UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘birding ethics

பறவை ஆர்வலர்களுக்கான நெறிமுறைகள்

leave a comment »

நேற்று காலை பத்திரிகையாள நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) பற்றிய சில ஞாயமான கேள்விகளைக் கேட்டார். அவரது கேள்விகளும் அவற்றிற்கான பதிலையும் இங்கே காணலாம்:

1. கணினி வசதியோ, இணையத் தொடர்போ இல்லாதவர்கள் எப்படி இக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள முடியும்?

பறவை பார்ப்போர், இக்கணக்கெடுப்பில் பங்கு கொள்ள நினைத்தால் கணினி, இணைய வசதிகள் உள்ளவர்களின் உதவியை நாடலாம். இந்தியாவில் இது போன்ற கணக்கெடுப்புக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி வருகின்றன. எதிர் காலத்தில் அனைவரும் பங்குகொள்ளும் வசதிகள் ஏற்படலாம். இந்நிலை மாறும், மாற வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் கூட இப்பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

2. ஒரு வேளை பறவைகளை சரியாக அடையாளம் காணாமல், தவறான பறவைகளை உள்ளிட்டால் என்ன செய்வது? அல்லது ஓரிரு பறவைகளை பார்த்துவிட்டு 100க்கணக்கில் பார்த்தாக பொய்த்தகவலை அளித்தால் என்ன செய்வது?

ஒரு வேளை பறவையை தவறாக அடையாளம் கண்டு இணையத்தில் உள்ளிட்டு, அது தவறென உணர்ந்தால் மீண்டும் அதை மாற்றிக்கொள்ள eBirdல் வசதிகள் உள்ளது. ஆனால் ஒருவர் வேண்டுமென்றே அதைச் செய்தால் என்ன செய்வது? அதைத் தடுப்பதற்கும், சீர் செய்யவும் அந்த இணையத்தில் சில வசதிகள் உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் இப்பகுதியில் காணப்படாத பறவை ஒன்றை உள்ளிடுகிறார் என வைத்துக் கொள்வோம். அதை அவர் உள்ளிடும் போதே திரைக்குப் பின்னால் பல வேலைகள் நடைபெறும். இந்த இணையத்தில் உள்ள வடிகட்டிகளால் (filters) அது சரிபார்க்கப்பட்டு அவரிடம் அதற்கான (சரியான விளக்கங்கள், புகைப்படம் முதலிய) ஆதாரங்கள் கேட்கப்படும். அதன் பின் அந்தக் குறிப்பிட்ட பதிவு தமிழ்நாட்டில் உள்ள பல பறவை ஆராய்ச்சியாளார்களுக்கு தெரிவிக்கப்படும். முறையான நுண்ணாய்வுக்குப் பிறகு அப்பதிவு ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கப்படும்.

ebird sp confirmation

3. ஒரு வேளை பறவைகளை பார்க்காமலேயே பார்த்தாக ஒருவர் பொய்ப் பட்டியலைத் தயார் செய்து உள்ளிட்டால்?

இதுபோன்ற மக்கள் அறிவியல் (Citizen Science) திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க

இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த போது பறவை பார்த்தலைப் பற்றியும் பேச்சு திரும்பியது. பறவை பார்த்தலின் போது கடைபிடிக்க வேண்டிய, செய்யக் கூடாதவைகளைப் பற்றி விளக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சொல்லியதை சற்று விரிவாகவே கீழே தந்துள்ளேன். பறவை ஆர்வலர்கள் அனைவருக்கும் இது உதவும் என்கிற நம்பிக்கையில்.

spoonbills

பறவை ஆர்வலர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள்:

