UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘ants

மண் அள்ளிய குதிக்கும் எறும்புகள்

leave a comment »

குதிக்கும் எறும்பு Indian jumping ant Harpegnathos saltator: ஆம் இந்த எறும்பு குதிக்கும்! ஆனாலும் எப்போதும் அவை குதித்துக்கொண்டே இருப்பதில்லை. இரையைப் பிடிக்கவோ, எதிரிகளிடமிருந்து தப்பிக்கவோ மட்டும் தான், இருந்த இடத்திலிருந்து சட்டென குதித்துச் செல்கின்றன. உலகிலேயே நீளமான எறுப்புகளில் குதிக்கும் எறும்புகளும் ஒன்று. இவற்றைக் காண்பது அவ்வளவு எளிதல்ல. பொதுவாக தனியே தான் இரைதேடும். ஒரு நாள் இந்த எறும்புகளை அவற்றின் கூட்டினருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டினுள்ளிருந்து தமது நீண்ட கூரிய தாடைகளால் மண்ணை அள்ளிக் கொண்டு வந்து வெளியே கொட்டிக்கொண்டிருந்தன. இவை கட்டும் கூட்டிற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. கூட்டை அடையாளம் காண அதன் நுழைவாயிலில் பல நிறங்களில் பூக்களின் இதழ்களையும், இலைகளையும் வைத்து அலங்கரிப்பதே!

தொடர்புள்ள கட்டுரை: எறும்புகளின் அதிசய உலகம்

Written by P Jeganathan

December 3, 2017 at 9:00 am

Posted in Insects

Tagged with ,

எறும்புகளின் அதிசய உலகம்

leave a comment »

இதுவரை எத்தனையோ முறை எறும்புகளை பார்த்திருந்தாலும் ஆவலோடும், அதிசயத்தோடும் அவற்றை உற்றுநோக்கத் தொடங்கியது சமீப காலமாகத்தான். அதற்குக் காரணம் நான் கண்ட ஒரு வித்தியாசமான காட்சி. காட்டின் ஓரிடத்தில் தையற்கார எறும்புகள் மரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது அவற்றை கேமரா மூலம் படமெடுத்துக் கொண்டிருந்தேன். இரு எறும்புகள் எதிரெதிரே சந்திக்கும்போது தங்களது உணர்நீட்சிகளைத் ஒற்றிவிட்டுக் கடந்து செல்வது, தம்மைவிட உருவத்தில் பெரிய பூச்சிகளை கூட்டமாகச் சேர்ந்து மெல்லமெல்ல கூட்டுக்கு நகர்த்திச் செல்வது, தங்களது முட்டைகளை கவ்வியவாறே தூக்கிச் செல்வது போன்ற வழக்கமான காட்சிகளைப் பார்த்ததுண்டு. ஆனால் அன்று நான் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. ஒரு தையற்கார எறும்பு மற்றொரு தையற்கார எறும்பை தூக்கிச் சென்றது. ஒரு வேளை இறந்து போன எறும்பை அது தூக்கிச் செல்கிறதா என்ற சந்தேகத்துடன் உற்றுநோக்கியபோது, தூக்கிச் செல்லப்படும் எறும்பு தனது உணர்நீட்சியை எதிரில் வந்த எறும்புகளுடன் தட்டிய வண்ணம் சென்றது. இதுவரை இப்படி ஒரு காட்சியை பார்த்திராத எனது மனதில் இது ஆழமாகப் பதிந்தது.

_JEG4078_low

காட்டைவிட்டு ஊருக்குள் வந்தவுடன் Piotr Naskrecki எழுதிய The Smaller Majority என்ற பூச்சிகளைப் பற்றிய புகைப்பட புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தபோது நான் பார்த்த, புகைப்படமெடுத்த அதே காட்சி அந்தப் புத்தகத்திலும் இடம்பெற்றிருந்தது என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. ஆர்வம் மேலோங்க எறும்புளைப் பற்றிய புத்தகங்களைப் படித்தபோது, நான் பார்த்த காட்சிக்கான விடை தெரிந்தது. அடிபட்டு நடக்க முடியாமல் போன ஓர் எறும்பை மற்றொரு எறும்பு கூட்டுக்கு தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறது.

இயற்கை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நமக்கு புதிய சங்கதிகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. நம்மில் சிலருக்கு ஒரு எறும்பு மற்றொரு எறும்பைத் தூக்கிச் செல்வது மிகச்சாதாரணமான காட்சி அல்லது செய்தியாக இருக்கலாம். ஆனால் இதுவே சிலருக்கு ஆச்சரியத்தையும், அது ஏன் அப்படிச் செய்கிறது என்ற புதிருக்கான விடையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. இந்த வகையான ஆர்வமும் ஆச்சர்யமும்தான் இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் வைக்கிறது.

