UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘crested serpent eagle

சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமா?

leave a comment »

ஆழியாறில் டீ குடிப்பதற்காக 5 நிமிடம் பஸ் நிற்கும் என கண்டக்டர் சொன்னார். பஸ்ஸை விட்டு கீழிரங்கி, வனத்துறை செக் போஸ்டைத் தாண்டி நடந்து செல்லும் போது, அங்கிருந்த ஒரு காவலாளி கேட்டார் “எங்க போறீங்க?”. உள்ளே அமர்ந்திருந்த வனக்காவலரை பார்த்து புன்னகைத்துக் கையசைக்கவும், ”என்ன சார் நடந்து போரீங்க?” என்று அருகில் வந்தார். குரங்கு அருவி வரைக்கும் நடந்து போகப் போவதாக சொன்னவுடன்,”நானும் கூட வரட்டுமா சார்?” என்றார். மெயின் ரோடுதான் தனியே போய் விடுவேன் என்றேன். புன்னகையுடன் கையசைத்து விடையளித்தார். நான் குரங்கு அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அண்மையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஆழியாறிலிருந்து குரங்கு அருவி வரை உள்ள சுமார் 3 கீமீ தூரத்தில் பத்து வேகத்தடைகளை அமைத்திருந்தனர். சாலையில் அவை எந்தெந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதை GPS கருவி மூலம் பதிவு செய்து அந்த வேகத்தடை இருக்குமிடத்தின் அட்ச ரேகை/தீர்க்க ரேகையை பதிவு செய்து ஒரு வரைபடத்தை தயாரிக்கவே இந்த நடை.

செக் போஸ்டை தாண்டிய சிறிது தூரத்திலேயே சாலையின் இடப்புறம் ஆழியாறு அணைக்கட்டில் விசாலமான நீர்ப்பரப்பு தெரிந்தது. சாலையோரமிருந்த மரங்களினூடே பார்த்தபோது ஒரு காட்டுப்பாம்புக்கழுகு இலையற்ற காய்ந்த மரக்கிளையின் மேல் அமர்ந்திருந்தது. அதன் பிடரியில் உள்ள வெள்ளை நிற கொண்டைச்சிறகுகள் காற்றில் அசைந்தபடி இருந்தது. அவ்வப்போது தலையை அங்குமிங்கும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. நீர்ப்பரப்பை பார்த்து அமர்ந்திருந்தாலும் அதற்கு நேர் எதிர் திசையில் (சாலையில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி) 180தலையைத் திருப்பிப் பார்த்தது. அக்காட்சியை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

காட்டுப்பாம்புக்கழுகு Crested Serpent Eagle (Spilornis cheela)

காட்டுப்பாம்புக்கழுகு Crested Serpent Eagle (Spilornis cheela)

வானில் பனை உழவாரன்கள் (Asian Palm Swift)பல பறந்து கொண்டிருந்தன. குக்குறுவானின் (Barbet sp,) குட்ரூ… குட்ரூ… குட்ரூ… என்றொலிக்கும் குரல் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. தூரத்தில் செம்பகம் (Greater Coucal) ஒன்று ஊப்…ஊப்…ஊப்… என நின்று நிதானித்து ஒலியெழுப்பத்தொடங்கி கடைசியில் அதன் குரல் உச்சஸ்தாயியை அடைந்தது முடிந்தது. உயரே ஒரு வல்லூறு (Shikra) பறந்து சென்றது. அதன் இறக்கைகளில் ஓரிடத்தில் சிறகு இல்லாமல் இடைவெளியிருந்தது. சிறகுதிரும் பருவம் அதற்கு. மாம்பழச்சிட்டின்  (Common Iora) விசிலடிக்கும் ஓசை அருகிலிருந்த புதரிலிருந்து கேட்டது. மெல்ல நடந்து முன்னேறி சின்னார் பாலத்திற்கு அருகில் வந்தேன்.