நேர்மை

 • ஆங்கிலத்தில் பறவை பார்த்தலைப் பற்றிய ஒரு கூற்று உண்டு, “No record at all is better than an erroneous one”. இதைத்தான் பறவைபார்த்தலின் Golden Rule என்பர். அதாவது ஒரு பறவையைத் தவறாக அடையாளம் கண்டு அதைப் பார்த்ததாகச் சொல்வதை விட, நாம் பார்த்ததை குறிப்பிடாமலேயே இருத்தல் நலம். நாம் பார்க்கும் பறவை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது தான் என்பதை முற்றிலுமாக உறுதிசெய்துகொண்ட பிறகுதான் நாம் அதை பார்த்ததாகச் சொல்ல வேண்டும். சிறு சந்தேகம் இருந்தாலும் அந்தச் சந்தேகம் தீரும் வரை நாம் பார்க்காததைப் பார்த்ததாகச் சொல்லக்கூடாது. இது பறவை பார்த்தலின் மிக முக்கியமான விதி.
 • உதாரணமாக தூரத்தில் பறந்து செல்வது காகமா அல்லது அண்டங்காக்கையா எனத் தெரியாவிட்டால் அதை உங்கள் குறிப்பேட்டில் எழுதாமலேயே இருத்தல் நலம். ஆனால் நீங்கள் பார்த்தது காகமாகத்தான் இருக்கக்கூடும் என நம்பினால் “காகம்?” என எழுதினால் அது உங்களது நேர்மையைக் காட்டும்.

stilts and ducks

பறவைகள் பாதுகாப்பு

 • பறவை பார்த்தலும், பறவைகளைப் படமெடுத்தலும் வெறும் பொழுதுபோக்கிற்காக இல்லாமல், நம்மை மகிழ்விக்கும் பறவைகளுக்கும், அவற்றின் வாழிட பாதுகாப்பிற்கும் நம்மால் முடிந்த அளவில் பங்களிப்பதும், பாடுபடுவதும் பறவை ஆர்வலர்களின் கடமையாகும்.

 

 • பறவைகளை பார்க்க வேண்டும், படமெடுக்க வேண்டும் என்பதற்காக பறவைகளையோ, அவற்றின் வாழிடத்திற்கோ எந்த விதத்திலும் தீங்கிழைக்கவோ, தொந்தரவு செய்வதோ கூடாது.

 

 • பறவைகளின் கூட்டினருகில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கூட்டின் அருகில் செல்வதால், அப்பறவைகள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் அவை அக்கூட்டினை தவிர்த்து விட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. ஒரு வேளை தெரியாமல் கூட்டினருகில் சென்று விட்டால் உடனடியாக அந்த இடத்திலிருந்து அகன்று விடவேண்டும்.

 

 • தாவரங்களினூடாக பதுங்கியிருக்கும் பறவைகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் / படமெடுத்துவிட வேண்டும் என்கிற அதீத ஆர்வத்தில் (அல்லது வெறியில்) சப்தமெழுப்புவதோ, எதையாவது அப்பறவை இருக்குமிடம் நோக்கி விட்டெறிவதோ கூடாது. நாம் பறவைகள் பார்க்க ஒரு இடத்திற்குச் செல்லும் போது, நாம் அங்கிருப்பது பறவைகளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

 • இரவு நேரங்களில் மரத்தில் அடைந்திருக்கும் பறவைகளையும், இரவாடிப் பறவைகளையும் (Nocturnal birds) பார்க்க டார்ச் விளக்கை அவற்றின் மேல் அடித்துப் பார்க்கும் வேளையில் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். டார்ச் மிகுந்த ஒளி உமிழும் தன்மையுடையதாக இருக்கக் கூடாது. மிதமாக ஒளி உமிழும் டார்சையும் கூட நீண்ட நேரம் அவை இருப்பிடம் நோக்கியோ, அவற்றினை முகத்திலோ அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பறவைகளை இரவில் படமெடுக்க அதிக சக்தியுள்ள ப்ளாஷினை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது பறவை இருக்கும் தூரத்தைப் பொறுத்தது என்றாலும், தூரமாக இருக்கும் பறவைகளைப் படமெடுக்கக் கூட ஓரிரு முறைகளுக்கு மேல் உபயோகித்தல் கூடாது. நினைத்துப் பாருங்கள் உங்கள் முகத்தில் டார்ச்சையோ, ப்ளாஷையோ அடித்தால் எப்படிக் கண்கள் கூசுகிறதோ அதே போலத்தான் பறவைகளுக்கும்.

