் உயிர்வாழும் பல வகையான பூச்சிகள், மீன்கள், தவளைகள், முதலைகள், ஆமைகள், பறவைகள், நீர்நாய்கள் யாவற்றிற்கும் வாழிடமாகிறது. இந்த ஒட்டுமொத்த சூழலையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

கரூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டத்தை செவ்வக வடிவில்
இருக்கும் வடிவங்கள் மூலம் பார்க்கலாம். நிலவரைபடம்: கூகுள் (Image Courtesy: Google Earth)

கரூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டத்தை செவ்வக வடிவில்
இருக்கும் வடிவங்கள் மூலம் பார்க்கலாம். நிலவரைபடம்: கூகுள் (Image Courtesy: Google Earth)

கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் வழியே ஓடும் காவிரி ஆற்றின் நில வரைபடத்தை GoogleEarth அல்லது Google Mapல் பார்த்தால் காவிரி ஆறு, மணலுக்காக எந்த அளவிற்கு சூரையாடப்பட்டிருகிறது என்பதைக் கண்கூடாகக் காணலாம். அழியும் அபாயத்தில் உள்ள கருவயிற்று ஆலாவின் வாழ்விற்கு மென்மேலும் துன்பங்கள் வந்தால் அந்தத் துன்பங்களை நாமும் விரைவில் அனுபவிக்க வேண்டி வரும். ஆற்று மணலுக்கு ஆசைப்பட்டு சிவப்புக் கொடியை நடுவதற்கு முன் இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.


கருவயிற்று ஆலாவின் வாழ்க்கை: சூறையாடப்படும் காவிரியின் பேசப்படாத வலி – இயற்கை அழிவும் பறவைகளும் https://tamil.thehindu.com/general/environment/article25971239.ece

எனும் தலைப்பில் தி இந்து உயிர்மூச்சு இணைப்பில் 12 ஜனவரி ஆண்டு வெளியான கட்டுரையின் முழு வடிவம்.

Written by P Jeganathan

March 4, 2019 at 5:47 pm

தமிழகத்தில் eBirdல் இது வரை பறவைகள் பார்க்கப்படாத இடங்கள்

leave a comment »

அப்படிக் கூட இடங்கள் உள்ளதா எனக்கேட்டால் ஆம், உள்ளது. அந்த இடங்களை eBirdல் எப்படி கண்டுபிடிப்பது?

1. https://ebird.org/content/india/ க்கு செல்லுங்கள்

2. Explore – ஐ சொடுக்கவும்

3. Species Map ஐ சொடுக்கவும்

4. பொதுவாக எல்லா இடங்களிலும் எளிதில் காணக்கூடிய பறவை ஒன்றின் பெயரை Species பகுதியில் அடிக்கவும் (உதாரணமாக House Crow)

5. Locationல் Tamil Nadu என அடிக்கவும்

6. இப்போது தென்னிந்திய வரைபடமும், House Crow வின் பரவலும் திரையில் விரியும்.

7. அடர் ஊதா நிறத்தில் இருக்கும் பகுதிகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 40-100% பறவைப் பட்டியல்களில் House Crow பதிவுசெய்யப்பட்டுள்ளது. இள ஊதா நிறம் குறைவாக பதிவு செய்யப்பட்டதைக் குறிக்கும். சாம்பல் நிறம் அங்கே பறவைகள் பார்த்து பட்டியல் சமர்ப்பிக்கப்படுள்ளது, ஆனால் காகம் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

8. இது தவிர சில கட்டங்கள், சாம்பல் நிறத்தில் கூட இல்லாமல் வரைபடம் தெளிவாகத் தெரியும். அந்தப் பகுதிகள் தான் இது வரை பறவைகளே பார்க்கப்படாத இடங்கள்.

9. இப்பொது Locationல் உங்களது மாவட்டத்தின் பெயரை அடிக்கவும். உங்கள் பகுதிகளில் இது போன்ற காலி இடங்கள் இருந்தால் அப்பகுதிக்குச் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டு eBirdல் சமர்ப்பிக்கவும்.

10. இப்போது Dateக்கு சென்று Year-Round, All Years என்பதை சொடுக்கவும். CUSTOM DATE RANGE… பகுதியில் கிழே மாதம் வாரியாக (Jan–Jan, Feb-Feb போன்று) காகத்தின் பரவலை/பதிவை பார்க்கவும். பல இடங்கள் காலியாக இருப்பதைக் காணலாம்.

ஜனவரி மாதத்தில் காகங்கள் பார்க்கப்படாத இடங்களை காட்டும் வரைபடம்

இது போல வேறு பல பறவைகளுக்கும் பார்த்து அறியவும். உதாரணமாக Common Myna அல்லது Large-billed Crow போன்ற பறவைகளின் பெயர்களையும் மாதம் வாரியாக பார்த்து அவற்றின் பரவல் நிலையை அறிந்து அதற்குத் தக்க உங்களது பறவை நோக்கலை திட்டமிடவும்.

இதைச் செய்வதால் என்ன பயன்?

பறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.

நாம் பதிவு செய்யும் ஒவ்வொரு பறவையின் குறிப்பும் அவற்றின் பாதுகாப்பிற்கும் உதவும்.