கீழிருந்த ஓடையில் நீர் வரத்து அவ்வளவாக இல்லை. பாலத்திலிருந்து பார்த்த போது பாறைகளின் இடையே மெதுவாக நீர் கசிந்து ஓடிக்கொண்டிருந்தது. தட்டான்கள் இரண்டு பறந்து திரிந்தன. ஓரிரண்டு பாறையின் மேல் இறக்கைகளை விரித்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தன. நெஞ்சை அள்ளும் மெல்லிய சீழ்க்கை ஒலி காற்றில் மிதந்து வந்து மரங்களடர்ந்த அந்த ஓடைப்பகுதியை நிரப்பியது. சீகாரப்பூங்குருவியின் (Malabar Whistling Thrush) இரம்மியமான குரல் அது. ஓடையருகில் இருந்த ஒரு காட்டு நாவல் மரத்தில் மெல்லிய, சிறு இழைகளைப் போன்ற மகரந்தக் காம்புகள் கொண்ட பூக்கள் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. அப்பூக்களில் உள்ள மதுரத்தை அருந்த மலைத்தேனீக்கள், சிறு தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன.

காட்டு நாவல்மரப் பூக்களும் மலைத்தேனியும்

காட்டு நாவல்மரப் பூக்களும் மலைத்தேனியும்

அந்த இடத்தை விட்டு அகன்று சாலையோரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு சிறு மரத்தின் மேல் பல தையற்கார எறும்புகளைக் கண்டேன். வெள்ளபாவட்டா (Gardenia gummifera) மரம் அது. இங்குள்ள பழங்குடியினர் இதனை கல்கம்பி என்றழைப்பர். இம்மரத்தின் கிளையை ஒடித்தால் வரும் பிசின் மருத்துவகுணம் உள்ளதாக நம்பப்படுகிறது. அம்மர இலைகளை மடித்து தங்களது உறுதியான கிடுக்கி போன்ற தாடைகளால் (mandibles) கூடமைப்பதில் மும்முரமாக இருந்தன அந்த தையற்கார எறும்புகள் (Weaver Ant). இவற்றின் நீண்ட கால்களின் முனையில் உள்ள கொக்கி போன்ற அமைப்பின் உதவியாலும் இலைகளைப் பிடித்து இழுத்து கூடு கட்ட முடிகிறது. இந்த எறுப்புகளின் தோற்றுவளரிகளின் (லார்வா) வாயிலிருந்து பெறப்படும் ஒரு வித பசை போன்ற எச்சிலையே இலையோடு இலை ஒட்ட பயன்படுத்துகின்றன.

