UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘birdwatching

தமிழ் நாட்டில் எங்கே, எப்போது பறவைகளைப் பார்க்க வேண்டும்?

leave a comment »

தமிழ்நாட்டில் பறவை பார்த்தலும், அப்படி பார்ப்பதை eBirdல் உள்ளிடுவதும் அண்மைக் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது.

எனினும், தற்போது தமிழ்நாட்டில் பறவை பார்ப்போர் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்தே (உதாரணமாக கோவை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டங்கள்) eBirdல் பறவைப் பட்டியல்கள் அதிகமாக வந்து குவிகின்றன. ஆனாலும் இந்த இடங்களில் கூட ஆண்டு முழுவதும் ஒரே சீராக (அதாவது மாதா மாதம் அல்லது வாரா வாரம்) பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல்கள் eBirdல் வந்து சேர்கிறதா என்றால் இல்லை.

சில மாவட்டங்களில் ஒரு சில குறிப்பிட்ட பறவை ஆர்வலர்களாலும், குழுவினர்களாலும் (உதாரணமாக சென்னையில் The Nature Trust, கோவையில் Coimbatore Nature Society – CNS), அப்பகுதிகளில் பறவைகள் பார்ப்பதும் பட்டியலிடுவதும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. எனினும் மாவட்ட அளவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஓரிரு குறிப்பிட்ட இடங்களில் மற்றும் காலங்களில் மட்டுமே தொடந்து நடைபெறும்.

சில மாவட்டங்களில் சில காலங்களில் மட்டும் அதிகமான பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படும். உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரைக்கு பல பறவை ஆர்வலர்கள் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வலசை வரும் பறவைகளைக் காணச் செல்வார்கள். ஆனால் இடைப்பட்ட மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதங்களில்) அப்பகுதியில் உள்ள பறவைகளின் நிலை பற்றிய தகவல்கள் குறைவாகவே இருக்கும்.

பறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.

அந்த ஓர் இடம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியாகவும் அதாவது சரணாலயம், நீர்நிலை அல்லது பரந்த நிலப்பரப்பாகவும் அதாவது ஒரு ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தமிழ் நாட்டில் தற்போது மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. பாண்டிச்சேரியையும் காரைக்காலையும் சேர்த்தால் 34. இவற்றில் எந்த எந்த மாவட்டங்களில் எந்த எந்த மாதங்களில் பறவைகள் பார்க்கப்பட்டு eBirdல் உள்ளிடப்படுகின்றன என்று பார்த்த போது சில உபயோகமுள்ள தகவல்களை பட்டை வரைபடத்தின் மூலம் (Bar Chart) அறிய முடிந்தது. அதன் முடிவுகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

அதற்கு முன் இந்த பட்டை வரைபடத்தினை (Bar Chart) எப்படி eBirdல் அடைவது என்பதையும் அதை புரிந்து கொள்வது எப்படி என்பதையும் அறிந்து கொள்வோம்.

1. eBird India இணையத்திற்கு செல்லவும்
2. Explore Data வை சொடுக்கவும்
3. Bar Charts ஐ சொடுக்கவும்
4. Choose a Locationல் Select a region:ல் Tamil Nadu ஐ தேர்ந்தெடுக்கவும்

bar chart how

5. Then select a subregion: ல் Counties in Tamil Nadu வை தேர்ந்தெடுக்கவும்
6. பின்னர் “Continue” வை சொடுக்கவும்
7. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களும் பட்டியலிடப் பட்டிருக்கும். அதில் நீங்கள் பார்க்க விரும்பும் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து “Continue” வை சொடுக்கினால் பட்டை வரைபடத்தை அடையலாம்.

1ariyalur

இந்த பட்டை வரைபடத்தில் (eBirdல்) ஒரு மாதம் நான்கு வாரங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். 1-7 முதல் வாரம், 8-14, இரண்டாவது வாரம், 15-21 முன்றாவது வாரம், 22 30 or 31 நான்காம் வாரம். அதாவது மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்கள் அதிகம்.

இப்போது உதாரணமாக அரியலூர் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த மாவட்டத்தில் Lesser Whistling Duck (Dendrocygna javanica) – சீழ்கைச் சிரவி – ஜனவரி முதல் வாரத்திலும் மூன்றாவது வாரத்திலும் பார்க்கப்பட்டதை பச்சை நிற பட்டையை வைத்து அறிந்து கொள்ளலாம். இரண்டாவது வாரத்தில் அந்த மாவட்டத்தில் பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டாலும் சீழ்கை சிரவி பதிவு செய்யப்படவில்லை. ஆகவேதான் அங்கே இளநீல வெற்றிடம் உள்ளது. ஆனால் மார்ச் நான்காம் வாரத்தை கவனியுங்கள். இளங்கருப்பு புள்ளிகளால் ஆனா பட்டையால் நிரப்பப்படிருக்கும். இது போதிய தரவுகள் இல்லை என்பதை அதாவது அந்த மாவட்டத்தில், அந்த வாரத்தில் பறவைகளைப் பார்த்து ஒரு பட்டியல்கூட உள்ளிடப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.