 

 • நீங்கள் பறவை பார்க்கப் போகும் இடங்களில் இதுபோல் யாராவது பறவைகளுக்குத் தகாத முறையில் நடந்து கொண்டால், அவர்களுக்கு அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லவும். அதையும் மீறி அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அவர்கள் செய்வதை ஆவணப்படுத்தி (போட்டோ, வீடியோ மூலமாக) தகுந்த அதிகாரிகளிடம் முறையிடுங்கள்.

 

 • பறவைகளை வேட்டையாடுவதையோ, கண்ணி வைத்துப் பிடிப்பதையோ, வேறு வகையில் கொல்வதையோ பார்க்க நேரிட்டால் உடனடியாக அதை (முடிந்தால் புகைப்பட ஆதாரத்துடன்) வனத்துறையினரிடமோ, தகுந்த அதிகாரிகளிடமோ உடனடியாக தெரிவிக்கவும்.

 

 • வீட்டின் அருகில் பறவைகளுக்கு உணவு / பருக தண்ணீர் வைத்தல், செயற்கைக் கூடுகளை அமைத்தல் நம் பறவைகளின் பால் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என்பது உண்மைதான். அதேவேளையில் அங்கு வரும் பறவைகளுக்கு நம் வீட்டில் வளர்க்கும், வீட்டினருகில் திரியும் பூனை, நாய் முதலிய வளர்ப்புப் பிராணிகளால் எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவு, கூடு வைக்கும் இடங்களை வளர்ப்புப் பிராணிகள் வரமுடியாத படி, அவற்றின் உயரத்திற்கு எட்டாத வண்ணம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வேளை அதுபோன்ற இடத்தை தேர்வு செய்ய முடியாவிடில் அந்த இடத்தில் பறவைகளுக்கு உணவிடுவதை தவிர்க்க வேண்டும்.

little egret

பறவைகளின் வாழிடத்தை மதித்தல்

 • நாம் பறவை பார்க்கச் செல்லும் முன் அது பொது இடமா? தனியாருக்குச் சொந்தமான இடமா? அல்லது அனுமதி பெற்றுச் செல்ல வேண்டிய இடமா? என்பதை அறிந்து, தேவைப்பட்டால் தகுந்த அனுமதி பெற்ற பின்னரே அங்கு செல்ல வேண்டும்.

 

 • பறவைகள் பார்க்கப் போகும் இடத்தில் குப்பைகளைப் போடுவதைத் தவிர்க்கவும்.

 

 • பறவைகள் பார்க்கச் செல்லும் வேளையில் உரக்கப் பேசமல், அமைதியாக இருத்தல் நலம். இதனால் பறவைகளுக்கும் தொந்தரவில்லை, நீங்களும் அவற்றை நீண்ட நேரம் பார்த்து ரசிக்கலாம்.

 

 • பார்க்கும் பறவைகளை களக்குறிப்பேட்டில் உடனடியாக எழுதிக்கொள்வது நல்லது. எத்தனை, எந்த இடத்தில் பார்த்தோம் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.

 

 • பெயர் தெரியாத, இதற்கு முன் பார்த்திராத பறவையைப் பார்க்கும் போது, அதை நன்கு கவனித்து படம் வரைவது, விளக்கமாக குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. இது களக்கையேட்டில் பார்த்து அடையாளம் காண உதவும். சந்தேகமிருப்பின் தெரிந்தவர்களிடம் ஆலோசிக்கவும். பலமுறை சரிபார்த்த பின்னர் முடிவுக்கு வரவும். தமிழ் நாட்டில் பார்க்கப்படும் பறவைகளைப் பற்றி கலந்துரையாட, தகவல்களை பரிமார Tamilbirds (in.groups.yahoo.com/group/Tamilbirds/) எனும் யாஹூ குழுமம் இயங்கி வருகிறது. அதிலுள்ள அனுபவம் மிக்க பறவை ஆர்வலர்களின் உதவியை நாடலாம்.

palm swift

நமது பட்டியல் நீள வேண்டும் என்பதற்காக அரிய பறவைகளைத்தான் பார்க்க வேண்டும் எனத் தேடி அலைவதைத் தவிர்த்து, நாம் அடிக்கடிப் பார்க்கும் பொதுப் பறவைகளையும் பார்த்து ரசித்து மகிழ்தல் நலம்.

Advertisements

Written by P Jeganathan

February 18, 2014 at 10:38 am