வெள்ளபாவட்டா  மரத்தில் தையற்கார எறும்புகள்

வெள்ளபாவட்டா மரத்தில் தையற்கார எறும்புகள்

எறும்புகள் மும்முரமாக வேலை செய்வதை சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு எனது வேலையைத் தொடரலானேன். வேகத்தடைகள் இருக்குமிடங்களை ஜி.பி.எஸ். கருவியினால் (GPS) பதிவு செய்து, களப்புத்தகத்தில் குறிப்புகள் எடுத்துக்கொண்டு நடந்து கொண்டிந்தபோது சுமார் 3 கி.மீ. தூர சாலையை மேம்படுத்துவதற்கான மதிப்பீட்டுத் தொகை 10 இலட்சம் ரூபாய், வேலை செய்யும் காலம் முதலிய தகவல்களைக் கொண்ட பலகை ஒன்று இருந்தது. ஆழியாரிலிருந்து குரங்கு அருவிக்கு செல்லும் வழியில் இரவு நேரத்தில் பயணித்தால் மிளா என்கிற கடம்பைமானை (Sambar) சாலையோரத்தில் புற்களை மேய்ந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். ஆசியாவில் உள்ள மான்களிலேயே மிகப் பெரியது இவ்வகை மானினம் ஆகும். இது தவிர காட்டு முயல் (Black-naped Hare), முள்ளம்பன்றி (Indian Porcupine), சருகுமான் (Indian Spotted Chevrotain), புனுகுப்பூனை (Small Indian Civet)என பல வகையான இரவாடி (Nocturnal) உயிரினங்களையும் இச்சாலையில் பார்க்க முடியும். சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மிளா ஒன்று சாலையைக் கடக்கும் போது சீறி வந்த வாகனத்தால் அடித்து கொல்லப்பட்டது. மிளாவைத் தவிர மரநாய் (Asian Palm Civet), மலைப்பாம்பு (Indian rock python), எண்ணற்ற தவளையினங்கள் இச்சாலைப்பகுதியில் அரைபட்டு கொல்லப்பட்டன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலை மனிதர்களுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடும் காட்டுயிர்களுக்கும் தான் என்பதையும், வேகத்தடைகள் காட்டுயிர்களின் சாலைப்பலியை தடுக்க/மட்டுப்படுத்த மட்டுமல்ல மனிதர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் என்பதையும் வனத்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு விளக்கிய பின் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இது எளிதில் நடந்து விடவில்லை. பல காலம் பிடித்தது. பலர் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.

ஆழியாறு சாலையில் சீறிச்சென்ற வாகனத்தில் அடிபட்டு பலியான மிளாவும் (Sambar Deer), மரநாயும் (Asian Palm Civet)

ஆழியாறு சாலையில் சீறிச்சென்ற வாகனத்தில் அடிபட்டு பலியான மிளாவும் (Sambar Deer), மரநாயும் (Asian Palm Civet) Photo: T.R. Shankar Raman

எனது வேலையை முடித்து விட்டு சற்று நேரம் அமரலாம் என சாலையோரத்தில் இருந்த ஒரு ஆலமர நிழலில் அமர்ந்தேன். அண்ணாந்து பார்த்தபோது மரத்திலிருந்து விழுதுகள் தோரணம் போல தொங்கிக் கொண்டிருந்தன. சாலையில் அதிகம் போக்குவரத்து இல்லை. பத்து இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது அந்த காட்டுப்பகுதியில் வழியே செல்லும் சாலை. சீராக தாரிடப்பட்ட அந்த சாலையில் தேவையான இடங்களில் ஓரிரு வேகத்தடைகளை வைக்க எவ்வளவு செலவாகிவிடப்போகிறது? இதற்காக ஏன் இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என யோசித்துக் கொண்டிருந்தேன். சாலை மேம்பாடு என்பது வாகனம் சீராக செல்லும் வண்ணம் மேம்படுத்துவது மட்டும் தானா? அந்தச் சாலை வனப்பகுதி வழியே செல்லும் போது அங்குள்ள உயிரினங்களுக்கும் எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாதல்லவா? நான் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிர் திசையில் இருந்த தகவல் பலகையில், “நல்ல தரமான சாலைகள் இனிய பயணத்திற்கு மட்டுமே. உயிர் இழப்பிற்கோ, உடல் ஊனத்திற்கோ அல்ல” என்று சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இது நமக்கு மட்டுமல்ல, அங்கு வசிக்கும் காட்டுயிர்களின் பாதுகாப்பிற்காகவும்தான். இதை அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமா?

சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமா?