bar chart code_

இந்த பட்டை வரைபடம் மிகக் குறைவான தரவுகளைக் (Data) கொண்டே தீட்டப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை ஓரளவிற்கு பறவைகளைப் பார்த்து பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக அப்படி ஒன்றும் பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லை. இந்த பட்டை வரைபடம் 1900ம் ஆண்டு முதல் 2016 வரை உள்ளிடப்பட்ட தரவுகளைக் கொண்டது. எனினும் பெரும்பாலான பட்டியல்கள் 2014 க்குப் பிறகுதான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன (மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்). அதுவும் பெரும்பாலும் கரைவெட்டி பறவைகள் சரணாலத்தில் இருந்து, ஓரிரு பறவை ஆர்வலர்களால் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட அரியலூர் மாவட்டத்தைப் போல எல்லா 34 மாவட்டங்களின் நிலையை July 2016 முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட பட்டை வரைபடங்களின் மூலம் அறியலாம்.

 

 

This slideshow requires JavaScript.

இந்த வெற்றிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்?

  • பறவை ஆர்வலர்கள் தங்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களின் பட்டை வரைபடைத்தை eBirdல் பார்த்து, எந்த எந்த வாரங்களில் அல்லது மாதங்களில் பறவைகளைப் பற்றிய விவரங்களில் வெற்றிடங்கள் இருக்கிறன என்பதைக் கண்டறிந்து அந்த குறிப்பிட்ட காலங்களில் பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
  • ஒரிரு பறவை ஆர்வலர்களாலோ, குழுவினர்களாலோ ஒரு மாவட்டத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடுவது என்பது முடியாத காரியம். ஆகவே தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு பறவைகள், பறவை பார்த்தல், அவற்றின் முக்கியத்துவம் முதலியவற்றை கருத்தரங்குகள், பட்டறைகள் மூலம் எடுத்துச் சொல்லலாம். அவர்களுக்கு சரியான தருணத்தில் eBird ஐ பற்றி எடுத்துச் சொல்லலாம்.
  • பறவை ஆர்வலர்கள் இதற்கு முன் பல்வேறு மாவட்டங்களில் பார்த்து குறித்து வைத்திருந்தால் அல்லது பழைய நிழற்படங்களில் இருந்து பறவைகளைப் பற்றிய (இடம், எண்ணிக்கை நேரம் போன்ற) தகவல்களை அறிந்து Historical அல்லது Incidental முறையில் eBirdல் உள்ளிடலாம்.
  • அதிகம் பயணம் செய்யும் பறவை ஆர்வலர்களாக இருந்தால் தாங்கள் இருக்கும் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் எந்த மாதங்களில் விவரங்கள் இல்லை என்பதை eBirdல் பார்த்து தங்களது பயணங்களை திட்டமிட்டு அங்கே சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
  • இது கொஞ்சம் வினோதமான யோசனை. நீங்கள் கொஞ்சம் adventurous typeஆக இருந்தால், நேரமும், கொஞ்சம் பணமும் இருந்தால் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் (8-14 தேதிகளில்) அதாவது இந்த ஆண்டின் 30ஆவது வாரத்தில் அரியலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருவாரூர், திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள பறவைகளைப் பார்த்து பட்டியலிடவும். இப்படிச் செய்தால் ஒரே வாரத்தில் 16 மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களை நிறப்ப முடியும். அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றவாறு பைக்கிலோ, பேருந்திலோ, இரயிலிலோ, தனியாக ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டோ பயணம் செய்யலாம். இந்த வினோதமான பயணத்திற்கு ஆகஸ்டில் முடியவில்லை என்றால் செப்டம்பர் முதலிரண்டு வாரங்கள் உகந்தவை. அப்படியெல்லாம் செய்ய முடியவில்லையெனில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 3ம் வாரம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று பறவை பட்டியல்களை eBirdல் சமர்ப்பித்தால் அங்குள்ள ஒரே ஒரு வெற்றிடத்தை அடைத்த பெருமை உங்களுக்கு வரும்!

மேலே உள்ள 34 மாவட்டங்களின் பட்டை வரைபடங்களை அடிப்படையாக வைத்து ஒரு வரைபடம் தயாரித்துள்ளேன். இது எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை வாரங்கள் இது போன்ற இடைவெளிகள் உள்ளன, ஒரே வாரத்தில் அதிகபட்சமாக எத்தனை மாவட்டங்களில் இது போன்ற இடைவெளிகள் உள்ளன என்பதை அறிய உதவும். இந்தத் தரவுகளை இந்த Excel File ல் பார்க்கலாம்.

TN seasonal gaps_

இளநீல பின்னணியில் புள்ளிகளைக் கொண்ட கட்டங்கள் eBird ல் அந்த மாவட்டத்தில் அந்த வாரத்தில்/மாதத்தில் பறவைப் பட்டியல்கள் எதுவுமே இல்லாததைக் குறிக்கிறது. July 2016 முதல் வாரத்தில் eBird ல் உள்ள பட்டை வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த வரைபடம்.