_JEG4125_low

சிறு வயது முதல் நாம் சாதாரணமாகப் பார்த்து பழக்கப்பட்டவைதான் எறும்புகள். எறும்பால் கடிபட்டிருக்கிறோம், அதனால் ஏற்படும் எரிச்சலில், கடித்த எறும்பை உடனே நசுக்கிச் சாகடித்தும் இருக்கிறோம். உணவுப் பண்டங்களில் அவை ஏறிவிடாமலிருக்க எறும்பு மருந்து வாங்கி, அவை இருக்கும் இடங்களில் தூவி இருக்கிறோம். அதேவேளையில் தன் உருவத்தைவிட பன்மடங்கு பெரிதாக உள்ளவற்றை பற்களால் கடித்து எறும்புகள் தூக்கிச் செல்வதையும், படைவீரர்களைப் போல சாரைசாரையாக அவை நடந்து செல்லும் அழகையும் பார்த்தும் வியப்புற்றிருக்கிறோம்.

Photo: Thomas Vattakaven

Photo: Thomas Vattakaven

சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்று பெரிய கரிய கட்டெறும்பு, மரத்திலிருக்கும் வெளிர் சிகப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு இவைதான் நமக்குத் தெரிந்த எறும்பு வகைகள். ஆனால் உலகில் 11,931 வகையான எறும்புகளும், இதில் 5.2 சதவிகிதம் வகைகள் இந்தியாவிலும் உள்ளன.

இந்த பூமிப் பந்தில் எறும்புகள் இல்லாத இடம் மிகக் குறைவு. எறும்புகள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. அண்டார்டிகா போன்ற துந்திர பிரதேசங்களைத் தவிர பூமியின் பல இடங்களில் எறும்புகள் பரவி காணப்படுகின்றன. ஆயினும் எறும்பு வகைகள் அதிகமாக இருப்பது பூமத்திய ரேகைக்கு அருகாமையிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில்தான். இப்பகுதிகளில் உள்ள யானை, புலி, ஒட்டகச் சிவிங்கி இன்னும் பல தரைவாழ் விலங்குகள் அனைத்தையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து, மற்றொரு தட்டில் எறும்புகள் அனைத்தையும் வைத்தால், எறும்புகள் உள்ள தட்டுதான் எடை தாங்காமல் கீழே இறங்கும்! உருவத்தில் சிறியதாக இருந்தாலும். எண்ணிக்கையில் அபரிமிதமாக இருப்பவை எறும்பினங்கள்.

நம் வீடுகளில், தோட்டங்களில், காடுகளில் என எறும்புகள் எங்கெங்கும் வியாபித்துள்ளன. காட்டில் தரைப்பகுதியிலும், மரங்களிலும், மர விதானங்களிலும் வாழ்கின்றன. பெரும்பாலும் சர்க்கரை உள்ள பொருள்களை எறும்புகள் உணவாகக் கொண்டாலும், பல வேளைகளில் மற்ற சிறிய உயிரினங்களை வேட்டையாடவும், இறந்து போன உயிரினங்களையும், விதைகளையும், மற்ற தாவர உறுப்புகளையும் சாப்பிட்டு வாழ்கின்றன. எறும்புகள் உணவுச் சங்கிலியின் முக்கியமான அங்கம். பறவைகள், சில பாலுட்டிகளுக்கு எறும்பு ஒரு முக்கிய உணவாக இருக்கிறது.

சமூக வாழ்க்கை

எறும்புகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழ்பவை. இவற்றின் சமூக வாழ்வு வியக்கத்தக்கது. ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒன்றாகக் கூடி கூட்டைப் பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டையிடுவது, இனப்பெருக்கம் செய்வது, கூட்டை சுத்தம் செய்வது, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது என வேலைகளை பகிர்ந்து கொள்கின்றன. அவை செய்யும் வேலையை வைத்து வேலைக்கார எறும்பு, இனப்பெருக்கம் செய்ய முடியாத பெண் எறும்பு, எதிரிகளிடகமிருந்து கூட்டை காக்கும் சிப்பாய் எறும்பு, முட்டையிடும்  பெண் எறும்பு அல்லது ராணி, இறக்கையுள்ள ஆண் எறும்பு என இனம் பிரிக்கலாம்.

Photo: Thomas Vattakaven

Photo: Thomas Vattakaven

நாம் வெளியில் காணும் எறும்புகள் அனைத்தும் வேலைக்கார எறும்புகள்தான். இவற்றில் சில உருவத்தில் வேறுபட்டு காணப்படும். உருவத்தை வைத்து அவை செய்யும் வேலைகளையும் அறிந்துகொள்ள முடியும். உருவத்தில் மிகச் சிறிய வேலைக்கார எறும்புகள் பெரும்பாலும் கூட்டைவிட்டு வெளியே வருவதில்லை. ராணிக்கு சேவை செய்வது, முட்டைகளையும், வேற்றிளரிகளையும் (லார்வா) பராமரிப்பதே இவற்றின் வேலை. ராணியை காண்பது அரிது. அது கூட்டுக்குள்ளேயே இருக்கும். அதேநேரம், இனப்பெருக்க காலங்களில் இறக்கையுள்ள ஆண் எறும்புகள் கூட்டைவிட்டு வெளியில் பறந்து செல்லும்போது பார்த்திருக்கலாம்.