Written by P Jeganathan

January 15, 2019 at 10:42 pm

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

leave a comment »

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா

பெரிய இருவாசி: படம்: கல்யாண் வர்மா (விக்கிமீடியா)

இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.

Written by P Jeganathan

July 10, 2018 at 1:34 am

Posted in Protected areas

Tagged with

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா

leave a comment »

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா

ஆவுளியா (Dugong dugon) படம்: விக்கிமீடியா 

சுமார் 10,500 சதுர கி.மீ பரப்பில் அமைந்த மன்னார் வளைகுடா உயிர்சூழல் மண்டலத்தில் ஒரு பகுதி இந்த தேசிய பூங்கா. இதன் பரப்பு சுமார் 560 சதுர கி.மீ (ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள கடற்கரைப்பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 21 தீவுகளும், அதனையடுத்த கழிமுகப் பகுதிகளும், பவளப்பாறை திட்டுக்களும் (Coral reefs), கடலோரக் காடுகளும், அலையாத்திக் காடுகளும், கடலடிப் புல்வெளிகளும் (sea grass meadows) அடக்கம். அருகி வரும் கடல் பாலூட்டியான ஆவுளியா (Dugong) இப்பகுதிகளில் தென்படுகிறது. பல வகை கடலாமைகள், கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறையைச் சார்ந்து வாழும் மீன்கள், வலசை வரும் பலவகையான நீர்ப்பறவைகள் என பல்வகையான உயிரினங்களின் வாழிடங்களைக் கொண்டது இந்த தேசியப்பூங்கா. இப்பகுதி ராம்சார் இடமாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Written by P Jeganathan

June 10, 2018 at 1:24 am

Posted in Protected areas

Tagged with

கிண்டி தேசியப் பூங்கா

leave a comment »

கிண்டி தேசியப் பூங்கா

மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள வெகு சில தேசிய பூங்காகளில் ஒன்று கிண்டி தேதியப் பூங்கா. சுமார் 2.7 சதுர. கி.மீ பரப்பில் அமைந்து இந்தியாவின் மிகச்சிறிய தேசியப் பூங்காக்களில் ஒன்று எனும் பெருமையும் இதற்கு உண்டு. தென்னகத்தின் அரிய வகை வாழிடமான வறண்ட பசுமைமாறா புதர்காடுகளைக் கொண்டது. நரி (Golden Jackal), வெளி மான் (Blackbuck), புள்ளி மான் (Spotted Deer), பலவகையான பாம்புகள் பறவைகள், மற்றும் தாவரங்களைக் கொண்டது.

Phoenix pusilla – ஒரு வகை ஈச்ச மரம் – தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே தென்படும் அரிய தாவரம் – கிண்டி தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்:                                Photo: A J T Johnsingh/Wikimedia Commons

ஒரு காலத்தில் (1670 களில்) தனியார் வேட்டைக்களமாக விளங்கிய இப்பகுதியை இந்திய அரசு 35,000 ரூபாய்க்கு 1821ல் வாங்கி அரசுடைமையாக்கப்பட்டு இங்கே கவர்னர் மாளிகை கட்டப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் 5 சதுர கி.மீ பரப்பில் இருந்த வனப்பகுதியை காப்புக்காடுகளாக 1910ல் அறிவிக்கப்பட்டது. எனினும் 1961 முதல் 1977 வரை, 1.7 சதுர கி.மீ நிலம் கல்வி நிறுவனம், நினைவாலயங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்டது. எஞ்சிய பகுதி பல இயற்கை ஆர்வலர்களின் பரிந்துரையின் பேரில் 1976ல் கிண்டி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

Written by P Jeganathan

May 2, 2018 at 12:38 am

காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்

leave a comment »

காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்

நீர் மத்தி அல்லது நீர் மருது மரம் Terminalia arjuna

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பரவியுள்ள 504.33 சதுர கி.மீ பரப்பில் அமைந்த இச்சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது 2014ல். ஓசூர் மற்றும் தருமபுரி வனக்கோட்டங்களை உள்ளடக்கியத்து இச்சரணாலயம். புதர்காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரி ஆற்றின் கரையோரமாக நீர்மத்தி Terminalia arjuna நிறைந்த ஆற்றோரக் காடு முதலிய வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. நரை அணில், யானை, சிறுத்தை, கரடி, ஆற்று நீர்நாய், செம்புள்ளிப் பூனை, அழுங்கு, குள்ள மான், கடம்பை மான் போன்ற 35 வகை பாலுட்டிகளும் மற்றும் மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடி கழுகு போன்ற சுமார் 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை போன்ற ஊர்வனங்கள் யாவும் இச்சரணாலயத்தில் பதிவுசெய்யப்படுள்ளன.

சின்ன மீன்பிடி கழுகு

கர்நாடக மாநிலத்திலுள்ள கொள்ளேகால் வனக்கோட்டம், பிலகிரிரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், தமிழகத்தில் ஈரோடு வனக்கோட்டம் முதலிய வனப்பகுதிகள் இந்தச் சரணாலயத்தைச் சுற்றியுள்ளன. இதனால் பல வித காட்டுயிர்கள் குறிப்பாக யானைகளின் இடம்பெயர்விற்கு இப்பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Written by P Jeganathan

April 2, 2018 at 12:21 am