இன்னும் பல ஆண்டுகள் இந்த 34 மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து பலரும் எல்லா மாதங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பறவையினங்களையும், அவற்றின் பரவல், எண்ணிக்கை, தென்படும் காலம் முதலிய விவரங்களையும் ஓரளவிற்கு தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டு நாம் எத்தனை வகையான பறவைகளைப் பார்த்திருக்கிறோம், எத்தனை பட்டியல்களை சமர்ப்பித்திருக்கிறோம் என்று மட்டும் பார்ப்பது ஒரு நல்ல பறவை ஆர்வலர்களுக்கு அழகல்ல. அவரவர் வாழும் பகுதிகளில் எந்த எந்த இடங்களில்/ காலங்களில் இருந்து தரவுகள் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தால் அந்த வெற்றிடங்களையும் நிரப்புவது ஒரு பொறுப்பான பறவை ஆர்வலரின் கடமையாகும்.

Advertisements

Written by P Jeganathan

July 15, 2016 at 11:47 pm

எனது பறவைகள் ஆண்டு 2014

with 4 comments

தி இந்து சித்திரை மலர் 2015 ல் “வானில் பறக்கும் புள்களைத் தேடி” எனும் தலைப்பில் வெளியான படக்கட்டுரையின் முழு வடிவம்.

—–

சில ஆண்டுகளுக்கு முன் The Big Year எனும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் ஆண்டுதோறும் பறவை பார்ப்போரிடையே ஒரு போட்டி நடக்கும். ஓர் ஆண்டில் யார் அதிகமான பறவைகள் வகைகளைப் பார்த்து பதிவு செய்கிறார்கள் என்பதே அது. இந்தப் படமும் ஓர் ஆண்டில் அதிக பறவைகள் பார்க்க அமெரிக்காவின் பல மூலைகளுக்குச் செல்லும் மூவரைப் பற்றியது. இப்படிச் செய்யும் போது இவர்களுக்குள் நடக்கும் போட்டி, அவர்கள் தங்களது குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில் சந்திக்கும் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஆகியவை பற்றி மிகவும் சுவாரசியமாக செல்லப்பட்ட படம் இது.

இப்படத்தைப் பார்க்கும் எந்த பறவை பார்ப்போருக்கும் இது போல நாமும் செய்ய வேண்டும் எனும் உந்துதல் ஏற்படும். எனினும் இதற்காக முன்பே பல வகையில் திட்டமிட வேண்டும். பயணித்திற்காக சேமிக்க வேண்டும், எங்கெங்கு சென்றால் எந்தெந்த வகைப் பறவைகளைக் காணலாம், எத்தனை வகைப் பறவைகளைக் காணலாம் என்பதையெல்லாம் ஒழுங்காகத் திட்டமிட வேண்டும். மிகுந்த பொருட்செலவும் ஆகும். இந்தியாவில் சுமார் 1300 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் பாதியைக் காண வேண்டுமென்றால் கூட இந்தியாவின் பல மூலைகளுக்குச் செல்ல வேண்டி வரும். அதற்கெல்லாம் என்னிடம் நேரமும் இல்லை, பணமும் இல்லை. ஆகவே எத்தனை வகை பறவைகளைப் பார்ப்பது என்றில்லாமல் எவ்வளவு நேரம் பறவைகளுக்காக செலவழிக்கிறோம் எனப்பார்க்கலாம் என 2014 மார்ச் மாதம் முடிவு செய்தேன். தினமும் குறைந்தது 15 நிமிடங்கள், நான் எங்கே இருந்தாலும், பறவை பார்ப்பதென முடிவு செய்தேன். அப்படிப் பார்க்கப்பட்ட பறவைகளை eBird (www.ebird.org) எனும் இணையத்தில் உள்ளிட ஆரம்பித்தேன். மாதங்கள் சில கடந்தவுடன் இந்தியாவில் அதிக பறவைப் பட்டியல் உள்ளிட்டவர்களில் முதல் 10 இடத்தில் எனது பெயரைக் கண்டவுடன் இந்த ஆண்டு எப்படியாவது முதலிடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

பணி நிமித்தம் கேதர்நாத் கஸ்தூரி மான் சரணாலயத்திற்கு 2 வாரங்களுக்கு செல்ல மே மாதத்திலும், மத்திய இந்தியாவின் சில வனப்பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நான் பார்த்த பறவைகள் வகையின் எண்ணிக்கையும் சற்று உயர ஆரம்பித்தது. அப்போது தான் முடிவு செய்தேன். குறைந்தது 500 வகைப் பறவைகளையாவது இந்த ஆண்டு பார்த்து விட வேண்டு மென. ஆண்டு இறுதியில் இதற்கான பயணங்களுக்காக திட்டமிட ஆரம்பித்தேன்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கிழக்குக் கடற்கரையோரம், இமயமலைக் காடுகள், மத்திய இந்தியக் காடுகள் ஆகிய பகுதிகளில் தென்படும் பறவைகளில் பலவற்றைப் பார்த்தாகி விட்டது. வட கிழக்கு இந்தியக் காடுகளும், தார் பாலைவனமும் தான் மிஞ்சி இருந்தது. அஸ்ஸாம், நாகாலாந்து, மேகாலா, ராஜஸ்தான், குஜராத் என டிசம்பர் மாதம் சுற்ற ஆரம்பித்தேன். படகிலும், பஸ்ஸிலும், இரயிலிலும், ஒட்டகத்திலும், நடந்து சென்றும், பல வகையான பறவைகளை கண்டு களித்தேன். ஆண்டு இறுதியில் நான் உள்ளிட்ட மொத்த பறவைப்பட்டியல்கள் 648 (eBird Checklists) பறவை வகைகளும் 500ம் மேல். இந்தியாவிலேயே 2014ம் ஆண்டு முதலிடத்தில் இருந்தேன்.