29-1-2014 அன்று தி இந்து தமிழ் தினசரியில் வெளியான கட்டுரை. அக்கட்டுரைக்கான உரலி இதோ. அதன் PDF இதோ

 

Written by P Jeganathan

January 30, 2014 at 8:15 pm

பாம்புக்கழுகுடன் சண்டை

leave a comment »

கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து கிளம்பி ஆபீஸ் போகும் வழியில்  காட்டு பாம்புக்கழுகு (Crested Serpent-Eagle Spilornis cheela) வட்டமிடுவதை பார்த்து வருகிறேன். நேற்று பார்த்தது ஒரு சிறப்பான காட்சி. அவ்வளவு அருகில் பாம்புக் கழுகை பார்த்ததில்லை. இறக்கையை விரித்து எனக்கு எதிரே பறந்து வந்தது. நான் உயரத்தில் இருந்ததால் அதன் இறக்கையின் மேல் பகுதி மிக அழகாகத் தெரிந்தது. வாலின் மேல் வெள்ளை பட்டையும், முகத்தில் இருந்த மஞ்சள் நிறமும் பளிச்சென்று தெரிந்தது. வட்டமிட்டு வட்டமிட்டு கிக்கீஇ..கீஇ…கி என குரலெழுப்பிக்கொண்டே மேலே மெல்ல மெல்ல பறந்த போது அதன் இறக்கையின் கீழ்பகுதியைப் பார்க்க முடிந்தது. இறக்கையின்  கீழ்விளிம்பில் கரும்பு-வெள்ளை பட்டை தெளிவாகத் தெரிந்தது. பறவை நோக்குவோருக்கு கழுகு என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அவற்றின் கம்பீரமே காரணம். கூர்மையான கால் நகங்களும், கூரிய முனை கொண்ட வளந்த அலகும், அனாயாசமாக காற்றில் இறக்கைகளை அடிக்காமலேயே தவழ்ந்து தலையை அங்கும் இங்கும் திருப்பி கீழே நோட்டமிடுவதும், உயரமாகவும், வேகமாகவும் பறக்கும் திறனுமே அவற்றை வசீகரிக்கச் செய்கின்றது. எனினும் கழுகினங்களை சரியாக அடையாளம் காண்பதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. சில கழுகினங்கள் உயரப் பறந்து கொண்டிருந்தாலும் அவற்றின் குரலை வைத்து சரியாக அடையாளம் காணமுடியும்.

Crested Serpent Eagle in flight

வட்டமிடும் காட்டு பாம்புக்கழுகு. Photo: Ramki Sreenivasan

பெயருக்கு ஏற்றாற்போல் காட்டு பாம்புக்கழுகின் உணவு பாம்புகள் தான். அதுவும் குறிப்பாக கொம்பேரிமூக்கன் (Bronz-backed tree snake), பச்சைப் பாம்பு (Green Vine snake), சாரைப்பாம்பு (Rat Snake), தண்ணீர்ப் பாம்புகள் (water snakes). இவை யாவும் நஞ்சற்ற பாம்புகள் என்பதை கவனிக்க. நஞ்சுள்ள பாம்புகளை வெகு அரிதாகவே பிடிக்கின்றன. அப்படிப் பிடிக்கும் போது கடிபட்டு இறந்து போனதாகவும் குறிப்புகள் உள்ளன.

A pair of Crested Serpent Eagles

பச்சைப் பாம்புடன் காட்டு பாம்புக்கழுகு சோடி. Photo: Ramki Sreenivasan

முன்பு ஒரு முறை காலில் பாம்பை வைத்துக்கொண்டு பறந்து செல்வதை பார்த்திருக்கிறேன். இவை தமது கூரிய அலகால் பாம்பின் தலையை பிடித்துக் கவ்விக் கொல்கின்றன. சில நேரங்களில் தரையில் ஓடும் பாம்பினைப் பிடிக்க இவையும் தரையில் இறங்கி இரண்டு இறக்கைகளையும் அகல விரித்து நடந்து சென்று பிடிப்பதாகவும் குறிப்புகள் உள்ளன. இது கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருக்கும். இதை நேரில் கண்டவர்கள் பாக்கியசாலிகள். இணையத்தில் தேடிய போது youtube video ஒன்றில் இக்கழுகு தரையில் நின்று பாம்பு பிடிக்கும் காட்சியை பதிவு செய்திருந்தார்கள். ஆனல் இந்த குறும்படத்தில் அவை இறக்கையை விரித்துக்கொண்டு பாம்பை பிடிக்கவில்லை.