 Photo: Thomas Vattakaven

Photo: Thomas Vattakaven

இனப்பெருக்கம் மற்றும் கூடமைத்தல்

நன்கு முதிர்ந்த எறும்புக் கூட்டம், இனப்பெருக்கம் செய்யும் திறனைக் கொண்ட இறக்கையுள்ள ராணி மற்றும் ஆண் எறும்புகளை வளர்க்கிறது. இவை முழு வளர்ச்சியடைந்தவுடன் புதிதாக தமக்கென ஒரு குடும்பத்தை அமைக்க வளர்ந்த கூட்டைவிட்டு வெகுதூரம் பறந்து செல்கின்றன. இதற்கு கலவிப் பறப்பு (Nuptial flight) என்று பெயர். அதேவேளையில் ஆண் எறும்பை கவர்வதற்காக ராணி எறும்பு ஒருவித இனஈர்ப்புச் சுரப்பை (Pheromone) தனது உடலிலிருந்து வெளியிடுகிறது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் எறும்புகளைக் கவரும். இவை தமக்குள் சண்டையிட்டு, வலுவான ஆண் எறும்புகள் ராணியுடன் இணைசேர்கின்றன. இணைசேர்ந்த பின் ஆண் எறும்புகள் இறந்து போகின்றன.

எறும்பின் முட்டை வெள்ளை நிறத்தில், நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். வீடுகளில் அம்மியையோ அல்லது பெரிய பாத்திரத்தையோ நகர்த்தும்போது அவற்றின் கீழ் கருப்பு நிற பிள்ளையார் எறும்பு கூடமைத்து இருந்தால், வெள்ளை நிறத்தில் இருக்கும் முட்டைகளை வாயில் கவ்விக்கொண்டு அவை வேறு இடத்துக்குச் செல்வதை பார்த்திருக்கலாம்.

முட்டையிலிருந்து இரண்டு நாள்களில் வேற்றிளரி (லார்வா) வெளிவரும். இவற்றுக்கு ஊட்டச்சத்து மிகுந்த எச்சில் போன்ற திரவத்தை ஊட்டி ராணி வளர்க்கும். இவை கூட்டுப்புழுவாகி முழு வளர்ச்சியடைந்த வேலைக்கார எறும்பாக பிறக்கும். இதன்பின் ராணிக்கு எந்த வேலையும் வைக்காமல், அவை வெளியே சென்று உணவு தேட ஆரம்பிப்பது, கூட்டை பராமரிப்பது முதலான எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்யத் தொடங்குகின்றன. ராணியின் ஒரே வேலை முட்டையிட்டு தனது குடும்பத்தை விரிவாக்குவது மட்டுமே.

வேலைக்கார எறும்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மண்ணுக்கு அடியில் படிப்படியாக அவை கூட்டை விரிவுபடுத்தத் தொடங்குகின்றன. முட்டைகளை வைத்துப் பாதுகாக்க, அதிலிருந்து வரும் வேற்றிளரிகளையும், கூட்டுப்புழுக்களையும் வைக்க, உணவை சேமித்து வைக்க என தனித்தனி அறைகளை அவை உருவாக்குகின்றன. இவ்வாறு கூடு பெரிதான பிறகு சில ஆண்டுகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இறக்கையுள்ள ஆணும், பெண்ணும் அக்கூட்டில் வளர்க்கப்பட்டு, முதிர்ச்சியடைந்த பின் அவை வெளியே பறந்து சென்று வேவ்வேறு இடங்களில் தங்களுக்கென ஒரு புதிய கூட்டை உருவாக்கிக் கொள்கின்றன.

தகவல் பரிமாற்றம்

நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், சற்று நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டம் வந்து சேர்வதைக் காணலாம். இது எப்படிச் சாத்தியமாகிறது? உணவு இருப்பதைப் பார்க்கும் ஓர் எறும்பு அத்துகளின் அருகில் வந்து தனது உணர்நீட்சிகளால் (Antenna) அதை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து செல்லும்போது தனது உடலின் பின்பகுதியிலிருந்து ஒருவித வேதிப்பொருளை தரையில் கோடு போல் தனது கூடு வரை ஆங்காங்கே இட்டுச் செல்கிறது. இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தைப் பின்பற்றி உணவு இருக்குமிடத்தை அடைகின்றன. இந்தத் தடம் எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும்.

_JEG4036_low

எறும்புகள் இயற்கையின் ஓர் முக்கிய அங்கம். அவை எங்கெங்கும் வியாபித்திருக்கின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் விவரித்த அந்த வித்தியாசமான காட்சியை பார்த்த பிறகு, போகும் இடங்களில் எல்லாம் தையற்கார எறும்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். அவற்றின் செயல்பாடுகளைப் பார்த்து அதிசயிக்கிறேன். இப்படி பார்க்கும் போதோ, புகைப்படம் எடுக்கும் போதோ அவற்றை தொந்தரவு செய்வதில்லை. அப்படிச் செய்தால் அவை கடித்துவிடக் கூடுமே!

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 3. புதிய தலைமுறை 26 ஜூன் 2012

Written by P Jeganathan

July 28, 2012 at 6:17 pm

Posted in Insects

Tagged with ,