பறவைகளுக்கான எனது பயணத்தில் இதுவரையில் நான் பார்த்திராத, பல்வேறு வகையான, அழகிய, விசித்திரமான பறவைகளையும் கண்டுகளித்தேன். பார்த்த பல பறவைகளின் படங்களையும் அவ்வப்போது எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

நாராய்..நாராய்..

குஜராத்தில், அஹமதாபத்திற்கு அருகில் உள்ள நல்சரோவர் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் வானில் பறந்து சென்ற பறவைப் பார்க்க சட்டென வண்டியை நிறுத்தினோம். அது ஒரு செங்கால் நாரை (White Stork Ciconia ciconia). சத்திமுத்தப் புலவர் பாடிய சங்கப்பாடலில் வரும் அதே பறவைதான். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வலசை வரும் இந்த அழகிய நாரை.

செங்கால் நாரை (White Stork Ciconia ciconia)

செங்கால் நாரை (White Stork Ciconia ciconia)

வட்டமிடும் புல்வெளிக் கழுகு

பறவை வகைகளிலேயே மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவை கழுகுகள். அவற்றின் கூரிய அலகும், கொக்கி போன்ற கால் நகங்களும், பறக்கும் நிலையில் நீண்டு அகன்ற இறக்கைகளும், அவற்றில் விரல்கள் போன்ற முதன்மைச் சிறகுகளும் அவை அமர்ந்திருந்தாலும், பறந்து கொண்டிருந்தாலும் மிடுக்கான தோற்றத்தைக் கொடுக்கும். ஐரோப்பிய, ரஷ்யா முதலான பகுதிகளிலிருந்து ஆண்டு தோறும் இந்தியாவின் வட பகுதிக்கு வலசை வரும் கழுகு இது. அங்கே Steppe எனும் பரந்து விரிந்த, மரங்கள் இல்லா புல்வெளிகளிலும், வெட்டவெளிகளிலும் வசிப்பதனாலேயே Steppe Eagle Aquila nipalensis எனப் பெயர் பெற்றது. பாறுகளைப் போலவே இவையும் Diclofenac எனும் கால்நடை வலிநீக்கி மருந்தினால் பாதிப்படைந்து எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.

புல்வெளிக் கழுகு Steppe Eagle Aquila nipalensis

புல்வெளிக் கழுகு Steppe Eagle Aquila nipalensis

அந்தரத்தில் சாகசம்

இப்பூமிப்பந்தின் வடக்கில் இருக்கும் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக தென்னிந்தியாவிற்கும், குஜராத்திற்கும் வலசை வருபவை யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus). மதிய வேளையில் கூட்டமாக பறந்து வந்த இப்பெருங்கொக்குக் கூட்டம் தரயிறங்கும் முன் நீர்நிலைகளின் மேல் வட்டமடிக்கும். நீரில் இறங்கும் முன் தமது நீண்ட இறக்கையை பக்கவாட்டில் விரித்து, தலையை நிமிர்த்தி, கால்கள் இரண்டையும் நேராக வைத்துக் கொண்டு காற்றில் தவழ ஆரம்பிக்கும். அந்தரத்தில் அவை நிற்பது போலவே தோற்றமளிக்கும் இக்காட்சி பார்ப்போரை வியப்பிலாழ்த்தும்.

யூரெசிய பெருங்கொக்கு (Common Crane Grus grus)

யூரெசிய பெருங்கொக்கு (Common Crane Grus grus)

யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus)

யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus)

பெரிய அக்கா குயில்

இமயமலை அடிவாரக் காடுகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தென்படும் இந்த பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides). உத்தராஞ்சலில் ஓக் மரக்காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது இவற்றின் குரலை கேட்டுக் கொண்டே இருந்தேன். இதன் குரலை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம், ஆனால் பார்ப்பது கடினம். மரங்களினூடே அமர்ந்து ஓயாமல் கூவிக்கொண்டிருக்கும். எனினும் இப்பறவையை ஒரே ஒரு முறை சற்று அருகில் பார்க்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. இது வலசை வரும் குயிலினம். இந்தியாவின் வடபகுதியில் கடும் குளிர் காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இப்பறவைகளைக் காணலாம். எனினும் இவை வலசை வரும் பகுதிகளில் குரலெழுப்பாமல் அமைதியாகவே இருக்கும்.

பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides)

பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides)

காட்டுச் சிறுஆந்தை

இந்த அழகான சிறிய ஆந்தை முற்றிலுமாக அற்றுப்போய் விட்டது பல காலம் பறவை ஆர்வலர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். எனினும் 1997ல் இது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அரிய ஆந்தை வகைகளில் ஒன்று. மத்திய இந்தியாப் பகுதியில் உள்ள மேல்காட் புலிகள் காப்பகம் (Melghat Tiger Reserve) இப்பறவையைக் காண சிறந்த இடம். இந்த காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) பகலில் தான் இரைதேடும். இலையுதிர் காடுகளிலும், தேக்குமரக் காடுகளிலும் தென்படும். ஆந்தைகளை பகலில் வெட்ட வெளியில் அமர்ந்திருப்பதைக் கண்டால் மற்ற பறவைகளுக்குப் பொறுக்காது. அவற்றைச் சூழ்ந்து கொண்டு கத்திக் குரலெழுப்பி விரட்டியடிக்க முயற்சிக்கும். சில வேளைகளில் ஆந்தைகள் எங்காவது இலை மறைவில் சென்று அமர்ந்துவிடும். எனினும் சில நேரங்களில் ஆந்தைகள் அதையெல்லாம் சட்டையே செய்யாது. நான் கண்ட இந்த காட்டுச் சிறுஆந்தையின் அருகில் வந்த சிறிய வெள்ளைக் கண்ணி கத்திக் கொண்டிருந்ததையும், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆந்தை அப்படியே அசையாமல் அமர்ந்திருந்ததையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) ஐப்  பார்த்துக் கத்தும் வெள்ளைக் கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)

காட்டுச் சிறு ஆந்தையைப் (Forest Owlet Heteroglaux blewitti) பார்த்துக் கத்தும் வெள்ளைக்கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)

பாலை சிலம்பன்

பாலை சிலம்பன்களுக்கு (Common Babbler Turdoises caudata) கண்ணைப் பறிக்கும் வண்ணச் சிறகுகள் இல்லாது, மெலியநிறங்களில் தான் இருக்கும். பொதுவாக 6 முதல் 20 பறவைகள் வரை ஆங்காங்கே பிரிந்து கூட்டமாக இரைதேடும். இடம் விட்டு இடம் போது ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்வது பார்க்க அழகாக இருக்கும். இவை நம்மூரில் இருக்கும் தவிட்டுக் குருவிகள் வகையைச் சேர்ந்தவை. வறண்ட நில புதர்க்காடுகளிலும், வெட்டவெளிகளிலும், பாலை நிலங்களிலும் இவை வசிக்கும். இந்தியாவில் பரவலாகத் தென்பட்டாலும், மேலே குறிப்பிட்ட வாழிடங்களில் தான் பார்க்க முடியும். தென்னிந்தியாவை விட வடபகுதியில் பொதுவாகப் பார்க்கலாம்.

பாலை சிலம்பன் (Common Babbler Turdoises caudata)

பாலை சிலம்பன் (Common Babbler Turdoises caudata)

மண்கொத்தியின் நண்டு வேட்டை

கடற்கரையில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது தென்பட்டது இந்த மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos). இவை பூமியின் வடபகுதியிலிருந்து இந்தியாவிற்கு வலசை வருபவை. குடுகுடுவென கடலோரமாக ஓடி மணலைக் குத்திக் கொண்டு அதிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சட்டென அமைதியாக சில நொடிகள் நின்றது. பிறகு ஒரே பாய்ச்சலில் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்டை அலகால் கொத்தி எடுத்தது. தலையை அங்குமிங்கும் ஆட்டி அந்த நண்டை தரையில் அடித்துக் கொண்டிருந்தது. பிறகு எதிர்பாராத வகையில் வேகமாக அருகில் தேங்கியிருந்த தண்ணீரை நோக்கி ஓடி அதில் அந்த நண்டை முக்கியது. இது போன்ற கடற்கரையில் இருக்கும் நண்டுகளை அலகால் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விட்டு விட்டால் அவை வேகமாக ஓடி குழிக்குள் சென்று ஒளிந்து கொள்ளும். ஆனால் நீரில் அவை தப்பிக்க முடியாது. எனவே தான் நீரில் முக்கி அந்த நண்டை கொத்திக் கொத்தி சாப்பிட ஆரம்பித்தது.

மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos)

மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos)

தரையிரங்கும் வெண்கால் பாறு

வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris) உலகிலேயே மிகவும் அபாயத்திற்குள்ளான பாறுகளில் ஒன்று. இமயமலை அடிவாரப் பகுதிகளும், வடகிழக்கு இந்தியாவிலும், நேபாளத்திலும் சுமார் 1000 பறவைகள் மட்டுமே தெற்போது எஞ்சியுள்ளன. இவற்றைக் காண அஸ்ஸாமில் உள்ள தின்சுக்கியா எனுமிடத்திற்குச் சென்றேன். இறந்து போன கால்நடைகளை போட்டுவைக்கும் திடலில் கூட்டமாக சுமார் 50 பறவைகளைக் கண்டேன். சில மரங்களின் மேலும், சில திடலில் கிடந்த இறந்த மாட்டின் தசைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. இவைகளைக் கண்டதும் வெகுதூரம் பயணம் செய்து களைப்பும் காணாமல் போனது. இந்த அரிய பறவைகளை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும், அவற்றின் நிலையை எண்ணி பெருமூச்சுடன் அந்த இடத்திலிருந்து அகன்றேன்.

வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris)

வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris)

கிரெளஞ்சப் பறவை

சாரஸ் என வடமொழியில் அழைக்கப்படும் மிக அழகான பெருங்கொக்கு. வால்மீகி ராமாயணத்தில் வரும் கிரெளஞ்சப் பறவை தான் இந்த சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone). ஏரி, குளங்களில், வயல்வெளிகளில் சோடியாக இருப்பதைக் காணலாம். மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகத் தென்படுகிறது. ஆளுயரத்திற்கு  இருக்கும் இப்பெருங்கொக்கு நடனத்திற்குப் பெயர் போனது. மத்தியப் பிரதேசம் கோண்டியா மாவட்டத்தில் சாரஸ் சோடி ஒன்று வயலின் ஓரமாக கூடு கட்டி வைத்திருந்தது. வெகுநேரமாக ஆண் ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த அதன் பெண் துணையைக் கண்டவுடன் எழுந்து நின்று, சிறகடித்து மேலும் கீழும் குதித்தது. வந்திறங்கிய பெட்டையும் அதைப் போலவே துள்ளிக் குதித்தது. சாரஸின் நடனம் ஒரு கண்கொள்ளாக் காட்சி.

சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone)

சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone)

குப்பையில் நின்றாலும்..

சில பறவைகளை எளிதில் காண அவை அதிகமாகத் தென்படும் இடங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு நேரத்தையும், அலைச்சலையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் போவதற்குத் தயாராக இருக்க வேண்டும். பெரிய போதா நாரையைக் (Greater Adjutant Stork Leptoptilos dubius) காண அஸ்ஸாமின் தலைநகரமான குவஹாத்தியில் உள்ள பரந்து விரிந்து கிடக்கும், துர்நாற்றம் வீசும் குப்பை மேட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு லாரி லாரியாகக் கொண்டு வந்து கொட்டும் குப்பைக் கூளங்களில் உள்ள உணவுப் பொருட்களையும், மாமிசக் கழிவுகளையும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன அந்த நாரைகள். சில அங்கு குப்பைகளைத் தரம் பிரிப்பவர்களுக்கு வெகு அருகிலேயே கூட நின்று கொண்டிருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் இவற்றின் சிறகுகள் இல்லத தலை, கழுத்து, அதில் தொங்கும் பை போன்ற அமைப்பு யாவும் சிவப்பும், மஞ்சளும் கலந்த  நிறத்தில் இருக்கும். குப்பை மேட்டில் நின்றிருந்தாலும், அந்த மாலை வெயிலில் அழகாகத்தான் இருந்தது அந்த விசித்திரமான தோற்றம் கொண்ட பறவை.

பெரிய போதா நாரை (Greater Adjutant Stork Leptoptilos dubius)

பெரிய போதா நாரை (Greater Adjutant Stork Leptoptilos dubius)

பரத்பூரில் பறக்கும் ஆண்டிவாத்து

ராஜஸ்தானில், பரத்பூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கியோலதோ தேசியபூங்கா (Keoladeo National Park) பறவைகளின் சொர்கபூமி. ஆகவே பறவை பார்ப்போருக்கும் தான். சுமார் 350 வகையான பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் வலசை வரும் பறவைகள். குறிப்பாக வாத்து, கொக்கு, நாரை முதலிய நீர்ப்பறவைகள். படத்தில் இருப்பது வலசை வரும் ஆண் ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata).

ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata)

ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata)

பறவைகளில் அரசன்

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் அமர்ந்திருந்தது இந்த அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca). வட இந்தியாவிற்கு வலசை வரும் கழுகினங்களில் ஒன்று இது. மொதுவாக முன்னேறி சற்று அருகில் சென்று அதைப் படமெடுத்தேன். இருநோக்கியில் கண்ட போதுதான் தெரிந்தது ஏன் இதற்கு இப்பெயர் வைத்தார்கள் என. அப்படி ஒரு மிடுக்கான தோற்றம் அதற்கு.

அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca)

அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca)

நண்டுதிண்ணி

குஜராத்திற்கு பறவைகள் பார்க்கச் செல்லும் முன், சில குறிப்பிட்ட பறவைகளைப் பார்க்க வேண்டும் என பட்டியல் தயார் செய்திருந்தேன். அதில் முக்கியமான ஒன்று இந்த நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola). பெயருக்கு ஏற்றாற்போல் நண்டுகளையே அதிகமாக உண்ணும் பறவை. இந்தியாவின் கடலோரப்பகுதிகளுக்கு வலசை வரும். பொதுவாக தனித்தனியே இரைதேடினாலும், கூட்டமாக வந்து ஓரிடத்தில் அடையும். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola)

நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola)

சிறிய நீல  மீன்கொத்தி

இந்தியா முழுவதும் பரவலாகத் தென்படும் இந்த சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis). பரத்பூர் பறவைகள் காப்பிடத்தில் பார்த்துப் படமெடுத்தது. என்னதான் பல இடங்களுக்குச் சென்று பல வித பறவைகளைக் கண்டுகளித்தாலும், நம் ஊரில் தினமும் பார்க்கும் பறவைகள் நம் மனதில் எப்பொழுதுமே குடிகொண்டிருக்கும். சின்ன மீன்கொத்தியும் அதில் அடக்கம்.

சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis)

சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis)

உணவூட்டும் தந்தை

சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus) அழிந்து வருகின்றன என எப்படியே, யாரோ ஒரு தவறான தகவலைப் பரப்பிவிட்டு விட்டனர். நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தமில்லை. சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் தான். எனினும், அழியும் விளிம்பில் இருக்கும் இன்னும் பல வகையான பறவைகளை பாதுகாப்பதும், அதற்காகப் பாடுபடுவதுமே முதன்மையாக இருக்க வேண்டும். நாம் அடிக்கடி பார்த்து ரசிக்கும் சிட்டுக்குருவி போன்ற பொதுப்பறவைகள் (Common birds) நமக்கு எல்லாப் பறவைகளின் மேலும் நாட்டமும், கரிசனமும் ஏற்படக் காரணமாக இருக்கும். திருச்சியில் வீட்டின் முன்னே ஆண் சிட்டுக்குருவி ஒன்று அதன் குஞ்சுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது. பார்க்கவே மிக அழகாக இருந்தது.

சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus)

சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus)

 

உணவிடலாமா?

நம்மில் பலர் பல காட்டுயிரினங்களுக்கு உணவிடுவதைப் பார்த்திருக்கலாம். அது சரியான செயலா? இதற்கு நேரிடையாக பதிலலிப்பது கடினம். நாம் கொடுக்கும் உணவினால், எந்த ஒரு உயிரினத்திற்கும் அவற்றின் உடல்நலத்திற்கு கேடும், இயல்பான குணத்தித்தில் மாற்றமும் ஏற்படக் கூடாது. பலர் குரங்குகளுக்கு உணவிடுவார்கள். அது பல வேளைகளில் நமக்கே பாதகமாக முடியும். சில தனிப்பட்ட குரங்குகள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக மாறி நம்மிடமிருந்தே உணவினை பரித்துச் செல்ல ஆரம்பித்துவிடும். எனினும் பொதுவாக பறவைகளுக்கு உணவிடுவதனால் நமக்கு அப்படி ஒன்றும் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆயினும், இதனால் அவை எந்த வகையில் பாதிப்படையும் என்கிற புரிதலும் நம்மிடையே அவ்வளவாக இல்லை. ஆகவே, எதையும் அளவோடு செய்வதே நல்லது. ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாம்பல் மைனாக்களுக்கு (Bank Myna Acridotheres ginginianus) ஒருவர் மிக்சரை அள்ளி வீசுவதைக் கண்டேன். அவை பறந்து பறந்து உணவினைப் பிடித்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

_JEG3457_700

Written by P Jeganathan

June 4, 2015 at 11:06 am

Posted in Birds, Photo Story

Tagged with , ,

பொங்கல் பறவைகள்

leave a comment »

சக்கரைப் பொங்கல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் என் அம்மா செய்யும் சக்கரைப் பொங்கலென்றால் கேட்கவே வேண்டாம். பச்சை அரிசியும், வெல்லமும், பாசிப்பயறும், முந்திரிப்பருப்பும், காய்ந்த திராட்சையும், ஏலக்காயும் சேர்த்து பொங்கல் செய்து, அதில் நெய்யை ஊற்றி கம கமவென மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை கையில் எடுத்து, வாயில் வைக்கும் முன்பே நாக்கில் எச்சில் ஊறும். நெய் மணக்கும் அந்த சக்கரைப் பொங்கலை விழுங்கும் போது, நாக்கில் தங்கும் அதன் அளவான இனிப்பும், இளஞ்சூட்டில் தொண்டையில் இறங்கும் போது உள்ள இதமான அந்த உணர்வும் மனதில் என்றென்றும் தங்கியிருக்கும். அம்மா அவளது அன்பைக் கலந்து செய்ததாயிற்றே!

பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதனால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகளுக்கு போவது முடியாத காரியம். அப்போதெல்லாம் அம்மா குறைபட்டுக் கொள்வாள். “நீ வராம இந்த வருசம் பொங்கலே நல்லா இல்லாடா, சக்கரை பொங்கல் செஞ்சி உன்னை நெனச்சிகிட்டே சாப்பிட்டேண்டா” என்பாள். வாய்ப்பு கிடைக்கும் வேளையில் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் சக்கரைப் பொங்கல் செய்து தருவாள்.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எங்கள் வீட்டில் சிறப்பாக நடந்தது. பல ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அதில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் எனது மகிழ்ச்சிக்கு காரணம் சக்கரப் பொங்கல் மட்டுமல்ல. எனது அப்பாவுடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கச் சென்றதனாலும் தான்.

sakkarai_pongal

சக்கரைப் பொங்கல் 2015

ஆம், இந்த ஆண்டு (2015) பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்ற நவம்பர் மாதம், தமிழக பறவை ஆர்வலர்கள் குழுவினர் சந்திப்பு, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பதிவைக் காணவும்.

தஞ்சை, கரந்தையிலிருந்து வயல் வெளிகள் சூழ்ந்த சுற்றுச்சாலை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் சமுத்திரம் ஏரிக்குச் சென்றோம். அப்பா பைக் ஓட்ட நான் பின்னே அமர்ந்து வேண்டிய இடங்களிலெல்லாம் நிறுத்தச் சொல்லி பறவைகளைப் பார்த்து வந்தேன். சமுத்திரம் ஏரி மிகப் பழமையானது. அதைப் பற்றிய சுவாரசியமான செவிவழிக் கதையை அப்பா சொன்னார். மராத்திய காலத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த ஏரி. அப்போதிருந்த அரசி சமுத்திரத்தையே பார்த்தது கிடையாதாம். ஆகவே அரண்மனையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஷார்ஜா மாடி அல்லது தொள்ளக்காது மண்டபத்தின் மேலேறிப் பார்த்தால் தெரியும் படி இந்தப் பரந்த ஏரியை வெட்டினார்களாம். சமுத்திரம் இது போலத்தான் இருக்கும் என அரசிக்கு காண்பிப்பதற்காக வெட்டப்பட்ட ஏரியாம் இது. ஆனால் இப்பொது இந்த பழைய மாளிகைகளின் மேலே ஏற முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே ஏறிப் பார்த்தாலும், காங்கிரீட் கட்டிடங்களின் வழியாக சமுத்திரம் ஏரி தெரியுமா என்பதும் சந்தேகமே.