இவை எலி, சிறு பறவைகள், ஓணான், மீன், தவளை முதலியவற்றையும் சாப்பிடும். இந்தியாவின் பல பாகங்களில் இவை பரவி உள்ளன. எனினும் அடர்ந்த, நீர்நிலைகள் நிறைந்த காட்டுப்பகுதிகளில் தென்படும்.

இன்று காலையும் நேற்று பார்த்த இடத்திலேயே பாம்புக் கழுகை  மறுபடியும் பார்த்தேன். இந்த முறை சற்று உயரப் பறந்து கொண்டிருந்தது. குரலெழுப்பிக்கொண்டே. எனினும் பறப்பதில் ஒரு ஒழுங்கின்மை தெரிந்தது. அக்கழுகைச் சுற்றி சிறிய பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பைக்கை நிறுத்தி விட்டு கூர்ந்து கவனித்த போது அச்சிறிய பறவைகள் சாம்பல் தகைவிலான் அல்லது காட்டுத்தகைவிலான் (Ashy woodswallow) எனத் தெரிந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பைனாகுலர் வைத்து பார்த்தேன். இது ஒரு சிறிய மைனா அளவுள்ள பறவை. காட்டுப்பகுதிகளில் சிறு கூட்டமாக உயர பறந்து கொண்டிருப்பதை அவ்வப்போது காணலாம். சில நேரங்களில் கூட்டமாக ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமர்ந்திருக்கும்.

தந்திக்கம்பியில் காட்டுத்தகைவிலான்கள். Photo: Kalyan Varma

தந்திக்கம்பியில் காட்டுத்தகைவிலான்கள். Photo: Kalyan Varma

மரக்கிளையில் காட்டுத்தகைவிலான்கள்

மரக்கிளையில் காட்டுத்தகைவிலான்கள். Photo: Radha Rangarajan

இந்தச் சிறிய பறவை அதன் உருவில் பண்மடங்குள்ள கழுகினை சூழ்ந்து அதை விரட்டியடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. முதலில் மூன்று பறவைகள் அக்கழுகினை துரத்தின. பிறகு அதில் ஒரு பறவை குறைந்தது 5 நிமிடங்கள் வெகுதுரத்திற்கு அக்கழுகினை துரத்திக் கொண்டே இருந்தது. கழுகினைச் சுற்றிப் பறந்து அவ்வப்போது அதனருகில் சென்று கொத்துவது போலத் தெரிந்தது. சிறிய பறவைகளையும், பாம்புகளையும் பிடித்துத் தின்னும் கழுகையே அந்த சிறிய பறவையின் தைரியத்தை பார்க்க வியப்பாக இருந்தது. என் தலைக்கு மேலை நடந்த இந்த சண்டைக்காட்சியை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அலுவலகத்திற்கு நேரமான காரணத்தால், மனமில்லாமல் பைக்கை கிளப்பிக் கொண்டு புறப்பட்டேன்.

இணையத்தில் தேடிய போது செவ்வயிற்றுக் கழுகையும் (Rufous-bellied Hawk Eagle) கூட இந்த காட்டுத்தகைவிலான்கள் கூடிச் சென்று தாக்கும் நிழற்படம் காணக்கிடைத்தது (அப்படத்தை இங்கே காண்க). ஆங்கிலத்தில் இப்பண்பினை mobbing behaviour என்பார்கள். கரும்பருந்தினை (Black kite) காகங்கள் துரத்துவதையும், காகங்களை கரிச்சான் குருவிகள் (Black Drongo) துரத்துவதையும் பார்த்திருக்கிறேன். எனினும் இப்பண்பினை இவ்விரண்டு பறவைகளிடத்தும் பார்ப்பது இதுதான் முதல் முறை.

Written by P Jeganathan

April 27, 2013 at 12:30 pm