சமுத்திரம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்திருந்தது. ஆகவே பறவைகள் மிக அதிகமாக இல்லை, எனினும் சுமார் 20 வகைப் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டோம் (பட்டியலை இங்கே காணலாம்). மோகன்  மாமாவும் பறவை பார்ப்பதில் எங்களுடன் சேர்ந்து கொண்டார். வெயில் ஏற ஆரம்பித்ததும் வீடு திரும்பி சக்கரைப் பொங்கலைச் சுவைத்தேன். வீட்டில் பெற்றோர்களுடன் இருந்தது, பறவைகளைப் பார்த்தது, பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பிற்கு பங்களித்தது என இனிமையாகக் கழிந்தது பொங்கல்.

Pongal Bird Count_appa_mohan mama_birding

சமுத்திரம் ஏரியில் பறவைகளைப் பார்க்கும் மோகன் மாமாவும் (இடது) அப்பாவும் (வலது)

பண்டிகை நாட்களில் பறவைகள் பார்ப்பது இந்தியாவில் இப்போது பெருகி வருகிறது. மேலை நாடுகளில் கிருஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டினருகிலோ, வீட்டினை அடுத்த சுற்றுப்புறங்களிலோ அங்கு தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயார் செய்து eBird எனும் இணையத்தில் உள்ளிடுவார்கள். Christmas Bird Count எனும் இக்கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வரும் செயல்பாடு. இதன் மூலம் பல பொதுப்பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும். இது போலவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பு (Onam Bird Count) நடத்தப்பட்டது.

_JEG3064_a

உண்ணிக்கொக்கு. Cattle Egret

பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள் (Ecological Indicators). நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றை, தொடர்ந்து நெடுங்காலத்திற்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம். அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு (ஊர்ப்புறமாகவோ, நகரமாகவோ இருப்பின் அங்கு வசிக்கும் மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து) அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா? அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா? என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளார்கள் கணக்கிடுவார்கள். அது போலவே வலசை வரும் பறவைகளின் நாளையும், நேரத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (Climate Change) கணிக்க முடியும்.

சின்னான். Red-vented Bulbul

சின்னான். Red-vented Bulbul

ஆகவே, பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் பால், புறவுலகின் பால் நாட்டமேற்பட, அவற்றின் மேல் கரிசனம் கொள்ள பொது மக்களிடையேயும், இளைய தலைமுறையினரிடையேயும் பறவைகள் அவதானித்தல் (Birdwatching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதை ஒரு நல்ல பொழுது போக்காக அனைவரும் பழக வேண்டும். பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த இது போன்ற பொங்கல் தின பறவைகள் மற்றும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதலியவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

_JEG8166_700

பறவை பார்த்தல் ஒரு நல்ல பொழுது போக்கு Birdwatching

பறவைகளைக் கணக்கெடுப்பதும், அவற்றை குறித்துக் கொள்வதும், பின்பு eBirdல் உள்ளிடுவதும் முக்கியம் தான் என்றாலும், முதலில் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் எண்ணத்தை அனைவரிடமும் வளர்க்க வேண்டும். இது போன்ற நற்செயல்கள் தான், நமக்கு புறவுலகின் பால் நாட்டத்தை ஏற்படுத்தவும், இயற்கையை ரசிக்கவும், நாம் வாழும் சூழலைப் போற்றிப் பாதுகக்க வேண்டும் என்கிற அக்கறையை ஏற்படுத்தும்.

நம் பெற்றோர்கள் நம்மிடம் வைத்திருக்கும் பாசத்தையும், கரிசனத்தையும் போல், நாம் நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பைப் போல், நமது சுற்றுப்புறச்சூழலின் மேலும், அதில் வாழும் உயிரினங்களின் மேலும் நாம் அன்பு காட்ட வேண்டும்.

என் அம்மா எனக்கு சக்கரைப் பொங்கலைப் பாசத்துடன் தருவது போல் இந்த பூமித்தாய் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பறவைகளையும் இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் கொடுத்திருக்கிறாள். எனக்கு சக்கரைப் பொங்கல் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவு இல்லையில்லை அதையும் விட அதிகமாகப் பிடித்தது பறவைகள் பார்ப்பது. உங்களுக்கு?

——

வண்ணத் தூதர்களைத் தேடி எனும் தலைப்பில் 14 பிப்ரவரி 2015 அன்று தி ஹிந்து தமிழ் தினசரியின் உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரையின் உரலி இதோ, PDF இதோ.

Written by P Jeganathan

February 15, 2015 at 2:53 pm